முதல்வரின் கிருஷ்ண ஜயந்தி வாழ்த்து – சில குறிப்புகள்

முதல்வர் பழனிச்சாமியின்(@CMOTamilNadu) கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தும், அதைத் தொடர்ந்து பகவத் கீதை பற்றிய அவரது செய்தியும் நம் மாநிலத்திற்குப் புதுமையானவை.
எடப்பாடி கிருஷ்ண ஜயந்தி
கிருஷ்ண ஜெயந்திக்கு ஜெயலலிதா வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். ஆனால் கீதை பற்றியெல்லாம் சொன்னதில்லை. பகுத்தறிவு / மதச்சார்பின்மை தீட்டு பட்டுவிடும் என்பதால் கொஞ்சம் மிகுந்து பேசாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
 
ஆனால், அதற்கு வாழ்த்துச் சொல்வதற்கு மேல் அவரால் வேறொன்றும் சொல்லியிருக்க முடியாது என்பதையும் நான் அறிந்தே இருக்கிறேன். பெண் / சாதி இவற்றைக் கருத்தில் கொண்டே அவர் பேசியிருந்திருக்க முடியும் என்று எனக்குத் தெரிகிறது.
 
அதற்கு முன்னவருக்குக் கிருஷ்ண ஜெயந்தி அன்று ஆரியன் / திராவிடன் என்பதெல்லாம் நினைவிற்கு வரும். தீபாவளி அன்று நரகாசுரன் நினைவிற்கு வருவான். நரகாசுரன் புகழ் பாடும் கூட்டம் என்று ஒன்று திடீரென்று முளைத்து மேலெழுந்து வரும். சில நாட்கள் ஆடிவிட்டு அந்தக் கூட்டம் ஓய்ந்து போகும். தீபாவளி தேவையா என்பது போன்ற பட்டிமன்றங்கள் சில நாட்கள் நடைபெறும். நல்ல உணவு, ஊக்க பானங்கள் முதலியவை கிடைப்பதால் வேலை இல்லாத சிலர் வந்து செல்வர். மீண்டும் அடுத்த தீபாவளி, அடுத்த வசவு.
அதே போல் நவராத்திரியின் போது காளியின் கற்பு பேசப்படும். மஹிஷாசுரன் மஹாத்மியமும் சனாதன தர்மத்தின் சூழ்ச்சியால் மஹாத்மா மஹிஷாசுரன் கொலையுண்டதும் கருத்தரங்கங்களில் பேசப்படும். இதற்கு நடு நிலை வகிக்கும் பெரியார்கள் எனப்படுவோர் ஒத்து ஊதி, நம்பிக்கை உள்ள மனிதர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வர்.
பின்னர் பொங்கல் அன்று சின்னதாக ஒரு களேபரம் நடக்கும். வேலை போன பெரியவர்கள் சிலர் பொழுது போகாமல் பரிதிமாற்கலைஞர் பெயரை இழுத்து நம்பிக்கை கொண்டோரின் சாபத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்வர்.
செப்டம்பர் 15-16 தேதிகளில் கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு வசை மழை பொழிய ஊர் முழுக்க முச்சந்திகளில் திட்டுக் கச்சேரிகள் நடத்திக் கலைவர். விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டால் மீண்டும் திட்டுக் கச்சேரிகள், வசைக் கூட்டங்கள், ஒப்பாரிக் கருத்தரங்கங்கள். எதிர்க்கட்சியின் ஸ்டாலின் ஒருமுறை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லிவிட்டார். பின்னர் தனது உதவியாளர் தவறுதலாகச் செய்தி அனுப்பிவிட்டார் என்று பகுத்தறிவு மழுப்பல் கலந்து புளுகினார்.
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த ஓய்வு பெற்ற புலவர்கள் அனைவருக்கும் ஒரு ஆராய்ச்சித் தலைப்பு திடீரென உதயமாகும். அதாவது: விநாயகர் தமிழ்க்கடவுள் அல்லர். வாதாபியில் இருந்து கொண்டு வரப்பட்டவர். எனவே கொண்டாட்டம் தேவை இல்லை. இப்படியாக ஏதாவது எதிர்மறையாகச் செய்துகொண்டே தொலைக்காட்சிகளில் பெயர் வரும் படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் வரும்படி சரியாக இருக்கும்.
ஒருவழியாகத் தமிழ் நாட்டைத் திட்டு நாடு என்று பெயர் வரும்படிச் செய்து விட்டனர் திராவிட அரசியலாளர்.
Edappaadi Palanisamyஇதற்கு மாற்றாகத் தெரிகிறார் எடப்பாடி பழனிச்சாமி. நெற்றியில் திருநீறு அணிவதற்கு அஞ்சவில்லை, சில நாட்களில் குங்குமமும் உண்டு. சிரித்த முகம். நேரடியாகப் பேசுகிறார். முத்தாய்ப்பாக இந்த ஆண்டு கிருஷ்ண ஜயந்தி வாழ்த்து.
ஊழல் செய்யவில்லையா, நேர்மையாக இருக்கிறதா ஆட்சி என்று கேட்க வேண்டாம். முந்தைய ஆட்சிகளும் இப்படியே தான் இருந்தன. ஒரே மாற்றம் முதல்வரை எளிதில் அணுக முடிகிறது, முதல்வர் சனாதன தர்மத்தைப் பின்பற்றுவதை மறைத்துச் செய்யவில்லை. வெளிப்படையாகக் கோவில்களுக்குச் செல்கிறார்.
சமீபத்தில் தமிழகம் சென்றிருந்தேன். பல கால்வாய்கள், ஏரிகள் ஆழப்படுத்தப் படுவதையும், தூர் வாரப்படுவதையும் நேரில் பார்த்தேன். பருவ மழைக்கு முன்  இவ்வளவு பெரிய அளவில் இம்மாதிரியான செயல்கள் நடந்து நான் பார்த்ததில்லை. காரணம் யோசித்தேன். முதல்வர் வேளாண்மைப் பின்புலம் கொண்டவர். நீரின் அருமை, தேவை பற்றி அறிந்தவர் என்பதால் இருக்கலாம் என்று தோன்றியது.
நல்லது நடப்பதாகத் தோன்றுகிறது. தொடர்ந்து நடக்க வேண்டும். தவறுகள் களையப்பட வேண்டும். ஆனால் நல்லதைச் சொல்லாமல் செல்ல முடியாது.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
வந்தே மாதரம்.
 
%d bloggers like this: