ஒரு விருதின் கதை

‘என்னங்க, இப்பிடி பண்ணிட்டீங்க. விருதை வாங்கிக்க மாட்டீங்களா?’

‘எங்களுக்கு குடுத்து தான் வழக்கம். வாங்கி பழக்கம் இல்ல’

‘அப்டி சொன்னா எப்டி? நீங்க வாங்கிக்கிட்டாதானே நாங்க குடுக்க முடியும்?’

‘என்னையா இது. எங்களுக்கு வேண்டாங்க. நீங்களே வெச்சுக்கோங்க’

‘இத்தனை நாள் வெச்சுக்கிட்டு இருந்தோம். இப்ப திருப்பி தறோம். தயவு செய்து வாங்கிக் கோங்க’

‘இத்தனை வருஷம் வெச்சுக்கிட்டு இப்ப திருப்பித் தரணும்னா எங்ககிட்ட ஏன் தர்றீங்க?’

‘உங்க பேரல் தான் நாங்களே எங்களுக்கே குடுத்துக்கிட்டோம். அதால நீங்க வாங்கிக்கணும்’

‘நாங்க வாங்கிக்க முடியாதே. நாங்க குடுக்கலியே’

‘அது உங்களுக்கும் எங்களுக்கும் தெரியும். ஆனா, வெளில சொல்லாதீங்க. நாங்க திருப்பித் தர்றோம். நீங்க சத்தமில்லாம வாங்கிக்கிடுங்க. நாங்களும் ‘திருப்பி தந்துட்டோம். வெற்றி, தன்மானத்தின் வெற்றி’ அப்படீன்னு செய்தி போட்டுடுவோம்’

‘நீங்க திருப்பி குடுத்தா நாங்க வாங்கிக்கறோம். ஆனா, அது நாங்க குடுத்ததா இருந்தா வாங்கிக்கலாம். இத முடியாது’

‘இப்ப பாருங்க. நீங்க குடுக்கல. ஆனா,நீங்க குடுத்ததா நாங்க சொல்லிக்கலையா? அதப்போலதான். நாங்க குடுத்துட்டோம்னு சொல்லிடுவோம். நீங்க ஆமாம்னு மட்டும் சொன்னா போதும். இதையே ‘தமிழினத்தின் வெற்றி, பஹுத்தறிவின் வெற்றி’ அப்டீன்னு கொண்டாடிடுவோம். பட்டிமன்றம் வெச்சுடுவோம். நரகாசுரன் திவசம் வருது. அன்னிக்கி உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையா ஒளிபரப்பிடுவோம். கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க’

UNESCO AWARD
‘என்னையா ஒரே தொல்லையா போச்சு. எதாவது கோவில் பராமரிப்பு, அறிவுரைன்னா மேல பேசுங்க. இல்லேன்னா போன வெச்சுடுங்க. சும்மா தொண தொணன்னு..’

‘நீங்க அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது. தமிழ் இன மானம்னு ஒண்ணு இருக்கு. அதுக்கு இழுக்கு வந்துடும். எப்பிடியும் வாங்கிக்கிடுங்க. இல்லாட்டி கூட, ‘வாங்கிக்கொண்டோம்’நு செய்தியாவது வெளியிடுங்க. இதுக்கு மேல கெஞ்ச முடியாது.’

‘முடியாதுன்னா வேண்டாங்க. எதுக்கு கெஞ்சறீங்க?’

‘முடியாதுன்னா முடியாதுன்னு அர்த்தம் இல்ல. முடியல. வயசாயிடுச்சு இல்லியா..’

‘இதப் பாருங்க. எதாவது கோவில் கீவில் பராமரிப்பு அது இதுன்னா எங்க கிட்ட வாங்க..’

‘யோவ். யாருய்யா நீ? ஆரிய வந்தேறியா நீயி? கோவில் பராமரிப்பவது ஒண்ணாவது? கோவிலுக்கு முன்னால சிலை வெக்கணும்னா சொல்லுங்க. பராமரிப்பு எல்லாம் யாருகிட்ட பேசறீங்க. விருது பத்தி பேசலாம் வாங்க.’

‘ஒரு பேச்சுக்கு கேக்கறோம். நாங்க குடுக்காத விருத நீங்க எங்களுக்கு திருப்பி குடுக்கறதுக்கு என்ன காரணம்?’

‘ஒரு ஃபாசிஸ எதிர்ப்பு தான். மோதி அரசாங்கத்த எதிர்க்கணும். அயோத்தில கோவில் கட்டறாங்க. பத்திக்கிட்டு வருது. ஒண்ணும் பண்ண முடியல. ரொம்ப பேசினா மணியம்மை டிரஸ்ட ஆய்வு பண்றேன்னு வந்துடுவாங்க. ஆனா, எதாவது செஞ்சே ஆகணும். ஏன்னா, ரொம்ப நாளா சாப்டுட்டு, தூங்கி பொழுதே போகல’

‘அதுக்காக? அதுக்கும் விருதுக்கும் என்ன சம்பந்தம்?’

‘அட அரசியல் அரிச்சுவடி தெரியாம இருக்கீங்களே. சி.ஏ.ஏ. போராட்டம்னு மீட்டர் ஓடிச்சு. அதுக்கு முன்னாடி காவேரி தண்ணி வரல்ல. இப்ப பாழாப்போன தண்ணியும் வந்துடிச்சி. வெளில போய் போராடலாம்னா கொரோனாவா இருக்கு. அதால இப்பத்திக்கி விருத திரும்பி குடுத்து போராடறோம். கொஞ்சம் தயவு பண்ணுங்க’

‘சரி. ரொம்ப கேக்கறீங்க. இதுக்கு மேல கெஞ்ச வெக்கறது எங்களுக்கே என்னவோ போல இருக்கு. விருத யாருக்கு குடுத்தாங்களோ, அவரை விட்டு கொண்டு வந்து குடுக்கச் சொல்லுங்க. வாங்கி தொலைக்கறோம்’

‘என்னது? என்ன சொல்றீங்க? புரிஞ்சுதான் சொல்றீங்களா?’

‘ஆமாங்க. விருத வாங்கினவங்க தானே திருப்பிக் குடுக்கணும்?’

‘இப்ப புரியுது. நீங்க ஆர்.எஸ்.எஸ். சங்கி தானே? இப்ப சங்கிங்கள்ளாம் யுனெஸ்கோவுலயும் ஊடுறுவிட்டாங்களா? இதத்தான் தென்கிழக்காசிய சாக்ரடீஸ் அப்பவே சொன்னார்..’

‘என்ன சொன்னார்?’

‘கைபர், போலன் கணவாய் வழியா வந்துடுவாங்கன்னு’

‘இல்லியே. நாங்க டெல்டா ஏர்லைன்ஸ். நியூயார்க் டு டெல்லி’

‘அப்ப நீங்க வாங்கிக்கல்லேன்னா ‘விருதைத் திரும்பப் பெறாத யுனெஸ்கோவைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அரை மணி நேரம் இருக்க வேண்டி வரும். அதோட பின்விளைவுகள் கடுமையா இருக்கும். எச்சரிக்கறேன்’

‘ஐயா. மன்னிக்கணும். எங்களுக்கு வேற வேலை இருக்கு. போன வெக்கறீங்களா?’

 

‘இந்தக் கண்றாவிக்குத்தான் மாரிதாஸ், மதன்னு வீடியோ பார்க்காதீங்கன்னு தலையால அடிச்சுக்கறேன். தூக்கத்துல பெனாத்த வேண்டியது, எல்லார் தூக்கத்தையும் கெடுக்க வேண்டியது. என்ன விருதோ, கண்றாவியோ. காலைல ஒர்க் ஃப்ரம் ஹோம் இருக்கு நெனப்புல இருக்கா?’

ஈ.வெ.பெரியாழ்வார் வாழ்க

குலசேகர ஆழ்வார் அரங்கனைப் பற்றி ஒரு பாசுரம் பாடினார்.

“திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே”

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாளைக் கண்களால் ஸேவிக்கும் நாள் எந்த நாளோ ? என்று கேட்பது போல் பாடியுள்ளார் ஆழ்வார்.

இன்னொரு பாடல் உண்டு. அது திருமலைத் தெய்வத்தைப் பற்றியது :

“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே ”

‘திருமலையில் உன் கோவில் வாசலில் ஒரு படியாக இருந்து உன் பவள வாய் அழகைக் காண வேண்டும்’ என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

ஆழ்வார்களை அப்படியே கொஞ்ச நேரம் விட்டுவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.

என்னை வாழ வைத்தவர் பெரியார். ஆம். உண்மை தான். என் தற்போதைய வாழ்க்கைக்குக் காரணம் பெரியார்.

இங்கு நான் பெரியார் என்பது ஈரோடு வெங்கட்ட ராமசாமி நாயக்கர் என்னும் பெரியாரைத்தான் சொல்கிறேன். அவர் மட்டும் இல்லை எனில் நான் நல்ல நிலையில் இருந்திருக்க முடியாது. என் சுயமரியாதையை இழந்து நின்றிருப்பேன்.
ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. நான் மட்டும் அல்ல, இன்னும் பலர் இன்று நல்ல முறையில் வாழக் காரணம் பெரியார் தான். நாளை பலரும் நல்ல வாழ்க்கை அடையக் காரணமும் அவரே தான்.

நினைத்துப் பாருங்கள். 70 ஆண்டுகளுக்கு முன் இருந்த பிராமண சமூகம் எப்படி இருந்தது ? உட்பூசல்களும், வடிகட்டிய மூட நம்பிக்கைகளும், அரசு வேலை அல்லது அடுப்படி வேலை என்கிற வட்டத்துக்குள் மட்டுமே இருந்த சமூகமாக இருந்தது அது. கணவனை இழந்த அச்சமூகப் பெண்கள் இருந்த நிலை என்ன ? இன்று அந்த சமூகம் இருக்கும் நிலை என்ன ? பிராமணர்களை ஒன்றுபடுத்தியது பெரியார். உட்பூசல்களால் பிளவுபட்டிருந்த சமூகம் ஓரளவு ஒன்றானது.

தற்போது யானைக்கு எந்த ‘திருமண்’ போடுவது என்று எந்த வாசுதேவாச்சாரியாரும் கோர்ட்டுக்குப் போவதில்லை. இரண்டு காரணங்கள் : ஒன்று, யானைகள் இல்லை. இரண்டு, கோர்ட்டுக்குப் போக வேண்டியவர்கள் அமெரிக்கா போய்விட்டார்கள். இரண்டாவதற்கான காரணம் பெரியார்.

எண்ணிப் பார்க்க வேண்டும் பிராமணர்கள். இன்று பன்னாட்டு வங்கிகளிலும், ஆப்பிள், கூகிள், நாஸா முதலான நிறுவனங்களில் நல்ல நிலையில் இருக்கும் இவர்கள், பெரியார் இல்லாதிருந்தால் என்ன நிலையில் இருந்திருப்பார்கள் ? தமிழக அரசு நிறுவனம் அல்லது அலுவலகம் ஏதாவதில் எழுத்தர் பணி செய்துகொண்டிருப்பார்கள். அல்லது புரோகிதம் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள். இந்த உலகளாவிய பரந்த நிலை கிடைத்திருக்குமா ?

பெரியார் இருந்ததால் கல்வியில் அவர்கள் 100க்கு 110 மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அந்த உத்வேகம் யார் கொடுத்தது ? யாரால் அமைந்தது அந்த உந்து சக்தி ? பெரியாரை மறக்கலாமா ?

ஆங்கிலத்தில் ‘Complacency’ என்று சொல்வர்கள். ‘Comfort Zone’ என்னும் வளையத்திற்குள் இருந்துகொண்டு சுகமாக இருந்திருப்பார்கள் அல்லவா ? ஆனால் பிராமணர்களின் அந்த ‘Comfort Zone’ஐ உடைத்தெறிந்தவர் பெரியார்.

யாருமே வழிபடாத பிள்ளையாரை உடைத்து, அதனால் வீதிக்கு ஒரு பிள்ளையார் கோவில் ஏற்படுத்த உத்வேகம் அளித்தவரை மறக்கலாமா ? நன்றி மறக்கலாமா ? மறப்பீர்களா ? மறப்பீர்களா ? (‘அம்மா’ பணியில் வாசிக்கவும்)

பாம்பை அடிக்காமல் விட்டுவிட வேண்டும் என்று சொல்லி அதனால் பாம்புகளை வாழவைத்த அந்த மகானை மறக்கலாமா ? ஆனால், பாம்பை விட்டு உங்களை அடிக்கச் சொன்னதால் தானே நீங்கள் வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் சென்று வாழ்க்கையில் வேறூன்றினீர்கள் ? அந்த மகானின் உபகாரத்தை மறக்கலாமா ?

யார் கதையும் வேண்டாம். என் தந்தையார் தனது சாதியின் காரணமாக அலுவலகத்தில் மேலே செல்ல முடியாமல் ஒரே இடத்தில் சில பத்து ஆண்டுகள் ஸ்திரமாக இருந்ததால் தானே நானும் என் தம்பியும் ஒரே பள்ளீயில் ஸ்திரத்தன்மையுடன் படித்தோம். மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த பலருக்கு நல்ல கல்லூரிகள் கிடைக்கக் கண்டு,
அதனால் மிகுந்த பொறுமையைக் கையாளும் மனவுறுதியை அளித்த மகானை மறக்க முடியுமா ?

அவர் ஆசீர்வாதம் இல்லை என்றால் கடந்த 20 ஆண்டுகளில் ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா என்று இந்த கீழ் மத்தியதர வகுப்பைச் சார்ந்த நான் சென்று பணிபுரிந்திருக்க முடியுமா ?

ஒன்றும் வேண்டாம். வெறும் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே கற்றிருக்க வேண்டிய எனக்கு, இன்று ஹிந்தி, ஓரளவு மராட்டி, ஜப்பானிய மொழி என்று பரிச்சயம் ஏற்பட்டு இருக்க முடியுமா ? குமாஸ்தா வேலை செய்திருக்க வேண்டிய நான் இன்று கணிப்பொறியில் எழுதுகிறேன். காரணம் யார் ? அந்த மகான் அல்லவா ?

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றே கற்றும் பழகியும் வந்த நான், பள்ளியிறுதியாண்டு முடிந்தபின் ‘சாதி என்பது என்ன?’ என்பதை உணர்த்திய அந்தப் பகலவனை மறக்க முடியுமா ? கண் திறந்தவரை தூஷிக்கலாமா என்ன ?

பிட்ஸ்பெர்க் ஸ்ரீநிவாசர் கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் பெரியாரை நினைக்க வேண்டாமா ? டெக்ஸாசில் மீனாட்சியைத் தரிசிக்கும் போதெல்லாம் ராமசாமியாரை எண்ண வேண்டாமா ? அவர் இல்லை என்றால் அமெரிக்கர்கள் ஸ்ரீநிவாசரையும் மீனாட்சியையும் கண்டிருப்பார்களா ? அல்லது ஸ்ரீனிவாசப் பெருமாள் அமெரிக்கா பார்த்திருப்பாரா ?

இந்த ஏப்ரல் மாதம் டெக்ஸாஸ் ( டல்லாஸ் ) போயிருந்தபோது அவ்வூர்ப் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நடந்து கொண்டிருந்தது. நான்கு பேர் பஞ்சகச்சம் உடுத்தி ஆழ்வார் பாசுரம் ஸேவித்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் ஆழ்வார் பாசுரம் ஒலிக்கச்செய்வது சுலபமா ? சர்க்கரைப் பொங்கலுடன் புளியோதரையும் கிடைத்தது. அன்னமிட்டவரை நான் மறக்கலாமா ?

109-வது திவ்யதேசமாக அமெரிக்காவை ஆக்கியவரை மறக்கலாமா ?

வைக்கம் என்னும் ஊர் இருக்கிறது என்பதை உலகுக்குக் காட்டிய உத்தமர் அல்லவா அவர் !

இதெல்லாம் போகட்டும். ‘காங்கிரஸ் ஒழியவேண்டும்’ என்று தீர்க்க தரிசனத்துடன் ஆசீர்வாதம் செய்த மகான் அல்லவா அவர் ! இப்போது அது நிறைவேறியுள்ளதே. அவரைப் பாராட்ட மனம் இல்லையே உங்களுக்கு !

அவருக்கு இருந்த நகைச்சுவை உணர்வு யாருக்கு உண்டு ? கடவுள் இல்லை என்று சொன்னார். ஆனால் அதே சமயம் அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்றும் சொன்னார். சிரிக்காமல் சொன்னார். பூசாரிகளை ஏசினார். ஆனால் அனைவரும் பூசாரிகள் ஆக வேண்டும் என்றும் சொன்னார். இன்றும் அதே நிலை தான் அவரது வழி வந்தவர்களும் கையாள்கிறார்கள். ஒரே விஷயத்தில் இரண்டு நிலைகள் எடுப்பதில் குருவுக்கு சிஷ்யன் சளைத்தவன் இல்லை என்று உணர்த்துகிறார்கள். அந்தக் குருவை மறக்கலாமா ? மன்னிக்கவும். ‘குரு’ என்பது வடமொழி. ஆகவே ‘டீச்சர்’ என்று தமிழ்ப்
படுத்திப் படிக்கவும்.

‘பறைச்சி இரவிக்கை போடுவதால் தான் துணிப்பஞ்சம் வந்தது’ என்று அரிய உண்மையைக் கண்டுபிடித்தார். நோபல் பரிசுக்குரிய அந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்ட வேண்டாம், தூஷிக்காமல் இருக்கலாமே ஸார்,

ஆனால் ஒன்று. ‘தி.மு.க. வை ‘கண்ணீர்த்துளிகள்’, ‘கூத்தாடிகள் கழகம்’ என்று ஒளிவு மறைவில்லாமல் சொன்னார். அந்த நேர்மை எனக்குப் பிடிக்கும். இதையும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

திருக்குறள் பற்றி அவர் செய்யாத அர்ச்சனை இல்லை. அப்படித் தமிழ் வளர்த்தார்.

அது போகட்டும். கண்ணகியை ‘தே**யாள்’ என்று வாழ்த்தினார். என்னே உயர்ந்த மரபு !

எது எப்படியோ, எனக்கும் இன்னும் பலருக்கும் நல்ல வாழ்க்கை அமைய உதவினார். அவர் தமிழைத் திட்டியதால் எனக்கு ஆழமாகத் தமிழ் படிக்க ஆர்வம் பிறந்தது. இராமனையும் கம்பனையும் வசை பாடியதால் நான் அவர்களில் ஆழ்ந்தேன்.
ஹிந்தியை எதிர்த்ததால் அதைப் பேசக்கற்றுக் கொண்டேன். ‘பூணூலை அறுப்பேன்’ என்று சொன்னதால் அது பற்றியும் ஆன்மீகம் பற்றியும் மேலும் படிக்கத் துவங்கினேன்.

அவர் ஒழிக்க நினைத்த அனைத்தும் தழைத்தோங்கியது – காங்கிரஸ் தவிர.

இத்தனை நையாண்டி செய்தாலும் அவரிடம் எனக்குப் பிடித்தது சில உண்டு.

நேர்மை. மனதில் இருந்ததை மறைக்கமல் அப்படியே பேசும் பாங்கு. இறுதி வரை தனது நம்பிக்கையில் உறுதி.

அவர் கடவுள், வேதம், புராணம் குறித்துச் சொன்னது எதுவும் புதிதல்ல. அனைத்தும் ‘ஸார்வாகம்’ என்னும் பிரிவில் உள்ள இந்திய ஞான மரபே. ஆகவே ‘ஸார்வாகர்’ களின் ஒரு அவதார முனிவராகவே அவரை நான் பார்க்கிறேன்.

விபீஷணனைக் கண்காணிக்க ரங்கநாதனாக தெற்கு பார்த்துப் பள்ளிகொண்டுள்ளார் பெருமாள். ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப் பீரங்கி கொண்டு பிளக்க வேண்டும் என்று சொன்னவர் இன்று அதே கோவிலுக்கு முன்னர் பதிமூன்றாவது ஆழ்வாராக
நின்றுகொண்டிருக்கிறார். பூலோக வைகுண்டத்தில் பெருமாளை ஸேவித்தபடியே இருக்க எல்லாருக்கும் கொடுப்பினை இருக்காது. கோவிலுக்கு உள்ளே செல்ல அரசு காசு கேட்கிறது. செலவும் மிச்சம், புண்ணியமும் லாபம் என்று வாசலிலேயே நிற்கிறார்.

கட்டுரையின் துவக்கத்தில் படித்த குலசேகர ஆழ்வாரின் வேண்டுதல் என்ன ? கோவில் வாசலில் கல்லாய், படியாய் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார். அவருக்குக் கிடைக்கவில்லை; இவருக்குக் கிடைத்துள்ளது அந்த பாக்கியம்.

எனவே ஆழ்வாரான பெரியார் திருவடிகளில் தெண்டனிட்டு வணங்குகிறேன்.

பி.கு: பிராமணர்கள் என்ற பிரிவினர் இந்திய சமூகத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்தார்கள். இப்போது அனைவரும் வைசியரே. அனைவரும் ஏதாவது தொழில் மட்டுமே செய்கிறார்கள் – ஒன்று பொருளை விற்கிறார்கள் அல்லது அறிவை விற்கிறார்கள். இரண்டும் இல்லாதவர்கள் அரசியலில் சேர்கிறார்கள். எனவே இக்கட்டுரையில் ‘பிராமணர்கள்’ என்ற சொல்லை ‘மூதாதையர் பிராமணர்களாக இருந்தவர்கள்’ என்ற பொருளில் புரிந்துகொள்ளவும்.

குழந்தை மனசு

இடம் : ஒரு அரசுப் பள்ளி, மயிலாடுதுறை

நேரம்: காலை 9 மணி, ஞாயிற்றுக்கிழமை. ஒரு செப்டெம்பர் மாதம்.

மாணவர் கூட்டம் அலைமோதுகிறது. எல்லாம் ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை. பல பள்ளிகளிலிருந்து வந்திருந்தனர் என்பது அவர்கள் சீருடையில் தெரிந்தது.

மாணவர்கள் பெரும்பாலோர் பள்ளி எதிரில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குச் சென்று விட்டு வேகமாகப் பள்ளிக்குள் செல்கின்றனர்.

நெற்றியில் விபூதி, குங்குமம் இல்லாத மாணவர்கள் ரொம்பக் குறைவு. பெண்களும் அப்படியே.

ஓரிரு மாணவர்கள் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் ( ஒற்றை நாமம் ).

கையில் எல்லோரும் ஒரேமாதிரி புத்தகம் வைத்தபடி ஆழ்ந்து படித்துக்கொண்டிருகின்றனர்.

ஏதோ தேர்வு என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் எல்லா வயதினரும் ஒரே புத்தகத்தை வைத்துக்கொண்டிருந்தனர். கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

ஆர்வம் மேலிட ஒரு பையனிடம் விசாரித்தேன். தேர்வு நேரத்தில் குறுக்கீடு செய்ததால் முகத்தில் கோபம் தெரிய பதில் அளித்தான்.

“பாரத்தா தெரியல? இன்னிக்கி பரீட்சை ..”

“என்ன பரீட்சை தம்பி?”

மேலும் கீழும் பார்த்தான்., நெற்றியில் கனமான திருநீறு குங்குமம்.

“இதப் பாருங்க ..” புத்தகத்தின் அட்டையைக் காண்பித்தான்.

வெண் தாடியுடன் ஈ.வே.ரா. பெரியார் சிரித்துக்கொண்டிருந்தார்.

“இன்னிக்கி பெரியார் பற்றிய வினாடி வினா தேர்வு. அதுக்காக படிச்சிட்ரு க்கேன்.”

புத்தகத்தை உள்ளே பார்த்தேன்.”பெரியாரின் வாழ்க்கையில் நடநதவை” என்பது போல் தலைப்பு. எழுதியவர் கி.வீரமணி.

ஆவல் அதிகமாக சில கேள்விகளைப் பார்த்தேன். ஒன்று கண்ணில் பட்டது.

“பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் எதை முதலில் அடிக்க வேண்டும் என்று பெரியார் கூறியுள்ளார்?” என்ற கேள்வி. பிஞ்சு மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான கேள்வி. அந்தச் சிறுவனிடம் விடை தெரியுமா என்று கேட்டேன்.

“தெரியுங்க. பார்ப்பான் தான்” என்றான்.

“பார்ப்பான்னா என்னன்னு தெரியுமா தம்பி ?” என்றேன்.

“தெரியுங்க. பாம்பு வந்தவுடனே அதை அடிக்காம வேடிக்கை பார்ப்பவன்”, என்றான் வெகுளியாக. இந்தத் தேர்வு “பெரியார் கழகம்” என்னும் அமைப்பால் பெரியாரின் பிறந்தநாள் தொடர்பாக நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு உண்மைகள் எனக்கு விளங்கின.

1. பெரியார் பற்றிய தேர்வுக்கும் கடவுள் அருள் தேவைப்படுகிறது.

2. மாணவர்கள் களஙகமற்றவர்கள்.

முதல் பரிசு வாங்கும் மாணவன் நெற்றி நிறைய திருநீறு அணிந்து சென்று வாங்கினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தபடி நடந்தேன்.

சிலப்பதிகாரம் – ஒரு "பெரிய"வரின் கண்ணோட்டம் ..

எச்சரிக்கை :  தமிழர் அதிலும் தமிழ்ப் பெண்கள்  இதனைப் படிக்க வேண்டாம். உண்மையாகத் தமிழின் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் மதிப்புக் கொண்டவர்கள் இந்த பின்னூட்டத்தைப் படிக்க வேண்டாம்.

உண்மையைப் பேசுவதற்கு ஒரு தைரியம் வேண்டும். இல்லாத ஒன்றை இருப்பதாகப் பேசவும் ஒரு கற்பனைத் திறன் வேண்டும்.  பகுத்தறிவு பேசும் பெரியவர்கள் தங்கள் தலைவரும் தமிழர் தந்தை என்று விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு தலைவர், தமிழ் பற்றியும், தமிழர் பற்றியும், தமிழ் மொழி மீது பற்று கொண்டோர் பற்றியும் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை அப்பாவித் தமிழர்கள் மத்தியில் இருந்து மறைத்து விட்டமை திராவிட அரசியலின் ஒரு சாதனையே.

அந்த தலைவர் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தான்.  இதில் எனது பங்களிப்பு ஒன்றுமே இல்லை. பெரியார் கூறியுள்ளவை இவை அனைத்தும். ஆனால் இவை சாதாரணத் தமிழ் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது வடிகட்டின அயோக்கியத்தனம்.

எல்லாவற்றையும் விட கண்ணகியை தெய்வமாகப் போற்றுவது தமிழர் மரபு. கண்ணகியை கற்புக்கரசியாய் வழிபடுகிறோம். சிலப்பதிகாரத்தை தமிழின் ஆகச் சிறந்த காவியமாகக் கொண்டாடுகிறோம். தி.மு.க. அரசாங்கங்கமும் பூம்புகாரில் கண்ணகிக்கு நினைவாலயம் எழுப்பியது என்றும் நினைக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா அரசு கண்ணகி சிலையை மெரீனா கடற்கரையில் இருந்து நீக்கியது மாபெரும் தவறு என்று தமிழ் ஆர்வலர்களும், திராவிட அரசியல்வாதிகளும் அரற்றினார். உண்மை தான். நீக்கியது தவறு தான். ஆனால் பகுத்தறிவுப் பகலவன் என்றும் , தமிழர் தந்தை என்றும் நாளும் சூளுரைக்கப்படும் ஈ.வெ.ரா சிலப்பதிகாரத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதை அறிந்து கொண்டால் திராவிட அரசியல்வாதிகளின் இரட்டை நிலை  தெரிய வரும். அதிலும் தெய்வம் போல் தொழப்படும் கண்ணகியைப் போற்றும் ஒரு காவியத்தை  ஒரு ரொம்பவும் சராசரிப் பாமர வார்த்தைகளில் அவர் ஏசியுள்ளது என்னை மிகவும் பாதித்தது.

சிலப்பதிகாரம் ஒரு புளுகு — – விடுதலை (28.3.60)

“….அந்தக் கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்கு தெரியுமா ? … இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கி யம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம். புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது? ”

சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி — – விடுதலை (28.7.51)

“….இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப் பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய்கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப் படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்”.

இப்படிப் பேசியவரைத் தமிழர் தலைவர்  என்று கொண்டாடும் தமிழ்த் தலைவர்களை என்னவென்று நினைப்பது ?

இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வருத்தத்துடன் விடைபெறுகிறேன்.

பகுத்தறிவுப் பொன்மொழிகள்

தமிழர் தந்தை ஈ.வெ.ரா. திருக்குறளைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்த்து பகுத்தறிவைப் பரப்புவோம்.

பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் –  விடுதலை (01.06.1950) 

” வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன்.எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம்,‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட் பது..?” என்று பதில் கூறுவேன்.

அது கெடக்கு வேலையப்பாரு ..

சங்கத்தமிழ் தெரியுமா ? கேட்டார் நண்பர்.

எந்த சங்கம் , என்றேன் நான். விடாப்பிடியாக ‘வன்னியர் சங்கமா?’, கொசுறு கேட்டு வைத்தேன். விடுவானேன் ..

கடுப்பானார் நண்பர். பின்னே அவர் தமிழ் ஆசிரியர் அல்லவா ?

என்னப்பா, தமிழ் நாட்டுலே சங்கத் தமிழ் தெரியலே, நீயெல்லாம் ஒரு தமிழனா? சீண்டினார் அவர்

விடுவேனா நான் ? மறத் தமிழன் ஆயிற்றே..

சரி ஐயா, எந்த சங்கத்துலே தமிழ் வளர்க்கறாங்க ? விடாமல் கேட்டேன்.

“முதல், இடை, கடை என்று மூன்று சங்கம் இருந்தது தம்பி, முதல் சங்கத்தை சிவ பெருமானே தொடங்கி வைத்தார்.அதில் அகத்தியர் பங்கு பெற்றார். பிறகு இடைச் சங்கம் என்று ஏற்பட்டது, பிறகு கடைச்சங்கம்.இதெல்லாம் பழைய காலம். இப்போ சமீபத்துலே பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் நடத்தினார்”, மூச்சு விட்டுக் கொண்டார்.

அவருடன் பேசியதில் தெரிந்து கொண்டது :

தமிழை வளர்ப்பதற்காக இறைவனே தொடங்கி வைத்த சங்கம் மதுரையில் நடந்தது.பெரிய தமிழ்ப் புலவர்கள் பங்கேற்றனர். சங்கப் பலகையில் அமர்ந்துகொண்டு புலவர்கள் தமிழ் வளர்த்தனர். பிறகு பல பாண்டிய மன்னர்கள் மதுரையில் தமிழ் வளர்க அரும்பாடு பட்டனர்.புலவர்களை அழைத்து பல வாதங்கள் நடத்தி ஐயங்கள் தீர்த்து அதன் மூலம் தமிழ் வளர்த்தனர். அதன் தொடர்ச்சியாக பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவி தமிழ் வளர்த்தார்.

“அது சரி. இந்த மாதிரி தமிழ் வளர்த்து என்ன பயன் ?”,  என் பகுத்தறிவு அவ்வளவு தான்.என்ன செய்வது ?

என் கேள்வியை புறந்தள்ளிவிட்டு ஆசிரிய நண்பர் மேலும் தொடர்ந்தார்.

“முதல் சங்கம் அகத்தியர் தலைமை தாங்கினார் என்றும் கூறுவர். இரண்டாம் சங்கத்தில் தொல்காப்பியம் அரங்கேறியது. மூன்றாம் சங்கத்தில் நக்கீரர் தலைமை தாங்கினார். பத்துப்பாட்டு,எட்டுத் தொகை, அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், திருவாய்மொழி முதலியவை இந்த சங்க இலக்கியங்களில் அடங்கும்.இதில் முதல் சங்க இலக்கியங்கள் பல கிடைக்கவே இல்லை”, பெருமூச்சுடன் நிறுத்தினார்.

இந்த தமிழ் ஆசிரியர்கள் இப்படித்தான். இவர்கள் இப்படி இந்தக் காலத்திலும் சங்க காலம் பற்றியே பேசினால் தமிழன் முன்னேறுவது எப்படி ? விஞ்ஞான யுகத்தில் சங்கமாம் இலக்கியமாம். எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

“சரி தலைவா. இந்த சங்க இலக்கியம் பற்றி இப்போ என்ன ?”, கேட்டு வைத்தேன்.

மறுபடியும் நான் புறந்தள்ளப்பட்டேன். மேலும் தொடர்ந்தார்.

“இந்த சங்க இலக்கியம் எல்லாம் 6000  வருசம் பழமை கொண்டவை. இலங்கை ஆறுமுக நாவலர், உ.வே.சாமினாத ஐயர் முதலானவர்கள் தேடித் தேடி சேகரித்து இவை அனைத்தையும் நமக்கு அளித்துள்ளார்கள். சாமிநாத அய்யர் தான் கைப் பணம் போட்டு ஊர் ஊரா சுற்றி பல செல் அரித்துப்போன ஓலைச் சுவடிகள் எல்லாம் சேர்த்து புஸ்தகமா போட்டார்”.

“சரி சாமி. இந்த பழங்கதை இப்போ எதுக்கு? 21-ம் நூற்றாண்டுலே இந்த இலக்கியத்தாலே என்ன பயன் ?”, பொறுமை இழந்து கேட்டே விட்டேன்.

பொங்கி எழுந்தாரே பார்க்கலாம்…

“யோவ், நீ தமிழன் தானா ? உனக்குன்னு ஒரு வரலாறு இருக்கு தெரியுமா? அந்த வரலாற்றுலே இந்த புலவர்கள் எல்லாம் தான் முக்கிய பாத்திரங்கள். இவங்க எல்லாம் இல்லேன்னா நீ யாருன்னே இன்னிக்கி தெரியாது. ஆறுமுக நாவலர் யார் தெரியுமா ? இலங்கைக்காரர்.யாழ்ப்பாணம்.பெரிய தமிழ்ப் பண்டிதர்.வடலூர் ராமலிங்க அடிகளார் ‘திரு அருட்பா’ னு சைவ சமயத்தைத் தழுவி எழுதினார். அது சைவ சமயம் இல்லை, சிவன் வழிபாடு அப்படி இல்லைன்னு சொல்லி இந்த ஆறுமுக நாவலர் பிரிட்டிஷ் கோர்ட்லே வழக்கு போட்டார். அதோடு ‘திரு மறுட்பா’ னு இன்னொரு புத்தகம் எழுதினார். அப்பேர்ப்பட்டவங்க நம் முன்னோர் “, சற்று மூச்சு வாங்கிக் கொண்டார்.

கிடைத்த சந்தர்ப்பத்தை விடுவினா ?  தொடர்ந்தேன். “இலங்கைன்னு சொன்னீங்க. இலங்கையிலேயும் தமிழ்ச் சான்றோர்கள் இருந்தாங்களா?”

“அது சரி. அதுவே தெரியாதா?” என்றவர், “பகுத்தறிவு பேசறவங்க பல பேருக்கு இது தான் நிலைமை” என்றார்.

“பகுத்த்தறிவுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?”, சற்று கோபமாகவே கேட்டேன். என்ன இருந்தாலும் பகுத்தறிவாளர் என்றால் எனக்கு ஒரு பரிவு இருக்கத்தான் செய்தது.

“பகுத்தறிவுன்னு சொல்றவங்கள்ளாம் யாரும் இதைப் பத்தி எல்லாம் பேசறதில்லை. ஏதோ தமிழக் கலாச்சாரமே இங்கே பெரியார் அண்ணாதுரை காலத்துலேருந்து தொடங்கின மாதிரி  தானே பேசறாங்க. ஆன்மிகம் இல்லேன்னா இன்னிக்கி தமிழே இல்லை. ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழை வளர்க்கலேனா இன்னிக்கி தமிழ் எங்கே ? அவங்க பாடின பாசுரங்கள்ளேயும், பதிகங்கள்ளேயும் இல்லாத தமிழா ? அவங்களுக்கு ஒரு பெருமை உண்ட இங்கே ? ஆழ்வார்கள் பேர்லே ஒரு பல்கலைக் கழகம் உண்டா? எதுக்கேடுத்தாலும் அண்ணா பேர் தான். தெரியாம கேக்கறேன், தமிழ் வளர்க்க அவர் என்ன செய்தார்? ஒரு தலைவரா இருந்திருக்கலாம்.நல்லா மனிதரா இருந்திருக்கலாம்.ஆனா அவர் எழுதின தமிழ் இலக்கியம் என்ன? “, கண்கள் சிவக்க கேட்டார் ஆசிரியர்.

இருந்தாலும் ‘பகுத்தறிவுப் பாசறையில் ‘ வளர்ந்ததால் விட்டுக் கொடுக்க முடிய வில்லை.

“என்ன இருந்தாலும், ஆழ்வார், நாயன்மார் எல்லாம் கடவுள் பற்றியே பாடறாங்களே. அதப் பயன்படுத்தி ஒரு மதத்தைப் பரப்பறாங்களே. அதனாலே நமது மதச் சார்பின்மை வீணாகாதா?”, என்றேன் பெருமிதத்துடன்.

“நான் தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாதுங்கறேன். தமிழ் இலக்கணத்துலே முதல் விதி தெரியுமா?”, கேட்டார்.

நான் தமிழை மதிப்பெண் பெற மட்டுமே படித்தேன். அதனால் வழக்கம் போல் பதில் தெரியவில்லை.

“உடல் மீது உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”- அதாவது, உடம்பு ஒன்று இருந்தால் அதன் மீது உயிர் வந்து சேர வேண்டும். சேர்ந்தால் தான் அந்த உடம்பு உயிர் வாழும். அதே போலே, தமிழ் என்பது உடம்பு. ஆன்மிகம் என்பது உயிர். அந்த உயிர் உடம்பில் சேர வேண்டும். அப்போது தான் தமிழ் ஒரு உயிருள்ள மொழியாக இருக்கும். அதை விடுத்து பகுத்தறிவு பேசி, இந்து மத எதிர்ப்பு செய்கிறேன், மதச்சார்ப்பின்மை பரப்புகிறேன் என்று ஆன்மிகத்தை தமிழில் இருந்து பிரித்தால் தமிழ் ஒரு உயிருள்ள மொழியாக இருக்காது தம்பி. அது தான் வேண்டுமா ? வெறும் உடம்பு தான் வேண்டுமா ?

சைவம், வைணவம் எல்லாம் தமிழுக்கு அணி செய்கின்றன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழோடு இரண்டறக் கலந்தவர்கள்.அதே போலத் தான் தாயுமானவர், திருமூலர், பட்டினத்தார், கம்பர் எல்லாரும்.கம்ப ராமாயணத்துக்கு ஈடு உண்டா ? ஆனால் தமிழ் நாட்டுப் பாட நூல்களில் கம்ப ராமாயணம் எவ்வளவு உள்ளது ? ஒரு பாட்டு, அரைப் பாட்டு. அதுவும் கடவுள் சம்பந்தம் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள்.

உருது மொழி இலக்கியங்களிலோ அராபிய இலக்கியங்களிலோ இஸ்லாமிய நம்பிக்கைகள் இல்லாமால் தவிர்க்க முடியுமா ? நான் கேட்கிறேன், ராமன் பெருமை பேசாமல் கம்ப ராமாயணம் எப்படி இருக்க முடியும் ? ராமனைப் பற்றி இருப்பதால் அது இந்து மத இலக்கியம் என்றால், எந்த நூலையுமே பாடப் புத்தகத்துலே வைக்க முடியாது. இந்த மாதிரி தான் வில்லி பாரதம், பெரிய புராணம் எல்லாம். சிவ பெருமானே சம்பந்தப்பட்ட சங்கத்தமிழில் இறைத் தொடர்பு இல்லாமல் செய்வது எங்ஙனம் ?

இப்போ பாரு தம்பி, ராவண காவியம் னு ஒண்ணு இருக்கு. அதைப் பாடப் புத்தகத்துலே வச்சிருக்காங்க.எதுக்கு ? ராவணன் உத்தமன் என்பதாலா ? இல்லை மாற்றான் மனைவியை விழைவதால் மாணவர்களும் ஒரு உதாரணமாக வைத்துக் கொள்ளட்டும் என்றா ? இல்லை ராவண காவியம் எழுதிய புலவர்.குழந்தை தமிழ் நாட்டில் தி.மு.க.அனுதாபி என்பதாலா? என்ன நடக்கிறது இந்த தமிழ் நாட்டில் ?”.

பதில் சொல்லத் தெரியாமல் வாயடைத்து  நின்றிருந்தேன். அவரே தொடர்ந்தார்.

“இது ஒன்றும் வேண்டாம். எல்லாம் போகட்டும். வள்ளுவர் சிலை இப்போ கன்யாகுமரியில் இருக்கிறதே அதுவும் கடலைப் பார்த்துக்கொண்டு ? முதலில் சிலை எதற்கு அவருக்கு , அதுவும் அவ்வளவு செலவில் அதுவும் கன்னியாகுமரியில் ? வள்ளுவருக்கும் கன்னியாகுமரிக்கும் என்ன தொடர்பு ? அவர் திருவல்லிக்கேணியில் அல்லவா இருந்தார்? அங்கே அவருக்கு ஒரு கோவிலே இருக்கிறதே ! அவர் சொன்னது எல்லாம் விட்டுவிட்டோம் ஆனால் சிலை ஒரு கேடு. அவர் கள் உண்ணாமை பற்றி சொல்லி இருக்கிறார். ஆனால் அரசாங்கமே கள்ளுக்கடை நடத்துகிறது. அதனால்தானோ என்னவோ வள்ளுவர் நாட்டைப் பார்க்காமல் கடலைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார் …”. இப்போது ரொம்பவே கோபமாக இருந்தார் ஆசிரியர்.

“தமிழை வளர்க்கிறோம் என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கினார்கள். என்ன வளர்ந்தது? எவ்வளவு ஆராய்ச்சி நூல்கள் வெளியிட்டுள்ளார்கள் ?  உலகப் பல்கலைக்கழகங்கள் வரிசையில் எந்த இடம் ? ஏன் இந்த வீழ்ச்சி ? தமிழர்கள் தான் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் மொழி என்று மார் தட்டிக் கொள்கிறோமே, தமிழ்ப் பல்கலைக்கழகம் இப்போது உலக அளவில் எந்த நிலையில் உள்ளது ? தமிழ் அறிஞர்கள் எல்லாரும் ஆட்சி செய்தார்களே அப்படியும் இந்த சீர்கேடு ..ஏன் என்று எபோதாவது கேட்டோமா ?

இந்த பல்கலைக்கழங்கள் நம் வரிப்பணத்தைத் தான் கொண்டு செயல் படுகின்றன. குடிமக்கள் கேட்டோமா ? ஆனால் விஸ்வரூபம் என்று ஒரு திரைப்படம் வெளியீடு தொடர்பாக இந்த நாடே கொதித்ததே , சமூக வலைத் தளங்கள் பற்றி எறிந்தனவே இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் ?

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த காலம் போய் இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கும் இந்த தமிழ்ச் சமுதாயம் எப்படி உருப்படப்போகிறது ?”   ரொம்பவே கொதித்துப் போயிருந்தார் ஆசிரியர்.

அவர் கேட்ட கேள்விகளுக்கும் பதில் தெரியவில்லை. மறுத்துப் பேசவும் புலமை இல்லை. அது கெடக்கு வேலையப்பாரு என்று கைத் தொலைபேசியில் “கோபமான பறவைகள்” விளையாடிக்கொண்டிருந்தேன் நான். வேறு என்ன செய்வது ? என் பகுத்தறிவு அவ்வளவே .