வடிகட்டிய முட்டாள்தனம்

“மீண்டெழும் பாண்டியர் வரலாறு” – எனும் தமிழ் நூலைத் தமிழக அரசு தடை செய்துள்ளது. சமூக ஒற்றுமை கெடுமாம். இதைவிட அபத்தம் இருக்க முடியாது.

நூலைத் தடை செய்வதால் கருத்துக்கள் பரவாதா?  இணையம் இருப்பதால் நானே நாளை அந்த நூலை விலைக்கு வாங்கி PDF முறையில் மின்-நூலாக ( e-book) மாற்றி மின்-அஞ்சலில் அனைவருக்கும் அனுப்பினால் என்ன செய்வார்கள்?

அமேசான் (amazon.com ) போன்ற தளங்களில் விற்கும் வண்ணம் அமெரிக்காவில் வெளியிட்டு விற்பனை செய்தால் அதையும் தடை செய்ய முடியுமா?

அது தான் வேண்டாம். கனடாவில் ஒரு பல்கலைக் கழகம் தனது தமிழ்த்துறை மூலமாக இதை ஒரு ஆவணமாக அக்கி, தனது இணைய தளத்தில் வெளியிட்டால் என்ன செய்ய முடியும்? கனடாவைத் தடை செய்யுமா  தமிழக அரசு?

அது கூட வேண்டாம் – தமிழ் மக்கள் ஆதரவு வேண்டும் என்று இலங்கை அரசு இந்த நூலை வெளியிட்டால் என்ன செய்வார்கள் தமிழகத்தில்?

அப்படி என்னதான் இருக்கமுடியும் இந்த நூலில்? இருந்தாலும் யாரும் தான் புத்தகங்களையே படிப்பதில்லையே. “மானாட மயிலாட”வும் அதற்கு இணையான பல ஆபாச நிகழ்ச்சிகளையும் தானே தமிழ் மக்கள் பார்க்கிறார்கள்? புத்தகம் எங்கே படிக்கிறார்கள்?

நடிகை குஷ்பூ-வின் கால் அளவு என்ன என்று கேட்டல் தமிழ் மக்களுக்குத் தெரிந்திருக்கும். “அறியப்படாத தமிழகம்” யார் எழுதியது என்றால் ஒரு மாதிரி பார்ப்பார்கள்.

இவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துவிடப் போகிறார்களா?  அப்படியே படித்தாலும் தான் என்ன நடந்துவிடும்?

அரசு சார்பில் கள்ளுக்கடை திறந்திருக்கலாம், அதனால் சமூகம் உயர்வு பெறும். ஆனால் ஒரு நூலினால் ஒற்றுமை கெடும். இது என்ன பகுத்தறிவோ !

வள்ளலார் “திரு அருட்பா” எழுதினர். இலங்கைப் புலவர் ஒருவர் அதனை மறுத்து “திரு மருட்பா” எழுதினார். வழக்கு ஆங்கில நீதிமன்றம் சென்றது. வாதம் நடந்தது. திரு அருட்பா வென்றது என்று நினைவு.

ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் மாற்றுக் கருத்துக்கள் பரவ வேண்டும். அவை வாதிக்கப்பட வேண்டும். தர்க்க வாதமே இல்லாமல் ஒரு ஆட்டு மந்தை சமூகமாக நாம் மாறிவிட்டது திராவிட அரசுகளின் கல்விக் கொள்கையின் வெற்றியே.