முட்டாளாக இருப்பது என்பது அமெரிக்காவுக்குக் கை வந்த கலை போல. ரொம்ப நாட்கள் கோமாவில் இருந்து திடீரென்று எழுந்து,’ இந்திய முஸ்லீம்களைப் பாராட்டுகிறோம். அவர்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை,’ என்று சொல்லியுள்ளது.
உண்மை தான். அவர்கள் ஆதரிப்பதில்லை. இது எல்லாருக்கும் தெரிந்தது தான். ஆனால் என்ன செய்வது? அமெரிக்காவிற்கு இப்போதுதான் புரிகிறது.
புரிந்தவரை சரி. ஆனால் அது என்ன இந்திய முஸ்லீம்கள்? இந்தியக் கிறித்தவர்கள், இந்திய இந்துக்கள் என்று உண்டா என்ன?
ஒன்று தான் உண்டு. இந்தியர்கள். அவர்களில் சிலர் இந்துமதம், சிலர் கிறித்தவம், சிலர் இஸ்லாம் என்று பின்பற்றுகிறார்கள். ஆனால் கலாச்சாரத்தால் ஒன்றானவர்கள். முன்னெப்போதோ ஒரே முன்னோர்களைக் கொண்டவர்கள்.
அது மட்டும் அல்ல. அடையும் இடம் ஒன்றே; வழிகள் மட்டுமே வேறு என்பதை உணர்ந்தவர்கள். ‘ஸர்வ தேவ நமஸ்கார: ஶ்ரீகேஸவம் பிரதிகச்சதி’ என்பதை உணர்ந்தவர்கள். வானத்தில் இருந்து விழும் மழை நீர் அனைத்தும் இறுதியில் கடலில் சென்று சேர்வதை உணர்ந்தவர்கள். அதையே பிரும்ம தத்துவம் என்று தெரிந்தவர்கள்.
இவர்கள் இந்தியர்கள். பிரும்மம் என்னும் ஓருண்மையினைப் பல பெயர்களில் அழைக்கிறோம் என்பதை உணர்ந்தவர்கள். மதமும் மொழியும் இரு சிறு அடையாளங்களேயன்றி வேறில்லை என்று உணர்ந்தவர்கள்.
இவர்கள் ஒரு தாய் மக்கள் என்பதைப் புரிந்தவர்கள்.
அமெரிக்காவுக்கு இது புரியுமா என்று தெரியவில்லை.