காலஞ்சென்ற நெல்லை கண்ணன் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்.
சிங்கப்பூர் இலக்கிய நாட்களில் இருந்து பழக்கம். கம்ப ராமாயணம் குறித்து சில மின் அஞ்சல் தொடர்புகள் உண்டு. பல பாடல்களை மீண்டும் வேறு நடையில் எழுதி அனுப்பி, பொருள் சரியாக வருகிறதா என்று அவர் கேட்டிருந்த காலங்கள் உண்டு.
அவருடனான முதல் தொடர்பு அவரை ஒர் இலக்கிய விழாவிற்காக வரவேற்று நான் எழுதியிருந்த சில குறள் வெண்பாக்கள் வழியாக. ஒரு வெண்பா ‘ நீவா சனி’ என்ற முடிந்ததாக நினைவு. இதை எழுதியது யார் என்று கேட்டு, கூப்பிட்டுப் பாராட்டினார். கிரேஸி மோகன் வடமொழிச் சொற்கள் கொண்டு வெண்பா இயற்றுவதைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

‘ஆமருவி’ என்பதை ஏதோ புனைபெயர் என்று நினைத்து ‘பெற்றோர் இட்ட பெயர் என்ன?’ என்றார். இயற்பெயரே அதுதான் என்றதும், சொந்த ஊர் தேரழுந்தூர் என்றதும் முக மலர்ச்சியுடன் பேசத் துவங்கினார் கண்ணன். ‘ திருமங்கையாழ்வார் பாசுரம் ஒண்ணு சொல்லுங்க’ என்றவர் நான் காலணியைக் கழற்றிவிட்டு சொல்லத் துவங்கிய போது தானும் எழுந்து நின்று கேட்டார். கையைப் பிடித்துக்கொண்டு கண்களில் நீர் துளிர்க்க ‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி. வைணவர்கள் எங்கே போனாலும் பிரபந்தம்னா இளகிடுவாங்க’ என்று மனம் உருகிப் பேசிக்கொண்டிருந்தார்.
மதுரை ஆதீனம் வழக்கில் களப்பணி ஆற்றிய பெருமை உடையவர்.
பின்னாளில் கடுமையான சாதீயப் பார்வை கொண்டவராகவும், பெரும் மோதி எதிர்ப்பாளராகவும் தன்னைக் குறைத்துக் கொண்டார் என்பது பெரும் வருத்தமே.
அரசியலில் பல அணிகளில் பல நேரங்களில் இருந்தவரான நெல்லை கண்ணன், சமயத்துக்குத் தகுந்த அரசியல் நிலை எடுப்பது என்பதால் தனது மாண்பைக் குறைத்துக் கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இருக்கவில்லை. அவரது அரசியல் நிலைகளும், பேச்சில் நிதானம் இன்மையும் காரணங்கள்.
தொடர்ந்து நல்லாசிரியராக இருந்து இளைய தலைமுறையினர் பலருக்கும் வழி காட்டியாக இருந்திருக்க வேண்டியவர் தன் நிலையில் இருந்து தாழ்ந்து, பலரது மதிப்பில் இறங்கி, மறைந்தார்.
பேச்சாளர் நெல்லை கண்ணன் அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலி.