மாஹிஷ்மதி நாட்டின் வேத பிராம்மணன் நாகபட்டனின் அக, புறப் பயணங்களை விவரிக்கிறது ‘சார்த்தா’ என்னும் பைரப்பா எழுதிய இந்த நாவல் (மூலம் : கன்னடம்).
பல நாடுகளில் வாணிபம் செய்யும் வணிகர்கள் சில நூறு பேர் ஒன்றாகப் பயணம் செய்யும் ஊர்வலம் போன்ற அமைப்பு கொண்ட வணிகக்குழுவின் ரகசியங்களை அறிந்து வா என்று அமருகன் என்னும் அரசன் நாகபட்டனை வணிகர்களுடன் அனுப்புகிறான். அப்பயண அனுபவங்களே இந்த நாவல்.
இது வெறும் பயணக்குறிப்பல்ல. வணிகர்களுடனான பயணத்தில் துவங்கும் பட்டனின் பயணம் அவனை 8ம் நூற்றாண்டுப் பாரதகண்டத்தின் பல தேசங்களுக்கும் அழைத்துச் செல்கிறது. ஆனால், வெறும் புறவயமான அனுபவங்களாக இல்லாமல் அப்பயணங்களால் ஏற்படும் அகவெளிப் பார்வைகளும், அக்காலத்தின் தத்துவப் பரிவர்த்தனைகளும் கொஞ்சம் வரலாறு போன்ற பார்வைகளுமாக விரிகிறது நாவல்.
சனாதன தர்மத்தின் பிரிவுகளான அத்வைதம், சாக்தம், தாந்திரிகம் என்று உலா வரும் கதையில் பவுத்த தத்துவ மரபுகள், பவுத்த தாந்திரீகத்தின் சில கூறுகள் என்று பலவும் உலாவருகின்றன.
ஆதி சங்கர் மண்டல மிஸ்ரரின் விவாதங்களும் வந்து சேர்ந்து நாவலுக்கு ஒரு முழுமை கிடைக்கிறது.
தத்துவ விவாதங்களைக் கதைகளில் புகுத்துவது கடினம். முதலில் அதற்கு தத்துவப் புரிதல் இருக்க வேண்டும். தத்துவம், கதையின் ஓட்டத்தைத் தடை செய்யக் கூடாது; கதைக்கு வலு சேர்க்க வேண்டும். பைரப்பா இவை அத்தனையும் செய்திருக்கிறார்.
நெடிய, பல படிமங்கள் கொண்ட மிக முக்கியமான நாவல் ‘சார்த்தா’. விஜயபாரதம் பதிப்பகம்.