கோவை வன்முறை – குமட்டல்

அரசியல் பதிவிற்கு மன்னிக்கவும். கோவை வன்முறை குமட்டுகிறது.

சேலம் ஆடிட்டர் ரமேஷ் துவங்கி இந்த வார சசிகுமார் வரையிலான பலிதானங்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. அவற்றை துப்பு துலக்க முதுகெலும்பில்லாத துறைகள் உண்டென்பது உண்மை தான். அத்துறைகளை முடுக்கி விட அடிப்படை மானுட அறம் இல்லாத மாநில அரசும் இருக்கிறதென்பதும் உண்மைதான். அவை தமிழகத்தின் நிதர்சனங்கள். 40 ஆண்டுகால அதார்மீக அரசுகளின் செயல்பாட்டின் விளைவு இது.

‘ஆம்பூர் வன்முறையில் ஊடகங்கள் என்ன செய்தன?’ என்று கேட்பது நியாயமானதே. ஊடகங்கள் விலைபோய் 40 வருடங்கள் ஆகிவிட்டன என்பது தெரியாதா? காஷ்மீரத்தில் நடந்த தாக்குதல் பற்றி தமிழக ஊடகங்களின் செயல்பாட்டை நாம் அறியவில்லையா? தேச துரோகச் செயலாளர்களின் கைப்பாவையாகவும், அறிவை மயக்கும் சினிமா மோகினியின் அடிமையாகவும் அவை மாறியது நாம் அறியாததா?

ஆனால் அதற்காக வன்முறையில் ஈடுபடுவதும், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிப்பதும் நமது பாரத பண்பாடல்ல. கம்யூனிச, திராவிட போலி பகுத்தறிவுவாத இயக்கங்களின் செயல்பாட்டை ஒற்றியே நடப்பதென்றால் ‘வசுதா ஏவம் குடும்பகம்’ என்பதெல்லாம் என்ன? வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் இத்தனை ஆண்டுகள் செய்ததற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? விநாயகர் சிலைக்கு அவமரியாதை செய்தவர்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

‘கேரளத்தில் இயக்க ஆட்கள் மீதான வன்முறையைத் தற்போதைய கம்யூனிச அரசு நடத்தவில்லையா?’ என்று கேட்பதும் நியாயமானதே. ஆனால் கம்யூனிஸ்டுகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? உலகெங்கிலும் அவர்களது சரித்திரம் வன்முறை தவிர்த்த வேறென்ன? ஜனநாயக முறையில் அவர்களைப் பதவியிறக்கம் செய்வதே இப்போது செய்ய வேண்டியது. ‘அவர்களைப் போல் இருப்பேன்’ என்பதில் என்ன பொருள் இருக்கிறது?

‘வன்முறையாளர்கள் எங்கள் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் அல்லர்’ என்று கைவிரித்து தப்பிக்கலாம். ஆனால் அங்கு பாரத மாதா கோஷங்கள் எழுப்பப்பட்டனவே. அதுவும் வெளியாட்கள் வேலை என்றால் இந்த ஊர்வலத்தை நடத்திய இயக்கங்கள் அதற்குப் பொறுப்பேற்று வன்முறையாளர்களை அடையாளம் காட்ட வேண்டும். ஒருவேளை அவர்கள் இயக்கங்களின் உறுப்பினர்கள் என்றால் அவர்களை விலக்கி வைத்து, காவல் துறை நடவடிக்கை எடுக்க ஏது செய்ய வேண்டும்.

பா.ஜ.க.வின் தேசிய தலைமை செயல்பட்டு, மாநில அரசின் சட்ட ஒழுங்கு நிலை பற்றி வெள்ளை அறிக்கை கோர வேண்டும். மாநிலத் தலைவர்கள் இனியாவது செயல்பட வேண்டும்.

இது எதுவும் நடக்கவில்லை என்றால் கட்சியைக் கலைத்துவிட்டு பசுமாடு வளர்க்கலாம். புண்ணியமாவது கிடைக்கும்.

‘வந்தே மாதரம் என்போம். எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.’ – பாரதி.

தமிழரும் மலைப்பாம்பும்

ஹிந்தியில் சமூக வலைதளச் செய்திகள் அளிக்க வேண்டும் என்று ஒரு ஆணை வந்தாலும் வந்தது, உலகளாவிய தமிழர் பொங்கி எழுந்தனர். சிங்கப்பூர், மலேசியா, கனடா என்று கோபால் பல்பொடி விற்கும் இடங்களில் எல்லாமிருந்து கிளம்பியது பேரொலி. ஆஹா, என் தாய்த் தமிழை அழிக்கப்பார்க்கிறது பா.ஜ.க. அரசு என்று கிளம்பியது அலை ஓசை. முக நூல் போராளிகள் தூக்கினர் தங்கள் கீபோர்ட் ஆயுதத்தை.

எல்லாப் பக்கங்களில் இருந்தும் வாங்கியுள்ள அடியின் காரணமாக இருக்கும் இடம் தெரியாமல் பரிதவித்த கருணாநிதி,’ஹிந்தியை முன்னேற்ற சிந்தனை செய்யாதீர், இந்தியாவை முன்னேற்ற சிந்தனை செய்வீர்’ என்று அறிக்கை விட்டார். ( இந்த இடம் எழுதும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை ).

ஆனால் ஒன்று. கருணாநிதி கொஞ்சம் அடக்கித்தான் வாசித்துள்ளார் என்று தோன்றுகிறது. 2ஜி, கனிமொழி, தயாளு என்று ஏகப்பட்டது இருக்கிறது. எதற்குப் பகைத்துக் கொள்வானேன் என்று இருக்கலாம். அதைவிட சிந்தனைச் சிற்பி குஷ்பூ வேறு விலகிவிட்டார். இனிமேல் டி.வி.யில் ஆங்கிலத்தில் பேச யாரை அனுப்புவது என்ற குழப்பமாக இருக்கலாம்.

‘தூங்கும் சிறுத்தையை இடராதீர்’ என்று முழங்கினார் வைகோ. ‘புலி’ என்று சொல்லாமல் சிறுத்தை என்று சொன்னது ஏனோ என்று தெரியவில்லை. பகுத்தறிவுக் காரணங்கள் ஏதாவது இருக்கலாம். கூடங்குளமும் தற்போது முழு மூச்சில் செயல்படத் துவங்கி விட்டதால் அவருக்கும் ஏதாவது பேச வேண்டாமா ? இல்லைஎன்றால் ஏதாவது தமிழ் இலக்கியச் சொற்பொழுவு ஆற்றச் சொல்கிறார்கள். அவற்றில் தேவாரத்தையும், திருவாசகத்தையும் தொடாமல் பேச முடிவதில்லை. என்னதான் செய்வது ? கிடைத்தது இந்த ஹிந்திச் செய்தி.

இராமதாசு, பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார். அன்புமணியின் பிற்கால நலனைக் கருத்தில் கொள்ள வேண்டாமா ?

காவிரி அன்னை அம்மா வழக்கம் போல் கடிதம் எழுதியுள்ளார். தனது பங்கிற்குத் திராவிட மானம் காக்க வேண்டாமா ?

ப.சிதம்பரம் கூட பேசியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அமைச்சர் வேலை இல்லை என்றால் எத்தனை நாள் தான் சும்மா இருப்பது ? அமைச்சராக இருந்தபோதே அப்படித்தானே இருந்தார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் அப்போது அவர் சும்மா இல்லை. சிங்கப்பூர் வந்தார். மலேசியா சென்றார். பன்னாட்டு வங்கிகளுடன் பேசினார். குஜராத்தைத் திட்டித் தான் பணியை ஆற்றினார்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன ?  மோடி அரசி ஹிந்தி தான் தகவல் மொழி என்று அறிவித்து விட்டதா ? அப்படி அறிவுக்க முடியுமா ?

முடியாது. 1963-ல் நேரு கொண்டு வந்த சட்டத்தின் படி, ஹிந்தி பேசாத மாநிலங்கள் ஒப்புக்கொள்ளாத வரையில், ஹிந்தியை ஒரே தேசீய மொழியாக ஆக்க சட்டத்தில் வழி இல்லை. அது வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாகவே தொடரும். என்னைப் பொறுத்தவரை இந்த நிலை மாறப் போவதே இல்லை.

சரி. இது தமிழக அரசியல் வியாதிகளுக்குத் தெரியாதா ? என்று கேட்கலாம்.

அவர்களுக்கும் தெரியும். ஆனால் எப்போதுமே ஒரு பயம் காட்டிக்கொண்டே இருந்தால் தான் மக்களைத் தொடர்ந்து பயம் கலந்த மயக்க நிலையில் வைத்திருக்க முடியும். அதன்மூலம் இவர்கள் தொடர்ந்து காலட்சேபம் செய்ய முடியும். அதனால் தான் இந்த ‘அறிக்கை’ப் போர்கள். அக்கப்போர்கள் என்றும் சொல்லலாம்.

சரி. பா.ஜ.க. அரசு என்னதான் சொன்னது ? சமூக இணைய தளங்கள் மூலம் பேசும் போது அரசாங்க விவரங்களை ஹிந்தியில் தெரிவிக்க வேண்டும். கூடுதலாக ஆங்கிலம் பயன் படுத்தலாம் என்பதே அந்த அறிவுறுத்தல். இதன் மூலம் அரசு அறிவிப்புகள் ஹிந்தி மட்டுமே பேசும் பெரும்பாலான மக்களைச் சென்றடைய ஏதுவாகும். ஆனால் இதனால் அரசாணைகள், கெஜெட் (Gazette )  முதலியன பாதிக்கப்படாது.

இந்த உண்மை நிலை தெரியாதவர்களா தமிழர்கள் ?

நான் ஜப்பானிய மொழி கற்ற போது எனக்கு ஆசிரியர்கள் அனைவரும் தமிழர்கள். ஒரு ஆசிரியர் மட்டுமே ஜப்பானியர். ஜப்பானிய நிறுவனங்களில் பணியாற்றும் தமிழ் இளைஞர்கள் பலர் ஜப்பானிய மொழி பேசுகிறார்கள். அதனால் தமிழ் அழிந்து விட்டதா ? தோக்கியொவில் என் உடன் பணியாற்றிய அனைத்துத் தொழில் நுட்ப வல்லுனர்களும் தமிழர்களே. அவர்கள் தோக்கியோ வந்த போது பெருமுயற்சி செய்து ஜப்பானிய மொழி கற்றார்கள்.

பிழைக்க உதவி செய்யும் எந்த மொழியையும் கற்கவே தமிழன் மட்டுமல்ல யாரும் விரும்புவர். சிங்கையில் நல்ல தமிழ் பேசும் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் தனது பெயரை ‘பரணி’ என்று சொல்கிறார். தமிழ் கற்றதால் அவருக்கு ஆங்கிலம் மறந்துவிட்டதா ? அல்லது அவரது தாய் மொழி அழிந்து விட்டதா ?

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாரதி சொன்னானே. அவன் தமிழ் தவிர வேறு 7 மொழிகளில் விற்பன்னன். அவனது தமிழ் அழிந்ததா ?

ஒன்று சொல்லலாம். தற்போது கணினித் துறையில் ‘மலைப்பாம்பு’ என்று ஒரு மொழி உள்ளது. அதன் நிஜப்பெயர் Python  என்பது. அது போல் இன்னும் பல மொழிகள் C, C++, Java, SQL, C# என்று பலதும் உள்ளன. ஆக இவை அனைத்தையும் கற்பதை விட்டு விடலாமா  தமிழர்கள் ? மீண்டும் கற்காலம் செல்ல வேண்டியது தான்.

பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிற்பங்களையும், கோவில்களையும், கல்வெட்டுக்களையும் காப்பதற்கு வக்கில்லை; கல்வெட்டுக்களைத் தலைகீழாக வைத்து சிமெண்ட் பூசுகிறார்கள். இவற்றைக் கேட்க நாதியில்லை; குஷ்புவிற்குக் கோவில் கட்டிய மூத்த குடி அல்லவா ? அதனால் தான் வந்துவிட்டார்கள் தமிழைக் காக்க.

‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வம் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி சொன்னான். தேவை துவேஷம் இல்லை. விவேகம்.

கண்கள் இரண்டிருந்தும்…

தலைப்பைப் பார்த்தவுடன் நீங்கள் ஊகித்திருக்க முடியும். ஆமாம். பா.ஜ.க.வின் தமிழகக் கூட்டணியைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

கூட்டணியில் இருப்பதில் வை.கோ. தவிர ம.தி.மு.க. வில் யாரும் இல்லை. அவர் நல்ல மனிதர் தான். ஆனால் கொஞ்சம் இந்தியாவைப் பார்த்தால் நல்லது. எப்போதுமே இலங்கையையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால் தன் பெயரை ‘அரங்கநாதன்’ என்று மாற்றிக்கொள்ளலாம். விபீஷணன் ஆட்சி செய்வதைக் கண்காணிக்க தெற்கு நோக்கிப் படுத்திருக்கிறார் ஸ்ரீரங்கம் ரங்கனாதர்.

வை.கோ. வெற்றி பெற்று அவருக்குக் கல்வி அல்லது கலை அல்லது சுற்றுப்புறச் சூழல் அமைச்சுகள் அமைந்தால் நாட்டுக்கு நல்லது.

பா.ஜ.க.வின் கூட்டணியில் இருக்கும் ஒரே நல்ல கட்சி இவரது தான். ஆனால் இவர் மட்டுமே தான் கட்சியில் இருக்கிறார் என்பது ஒரு வருத்தம்.

மற்ற இரண்டு கூட்டணிக் கட்சிகள் பற்றிப் பேசுவதற்கு முன்னால் கொஞ்சம் அஜீரண மருந்து உட்கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது.

சாதியை மட்டுமே முன் நிறுத்தும் வன்முறை இயக்கம் ஒன்று. தரம் தாழ்ந்த வசை பாடிக் கட்சி இன்னொன்று. இந்த இரண்டினால் பா.ஜ.க. அடையப் போவது என்ன ?

இலக்கு முக்கியம் என்றால் அதற்கான வழிமுறையும் முக்கியமே. வெற்றி பெறுவது அவசியம் தான். ஆனால் யாருடன் கூட்டு வைப்பது என்று ஒரு தரம் வேண்டும் என்பது என் கருத்து.

ஒரு பக்கம் மோதி, அத்வானி, வாஜ்பாய் என்று சொல்லிக்கொண்டு இன்னொறு புறம் இந்த இரண்டு கூட்டங்களுடன் சேருவது என்ன நேர்மை என்று தெரியவில்லை.

பேசாமால் இடது சாரியுடன் சேர்ந்திருக்கலாம். பெரிய வித்யாசம் இல்லை. தேசத்துரோகம் என்று ஆகிவிட்டது. கொஞ்சம் பழைய தேசத் துரோகிகளுடன் சேர்ந்திருக்கலாம்.

ஒரு வேளை பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அதில் தேசத் துரோகம் என்னும் கறை இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

‘கண்கள் இரண்டிருந்தும் காணும் திறமை அற்ற பெண்களின் கூட்டமடி..’ என்று பாரதியார் பாடியது பா.ஜ.க.பற்றித்தானோ ?

%d bloggers like this: