சென்னை வாசம். மாதம் 3.
அமேசான் ‘வாங்கினாலே ஆச்சு’ என்கிறது. ஃப்ளிப்கார்ட் ‘இந்தட்சணம் வாங்கறியோ இல்லியோ’ என்று மிரட்டுகிறது. ஏதோ கையில் உள்ள ஃபோன் அரத்தப்பழசு போலவும், இப்போதே மாற்றாவிட்டால் முடி முழுகிவிடும் என்று புரிந்துகொள்ளுமாறு சொல்லிக்கொண்டே இருக்கின்றன இரு தளங்களும்.
இன்னொருபுறம் கிரெடிட் கார்டு கம்பெனிகள் இவ்வளவுதான் என்று இல்லாமல் ஃபோன் செய்துகொண்டே இருக்கிறார்கள். நம்பர் எப்படிக் கிடைக்கிறது என்றால் ஏதோ வி.ஐ.பி. டேட்டாபேஸ்ல் வருகிறது என்கிறார்கள். அந்தப் பெயரில் ‘வேலை இல்லாப் பட்டதாரி’ என்று பரிகாசம் பண்ணுகிறார்களா என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் தெரியாத எண் வந்தால் உடனே ‘ வீடு லோன் கட்டாததால் ஏலத்தில் வருகிறது. நீங்க லோன் தறீங்களா?’ என்று கேட்டுவிடுகிறேன். ‘டொக்’ என்னும் சப்தம் மூலம் இன்பத் தேன் வந்து பாய்கிறது. Do Not Call லிஸ்டில் பதிந்துவிட்டேன். பார்க்கலாம்.
இப்போதெல்லாம் ஒன்வேயில் தவறான திசையில் வண்டி ஓட்டி வருபவர்களைப் பார்த்தால் கோபம் வருவதில்லை. அவர்களுக்கு வழி விட்டுவிடுகிறேன். நாய் வால். அவ்வளவுதான்.
டூ-வீலர் ஓட்டும் பெண்களைக் கண்டால் பத்தடி இடம் விட்டே செல்கிறேன். திடீரென்று எந்தப் பக்கம் திரும்புவார்களோ. நமக்கேன் வம்பு என்பதால்.
சாலையில் டூ-வீலர் ஓட்டுபவர்கள் வீடுகளில் அதீத சொல்-வன்முறை / செயல்-வன்முறைகளால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது. வீட்டில் வெளிப்படுத்த இயலாத எதிப்புணர்வைச் சாலைகளில் காட்டுகிறார்களோ? சாலையைத் தொட்டவுடன் ஏன் அவ்வள்வு வெறி? எதனால் இந்த ‘அடங்க மறு’ எண்ணம்? மஞ்சள் எரிந்து சிவப்பு விழுவதற்குள் சாலையைக் கடந்துவிட அப்படி என்ன அவசரம்? சிவப்பு அணைவதற்கான எண்ணிக்கைக் குறைவு அறிவிப்பு நடக்கும் பட்சத்தில் 5-4-3-2-1 என்று வருவதற்குள் ஏன் குறைப்பிரசவ அவசரம்? அதென்ன ஹாரன் அடிப்பது? முன்னே நிற்பவன் கண் அவிந்தனனா? அவனுக்கு ஹாரன் அடித்து உணர்த்துகிறீர்களா? என்ன மன நிலை சார் இந்தக் கண்றாவி?
அலுவலகத்தில் மதிய உணவுக்குப் பின் சற்று கண்ணை அசத்தும் வேளையில் ஹிந்து பேப்பரின் நடுப்பக்கத்தைப் படிக்க முயல்கிறேன். அனேகமாக எடிட்டோரியல் முடியும் முன் பழைய விஜயகாந்த் போல அட்ரினலின் ஏறி, கண்கள் சிவந்து, உடம்பெல்லாம் கோபம் கொப்புளிக்க, தூக்கம் கலைந்து விறுவிறுப்பாக வேலை இடத்திற்குச் செல்கிறேன். ஹிந்து பேப்பரால் இவ்வளவு நன்மை பயக்கும் என்று தெரிந்திருக்கவில்லை. அதெப்படி அத்தனை தேசத் துரோகிகளும் ஒரே இடத்தில் சேர்ந்துள்ளார்களோ. வாழ்க ஹிந்து.
மந்தைவெளி ஒரு விந்தைவெளி. சாலைகள் சந்திக்கும் இடங்களைக் குறிக்க குப்பை டிரம்கள், வெளியே குப்பைகளுடன். நல்ல அடையாளம். பிரதமரின் ஸ்வச்ச பாரத்தாவது ஒன்றாவது. அவர் கத்திக்கொண்டே இருக்கட்டும், நாம் எச்ச பாரத் உருவாக்குவோம் என்று செயல்படுகின்றனர் மந்தைவெளிவாசிகள். (Exceptions உள்ள சில தெருக்கள் உள்ளன.) இப்பகுதி பாரதீய ஜனதா தொண்டர்கள், பொறுப்பாளர்கள் மாநகராட்சிக்குச் சொல்ல வேண்டிய கடமையில் உள்ளனர். ( நீ என்ன கிழிச்ச? என்று கேட்பவர்களுக்கு: நான் இரண்டு முறை போன்செய்து புகார் செய்தேன். ஒரு முறை நடவடிக்கை எடுத்தனர்)
மயிலாப்பூரில், கேசவப் பெருமாள் கோவில் பகுதியில் கார் ஓட்டுபவர்களுக்கு மாக்சேசே விருது கொடுக்கலாம். எப்படித்தான் ஓட்டுகிறார்களோ.
Like this:
Like Loading...