முப்பத்து மூவர்

‘முப்பத்து மூவர்’ பாசுரத்தில் மறுபடியும் துயில் எழுப்பும் முயற்சியே தெரிவது பொதுப்பார்வை. இருப்பினும் கண்ணனைத் துயிலெழுப்ப இன்னமும் முயலவில்லை, பிராட்டியையே எழுப்புகிறாள்.

வைஷ்ணவ முறையான ‘இன்னமுதத் திருமகள் என்று இவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே’ என்று குருபரம்பரை ஆச்சார்யர்கள், நம்மாழ்வார், திருமகள் என்று இவ்வரிசையில் வேண்டி, இவர்கள் வழியாகப் பெருமாளை அடைவது என்பது காட்டப்படுகிறது.

‘அம்பரமே’ பாசுரத்தில் உள்ள ‘அ’கரம், ‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தில் உள்ள ‘உ’கரம், இன்றைய ‘முப்பத்து மூவர்’ பாசுரத்தில் உள்ள ‘ம’ கரம் இவை மூன்றும் ‘அ + உ + ம் = ஓம் ‘ என்று ஓங்காரத்தை உணர்த்திடுவதாகப் பார்த்து மகிழ்வது வைஷ்ணவ காலட்சேப மரபு.

‘உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை’ என்னுமிடத்தில் ‘உன் மணாளனுக்குரிய சேவைகள் செய்து ( விசிறியும், கண்ணாடியும்), அவனது ஸ்வரூப சௌந்தர்யத்தை அவனுக்கு உணர்த்தி, மனங்குளிரச் செய்து, அதனால் எங்களுக்கு மோக்ஷம் தரச் செய்ய வேண்டும் என்று ஆச்சார்ய முகமாக சரணாகதி செய்துகொள்வது என்கிற சித்தாந்தம் பேசப்படுகிறது.

‘இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்’ என்னுமிடத்தில், மோக்ஷம் பின்னர் வேண்டாம், உடனே, இப்போதே வேண்டும். அதற்காகப் பெருமாளிடத்தில் பரிந்துரை செய்க என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் அவசியம் செய்துகொள்ள வேண்டிய ‘ஸமாச்ரயணம்’, ‘பார-நியாசம்’ முதலியவை உணர்த்தப்படுகின்றன என்பது கற்றறிந்த பெரியோர் பார்வை.

‘முப்பத்து மூவர் அமரர்’ என்று தேவர்கள் உணர்த்தப்படுவது ஏனெனில், அவர்கள் பிறவாப் பேறு பெற்றவர்கள்,
அவர்களுக்கே நீ அருள் மிக செய்தாய். ஆனால் நாங்களோ மானிடர்கள், உன் அடியார்கள். தேவர்கள் போன்ற சக்திகள் இல்லை. உன் சரண் தவிர எங்களுக்குக் கதி இல்லை என்பதாகப் பூரண சரணாகதித் தத்துவம் பேசப்படும் பாடல் இது.

#ஆண்டாள் #திருப்பாவை

குத்து விளக்கெரிய

‘குத்துவிளக்கெரிய’ பாசுரத்தில் பறை வேண்டிப் பாடும் பெண்களிடம் சென்று சேர விடாமல் கண்ணனை இறுகத் தழுவிக்கொண்டிருக்கும் நப்பின்னையிடம் ‘அவனை விட்டுவிடு, எங்களுக்கும் கிருஷ்ணானுபவம் வேண்டும்’ என்று அப்பெண்கள் கெஞ்சுகிறார்கள் என்பது பொதுப்பார்வை.

ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெருமாள் காட்சிக்கு, அணுகுவதற்கு எளியவன். மதுரைக் கூடல் அழகர் பெருமாள் சன்னிதியில் வீற்றிருக்கும் சுந்தர ராஜப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் ‘வா, வந்து மடியில் அமர்ந்துகொள்’ என்று அணுகுதற்கும் அருள் வழங்குதற்கும் எளியனாய்க் காட்சியளிக்கிறான். அடியார்கள் எளிதாகச் சென்று அருள் பெற வழிசெய்பவனாய் அமர்ந்திருக்கிறான். ஆனால் அவன் அப்படி இருந்தும் அவனை எளிதில் அணுக விடாமல் அவனுக்கும் நமக்கும் இடையில் யாராவது இருப்பின் அவரிடம் நாம் வேண்டுவது என்ன? ‘நீங்கள் அனுபவம் பெற்றுவிட்டீர்கள். நாங்களும் பெற வேண்டும். எனவே கண்ணனை விடுவித்து அனுப்புங்கள்’ என்பதாக இருக்கலாம்.

சென்ற பாசுரங்களில் ‘நென்னலே வாய் நேர்ந்தான்’ என்று ‘நேற்றே எங்களுக்குப் பறை தருவதாகச் சொல்லியிருந்தான். அதற்காக நாங்கள் வந்துள்ளோம். நீங்கள் மட்டுமே அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு எங்களுக்கு மறுக்காதீர்கள். உங்கள் பணிவிடைகளால் கண்ணனைக் கட்டிப் போடாதீர்கள். நாங்களும் பறை பெற வேண்டும்’ என்னும் பொருள் ‘குத்து விளக்கெரிய’ பாடலின் மூலம் காணும் போது கிடைக்கிறது.

இன்னொரு பார்வையும் உண்டு.

திருக்கோஷ்டியூரில் தனக்கு அளிக்கப்பட்ட உய்யும் வழியை அனைவரும் உய்ய வேண்டி, தானே அனைவருக்கும் உகந்தளித்த எம்பெருமானார் நினைவும் இப்பாசுரத்தில் வரலாம். இறை நிலையைச் சில அமைப்புகள் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டிராமல், அனைவர்க்குமானதாக ஆக்கிய யதிராஜரின் அணுகுமுறை இப்பாடலில் மறைபொருளாகத் தெரிகிறது.

நப்பின்னை உறங்கும் பஞ்சசயனம் என்பது அழகு, குளிர்ச்சி, மென்மை, பரிமளம், வெண்மை என்கிற ஐங்குணகளை உடையது என்பது ஒரு பொருள்.

பி.கு: இப்பாசுரத்தினால்,  கோவில்களில் பெருமாளை நம்மிடமிருந்து பிரிக்கும் அறம் நிலையாத்துறை நினைவிற்கு வந்தால் அடியேன் காரணமில்லை.

உந்து மதகளிற்றன்

‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தில் பொழுது விடிந்ததற்கான மேலும் பல அறிகுறிகள் சொல்லப்படுகின்றன.

‘கோழி அழைத்தன காண்’ என்று அழைக்கும் பெண் கூறுகிறாள். உரையாசிரியர்கள் இந்தப் பிரயோகத்தை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். ‘கோழி’ என்பது காலையில் கூவும் சேவல் இல்லையாம். இரவில் கூவும் சாமக்கோழியாம். எனவே பொழுது விடியவில்லை என்று உள்ளிருப்பவள் கூறினாளாம்.

பொழுது உண்மையிலேயே விடிந்துவிட்டது என்பதை உணர்த்த வேறு ஏதாகிலும் சாட்சிகளைக் காட்டுமாறு உள்ளிருப்பவள் கேட்டாளாம். அதற்காக ‘மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்’ என்று பதில் அளித்தார்கள் போலும் என்பது உரையாசிரியர்கள் பார்வை.

‘அக்குயிலினங்கள் மாதவிப் பந்தல் மேல் இருந்து கூவின’ என்று கூற வேண்டிய தேவை என்ன? ‘குயிலினங்கள் கூவின’ என்றால் போதாதா? என்றால், இரவு நேரத்தில் குயில்கள் மாதவிப் பந்தல் மேல் உறங்குமாம். எனவே பொழுது விடிந்தவுடன் அவை சிலிர்த்தெழுந்து அப்பந்தல் மேலிருந்தே கூவின என்பதால், ஒருவேளை சாமக்கோழி அழைத்திருந்தாலும், குயில்கள் பொழுது புலர்ந்தமையை மாதவிப் பந்தல் மேலிருந்து உணர்த்திவிட்டன என்பது பெரியோர் பார்வை.

இப்பாடல் தொடர்பான சுவையான செய்தி ஒன்றுண்டு.

திருவரங்கத்தில் எம்பெருமானார் தினமும் காலையில் மாதுகரம் ( பிக்‌ஷை) பெறுவதற்குச் செல்லும் போது, ஒரு நாள் பெரிய நம்பிகளின் இல்லத்தின் முன் நின்று பிக்‌ஷை வேண்ட, நம்பிகளின் பெண் அத்துழாய் கதவைத் திறந்தவுடன் அவளைக் கண்ட மாத்திரத்தில் எம்பெருமானர் மூர்ச்சை அடைந்து விட்டார். பயந்து போன அத்துழாய், தன் தந்தையிடம் கூற, அவர் பதற்றமில்லாமல் ‘உந்து மதகளிற்றன்’ என்றார்.

குழப்பத்தில் ஆழ்ந்த அத்துழாயிடம்,’ எம்பெருமானார் எப்போதும் போல் இன்றும் திருப்பாவை சேவித்தவாறே பிக்‌ஷைக்கு எழுந்தருளியிருப்பார். நம் இல்லத்திற்கு வரும் போது ‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தில் இருந்திருப்பார். நீ உன் கை வளைகள் ஒலிக்கக் கதவைத் திறந்தவுடன் ‘செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்பட் வந்து திறவாய்’ என்கிற பாசுர வரியின்படி, உன்னையே ஆண்டாளாய்க் கண்டிருப்பார். உடனே மூர்ச்சை அடைந்திருப்பார்’, என்று சமாதானம் சொன்னதாகக் குருபரம்பரையில் வருகிறது.

ஶ்ரீமத் இராமானுசருக்கு ‘திருப்பாவை ஜீயர்’ என்கிற பெயர் இருப்பது நாம் அறிந்ததே.

#திருப்பாவை #ஆண்டாள்

அம்பரமே தண்ணீரே

‘அம்பரமே தண்ணீரே’ பாசுரத்தில் பலர் எழுப்பப்படுகிறார்கள். நந்தகோபாலன், யசோதை, பலராமன், கண்ணன் என்கிற வரிசைப்படி அனைவரும் எழுப்பப்படுகிறார்கள் என்பது பொதுப்பார்வை.

‘அம்பரமே, தண்ணிரே, சோறே’ என்கிற வரிசை நமக்கு ‘உண்ணும் சோறு பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’ என்கிற வழக்கை நினைவுபடுத்தலாம். அதனினும் இதில் வேறொரு சுவை உண்டு.

அம்பரம் (ஆடை), நீர், சோறு என்று இவற்றை எல்லாம் அளிப்பவனே என்பதுடன் நிற்காமல் இவற்றை எல்லாம் எந்த விதப் பலனையும் எதிர்பார்க்காமல் அறமாகச் செய்யும் நந்தகோபாலனே என்பதாய் ‘அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் நந்த கோபாலா’ என்று அழைக்கிறாள் #ஆண்டாள்.

இப்பாடலில் ‘செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா’  என்று சிறப்பு அடைமொழியுடன் பலராமன் அழைக்கப்படுவது உற்று நோக்கத்தக்கது. இராமாவதாரத்தில் ராமனுக்குப் பின்னர் தோன்றிய ஆதி சேஷனான லக்‌ஷ்மணன், கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனுக்கு முன் பிறந்து முன் போலவே சேவை செய்தமையால் ‘உம்பியும் நீயும்’ என்று முதலில் பலதேவன் சொல்லப்படுகிறான். கண்ணனின் அண்ணன் என்று சொல்லாமல், பலதேவனின் தம்பி என்று பலராமனுக்குச் சிறப்பு செய்யப்படுகிறது.

பின்வரும் பாசுரமும் அரவணையின் சிறப்பை உணர்த்துவது ஈண்டு நோக்கத்தக்கது.

சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,

நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்

புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும்

அணையாம், திருமாற் கரவு

மூன்றாம் பாசுரத்தில் ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று போற்றப்படும் கண்ணன் இங்கு ‘ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்’ என்று தேவாதிராஜன் என்கிற அர்ச்சாவதார மூர்த்தியை உண்ரத்துவது போல் உள்ளது ஒரு சுவை.

‘அம்பரம்’ என்னும் சொல் இருமுறை வந்துள்ளது. முதலில் ‘ஆடை’ என்னும் பொருளிலும், பின்னர் ‘ஆகாசம் / வானம்’ என்னும் பொருளிலும் வந்துள்ளது கவனிக்கத்தக்கது. இரு இடங்களிலும் ஆடை என்றே வருகிறது என்றும் சொல்வர். கண்ணன் ஆகாசத்தையே ஆடையாய் அணிந்துள்ளான் என்கிற பொருளில் இதுவும் ஒரு பார்வையே என்று கொள்வது ஒரு சுவை.

#ஆண்டாள் #திருப்பாவை

நாயகனாய்

‘நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய..’ #பாசுரத்தில் பாவை நோன்பிருக்கும் பெண்கள் வாயிற்காவலனிடம் கெஞ்சுவதும், கண்ணபிரானின் அனுபவத்தைப் பெற மணிகள் பூட்டிய கதவைத் திறக்க வேண்டுவதாகவும் இருப்பது பொதுப்பார்வை.

பாசுரத்தின் முதலில் காணப்பெறும் ‘நாயகனாய் நின்ற’ என்கிற அடைமொழி யாரைக் குறிக்கிறது என்கிற கேள்வி சுவையானது.

  1. ‘நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய, கோவில் காப்பானே’ என்று தொடர்புள்ளியை(Comma) ‘நந்தகோபனுக்குப் பின் போட்டு வாசித்தால், ‘நாயகனாய் நின்ற’ என்பது நந்தகோபனைக் குறிப்பதாகத் தோன்றும்.
  2. தொடர் புள்ளியை ‘நின்ற’விற்குப் பிறகு போட்டால் ‘நாயகனாய் நின்ற, நந்தகோபனுடைய கோவில் காப்பானே’ என்றால்,  ‘நாயகனாய் நின்ற’ என்பது கோவில் காப்பவனைக் குறிப்பதாகத் தோன்றும்.

இரு பார்வைகளுமே சுவையானவை தான்.

1. – இதில் கருத்து வேறுபாடு எழ வழியில்லை. இருந்தாலும் ‘நாயகனாய் நின்ற கண்ணனுடைய’ என்றில்லாமல் நந்தகோபனுக்கு ஒரு ஏற்றம் தெரிகிறது. அவ்வளவுதான்.

2.- இதில் கேள்வி எழலாம். ‘வாயில் காப்பவனுக்கு ஏன் இவ்வளவு ஏற்றம்?’ என்னும் கேள்வி எழ வாய்ப்புள்ளது. இவ்விடத்தில் வைஷ்ணவ காலட்சேப உரை சுவையானது. வாயில் காப்பவன் நமக்கெல்லாம் பரம்பொருளைக் காட்டிக் கொடுப்பவன். இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல உதவுபவன். எனவே இவ்விடத்தில் ‘வாயில் காப்பவன்’ என்பது ஆச்சார்யனைக் குறிக்கிறது என்பதாகக் கொள்வது சுவையானது.

ஆனால், கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே’ என்று இன்னொரு ‘ஆச்சார்யன்’ உள்ளாரே? என்கிற கேள்வியும் எழலாம். ஆம். இரு ஆச்சார்யர்கள் இருப்பது நியாயமே. ஒருவர் நமது குல / பரம்பரை ஆச்சார்யன் ( நமக்கு சமாஸ்ரயணம் / பாரநியாஸம் செய்தவர்). இன்னொருவர் இவ்வழக்கத்தையெல்லாம் பெருமளவில் நடைமுறைப் படுத்திய எம்பெருமானார் என்னும் யதிராஜர். ஆக, இரு ஆச்சார்யர்கள் கணக்கு சரியாகிவிட்டது என்கிற பார்வை அலாதியானது.

‘ஆனால், எம்பெருமானார் ஆண்டாளுக்குப் பின்னர் தோன்றியவர் ஆயிற்றே ?’ எனலாம். அதனால் தான் ஆண்டாள் ‘எம் அண்ணரே’ என்று யதிராஜரை அழைத்து இவ்வினாவிற்கு விடை அளித்துள்ளாள் என்று கொள்ளலாம்.

இப்பாசுரத்தில் பாவை நோன்பிருக்கும் பெண்டிர் ‘தூயோமாய் வந்தோம்’ என்று மீண்டும் கூறுவது வாயிற்காப்போருக்கு விடை அளிப்பது போல் உள்ளது. வாயிற்காப்பவர்கள்  ‘நீங்கள் திரிகரண சுத்தி உடையவர்களா?’ என்று கேட்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க இடமுள்ளது. இது பார-நியாசம் செய்யும் முன் ஆச்சார்யன் ‘நீ பெருமாள் கைங்கர்யத்தை விடாமல் செய்து வருகிறாயா? உனக்கு மோக்ஷம் கேட்டுப் பெருமாளிடம் சிபாரிசு செய்யும் முன், தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று வினவுவதைப் போல் உள்ளது.

#ஆண்டாள் #திருப்பாவை

 

எல்லே இளங்கிளியே

‘எல்லே இளங்கிளியே’ என்னும் பாசுரத்தில் தமிழின் தொன்மை தெரிகிறது.

‘எலுவை’ என்பது பெண்ணை அழைக்கும் சொல். ‘எலுவன்’ என்பது ‘தோழன்’ என்னும் பொருளில் வருகிறது என்று தமிழ் அகராதி கூறுகிறது. ஆக, எலுவன் என்பது மருவி தற்போது ‘எலேய்’ என்றும், ‘எலுவை’ என்பது ‘எல்லே’ என்றும் வருகிறது. எலுவை, எல்லே என்பவை சங்க காலச் சொற்கள்.

ஆக, ‘எல்லே’ என்னும் ஆண்டாளின் சொல் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டு பழையது.

இப்பாடலில் வைஷ்ணவ லக்ஷணம் சொல்லப்படுகிறது.

‘எழுப்பாதீர்கள். உங்கள் சொற்கள் குளிர்ந்த நீரைக் காதில் விடுவது போல் என் தூக்கத்தைக் கெடுக்கின்றன. ‘சற்றுப் பொறுங்கள். நான் எழுந்தது வருகிறேன்’
‘நீ வாய்ச்சொல்லில் வீராங்கனை. நாங்கள் நீ உரைப்பனவற்றை நம்பப்போவதில்லை.’
‘ஆமாம், நீங்கள் நல்லவர்கள். நான் வாய்ச்சொல் வீராங்கனை தான். அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்.’

அழைக்கும் பெண்கள் குற்றம் சுமத்தியவுடன், அதனைத் தன் குற்றமாகவே கொள்கிறாள் உறங்குபவள். பாகவதர்கள் நம் மீது குற்றம் சொன்னால், நாம் அக்குற்றத்தைச் செய்யாவிடினும் பாகவதர்கள் சொல்வதால் அதனை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது வைஷ்ணவ லக்ஷணம் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அவ்விலக்கணப்படி, உறங்குபவள் வைஷ்ணவ லக்ஷணத்திற்கு ஒரு உதாரணம் போல் உள்ளாள்.

‘மாற்றாரை மாற்றழிக்க வல்லானை’ என்பதில் ஒரு நயம் உண்டு. இது இராமனுக்கும் கண்ணனுக்கும் உள்ள வேறுபாடு. இராமன் ‘மனத்துக்கினியான்’ எனவே ‘இன்று போய் போர்க்கு நாளை வா’ என்று கருணையினால் கூறினான். ஆனால், கண்ணன் ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்கிற பைனரி முறையில் செயல்படுபவன். எனவே எதிரிகளின் மீது இராமனைப் போல் கருணை காட்டாமல் உடனுக்குடன் அவர்கள் கதையை முடித்துவிடுவான் என்கிற பொருளில் ‘மாற்றாரை மாற்றழிக்க வல்லானை’ என்கிறாள் ஆண்டாள்.

இக்கருத்தை வலியுறுத்த ‘வல்லானை ( கம்சனின் குவலயாபீடம் என்னும் வலிமையான யானை ) ‘ என்கிறாள் ஆண்டாள்.

இவை தவிர, ‘ஒல்லை’ என்னும் அருந்தமிழ்ச்சொல் காணக்கிடைக்கிறது. ‘உடனே, அப்போதே’ என்பதை உணர்த்த இச்சொல் பயன்படுகிறது.

ஒல்லை நீ போதாய்’ என்கிறாள் ஆண்டாள். ‘

அவளது தந்தையான பெரியாழ்வாரோ

‘ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ’ என்கிறார்.

பாகவதர்கள் குழாத்தில் ஒல்லை (உடனே) சேர்ந்து கொள்ளுங்கள் என்று அப்பாவும் மகளும் ஒன்று போலவே அழைக்கிறார்கள்.

#திருப்பாவை #ஆண்டாள்

உங்கள் புழைக்கடை

‘உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்’ என்னும் பாசுரத்தில் ஆச்சார்ய லக்ஷணம் பேசப்படுகிறது.

‘செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோவில் சங்கிடுவார் போதந்தார்’ என்னும் பிரயோகம் காவி உடை சந்நியாசிகளைப் பற்றிய ஆழ்ந்த பொருளுடைய ஒன்று.

வெளிப்படைப் பொருள்: செங்கல் ( காவி) உடை உடுத்திய, வெண்மையான பற்களை உடைய சந்நியாசிகள் தத்தமது கோவில்களுக்குச் செல்கின்றனர். செல்லும் பொது தங்களது சங்கை முழங்கிக்கொண்டு செல்கின்றனர். எனவே பொழுது விடிந்து விட்டது என்பதை உணர்வாயாக.

உள்ளுறைப் பொருள்: ஆச்சார்யர்களது வெளித்தோற்றம் அழுக்குடையதாகத் தெரிந்தாலும் அவர்களது உள்ளம் தூய்மையானது. ‘செங்கல் பொடிக்கூறை’ என்பது அவர்களது வெளித்தோற்றத்தையும், ‘வெண்பல் தவத்தவர்’ என்பது அவர்களது அழுக்கடையாத உள்ளத்தையும் குறிக்கிறது. ‘வெண்பல்’ என்பது ஞானத்தைக் குறிப்பதாகவும் கொள்வது சம்பிரதாயம்.

சில பாடல்களுக்கு முன் வந்த ‘புள் அரையன் கோவில் வெள்ளை விளி சங்கு’ என்பதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. பொழுதே விடியவில்லை என்றால் கோவிலில் இருந்து சங்கொலி எப்படி எழும் என்னும் கேள்வி எழலாம். அதற்கான விடை இன்றைய பாடலில் – சந்நியாசிகள் சங்கம் ஒலிக்கிறார்கள்.

‘புழைக்கடை’ (வீட்டின் பின்புறம்), ‘வாவி’ (பெரிய கிணறு, சிறிய குளம்) என்னும் அரிய தமிழ்ச் சொற்கள் நம் கண்களைப் பனிக்கச் செய்கின்றன. நாம் இழந்துள்ள எத்தனையோ விஷயங்களில் இவ்வரிய சொற்களும் சேர்த்தி.

#ஆண்டாள் #திருப்பாவை

புள்ளின் வாய்

‘புள்ளின் வாய்க் கீண்டானை’ என்னும் திருப்பாவைப் பாசுரத்தில்  தமிழின் அழகும் வலிமையும் தெரிகின்றன. அழகிய, வலிமை வாய்ந்த சொற்கள் ஆண்டாளின் கைகளில் விளையாடுவதை இப்பாசுரத்தில் காணலாம்.

திருப்பாவை முழுவதும் ‘புள்’ என்று பறவையினத்தை அதன் பொதுப்பெயரால் குறிப்பிடும் #ஆண்டாள், இப்பாசுரத்தில் ‘புள்ளின் வாய்க்கீண்டானை’ என்னுமிடத்தில் கொக்கு உருவில் கண்ணனைக் கொல்ல வந்த பகாசுரன் வதையை உணர்த்துகிறாள். மூன்றே சொற்களின் மூலம் ஒரு பெரிய நிகழ்வைச் சொல்லி முடிக்கிறாள் ஆண்டாள்.

‘பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை’ என்னுமிடத்தில் இராவணன் என்னும் அரக்கனது கதை முடிந்த நிகழ்வு உணர்த்தப்படுகிறது. மிகப்பெரிய யுத்தத்தின் மூலம் முடிவுற்ற இராவணனின் கொடிய வாழ்வு, ‘கிள்ளிக் களைந்தானை’ என்னும் எளிய சொல்லாடலால் உணர்த்தப்படுகிறது. கீரையை ஆயும் போது, அதனுடன் இருக்கும் பூச்சி பட்ட கீரை இலைகளை எளிதாகக் கிள்ளிக் களைவது போல இராவணனது முடிவு சொல்லப்படுகிறது. படிப்போரின் உள்ளத்தில் எந்த வித எதிர்மறை எண்ணமும் தோன்றாத வகையில் தமிழ் விளையாடுகிறது.

இந்த இரு நிகழ்வுகளிலும் ‘கொல்லுதல்’ என்னும் சொல் பயன்படுத்தப் படவில்லை என்பது ஒரு சுவை. சென்ற பாடலில் ‘மனத்துக்கினியான்’ என்று இராமனை அழைத்துவிட்டு இப்பாடலிலும் அது போலவே மென்மையாகக் கையாண்டுள்ளாள் ஆண்டாள்.

‘போதரிக் கண்ணினாய்’ என்னும் பிரயோகம் ‘போது + அரி + கண்ணினாய்’ என்று பிரிந்து பல பொருள் தெரியும் படி வருகிறது. ‘அரி’ என்னும் சொல் பல பொருள் உடையது.

  1. அங்கும் இங்கும் அலைவதால், மான் போன்ற கண் உடையவளே
  2. எதிரி என்னும் பொருளில், மானின் கண்ணிற்கு எதிரி போல் அழகிய கண்ணை உடையவளே
  3. வண்டு என்னும் பொருளில், பூவில் பொதிந்த வண்டு போன்ற கண் உடையவளே

வைஷ்ணவ காலட்சேபங்களில் இப்படிச் சொல்வார்கள்:

‘காலையிலேயே பாவை நோன்பு நோற்கப் பெண்கள் பாவைக் களத்திற்குச் சென்று விட்டனர். உடனே எழுந்திரு.’

‘அவர்கள் சின்னப் பெண்கள். விபரம் அறியாதவர்கள். இன்னும் பொழுது விடியவில்லை. பிறகு செல்லலாம்.’

‘இல்லை. பொழுது புலர்ந்து விட்டது. எனவே எழுந்திரு.’

‘காலையின் அறிகுறிகள் வேறு ஏதாவது உண்டா?’

‘பறவைகள் கத்துகின்றன. அது ஒன்று போதுமே.’

‘ஒப்புக்கொள்ள இயலாது. வேறு  ஏதாகிலும்  பொழுது புலர்ந்ததற்கான அறிகுறிகள் உள்ளனவா? வெள்ளி (சுக்கிரன்) உதித்து விட்டதா? வியாழன் (குரு) அஸ்தமித்து விட்டதா?’

‘ஆமாம், வெள்ளி எழுந்து, வியாழன் உறங்கி விட்டது. அத்துடன் நாங்களும் வந்திருக்கிறோம். எனவே பொழுது புலர்ந்துவிட்டது.’

‘நம்பும்படி இல்லை. கிருஷ்ண அனுபவம் பெறுவதற்காக, இரவே நீங்கள் வந்து விட்டீர்கள், இராமனைக் காட்டிற்கு அனுப்பிய பரதன், விடியற்காலையில் நீராடச் சென்றால் ‘தன் அண்ணனைக் கானகத்துக்குத் துரத்திய பாதகன் செல்கிறான்’ என்று ஊரார் வசைச் சொல் உரைப்பர் என்பதால், நள்ளிரவே நீராடச் செல்வதைப் போல, நீங்களும் பொழுது விடியும் முன்னே வந்துவிட்டீர்கள்.’

‘மான் போன்ற அழகிய கண்களை உடையவளே, நீ மட்டும் தனியாகக் கிருஷ்ணானுபவம் பெற வேண்டி, அதானால் நாங்கள் எழுப்பியும் எழுந்து வராமல் படுத்துக் கிடக்கிறாயா? இந்தக் கள்ளத்தனத்தை விடுத்து எழுந்து வா’

இராமாயண நிகழ்வும், கிருஷ்ணாவதார நிகழ்வும் முதலிரண்டு வரிகளில் வந்துவிடுவது இப்பாசுரத்தின் சிறப்பு.

இப்படி ஆண்டாளின் அழகு தமிழ்ச் சொற்களையும், இதிகாச நிகழ்வுகளையும் கற்பனையை விரித்துச் சொல்லப்படும் வைஷ்ணவ காலட்சேபங்களினால் 1200 ஆண்டுகளாக ஆண்டாளின் திருப்பாவை மக்களின் வாழ்வோடு இணைந்த பெருங் கவிதையாகத் திகழ்ந்து வருகிறது என்பதில் சந்தேகமென்ன?

 

கனைத்திளங் கற்றெருமை

‘கனைத்திளங் கற்றெருமை’ பாசுரம் #திருப்பாவையின் திராட்சைப் பழம் கலந்த அக்கார அடிசில் போன்றது. அவ்வளவு சுவைகள்.

தனது கன்றை நினைத்தவுடன் எருமை மாட்டிற்குப் பால் தானாகச் சுரந்து வழிந்து, வீடு முழுவதும் பரவி, அதனால் சேறு நிறைந்த வீடாகக் காட்சியளிக்கிறதாம். ‘அத்தகைய செல்வம் பொருந்தியவனின் (நற் செல்வன்) தங்கையே’ என்று நோன்பிருக்கும் பெண்ணை விளிக்கிறாள் ஆண்டாள்.

அந்த நற்செல்வன் யார் என்று ஆராய்வதில் ஒரு சுவை உண்டு.

திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்கு ‘நூறு தடா வெண்ணையும் நூறு தடா அக்கார அடிசிலும் கண்டருளப் பண்ண வேண்டும்’ என்று ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் பாடுகிறாள்.

‘நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்..’

ஆனால், அவளது பூவுலக வாழ்நாளில் அவளது விருப்பம் நிறைவேறவில்லை.

ஆண்டாளுக்குப் பின்னர் பிறந்த ஶ்ரீமத் இராமானுசர் அவளது உள்ளக்கிடக்கையை அறிந்து அவ்வாறு நூறு தடா கண்டருளப்பண்ணுகிறார். பின்னர் ஶ்ரீவில்லிபுத்தூர் செல்லும் இராமானுசரை ‘எம் அண்ணரே’ என்று ஆண்டாள் அழைக்கிறாள். 200 ஆண்டுகள் பிற்பட்ட இராமானுசரை ஆண்டாள் ‘அண்ணா’ என்று அழைத்ததால் அவள் உடையவருக்குத் தங்கையாகிறாள். ஆக, இவ்விடத்தில் ‘நற்செல்வன்’ என்று ஆண்டாள் குறிப்பிடுவது பின்னர் தோன்றப்போகும் உடையவரையே என்கிற நோக்கில் பார்த்தால் இப்பாசுரம் அக்கார அடிசில் என்பதில் சந்தேகம் என்ன?

சுவை அவ்வளவு தானா? மேலும் பாருங்கள்.

இராமபிரானைச் ‘சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்றவன்’ என்கிறாள் ஆண்டாள். ‘சினம்’, ‘தோற்கடித்தவன்/ வென்றவன்’ என்கிற சற்று கடுமையான அடைமொழிகளால் சொல்கிறாள் அவள். அப்படிச் சொன்னபின் மனம் கேட்காமல் ‘மனத்துக் கினியான்’ என்று சொல்லி ஒருவாறு சமன் செய்கிறாள்.

இலங்கை வேந்தனைக் கொன்றான் என்பது சரி. ஆனால், மனத்துக்கினியான் ?

இராவணனைக் கொன்றது உண்மை என்றாலும், அதற்கு முன் மனம் இறங்கி, அவன் உயிர் பிழைக்க வாய்ப்பளித்தான் அல்லவா ?

ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த

பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு

 நாளை வா என நல்கினன் நாகு இளங் கமுகின்

வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்

என்று கம்பன் சொல்வது இதைத்தானே? போர் செய்வதாக இருந்தால் நாளை வா, இல்லையேல் இன்றே சரண் புகு, உனக்கு மோட்சம் அளிக்கிறேன் (மாம் ஏகம் சரணம் வ்ரஜ) என்றல்லவா சொல்கிறான் இராமன்?

ஆக மனத்துக்கினியான் என்பது சரிதானே.

அக்கார அடிசிலில் திராட்சைப் பழம் என்பது இது தான்.

கற்றுக் கறவை

‘கற்றுக் கறவைக் கணங்கள்’ என்னும் பாசுரத்தில் ‘புற்று அரவு அல் குல் புனமயிலே’ என்னும் பிரயோகமும், ‘முகில் வண்ணன்’ என்னும் சொல்லும் உற்று நோக்கத்தக்கன.

பாவை நோன்பை மேற்கொள்ளும் பெண்ணை மயிலுடன் ஒப்பிடுகிறாள் ஆண்டாள். அரவம் ( பாம்பு ), மயில் என எதிரிகள் இரண்டையும் ஒன்றாக, ஒரே பெண்ணிடம் கூறியிருப்பது ஒரு சுவை.

மயிலுடன் ஒப்பிட்டதுடன் நிற்கவில்லை. மயிலுக்குப் பிடித்த மழை மேகங்களின் நிறத்தில் உள்ளவன் கண்ணன் என்பதை உணர்த்தும் பொருட்டு, ‘முகில் வண்ணன்’ என்கிறாள் ஆண்டாள்.

கருமுகிலைக் கண்டதும் மயில் மகிழ்ச்சியுடன் எழுந்து ஆட வேண்டியதாகையால், மயிலைப் போன்ற அப்பெண் முகில் வண்ணக் கண்ணனின் அனுபவம் பெற உடனே உறக்கம் நீங்கி எழுந்திருக்க வேண்டும் என்பது சொல்லாமல் உணர்த்தப்படுகிறது .

#ஆண்டாள் #திருப்பாவை

%d bloggers like this: