பிஎச்.டி. புளித்த கதை

‘பையன் நல்லவன் தான். பார்த்தேன். ஆனா கொஞ்சம் அசடோ?’ என்றார்.

‘இல்லை, நல்ல பையன். சிங்கப்பூர்ல என்.யூ.எஸ்.ல படிச்சிருக்கான். கம்ப்யூட்டர்ஸ்ல மாஸ்டர்ஸ். அசடெல்லாம் இல்லை,’ என்றேன்.

‘இல்லை, நேத்திக்கு பார்த்தேன். சாப்ட்வேர்ல இருக்கேன்னான். ஆனால் நெத்திக்கி இட்டுண்டிருந்தான். அதான் கொஞ்சம் அசடோன்னு தோணித்து,’ என்றார்.

என் தூரத்து உறவுக்காரப் பையனைப் பற்றிச் சொன்னர் பெண்ணைப் பெற்ற இவர். பையன் நெற்றியில் வைணவ அடையாளமான திருமண் இருந்தது அவனுக்கு ‘அசடு’ பட்டம் பெற்றுத் தந்தது.

‘பையன் சூட்டிகை தான். நம்பி பொண் குடுக்கலாம்,’ என்றேன்.

‘அதுக்கில்ல, நேத்தி சாயந்திரம் அவாத்துக்குப் போனேன். பகீர்ன்னுது,’ என்றார். புரியாமல் விழித்தேன்.

‘பையனோட அப்பா குடுமி வெச்சிண்டிருக்கார். அம்மா மடிசார் கட்டிண்டிருக்கா. அதான் பயந்துட்டோம்,’ என்றார் அவருடன் வந்த பெண்ணின் தாயார்.

‘அதால என்ன? அப்பா தானே குடுமி வெச்சிண்டிருக்கார்?’ புரியாமல் கேட்டேன்.

‘நல்ல காலம் அவசரப்படல்ல. மாமியார் மடிசார், மாமனார் குடுமி. எம்பொண்ணு மாடர்னா வளர்ந்தவ. அட்லீஸ்ட் சுடிதார் போட்டுப்பா. இவ்வளவு ஆசாரம் எல்லாம் அவளுக்கு ஆகாது. அதால சம்பந்தம் பத்தி அப்பறம் சொல்றோம்னு சொல்லிட்டு வந்துட்டோம்,’ என்றார் அந்த மாதுசிரோமணி.

‘அப்ப நான் என்ன பதில் சொல்றது பையனோட அப்பாவுக்கு?’ என்றேன் சற்று கடுப்புடன்.

‘பொண்ணு மேல படிக்கணுமாம் பிஎச்.டி. பண்றாளாம்னு ஏதாவது சொல்லுங்களேன்..’ அந்த மாது சிரோமணி.

பையனின் தந்தையார் பிரபல நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் வைதீக வாழ்வு வாழத் துவங்கினார். பையனின் தாயாரும் அப்படியே. இது தங்கள் பிள்ளைக்குக் கல்யாணம் நடக்க ஊறு செய்யும் என்று நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

பல ஐயங்கார் குடும்பங்களில் மடிசார் ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. பாரம்பரியத்தைத் தொடர விரும்பும் ஓய்வு பெற்ற பெரியவர்கள் இதைக் கொஞ்சம் மனதில் கொள்ள வேண்டும்.

அது போலவே, பையன்கள் எவ்வளவு நாகரீகமாக இருந்தாலும் அவனது பெற்றோரும் அரை நிஜார் போட்டுக்கொண்டு நிற்க வேண்டும் என்று எதிர்பாப்பதும் நல்லதில்லை.

அவருக்குப் போன் செய்தேன்.

‘என்ன சொல்றாப்பா பொண்ணாத்துக்காரா? குடுமி, மடிசார் அதனால வேண்டாம்கறாளா?’ என்று துவங்கினார்.

‘இல்ல சார், அது வந்து பொண்ணு மேல படிக்கப் போறாளாம். யூ.எஸ்.ல பிஎச்.டி. சீட் கெடைக்கும் போல இருக்காம்..’ என்றேன்.

‘சரி சரி. வேற இடம் இருந்தா சொல்லு. எல்லா பொண்களும் இப்ப பிஎச்.டி. படிக்க அமெரிக்கா போறா போல இருக்கு. அமெரிக்காவுல ஐயங்கார் பொண்கள் தான் பிஎச்.டி. படிக்க வேணும்னு கேக்கறாப்ல இருக்கு. இதோட நாலு பொண்ணு அப்பிடி போயிட்டா..’ என்று முடித்தார்.

ஐயங்கார் குடும்பங்களில் பெண் கிடைப்பது குதிரைக் கொம்பு. அதுவும் மணல்கயிறு எஸ்.வி.சேகர் மாதிரி கட்டளைகள் போடுகிறார்கள். அவற்றில் சில:

 1. மாமியார், மாமனார் இருக்கக் கூடாது. (உயிரோடு)
 2. இருந்தாலும் கூட இருக்கக்கூடாது.
 3. முடிந்தவரை யூ.எஸ். க்ரீன் கார்ட் பையனாக இருக்க வேண்டும்.
 4. யூ.எஸ். குடியுரிமை பெற்றிருந்தால் விசேஷம்.
 5. தன்னைவிட அதிகம் படித்திருக்க வேண்டும். தான் குறைந்தது முதுகலை (கணினிப் பொறியியல்). எனவே பையன் முனைவர் பட்டம்.
 6. பையன் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். இவற்றில் படித்திருக்க வேண்டும். மெட்றாஸ் ஐ.ஐ.டி, அகமதாபாத் ஐ.ஐ.எம். விசேஷம்.
 7. அமெரிக்கப் பல்கலைகளில் ஒரு முதுகலையாவது படித்திருத்தல் வேண்டும்.எம்.ஐ.டி, கால்டெக் விசேஷம்.
 8. சி.ஏ.வாக இருந்தால் அமெரிக்க சி.பி.ஏ. முடித்திருக்க வேண்டும்.
 9. அமெரிக்காவில் வீடு இருந்தாலும் பையனுக்குக் கடன் இருக்கக்கூடாது. (2008ற்குப் பின்னான ஞானோதயம்)
 10. முடிந்தவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இந்தியா வர வேண்டும். வந்தாலும் மாமியார் வீட்டில் சில நாட்கள் தான் தங்க முடியும்.
 11. அமெரிக்காவில் தான் குழந்தைப் பிறப்பு. அதற்கு பெண்ணின் பெற்றோர் ஆறு மாதம், அதன் பின் கணவனின் பெற்றோர் ஆறு மாதம் வரலாம். ஆனால் இருவரும் ஒரே நேரத்தில் வரக்கூடாது.

அந்த உறவுக்காரப் பையனுக்கு வேறு நல்ல இடத்தில் கல்யாணம் நடந்து தற்போது இருவரும் அமெரிக்காவில். தந்தையும் தாயும் சென்னையில் குடுமியுடனும், பஞ்சகச்சத்துடனும். நிராகரித்த பெண் தற்போது அமெரிக்காவில் இன்னும் திருமணமாகாமல். அவளது தாயும் தந்தையும் இந்தியாவில் அதே பழைய பல்லவியைப் பாடிக்கொண்டு.

‘நீங்க அமெரிக்காவுல தானே இருக்கேள்? நல்ல வரனா இருந்தா சொல்லுங்கோ. எம்பொண்ணு பெர்க்லில பிஎச்.டி. பண்ணிண்டிருக்கா. நம்மடவா பையனா நியம நிஷ்டையோட இருக்கற குடும்பமா இருந்தா சொல்லுங்கோளேன்..’ என்றார். என் முகம் அவருக்கு நினைவில் இல்லை என்று தெரிந்துகொண்டேன்.

கல்யாணப் பெண்களே!  அடுத்த முறை வேறு ஏதாவது காரணம் சொல்லுங்கள். பிஎச்.டி. வேண்டாம். புளித்துவிட்டது.