தமிழ் மாமி நமஸ்காரம்

தமிழ் மாமி நமஸ்காரம்… இல்ல .. வந்து வணக்கம்.. ஸாரி நமஸ்காரம்.

எப்பிடி ஆரம்பிக்கறதுன்னே தெரியல.. வணக்கம்னா போலியா தெரியறது.. நமஸ்காரம்னா ஏதோ கொலை குத்தம் மாதிரி பாக்கறா.

சின்ன விஷயம் ‘நமஸ்காரம்’ங்கறது மனுஷாள எப்பிடி அன்னியப்படுத்தறது பாருங்கோ. ‘பாருங்கோ’ன்னு சொல்லலாமான்னும் தெரியல.

இதே கன்ஃப்யூஷன் தான் மாமி. இப்போ ஒரு தமிழ் அமைப்புக்குப் போறேன்னு வெச்சுக்கோங்கோ. போன உடனே கொஞ்சம் தள்ளியே உக்காந்துக்கறா. அதுவும் நெத்தியில ஸ்ரீசூர்ணம் வேற இருக்கா, உடனேயே அன்னியமாயிடறேன். இதே விபூதி இருந்தா ஒத்துக்கறா.

பல அமைப்புக்களும் பல பத்திரிக்கைகள் நடத்தறது. எதுலயும் ‘எழுதுங்கோ’ன்னு நேரடியா சொல்ல மாட்டேங்கறா. வேற எழுதறதுக்கு யாருமே இல்லேன்னா ‘சரி எழுதறீங்களா’ன்னு கேக்கறா. எழுதித் தந்தாலும் போடறதில்லேங்கறது வேற விஷயம்.

இப்படித்தான் ‘பாரதி’ பத்தி எழுதித்தான்னு கேட்டா. இந்த ‘ஓடி விளையாடு பாப்பா’, ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே…’ இதப்பத்தியெல்லாம் எழுத வேண்டாம், புதிய பார்வையா இருக்கணும்னு சொன்னா. சரின்னு நானும் ‘பாரதியின் தத்துவ வெளி’ன்னு கர்ம சிரத்தையா எழுதிக் கொடுத்தேன். ஒரு வருஷம் ஆறது இன்னும் வெளியிடல. இந்த ‘தத்துவம்’, ‘விசாரம்’ இதெல்லாம் பத்தி எழுதினா யாரும் படிக்கறதில்ல, போடறதும் இல்ல.

இப்படித்தான் ஒரு பேச்சுப் போட்டியில பேசினேன். ‘இதுல ஒரு சமயம் சார்ந்த பாடல்கள் இருந்தது’ன்னு சொல்லி முதல் பரிசு கிடைக்கல. இதுக்கெல்லாம் ஆழ்வார்களச் சொல்லணும். அவாள்ளாம் தமிழ்ல பாடாமலாவது இருந்திருக்கலாம்.

இதுல ஒருத்தர் சொன்னார், ‘நீங்க கம்பன், ஆழ்வார்கள்னு போகாதீங்க. கண்ணதாசன், வைரமுத்து, மேக்ஸிமம் பாரதி, இதோடயே நிறுத்திக்கோங்க. அதுதான் எடுபடும்’ அப்படீங்கறார். நெஜமாவே புரியல.

இன்னொண்ணு பாருங்கோ. மேடைல பேசறச்சே ‘பொதுத் தமிழ்ல பேசுங்க’ அப்படீங்கறா. அதாவது ‘ப்ராமின் லிங்கோ’ இருக்கப்படாதுன்னு சூசகமா சொல்றாளாம். ‘ஏன் இது பொதுத் தமிழ்ல இல்லே?’ன்னு கேக்கறா ? நெல்லை கண்ணன், சாலமன் பாப்பையா இவங்கள்ளாம் பொதுத்தமிழ்ல தான் பேசறாங்களா? திருநெல்வேலி, மதுரைன்னு வட்டார மொழி பயன் படுத்தலையா ?

போன மாசம் ‘சாஸனம்’னு ஒரு கதை எழுதியிருந்தேன். ஐயங்கார் பத்தின கதை. அதையும் பொதுத் தமிழ்ல தான் எழுதணுமாம். 90 வயசான அக்ரஹாரப் பாட்டியோ தாத்தாவோ ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’னு கேப்பாளா இல்ல ‘நீங்க எங்கேந்து வரேள்?’னு கேப்பாளா ? ஜோ டி குரூஸ், சு.சமுத்திரம் இவாள்ளாம் அவா அவா சமூகம் சார்ந்து எழுதலாம், நான் மட்டும் கூடாதா ? என்ன பகுத்தறிவு மாமி இது ?

ஒரு சமூகத்தோட கதைகள அவாளோட வழக்குல பதிவு பண்ணினாத்தானே அவாளோட கதைகள் வெளில வரும் ? அப்பிடி எழுதறது தானே உண்மை, யதார்த்தம் ? இங்கெல்லாம் பொதுத்தமிழ்னு சொன்னா அதுலயும் சரி, கதைலயும் சரி ஒரு போலித்தனம் இல்லியோ ? ஜுனூன் தமிழ் மாதிரி இருந்தா நன்னாவா இருக்கும் ?

ஒரு பெரியவர் ‘தமிழ் காட்டுமிராண்டி பாஷை’னு சொன்னார். ஆனா அவர ‘தலைவர்’னு கொண்டாடறா. ஆனா நல்ல தமிழ்ப் பாசுரம் பாடினா ஒரு மாதிரி பாக்கறா. ஒரே குழப்பமா இருக்கு.

பெருமாளே இல்லேங்கறா ஆனா பூஜை பண்றதுக்கு உரிமை வேணுங்கறா. பெருமாளே குழம்பிடுவார். ‘இவர் அர்ச்சனை பண்றதுக்கு வர்றவரா இல்லே அடிக்க வர்றவரா’ன்னு பெருமாளுக்கே குழப்பம் வந்துட்டா என்ன ஆகும்?  இப்ப இருக்கறா ‘விருது திரும்பிக் குடுக்கற’ குழப்பம் போறாதுன்னு இது வேறயா ?

என்னமோ போங்கோ மாமி. ஒண்ணும் புரியல. உங்கள மாமின்னு கூப்டதுக்கு என்னவெல்லாம் சொல்லப் போறாளோ ? ‘கன்னித் தமிழ்’ன்னும் சொல்றா, ஆனா தமிழ் அன்னைங்கறா. அதுனால தான் ஒரு மையமா தமிழ் மாமின்னு நான் கூப்டேன்.

‘என்ன இன்னிக்கும் கால்ங்கார்த்தால கனவா ? எழுந்தோமா ஆபீஸ் போனோமான்னு இல்ல, இந்த ஜெயமோகன் அது இதுன்னு படிக்காதீங்கோன்னு சொன்னா கேட்டாத்தானே!’

ஒரு திங்கள் காலை துவக்கம்..

பாரதியின் தத்துவ வெளி

பாரதி என்றாலே புரட்சி, தேசீயம், விடுதலை, பெண்ணுரிமை என்றே அடையாளப்படும் வகையில் ஒரு கருத்தியல் தன்மை நம்மிடம் காணப்படுகிறது. ஆனால் பாரதியின் படைப்புக்களில் அவனது ஆழ்ந்த தத்துவ தரிசனம் தென்படுகிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஒரே மாதிரியான தரிசனங்களாக இல்லாமல் பல வகைகளிலும் அலைக்கழிக்கப்படும் தத்துவத் தேடல்களில் ஈடுபட்டவன் போல் தென்படுகிறது.
ஸ்மார்த்த பிராம்மண சமூகத்தில் பிறந்ததால் அவர் அத்வைத ஸம்பிரதாயத்தவராக இருந்திருக்க வேண்டும். ஆதி சங்கரர் ஏற்படுத்திய ‘அத்வைதம்’ என்பது ‘இரண்டற்ற’ நிலையில் உலகையும், உயிர்களையும், இறையையும் நோக்குவது. அதாவது, உலக உயிர்கள் அனைத்தும் ஒரு பிரும்மத்தின் பிரதிபலிப்புக்களே என்பது அது. அவ்வாறு இவ்வுலகில் திகழும் அனைத்தும் ‘ஜீவாத்மா’ என்று வகைப்படுத்தப்படும். ஆனால் அவை அனைத்தும் ‘மாயை’.
அவை அவற்றின் தோற்றுவாயான பரம்பொருளில் கலந்துவிடும். அனைத்தும் ஒரே பிரும்மத்தின் பிரதிபிம்பங்கள் என்பதால் அனைத்தும் ஒன்றே என்பதே அந்த தத்துவம்.
பாரதியின் இந்த அத்வைத தத்துவப் பற்று அவனது ‘காக்கை குருவி எங்கள் சாதி நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்னும் வரி தெளிவுபடுத்துகிறது. உயிருள்ள காக்கையும் குருவியும், உயிரற்ற மலையும் பாரதியுடன் ஒன்றானவை என்று கூறுகிறான். எல்லாம் ஒரே பரமான்மாவின் பிரதிபலிப்புகள் என்னும் அத்வைத தத்துவம் இதன் மூலம் தென்படுகிறது.
‘நிற்பதுவே நடப்பதுவே..’ என்னும் ஆழ்ந்த பொருளுடைய தத்துவப் பாடல் அவனது அத்வைத மன நிலையை உணர்த்தினாலும் அப்பாடலின் பிற்பகுதி சற்று கலங்கிய மன நிலையை உணர்த்துகிறது :
“நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே … நீங்களெல்லாம்
சொற்பனம் தானோ ? பல தோற்ற மயக்கங்களோ ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே … நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ ?
வானகமே இளவெயிலே மரச்செரிவே … நீங்களெல்லாம்
கானலின் நீரோ ? வெறும் காட்சிப் பிழை தானோ ?
போனதெல்லாம் கனவினைப் போல் புதைந் தொழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ ? இந்த ஞாலமும் பொய் தானோ ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ ? அங்கு குணங்களும் பொய்களோ ?
சோலையில் மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ ? இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ ?
காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ ?
வீண்படு பொய்யிலே … நித்தம் விதிதொடர்ந் திடுமோ ?
காண்பதிலே உறுதிகொண்டோம் காண்பதல்லால உறுதியில்லை
காண்பது சக்தியாம் … இந்தக் காட்சி நித்தியமாம்.”
பறக்கும், நிற்கும், நடக்கும் அனைத்துமே சொற்பனம் என்னும் கனவுதானோ என்று கேள்வி எழுப்புகிறான் பாரதி. அத்துடன் ‘தோற்ற மயக்கம்’, ‘காட்சிப் பிழை’ என்னும் சொல்லாடல்களில் ஆதி சங்கரரின் ‘மாயை’ என்பதை
உணர்த்துகிறான் பாரதி. ‘ஞாலமும் பொய் தானோ’ என்று சொல்லும் போது ‘உலகம் மாயை’ என்னும் அத்வைத சித்தாந்தம் உறுதிப்படுத்தப்படுகிறது.
ஆனால் பாடலின் கடைசி வரியில் ‘காண்பதிலே உறுதி கொண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை’ என்பதால் ‘கண்ணால் காண்பதே உண்மை’ என்ற பொருள் கொண்ட ‘சார்வாக’ தத்துவம் தென்படுகிறது. உலகம் ஜடப்பொருட்களால் ஆனது. ஆன்மா என்பதெல்லாம் இல்லை. ஜடப் பொருட்கள் ஐந்து பூதங்களின் சேர்க்கையால் உண்டானது. கண்களுக்குத் தெரிவது உண்மை. தெரியாதது என்பது இல்லவே இல்லை. ‘மாயை’ என்பதெல்லாம் பொய் என்னும் சித்தாந்த வெளிதான் ‘சார்வாகம்’ என்ற இந்திய ஞான மரபு. ‘இந்தக் காட்சி நித்தியமாம்’ என்று சொல்வதன் மூலம் பார்வையில் இருப்பதே சத்தியம் என்னும் ‘சார்வாகம்’ அடிக்கோடிடப்படுகிறது.
இவ்வாறு தத்துவ வெளியில் இரண்டு நிலை எடுத்த பாரதி, தெய்வங்கள் எல்லாவற்றையும் புகழ்ந்து பாடுகிறான். காளி, பராசக்தி, கண்ணன், திருமால், முருகன், கணபதி, சரசுவதி, அல்லா, யேசு என்று எல்லா தெய்வங்களையும் போற்றிப்பாடுகிறான். ‘அத்வைத’ சித்தாந்தத்தில் பற்றுள்ளவனாக இருந்தால் உருவ வழிபாடு தேவை இல்லை. ஒரே நேரத்தில் அத்வைதியாகவும், பல தெய்வ வழிபாட்டாளனாகவும் விளங்குகிறான்.
“மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாள், அங்கே ஆகா வென்றெழுந்தது பார் யுகப் புரட்சி” என்று ரஷ்யப் புரட்சியில் காளியை அழைக்கிறான். பாஞ்சாலி சபதத்தில் ‘ஓம் தேவி பராசக்தி ஆணை உரைத்தேன்..’ என்று திரௌபதி பராசக்தியை அழைப்பது போல் எழுதுகிறான். அதே நேரத்தில் ‘மாடனைக் காடனை வேடனைப் போற்றி’ மயங்க வேண்டாம், பல ஆயிரம் வேதங்கள் அறிவே தெய்வம் என்று சொல்வதைக் கேளுங்கள்’ என்றும் அறிவுரை சொல்கிறான்.
ஒரு நேரம் சில தெய்வங்களைப் போற்றியும் இன்னொரு நேரம் அறிவே தெய்வம் என்றும், பிறிதொரு நேரம் தூய அத்வைத நோக்கமும் கொண்டு பாரதியின் பாடல்கள் அமைந்துள்ளன. கவிஞன் பல நேரங்களில் ஒரே நிலை எடுக்க இயலாது என்பது தெளிவு. அதையே பாரதியின் பாடல்களும் உணர்துகின்றன. ஆனால் அவற்றின் மூலம் அவனது ஆன்மீகத் தேடல் பாதை புலனாகிறது, தத்துவ தரிசனப் பயணம் புலப்படுகிறது என்று சொல்லலாம்.