RSS

Tag Archives: பொது

அப்பா ஷியா

Image

ஓட்டம்

பார்த்துக்கொண்டே இருக்கும் போது பலதும் நடந்துவிடுகின்றன. பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் நமக்குத் தெரிவதில்லை. ஒருவேளை பார்வை மட்டும் தானோ , உணரவே இல்லையோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. சிலது உயர்ந்துவிடுகிறது. பலதும் தாழ்ந்து விடுகின்றன.

இல்லை. எதையும் நினைத்துக்கொள்ள வேண்டாம். நான் வேறு எதையும் சொல்லவில்லை.

வயதைத் தான் சொல்கிறேன். குறிப்பாகக் குழந்தைகளின் வயதை.

இப்போதுதான் L.K.G.  கொண்டு விட்டது போல இருக்கிறது.ஆனால் இன்று ‘Great Depression போது Indian Economy  எப்படிப்பா இருந்தது ?’ என்று கேட்கிறான் பெரியவன். 10-ம் வகுப்பு.

அவன் எப்போது வளர்ந்தான் ? இவனுக்கு 7 வயது ஆன போது நான் எங்கே இருந்தேன் ? ‘மூன்றாம் பிறை’ ஸ்ரீதேவி மாதிரி கேட்பது என்னவோ போல்தான் இருக்கிறது.

நன்றாக நினைவு இருக்கிறது. ஹரிக்கு ஒன்றரை வயது இருக்கும். என்னைப் பார்த்து ‘அப்பா ஷியா.. அப்[பா ஷியா..’ என்று சொல்வான். அவன் அருகில் அமர வேண்டும் என்று அர்த்தம். அதன் பின்னர் சில நாட்கள் கழித்து ‘அப்பாபீஸ்.. அப்பாபீஸ்’ என்று என் ஸ்கூட்டரைப் பார்த்துச் சொல்வான். என் ஸ்கூட்டரின் பெயர் ‘ஆபீஸ்’ என்று நினைத்துக்கொண்டிருப்பான் போல.

அதன் பிறகு அவன் என்னவெல்லாம் பேசினான் என்று எனக்குத் தெரியவில்லை. நினைவில்லை. ஊரில் இருந்தால் தானே தெரியும்.

எதை நோக்கியோ ஓடிக்கொண்டிருந்தேன். கடல் தாண்டி இருந்த முதலாளிகளின் தேவைகளைக் குறிப்பால் உணர்ந்து, ஆனால் உடனேயே இருந்த குழந்தையின் சொற்களை மனதில் நிறுத்திக்கொள்ளாத ஒரு ஓட்டம் அது. நினைத்துப்பார்த்தால் ஓடியது மட்டுமே நினைவில் உள்ளது.

இப்போது சற்று நிதானித்து வாழ்க்கையைப் பார்த்தால் இன்னும் பலர் இப்படி ஓடுவது தெரிகிறது. ஓடாதீர்கள் என்று சொல்ல மனம் விரும்புகிறது. ‘அது சரி.. நீ ஓடிட்டே, இப்போ ஊருக்கு உபதேசமா ?’ என்று அஸரீரி கேட்கிறது. மனப் பிரமையாகவும் இருக்கலாம்.

ஒடுவதைப் பற்றி நினைக்கும் போது டால்ஸ்டாயின் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

ரஷ்யாவில் விவசாயி ஒருவன் அரசனிடம் சென்று தனக்கு நிறைய நிலம் வேண்டும் என்று கேட்கிறான். அரசனும் எவ்வளவு வேண்டும் என்று கேட்க விவசாயி ‘நிறைய’ என்று சொல்கிறான். ‘நாளை காலை நீ எவ்வளவு தூரம் நடக்கிறாயோ அவ்வளவும் உன்னுடையது’ என்று அரசன் உறுதியளிக்கிறான்.

மறு நாள் சூரியன் உதித்தவுடன் விவசாயி ஓடத் துவங்குகுறான். அரசனுக்கு வியப்பு. இருந்தாலும் பேசாமால் இருக்கிறான். சூரிய அஸ்தமனம் வரை ஓடுகிறான் விவசாயி. சூரியன் மறைந்த பின் நின்று அரசனைத் திரும்பிப் பார்த்து,’இவ்வளவு வேண்டும்’ என்று சொல்கிறான் .ஆனால் நாள் முழுவதும் ஓடியதால் அதே இடத்தில் விழுந்து இறந்துபோகிறான் விவசாயி.

அப்போது அரசன்,’விவசாயியே, இப்போது உனக்கு எவ்வளவு இடம் வேண்டும்?’  என்று கேட்பதாகக் கதை முடிகிறது.

என்னைப் பல முறை தத்துவம் குறித்து சிந்திக்க வைத்த கதை இது.

தத்துவம் எல்லாம் சரி தான். ஆனால் இந்த ‘வேதாந்தம்’ எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வருமா என்ற கேள்வியும் அவ்வப்போது எழுகிறது. மேலும், ஓடாவிட்டல் எப்படி வாழ்வது என்ற எண்னமும் வருகிறது.

பல சமயங்களில் வாழ்க்கை ஒரு ‘ட்ரெட்மில்’  (Treadmill)  போன்றதாக ஒரு எண்ணம் வருகிறது. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அதே இடத்தில் தான் இருப்போம். ஓடியே ஆக வேண்டும். நிறுத்தினால் கீழே விழுந்து விடுவோம். இது தான் வாழ்க்கையா என்றெல்லாம் தோன்றும்.

என் முந்தைய மேலாளர் சொல்வார் ,’Even if you win a rat race, you are still a rat’. (  நீயே எலிப் பந்தையத்தில்ஜெயித்தாலும், நீ ஒரு எலி தான்).

பல நேரங்களில் வேலைக்கு ரயிலில் செல்லும் போதும் வரும் போதும் தோன்றும் – கொட்டடியில் இருந்து கிளம்பி மேய்ந்துவிட்டு மீண்டும் மாலையில் கொட்டடிக்கே திரும்பும் மாடுகளுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு என்று. ஆனால் அதனை மறக்கடிப்பது போல் அலுவலகத்திலிருந்து ஏதாவது கைத் தொலைபேசி அழைப்பு வந்துவிடும். அப்போதைக்கு மறந்துவிடுவதுண்டு. மீண்டும் இன்னொரு நாள் இன்னொரு ரயில் பயணத்தில் தொடர்ந்துகொள்ளலாம்.

அலுவலகத்தில் ‘Appraisal’ அப்ரைசல் நேரம் எல்லாம் இல்லை. அதனால் ஏற்பட்ட ஞான மார்க்கம் என்று எண்ணாதீர்கள். ஆனால் அப்ரைசல் நேரத்தில் தான் பல தத்துவங்கள் நினைவுக்கு வரும். ‘எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது’ , ‘இந்த அப்ரைசல்’ எல்லாம் போன ஜென்மத்து வாசனை, ‘ப்ராரப்த கர்மா’ போன்ற மேதாவித் தத்துவங்கள் நினைவுக்கு வந்து தொலைக்கும்.

ஹரி விஷயத்திற்கு வருகிறேன்.

ஹரி ரொம்ப நாள் குழம்பியபடியே இருந்தான். நான் பல நாட்கள் காணாமல் போய் விடுவேன். ஒரு நாள் திடுதிப்பென்று ‘மூணு கண்ணன்’ மாதிரி இரவு இரண்டு மணிக்கு ‘லுஃப்தான்ஸா’, அல்லது ‘ஜப்பான் ஏர்லைன்ஸ்’ உபயத்தில் வீடு வந்து சேர்வேன். காலை எழுந்து முழித்து முழித்துப் பார்ப்பான். வெகு நேரம் கழித்து மெதுவாக வந்து தொட்டுப் பார்த்து உறுது செய்து கொண்டபின் என்னிடம் வருவான் மூன்று வயது ஹரி. ஓரளவு பழகியவுடன் மறுபடியும் காணாமல் போவது என் விதி.

ஹரியை மேலும் குழப்பியது ‘பணம்’ என்னும் ஒரு வஸ்து. சாப்பாடு வேண்டும் என்றால் கடையில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது தானே, அதற்குப் பணம் ஏன் தர வேண்டும்? என்று புரியாமலே ரொம்ப நாள் திரிந்தான் ஹரி. ‘யாருக்குப் பசிக்கறதோ அவாளுக்கு பிரைம் மினிஸ்டர் சாதம் போட வேண்டியது தானே?’ என்று சில வருடங்கள் வரை கேட்டுக்கொண்டிருந்தான்.

அப்படிப்பட்டவன் ,’During the Great depression in the US, how was India’s economy doing?’,  என்று கேட்டது என்னை வரலாற்றில் பல நூற்றாண்டுகள் கழித்துத் திடீரென்று 21-ம் நூற்றாண்டில் கொண்டு நிறுத்தியது போல இருந்தது.

இத்தனை வருஷங்கள் நான் எங்கே போயிருந்தேன் ?

மீண்டும் ஒரு முறை ‘அப்பா ஷியா..’ என்று காதில் விழாதா என்று நினைப்பதுண்டு.

‘தாத்தா ஷியா..’ என்றுதான் கேட்க முடியும் போல் தெரிகிறது. ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

அப்போதாவது ஓடாமல் இருக்க வேண்டும்.

 
Leave a comment

Posted by on May 7, 2014 in Writers

 

Tags: , ,

 
%d bloggers like this: