‘வங்கக் கடல் கடைந்த’ பாசுரத்தில், இறுதியாகத் தான் யாரென்று உணர்த்துகிறாள் ஆண்டாள். பின்னாட்களில் அறிவிலிகள் தோன்றக்கூடும் என்பதால் தனது குலம், தனது தந்தை, அவர் வாழ்ந்த ஊர் என்று பலதையும் சொல்லி முடிக்கிறாள் #ஆண்டாள்.
எப்படிச் சொல்கிறாள் : ‘அணி புதுவைத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை’ என்று தன்னை வெளிப்படுத்துகிறாள். அந்தணர்களுக்குத் தாமரை மாலை அணியவென்று ஒரு விதி இருக்கிறபடியால் அவ்வாறு மாலை அணிந்த பட்டராகிய வில்லிபுத்தூர் விட்டுசித்தன் வழி வந்த கோதையாகைய நான்’ என்பதாகப் பொருள்.
பெரியாழ்வார் தனது ஆச்சார்யனும் கூட என்பதாலும் ‘பட்டர் பிரான் கோதை’ என்று அவரையும் தன் பெயருக்கு முன் சேர்த்துக் கொண்டுள்ளாள் என்று காலட்சேபக்காரர்கள் சொல்வதுண்டு. ஏனெனில், மற்றைய ஆழ்வார்கள் தங்களைப் பற்றிச் சொல்லும் போது, ‘குருகூர்ச் சடகோபன் சொன்ன’ என்றும், ‘தொண்டரடிப்பொடி சொன்ன சொல்’ என்றும், ‘கலியன் சொன்ன சொல்’ என்றும், ‘வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்’ என்றே அமைந்துவருகின்றன. ஆனால் ஆண்டாள் மட்டுமே தனது தந்தையாரின் பெயரையும் சேர்த்துத் தன்னைப் பற்றித் தெரிவிக்கிறாள். ஆண்டாளைப் போலவே தனது ஆச்சார்யனைச் சேர்த்துச் சொன்ன மற்றுமொரு ஆழ்வார் மதுரகவிகள். ‘தென்குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்’ என்பது அவரது ‘கண்ணினும் சிறுத்தாம்பு’ பாசுரத்தில் வருவது.
தான் இயற்றிய 30 பாசுரங்களையும் (சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே) பாடுபவர்கள் சிவந்த கண்களை உடைய திருமாலின் அருளினால், எல்லாப் பிறவிகளிலும் எல்லாச் செல்வங்களையும் பெற்று இன்புற்று வாழ்வர் என்று ஆசீர்வதித்துத் தன் திருப்பாவையை நிறைவு செய்கிறாள்.
அதென்ன சிவந்த கண்கள்? திருப்பாவையில் பல இடங்களில் சிவந்த கண்கள் வருகின்றன. ‘கார்மேனிச் செங்கண்’, ‘பங்கயக் கண்ணன்’, ‘செங்கண் சிறுச் சிறிதே’ என்று கண்ணனின் சிவந்த கண்கள் சுட்டப்படுகின்றன. ‘கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட அப்பெரியவாய கண்கள்’ என்று திருப்பாணாழ்வார் தனது ‘அமலனாதிபிரான்’ பாசுரத்தில் தெரிவிக்கிறார். ஆகவே ஆண்டாள் ‘செங்கண்’ உடையவன் என்று அரங்கனைக் குறிப்பிட்டது சரியே.
கோதை வில்லிபுத்தூரில் தான் வசித்தாள், அவள் பெரியாழ்வாரின் மகள்தான் என்று வேறு யாராகிலும் சொல்லியுள்ளனரா என்று பார்க்கையில் :
வேதாந்த தேசிகன் (கி.பி.1268 – 1369)
வேயர்புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
தூழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும்
நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்குகருள் செய்நீயே
மணவாளமாமுனிகள் (கி.பி.1370) பாடியுள்ளார்:
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்
குண்டோமனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டுஇன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்
பி.கு.: கடந்த 30 நாட்களில் திருப்பாவை விஷயமாக அடியேன் படித்தது, அடியேனின் பெரியப்பா தேரழுந்தூர் ஶ்ரீ.உ.வே.ராமபத்திராச்சாரியாரின் உபன்யாசங்களில் கலந்துகொண்டு எழுதிவைத்துக் கொண்ட சில செய்திகள், சில காலட்சேபங்களில் கலந்துகொண்டதனால் அறிந்துகொண்டவை, முக்கூர் ஶ்ரீமதழகியசிங்கரின் உபன்யாசங்களில் கேட்டது என்று, அடியேனின் அறிவிற்கு எட்டியவரை எழுதியுள்ளேன். பிழைபொறுத்து ஆற்றுப்படுத்துவீர். பிழை என்னுடையது, பெருமை ஆண்டாளுடையது.