மாளாபுரம் கோவில் திருப்பணி

மாளாபுரம் கோவில் திருப்பணி – ஒரு பார்வை

சனிக்கிழமை (25-03-2023) பாபநாசம் அருகே உள்ள மாளாபுரம் என்னும் அழகிய கிராமத்திற்குச் சென்றிருந்தேன். உ.வே.சா. பிறந்த உத்தமதானபுரம் இவ்வூருக்கு அருகில் அமைந்துள்ளது.

மாளாபுரம் முன்னர் திருமால்புரம் என்று இருந்துள்ளது. பின்ன மால்புரம் என்று ஆகி, தற்போது மாளாபுரம் என்று புழங்கிவருகிறது. சின்னஞ்சிறிய அக்கிரஹாரம் அமைந்துள்ள ஊரில் அமைதி ததும்பும் சூழல். எங்கும் தென்னை மரங்கள் நிறைந்து, குளம் கூட உள்ளது. முக்கியமாகக் குளத்தில் நீர் உள்ளது. மக்கள் அவசரமில்லாத ஒரு வாழ்க்கையை மேற்கொண்டுள்ளனர்.

அந்த ஊரில் புதுக்கோட்டை மன்னர் 600 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அக்கிரஹாரம் அமைத்தார். சிவன் கோவில் ஒன்றும், லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் ஒன்றுமாக நிர்மாணித்தார். அக்கிரஹாரத்தாரும், ஊர் மக்களும் கோவிலைக் கவனித்துக் கொண்டனர்.

காலப்போக்கில் எல்லா அக்கிரஹாரங்களையும் போல் மாளாபுரம் அக்கிரஹாரமும் குன்றத் துவங்கியது. பெயரளவில் இன்னும் உள்ளது என்றாலும், கோவில் பாழானது.

பெருமாள், லலிதா என்றொரு பக்தையின் கனவில் தோன்றித் தன் கோவிலைப் புதுப்பிக்க உத்தரவிட்டார். லலிதா பிற வேலைகளில் இருந்ததால் முயலவில்லை. பின்னர் மீண்டும் அதே கனவு வரவே, அவர் தன் குடும்ப ஜோதிடரைத் தொடர்புகொண்டார். அவரது வழிகாட்டுதலின் பேரில் தனியொருவராகக் கோவிலைக் கட்டத் துவங்கினார்.

ஊர்க்காரர்கள் பலர் வெளியூர்களில் இருந்தாலும், ஓரளவு உபகாரமாக இருந்துள்ளனர். இந்து சமய அற நிலையத் துறையின் உத்தரவைப் பெற்ற லலிதா, கோவில் கட்டும் பணியில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துள்ளார்.

நான் சென்ற போது மாலை 5:30 மணி. அந்தி சாயும் நேரத்தில் அந்தக் கிராமத்தின் அமைதி என்னைப் பெரிதும் ஆட்கொண்டது. வாகன இரைச்சல்கள் இல்லாத, கிளிகள், குருவிகள் கத்தும் சூழலைக் கண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று மாளாபுரம் உணர வைத்தது.

கோவில் கட்டுவதுடன் நிற்காமல், ஊரில் உள்ள குழந்தைகளுக்குப் பஜனையும் சொல்லிக் கொடுத்துள்ளார் லலிதா அம்மையார். இந்த மாதிரியான வேற்றுலக நிகழ்வுகளில் மூழ்கியிருந்த போது ஓய்வு பெற்ற தாசில்தார் அம்மையார் ஒருவர் வந்து அறிமுகம் ஆனார். ‘நல்ல விஷயம் பண்றா லலிதா. நீங்கள்ளாரும் உறுதுணையா இருங்க’ என்று சொன்னவர், ‘We can’t take a pie when we leave this place’ என்று சொல்லிச் சென்றது ஏதோ சித்தர் வாக்கு போல் மனதில் ரீங்காகரம் இட்டவண்ணம் இருந்தது.

லலிதா அம்மையார் பல போராட்டங்களுக்கு இடையில் கோவில் நிர்மாணம் செய்து வருகிறார். கோபுர வேலைகள் பாதியில் உள்ளன. த்வஜஸ்தம்பம் முடியும் நிலையில் உள்ளது. மடப்பள்ளி வேலைகள் துவங்கியுள்ளன. சக்கரத்தாழ்வார் சன்னிதியும், ஆண்டாள் சன்னிதியும் துவங்கவுள்ளன. கூடிய விரைவில் சம்ப்ரோக்‌ஷனம் நடத்த முயன்றுவருகிறார் லலிதா அம்மையார்.

கோவிலில் எடுத்த சில படங்களை வெளியிடுகிறேன். கோவில் தொடர்பாக மேலதிகத் தகவல்கள் வேண்டுமெனில் லலிதா அம்மையாரைத் தொடர்புகொள்ளுங்கள். (+91-99520-58324). ஆ..பக்கங்கள் ஆமருவி மூலம் தெரிந்துகொண்டேன் என்று சொல்லுங்கள். எனக்கும் கொஞ்சம் புண்ணியம் வரட்டுமே.

சில படங்கள்

இந்தக் கோவில் பற்றிய எனது முந்தைய பதிவு இங்கே.

திருமால் திருப்பணிக்கு ஒரு வேண்டுகோள்

மாளாபுரம் திருக்கோவில் திருப்பணி. வேண்டுகோள்.

உத்தமதானபுரம் தெரிகிறது தானே? உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர். 

அந்த ஊருடன் சேர்த்து நான்கு அக்ரஹாரங்களைப் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் 17ம் நூற்றாண்டில் உருவாக்கினார்.  அவை கோபுராஜபுரம், அன்னிக்குடி மற்றும் திருமால்புரம்.

உத்தமதானபுரத்தில் ஸ்மார்த்த பிராமணர்கள் மற்றும் மூப்பனார் சமூகத்தவரையும், கோபுராஜபுரத்தில் ராயர் மற்றும் வன்னியர் சமூகத்தவரையும், அன்னிக்குடியில் தெலுங்கர் மற்றும் படையாச்சி சமூகத்தவரையும், திருமால்புரத்தில் வைஷ்ணவர்கள் மற்றும் அம்பலக்காரர்களையும் குடியமர்த்தினார் மன்னர்.  அக்கிரஹாரத்தின் மேற்குத் திக்கில் பெருமாள் கோவிலும், கிழக்குத் திக்கில் சிவன் கோவிலும் ஏற்படுத்தி, ஸ்மார்த்த, வைஷ்ணவ அந்தணர்கள் குடியிருந்து, வேதம், பிரபந்தம் என்று தழைக்க வழி செய்த மன்னர், நான்கு ஊர்களிலும் ஒரு லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் கட்டுவித்து வைதீக நெறி தழைக்க வழி செய்தார்.

அத்துடன் நிற்காமல்,  ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அக்ஷயதிருதி அன்று  இந்த நான்கு கோவில்களின் உற்சவ மூர்த்திகளும் கோபுராஜபுரத்தில் உள்ள ஐயனார் குளத்திற்கு எழுந்தருளி உற்சவம் கண்டருள வேண்டும் என்று பணித்திருந்தார் அன்னாளைய மன்னர்.

கோட்டச்சேரி என்னும் கிராமத்தையும் நிர்மாணித்து, அங்கு வேத பண்டிதர்களைக் குடியமர்த்திய மன்னர், கோட்டச்சேரி வேத பண்டிதர்கள் அனைவரும் நான்கு ஊர்களிலும் உள்ள கோவில்களில் வேத பாராயணம் செய்ய வேண்டும் என்றும் அதற்காக அவர்களுக்கு முதல் தீர்த்தம் தரப்பட வேண்டும் என்றும் ஏற்பாடு செய்துவைத்திருந்தார். 

தற்போது ‘எல்லாரும் இன்னாட்டு மன்னர்’ என்னும் உயரிய கொள்கையால் கோவில்கள் மற்றும் அக்ரஹாரங்கள் அழிந்து, கோட்டச்சேரியில் வேத பிராமணர்கள் இல்லாமல் ஆகி,  நான்கு அக்ரஹாரங்களிலும் மக்கள் ஊரை விட்டு வெளியேறி, கோவில் பாழானது.  

திருமால்புரம் என்னும் ஊர் காலப்போக்கில் மால்புரம் என்று மாறி, தற்போது மாளாபுரம் என்று வழங்கி வருகிறது. பாபநாசத்திற்கு அருகில் உள்ளது இந்தச் சிற்றூர். மாளாபுரம் கோவில் பரசுராமரின் தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் பக்தர்களால் கருதப்படுகிறது. இதனைக் குறிக்கும் தனிப்பாடல் பாடல் ஒன்றும் உள்ளது:

அலைகடற் பிறந்த நங்கை

அணைகிலாப் பிறப்பில் மன்னர்

தலைமுறை இருபத்தொன்றும்

தகர்த்தற்கிரங்கி மாயோன்

கொலை பழி தீர்க்க எண்ணிக்

கோமள வல்லியோடும்

மலைநிகர் சான்றொர்ப் பேணி

மாளாபுரத்துள்ளானே

மாளாபுரம் அக்ரஹாரம் காலியாக, நிதி நிலைமை பாதாளத்தில் சரிய, கைங்கர்யம் செய்வதற்கும் ஆளின்றி, கோவில் செடிகள், புதர்கள் மண்டிய காடானது. இந்து அற நிலையத் துறையின் ‘ஒரு கால பூஜை’ திட்டத்தின் கீழ் தற்போது பெருமாளுக்குக் கைங்கர்யங்கள் நடந்து வருகின்றன.

பெருமாள் ஒரு பக்தையின் கனவில் தோன்றி, தன் கோவிலைக் கட்டுமாறு ஆணையிட, பல ஆண்டுகளாகச் சிதிலமாகவே இருந்த லக்ஷ்மீநாராயணப் பெருமாள் கோவில் தற்போது புனருத்தாரணம் செய்யப்பட்டு வருகிறது. உடையவருக்கும், ஆண்டாளுக்கும் தனியாக சன்னிதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. கோவில் புனருத்தாரணத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபாய்கள் தேவைப்படும் என்று கணக்கிட்டுள்ளார்கள்.

பக்தர்கள் தங்களால் இயன்ற அளவிற்குப் பொருளுதவி செய்யலாம். 

சிதிலமடைந்த விமானம்

ஸ்வாமி தேசிகன்
பெருமாள்

Malapuram Iraipani Mandram

2/85 Malapuram Agraharam,

Gopurajapuram, Papanasam Taluk,

Thanjavur Dist.

 Account No. 500101012545963

 City Union Bank, Kumbakonam Main Branch,

 IFSC-CIUB0000004

SWIFT  CODE: CIUBIN5M

%d bloggers like this: