திருமழிசையாழ்வார் தென்கலை சம்பிரதாயத்தை வலியுறுத்துகிறார் என்று சொல்கிறேன். கொஞ்சம் கொளுத்திப் போடலாம் என்று எண்ணம். எதிர் வினைகள் எப்படி வருகின்றன என்று பார்க்கலாம் என்று தோன்றியது.
நான்முகன் திருவந்தாதி என்னும் பாடல் தொகுப்பை எழுதினார் திருமழிசையாழ்வார். அதில் ஒரு அந்தாதிப் பாடல் :
“வித்தும் இடவேண்டும் கொல்லோ விடை அடர்த்த
பத்தி உழவன் பழம் புனத்து? மொய்த்து எழுந்த
கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து”
இறைவன் பக்தி உழவன். அவனது நிலத்தில் நாம் ஒரு விதையையும் இட வேண்டாம். அவனே நம்மைப் பார்த்துக் கொள்வான். இவ்வாறு இப்பாசுரத்திற்குப் பொருள் சொல்லப்படுகிறது. வடிவேலு பாஷையில் ஆணியே பிடுங்க வேண்டாம் என்கிறார்கள்.
ஜீவாத்மாக்களான நாம் இறைவனை அடைய எந்த முயற்சியையும் செய்ய வேண்டியதில்லை. அவனே நம்மை அழைத்துக்கொள்வான். அது அவனது கடமை என்பதாகப் பொருள் படுகிறது.
இதனை மார்ஜால நியாயம் என்று சொல்கிறார்கள் – அதாவது பூனை நியாயம். பூனைக்குட்டி எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. அதன் தாயே அதனை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வாயினால் கவ்விச் செல்லும். தென்கலை சம்பிரதாயம் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்டவர்கள். எந்தவிதமான அனுஷ்டானங்களும் தேவை இல்லை. இறைவனிடம் சரணாகதி செய்தால் போதும். அவன் பார்த்துக் கொள்வான் என்பது தென்கலையாரரின் மார்ஜால நியாயம்.
வடகலையார் மர்க்கட நியாயம் என்னும் நியதியின் அடிப்படையில் இருப்பவர்கள் – அதாவது குரங்கின் நியாயம். குரங்குக் குட்டி தன் தாயைப் பற்றிக்கொள்ள வேண்டும். தாய் குட்டியைத் தூக்காது. அதுபோல ஜீவாத்மாக்காளன நாம் இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். இறைவனின் கருணைக்காகப் பல நியம நிஷ்டைகள் செய்ய வேண்டும். அனுஷ்டானங்கள் தேவை என்பதாக வடகலையார் நெறி உள்ளது.
திருமழிசை ஆழ்வார் சொல்வது கொஞ்சம் தென்கலையார் பக்கம் இருப்பது போல் தோன்றவில்லை ? என்ன நினைக்கிறீர்கள் ?
குரங்கோ பூனையோ, இரண்டும் இன்று சாஃப்ட்வேர் எழுதிக் கொண்டிருக்கின்றன என்பதே நிதர்ஸனம்
என் வேலை முடிந்தது. ஸ்டார்ட் மீஸிக்.
பி.கு.: திருமழிசை ஆழ்வார் 5-ம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவர். தென்கலை வடகலை பேதங்கள் இராமானுசருக்குப் பின் 13-ம் நூற்றாண்டில் தோன்றியவை. இந்த இரு பிரிவுகளின் முன்னோடிகளாக முறையே மணவாள மாமுனிகளும் வேதாந்த தேசிகரும் இருந்தனர் என்பது வரலாறு.