ஆண்டவரே ஸ்தோத்ரம் ..

Image

தொடங்கி விட்டார்கள். விடாது கருப்பு போல்  விடாது சுவிசேஷம். சென்னையில் தான் சுவிசேஷம், நற்செய்திக் கூட்டம் என்று அலட்டல் தாங்க முடியவில்லை என்றால் இப்போது சிங்கையிலும் வந்து விட்டார்கள்.  இதில் தமிழ்க் கூட்டம் கொஞ்சம் அதிகப்படி. படத்தைப் பாருங்கள். ஒரு மருத்துவமனை முன்னர் வியாதிகளை சொஸ்தம் ஆக்குகிறார்கள். பேசாமல் மருத்துவமனயை மாற்றி மைதானமாக ஆக்கலாம். சுவிசேஷக் கூட்டங்களுக்கு இடமாவது கிடைக்கும். ( கே.கே. மருத்துவமனை – உஷார். உங்கள் பிழைப்பில் மண் தயார் ).

சில மாதங்களுக்கு முன்பு சில மத மாற்றுக்காரர்கள் வீடு தேடி வந்திருந்தார்கள். சீன ஆணும், பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்ணும் வந்திருந்து கிறித்தவப் பெருமை பேசினார்கள். அந்த சந்திப்பைப் பற்றி இந்த இரண்டு  தளங்களில் அளித்திருந்தேன்.( முதல் சந்திப்பு, இரண்டாம் சந்திப்பு ).

அந்த சந்திப்புக்களில் பல நீண்ட வாக்குவாதங்கள் பிறகு அவர்கள் தங்களது தலைமைப் பாதிரியாரை அழைத்து வருவதாகக் கூறிச் சென்றார்கள். காத்திருப்பு தொடர்கிறது.

இன்று இந்த சுவிசேஷ அழைப்பைப் பார்த்தேன்.  சில எண்ணங்கள்.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடுதல் என்பது இது தான் போல். சொந்த ஊரில் ஆள் பிடித்தது போதாது என்று நாடு கடந்து வந்துள்ளார்கள். முன்பெல்லாம் வெள்ளைக்காரர்கள் செய்த செயலை நம்மவரே செய்வது நல்ல வேடிக்கை.

எனக்கு சின்ன வயதில் பேசும்போது கொஞ்சம் திக்கும். இப்போதும் அப்படித்தான். அதனை சரி செய்கிறேன் பேர்விழி என்று அப்பாவின் அலுவலக நண்பர் ஒருவர் என்னை ஒரு எட்டு வயதாக இருக்கும் போது இம்மாதிரி ஒரு கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். கடைசி வரை என்ன பேசினார்கள் என்று புரியவே இல்லை. தேவன் இறங்குகிறார், பாருங்கள் என்று மேடையில் இருந்த அனைவரும் அழுதார்கள். நானும் பயத்தில் அழுதேன். பின்னர் மேடையில் சிலர் நடந்து வந்து தங்களுக்குக் குணமாகி விட்டது, பிறவி நொண்டிகள் கால் நடக்க வந்து விட்டது என்று சொன்னார்கள். பின்னர் எல்லாரும் ஒரே குரலில் “ஆண்டவரே ஸ்தோத்திரம் ” என்று பல முறை அழுதபடியே பாடினார்கள். ஒரு மண்ணும் புரியாமல் நான் பேந்தப் பேந்த முழித்துக்கொண்டிருந்தேன்.

சொந்தக் கதை இருக்கட்டும்.

ஆங்கிலம் பேசும் அந்நிய நாட்டவர் மத மாற்று வேலையில் ஈடுபட்டால் ஓரளவு வாதம் செய்ய முடிகிறது. ஆனால் நம்மவரோ வாதம் என்று தொடங்கினாலே நான் ஏதோ பாபம் செய்து நரகத்தில் சேரப்போவது பற்றியே பேசுகிறார்கள். பல நேரங்களில் பைபிளில் உள்ளதே தெரிவதில்லை. அவர்களின் பாதிரியார்கள் சொன்னதையே ஒப்பிக்கிறார்கள். வேதத்தில் உள்ளது என்று அரற்றுகிறார்கள். சிலே நிமிஷங்களுக்குப் பிறகு அவர்களைப் பார்த்தாலே பாவமாக இருக்கிறது. வெகு சில அடிப்படைக் கேள்விகளே அவர்களுக்குப் போதுமானது. நம்மவரிடம் ஒரே ஒற்றுமை என்னவென்றால் அவர் சமீபத்தில் மாறியிருப்பார்.

ஒருமுறை ஒரு மத மாற்றுக்காரர் ஒரு கேள்விக்குமே பதில் சொல்ல வில்லை. கடைசியில்,” நீங்க பிராமின்ஸ் எப்படியும் மாற மாட்டீங்க. ஆனா கேள்வி மட்டும் கேட்டுக்கிட்டே இருப்பீங்க”, என்று கூறினார். அது சரியும் கூட. ஏனென்றால் இந்து உபநிஷதம் வெறும் கேள்வி பதில் தானே? நாத்திகனும் இந்துவாக இருக்க முடியுமே ! இந்துவாக இருக்க ஒரு கடவுளையும் நம்ப வேண்டாமே என்றால் அவர் புரிந்து கொள்ள வில்லை.

இதில் அந்தணர்கள் மட்டுமே கேள்வி கேட்கிறார்கள் என்று இல்லை. சில சைவ இந்துக்கள் மிகத் தீவிரமானவர்கள். இவர்களிடமும் இந்த மத மாற்றுக்காரர்கள் செல்வதில்லை. இவர்கள் நோக்கம் தலித் மக்கள். நல்ல அறுவடை அங்கு நடக்கும் என்று நம்புகிறார்கள்.

ஒரே இடத்தில் இருந்து தோன்றினாலும் இஸ்லாம் இம்மாதிரி மத மாற்றம் செய்வதில்லை. முகலாய காலங்களில் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது இந்த அளவு அவர்கள் கீழிறங்கி கடவுளை விற்பனை செய்வதில்லை.

திரு சுவிசேஷக்காரரே, உங்களுக்கு சில கேள்விகள் …

 1. இறைவனால் ( உங்களைப் பொறுத்தவரை ஏசுவின் தந்தையால் ) படைக்கப்பட்ட எல்லா உயரினங்களும் ஒன்று தானே? அதில் சாத்தானும் அடக்கம் தானே? சாத்தானைப் படைத்ததும் ஏசுவின் தந்தை தானே? ஆக கடவுளே தன்னை எதிர்க்க சாத்தானைப் படைத்தாரா? சாத்தான் ஒரு வீழ்ந்த தேவதை என்று கூறும் நீங்கள் சாத்தானுக்கு ஏன் அஞ்ச வேண்டும் ?
 2. தனது பக்தர்களை, தானே படைத்த சாத்தான் கவர்ந்து செல்வதைக் கடவுளால் ஏன் தடுக்க முடியாது? ஆக கடவுளை விட சாத்தான் உயர்ந்தவனா?
 3. சாத்தான் உட்பட எல்லாரும் கடவுளால் படைக்கப்பட்டால், அனைவருமே நல்லவராக இருக்க வேண்டுமே? அது இல்லையே ஏன் ?
 4. இறைவனே சாத்தானையும் படைத்ததால் சாத்தானும் நல்லவனாகவே இருந்திருக்க வேண்டியவன் தானே? அவன் கடவுளை வீழத்த வேண்டும் என்று ஆசைப்பட வேண்டிய காரணம் என்ன? அப்படித் தூண்டுவது வேறு ஒரு கடவுளா ?
 5. இறைவன் படைத்த ஆப்பிளை ஆதாம் உண்டது என்ன தவறு? அப்பிள் இறைவனின் பிரசாதம் தானே? இறைவனே ஆப்பிளையும் படைத்து அதை உண்ணக்கூடாது என்று ஆதாமிடம் சொல்வது பகுத்தறிவா?
 6. கத்தோலிக்க இயேசுவின் தந்தையும், ப்ரோடேஸ்தாண்ட் இயேசுவின் தந்தையும் ஒருவரா?  ஜெஹோவாவின் சாட்சிகள் வழிபடும் இயேசுவின் தந்தை வேறா? ஒருவர் என்றால் வேறுபாடு ஏன் ?
 7. பாவத்தின் சம்பளம் மரணம் என்றால் போப் ஆண்டவர் முதலியவர்கள் இறப்பது என்ன பாவத்தால்? அவர்கள் பாவம் செய்தார்கள் என்றால் அவர்களை ஏன் நாம் பின் பற்ற வேண்டும்?
 8. தமிழ் நாட்டில் மதம் மாறிய கிறித்தவர்கள் புனித மேரிக்குத் தேர்த் திருவிழாவெல்லாம் செய்கிறார்கள். தேர்த் திருவிழா பற்றி உங்கள் நூலில் எந்த இடத்தில் வருகிறது. அலசிப் பார்த்து விட்டேன். கிடைக்கவில்லை. எனவே, நூலில் உள்ளபடியாவது இருங்களேன். ஏன் மற்ற மதங்களைப் பார்த்து “காப்பி” அடிக்கிறீர்கள்?
 9. நீதி நாள் என்று நீங்கள் கூறும் நாள் பல முறை வந்து சென்று விட்டதே..
 10. உங்களால் மதம் மாற்றப்படும் தலித் கிறித்துவர்கள் ஏன் சென்னை முதலிய நகரங்களின் பேராயர்களாக ஆவதில்லை ?
 11. “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்று இறைவனைத் தொழுவதற்கே அவன் அருள் வேண்டும் என்று நம்பும் தமிழர்கள் மத்தியில் கூவி அழைத்துக் கடவுள் வியாபாரம் செய்வதும் மலிவு விலையில் பண்டங்கள் விற்கும் ஒரு வியாபாரி கூவி அழைப்பதும்  என்ன விதத்தில் வேறு? விற்கும் பண்டங்கள் தான் மாறுபடுகிறதே ஒழிய விஷயம் ஒன்று தானே?
 12.  நான் மதம் மாற வேண்டுமென்றால் அதனை நீங்கள் ஏன் என்னிடம் வந்து வலியுறுத்த வேண்டும்? கடவுளே என் மனதில் தோன்றச் செய்திருக்கலாமே ! கடவுளுக்கு என் மனதை மாற்ற ஒரு தூதுவன் தேவையா?
 13. என்னை மதம் மாற்றினால் தான் கடவுள் அருள் கிடைக்கும் என்றால், உங்கள கடவுள் கருணை இல்லாதவரா?
 14. மதம் மாறினால் இந்த சலுகை தருகிறோம் என்று சொல்லி வியாபாரம் செய்யும் நீங்கள் உங்கள் கடவுளைக் சிறுமைப்படுத்துகிறோம் என்று உணரவில்லையா?
 15. “தென்னாடுடைய  சிவனே போற்றி, எநநாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்பது தமிழ் மறை. தமிழர்கள் எல்லாத் தெய்வங்களையும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் அவை எல்லாவற்றுக்கும்மேல் சிவ பெருமானை எல்லா நாட்டவர்க்கும் தலைவனே என்று வைத்துப் போற்றுகின்றனர். இந்த உலகளாவிய ஒருங்கிணைக்கும் பார்வை உங்களுக்கு  இல்லையே ஏன்? நூலின் பிழையா அல்லது மார்கத்தின் புரிதலின்மையா?
 16. “சாணிலும் உளன் ஓர் தன்மைஅணுவினைச்
  சத கூறு இட்டகோணினும் உளன்
  மாமேருக் குன்றினும் உளன் இந் நின்ற
  தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன்”   என்பார் கம்பர். அணுவைப் பிளப்பது பற்றியும், அதன் நூற்றில் ஒரு பங்கான ஒரு பகுதியை “கோண்” என்றும் கூறுகிறார். அதனிலும் உளன் அரி. மேலும் நீ சொன்ன சொல்லிலும் உளன் இறைவன் என்று கம்பர் கூறுகிறார். இறைவனை சொல் வடிவமாகவும் காணும் பழக்கம் தமிழர் மதமான வைணவம். இந்த நிலையில் உள்ளவர்களிடம் நீங்கள் ஒரு பொட்டுக்கடலை வியாபாரம் செய்வது போல் கடவுளை விற்கிறீர்களே .. கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? தமிழ் இந்துக்கள் என்ன மாங்காய் மடையர்களா ?
 17. கம்பர் போகட்டும். இன்னொரு ஆழ்வார் கூறுகிறார்:” உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் வுருவுகள்உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் வருவுகள் ” – கடவுள் உண்டு என்றால் அவனது உருவமே இவ்வுலகமும் அதன் ஜீவ ராசிகளும். கடவுள் இல்லை என்றாலும் கூட இறைவனது உருவமின்மையே இவ்வுருவங்கள். ஆக கடவுள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ( நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை ), அனைத்துமே அவனது வடிவங்களே என்று கூறுகிறார். இவ்வளவு பொதுவான தன்மையும் சகிப்புத்த் தன்மையும் கொண்ட தமிழ் இந்துக்களை மதம் மாற்றும் வேலை செய்யும் நீங்கள் அவர்களது அறிவுப் பசிக்கு என்ன தரப் போகிறீர்கள்? கேள்விகள் கேட்பது இந்து மதக் கோட்பாடு. சைவமும் வைணவமும் கேள்விகளால் நிரம்பியவை.
 18.  “வசுதைவ குடும்பகம்” – உலகம் வாசுதேவனின் ஒரே குடும்பம் என்று கருதுவது எங்கள் வழி. இதில் இந்தக் கடவுளை கும்பிடாவிட்டால் உனக்கு நரகம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படிப்பட்ட மக்களிடம் நீங்கள் எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?
 19. புருஷ சூக்தம் என்று வேதத்தின் ஒரு பகுதி வருகிறது.” மனித சமூகத்திற்கு நன்மை பயக்கட்டும்; செடி கொடிகள் மேலோங்கி வளரட்டும்; இரு கால் பிராணிகளிடம் மங்களம் உண்டாகட்டும்; நான்கு கால் பிராணிகளிடம் மங்களம் உண்டாகட்டும்” என்று வேண்டிக் கொள்கிறோம் நாங்கள். எனக்கு வேண்டும் என்று வேண்டுவதில்லை.

நிஜமாகவே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நீங்கள் மத மாற்றம் செய்ய வேண்டியது அந்தணர்களை, சைவ மடங்களில் ஊற்றம் கொண்ட பண்டிதர்களை, உங்களிடம் வாதம் புரிய ஆயுதங்கள் மற்றும் ஆற்றல் கொண்ட படித்தவர்களை.

இவர்களை விடுத்து நீங்கள் தலித் மக்களையும், மீனவ உழைப்பாளர்களையும், கல்வி கற்க வழியில்லாத பாமரர்களையும் இன்னமும் பின் தொடர்ந்தால், உங்கள் மார்க்கத்தின் பலத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று நான் நம்ப வேண்டியதுதான்.

ஆண்டவரே ஸ்தோத்ரம்.

பி.கு: இப்பதிவின் நோக்கம் ஒரு மார்க்கத்தை இழிவு படுத்துவது அல்ல. உங்களின் இந்த மத மாற்றுச் செயல்களால் சமூக நல் இணக்கம் கெடுகிறது. பல இடங்களில் தேவை இல்லாத சச்சரவுகள் தோன்றுகின்றன. பொருளாதார சீரழிவு, இயற்கை சீற்றம் முதலிய தொல்லைகலால் துன்பப்படும் சாதாரண மக்கள் சமூக சீர் கேடும் ஏற்பட்டால் இன்னமும் பாதிக்கப் படுவர். அரசாங்கங்களும் அதிக நேரத்தை இவற்றில் செலவழிக்க வேண்டி இருக்கும். இவற்றைத் தவிர்க்கலாம்.

%d bloggers like this: