அரிசி வாளியும் தர்மமும்

‘Rice Bucket Challenge’ என்று வசதி குறைந்த ஒருவருக்கு 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்வு பிரபலப்படுத்தப் பட்டு வருகிறது. அதைப் படம்பிடித்து வேறு போடுகிறார்கள்.

வசதி அற்றவருக்கு அரிசி வழங்குவது நல்லதே. ஆனால் இது முன்னமேயே இருந்து வந்துள்ளது. திருமூலர் கூறுவது :

“யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே”

நாம் உண்ணும்போது இன்னொருவருக்கென்று ஒரு கைப்பிடியாவது எடுத்து வைக்க வேண்டும் என்று சொல்கிறார் திருமூலர்.

இந்த வழக்கத்தை ‘பிடி அரிசித் திட்டம்’ என்று காஞ்சிப் பெரியவர் எடுத்து முன்னுரைத்தார். தினமும் சமைக்கும் முன் ஒரு பிடி அரிசியை எடுத்துத் தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டுவிட வேண்டும். இத்திட்டத்தில் ஒரு புதுமை உள்ளது. ‘சமைக்கும் முன்னர் வீட்டில் பெண்கள் ஒரு கைப்பிடி எடுத்து வையுங்கள்’ என்று சொன்னது தான் அங்கு மாஸ்டர் ஸ்ட்ரோக். தானம் பெண்களிடம் சொன்னால் தான் நடக்கும். அதுவும் தினமும் ஒரு கைப்பிடி என்பதால் பெரிய சுமையாகவும் தெரியாது.

நெய்வேலியில் வளர்ந்த போது மாதம்தோறும் ஒரு பெரியவர் வந்து அரிசி வாங்கிச் செல்வார். இது பின்னர் நெய்வேலியை அடுத்துள்ள ‘வேலுடையான்பட்டு’ முருகன் கோவிலில் நடைபெறும் ‘பங்குனி உத்திரம் திருவிழாவின் போது பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும். காவடி எடுத்து வரும் பக்தர்கள் பசியாறிச் செல்வார்கள். நானும் சென்றது உண்டு. ஏனெனில் அங்கு ‘உருளைக்கிழங்கு’ பொரியல் கிடைக்கும். அதில் என்ன விசேஷம் என்கிறீர்களா ? அதில் ‘வெங்காயம்’ சேர்த்து சமைத்திருப்பார்கள். வீடுகளில் வெங்காயம் சமைப்பது ‘ஆசாரம்’ இல்லை என்று கருதப்பட்ட காலம் அது.

‘Rice Bucket Challenge’ற்கு வருவோம்.

தானம் கொடுக்கும் முறை என்று ஒன்று இருக்கிறது. தானம் பெறுபவர் கை தாழாமல் இருக்க வேண்டும். எனவே தானம் தருபவர் தன் கையைத் தாழ வைத்திருக்க வேண்டும். இதனால் தானம் பெறுபவர் மன வருத்தம் அடைய மாட்டார்; தருபவர் அகந்தை கொள்ள மாட்டார். அத்துடன் தானம் தருபவர் ,”நாம் தானம் கொடுக்கிறோமே, இதை இவர் வாங்கிக்கொள்ள வேண்டுமே”, என்று மிகவும் கோரிக்கையுடன் நிற்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது. 

எது எப்படியோ. ‘Ice Bucket’ ற்கு ‘Rice Bucket’ தேவலாம் தான்.

%d bloggers like this: