‘சார் சாமி தரிசனம் ஆளுக்கு பத்து ரூபாய். சாமியை கிட்டே காமிப்போம். தர்ம தரிசனம் இருக்கு. நாப்பது அடிக்கு முன்னே நிக்க வப்போம். அங்கேருந்து சாமி பாத்துக்குங்க, எப்படி வசதி ?”
இது திருப்பதி திருமலையில் நடந்த சம்பாஷணை அல்ல. மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவிலில் நடந்தது.
ஆக, காசு கொடுத்தால் இறைவனின் கிட்டே அனுமதிப்பார்கள் – சுமார் ஐந்து அடி தூரத்தில், தொட்டுவிடும் தூரத்தில் இறைவன். ஆனால் பணம் இல்லை என்றால் விலக்கி வைத்துவிடுவார்கள். தூரத்தில் இருந்தே இறை அருள் பெற வேண்டியது தான்.
விசேஷம் என்னவேன்றால் விமானத்தில் வேறு இரு பெருமாள்கள் உள்ளனர். சனிக்கிழமைகளில் அவரைத் தரிசிக்க தனியாக இருபது ரூபாய் தர வேண்டும்.
அரசின் கொள்ளையில் இது விசேஷக் கொள்ளை.
இதற்கும் திரைப்படத்திற்கும் ஒரு ஒற்றுமையும் ஒரு வேற்றுமையும் உள்ளன. இரண்டிலும் உள்ளே இருப்பதைப் பார்க்கப் பணம் வசூல் செய்கிறார்கள். இது ஒற்றுமை. வேற்றுமை பின்னால் வருவது. திரைப்படம் பார்க்க அதிகப் பணம் கொடுத்தால் தூர அமர்ந்து பார்க்கலாம். கோவிலில் அதிகப் பணம் கொடுத்தால் பெருமாளைக் கிட்டே இருந்து பார்க்கலாம்.
ஒரு கோவில் பாழ்பட்டுக் கிடந்தால் அரசின் அற நிலையத் துறை அருகில் எட்டிக் கூடப் பார்க்காது. ஆனால், அதனை நல்லவர்கள் நான்கு பேர் சேர்ந்து பாடுபட்டுப் புனரமைத்தால் அதன் பின் சிறிது கூட்டம் வந்தால் உடனே ‘ஆமை புகுந்த வீடு’ போல் அரசு நுழைந்துவிடும். “கழுகுக்கு மூக்கில் வேர்ப்பது போல” என்று கூறுவது கூட சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்படித்தான் தேரழுந்தூர் என்னும் ஊரில் கோவிலின் புஷ்கரணி (குளம்) பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானமாகவே சில பத்து ஆண்டுகள் இருந்தது. பின்னர் நல்லவர்கள் சிலர் சேர்ந்து புஷ்கரணியைச் சீரமைத்தனர். தண்ணீர் நிரம்பியது. பாசியையும் அழுக்குகளையும் நீக்க மீன் வாங்கி விட்டனர். நீரும் சுத்தமானது. அக்கம்பக்கத்து வீடுகளில் நிலத்தடி நீர் அளவு உயர்ந்தது.
இது வரை சரி. பிறகு தான் வந்தது வினை.
அரசு நுழைந்தது. மீன் ஏலம் விட வேண்டும் என்றும், கோவில் தங்களது ‘அற நிலையத் துறை’ கட்டுப்பாட்டில் இருப்பதால் மீன் ஏலம் நடத்தவும் அதன் வருவாயும் அரசுக்குச் சொந்தமானது என்றும் கூறினர்.
எப்படி இருக்கிறது கதை ? “காத்திருந்தவன் மனைவியை நேற்று வந்தவன் அடைந்த கதை” உங்களுக்கு நினைவு வந்தால் நான் பொறுப்பல்ல.
சரி.தேரழுந்தூருக்கும் மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கும் என்ன தொடர்பு ?
இரண்டும் ஆழ்வார் பாடிய திவ்யதேசங்கள். அது தவிர இன்னொறு ஒற்றுமை – அரசு.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பெரியாழ்வார் மதுரை வந்தார். அப்போது கூடல் அழகர் பெருமாள் உற்சவம் நடந்துகொண்டிருந்தது. பெருமாள் கம்பீரமாக வாகனத்தில் எழுந்தருளிக்கொண்டிருந்தார்.
நாமாக இருந்தால் ‘எனக்கு சென்னைக்கு டிக்கெட் கிடைக்க வேண்டும், கோச்சடையான் வெளிவர வேண்டும், நயந்தாரா நன்றாக இருக்க வேண்டும்’ என்று நாட்டுக்குத் தேவையானதை வேண்டிக்கொண்டிருப்போம்.
ஆனால் அவர் பெரிய ஆழ்வார் அல்லவா ?
எனவே “நன்றாக இருக்க வேண்டும், பல நூற ஆண்டுகள் வாழ வேண்டும்” என்றெல்லாம் வேண்டிக்கொண்டார்.
இதில் என்ன பெரிய விஷயம் என்கிறீர்களா ?
அவர் வேண்டிக்கொண்டது தனக்காக அல்ல; தான் நன்றாக இருக்க வேண்டும் என்று அல்ல.
“இவ்வளவு அழகாக எழுந்தருள்கிறீர்களே பெருமாளே, யார் கண்ணும் படாமல் நீங்களும், உங்கள் சங்கு, சக்கரம் முதலிய ஆயுதங்களும் உங்கள் திருமார்பில் வாழும் இலக்குமியும் நன்றாகப் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். அதனை ஒரு பாடலின் மூலம் பதிவும் செய்தார். “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணி வண்ணா, உன் சேவடி செவ்வி திருக்காப்பு..” என்று தொடங்கும் பாசுரத்தில் பதிவு செய்தார். இன்றும் வைணவத் திருத்தலங்களில் முக்கியமாகப் பாடப்படும் பாடல் இது.
இப்போதைய ‘கவிஞர்களாக’ இருந்திருந்தால் தங்களுக்கு ஒரு அரசவைக் கவிஞர் பதிவியோ வேறு ஒன்றும் இல்லை என்றால் ஒரு வாரியத் தலைவர் பதவியாவது கேட்டிருப்பார்.
என்ன செய்வது, பெரியாழ்வாரது பகுத்தறிவு அவ்வளவு தான்.
பிழைக்கத் தெரியாத மனுஷன் அவர்.