ஹிந்து பேப்பரின் பயன்பாடு

#நெய்வேலியில் சுப்பு மாமா வாசலில் வந்து இரண்டு நிமிடத்துக்கு மேல் நின்றால் அன்று ரணகளம் என்று அர்த்தம்.

நாங்களும் அவருமாகச் சேர்ந்து ஹிந்து பேப்பர் வாங்குவது என்று ஒரு ஏற்பாடு 20 ஆண்டுகளாக இருந்து வந்தது. சுப்பு மாமா படித்து விட்டு எங்கள் வீட்டிற்கு வந்து தருவார். நாங்கள் நாள் முழுவதும் வைத்திருந்து மறு நாள் அவரிடம் கொடுக்க வேண்டும். மாத இறுதியில் பழைய பேப்பருக்குப் போடுவது என்று ஏற்பாடு. அன்றைய சம்பளம் அவ்வளவு தான். எனவே கொஞ்சம் எகனாமிக்ஸ், கொஞ்சம் நியூஸ் என்று வாழ்ந்து வந்த காலம் அது.

‘பேப்பர் முழுசா குடு’ என்றார் மாமா. நேற்றைய பேப்பரைப் பார்த்தேன். பாதி தான் இருந்தது.

‘எல்லா பேப்பரும் இருக்கே மாமா’. பொய் சொல்கிறோம் என்று தெரிந்தே சொன்னேன்.

‘ஆகாஸவாணி. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி..’ ரேடியோ மணி 7:15 என்று உணர்த்தியது. எட்டு மணிக்கு பள்ளிக்கு கிளம்ப வேண்டும்.

‘நாழியறது. நாளைக்கு தேடித் தரேன்’ – ஒருவழியாக மீண்டு வீட்டினுள் திரும்பினேன். தம்பி பேப்பரைப் பிடுங்கிக் கொண்டான்.

இத்தனை போராடியும் நான் படிக்க முடியவில்லையே என்னும் துயரம் ஒரு பக்கம், மணி ஆகிவிட்ட சோகம் இன்னொரு பக்கம், அன்று சமர்ப்பிக்க வேண்டிய ஹோம் ஒர்க் என்னும் பூதம் இன்னொரு பக்கம் என்று முப்பரிமாண சோகத்தை மறைத்துக் கொண்டு கூடத்தினுள் சென்றேன்.

உள்ளே இருந்த பாட்டி பேசினாள்:

‘ஏண்டா, சுப்புணியோட எதுக்கு இத்தனை நாழி பேசிண்டிருக்கே? ஸ்கூலுக்கு நாழியாகல? ரொம்ப பேசினா அப்புறம் அவன் நேத்திய பேப்பரைக் கொண்டான்னு பிடுங்குவான். மாவு சலிக்க எனக்கு யாரு பழைய பேப்பர் குடுப்பா?’

பாட்டியின் முன் பரப்பிய பேப்பர் மேல் அரிசி மாவு தெரிந்தது.

இன்று பாட்டியும் இல்லை, சுப்பு மாமாவும் இல்லை, ஹிந்து மட்டும் இருக்கிறது- மாவு சலிக்க உதவியாக.

தாஸன்

#நெய்வேலியில் ‘தாஸன்’ (70) வருகிறார் என்றால் வீட்டினுள் ஒளிந்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. ‘திருப்பாவைல 8ம் பாசுரம் சொல்லு’, ‘சஹஸ்ரநாமத்துல ‘பீஷ்ம உவாச’க்கு அப்பறம் கண்டிநியூ பண்ணு’ என்று நேரம் காலம் தெரியாமல் எல்லார் எதிரிலும் கேட்டு வைப்பார் என்பதால் அந்த பயம்.

விடியற்காலையில் எப்போதுமே குளிர் இருக்கும். மார்கழி மாதம் நெய்வேலி குளிர் கொஞ்சம் அதிகம். 4:30 மணிக்கு எழுந்து, தீர்த்தமாடி, பஞ்சகச்சம் உடுத்தி, 4-5 வீதிகளில் திருப்பாவை சொன்னபடியே செல்வார். அதனால் பாதகம் இல்லை. எங்களையும் உடன் வரச் சொல்வார். திருப்பாவை முழுவதும் தெரியாது என்பது ஒரு பயம். விடியற்காலை குளிர் இன்னொன்று. மூன்றாவது பயம் தெரு நாய். அவை அவரை ஒன்றும் செய்வதில்லை. அவருடன் நடக்கும் என்னைப் பார்த்து மட்டும் உறுமும். முந்தைய நாள் மாலையில் நான் ஏதாவது வாலாட்டியிருப்பேன்.

தாஸன் எங்கள் தெருப் பிள்ளைகளுக்கு ஆங்கில இலக்கண வகுப்புகள் நடத்தி வந்தார்.

இப்படியாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் ‘ஏண்டா நீங்கள்ளாம் நாடகம் போடக்கூடாது?’ என்று ஆரம்பித்தார் தாஸன். ‘தில்லி சென்ற நம்பெருமாள்’ என்கிற நாடகம் மூலம் அவர் பெரிய பிரபலம் பெற்றிருந்தார் என்று தெரியும். ‘நெய்வேலி சில்ரன்ஸ் கிளப்’ (NCC) என்கிற அமைப்பைத் துவங்கினார். நான் செயலாளர் ஆனேன்.

அவரது ஊக்கம் அசாத்தியமானது. ‘இதோ பார். என்.சி.சி. பத்தி ஹிந்துவுக்கு எழுதியிருக்கேன். ‘நெய்வேலியில் நாடக உலகின் விடிவெள்ளிகள்’ என்ற தலைப்பில் நான்கு பக்கத்திற்கு எழுதியிருந்தார். இன்று வரை ஹிந்து அதை வெளியிடவில்லை.

அசட்டுத்தனமான இரு நாடகங்களை அரங்கேற்றினோம். முதல் நாடகம் ஒரு திருடனைப் பற்றியது. வீட்டில் இருந்த படுதா, போர்வை எல்லாம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வாசல் திண்ணையில் நாடகம். ஆறு நடிகர்களும் ஒன்பது பார்வையாளர்களுமாக நாடகம் நடந்தேறியது. கடைசிக் காட்சியில் ஒரு படுதா கழன்று விழ, என் தம்பி அதைப் பிடித்துக்கொண்டு நிற்க, ஏக களேபரத்துடன் நாடகம் முடிந்தது.

இரண்டாவது நாடகத்திற்கு இரண்டு பார்வையாளர்கள் வந்தனர்.

தாஸன் எங்களை வைத்துக்கொண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் போட்டார். ‘மாக்பெத்’ நாடகம் நெய்வேலி சத்சங்கம் மணித்வீபத்தில். கீரன், வாரியார் முதலியோர் பேசிய மேடையில் நாங்கள். பார்வையாளர்கள் விநோதமாகப் பார்த்த்துச் சென்றார்கள். நாடகம் பார்க்க வந்த என் பாட்டி,’ ஏண்டா, மஹாபாரதம்னு சொன்னே. கடைசி வரைக்கும் கிருஷ்ணர் வரவே இல்லையே’ என்றாள். ‘மாக்பெத்’ மஹாபாரதம் ஆன கதை அன்று நடந்தது.

அதன் பிறகு தாஸன் எங்களை நாடகம் போட வலியுறுத்தவில்லை. சில மாதங்களில் நெய்வேலியில் அரசு ஆடிட்டராக இருந்த அவரது மகளுக்கு மாற்றல் ஆகி வேறு ஊர் சென்றுவிட்டார் தாஸன். விரைவில், நெய்வேலி சில்ரன்ஸ் கிளப் புதிய அவதாரம் எடுத்தது. நெய்வேலி கிரிக்கெட் கிளப் உதயமானது. இருப்பில் இருந்த சில பத்து ரூபாய்கள் பந்துகளாகவும், பேட்களாகவும் மாறின. ஒரே மேட்ச்ல் பணம் காலாவதியாகி கிளப் மூடு விழா கண்டது.

பல ஆண்டுகள் கழித்து தாஸனை ஒரு திருமண விழாவில் சந்தித்தேன். அப்போது அவருக்கு வயது 90. நெய்வேலி சில்ரன்ஸ் கிளப் ( NCC) பற்றி நினைவு படுத்தினேன். கேட்கும் திறனை முற்றிலும் இழந்திருந்த அவர், ‘என்.எல்.சிக்கு (NLC) என்ன ஆச்சு? என் அது சரியா போகலையா?’ என்றார்.

சில நாட்களில் அவர் காலமானார் என்று அறிந்தேன். அன்று அவர் இட்ட ஆங்கிலப் பிச்சையை இன்றும் நினைவுகூர்கிறேன்.

இலந்தைப் பழம்

#நெய்வேலி ராஜி மாமி வீட்டு இலந்தைப் பழம் ப்ரஸித்தம். தெரியாமல் எடுத்துத் தின்பதால் சுவை கொஞ்சம் அதிகம். மாமாவுக்குத் தெரிந்தால் முதுகில் டின் கட்டிவிடுவார். ஆனாலும் அவர் ஈஸி சேரை விட்டு எழுந்து வரும் முன் ஓடிவிடுவதால் நாங்கள் தப்பித்தோம்.

ராஜி மாமியின் கை வேலைகளும் ப்ரஸித்தம். வாய் பேசிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஊசி, மணி வேலை செய்து கொண்டிருப்பார். தையல் வகுப்புக்கள் எடுப்பார். அதிர்ந்து பேசாத, சாந்த ஸ்வரூபியான அவருக்கு மஹா முசுடான கணவர், கொஞ்சம் அசமஞ்சமான மகன் மற்றும் ரொம்ப அசமஞ்சமான மகள் சுமதி. சுமாராக பி.காம் படித்த மகன் துபாய்க்கு வேலைக்குச் சென்றான்.

அலுவலகம் முடிந்தபின் ஈஸி சேரை விட்டு எழாதவரான கணவர் வீட்டில் எல்லாரையும் விரட்டு விரட்டென்று விரட்டி, தெருவில் விளையாடும் எங்கள் வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொள்வார். பந்து அவர்கள் வீட்டில் விழுந்தால் தொலைந்தோம். தெருவில் டி.வி. வைத்திருந்த ஒரே வீடு அவர்களுடைய வீடு என்பதால் காசு வாங்கிக்கொண்டு டி.வி. பார்க்க அனுமதிப்பார். இலந்தைப் பழமும் வாங்கிக்கொள்ளலாம். காசு உண்டு.

சுமாரான ஞானமுள்ள மகனை நினைத்துக் கவலைப்படுவதா, கொஞ்சம் கூட ஞானமே இல்லாத மகளைக் குறித்து கவலைப்படுவதா, எப்போதுமே எறிந்துவிழும் கணவரைக் குறித்துக் கவலைபப்டுவதா என்கிற கவலையில் ராஜி மாமிக்கு நீரழிவு நோய் வந்ததது. ‘கீழ தரைல படுத்துக்கறதே இல்ல. படுத்துண்டா எறும்பு பிடிச்சு இழுத்துண்டு போயிடற அளவுக்கு சர்க்கரை இருக்கு” என்று வேடிக்கையாகச் சொல்வார்.

எப்படியோ தடுமாறி பத்தாம் வகுப்பு முடித்த சுமதியைப் பெண் பார்க்க வரும்போதெல்லாம் வீடு ரணகளப்படும். பையன் விட்டார் போனபின் மாமா ருத்ர தாண்டவம் ஆடுவார். சுமதியைக் கரித்துக் கொட்டி, மாமியை ஏசியபின் உக்ரம் அடங்கும்.

ராஜி மாமியின் பெருமுயற்சியால் எப்படியோ கல்யாணம் ஆகி பெண் புக்ககம் போனாள். பிறந்த வீட்டில் ஏச்சும் பேச்சும் கேட்டவள் புகுந்த வீட்டில் ஒரு ஏச்சு பேச்சு இல்லை. வெறும் அடி உதை தான். மாப்பிள்ளைக்கு வேலை போய் சுமதி மாட்டுத் தொழுவத்திலேயே பெரும் நேரத்தை செலவிட்டாள்.

ராஜி மாமி உடைந்து போனாள். மகனுக்குக் கல்யாணம் பண்ண முயன்று, தோற்று, சர்க்கரை ஏறி ஒரு அரை மணி நேரத்தில் மாலை போட்ட போட்டொவில் சுவரில் தொங்கினாள்.

மனைவி போனபின் மகனுக்குக் கல்யாணம் பண்ண மாமா ரொம்பவும் முயன்றார். தமிழ் நாட்டில் அவர் போகாத ஊரே இல்லை என்னும் அளவுக்கு எல்லா ஊருக்கும் போய் பெண் பார்த்தனர். கடைசியில் ஒரிசாவில் ஒரு அய்யங்கார் பெண் கிடைத்துக் கல்யாணமும் ஆனது.

மாமாவின் ஆட்டம் குறையவில்லை. மருமகள் அவதிப்படுவதை ராஜி மாமி போட்டோவில் இருந்தபடியே பார்த்தாள். விரைவில் குட்டி ராஜி மாமி பிறந்தாள். மாமாவின் ஆட்டம் இன்னமும் அதிகரித்தது. மகன் மௌனியாக இருப்பதைப் பார்க்க சகிக்காமல் மருமகளைக் காப்பாற்ற தன்னிடம் அழைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை போலும். மாமியாரும் மருமகளும் அருகருகில் போட்டோவில் இருந்து குடும்பத்தைப் பார்க்கத் துவங்கினர்.

தானும் ரிடையர் ஆகிவிட்ட நிலையில், மகளும் சுகப்படவில்லை, மகனுக்கும் வேலை போய் வீட்டில் வெறுமனே வளைய வருக்கிறான், பெண் குழந்தை வேறு என்று ஒருமுறை அங்கலாய்த்தார் மாமா. அவர் சற்று மனம் விட்டு சாந்தமாகப் பேசி அன்றுதான் பார்த்தேன்.

15 ஆண்டுகள் கழித்து 2002ல் என் மனைவி குழந்தையுடன் ஒருமுறை ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பும் போது ஒரு சந்தில் இருந்து என்னை யாரோ பெயர் சொல்லி கூப்பிடுவதைக் கேட்டுத் திரும்பினேன்.

”என்னப்பா, என்னைத் தெரியலையா? நான் தான் ராஜி மாமி பொண்ணு சுமதி” என்றபடி என் முன் வந்து நின்ற அந்தக் கிழிந்த, வெளிறிய புடைவைக்காரி ராஜி மாமியின் பெண் தான் என்று நம்ப முடியவில்லை.

”அப்பா, அண்ணால்லாம் எப்படி இருக்கா?’ என்றேன்.

”அண்ணாவா? அவன் போய் ரெண்டு வருஷம் ஆறதே. அப்பா அவனுக்கு கயா ஸ்ரார்த்தம் பண்ண காசிக்குப் போயிருக்கா” என்றாள்.

”நீங்க எப்படி இருக்கீங்க?” என்றேன் திக்கித் திணறியபடி.

“பார்த்தா தெரியலையா? நான் நன்னா இருக்கேன். இவாத்துல ஆறு மாடு வளர்க்கறா. ஏழாவதா நான்” என்றாள்.

ஒன்றும் சொல்லத் தோன்றாமல் நின்றிருந்தேன்.

”இரு இதோ வரேன். இவாத்து இலந்தைப் பழம் நன்னா இருக்கும். ஒரு அரை ஆழாக்கு தரேன்” என்றபடி உள்ளே சென்றாள்.

லக்ஷ்மியும் வேஷ்டியும்

நெய்வேலியில் லக்ஷ்மியின் மேல் கை வைக்க அவள் தூங்கும் போது மட்டுமே முடியும். என் நண்பன் ஜான் வீட்டில் வளர்ந்த லக்ஷ்மி ரொம்ப முன்கோபி. ஒருமுறை கத்தியதும் கயிறை அவிழ்த்து விட வேண்டும். இல்லையெனில் கயிறு அறுந்துவிடும் அளவுக்கு இழுப்பாள். சுத்திச் சுத்தி வருவாள். தினமும் கழுநீர் குடிக்க வீட்டு வாயிலில் நின்று குரல் கொடுப்பாள். உடனே கொடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் தரையை முட்டி கோலம் போட்ட இடத்தை அப்கானிஸ்தான் போல் ஆக்கிவிடுவாள். அவளது பால் எங்களைப் பல வருஷங்கள் வாழவைத்தது.

அவளது கன்றுக்குட்டியைத் துரத்தி விளையாடிக்கொண்டு என் தம்பி ஓட, அவனைத் துரத்திக்கொண்டு லக்ஷ்மி ஓட, அவள் பின்னர் இன்னொருவர் ஓட, அதன் பின்னர் நடந்ததை எழுதினால் நன்றாயிருக்காது. கடைசியில் ஓடியவர் ஓடும் முன் வெறும் வேஷ்டி மட்டும் கட்டிக்கொண்டிருந்தார். ‘ஓடும் முன்’ – அண்டர்லைன் ப்ளீஸ்.

கிரிக்கெட் விளையாடும் போது நான் எறிந்த பந்து லக்ஷ்மி மீது பட்டு, அவள் அதை நினைவில் கொண்டு சில நாட்கள் கழித்து என்னைத் துரத்தி, நான் தெருவில் ‘ஏன் எல்லாரும் வேடிக்க பார்க்கிறார்கள்?’ என்று குழம்பியவாறே ஓடி வீடு வந்து சேர்ந்த போது பாட்டி, ‘ஏண்டா வேஷ்டி கட்டிண்டு போனயே, வேஷ்டி எங்க?’ என்று கேட்டது லோக பிரசித்தம்.

பசு மாடு நம்முடனே எப்போதும் பயணிக்கிறது. கடுமையாக உழைத்தால் ‘மாடு மாதிரி வேலை செய்யறான்’ என்பதும், அதிக அளவு உண்பவனை ‘மாடு மாதிரி தின்றான்’ என்பதும் நமது முரணியக்க வரிசையில் சேருமோ என்னவோ.

‘ஆடற மாட்ட ஆடிக் கறக்கணும், பாடற மாட்டப் பாடிக் கறக்கணும்’ என்னும் பழமொழி நெய்வேலியில் எனக்குத் தெரியாது. சாதாரணமாகவே கோபம் கொண்ட லக்ஷ்மியிடம் போய் பாடவும் ஆடவும் செய்தால் நிலைமை கவலைக்கிடம் தான். நல்லவேளை.

‘ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு மனுஷனையும் கடிக்கற..’ பழமொழி நல்லவேளை லக்ஷ்மிக்குத் தெரியாது. அவளது கொம்பு கூர்மை பற்றி தெரிந்த எங்களுக்கு அவளது பல்லின் கூர்மை தெரிந்திருக்கும்.

‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ பழமொழியை யாரும் லக்ஷ்மியிடம் செய்துபார்த்ததாக நினைவில்லை. செய்திருந்தால் அவர்களுக்குப் பால் தான். லக்ஷ்மியின் பால்.

ஒருவேளை லக்ஷ்மியை யாருக்காவது தானம் கொடுத்து, அவர்கள் அவளது பல்லைப் பிடித்துப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. பார்த்திருந்தால் அவர்களுக்கும் மறு நாள் பாலுக்கு அலைய வேண்டியிருக்காது.

இப்போது லக்ஷ்மி தனது எத்தனையாவது ஜென்மத்தில் எந்த ஊரில் இருக்கிறாளோ தெரியவில்லை. ஆனால் ஒன்று. அவள் இருக்கும் தெருவில் வேஷ்டிக்கு வேலை இல்லை.

பெருமாள் படம் பார்த்த கதை

‘சீக்கிரம் வா. நாழியாறது,’ சித்தப்பா அவசரப்படுத்தினார்.

பள்ளிக்கு அவர் வந்து என்னனை அழைத்துச் சென்றதே இல்லை. ஆச்சரியத்துடன் வாய் பிளந்தவாறே அவருடன் சென்றேன். சைக்கிளில் முன்னால் அமர வைத்து எதிர்காற்றில் தடுமாறி மிதித்துச் சென்றவர்,. ‘சினிமாக்குப் போறோம்,’ என்கிறார்.

80களில் நெய்வேலியில் அமராவதி தியேட்டருக்குப் போனது 3 முறை. குடும்பத்துடன் செல்வது அதுவே முதல் முறை. அத்தை, பெரியப்பா, சித்தப்பா, குடும்பங்கள் தீபாவளிக்கோ பொங்கலுக்கோ ஒன்றுகூடியிருந்தோம்.

வேறு ஊர்களில் எல்லாம் 4-5 ஆண்டுகள் ஓடி முடித்து, பிரிண்ட் தேய்ந்து, திரை முழுவதும் கோடு கோடாகவும், ஆங்காங்கே படங்களும் தெரியும் வண்ணம் அமராவதியில் திரைப்படங்கள் ஓடும்.

மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. ‘என்ன சினிமா சித்தப்பா?’ என்றேன். ‘சினிமா’ என்று சொல்வதே ஐஸ்கிரீம் சாப்பிடுவது போன்றது. வீட்டில் சினிமா பற்றிய பேச்சு இருந்ததில்லை. காதில் விழுந்தால் அப்பா ருத்ர தாண்டவம் . சாரி..காளிங்க நர்த்தனம் ஆடிவிடுவார்.

இப்படியான சூழ்நிலையில் சித்தப்பா வந்து சினிமாவுக்கு அழைத்துச் சென்றால் கசக்குமா ?

‘பெருமாள் படம். திருமால் பெருமை. பெருமாளோட 10 அவதாரமும் காட்டறாளாம்,’ என்றார்.

‘நரசிம்மரும் வருவாரோனோ?’ என்றேன்.

‘ஓ. அப்ப ‘யஸ்யா பவத்..’ ஸ்லோகம் சொல்லு,’ என்றார். ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.

‘பாட்டி ஆத்துல இருக்காளா?’ பாட்டி நார்மடிப் புடவையுடன் எங்கும் வெளியில் வருவதில்லை.

‘இல்லை. ரொம்ப சொல்லி ‘உபன்யாசம்’ மாதிரி இருக்கும்னு பாட்டியையும் அழைச்சுண்டு வந்திருக்கோம்.’ முதல் தடவையா பாட்டி சினிமா பார்க்கப் போறா’ என்றார்.

‘நான் பாட்டி பக்கத்துலதான் உக்காந்துப்பேன்,’ என்று சொல்லி அந்த நினைவுகளில் ஆழ்ந்தேன்.

‘சரி, டிக்கெட் வாங்கணுமே. போய் தான் வாங்கணுமா?’ என்று கேட்ட்டேன்.

‘பேசாம வா. அதெல்லாம் வாங்கியாச்சு. எல்லாரும் அமராவதிலே நிக்கறா. நீ மட்டும் தான் பாக்கி,’ என்றார். குடும்ப உருப்படிகள் 20 பேருடன் ‘திருமால் பெருமை’ என்று பெருமாள் படம். மகிழ்ச்சியில் அழுகை வந்தது.

தியேட்டர் வாசலில் ஒரே கூட்டம். ‘சோல்ட் அவுட்’ என்று கவுண்டரில் போர்டு போட்டிருந்தான். ‘நல்ல வேளை. டிக்கெட் இருக்கு’ என்று சந்தோஷமாக இறங்கினேன்.

‘டிக்கெட் எங்கே?’ என்று பாட்டியிடம் கேட்டார் சித்தப்பா. என்னை அழைத்துவரக் கிளம்பும் முன் பாட்டியிடம் கொடுத்துச் சென்றிருந்தார்.

‘என்னது? என்ன கேக்கறே?’ என்றார் பாட்டி. அடி வயிற்றில் லேசாக புளியைக் கரைத்தது.

‘ டிக்கெட் குடுத்தேனே. 20 வெளிர் மஞ்சள் காயிதம். அதைக் குடும்மா. நாழியாயிடுத்து,’ சித்தப்பா அவசப்படுத்தினார்.

‘ஓ அதா, ஏங்கிட்ட கையில வெச்சிண்டிருந்தா தொலைஞ்சு போயிடும்னு சேப்பு கலர் சொக்கா போட்டுண்டு ஒரு பையன் வந்து வாங்கிண்டு போனான். சீக்கரம் வா. பெருமாளைப் பார்க்காலம்,’ என்றாள்.

வீட்டிற்கு வந்து பெருமாளை போட்டொவில் பார்த்தோம்.

நெய்வேலி

80களில் நெய்வேலியில் போட்டியும் பொறாமையும் அதிகம்.

ஸத்சங்கம்-மணித்வீபம் கீரன் உபன்யாசம் ஏற்பாடு செய்தால், ஸத்சங்கம் -தபோவனம் வாரியாரை வரவழைக்கும். விநாயகர் சதுர்த்தியை மணித்வீபம் தூள் பரத்தினால், தபோவனம் ராதா கல்யாண உற்சவத்தை விமரிசையாகக் கொண்டாடி தன பெருமையை நிலை நாட்டும்.

இங்கே சூரிய நமஸ்காரம் ஏற்பாடு செய்தால் அடுத்த வாரம் அங்கு திருப்பாவை போட்டி நடக்கும். திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வேளையில் மணித்வீபம் ஜெயராம சர்மாவின் நாராயணீயம் உபன்யாசத்தை ஏற்படுத்தி சம நிலையைக் குலைத்தது. ஒரு மாதம் கழித்து தபோவனமும் அவரை அழைத்து வந்து வால்மீகி ராமாயண உபன்யாசம் என்று நிலமையைச் சரி செய்தது.

நல்ல விஷயங்களுக்கான போட்டி அது. பயன்பெற்றது அப்போதைய பள்ளிப் பிள்ளைகளான நாங்கள். இன்று ஓரிரு நல்ல சத்-விஷயங்கள் தெரிவது போல் தோன்றினால் அதற்கு காரணம் அப்போதைய நெய்வேலியில் இந்த அறப்பணிகளில் ஈடுபட்ட என் தந்தையார் போன்ற பல பெரியவர்கள்.

ஒருமுறை மணித்வீபத்தில் வாரியார் சுவாமிகள் உபன்யாசம். 1967 என்று பெரியவர்கள் சொல்லிக் கேள்வி. அண்ணாத்துரையின் உடல் நிலை சரியில்லாத நேரம். வாரியார் சுவாமிகள் யதேச்சையாக எதோ சொல்ல, அது அண்ணாத்துரையின்  உடல் நிலை பற்றிய கருத்து போல் பரவ, ஒரு நாள் இரவு அவர் தங்கியிருந்த வேடடைச் சுற்றி தி.க. / தி.மு.க. ஆட்கள் சூழ்ந்துகொண்டு வயதில் முதிர்ந்த அந்தப் பெரியவரைச் சரமாரியாகத் தாக்கினார்கள். அவர் பூசையில் இருந்த சிவ லிங்கத்தை உடைத்துவிட்டும் சென்றனர். அன்றிலிருந்து வாரியார் மணித்வீபம் வரமாட்டார், தபோவனத்தில் மட்டும் பேருரையாற்றுவார். ( அவரைத் தாள்ளியவன் பின்னாளில் மரணப் படுக்கையில் இருந்த பொது வாரியாரிடம் திருநீறு பெற்றான் என்பது வேறு விஷயம்)

நெய்வேலியை நினைத்துக்கொள்ளாத நாளே இல்லை. விரைவில் ஒருமுறை சென்று வர வேண்டும்.

நீ எதுக்கு இந்தியா போகணும்கற?

வாழ்க்கை என்பது அவமானங்களையும், அநீதிகளையும் தோளில் சுமந்துகொண்டு ஆனாலும் பளுவே இல்லாதது போல் நடிப்பது என்பதை அப்பாவின் தலைமுறையில் நெய்வேலியிலும் இன்ன பிற அரசு அலுவலகங்களிலும் வேலை செய்த பலரது வாழ்க்கையையும் பார்த்து உணர்ந்துகொண்டேன்.

‘ஜாதிகள் உள்ளதடி பாப்பா’ பதிவு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதில் இருந்து ஜாதியால் பாதிக்கப்பட்டவர்கள் அனேகம் பேர் இருப்பது தெரிகிறது. ஜாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் குரலை மட்டுமே பதிவு செய்யும் ஊடகங்கள், ஜாதி அடிப்படை இட ஒதுக்கீட்டின் விளைவால் ‘முன்னேறிய’ ஜாதி என்று வரையற்க்கப்பட்ட ஜாதி மாணவர்கள், தொழிலாளர்கள் தங்களை எப்படி உணர்கிறார்கள் என்று பதிவு செய்ய முன்வருவதில்லை.

‘மத்யமர்’ என்னும் கதைத் தொகுப்பில் சுஜாதா தொலைத்தொடர்புத் துறையில் ஒரு நேர்காணலைப் பதிவுசெய்திருப்பார். பிரமிப்பூட்டும் அறிவுகொண்ட ஏழை பிராமணப் பொறியாளருக்கு வேலை மறுக்கப்படுவதையும் அதே வேலை எந்தத் தகுதியுமே இல்லாத ‘முன்னேறாத’ சாதியைச் சார்ந்த ஒரு பணக்காரப் பெண்ணுக்கு வழங்கப்படுவது பற்றியும் சொல்லியிருப்பார். இண்டர்வியூ முடிந்து வெளியில் பேருந்திற்கு அந்த பிராமணப் பொறியாளன் நின்றுகொண்டிருப்பதும், அந்தப் பெண் காரில் ஏறிப் போவது பற்றியும் சொல்லி, அந்தக் கதை முடியும். என் பள்ளிக்காலத்தில் நான் படித்த, என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய கதை அது.

இது ஏதோ வெளிப்பூச்சு மட்டும் அல்ல. பல பொதுத்துறை நிறூவனங்களிலும் இதே நிலை தான். ஒதுக்கீடு அடிப்படையில் வேலைக்குச் சேர்பவர்கள் தங்கள் பதவி உயர்வுக்கும் ஒதுக்கீடு அளிக்கப்படுவதை தங்களுக்கான உரிமையாகவே நினைக்கிறார்கள். நேரில் பார்த்த பல நிகழ்வுகள் உண்டு.

சுப்பு ( உண்மைப் பெயர் அல்ல ) வீட்டிற்கு வந்திருந்தார். ‘அப்பா இருக்காங்களா?’ என்றார்.

‘வாய்யா, என்ன காலங்கார்த்தால?’ என்றபடி அப்பா வெளியில் வந்தார். நெய்வேலியில் வீடுகளில் சின்ன திண்ணை இருக்கும். அதில் அம்ர்ந்தவாறே, ‘இல்ல, இன்னிக்கும் நாளைக்கும் லீவு வேணும்’ என்றபடி ஒரு வெள்ளைத்தாளையும் பேனாவையும் நீட்டினார்.

From, To முதற்கொண்டு போட்டு சுப்பு எழுதுவது போல் அப்பா லீவ் லெட்டர் எழுதிக்கொடுத்தார். கையெழுத்து போடும் இடம் தவிர மற்ற எல்லாம் அப்பா எழுதியது. சுப்பு அதை வாங்கிக் கையெழுத்து மட்டும் போட்டு மீண்டும் தர, ‘சூப்பரிண்டண்ட் கிட்ட குடுத்துடறேன்’ என்றவாறு வாங்கி வைத்தார் அப்பா.

விஷயம் என்னவென்றால், பணி ஓய்வு பெறும் போது அப்பாவைவிட சுப்பு மூன்று நிலைகள் மேல் இருந்தார். இப்படிப் பல சம்பவங்கள் நேரில் கண்டவை.

இவை பற்றிப் பல முறை வீட்டில் பேச்சுவார்த்தை நடக்கும். ‘This country has gone to the dogs, Appa,’ என்று ஆத்திரத்தில் நான் பேசியதுண்டு.

‘இது அவாளோட காலம். சக்கரம் மேலையும் கீழயும் தான் போகும். இப்போ கீழ இருக்கோம். மனுஷ ஜீவிதத்துல ஆரம்பத்துலேர்ந்து முடிவு வரை பார்த்தா ஒரே சீரா இருக்காது. என்னால எட்ட முடியாத உயரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். ஏதோ நமக்கு வேலை இருக்கேன்னு நெனைச்சுண்டு பண்றத ஸ்ரத்தையா பண்ணைண்டே இருக்கணும். ரொம்ப ஆவேசப்படாம போய் நன்னா படி,’ என்று சொல்லித் தன் வேலையை பார்க்கக் கிளம்புவார் அப்பா.

மேலும் பேச முடியாததால் அடங்கிப்போய் மீண்டும் ஏதாவது ஒரு பிரமோஷன் கிடைக்கவில்லை என்கிற பேச்சு வீட்டில் நடக்கும் வரை நான் காத்திருக்க வேண்டியது தான். அப்போதும் இது போலவே ஒரு உபதேசம். ‘நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. கால, தேச, வர்த்தமானங்கள் எதுவும் நமக்கு எதிராகவே உள்ளன. எனவே அடிப்படையை பலப்படுத்து. படி. முன்னேறு’. இதே ரீதியில் உபதேச மஞ்சரிகள் கேட்டுக் கேட்டு மனது வெறுமையானது. ‘கற்பி, ஒன்றுசேர், போராடு’ என்று எங்கோ யாரோ சொன்ன வாசகங்கள் நினைவில் வரும் அப்போதெல்லாம்.

பல வருடங்கள் கழித்துக் கல்லூரிகளுக்கு நிழைவுத் தேர்வு எழுதி ஒதுக்கீட்டினால் நேரிடையாக பாதிக்கப்பட்ட போது அதன் வலி அபரிமிதமாக இருந்தது. இத்தனை வலியையும் தாங்கிக் கொண்டு அப்பா எப்படி இவ்வளவு ஆண்டுகள் எதுவுமே நடவாதது போல வேலை செய்கிறார் என்று நினைத்துப் புழுங்கியது உண்டு. கீழ் நடுத்தர மக்களை சாதி மட்டும் பார்த்து, முன்னேறிய வகுப்பினர் என்று முத்திரை குத்தி முன்னேற விடாமல் தடுக்கும் ஒரு முறை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்று நினைக்கிறேன். ( எனது ‘பழைய கணக்கு’ நூலில் ‘ரங்கு (எ) ரங்கபாஷ்யம்’ கதைக்கு வித்து இங்கிருந்தும் கிடைத்தது. )

அதே போல், சாதி என்பதும் உலகில் எங்கும் இல்லை என்றும் வாதிடலாம் தான். சாதி என்ற பெயரில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் வர்க்கம் என்பது எந்த நாட்டிலும் உண்டு. இன்று முன்னேறியதாக உள்ள நாடுகளிலும் வர்க்கப் பேதங்கள் உள்ளன. இல்லை என்று சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள். ஆனால், சாதிக்கு மேல் பொருளாதாரம் என்கிற ஒரு அளவுகோல் தேவை என்பதை உணர மறுப்பதை ‘முற்போக்கு’ என்று எந்த நாட்டிலும் சொல்வதில்லை. எல்லா நாடுகளிலும் பொருளாதாரம் சர்ந்த உதவிகள் அரசுகளால் செய்யப்பட்டே வருகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டுமே பொருளாதாரத்தில் பின்னடைந்திருந்தாலும் சாதியில் முன்னிருந்தால் சலுகைகள் இல்லை, சமத்துவம் இல்லை என்கிற நிலை. இதனை நீக்க அரசுகளே அஞ்சும் அளவிற்கு இந்த வியாதி வளர்ந்துள்ளது.

வாழ்க்கை என்பது அவமானங்களையும், அநீதிகளையும் தோளில் சுமந்துகொண்டு ஆனாலும் பளுவே இல்லாதது போல் நடிப்பது என்பதை அப்பாவின் தலைமுறையில் நெய்வேலியிலும் இன்ன பிற அரசு அலுவலகங்களிலும் வேலை செய்த பலரது வாழ்க்கையையும் பார்த்து உணர்ந்துகொண்டேன். நாம் அப்படி வாழக்கூடாது என்றும் வைராக்கியம் என்றெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும் ஒரு தீர்மானம் செய்துகொண்டேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இப்போதெல்லாம் இந்த ஒதுக்கீடு சார்ந்த அட்டூழியங்கள் அவ்வளவாக இல்லை என்பது போல் உள்ளது.. ஏனெனில் இந்தத் துறைகளில் ‘முன்னேறிய வகுப்பு’ என்ற ஒன்று இல்லை என்பதே. கடந்த 25 ஆண்டுகளில் இந்த முன்னேறிய வகுப்பு முத்திரை பெற்ற பெரும்பாலானவர்கள் தனியார் துறைக்குச் சென்றுவிட்டனர் அல்லது அமெரிக்கா சென்றுவிட்டனர். சிங்கப்பூரில் ஆவணி அவிட்டம் அன்று பல கோவில்களில் இந்தக் கூட்டத்தைக் காணலாம். ஜப்பானில் மாதம் தோறும் நடக்கும் இந்தியன் பூஜா செலெபிரேஷன்ஸில் இந்தக் கூட்டம் தென்படும். பிட்ஸ்பர்க் பெருமாள் கோவிலிலும் டல்லாஸ் கோவிலிலும் இந்தக் கூட்டம் தென்படுகிறது. பெரும்பாலும் கணினி, மென்பொருள், வங்கித்துறைகளில் வேலையில் இருக்கும் இந்தக் கூட்டம் தங்கள் ஊர்களின் இன்றைய நிலையைப் பற்றி அவ்வப்போது அக்கறை கொள்கிறது. பெரும்பாலானவர்களை ஊருக்குத் திரும்ப இது தடுக்கவும் செய்கிறது.

சமீபத்தில் சிங்கையில் உள்ள என் கல்லூரி நண்பனுடன் நடந்த உரையாடல் ஒன்றில் அவன் கேட்டது : ‘நீ எதுக்கு இந்தியா போகணும்கற? உனக்கும் நம்ம ஜெனரேஷனுக்கும் நடந்தது உன் பசங்களுக்கும் நடக்கணுமா? கோட்டாவத் தாண்டி ஹை ஜம்ப் பண்ற வேல அவங்களுக்கு எதுக்கு?’ என்றான். நியாயமாகவே இருந்தது.

‘பசங்களுக்கு வேணா வேண்டாம். ஆனா எனக்கு எங்க ஆழ்வார் கோவில் வாசல்ல பெருமாள் ஏள்ளும்போது அங்க நின்னு ‘தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ..’ பாசுரம் சேவிக்கணும்டா. எங்க பெரியவங்கள்ளாம் செஞ்சத நான் செய்யணும். நான் போகத்தான் வேணும். எனக்கு அரசாங்கத்துல வேலை வேணா கெடைக்காம இருக்கலாம். ஆனா பெருமாள் ஏள்ளற வீதியில நின்னு பாசுரம் சேவிக்க எனக்கு யார் அனுமதியும் தேவை இல்லை. அதால நான் போகத்தான் போறேன்,’ என்றேன்.

அப்பன் நடத்திவைப்பான் என்று நம்புகிறேன்.

அது மறைந்த காலம்

அல்லா மாமாவுடன் எனக்கான தொடர்பு 30 வருஷம் உயிருடன் இருந்தது.

‘அப்பா இருக்காகளா’ என்று கேட்டபடியே வருவார் அல்லா மாமா. அவரது இயற்பெயர் ரொம்ப நாள் வரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்பாவின் அலுவலகத்தில் குரூப் டி என்னும் பியூன் வேலை செய்துவந்தார் அல்லா மாமா. கடை நிலை ஊழியர்.

வெகு நாட்கள் வரை அல்லா மாமா என்பவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்றே நினைத்திருந்தேன். வயது ஏற ஏற அவர் அன்னியர் என்று புரிந்தது. ஆனாலும் அவர் மீதான அன்போ மரியாதையோ குறைந்ததில்லை. வெள்ளிக்கிழமை அன்று மட்டும் எங்கள் வீட்டிற்கு வரமாட்டார். ‘மாம்சம் சாப்டுவோம் தம்பி’ என்பார்.

அப்பாவுக்கும் அவரிடம் ஒரு தனிப்பிரியம் உண்டு. ‘என்ன பாய், என்ன விசேஷம்?’ என்று துவங்கி அவரது குடும்ப விஷயங்கள் பலது பற்றியும் கேட்டுக்கொள்வார். அவர் குடும்ப விஷயம் பற்றி அப்பாவுக்கு என்ன என்று நான் நினைத்ததுண்டு. பல முறை தனது மகன்களையும் அழைத்து வருவார். அப்பா அவரது பிள்ளைகளுக்கு நான்றாகப் படிக்கும்படி அறிவுரை சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பணி ஓய்வுக்குப் பின் வடலூரில் வசிக்கத் தொடங்கினார். வாரம் ஒருமுறையாவது சைக்கிளை மிதித்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வருவார். ‘அப்பா இருக்காகளா ? சும்மா பாத்துட்டுப் போகலாமுன்னு வந்தேன்,’ என்பார். தனது ஊரின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார். தனக்கு வர வேண்டிய நிலம் தொடர்பான ஒரு பிரச்சினையில்  அப்பா தலையிட்டுத தீர்க்க வேண்டும் என்று கேட்டிருந்தார். ஓரிரு வருடங்கள் வழக்கு நடந்தது.

திடீரென்று அல்லா மாமா சாலை விபத்தில் காலமானார். ஆனாலும் அப்பா அவரது இரு பிள்ளைகளையும் அழைத்து பல வருடங்கள் வரை சரியான பாதையில் அவர்கள் குடும்பம் செல்ல  அறிவுறுத்தியிருக்கிறார்.  அவர்களில் இளைய மகனுக்கு ஹெப்படைடிஸ் வைரஸ் தாக்கியதில் அவரது அரபு நாட்டுப் பணியாசையில் மண் விழுந்தது. அவன் அரபு நாட்டிற்குச் சென்றால் தான் அவர்கள் குடும்பம் உயரும் என்னும் நிலையில் பல மருத்துவ அதிகாரிகளை அணுகி அவர்களைக்கொண்டு நற்சான்றிதழ் அளிக்க வைத்து ஒருவழியாக அந்தக் குடும்பம் முன்னேற உதவினார்.

‘யாருக்காக இல்லேன்னாலும் அல்லா பிச்சைக்காக நான் அவர் மகன்களுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும். நாப்பது வருஷப் பழக்கம்,’ என்று எப்படியாவது அவரது மகன்களில் ஒருவருக்கு நெய்வேலியில் வேலை வாங்கித்தர முயற்சித்தார். கருணை வழிந்து வளர்ந்த நெய்வேலியில் அப்போது கருணை வடிந்துவிட்டிருந்தது. வெற்றி கிட்டவில்லை.

அல்லா மாமாவைப் போலவே பிரின்ஸ் டெய்லர்ஸ் என்னும் ஒரு சிறிய தையற் கடைக்காரரும் எங்களுக்கு நண்பர். அவர் எப்பவும் சிரித்த முகத்துடனேயே இருக்கும் இன்னொரு இஸ்லாமியர். நான் எல்.கே.ஜி. முதல் 12வது வரை அவரிடமே துணி தைத்திருக்கிறேன். தீபாவளி வந்தால் அவர் கடையில் இருந்து ஆள் வரும். ‘என்ன இன்னும் தைக்க வரல்லியே ..’ என்று. பின்னாளில் ரெடிமேட் ஆடைகள் வந்த பிறகு அவரையும் காணவில்லை. அவரது கடையின் அளவு சிறிதாகிக்கொண்டே வந்தது என்பதை நான் அறிந்திருந்தேன்.

அகில இந்தியத் தேர்வில் ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றதால் என் படம் நாளிதழ்களில் வந்தது. யாருக்கு மகிழ்ச்சியோ தெரியாது, பிரின்ஸ் பாய் ரொம்ப ஆனந்தப்பட்டார். ‘நம்ம கடைல யூனிபார்ம் தெச்சு போட்ட கொழந்த இன்னிக்கி பேரும் படமும் பேப்பர்ல வருது’ என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.

1997-ல் ஒருமுறை அவர் கடைக்குச் சென்றிருந்தேன். மிகவும் வயதானவராகத்  தெரிந்த அவர் என்னை அப்படியே அணைத்துக் கொண்டார். ‘நான் பார்த்து வளர்ந்தவங்க தம்பி நீங்க. வேலைக்கெல்லாம் போறீங்க. ரொம்ப பெருமையா இருக்கு,’ என்று கண்ணீர் விட்டார்.

நான்கு ஆண்டுகள் கழித்து 2001ம் ஆண்டு தந்தையார் பணி ஓய்வு பெறும் போது ஒரு முறை நெய்வேலி சென்றேன். பிரின்ஸ் டைலர்ஸ் இல்லை. வேறு ஏதோ கடை இருந்தது. என்னைப்  பார்த்து ஆனந்தப்பட்ட அந்தப் பெரியவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

நான் அறிந்த இஸ்லாமியர்கள் இவர்களே. வஹாபியம் பேசாத, அடக்குமுறை செய்யாத, யாரையும் விட்டு ஒதுங்காத, எப்போதும் சிரித்த முகத்துடன் தென்பட்ட இந்த இரு பெரியவர்களே ‘இஸ்லாமியர்’ என்றதும் என் நினைவுக்கு வருபவர்கள். எல்லாரையும் போல குடும்பம் வாழ வேண்டி அயராது உழைத்த நேர்மையாளர்கள்  இவர்கள். பெரிய பணம் எல்லாம் சம்பாதிக்கவில்லை இவர்கள். பெரும்பாலும் வறுமையிலேயே வாழ்ந்துவந்தார்கள். மதம் கடந்து அன்பு செலுத்தினார்கள்.

வடகலை ஐயங்காரும் லெப்பை முஸ்லீமும் வேறுபாடு இல்லாமல், வன்மம் இல்லாமல் வாழ்ந்த இடம் நெய்வேலி. சிங்கப்பூர் போன்ற பல இன சமுதாயம் கொண்டது நெய்வேலி.

ஆனால் அது வேறு ஒரு காலம். மதங்கள் மனிதர்களைப் பிரிக்காதிருந்த காலம். நான்கு சுவற்றுக்குள் மட்டுமே மதம் புழங்கிய காலம். அரசியல் வியாதிகளின் கறை படியாமல் புனிதமான நட்போடு மக்கள் வாழ்ந்து வந்த காலம் அது.

அல்லா மாமாவையும் பிரின்ஸ் டைலர்ஸ் கடைக்காரரையும் போல் அந்தக் காலமும் மறைந்துவிட்டிருக்கிறது.

ஒரு இனிய இசைப் பயணம்

நெய்வேலியில் என்னுடன் பள்ளியில் படித்தார் டாக்டர்.கல்பனா. தற்போது சிங்கப்பூரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நாகரீகத்தின் உச்சியில் இருக்கும் இந்த நாட்டில் தன் பிள்ளைகளை நமது பாரதப் பண்பாட்டின் அடையாளமான திருமுறை இசை, கர்நாடக இசை முதலியவற்றில் பயிற்றுவித்து வருகிறார். பிள்ளைகளும் கல்வியில் முதன்மையாகவும், கலைகளில் மேலும் முதன்மையாகவும் தேறி வருகின்றனர்.

அருமையான அந்தக் குழந்தைகள் இவ்வாண்டு நவராத்ரியின் போது எம் இல்லம் வந்து தங்கள் பாடல்களினால் இல்லத்தையும் எம் உள்ளத்தையும் நிறைத்தனர். திருமுறைப் பாடல்கள் சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோவிலில் தகுந்த ஓதுவார்கள் மூலம் செம்மையாகப் பயிற்றுவிக்கப் படுகின்றன.

நாங்கள் கேட்டு மகிழ்ந்ததை நீங்களும் கேளுங்கள். தமிழிசையும், கர்நாடக இசையும், திருமுறையும் உங்களுக்கு இன்பம் அளிக்கட்டும்.

பிள்ளைவளர்ப்பு என்றால் என்ன என்பதை திருமதி.கல்பனா, அவரது கணவர் திரு.நாகேஸ்வரன் முதலியோரிடம் தெரிந்துகொள்ள வேண்டும்.

உங்களுக்குக் 'கௌரவம்' இருக்கிறதா ?

உங்களுக்குக் ‘கௌரவம்’ இருக்கிறதா ? கௌரவமானவ்ர் தானா நீங்கள் ?

பயப்படாதீர்கள். உங்களைக் கேட்கவில்லை. கௌரவம் என்னும் சொல் இப்போது ‘மரியாதை’ என்கிற பொருளில் பயன்படுகிறது. ஆனால் இதன் உண்மைப் பொருள் என்ன ?

‘குரு’விற்கு உரியது என்று பொருள் படுவதாக பழைய நூல்களில் தெரிகிறது. அதாவது கௌரவம் குருவினுடையது என்று தெரிகிறது. அப்படியென்றால் ‘குரு’ என்பவர் யார் ? சற்று ஆராய்வோம்.

‘குரு’ என்பது தற்போது ஆசிரியர், வாத்தியார், பெரியவர், வழி காட்டுபவர் என்னும் பொருள்களில்
புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் ஆசிரியர் என்பவர் குருவா ? இதனை ஆராய ‘ஆசிரியர்’ என்ற சொல்லின் மூலம் பற்றிப் பார்க்கவேண்டும்.

தற்காலத்தில் ஆசிரியர் என்பது கல்வி கற்பிப்பவர் என்னும் பொருளில் மட்டும் அறியப்படவில்லை. அத்துடன், கதை எழுதுபவர், பத்திரிக்கையின் தலைமைப் பொருப்பில் இருப்பவர் என்னும் பொருள்களிலும் வருகிறது. ஆனால், எழுத்து, கல்வி முதலியவற்றுடன் தொடர்புடையதாகவே தெரிகிறது.

ஆசிரியர் என்னும் சொல் ‘ஆச்சாரியர்’ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து வந்துள்ளது என்று அறியப்படுகிறது. ஆக, ஆச்சாரியர் என்பவர் யார் ? குருவிற்கும் அவருக்கும் தொடர்பென்ன ? அவர் தான் ‘வாத்யாரா’ ?

மேலே சொன்ன பல சொற்களையும் பார்க்கும் முன், நாம் காண வேண்டிய சொல் ‘வாத்யார்’ என்பது. ஆனால் அதற்கும் முன் நாம் அறிந்துகொள்ள வேண்டியது ‘அத்யாயம்’ என்னும் சொல்லைப் பற்றியே.

கதைகளிலும், நாவல்களிலும் அத்தியாயம் என்னும் சொல் பயன்படுவது நாம் அறிந்ததே. தொடர்புடைய செய்திகளை உள்ளடக்கிய ஒரு பகுதியே அத்தியாயம் என்பது. அத்யாயம் என்பது ஒரு பிரிவு, ஒரு பகுதி. அது போலவே காண்டம், கண்டம், அங்கம், ப்ரகரணம், ஸ்கந்தம் என்று ஒரு நூலின் பல உட்பிரிவுகள் உள்ளன. ‘ அயோத்தியா காண்டம் ‘, ‘பால காண்டம் ‘ என்று கம்பன் பிரித்திருப்பது நினைவில் கொள்க.

அது போல் வேதத்தை வாய்மொழியாகவே பயின்ற அக்காலத்தில், ‘அத்யாயம்’, ‘அத்யயனம்’, ‘அத்யயம்’ என்ற சொல்லாடல்கள் இருந்துவந்தன. இன்றும் கூட முழுமையாக வேதம் படித்த ஒருவரை ‘பூர்ண அத்யாயி’ என்று அழைப்பது உண்டு.

அதே வரிசையில் வேதத்தில் ஒரு அத்யாயத்தை சொல்லித் தருபவரை ‘அத்யாபகர்’ என்று அழைத்தனர். ‘அத்யாயர்’ என்றும் அழைக்கப்படார் அவர். அவருக்கு உதவியாக இருந்த சற்று குறைவான கல்வி பெற்ற இன்னொருவர் உப-அத்யாயர் என்று அழைக்கப்பட்டார் ( ஜனாதிபது, உப-ஜனாதிபதி, தலைவர், உப-தலைவர் என்பது போல). இந்த உப -அத்யாயர் என்பவர் நாளடைவில் ‘உபாத்யாயர்’ என்று மாறினார். இன்று திருமணம் மற்றும் சடங்குகளை நடத்தி வைக்கும் பிரிவினர் செய்யும் தொழில் ‘உபாத்யாயம்’ என்று அழைக்கப்படுகிறது.

அது போலவே, அத்யாயர் நாளடைவில் ‘வாத்யார்’ ஆனார்.

இதில் ஒரு வேற்றுமை உள்ளது. அத்யாயர் தான் கற்றுக் கொடுக்கும் கல்விக்குப் பணம், பொருள் பெறக் கூடாது. பணம் பெற்றுக் கொண்டு செய்வது கேவலம் என்று கருதப்பட்ட காலம் அது. அப்படிச் செய்பவர் அத்யாயர், அத்யாபகர் என்னும் பெயர் கொள்ள மாட்டார். அவரை உப-அத்யாபகர், உபாத்யாயர் என்றே கொள்வர். அவருக்குத் தானங்களில் கடைசி இடமே. அவருக்கு மரியாதை இல்லை. வேள்வி முதலியன செய்யும் போது அவருக்கு முக்கிய இடம் தரக் கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.

‘ஏகதேசம் து வேதஸ்ய வேதாங்காந்யபிவா புந:
யோ (அ)த்யாபயதி வ்ருத்யர்த்தம் உபாத்யாய: ஸ உச்யதே’

அதாவது கல்விச் செல்வம் வழங்குவதை உயர்வாகக் கொண்டிருந்தத காலம் அது.

அத்யாபகரை விட மேலானவர் ‘ஆச்சாரியர்’ என்பவர். அவர் இலவசமாகக் கல்வி கற்பிப்பது மட்டும் அல்ல, மாணவனை அவருடனேயே அவரது இல்லத்திலேயே வைத்துக் கொண்டு அவனைப் பல வழிகளிலும் மேம்மடுத்த வேண்டும்.

இத
ப்பற்றியும் மனுஸ்மிருதி கூறுவது :

‘உபநீய து ய: சிஷ்யம் வேதம் அத்யாபயேத் த்விஜ:
ஸகல்பம் ஸரஹஸ்யம் ச தம் ஆசார்ய ப்ரசக்ஷதே’

அக்கால நியதிப்படி, மாணவனுக்கு உப-நயனம் செய்வித்து ( பூணூல் போட்டு ), வேதம் தொடங்கி, தனுர் சாஸ்திரம் என்னும் போர்க்கலை, ஆயுர் வேதம் என்னும் மருத்துவ சாஸ்திரம் முதலியன சொல்லிக்கொடுத்து அவருடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அது. அப்படிச் செய்பவர் ‘ஆச்சார்யார்’ என்று கொள்ளப்படுவர். ( அனைத்துப் பிரிவினரும் கல்வி பயின்ற காலம் அது என்பதை நினைவில் கொள்க.)

ஆனால் அவரை விட மேலானவர் ‘குரு’ என்ப்படுபவர்.

‘குரு’ என்பதற்குச் சிறப்பான விளக்கங்கள் தெரிகின்றன. எனக்குப் பிடித்த இரண்டை மட்டும் அளிக்கிறேன் : ‘கு’ என்பது இருட்டு. ‘ரு’ என்பது களைதல். அறியாமை என்னும் இருளைக் களையும் பணி செய்வதால் ‘குரு’ எனப்பட்டனர்.

இன்னொன்று ‘குணமும் ரூபமும்’ இல்லாத ஒன்று ப்ரப்பிரும்மம் ( கடவுள் ) என்பது. ஆகவே அதனை அறிந்துகொள்ள அப்பரப்பிரும்மமே குணமும் ரூபமும் ( உருவம் ) கொண்டு ‘குரு’ என்ற வடிவத்தில் வருகிறது என்று கொள்ளப்பட்டது. எனவே ‘குரு’ என்பவர் தெய்வத்தன்மை கொண்டவராக அறியப்பட்டார். எனவே தான் நாம் ‘சங்கர குரு’ என்று ஆதி சங்கரரை அறிகிறோம்.

‘ஆதி குரு’ என்று தக்ஷிணாமூர்த்தியை வழிபடுவது இந்திய மரபு. கல்விக்குக் கடவுளாகவும் அவரைக் கொள்கிறோம்.

எனக்குக் கல்வி பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களையும் குருவாக பாவித்து இந்த ஆசிரியர் தினத்தில் எனது பணிவான நன்றியறிதல்களைத் தெரிவிக்கிறேன். அவர்கள் எனக்குக் கொடுத்துள்ள கல்விச்செல்வம், அதன் அளவு முதலியன பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களது தன்னிகரில்லாத் தொண்டின் பெருமையை நினைந்து உருகி வணங்குகிறேன்.

Jhss Teavhers

குறிப்பாக நெய்வேலியில் ஜவகர் பள்ளியில் எனக்குக் குருக்களாக இருந்த திருமதி. உலகம்மாள் ( தமிழ்), திரு.கிருஷ்ணமூர்த்தி (ஆங்கிலம்), திரு. ராமானுஜம் ( ஆங்கிலம்), திருமதி. ஸ்ரீதேவி பத்மநாபன் (ஆங்கிலம்), திருமதி. ஷியாமளா வேணுகோபாலன்( ஆங்கிலம் ), திரு வெங்கடேசன் (பொருளியல்),திரு.பட்டாபிராமன் ( சமஸ்கிருதம் ) – இவர்கள் மனித உருவில் நடந்த தெய்வங்கள்.  இவர்களை வெறும் ஆசிரியர்கள் என்று சொல்ல முடியாது. இவர்கள் ‘குரு’ ஸ்தானத்தில் வைத்து வழிபடப்பட வேண்டியவர்கள்

பொதுவாக ‘உற்சவம்’ என்பது இறைவனுக்குச் செய்யும் திருவிழா என்ற பொருளில் அறிகிறோம். இறைவனுக்கு நிகரான குருவிற்கு ‘உற்சவம்’ செய்தல் என்பது சரிதானே !

எனது குருமார்களுக்கு ‘குரு உற்சவ’ அஞ்சலிகள்.

பி.கு: ‘குரு’ பற்றி மேலும் தெரிந்துகொள்ள ‘தெய்வத்தின் குரல்’ வாசிக்கவும்.

%d bloggers like this: