அரங்கன் ஏன் தூங்குகிறான் ?

‘பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி’ என்று ஆண்டாள் சொன்னாள். பெருமாளை ‘பைய’ தூங்கச் சொல்கிறாள். பெருமாள் ஏன் தூங்க வேண்டும் ?

திருவரங்கத்தில் பெருமாள் தெற்குத் திக்கைப் பார்த்துப் படுத்திருக்கிறார். அதற்கு ஒரு கதை உண்டு. இராமாயணம் முடிந்து விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் முடித்து அயோத்தி திரும்பிய இராமனைப் பார்த்து விபீஷணன் ‘அரசாட்சி செய்வதில் எனக்கு அனுபவம் இல்லை. உனது அருட்பார்வை என் மேல் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இலங்கையிலேயே இருந்து விடுங்கள்’, என்று வேண்டுகிறான்.

ஆனால் இராமன், ‘இலங்கையுடனேயே இருந்துவிட  முடியாது. ஆனால் உனக்காகத் திருவரங்கத்தில் சற்று ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். உங்கள் இலங்கையைப் பார்த்தபடியே படுத்திருக்கிறேன்’, என்று சொல்லிப் படுத்துவிட்டான் என்று ஒர் புராணக் கதை உண்டு.

கும்பகோணம் என்னும் திருக்குடந்தையில் ‘ஆராவமுதன்’ என்ற பெயருடைய திருமால் பள்ளி கொண்ட ‘கிடந்த கோலத்தில்’ சேவை சாதிக்கிறான். அவனைப் பார்த்த திருமழிசையாழ்வார், ‘அயோத்தி முதல் இலங்கை வரை நடந்த உன் கால்கள் நொந்ததால் படுத்துக்கிடக்கிறாயா ?’, என்ற பொருள் படும் படி,

“நடந்தகால்கள் நொந்தவோ நடுங்கஞால மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ இலங்குமால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவா றெழுந்திருந்து பேசு,வாழி கேசனே”

என்று திருச்சந்த விருத்தத்தில் பாடுகிறார்.

அது சரி. அதுதான்  நடந்த களைப்பில் தூங்குகிறாரே, அதில் என்ன கேள்வி என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் கேள்வி இருக்கிறது. 

ஆண்டாள் ‘பையத் துயின்ற’ என்று சொல்வது தான் கொஞ்சம் அதிகமோ என்று படுகிறது. ‘நன்றாகத் தூங்குகிற’ என்ற பொருளில் கூறுகிறாள் ஆண்டாள்.

பெருமாள் இப்படி நன்றாகத் தூங்கினால் நாமெல்லாம் என்ன ஆவது  என்ற கேள்வி நமக்குள் எழுவது இயற்கையே. எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது.

அதுவும் மயிலாடுதுறையை அடுத்த ‘திரு இந்தளூர்’ என்னும் திவ்ய தேசத்தில் ‘பரிமள அரங்கன்’  நீண்ட  நெடுந்துயில் கொண்டுள்ளான். பல முறை அழைத்துப் பார்த்தேன். அவன் எழவில்லை. 

‘வாழ்ந்தே போம் நீரே’ என்று பெருமாளிடம் கோபித்துக்கொண்டு சென்ற ஆழ்வார் போல் நானும் போகலாம் என்று நினைத்தேன். அப்போது தான் கோவிலின் கர்ப்பக் கிருகத்துக்குள் குளிரடித்தது. ஒரு வேளை பெருமாள் எழுந்து வந்து விட்டாரோ ? அதனால் தான் குளிர் தெரிகிறதோ என்று பார்த்தேன். 

அது தான் இல்லை. பெருமாளுக்கு ஏஸி ( A/C ) போட்டிருக்கிறார்கள். இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாகப் பெருமாளுக்கு ஏஸி போட்டுள்ள கோவில் திரு இந்தளூர் பரிமள ரங்கனாதர் கோவில் தான் என்று நினைக்கிறேன். 

  A/C  எந்த ஆகமத்தில் வருகிறது என்று தெரியவில்லை. வைகானஸம், பாஞ்சராத்ரம் என்று இரண்டிலும் தேடிப்பார்த்து விட்டேன்.  A/C  பற்றித் தெரியவில்லை. இராமானுசரின் ‘கோவில் ஒழுகு’-லும் இருப்பதாகத் தெரியவில்லை.

‘நீங்கள்ளாம் மட்டும் ஏஸி-லெ வேலை பாக்கறேள், ஏஸி கார்ல போறேள், ஆனால் உங்களை எல்லாம் பாத்துக்கற பெருமாள் ஏஸில இருக்கப் படாதா? என்ன நியாயம் ஸ்வாமி ?’, என்று ஒரு பெரியவர் கேட்கிறார்.

அந்தப் பஞ்சாயத்து இருக்கட்டும்.

ஆண்டாள் பெருமாள் நன்றாகத் தூங்கட்டும் என்று ஏன் பாடினாள் ?

மே 16, 2014 அன்று நாட்டை ஒரு சரியான ஆளிடம் ஒப்படைத்து விட்டதால் பெருமாள் இன்னமும் நன்றாக உறங்கட்டும் என்று ஆண்டாள் சொல்லியிருக்கலாம் என்கிறாள் என் மனைவி.  

மனைவி சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

%d bloggers like this: