பூணல், கல்யாணம், சீமந்தம் – சிறு குறிப்பு

ஒரு திங்கள் கிழமை காலை, ஒரே நேரத்தில் அடையாறிலும், தாம்பரத்திலும் முஹூர்த்தம் வைத்தால் மனுஷன் எப்படிப் போவது ?

பிரியமான சொந்தங்கள் / நண்பர்கள் / வாசகர்களே, வணக்கம். 

பூணல் போடுங்கள், அமோகமாக இருக்கட்டும் பிள்ளைகள். கல்யாணம் பண்ணுங்கள். சதாபிஷேகம் பண்ணிக்கொள்ளுங்கள். எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், எல்லா பூணலையும் ஏப்ரலில் இருந்து ஜூலைக்குள் போட்டே ஆக வேண்டுமா ? இந்த மூன்று மாதத்தை விட்டால் பூணல் போட வேறு மாதமே கிடைக்காதா ? அதென்ன சார் எல்லாரும் இந்த மூன்று மாசத்திற்குள்ளேயே போட்டுக் கொண்டே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள் ? தலை ஆவணி அவிட்டத்திற்கான ஏற்பாடா ? 

கல்யாணமும் அப்படியே. திங்கள் முதல் வெள்ளி வரை கல்யாண வைபோகமாகவே இருக்கிறது. சனி, ஞாயிறு ஈ காக்காய் இல்லை. ஒரு கல்யாணம், சீமந்தம் ஒன்றும் இல்லை. சொல்லி வைத்த மாதிரி திங்கள் காலை முஹூர்த்தம் என்கிறார்கள். போனோம் என்று பேர் பண்ணிவிட்டு ஆஃபீஸ் போகலாம் என்றால் 9:00 மணிக்கு மேல் முகூர்த்தம் என்கிறார்கள். ராகு காலம் முடிய வேண்டுமாம். அதற்கு மேல் கல்யாணத்தில் பங்கு பெற்று ஆஃபீஸ் போக முடியுமா ? போனால் அங்குள்ள ராகு காலம் விடுமா ? 

சரி. அப்படியே போகலாம் என்றாலும் சென்னை டிராஃபிக் விடுமா? திங்கள் காலை தான் ‘ஆமருவி எங்கே ? எங்கே ?’ என்று ஆலாய்ப் பறக்கும் ஃபோன் கால்கள். மிச்ச நாள்களில் சீந்துவார் இல்லை. 

ஒரு திங்கள் கிழமை காலை, ஒரே நேரத்தில் அடையாறிலும், தாம்பரத்திலும் முஹூர்த்தம் வைத்தால் மனுஷன் எப்படிப் போவது ? ஆஃபீஸ் அவசரத்தில் எது கல்யாணம், எது பூணல், எது சீமந்தம் என்று தெரியாமல், பூணல் முஹூர்த்தத்திற்கு புடவை வேஷ்டியும், சீமந்தத்திற்கு நாலு முழம் வேஷ்டியும், கல்யாணத்திற்கு அலாரம் டைம்பீசுமாக கிஃப்ட் கொடுத்து அசடு வழிய வேண்டியதாக இருக்கிறது. 

இத்தனைக்கும் எல்லா பத்திரிக்கையும் வாட்ஸப்பில் அனுப்பி, ‘பத்திர்க்கைய நீங்க பார்க்கவே இல்லியே?’, ‘பார்த்தீங்க, ஆனா பதில் போடல்லியே” ரெண்டு டிக் மார்க் வரல்லியே’ என்று ஃபோன் கால் வேறு. 

மனுஷன் திங்கள் காலை ஆஃபீஸ் பிரச்னையை நினைப்பானா, இல்லை சீமந்தம், மணையில் வைத்துப் பாடுவது, காசி யாத்திரை பார்ப்பது என்று போவானா? இப்படியெல்லாம் போனால் காசி யாத்திரை போக வேண்டியது தான். 

நிஜமாகவே புரியவில்லை ஸ்வாமி. எப்படி இத்தனை கல்யாணங்களையும், பூணல்களையும், சதாபிஷேகங்களையும் சமாளிப்பது ? 

இப்படிக்கு,
ஒரு கல்யாண மண்டபத்தில் காத்திருக்கும்,
அசட்டு அம்மாஞ்சி ஆமருவி.
03-05-2023 

%d bloggers like this: