மங்களமான கேள்விகள்

‘மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு செய்ய கூடுதல் கட்டணம்’ என்று பஹுத்-அறிவு விடியல் அரசு அறிவித்துள்ளதாம்.
உண்மையெனில், அவ்வறிவு இல்லாததால், அசட்டு அம்மாஞ்சியின் கேள்விகள்:


1. நாட்களுக்கு மங்கலம் உண்டு என்று விடியல் நம்புகிறதா?

2. ஆடிப்பெருக்கன்று பதிவு செய்யும் மாற்று மதத்தினருக்கும் அதிகக் கட்டணம் உண்டா? உண்டெனில் அவர்களும் மங்கலத்தை நம்புகிறார்கள் என்று கொள்ளலாமா?

3. மங்கலம் இந்து மத மங்கலம் மட்டுமா? ஈத், கிறிஸ்துமஸ் முதலியவை மங்கலம் கொண்டவையா? இல்லை என்று சொல்ல அரசுக்குத் திராணி உண்டா?

4. மங்கல நாள் அன்று அதிகக் கட்டணம் சரி எனில், சாதாரண நாட்களில் குறைந்த கட்டணம் உண்டா?5. அமங்கலமான நாட்களில் பதிவு செய்தால் இலவசமா?

6. அமங்கல நாளில், ராகு காலத்தில் பதிந்தால், அரசு பணம் கொடுக்குமா?

7. விடியற்காலை, பிரும்ம முஹூர்த்தத்தில் பதிந்தால் கட்டணம் எவ்வளவு?

8. ராகு காலம், குளிகை என்று பகுத்தறிவு அரசு, பஞ்சாங்கம் வெளியிடுமா?

9. சார்பதிவாளராக இந்து அல்லாதவர் இருந்தால் அவரும் இதனைக் கடைப்பிடிப்பாரா? ஆமெனில், மத சுதந்திரத்தில் தலையிடுவதாக ஆகாதா?

10. பேரறிஞர் பிறந்தநாள், முத்தமிழ் வித்தகர் பிறந்த நாள் முதலானவை நல்ல நாட்களா? அன்று பத்திரப் பதிவுக்கு என்ன செலவு? அந்த நாட்களில் பிரதமை வந்தால் என்ன செய்வது?

11. அஸ்வினி முதலான நட்சத்திரங்களைத் தொகுத்து, எந்தெந்த நட்சத்திரங்களுக்கு என்ன கட்டணம் என்றும் சொல்லுமா #பகுத்தறிவு அரசு?

12. பத்திரப் பதிவு செய்பவர் நட்சத்திரமும், அன்றைய நட்சத்திரமும் பார்த்து, யோகமும் ஒத்து இருந்தால், கட்டணம் யாது?

13. பதிவு செய்பவர் ஜாதகமும் கொண்டு வர வேண்டுமா?

14. பதிவு செய்பவர் ஜாதகத்துடன் பஞ்சாங்கமும் கொண்டுவர வேண்டுமா? ஆமெனில் திருக்கணிதமா, பாம்பு பஞ்சாங்கமா?

15. பதிவு அலுவலகத்தில் பிள்ளையார் கோவில் உண்டா? தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்ய அனைத்து சாதி அர்ச்சகர்கள் பணியில் இருப்பார்களா?

16. பதிவு அலுவலகங்கள் ‘அருள்மிகு மஹாகணபதி பத்திரப் பதிவு அலுவலகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுமா?

17. பதிவு அலுவலகத்தில் உள்ள பிள்ளையார் கோவில்களில் வசூல் பெருகினால், இந்து அறம் நிலையாத்துறை எடுத்துக் கொள்ளுமா?

18. இ.அ.நி. துறை, பத்திரப் பதிவு அலுவலகத்தையும் எடுத்துக் கொள்ளுமா?

19. அப்படி எடுத்துக் கொண்டால், அரசு நியமனம் பெற்ற அர்ச்சகர்கள் சார் பதிவாளர்களாகப் பணியில் அமர்த்தப்படுவார்களா?


விடியல் #பகுத்தறிவு விடையளித்தால் திடலுக்குப் புண்ணியமாகப் போகும்.

கல்கி தலையங்கம்

டிசம்பர் 29 கல்கி இதழின் ‘சர்வாதிகார ஜனநாயகம்’ என்னும் தலையங்கம் செக்யூலர் சட்டியில் கொதிக்கவிடப்பட்ட பகுத்தறிவுப் பொங்கல். எந்தவித நேர்மையும் இன்றி, கடைந்தெடுத்த அயோக்கியத் தனத்துடன் எழுதப்பட்டுள்ள, அடிப்படை நேர்மை, கடுகளவு ஆராய்ச்சி இல்லாத 5ம் வகுப்பு மாட்டுப் பொங்கல் கட்டுரை. எப்படிப்பட்ட பத்திரிக்கை, இன்று இப்படி.

இதையும் வலம் இதழின் கட்டுரைகளையும் ஒப்பிடவே முடியவில்லை. தலையங்கத்தில் ஒரு காத்திரம் வேண்டாமா? சரித்திரப் புரிதல் வேண்டாமா? முத்தலாக் ஏன் வந்தது, யார் வற்புறுத்தினார்கள் என்ற அடிப்படை அறிவு வேண்டாமா? 370 பற்றி நேரு கூறியது, அவர் அதை விலக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேசியது, பங்களாதேசிய அகதிகள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று இந்திரா காந்தி பேசியது என்று எதுவுமே தெரியாதா தலையங்கம் எழுதுபவர்களுக்கு?

கல்கிக்கு எழுத ஆளில்லையா? என்னே ஒரு வீழ்ச்சி! மன வருத்தமே மிஞ்சுகிறது.

சோறும், அதில் உப்பும் ஒரு கேடா?

‘உனக்கு நூறு தடா வெண்ணையும் அக்கார அடிசிலும் அமுது செய்விப்பேன்’ என்று பெருமாளிடம் ஆண்டாள் சொல்லியிருந்தாள். அவளால் முடியவில்லை. அவளது உள்ளக்கிடக்கையை அறிந்து ஶ்ரீமத் இராமானுசர் தான் செய்து கணருளப் பண்ணினார். இதனால் உடையவரை ஆண்டாள் ‘எம் அண்ணரே’ என்று கொண்டாடியதாக ‘பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே’ என்று வாழித் திருநாமம் உண்டு.
21761438_10213877572434553_9110320585239853876_n
ஆனால் இன்று அவளுக்கே தளிகைகள் இல்லை என்ற செய்தி 60 வருடங்களில் தமிழகத்தை ஆண்ட அரசுகளின் அவலட்சணத்தை வெளிப்படுத்துகிறது. அறம் நிலையாத் துறையில் பணிபுரிபவர்கள் தாங்கள் சோற்றில் கை வைக்கும் தருணங்களில் ‘இந்தச் சோறு உண்ண எனக்கு எள்ளளவாவது அனுமதி உண்டா? ஆண்டாளின் சோற்றை அல்லவா நான் உண்கிறேன்? அவளைப் பட்டினி போட்டு உண்ணும் இந்த உணவு எனக்கு வேண்டாம்’ என்று சொல்ல வேண்டும். பணம் கொடுத்து வேலைக்கு வந்தவர்களிடம் இதை எதிர் பார்க்க முடியாது என்றாலும், இப்பதிவைப் படிக்கும் யாராவது ஒருவருக்காவது அந்த எண்ணம் வரலாம்.
அப்படியொரு எண்ணம் வரவேண்டியது ஏன் என்று கேட்கலாம். ‘நான் உண்ணும் உணவை அரசு அற நிலையத் துறை மூலம் அளிக்கிறது. ஆனால், துறையோ கோவிலின் சொத்தை உண்பவர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்காமல், கொள்ளை போக விட்டு, மற்ற வழியில் அரசு ஈட்டும் வருமானம் வழியாக எனக்கு இந்தச் சோற்றை அளிக்கிறது. அப்படியும், இந்தச் சோற்றுக்குக் காரணமான தெய்வ வடிவங்களின் வயிற்றில் அடித்துவிட்டு எனக்கு அளிக்கிறது. ஆகவே தெய்வங்களைக் கொன்று அரசு அளிக்கும் இந்தச் சோறு பிணச்சோறு. எனவே இந்தச் சோறு எனக்கு வேண்டாம்,’ என்று அவர்களின் எண்ணங்களில் தோன்றலாம் என்கிற நப்பாசை தான்.
இதெல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால், நாம் செய்யக் கூடியது ஒன்று உள்ளது.
சேவார்த்திகளாகக் கோவில்களுக்குச் செல்லும் போது, அங்கிருக்கும் அறம் நிலையாத்துறையினரிடம் ‘ கோவில் நிலங்கள் எவ்வளவு? வருமானம் எவ்வளவு? நித்ய மண்டகப்படி எவ்வளவு? நீங்கள் நித்யம் எவ்வளவு கண்டருளப் பண்ணுகிறீர்கள்? ஏன் குறைகிறது? உங்கள் சம்பளம் வருடாவருடம் குறைகிறதா? கோவில் வருமானம் குறைந்தால் உங்களின் வருமானத்தையும் குறைத்துக் கொள்ளலாமே..’ என்கிற ரீதியில் கேட்கலாம்.
அடுத்த முறை சோற்றில் கை வைக்கும் போது உறைக்கும், அவர்கள் சோற்றில் உப்பிட்டு உண்பவாரக இருந்தால்.

மோதியைக் கும்பிடடி பாப்பா

மோதியைக் கும்பிடுகிறார்கள். மோதி பக்தர்கள். சங்கிகள். பாசிச துதிபாடிகள். இந்துத்வ முட்டாள்கள். அடிப்படைவாதிகள். காவிகள். பண்டாரப் பரதேசிகள்.

இந்தியாவைப் புகழ்ந்து அல்லது பிரதமர் மோதியின் ஏதாவது ஒரு செயல்பாட்டைப் புகழ்ந்து நீங்கள் எழுதியிருந்தால் உங்களை மேற்சொன்ன அடைமொழிகளால் அழைத்திருப்பார்கள்.  கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்தால் ‘Howling Brigade’ என்று அழைப்பர்.

மோதியைப் புகழ்வதும் பாரதத்தைப் புகழ்வதும் ஒன்றில்லை என்றும் அறிவுறுத்துவர். மோதி குஜராத்தை இந்துத்வப் பாசறையாக்கினார் என்பர். கொலைஞர் என்பர்.

யார் இவர்கள்? ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?

சாதாரண தேநீர் விற்பவர் தேசத்திற்குத் தலைவனானதை சீரணிக்க இயலாத கயவர்கள். ஒளியிழந்த தேசம் பொலிவுருவதை விரும்பாத புல்லர்கள். பாழ்பட்டு நின்ற தேசம் பேரொளி பெறுவதைப் பொறுக்காதவர்கள். பூசணிக்காயளவு ஊழலையே பார்த்துப் பழகிய நமக்கு நெல்லியளவு கூட ஊழல் இல்லாமல் அரசு நடத்த முடியும் என்று காட்டியதைப் பொறுக்க முடியாதவர்கள்.

இவர்கள் குற்றச்சாட்டுகள் என்ன?

மோதி கறுப்புப் பணத்தை மீட்கவில்லை. சுவிட்சர்லாந்து சென்று ஆல்ப்ஸ் மலையைப் பார்த்தார். வேறென்ன செய்தார்? கருப்புப் பணம் வரவில்லையே?

இப்படிச் சொல்பவர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடுவார்கள். அல்லது மறந்தது போல் நடிப்பார்கள். ஒரு நிறுவனத்தின் மேல் கடும் நடவடிக்கை வந்துள்ளது. அதில் பல வெளி நாட்டு அரசு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ‘வாசன் ஐ கேர்’ எனப்படும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்தி சிதம்பரம். அவரது தந்தை ப.சிதம்பரம், முன்னாள் இந்திய நிதியமைச்சர். இதில் என்ன விசேஷம்? தற்போது வாசன் ஐ கேர் மீது கருப்புப் பண விசாரணை நடைபெறுகிறது. கண்ணில் எண்ணெய் விட்டுக்கொண்டு செயல்படும் பல வெளி நாட்டு அரசு முதலீட்டு நிறுவனங்கள் இவரது பெயரில் நம்பிக்கை கொண்டு முதலீடு செய்துள்ளன. வெளி நாட்டு நாடுகளின் அரசு நிறுவனங்களையே ஏமாற்றிய சிதம்பரத்தின் பெயர் இந்த நடு நிலையாளர்களால் உச்சரிக்கப்படாது.

அதை மட்டும் பேச மாட்டார்கள். கனிமொழி பற்றியும் இந்த நடுநிலையாளர்கள் பேச மாட்டார்கள். அவர்களின் முதலீடுகள் பல இடங்களில் உள்ளன.  இன்று தமிழ் எழுத்தாளர்கள் என்ற பெயருடன் உலவுபவர்கள் பலர், பல சமயங்களிலும் கலைஞர் குடும்பத்துடன் தொடர்பில் இருந்தவர்கள். அக்குடும்பத்தால் சில / பல ஆதாயங்கள் அடைந்தவர்கள். இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

சரி. இப்படிச் சொல்பவர்களின் தரம் என்ன?

தமிழர்களைக் கொன்று குவித்த, தன் சுயநலத்திற்காக இளம் பெண்களை வெடிகளாக்கி வெடிக்க வைத்த ‘வீரனை’ தலைவன் என்று போற்ற வேண்டும் என்று வாதிடுபவர்கள் ஒரு புறம். இந்தியா என்பதே இல்லை; அப்படி இருப்பின் அதனைத் துண்டாட வேண்டும் என்று சொல்லும் இடதுசாரி, மார்க்ஸீய மண்டூகர்கள் இன்னொருபுறம்.

சிறுபான்மையினரை பயமுறுத்தியே வைத்துள்ள ‘நடு நிலையாளர்’ ஒருபுறம். அதாவது -‘ நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம். உங்கள் மத நம்பிக்கைகள் தகர்க்கப்படலாம். எனவே எங்களுக்கே வாக்களியுங்கள். நாங்கள் அப்படி எதுவும் நடந்துவிடாமல் பாதுகாக்கிறோம்,’ என்று சொல்லி, பயமுறுத்தி, அவர்களைச் சுயமாகச் சிந்திக்கவிடாமல் ஒரு மந்தையாகவே பாவித்து, அவ்வாறே நடத்தி வரும் இடது சாய்வுள்ள காங்கிரஸ் ஒருபுறம். இதே கருத்தை முன்வைக்கும் ஊடகங்கள் இன்னொருபுறம்.

சில ‘முற்போக்கு’களைப் பார்ப்போம்.

பகுத்தறிவுப் பகலவனின் கொள்ளுப் பேரன் ஈ.வி.கெ.எஸ். இளங்கோவன், ஜெயலலிதாவைத் தனிப்பட்ட முறையிலும், ஜெயலலிதாவையும் மோதியையும் சேர்த்தும் ஆபாசமாகப் பேசியதை எத்தனை முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்கள் கண்டித்தார்கள்? எத்தனை ஊடகங்கள் கண்டித்தன? முற்போக்கு முகமூடி கிழிந்துவிடும் என்பதால் வாயை மூடிக்கொண்டிருந்தார்கள் என்று கொள்வோம்.

கலைஞரையும் குஷ்புவையும் இணைத்து ஒரு வதந்தி வந்த போது பொங்கி எழுந்த பொங்கல்கள் இப்போது எங்கே என்று கேட்கக் கூடாது. அது பகுத்தறிவுப் பொங்கல். அவ்வப்போது தான் பொங்கும். அவ்வப்போது அப்படிப் பொங்குவது தமிழ் எழுத்தாளன் என்பதற்கான அடையாளம் போல.

ஜெயலலிதாவை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவர் சாதி அப்படி. மோதியை என்னவேண்டுமானாலும் சொல்லலாம். அவர் கட்சி அப்படி. இதற்கெல்லாம் பொங்க பொங்கல்கள் இல்லை. பொங்காமல் இருப்பது ஊடக தர்மம்.

சுப்பிரமணிய சுவாமி ஒரு முறை பிரபாகரனை ‘International Pariah’ என்றார். உடனே பொங்கல்கள் பொங்கின. ‘சாதி’யைச் சொல்கிறார் என்றன. அந்த வார்த்தை ஆங்கில அகராதியில் ‘out cast, persona non grata’ என்கிற பொருளில் உள்ள சொல். இதில் பொங்கல்கள் மறைத்த உண்மை என்னவென்றால் பிரபாகரன் அந்த சாதியைச் சார்ந்தவர் அல்லர் என்பது மட்டும் அல்ல, ஈழத்தில் கிழக்கு வடக்கு மாகாணங்களுக்குள் சாதி வேறுபாட்டால் கொடுக்கல் வாங்கல் கூட இருப்பதில்லை என்பதையும் தான். இதைப் பல ஆண்டுகள் கழித்து ஈழ நண்பர் ஒருவர் எதேச்சையாக சொன்ன ஒரு சொல்லின் மூலம் அறிந்துகொண்டேன். ஆனால் இவை எதையும் நம் முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்கள் சொல்லமாட்டார்கள். சாதி என்பதே இல்லை என்று பம்மாத்து, வெளிப்பூச்சு வேலை செய்து ஊடகங்களில் பெயர் வாங்கி காலட்சேபம் செய்வது மட்டுமே இவர்களது நோக்கம்.

எந்த முற்போக்குத் தமிழ் எழுத்தாளராவது குறிப்பிடும்படியான ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார்களா? புலனாய்வு என்கிற பெயரில் நடிகைகளின் அந்தரங்கங்களை வெளிக்கொணர்கிறார்கள். இப்படி ஒரு பிழைப்பு பிழைப்பதற்கு குட்டிச் சுவராகப் பார்த்து முட்டிக் கொள்ளலாம்.

தமிழக சட்ட சபையில் ஒருமுறை எம்.ஜி.ஆர். கலைஞரிடம்,’கனிமொழி யார்?’ என்று கேட்டாராம். அதற்குக் கலைஞர்,’அவள் ராசாத்தி அம்மாளின் புதல்வி’ என்று சாமர்த்தியமாகப் பதில் அளித்தார் என்று சில எழுத்தாளர்கள் கலைஞரின் ‘அறிவாற்றல்’ பற்றிப் பேசுவார்கள். இந்த வெட்கக்கேட்டை ஒருவர் சபையில் கேட்டதே மானக்கேடு. அதற்கு ‘சாமர்த்தியமாக’ பதில் அளித்தது அதனினும் கீழ்மை. இதை எழுதினால் பெரிய எழுத்தாளன் என்று கொண்டாடிக் கொள்ளலாமா? பகுத்தறிவுப் பாசம் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது?

மோதி அமெரிக்காவில் என்ன செய்யச் சென்றார் என்று கேட்பதை ஒரு சொலவடையாகக் கொண்டுள்ளார்கள். ஊர் சுற்றுகிறார் என்று சொல்கிறார்கள். ஊர் மேய்வதைக் காட்டிலும் சுற்றுவது ஒழுக்கக் கேடானதல்ல. ஒவ்வொரு முறையும் சில ஆயிரம் கோடிகள் அன்னிய முதலீடு வருகிறதே. அதைக் காணாமல் இருப்பது பகுத்தறிவு தான். தெரிகிறது.

பிரும்மச்சாரி ஞானி ஒருவர் இருக்கிறார். நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம். ஆனால் அந்த ஞானி தாய்லாந்து போனார். ஓய்வு எடுக்கிறாராம். நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர், நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது தாய்லாந்தில் ஒய்வெடுக்கிறார். நாளைய பிரதமராம். நம்மைக் காக்கப் போகிறாராம். தலை எழுத்து. இது பற்றி வெட்கம் இல்லாமல் கட்சியின் தலைவர்கள் பேசிய பேச்சும், நழுவிய நழுவலும். முனிசிபாலிட்டி வேண்டாம், ஒரு பஞ்சாயத்துக்குக் கூட தலைவராகத் தகுதி இல்லாத ஒருவரை நம்பி பெரிய கட்சி நடக்கிறது. ஊடகங்கள் ஊமையான கதை அது.

மோதி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது ஒரு முறை,’அவரவர்கள் செய்யும் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும்,’ என்று சொன்னார். அதை ‘துப்புறவுத் தொழிலாளர்’ குறித்து சொன்னார் என்று தமிழ் மெகா அறிவாளியும் ஈரோட்டின் வாரிசுமான சத்தியராஜ் என்னும் நடிகர் வானுக்கும் மண்ணுக்கும் குதித்தார். ‘விடுதலை’ என்னும் தமிழ் நாட்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பொரிந்து தள்ளியது.  அவர் சொன்னது என்னவென்று கேட்காமலே உளறுவது என்பதே தமிழ் நாட்டு முற்போக்குப் பத்திரிகை தர்மமாகையால் அவ்வாறு பொரிந்தன(ர்) என்று கொள்ளலாம்.

அப்படி குரைத்தே ஆக வேண்டிய கட்டாயம் என்ன?

வேறென்ன? கூலி தான்.

நாணம் இன்றி, அன்னிய மதமாற்றுச் சக்திகளிடம் பணம் பெற்று, கூலிக்கு மாரடிக்கும் கூத்தாடிக் கும்பல்களுக்கு வேறென்ன நோக்கம் இருக்க முடியும்? தில்லிக்குச் சென்று, இலவசமாய் உண்டு, உறங்கி, பின் எழுந்து  அரசை வசைபாட லுட்யென்ஸ் பூங்காவில் இடம் இல்லையே. ஓலமிட இடம் இல்லாமல் செய்துவிட்டாரே மோதியின் அமைச்சர் வெங்கைய நாயுடு. ஆக இருக்கும் இடங்களில் இருந்தே உரக்க ஓலமிடுவோம் என்று முழங்குகின்றன வெற்று ஊளைகள். ஆனால் ஒன்று. இந்த ஊளைகள் கொடுத்த காசுக்கு விசுவாசமானவர்கள். விலையைக் காட்டிலும் அதிகமாக ஊளை இடுவார்கள். சில ஆங்கில நாளேடுகளைக் கண்டாலே தெரியும்.

எத்தனை குரைத்தாலும் இன்றைய நிதர்ஸன நிலை என்ன? அணு உலைகளுக்கு யுரேனியம் வழங்க மறுத்த ஆஸ்திரேலியா இன்று நமக்கு ஏற்றுமதி செய்கிறது. உறவு துண்டிக்கும் நிலையில் இருந்த ஜப்பான் இன்று இந்தியாவில் அதிவேக ரயில் திட்டங்களில் 0.1% வட்டியில் கடன் கொடுத்து தொழில் நுட்ப உதவியும் செய்கிறது. ஹைதராபாத்தில் புதிய தலை நகரம் அமைய சிங்கப்பூர் வடிவமைப்பு செய்கிறது, ஜப்பான் கட்டுகிறது. அமெரிக்கா அணு ஒப்பந்தங்களில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கிறது. ஏவுகணை ஒப்பந்தத்தில் சேர்க்கை. நிலக்கரி இறக்குமதி குறைகிறது அயினும் மின் உற்பத்தி கூடுகிறது. நிலக்கரி ஏலம் கணிணி முறையில் வெளிப்படையாகிறது. 2ஜி அலைக்கற்றை ஏலத்தால் அரசுக்குப் பணம்.

Modi_1அபுதாபியில் கோவில் கட்ட நிலம் தருகிறார்கள். அவர்கள் நாட்டில் இருந்து எண்ணெய் எடுத்து இந்தியாவில் வைக்கச் சொல்கிறது அபுதாபி அரசு. ஈரானில் புதிய துறைமுகம்.  ஆப்கானிஸ்தானில் அணை கட்டுகிறது இந்தியா. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்கிறது. இலங்கைக் கடற்படை இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்தியுள்ளது.

பிரதமர் கேட்டுக்கொண்டார் என்பதற்காக எரிவாயு மானியம் பெறுவதை மக்களாகவே முன்வந்து கைவிடுகின்றனர். பல ஆண்டுகள் கழித்து ஏர் இந்தியா நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது. ஏமனில் இருந்து இந்தியர்களை நாட்டுக்குப் பாதுகாப்பாக அழைத்துவந்தது, சவூதி அரசு பணிந்து செயல்படுவது – இவை எதுவுமே காதில் விழாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் ஒரு படி மேலே போய், இப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பது போல் நடிக்க வேண்டும். பேசாமல் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் இப்படி வேடம் போடுவதற்குப் பதில். மீறிப் பேசினால் நீங்கள் ‘பாஸிச அபிமானிகள்’.

மோதி அமெரிக்கப் பாராளுமன்றத்தில் பேசியதைக் கூட பாராட்டக் கூடாது என்கிறார்கள். அவர் டெலிபிராம்ப்டரில் பார்த்துத்தான் பேசினார் என்று சொல்ல வேண்டுமாம். பாங்காக்ல் ஓய்வெடுத்த ஞானி இரண்டு வார்த்தை பேசினால் நோபல் பரிசு கொடுக்க வேண்டிய அளவு பாராட்டச் சொல்கிறார்கள். ஞானியின் தாயார் ஒரு வார்த்தை பேசினால் ‘அக்‌ஷர லட்சம்’ பெறும் என்று பாராட்டச் சொல்கிறார்கள். அதை ‘மதச்சார்பின்மை’ என்கிறார்கள். இதுவே ஊடக தர்மம் என்றும் அறியப்படுகிறது. இந்தப் பிழைப்பு பிழைப்பதற்கு நல்ல குட்டிச் சுவற்றில் முட்டிக்கொள்ளலாம். அல்லது காங்கிரசில் சேர்ந்துவிடலாம்.

வெகு நாட்கள் பேசாமல் இருந்த சோனியா அம்மையார் பாராளுமன்றத்தில் ஒரு நாள் வாய் திறந்தார். ‘Sonia lamblasts the govt’ என்று ஹிந்து தலைப்புச் செய்தி. அப்படி என்ன ‘லாம்பிளாஸ்ட்’ செய்தார்? வாய் திறந்து பேசினார். அதற்கு அவ்வளவு ஒலிப் பெருக்கம்.

மோதி பல விஷயங்களைப் பேசிவிட்டு ‘தீவிரவாதமும் மதமும் தொடர்பற்றவை’ என்று போகிற போக்கில் சொல்லி வைத்தார். மறுநாள் ஹிந்துவில் “‘De-link religion from terror’ says Modi” தலைப்புச் செய்தி. மோதி விவேகானந்தர் பற்றி, வாஜ்பாய் பற்றி காந்தி பற்றி லிங்கன் பற்றி,  மார்ட்டின் லூதர் கிங் பற்றியெல்லாம் பேசியது விஷயம் இல்லையாம். இது என்ன ஊடக தர்மமோ என்ன கண்றாவியோ.

ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத இலக்கியம், நூல் ஆய்வுகள், பண்டைய நூல்களில் உள்ள விஞ்ஞானச் செய்திகளை வெளிக்கொணர்தல் என்கிற அளவில் ஆராய்ச்சிகள் செய்யலாம் என்று மனிதவள அமைச்சு பேசத்துவங்கியது. உடனே பொங்கல் வைக்கத் துவங்கிவிட்டனர். ஏற்கெனவே சீன மொழி அங்கு பயிற்றுவிக்கபடுகிறது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் வெற்றுச் சூளுரைகள் பறக்கத் துவங்கிவிட்டன. தேர்தலில் மண்ணைக்கவ்விய தன்மானத் தலைவர்கள் பொங்கல் வைக்க அரிசி வாங்கச் சென்றுவிட்டனர்.

ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதம் இருக்கட்டும். தருண் விஜய் என்னும் பா.ஜ.க. எம்.பி. திருக்குறளுக்காக வாதிடுகிறார். கங்கைக்ரையில்  திருவள்ளுவருக்குச் சிலை வைக்கப் போகிறார். திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்கிறார். நாடாளுமன்றத்தில் திருக்குறளை இசைக்கச் செய்கிறார். இத்தனைக்கும் ஹிந்திக்கார எம்.பி. அவர். இத்தனை வருடங்கள் தமிழினத் தலைவர்கள் ஆட்சியில் இருந்தனரே என்ன கிழித்தார்கள்? தமிழ் எம்.பி. என்றாலே ஊழல் பெருச்சாளி என்கிற முத்திரையைப் பெறுவதைத் தவிர கிழித்த கிழி என்ன? தமிழனின் கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கியதைத் தவிர சாதித்தது என்ன? ஹிந்தி பேசும் எம்.பி.க்குத் திருக்குறள் மேல் இருக்கும் அக்கறை இரு கழகக் கண்றாவிகளுக்கும் இல்லாமல் போனது ஏன்?

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.ல் இருப்பதற்குத் தடை இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. எனவே அந்த அரசாணையை நீக்கலாம் என்று அரசு சிந்தனை செய்கிறது என்கிறது ஒரு செய்தி. உடனே முற்போக்குகள் பொங்கத் துவங்கிவிட்டன. போகப்போக அது பொங்கலா அல்லது பழங்கஞ்சியா என்று தெரியவரும்.

‘மன் கி பாத்’ என்று பிரதமர் வானொலி மூலமாக மக்களிடம் பேசுகிறார். நேருவுக்குப் பிறகு வேறு எந்தப் பிரதமர் இப்படிப் பேசியுள்ளார்?  அதிலும் மக்களைப் பாதிக்கும் அன்றாட நிகழ்வுகள் குறித்துப் பேசுகிறார். மாணவர்களுக்கு தேர்வுகள் நேரத்தில் அறிவுரை வழங்குகிறார். மாநில முதல்வர் மகாராணியைப் போல் இருக்க, ஒன்றுக்கும் உதவாத கவுன்சிலர்கள் கூட குறுநில மன்னர்கள் போல் செயல்பட, அப்படியெல்லாம் இல்லாமல், பெற்ற தந்தை போல் செயல்படும் பிரதமரை வாழ்த்த வேண்டாம் ஐயா, குறை கூறாமல் இருக்கலாம் தானே!

மோதியை எதிர்ப்பது ஒரு மனநோய். அந்த நோய் வராமல் பாதுகாக்க அந்தப் பராசக்தி துணைபுரிய வேண்டும்.

(தொடரும்)

%d bloggers like this: