இளையராஜா வைக்கவேண்டிய கை

இசை ஞானிக்கு ,

80-90களில் உங்கள் இசையைக் கேட்டு வளர்ந்த ஒரு இசை அஞ்ஞானியின் வணக்கம். இசை பற்றி எழுதி என் மேதாவிலாசத்தை நான் காட்டப்போவதில்லை. ஏனெனில் அது என்னிடம் இல்லை.

தங்களின் சமீபத்திய ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தின் திருவாசகப் பதிகங்களின் இசையில் உயிரைப் பறிகொடுத்துவிடுவேனோ என்கிற பயத்துடன் இதை எழுதுகிறேன். நீங்கள் தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம். நிற்க.

ஒரு திரைப்பாடல் ஆசிரியர் ஒரு பாட்டிற்கு என்ன விலை கேட்கிறார் என்று நான் அறிந்ததில்லை. அனேகமாக அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் அப்பாடல்களுக்கு உயிர் கொடுப்பதில் உங்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதை நான் அறிவேன். பாடலின் மதிப்பு உங்கள் இசையால் கூடுகிறது என்பதும் என் சிற்றறிவிற்கு எட்டிய ஒன்றே.

ஆகவே, இந்த ‘பாருருவாய பிறப்பற வேண்டும்..‘ என்னும் மாணிக்கவாசகர் திருவாசகப் பாடலுக்கு என்ன விலை வைக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எழுதிய நாயன்மார் தற்போது இல்லை என்பது தாங்கள் அறிந்ததே. ஒரு குத்துப் பாடலை எழுதிவிட்டு ‘கவிஞர்’, ‘கவிப்பேரரசு’ என்றெல்லாம் பட்டம் போட்டுக்கொள்ளும் நாளில், இந்தப்பதிகத்தை இயற்றிய மாணிக்கவாசகருக்கு என்ன விலை அளிக்கலாம் என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

உங்கள் இசை ஞானத்தால் இப்பாடல்களுக்கு ஒரு விலை நிர்ணயம் செய்யுங்கள். அதைத் திரைப்படத் தயாரிப்பாளரிடம் சொல்லி அதனைப் பெற்று நலிவடைந்த, பண்டைய சிவன் கோவில் ஒன்றிற்கு நீங்களே அளியுங்கள். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் நிலை என்ன என்பது தாங்கள் அறிந்ததே.

‘நான் ஏன் செய்ய வேண்டும்?’ என்று நீங்கள் கேட்கலாம். நியாயம் தான். தாங்கள் இசை அமைப்பாளர். இந்த வேலை உங்களுடையது அல்ல தான். ஆனால் சென்னையில் வெள்ளம் வந்த போது முன்னின்று நீங்கள் செய்த பணிகளை நாடே கண்டது. 1980களில் திருவரங்கக் கோபுரத்திற்குத் தாங்கள் செய்த பெருதவியை ஆன்மீக உலகம் என்றும் மறக்காது. ஆக நீங்கள் முனைந்தால் இதுவும் நடக்கும்.

உங்களுக்குத் தெரியாதது இல்லை.

வைணவக் கோவில் உற்சவங்களின் போது ஆழ்வார்களுக்கென்று தனி மரியாதை உண்டு. ஸ்ரீ சடாரி ஆசீர்வாதம் ஆழ்வார் திரு உருவங்களுக்கு முதலில் வழங்கப்படும். அவர்கள் தங்கள் பாடல்களால் அந்த ஊரை திவ்ய தேசமாக்கினார்கள் என்பதால், பெருமாள் அவர்களைக் கவுரவிக்கிறார் என்கிற கணக்கில் வரும் இது. அது போலத்தான் ‘முதல் தீர்த்தம்’ என்பதும் ஒரு குடும்பம் பல தலைமுறைகளுக்கு முன் கோவிலுக்கு ஏதாவது அளப்பரிய கைங்கர்யம் செய்திருக்கும். (உலுக் கான் ஆக்கிரமிப்பு போன்றவற்றின் போது) அதற்காக அக்குடும்பத்தாருக்கு முதல் மரியாதை செய்யப்படுவதும்.

வீடுகளில் சுப காரியங்களின் போது, தத்தமது ஆசாரியர்களுக்கு, ஊர்க் கோவில்களுக்கு என்று ‘சம்பாவனை’ என்று சிறு காணிக்கை தனியாக வைக்கப்பட்டு பின்னர் கொண்டு சேர்க்கப்படுவதும் வாடிக்கை.
இவை போல, நமது பண்டைப் பாசுரங்களுக்கும், பதிகங்களுக்கும் உரிமையாளர்கள் என்றால் அவர்கள் அந்தந்த ஊர் விக்கிரகங்கள் என்று கொள்ளலாம். அதற்காக ஒரு சிறு தொகையை செலுத்துவது நல்லதே. பாரதியின் பாடல்கள் வணிக ரீதியாகப் பயன் படுத்தும் போது, அவர் தொடர்பான ஒரு நிறுவனத்திற்கு ஒரு தொகை அளிப்பது அவருக்கு நாம் செய்யும் நன்றி என்று கூறுவேன் ( அவரது பாடல்கள் நாட்டுடைமை ஆனாலும் கூட).

‘வரணம் ஆயிரம்’ பாசுரம் எனக்குத் தெரிந்து 2 முறை திரைப்படங்களில் பயன் படுத்தப்பட்டுள்ளது. அந்தப் படங்களின் தயாரிப்பாளர் இப்பாடலின் மூலம் என்ன பொருள் ஈட்டினாரோ தெரியாது. ஆனால் மனசாட்சிக்கு உட்பட்டு, அப்பாடலை வணிக ரீதியாகப் பயன் படுத்துவதால் ஒரு தொகையை ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்குக் கொடுத்திருக்கலாம். ஏன் விசேஷ நாளில் அன்னதானம் செய்திருக்கலாம்.

நாங்கள் நாதியற்றுக் கிடக்கிறோம்; எம் கோவில்களும் அப்படியே. அரசின் கீழ் உள்ளபடியால் அரசு போலவே கோவில்களும் ஆகிவிட்டன. 40 வேலி நிலம் கொண்ட கோவில்கள் ஒரு வேளை உணவுக்குக் கையேந்துகின்றன. மக்கள் கொடுக்கும் பணத்தைக்கொண்டு சில உற்சவங்கள் நடக்கின்றன. அவ்வளவே. எரிந்துபோன தேர்கள் கரிக்கட்டைகளாக நிற்கின்றன. வெயிலிலும் மழையிலும் சிதைந்து போன கோவில் தேர்கள் எவ்வளவோ!

உங்களால் நேரடியாக இந்தப் பணிகளைச் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் தலைமையில் ஒரு நிதி துவங்குங்கள். பாசுரங்களையும் பதிகங்களையும் திரைத் துறையினர் தங்கள் திரைப்படங்களில் பயன் படுத்தினால் அதற்கான ஒரு தொகையை அந்த நிதிக் கணக்கில் செலுத்தச் சொல்லுங்கள். இந்த நிதிக்குப் பாசுரங்களையும், பதிகங்களையும் வணிக ரீதியாகப் பயன்படுத்தும் அனைத்துக் கலைஞர்களையும் ஒரு காணிக்கை போல் செலுத்தச் செய்யலாம். ஆண்டு தோறும் கோவில்களுக்கு இந்த நிதியில் இருந்து ஒரு பகுதியைச் செலவு செய்யுங்கள். இந்த நிதியைக் கையாள அரசு அற நிலையத்துறை தவிர்த்த சமூகப் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று செயல்படட்டும். இதற்கு நீங்கள் தலைமை தாங்குங்கள்.

கோவிலுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. பதிகங்களை ஓதும் ஓதுவார்களுக்கும் அளிக்கலாம்.

தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு வேண்டும் என்று கேட்கும் திரை உலகம் இந்த நியாயமான வேண்டுகோளை ஏற்கும் என்று நினைக்கிறேன். அதுவும் நீங்கள் இதிலும் ஒரு முன்னோடியாக இருந்து செயல்பட்டால் திட்டம் வெற்றியடையுமே ஐயா.

‘ராஜா கைய வெச்சா ராங்கா போகாது’ என்பதால் உங்களிடம் இந்த வேண்டுகோள். வாரிசு இல்லாச் சொத்து போன்று நமது தொன்மைச் செல்வங்கள் பயன்படுத்தப்படுவதை நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருந்து தடுத்து சரியான பயனாளியைச் சென்றடைய உதவுங்கள்.

இதை நீங்கள் செய்தால் வேறு என்ன பயனோ இல்லையோ, வானுலகிலிருந்து ஆழ்வார்களும் நாயன்மார்களும் வாழ்த்துவர்.

வாருங்கள் ராசாவே, முன்னெடுத்துச் செல்லுங்கள் இத்திருப்பணியை.