உயில் எழுதுவது எப்படி?

‘சிங்கப்பூர் ஆஃப்ஷோர் அக்கவுண்ட்ல இருக்கற ஒன்றரை கிராண்ட், சாங்கி பார்க்ல காண்டோ, அடையார்ல போட் கிளப் வீடு, ஏ.ஐ.ஜி.ல கேஷ் டெபோசிட்ஸ், எஸ்.ஜி.எக்ஸ்.ல செக்யூரிட்டீஸ் அக்கவுண்ட், எஸ்.பி.ஐ. இன்னபிற சில்லறை லட்சங்கள், தேரழுந்தூர்ல வீடு .. அடடா இப்பிடி எதுக்குமே உயில் எழுதாமப் போயிட்டியேடா.’யாரோ அருகில் இருந்து சொல்வது போல் ஒலித்தது. மனசாட்சியாக இருக்கலாம்.

அடித்த 103 டிகிரி ஜுரத்தில் நான் தான் சொன்னேனா, இல்லை யாரோ அருகில் இருந்து சொன்னார்களா என்று தெரியவில்லை. அதுவும் ராத்திரி 2 மணிக்குப் பினாத்தினால் நினைவு எப்படி இருக்கும் ?காலம் முடிந்துவிட்டதா? இனிமேல் அவ்வளவுதானா? வீட்டிற்குள் வைப்பார்களா இல்லை நேரே… இன்னொரு மனம் கேட்டது. பதில் தான் இல்லை.

எப்டியாவது எழுந்து இந்த உயில் சமாச்சாரத்தை முடிச்சுடலாமே. ப்ளீஸ். எழுந்திருக்கப்பார்ரா ஆமருவி. எழுந்திரு. எஸ்.யூ.கேன். எஸ்.யூ.கேன். ஒபாமா தோன்றிச் சொன்னார்.

நீங்களே வக்கீல் தானே. சார், நீங்க கொஞ்சம் எழுதிடறீங்களா? டயம் முடிஞ்சுடும் போல இருக்கே.’அப்பாரண்ட்லி நீங்க ப்ராப்பர்ட்டீஸ் டாக்குமெண்ட்ஸ் மூணு காப்பி கொடுங்க. மிஷல் செக் பண்ணி சொல்லுவா. ஒரு வாரத்துல முடிச்சுடலாம்.’

‘ப்ளீஸ். இன்னிக்கே முடிஞ்சுடும் போல இருக்கே. ஒரு வாரமெல்லாம் தாங்காதே’ ஹீன ஸ்வரத்தில் கெஞ்சியது யாரோ எங்கோ சொல்வது போல கேட்டது.

‘அது பரவாயில்ல. ஆஸ் பர் அமெரிக்கன் லா, வீடியோ வில் ஈஸ் வாலிட். இப்ப ஒரு வீடியோ எடுத்துக்கலாம். இவர்கிட்ட ஒரு ஆத்தரைசேஷன் சைன் வாங்கிக்கலாம். அப்பறம் ஃபில் பண்ணி நோட்டரைஸ் பண்ணிக்கலாம். ஹௌ ஈஸ் தட்?’ என்று கேட்டுத் தனது நட்சத்திரப் புன்னகையை உதிர்த்தார்.

‘யோவ், இங்க உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கேன். எல்லா எலும்பு மேலயும் லாரி ஓடின மாதிரி வலிக்குது. என் கைய வெச்சே கேஸ் அடுப்ப பத்தவைக்க முடியும் போல கொதிக்குது. சீக்கிரம் எழுதிக்குடுய்யா’

‘ஆக்சுவலி, த பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ் தான் அமெரிக்க கான்ஸ்டிட்யூஷனோட ஆதார நம்பிக்கை. யூ நோ. ஃபவுண்டேஷனல் பிலீஃப். ஈவன் மிஷல் வில் அக்ரீ. வோண்ட் யூ டியர்?’

‘யோவ், பொண்டாட்டிய அப்பறம் கொஞ்சிக்கோய்யா. சீக்கிரம் எழுதுய்யா.’ நான் சொல்வது காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.

ஒருவேளை முடிந்தேவிட்டதா? நான் எங்கே கிடக்கிறேன்?

‘அந்த ப்ராப்பர்டீஸ் சொல்லுங்க?’ ஒபாமா கேட்பது புரிந்தது.

‘சிங்கப்பூர் ஆஃப்ஷோர் அக்கவுண்ட்ல இருக்கற ஒன்றரை கிராண்ட், சாங்கி பார்க்ல காண்டோ, அடையார்ல போட் கிளப் வீடு, ஏ.ஐ.ஜி.ல கேஷ் டெபோசிட்ஸ், எஸ்.ஜி.எக்ஸ்.ல செக்யூரிட்டீஸ் அக்கவுண்ட், எஸ்.பி.ஐ. இன்னபிற சில்லறை லட்சங்கள், தேரழுந்தூர்ல வீடு’ தடவித் தடவிச் சொன்னேன்.

‘போறுமே. தேரழுந்தூர் தவிர மத்ததெல்லாம் சம்பாதிக்க வேண்டாமா? எழுந்து புழுங்கரிசிக் கஞ்சிய சாப்டுட்டு, கனவை கண்டினியூ பண்ணுங்கோ’

அடிக்கடி கேட்ட குரலாக இருந்தது.

ஒபாமாவும் மிஷலும் இருந்த இடத்தில் உள் துறை மந்திரி நிற்க, புழுங்கல் அரிசிக் கஞ்சிக்கு வாய் திறந்தேன்.

பி.கு.: பிரதமர் மோதி இரண்டு வாக்ஸின் கொடுத்தாரோ, பிழைத்து இதை எழுதுகிறேன். வாழ்க நீ எம்மான். PMO India

ஜெயமோகன் மற்றவர்களையும் கௌரவிக்க வேண்டும்

சோஷியல்பிராப்ளம், பொலிடிக்கல் பிராப்ளம், மாரல் பிராப்ளம் எல்லாம் எகனாமிக் பிராப்ளம் அல்ல என்ற தெளிவை அடையவைப்பார்கள். மோடி என்ற ஒரே மனிதர் நான்கு பிராப்ளமாகவும் ஒரேசமயம் ஆகமுடியும் என்று உணர லைசாண்டர் சார் உயிருடன் இல்லை.

”கல்வி’ என்னும் தலைப்பில் ஜெயமோகனின் நகைச்சுவைக் கட்டுரையில் மேற்சொன்ன வரிகள்.பிரதமர் மோதி, போகிற போக்கில் எழுத்தாளர் பயன்படுத்தும் ஒரு சொல்லாக மாறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அன்றாட வாழ்வியலில் ஒன்றாக மோதியின் பெயர் உருப்பெற்று வந்துள்ளது நல்லதே.

ஆனால், ‘மோடி’க்குப் பதிலாகக் கழகத்தின் கடைக்கோடி வட்டச்செயலாளர் பெயர் இருந்திருந்தால், கருத்துரிமை இந்நேரம் பிணை கோரி நின்று (பாலிமர் நினைவிருக்கலாம்), நிற்கும் நேரத்தில் ‘ஒற்றை இந்துத்துவ எதிர்ப்பு’ பிரசங்கம் நிகழ்த்தியிருக்கும். இது நிதர்ஸனம்.

‘மோடி’யின் பெயரைப் பயன்படுத்தக் கூடாதா என்பதன்று. வேறு யார் பெயரையும் பயன்படுத்த முடியாது என்பதே நிதர்ஸனம் என்பதே இங்கு நிலை.

நேருவைப் பற்றி ஷங்கர் கார்ட்டூன் வரைந்தார், அவர் இருந்த காலத்திலேயே. சுமார் 4000 கார்ட்டூன்கள். அதைப் பற்றி நேரு சொன்னது: ‘Shankar has that rare gift… he points out, with an artist’s skill, the weaknesses and foibles of those who display themselves on the public stage. It is good to have the veil of our conceit torn occasionally’.

ஆனால், தமிழகத்தில் யாரைப் பற்றியும் எழுத, வரைய முடியாது.

உளறிக்கொட்டும் அமைச்சரைக் கேள்வி கேட்டால் ப்ளாக் செய்கிறார். அடிப்படைப் பொருளாதார அறிவில் சிக்கல். நிதித்துறை கோவில் துறை பற்றிப் பிதற்றல் மற்றும் தனிநபர் அவதூறு. கோவில் துறை வட மாநிலத்தவரைப் பழிக்கிறது. கல்வித்துறை, அரசு உதவி பெறாத, நடுவண் அரசப் பாடத்திட்டத் தனியார் பள்ளியை அரசு கைகொள்ளும் என்கிறது. அகில இந்திய நுழைவுத் தேர்வு தமிழகத்திற்குக் கிடையாது என்கிறது. உச்ச் நீதி மன்ற ஆணை தெரிந்துதான் சொல்கிறார்களா? குடிமைப் பணி செயலர்கள் என்று படித்தவர்கள் யாருமே இல்லையா?

பொறுப்பு கண்ணியத்தை அளிக்க வேண்டும். அதுவும் பொதுவெளியில் வார்த்தைகள் மீது அதிகக் கவனம் தேவை. இவர்களுக்கு யார் புரிய வைப்பது? இவற்றை அரசியல் தலைவர்கள் உணர, அவர்களையும் ஜெயமோகன் தனது கட்டுரைகளில் சேர்த்துக் கொண்டு கௌரவிக்க வேண்டும். வெண்முரசியற்றியவர் செய்யாமல் யார் செய்வது?

ராஹுல் காந்தியின் சொற்களைக் கொண்டு மற்றுமொரு நகைச்சுவை நாவல் கூட எழுதலாம். கேஜ்ரிவாலின் 180 டிகிரி பல்டிகளைச் சுட்டி ‘தலைகீழ் பார்வைகள்’ என்னும் தலைப்பில்கட்டுரைகள் புனையலாம். மம்தா பானர்ஜியின் ஆட்டங்களைக் கொண்டு ‘சாக்த பூமியில் ஊழியாட்டங்கள்’ என்றோ, பெண் அமைச்சருக்கு முதல்வர் பதவி வழங்க மறுத்த முன்னேறிய கேரளத்தைப் பற்றி ‘ஷைலஜ மஹாத்மியம்’ வரையலாம். இன்னும் எவ்வளவோ.

எந்தத் தலைவரின் பெயரைப் பயன்படுத்தியும் பகடி செய்ய உரிமை உள்ளது. தரக்குறைவாக, மரியாதைக் குறைவாக இருக்கலாகாது. அவ்வளவே.

நேருவின் சொற்களின் படி ‘அகம்பாவம் என்னும் முகத்திரை அவ்வப்போது கிழிக்கப்படுவது நல்லது’.

மோடிக்குப் பொருந்துவது எந்தத் தாடிக்கும் பொருந்துமன்றோ?

ஜெயமோகனின் கட்டுரை இங்கே

‘மொக்க பீசு’களும் வரலாற்றுப் பிரக்ஞையும்

வரலாற்றுப் பிரக்ஞை ஊறவே ஊறாத ஒரு ஆட்டுமந்தைக் கூட்டத்தை நமது முட்டாள் கல்வித் திட்டத்தின் மூலம் உருவாக்கிவிட்டிருக்கிறோம் என்று நினைக்கையில் வெட்கமே ஏற்படுகிறது.

சென்னை ராமானுஜம் ஐடி பார்க் மின்தூக்கி.
 
‘இங்க எதுக்குடி வறானுங்க? ரெண்டு பேரும் நடக்கறதுக்கு வேற எடமே கிடைக்கல்லியா?’ அந்த 20+ கேட்டது.
 
‘இல்லடி, மஹாப்ஸ்ல வாக் போறாங்க. அப்புறம் ஹோட்டல்ல பேசறாங்க. அதான் ஒரே போலீஸ் இங்கெல்லாம்’ மற்றொரு 20+ சொன்னது.
 
‘அப்டி மஹாப்ஸ என்னடீ இருக்கு?’ 20+கள் சிரித்தன.
 
‘என்னவோ இருக்கட்டும். அது யாரு? சி ஜின் பி யோ என்னவோ சொல்றாங்களே’
 
‘அவுரு சைனாவோட பிரதமர், பிரைம் மினிஸ்டர் டி’
 
‘டது’ = ‘டாள்’, என்றும் வாசிக்கலாம். அறிவுத்திறன் பளிச்சிட்டதால் ‘டாள்’ ‘டது’ என்றும், ‘தனர்’ , ‘தன’ என்றும் திணை மாறியுள்ளன.
சீனத் தலைவர் சீ ஜின் பிங்ம் பாரதப் பிரதமர் நரேந்திர மோதியும் மஹாபலிபுரத்தில் சந்திக்கவிருப்பதைப் பற்றிப் பேசிக்கொண்டன இந்த 20+கள்.
 
கொஞ்சமேனும் அறிவுத்திறன் அற்ற 20+களை உருவாக்கியுள்ளோம் என்று தெரிகிறது. ‘மொக்க’, ‘டம்மி’, ‘சீன்’,’கலாய்’ இன்னபிற புரியாத சொல்லாக்கங்களை உருவாக்கியுள்ளதைத் தவிரவும், சில பத்தாயிரங்களைச் சம்பாதிக்க வழி செய்யும் கல்வியைக் கற்றதைத் தவிரவும் இந்த இளவட்டங்களை முழு மொந்தைகளாக ஆக்கியுள்ளோம் என்றே தோன்றுகிறது.
இரு தலைவர்களும் மஹாபலிபுரம் செல்வதால் அவ்வூருக்குக் கிடைக்கும் உலகப் பார்வை, அதனால் ஏற்படும் சுற்றுலா வாய்ப்புகள், அதன் மூலம் தமிழகத்தில் ஏற்படச் சாத்தியமுள்ள வெளி நாட்டு மூலதனங்கள், பொதுவாகத் தமிழகத்தை நோக்கி அதிகரிக்கக்கூடிய உலகப் பார்வைகள்.. இப்படி எத்தனையோ.
 
இவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாத, தெரிந்துகொள்ளத் திறன் அற்ற இளைய தலைமுறை அச்சமூட்டுகிறது.
 
பாரதப் பிரதமரின் இந்தோனேசியப் பயணத்தால் விளைந்த நன்மைகள் யாவை என்று அந்த இரு பெண்களிடமும் கேட்க வேண்டும் போல் இருந்தது. இந்தோனேசியா எங்கே இருக்கிறது என்று கேட்டுவிட்டால் என்ன செய்வதென்று வாய்மூடிக் கடந்து சென்றேன்.
 
மாபெரும் வரலாற்று நிகழ்வு நடக்கவிருக்கிறது. உலகில் அதிக மக்கட்தொகை கொண்ட தேசத்தின் தலைவர், இன்றைய நிதர்ஸன உலகின் பெரும் சக்தி படைத்த நாட்டின் தலைவர் நமது மாநிலத்திற்கு வருகிறார். அவரை அழைத்து வருவது உலகின் மற்றுமொரு பெரிய தேசத்தின் தலைவர். கடந்த 70 ஆண்டுகளில் எத்தனைத் தலைவர்கள் இவ்வாறு தமிழகத்திற்கு வந்துள்ளனர்? வருவோரெல்லாம் டில்லியில் இறங்கிப் பேசிவிட்டு, தாஜ் மஹாலில் படம் எடுத்துக்கொண்டு சென்று விடுவர் – பாரதத்தின் ஒளிப்பிரதி ஏதோ தாஜ் மஹால் தான் என்னும் பாவனையை வளர்த்துக் கொண்டு. தற்போது தேசத்தின் பன்முகத்தன்மையை, கலாச்சார வலிமையை உணர்த்தும் மஹாபலிபுரம் நிகழ்வு பாரதத்தின் மீதான ஒட்டுமொத்தப் பார்வையையும் மாற்றவல்லது. பாரதம், கணவன் மனைவியின் கல்லறையன்று, அது சில ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மங்களின் சங்கமம், மனிதன் கல்லின் ஊடாகத் தனது மேன்மையைக் காலத்திற்கும் நிற்கும் வகையில் உணர்த்தியுள்ள உன்னத நாகரிகம் என்பதே.
 
ஒருவேளை மஹாபலிபுரத்தில் இருந்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியானால் எப்படியிருக்கும்? ‘Bandung Declaration’, ‘Warsaw Pact’, ‘Shimla Declaration’ என்று நாம் இன்றளவும் பேசும் ஒப்பந்தங்கள் போல் ‘Mahabalipuram Declaration / Pact’ என்று ஏற்பட்டால் எப்போதுமே வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாநிலமாகத் தமிழகம் நிலைத்திருக்கும். இந்த வரலாற்றுப் பிரக்ஞை ஊறவே ஊறாத ஒரு ஆட்டுமந்தைக் கூட்டத்தை நமது முட்டாள் கல்வித் திட்டத்தின் மூலம் உருவாக்கிவிட்டிருக்கிறோம் என்று நினைக்கையில் வெட்கமே ஏற்படுகிறது.
 
தமிழகம் என்றில்லை, பொதுவாகப் பல மாநிலங்களிலுமே இதே கதை தான் என்கிறார் என் நண்பர். தமிழகத்தில் சினிமா, மற்ற இடங்களில் வேறு விஷயங்கள் காரணம். அவ்வளவுதான் வேறுபாடு என்கிறார் அவர்.
 
கொஞ்சம் நிம்மதி.
#NarendraModi #XiJinPing

யோகா தினம்

யோகப் பயிற்சிகள் உலகம் முழுமைக்குமானவை. மொழி, மதம், இனம், இடம், கண்டம் கடந்து உலகம் முழுவதற்கும் நன்மை பயக்கும் அரிய பரிசு யோகப் பயிற்சி.

மாணவர்களே, இன்று ஒரு முக்கியமான நாள்.
உலகிற்குப் பாரதத்தின் கொடையான யோகப் பயிற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்து, உலக யோகா தினம் என்று அறிவித்த நாள்.
யோகப் பயிற்சிகள் உலகம் முழுமைக்குமானவை. மொழி, மதம், இனம், இடம், கண்டம் கடந்து உலகம் முழுவதற்கும் நன்மை பயக்கும் அரிய பரிசு யோகப் பயிற்சி.
யோகப் பயிற்சிகள் ஹிந்து மதத்திற்கு உரியன, ஆகவே அதனை அனுசரிக்க வேண்டாம் என்று பாரதத்தில் உள்ள பிற்போக்கு சக்திகள் சிறுபான்மையினரைத் தூண்டி விட்டன. ஆனால், இஸ்லாமியர்களுக்குப் புனிதமான நாடான சவூதி அரேபியா முதலாக 47 இஸ்லாமிய நாடுகள் யோகக் கலையை அங்கீகரித்து, அவற்றைப் பள்ளிகளில் பாடமாக வைத்துள்ளன.
உங்களிடமும் சிலர் யோகப் பயிற்சிகள் ஹிந்து மதத் தொடர்புடையன என்று சொல்லலாம். அதனால் என்ன பரவாயில்லை என்று அவர்களின் கருத்துக்களை உதாசீனப்படுத்தி, யோகப் பயிற்சிகளை நல்ல ஆசிரியர் மூலம் கற்றுக் கொண்டு பின்பற்றி வாருங்கள்.
இந்தப் பயிற்சிகளை எதிர்ப்பவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்தி யோகக் கலைக்கு அங்கீகாரம் வாங்கித் தந்தது நமது பிரதமர் நரேந்திர மோதி அவர்கள். இதே அங்கீகாரத்தை முந்தைய பிரதமர் மன்மோஹன் சிங் வாங்கிக் கொடுத்திருந்தால் இவ்வளவு எதிர்ப்புகள், கேலிகள் வந்திருக்காது.
எதிர்ப்பவர்களின் நோக்கம் யோகம் அன்று. நரேந்திர மோதி.
இந்தக் கீழ்த்தரமான அரசியல் பார்வைகளால் கவனம் சிதறாமல், சரியான குருவிடம் யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு, மன அமைதியுடனும், ஒருமைப்பாட்டுடனும் கல்வி பயின்று வாழ்வில் வளம் பெறுவீற்களாக. (போட்டோ : இணையத்திலிருந்து)
371571-yogamuslim7

பிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம்

பிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணமும் பயன்களும்

மாணவர்களே, பிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம் குறித்துப் பார்ப்போம்.

பிரதமர் மோதி 2018ல் சிங்கப்புர் ஷாங்ரி லா கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவார் என்று 2017 செப்டம்பரில் முடிவானது. ஷாங்ரி லா கூட்டம் உலகப் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கொருமுறை கூடிப் பேசும் நிகழ்வு. தற்போதைய கொந்தளிப்பான தெற்கிழக்காசியச் சூழலில் பிரதமரின் பேச்சு மிகவும் எதிர்பார்க்கப் பட்ட ஒன்று.

சூழல் இது தான்: சீனா தனது அதிகாரத்தைப் பல வகைகளிலும் காட்டத் துவங்கிவிட்டது. தென்சீனக் கடல் முழுதுமே தனக்குச் சொந்தம் என்று கூறி, அக்கடற் பகுதியில் உள்ள தீவுகளை ஆக்கிரமித்து, புதிய தீவுகளை உருவாக்கி, அதில் தனது விமானப் படையின் விமானங்களையும் தரை இறக்கியுள்ளது. இதனால் வியட்னாம், பிலிப்பன்ஸ், தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், மலேசியா, இந்தோனேசியா முதலிய நாடுகள் அமைதியிழந்துள்ளன.

அத்துடன் சீனா மற்ற நாடுகளான இலங்கை, சூடான், திஜோப்தி முதலான நாடுகளில் துறைமுகங்கள் கட்டப் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளது. அந்த நாடுகள் திருப்பித் தர இயலாத கடன்கள் அவை. கட்டத் தவறினால் துறைமுகங்கள் சீனாவிடுடையவையாகும் அபாயம். இதனால் இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், மலாக்கா நீர்வழி முதலானவை சீனாவின் ஆதிக்கத்தில் வீழும் அபாயம், இவ்வழிகளில் நடக்கும் வணிகம் முழுவதும் சீனாவின் கைக்குச் செல்லும் விபரீத நிதர்ஸனம். இவற்றால் இவ்வழியில் உள்ள நாடுகள் பெரும் கலக்கத்தில் உள்ளன.

வட கொரியா என்னும் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி சீனா அமெரிக்காவையும் ஜப்பானையும் பலமுறைகள் பணியவத்துள்ளது. இக்கட்டுரை எழுதப்படும் நிலையில் வட கொரிய – அமெரிக்க சந்திப்பு நிகழுமா என்னும் கேள்வி உள்ளது. அமெரிக்கா சீனாவையே இந்த ஸ்திரத்தன்மையற்ற நிலைக்குக் காரணம் என்று சொல்லியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றவுடன் அமெரிக்காவின் படைகள் தெற்காசியாவில் இருந்து வெளியேறும் என்றும் டி.பி.பி. என்னும் அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவித்ததை அடுத்தும் சீனாவின் ஆதிக்கம் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.

சீனா தனது சோஷலிசப் பொருளாதாரத்தை விடுத்துச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தால் பெரிதும் வளர்ச்சி அடையும் என்றும், அதனால் அதன் தலைக்கனம் அதிகரித்து தெற்காசிய நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது என்று 1970களிலேயே தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தார் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ. அதனால் ஆசியான்(ASEAN) என்னும் தெற்காசிய னாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவைக் கொண்டுவரப் பெரிதும் பாடுபட்டார். இந்தியாவைச் சீனாவுக்கான Counter Weight என்று சரியாகக் கணித்த தீர்க்கதரிசி லீ, இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப்போரில் குளிர் காய்ந்துகொண்டிருந்த இந்திரா காந்தி  லீயின் பேச்சிற்கு மசியவில்லை. லீ இது குறித்துத் தன் நூலில் குறிப்பிடுகிறார்.

Modi_LKY
Media compares Modi with Lee Kuan Yew

இந்த நேரத்தில் லீயின் மதி நுட்பம், ஹென்றி கிஸ்ஸிஞ்சரின் செயல் திறன் இரண்டுமாகச் சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனைச் சீனாவிற்கு அழைத்துச் செல்கிறது. அதுவரை பேசாத இரு துருவங்கள் பேசிக்கொள்கின்றன. பின்னர் சீனாவில் டெங் ஜியாபெங் பதவியேற்கிறார். சிங்கப்பூரின் லீ குவான் யூ அவருக்கு மதியுரை அளித்துச் சீனாவைக் கம்யூனிசப் போக்கிலிருந்து சந்தைப் பொருளாதாரத்திற்கு மாற்றுகிறார்.

பின்னர் 1991ல் சோவியத் யூனியன் உடைகிறது, உலகம் ஒரு துருவப் பார்வைக்குள் அடியெடுத்து வைக்கிறது. இந்தியாவின் நரசிம்மராவ் Look East Policyயை முன்வைக்கிறார். இந்தியா நிர்வாக, பொருளாதாரச் சீர்திருத்தப் பாதையில் பயணிக்கிறது. சிங்கப்பூரின் பிரதமர் கோ சொக் தொங் அவர்களின் சீரிய முயற்சியால் இந்தியா ஆசியான் நோக்கி நகர்கிறது.

பிரதமர் வாய்பாய் கோ சோக் தோங் சந்திப்பு, பின்னர் 2005ல் CECA – Comprehensive Economic Cooperation Agreement – என்னும் ஒப்பந்தம் என்று இந்திய-சிங்கப்புர் வர்த்தகப் புரிந்துணர்வுகள் நடைபெறுகின்றன. தடையற்ற வர்த்தகம் என்னும் நிலை நோக்கி இரு நாடுகளும் நகர்கின்றன. 2018ல் பிரதமர் மோதியின் சிங்கப்பூர் வருகையில் CECAவின் இரண்டாவது தளம் கையெழுத்தானது. 30 பொருட்களுக்கான சுங்கத் தீர்வை குறைப்பு, வர்த்தகம் அதிகரிப்பு என்று பலமுனைகளில் ஒத்துழைப்பு சீரடையப் பெரு முயற்சி என்று நடந்தேறியது.

ஷாங்ரி லா கூட்டத்தில் பிரதமர் மோதி ஆசியான் கூட்டமைப்பின் தேவை, கடல்வழிப்பதைகளில் அனைத்து நாடுகளுக்கும் உரிமை, நாடுகளிடையேயான சச்சரவுகளை நீதிமன்றங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளுதல், நரசிம்ம ராவ் சொன்ன ‘கிழக்குப் பார்வை’, ஆசியானிக்கான இந்தியாவின் உறுதுணை என்று தெற்காசிய நாடுகளுக்குத் தெம்பளிக்கும் வகையில் பேசினார். சிங்கப்பூர் மருவதற்கு முன் இந்தோநேசியா சென்று அங்கு சபாங் துறைமுகம் அமைக்க உதவி செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோதி சொல்லாமல் சொன்னது என்ன?

  1. தென்சீனப் பகுதி அப்பகுதியின் அனைத்து நாடுகளுக்கும் உரிமையுள்ள பகுதி.
  2. அனைவருக்கும் வர்த்தகம் செய்ய உரிமை உண்டு.
  3. யாருக்கும் ஏகபோக உரிமை இல்லை ( சீனாவிற்குச் செய்தி)
  4. ஆசியான் கூட்டமைப்புக்கு இந்தியா உறுதுணை செய்யும்
  5. அமெரிக்கா இப்பகுதியில் இருந்து விலகினாலும், நாங்கள் இருக்கிறோம்
  6. அமெரிக்க சந்தை(TPP) இல்லாவிட்டாலும் எங்கள் நாட்டுச் சந்தை உள்ளது

பாரதம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் இவை இணைந்த நாற்கரக் கூட்டு (Quadrilateral Alliance) என்ற ஒரு பார்வை உள்ளது. இது சீனாவிற்கெதிரான பாதுகாப்பு அரண். சீனாவின் OBOR – One Belt One Road – திட்டத்திற்கு எதிரான / இணையான ஆனால் சீனாவைச் சாராத ஒரு வணிக, ராணுவக் கூட்டு இது. இதற்கும் சிங்கப்பூரின் பங்களிப்பு தேவையே. ஏனெனில் ஆப்பிரிக்காவில் துவங்கி மலாக்கா கடல் வழி வரையில் உள்ள பாதையில் சிங்கப்பூர் சிறப்பான பொருளியலுடன் இயங்கும் துறைமுக நகரம். ஆகவே இதன் உதவியும் தேவை என்பது வெளிப்படை.

இது தவிர, சிங்கப்பூருடனான ஒப்பந்தங்கள் பல கையெழுத்தாயின. சிங்கப்பூர் – இந்திய வர்த்தகம் கடந்த ஓராண்டில் 14% அதிகரித்து 25பில்லியன் டாலர் என்று உயர்ந்துள்ளது. இது 2005ல் 16.6 பில்லியன் என்று இருந்து, 2017ல் 25 பில்லியன் என்று உயர்ந்துள்ளது. இத்துடன் இந்தியாவில் சிங்கப்பூர் முதலீடு 36.3 பில்லியன் டாலர் ( உலக நாடுகளில் அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது).

கவனிக்க வேண்டியது : சிங்கப்பூர் முதலீடு  2014ல் 22.7 பில்லியன் டாலர். 2017ல் 36 பில்லியன் டாலர். இது மிக கூர்ந்து நோக்கத்தக்கது.

இது தவிரவும், சிங்கப்பூர் ஆந்திர மாநிலத்தில் அமராவதி நகரை வடிவமைத்து வருகிறது. FinTech என்னும் வங்கித் தொழில் நுட்பத்துறையில் சிங்கப்பூர் இந்தியாவுடன் நல்ல பயனளிக்கும் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இந்தியாவின் Smart Nations திட்டத்திற்கு சிங்கப்புர் மிகச் சிறந்த அறிவுரைகளையும் ஒத்துழைப்பையும், அனுபவ அறிவையும் வழங்கிவருவதும் அறிந்ததே. இது தவிரவும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் சிங்கப்பூரின் Hyflux நிறுவனம் குடிநீர் தொடர்பான பணிகளில் உதவி வருவதும், இந்தியத் துறைமுகங்கள் மேம்பாட்டிற்குச் சிங்கப்பூரின Keppel Corporation தனது மதியுரைகளை வழங்கி வருவதும் நாம் அறிந்ததே.

நான்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் (NTU) இந்திய முதலீட்டாளர் 4 மில்லியன் டாலர் வழங்கியுள்ளார். இதனால் NTUவிற்கும், IIT-Madras, IISc-Bangaloreற்கும் தொடர்பு ஏற்பட்டு, மாணவர்கள் மூன்று பல்கலைகளையும் இணைத்த முனைவர் பட்டப் படிப்புக்களைப் பெறவியலும். இதுவும் மோதியின் பயணத்தின் போது நடந்த ஒன்று.

narendra-modi-and-lee-hsien-loong-2
PM Modi and PM Lee Hsien Loong

சிங்கப்பூரில் NETS என்னும் பணப் பரிமாற்றச் சேவை உள்ளது. கடைகளில் இதன் மூலம் அட்டைகளைக் கொண்டு பணம் செலுத்தவியலும். இந்தியாவில் அவ்வாறே RuPay என்னும் வழிமுறை உள்ளது. இனி NETS அட்டைகளின் வழி இந்தியாவிலும், RuPay அட்டைகளின் வழி சிங்கப்பூரிலும் பணப் பரிமாற்றச் சேவை, பொருட்களை வாங்குதல் முதலிய சேவைகளைப் பெறலாம். இதனால் Visa, MasterCard முதலான அமெரிக்க நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய சேவைக் கட்டணத்தைத் தவிர்க்கலாம். இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் பயனளிக்கும் சேவையாகும். இதுவும் பிரதமர் மோதியின் வருகையின் போது நிகழ்ந்த ஒன்று. (பிரதமர் சிங்கப்புர் லிட்டில் இந்தியாவில் உள்ள இந்திய மரபுடமைக் கழகத்தில் ஒரு ஓவியத்தைத் தனது RuPay அட்டை மூலம் வாங்கினார்)

இம்முறை கையெழுத்தான சில ஒப்பந்தங்கள்:

  1. இந்தியத் தாதிமைப்(Nursing) படிப்புக்கான அங்கீகாரம்
  2. இணையப் பாதுகாப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம்
  3. போதைப் பொருள் தடுப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம்
  4. பாதுகாப்புத் துறை – புரிந்துணர்வு ஒப்பந்தம்
  5. Enterprise Singapore – National Skills Development Corp கூட்டியக்க ஒப்பந்தம்

சிங்கப்புரில் தாதியர்களுக்கான தேவை பெரிய அளவில் உள்ளது. ஆகவே இந்தியாவில் தாதிமைப் பயிற்சி / அனுபவம் உடையவர்கள் பலருக்குச் சிங்கப்புரில் வேலைக்கான ஏற்பாடு தாதியர்களுக்குப் பெருத்த உவகையளிக்கும்.

இந்திய Start-up நிறுவனங்கள் தற்போது 4760 உள்ளன. இது உலகில் மூன்றாவது எண்ணிக்கை. இந்த நுறுவனங்களுக்கான துவக்க நிதி 2016ல் 4.06 பில்லியன் அமெரிக்க டாலர். ஆனால் 2017ல் 13.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்று அதிகரித்துள்ளது. இந்த மாபெரும் Start-up கூட்டியக்கத்தைச் சிங்கப்பூர் பயன்படுத்திக் கொள்ள உள்ளது. தனது Start-up நிறுவனங்கள் இந்திய Start-upகளுக்கான பங்குச் சந்தையைப் பகிர்ந்துகொள்ளவும், அவற்றுடன் இணைந்து செயலாற்றவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சுமார் 10,000 நிறுவனங்கள் என்றூ உயர வாய்ப்புள்ளது என்று சிங்கப்புரின் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

நான்யாங் தொழில் நுட்பப் பல்கலையில் நேர்காணலில் பிரதமர் சிறப்பான மதியுரை வழங்கினார். இந்திய-சிங்கப்பூரிய மாணவர்களிடையே ஹேக்கத்தான் (Hackathon) நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்றும், அதனால் பல புதிய புத்தாக்கச் சிந்தனைகள் உதயம் ஆகும் என்றும் சொன்னார். இம்முறை சிங்கப்பூரில் மென்பொருள் நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள ஒன்று. ஆனால் இரு நாட்டு மாணவர்களின் அறிவுத்திறத்திற்கும் விருந்தாய் அமைந்தது இந்த மதியுரை.

இந்தியக் கடற்படைக் கப்பல்களுக்கும், நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் சிங்கப்பூர் எரிபொருள் மற்றும் பராமரிப்புச் சேவைகளை அளிக்கவிருக்கிறது. வியத்னாம் பகுதியில் உள்ள ONGC நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளுக்கான பாதுகாப்புப் பணிகளுக்காகவும், ஆப்பிரிக்கக் கண்டம் முதல் மலாக்கா கடல் வழி வரையிலான கடல்வழிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இந்தியக் கடற்படைக்கு இச்சேவை மிகவும் பயனளிக்கும்.

ஷாங்ரி லா கூட்டத்தில் பிரதமர் மோதி கடல் வழி / வான் வழிப் பாதுகாப்பு குறித்துப் பேசியதையும், அமெரிக்க அரசு பசிபிக் கமாண்ட் (PACOM) என்னும் தனது பிரிவை இந்தோ-பசிபிக் கமாண்ட்(US Indo-Pacific Command) என்று மாற்றி அமைத்துள்ளதையும் ஒப்பு நோக்கினால் உலகம் செல்லும் திசையும் அதில் இந்தியாவின் முக்கிய நிலையும் புரியும்.

இவை குறித்து மேலும் கேள்விகள் இருப்பின் கேளுங்கள்.

பேஸ்புக்கில் இணைந்திருக்க :

https://www.facebook.com/amaruvidevanathan

தரவுகள்:

  1. http://www.thejakartapost.com/academia/2018/05/30/indian-pm-modis-oleh-oleh.html
  2. https://www.straitstimes.com/singapore/lets-have-indian-and-singapore-students-take-part-in-joint-hackathon-modi-to-pm-lee
  3. https://www.straitstimes.com/singapore/modi-in-spore-for-three-day-official-visit
  4. https://www.businesstimes.com.sg/government-economy/singapore-startups-to-gain-faster-access-to-indias-startup-ecosystem
  5. https://www.republicworld.com/world-news/south-asia-news/on-pm-modis-visit-india-and-singapore-sign-8-mous-heres-all-you-need-to-know
  6. http://theindependent.sg/modi-does-a-lee-kuan-yew-to-stamp-out-corruption-in-india/
  7. India Rising – Ravi Velloor

 

 

 

மோதியைக் கும்பிடடி பாப்பா

மோதியைக் கும்பிடுகிறார்கள். மோதி பக்தர்கள். சங்கிகள். பாசிச துதிபாடிகள். இந்துத்வ முட்டாள்கள். அடிப்படைவாதிகள். காவிகள். பண்டாரப் பரதேசிகள்.

இந்தியாவைப் புகழ்ந்து அல்லது பிரதமர் மோதியின் ஏதாவது ஒரு செயல்பாட்டைப் புகழ்ந்து நீங்கள் எழுதியிருந்தால் உங்களை மேற்சொன்ன அடைமொழிகளால் அழைத்திருப்பார்கள்.  கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்தால் ‘Howling Brigade’ என்று அழைப்பர்.

மோதியைப் புகழ்வதும் பாரதத்தைப் புகழ்வதும் ஒன்றில்லை என்றும் அறிவுறுத்துவர். மோதி குஜராத்தை இந்துத்வப் பாசறையாக்கினார் என்பர். கொலைஞர் என்பர்.

யார் இவர்கள்? ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?

சாதாரண தேநீர் விற்பவர் தேசத்திற்குத் தலைவனானதை சீரணிக்க இயலாத கயவர்கள். ஒளியிழந்த தேசம் பொலிவுருவதை விரும்பாத புல்லர்கள். பாழ்பட்டு நின்ற தேசம் பேரொளி பெறுவதைப் பொறுக்காதவர்கள். பூசணிக்காயளவு ஊழலையே பார்த்துப் பழகிய நமக்கு நெல்லியளவு கூட ஊழல் இல்லாமல் அரசு நடத்த முடியும் என்று காட்டியதைப் பொறுக்க முடியாதவர்கள்.

இவர்கள் குற்றச்சாட்டுகள் என்ன?

மோதி கறுப்புப் பணத்தை மீட்கவில்லை. சுவிட்சர்லாந்து சென்று ஆல்ப்ஸ் மலையைப் பார்த்தார். வேறென்ன செய்தார்? கருப்புப் பணம் வரவில்லையே?

இப்படிச் சொல்பவர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடுவார்கள். அல்லது மறந்தது போல் நடிப்பார்கள். ஒரு நிறுவனத்தின் மேல் கடும் நடவடிக்கை வந்துள்ளது. அதில் பல வெளி நாட்டு அரசு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ‘வாசன் ஐ கேர்’ எனப்படும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்தி சிதம்பரம். அவரது தந்தை ப.சிதம்பரம், முன்னாள் இந்திய நிதியமைச்சர். இதில் என்ன விசேஷம்? தற்போது வாசன் ஐ கேர் மீது கருப்புப் பண விசாரணை நடைபெறுகிறது. கண்ணில் எண்ணெய் விட்டுக்கொண்டு செயல்படும் பல வெளி நாட்டு அரசு முதலீட்டு நிறுவனங்கள் இவரது பெயரில் நம்பிக்கை கொண்டு முதலீடு செய்துள்ளன. வெளி நாட்டு நாடுகளின் அரசு நிறுவனங்களையே ஏமாற்றிய சிதம்பரத்தின் பெயர் இந்த நடு நிலையாளர்களால் உச்சரிக்கப்படாது.

அதை மட்டும் பேச மாட்டார்கள். கனிமொழி பற்றியும் இந்த நடுநிலையாளர்கள் பேச மாட்டார்கள். அவர்களின் முதலீடுகள் பல இடங்களில் உள்ளன.  இன்று தமிழ் எழுத்தாளர்கள் என்ற பெயருடன் உலவுபவர்கள் பலர், பல சமயங்களிலும் கலைஞர் குடும்பத்துடன் தொடர்பில் இருந்தவர்கள். அக்குடும்பத்தால் சில / பல ஆதாயங்கள் அடைந்தவர்கள். இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

சரி. இப்படிச் சொல்பவர்களின் தரம் என்ன?

தமிழர்களைக் கொன்று குவித்த, தன் சுயநலத்திற்காக இளம் பெண்களை வெடிகளாக்கி வெடிக்க வைத்த ‘வீரனை’ தலைவன் என்று போற்ற வேண்டும் என்று வாதிடுபவர்கள் ஒரு புறம். இந்தியா என்பதே இல்லை; அப்படி இருப்பின் அதனைத் துண்டாட வேண்டும் என்று சொல்லும் இடதுசாரி, மார்க்ஸீய மண்டூகர்கள் இன்னொருபுறம்.

சிறுபான்மையினரை பயமுறுத்தியே வைத்துள்ள ‘நடு நிலையாளர்’ ஒருபுறம். அதாவது -‘ நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம். உங்கள் மத நம்பிக்கைகள் தகர்க்கப்படலாம். எனவே எங்களுக்கே வாக்களியுங்கள். நாங்கள் அப்படி எதுவும் நடந்துவிடாமல் பாதுகாக்கிறோம்,’ என்று சொல்லி, பயமுறுத்தி, அவர்களைச் சுயமாகச் சிந்திக்கவிடாமல் ஒரு மந்தையாகவே பாவித்து, அவ்வாறே நடத்தி வரும் இடது சாய்வுள்ள காங்கிரஸ் ஒருபுறம். இதே கருத்தை முன்வைக்கும் ஊடகங்கள் இன்னொருபுறம்.

சில ‘முற்போக்கு’களைப் பார்ப்போம்.

பகுத்தறிவுப் பகலவனின் கொள்ளுப் பேரன் ஈ.வி.கெ.எஸ். இளங்கோவன், ஜெயலலிதாவைத் தனிப்பட்ட முறையிலும், ஜெயலலிதாவையும் மோதியையும் சேர்த்தும் ஆபாசமாகப் பேசியதை எத்தனை முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்கள் கண்டித்தார்கள்? எத்தனை ஊடகங்கள் கண்டித்தன? முற்போக்கு முகமூடி கிழிந்துவிடும் என்பதால் வாயை மூடிக்கொண்டிருந்தார்கள் என்று கொள்வோம்.

கலைஞரையும் குஷ்புவையும் இணைத்து ஒரு வதந்தி வந்த போது பொங்கி எழுந்த பொங்கல்கள் இப்போது எங்கே என்று கேட்கக் கூடாது. அது பகுத்தறிவுப் பொங்கல். அவ்வப்போது தான் பொங்கும். அவ்வப்போது அப்படிப் பொங்குவது தமிழ் எழுத்தாளன் என்பதற்கான அடையாளம் போல.

ஜெயலலிதாவை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அவர் சாதி அப்படி. மோதியை என்னவேண்டுமானாலும் சொல்லலாம். அவர் கட்சி அப்படி. இதற்கெல்லாம் பொங்க பொங்கல்கள் இல்லை. பொங்காமல் இருப்பது ஊடக தர்மம்.

சுப்பிரமணிய சுவாமி ஒரு முறை பிரபாகரனை ‘International Pariah’ என்றார். உடனே பொங்கல்கள் பொங்கின. ‘சாதி’யைச் சொல்கிறார் என்றன. அந்த வார்த்தை ஆங்கில அகராதியில் ‘out cast, persona non grata’ என்கிற பொருளில் உள்ள சொல். இதில் பொங்கல்கள் மறைத்த உண்மை என்னவென்றால் பிரபாகரன் அந்த சாதியைச் சார்ந்தவர் அல்லர் என்பது மட்டும் அல்ல, ஈழத்தில் கிழக்கு வடக்கு மாகாணங்களுக்குள் சாதி வேறுபாட்டால் கொடுக்கல் வாங்கல் கூட இருப்பதில்லை என்பதையும் தான். இதைப் பல ஆண்டுகள் கழித்து ஈழ நண்பர் ஒருவர் எதேச்சையாக சொன்ன ஒரு சொல்லின் மூலம் அறிந்துகொண்டேன். ஆனால் இவை எதையும் நம் முற்போக்குத் தமிழ் எழுத்தாளர்கள் சொல்லமாட்டார்கள். சாதி என்பதே இல்லை என்று பம்மாத்து, வெளிப்பூச்சு வேலை செய்து ஊடகங்களில் பெயர் வாங்கி காலட்சேபம் செய்வது மட்டுமே இவர்களது நோக்கம்.

எந்த முற்போக்குத் தமிழ் எழுத்தாளராவது குறிப்பிடும்படியான ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார்களா? புலனாய்வு என்கிற பெயரில் நடிகைகளின் அந்தரங்கங்களை வெளிக்கொணர்கிறார்கள். இப்படி ஒரு பிழைப்பு பிழைப்பதற்கு குட்டிச் சுவராகப் பார்த்து முட்டிக் கொள்ளலாம்.

தமிழக சட்ட சபையில் ஒருமுறை எம்.ஜி.ஆர். கலைஞரிடம்,’கனிமொழி யார்?’ என்று கேட்டாராம். அதற்குக் கலைஞர்,’அவள் ராசாத்தி அம்மாளின் புதல்வி’ என்று சாமர்த்தியமாகப் பதில் அளித்தார் என்று சில எழுத்தாளர்கள் கலைஞரின் ‘அறிவாற்றல்’ பற்றிப் பேசுவார்கள். இந்த வெட்கக்கேட்டை ஒருவர் சபையில் கேட்டதே மானக்கேடு. அதற்கு ‘சாமர்த்தியமாக’ பதில் அளித்தது அதனினும் கீழ்மை. இதை எழுதினால் பெரிய எழுத்தாளன் என்று கொண்டாடிக் கொள்ளலாமா? பகுத்தறிவுப் பாசம் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது?

மோதி அமெரிக்காவில் என்ன செய்யச் சென்றார் என்று கேட்பதை ஒரு சொலவடையாகக் கொண்டுள்ளார்கள். ஊர் சுற்றுகிறார் என்று சொல்கிறார்கள். ஊர் மேய்வதைக் காட்டிலும் சுற்றுவது ஒழுக்கக் கேடானதல்ல. ஒவ்வொரு முறையும் சில ஆயிரம் கோடிகள் அன்னிய முதலீடு வருகிறதே. அதைக் காணாமல் இருப்பது பகுத்தறிவு தான். தெரிகிறது.

பிரும்மச்சாரி ஞானி ஒருவர் இருக்கிறார். நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம். ஆனால் அந்த ஞானி தாய்லாந்து போனார். ஓய்வு எடுக்கிறாராம். நாட்டின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர், நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது தாய்லாந்தில் ஒய்வெடுக்கிறார். நாளைய பிரதமராம். நம்மைக் காக்கப் போகிறாராம். தலை எழுத்து. இது பற்றி வெட்கம் இல்லாமல் கட்சியின் தலைவர்கள் பேசிய பேச்சும், நழுவிய நழுவலும். முனிசிபாலிட்டி வேண்டாம், ஒரு பஞ்சாயத்துக்குக் கூட தலைவராகத் தகுதி இல்லாத ஒருவரை நம்பி பெரிய கட்சி நடக்கிறது. ஊடகங்கள் ஊமையான கதை அது.

மோதி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது ஒரு முறை,’அவரவர்கள் செய்யும் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும்,’ என்று சொன்னார். அதை ‘துப்புறவுத் தொழிலாளர்’ குறித்து சொன்னார் என்று தமிழ் மெகா அறிவாளியும் ஈரோட்டின் வாரிசுமான சத்தியராஜ் என்னும் நடிகர் வானுக்கும் மண்ணுக்கும் குதித்தார். ‘விடுதலை’ என்னும் தமிழ் நாட்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பொரிந்து தள்ளியது.  அவர் சொன்னது என்னவென்று கேட்காமலே உளறுவது என்பதே தமிழ் நாட்டு முற்போக்குப் பத்திரிகை தர்மமாகையால் அவ்வாறு பொரிந்தன(ர்) என்று கொள்ளலாம்.

அப்படி குரைத்தே ஆக வேண்டிய கட்டாயம் என்ன?

வேறென்ன? கூலி தான்.

நாணம் இன்றி, அன்னிய மதமாற்றுச் சக்திகளிடம் பணம் பெற்று, கூலிக்கு மாரடிக்கும் கூத்தாடிக் கும்பல்களுக்கு வேறென்ன நோக்கம் இருக்க முடியும்? தில்லிக்குச் சென்று, இலவசமாய் உண்டு, உறங்கி, பின் எழுந்து  அரசை வசைபாட லுட்யென்ஸ் பூங்காவில் இடம் இல்லையே. ஓலமிட இடம் இல்லாமல் செய்துவிட்டாரே மோதியின் அமைச்சர் வெங்கைய நாயுடு. ஆக இருக்கும் இடங்களில் இருந்தே உரக்க ஓலமிடுவோம் என்று முழங்குகின்றன வெற்று ஊளைகள். ஆனால் ஒன்று. இந்த ஊளைகள் கொடுத்த காசுக்கு விசுவாசமானவர்கள். விலையைக் காட்டிலும் அதிகமாக ஊளை இடுவார்கள். சில ஆங்கில நாளேடுகளைக் கண்டாலே தெரியும்.

எத்தனை குரைத்தாலும் இன்றைய நிதர்ஸன நிலை என்ன? அணு உலைகளுக்கு யுரேனியம் வழங்க மறுத்த ஆஸ்திரேலியா இன்று நமக்கு ஏற்றுமதி செய்கிறது. உறவு துண்டிக்கும் நிலையில் இருந்த ஜப்பான் இன்று இந்தியாவில் அதிவேக ரயில் திட்டங்களில் 0.1% வட்டியில் கடன் கொடுத்து தொழில் நுட்ப உதவியும் செய்கிறது. ஹைதராபாத்தில் புதிய தலை நகரம் அமைய சிங்கப்பூர் வடிவமைப்பு செய்கிறது, ஜப்பான் கட்டுகிறது. அமெரிக்கா அணு ஒப்பந்தங்களில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு அளிக்கிறது. ஏவுகணை ஒப்பந்தத்தில் சேர்க்கை. நிலக்கரி இறக்குமதி குறைகிறது அயினும் மின் உற்பத்தி கூடுகிறது. நிலக்கரி ஏலம் கணிணி முறையில் வெளிப்படையாகிறது. 2ஜி அலைக்கற்றை ஏலத்தால் அரசுக்குப் பணம்.

Modi_1அபுதாபியில் கோவில் கட்ட நிலம் தருகிறார்கள். அவர்கள் நாட்டில் இருந்து எண்ணெய் எடுத்து இந்தியாவில் வைக்கச் சொல்கிறது அபுதாபி அரசு. ஈரானில் புதிய துறைமுகம்.  ஆப்கானிஸ்தானில் அணை கட்டுகிறது இந்தியா. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்கிறது. இலங்கைக் கடற்படை இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்தியுள்ளது.

பிரதமர் கேட்டுக்கொண்டார் என்பதற்காக எரிவாயு மானியம் பெறுவதை மக்களாகவே முன்வந்து கைவிடுகின்றனர். பல ஆண்டுகள் கழித்து ஏர் இந்தியா நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது. ஏமனில் இருந்து இந்தியர்களை நாட்டுக்குப் பாதுகாப்பாக அழைத்துவந்தது, சவூதி அரசு பணிந்து செயல்படுவது – இவை எதுவுமே காதில் விழாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் ஒரு படி மேலே போய், இப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பது போல் நடிக்க வேண்டும். பேசாமல் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் இப்படி வேடம் போடுவதற்குப் பதில். மீறிப் பேசினால் நீங்கள் ‘பாஸிச அபிமானிகள்’.

மோதி அமெரிக்கப் பாராளுமன்றத்தில் பேசியதைக் கூட பாராட்டக் கூடாது என்கிறார்கள். அவர் டெலிபிராம்ப்டரில் பார்த்துத்தான் பேசினார் என்று சொல்ல வேண்டுமாம். பாங்காக்ல் ஓய்வெடுத்த ஞானி இரண்டு வார்த்தை பேசினால் நோபல் பரிசு கொடுக்க வேண்டிய அளவு பாராட்டச் சொல்கிறார்கள். ஞானியின் தாயார் ஒரு வார்த்தை பேசினால் ‘அக்‌ஷர லட்சம்’ பெறும் என்று பாராட்டச் சொல்கிறார்கள். அதை ‘மதச்சார்பின்மை’ என்கிறார்கள். இதுவே ஊடக தர்மம் என்றும் அறியப்படுகிறது. இந்தப் பிழைப்பு பிழைப்பதற்கு நல்ல குட்டிச் சுவற்றில் முட்டிக்கொள்ளலாம். அல்லது காங்கிரசில் சேர்ந்துவிடலாம்.

வெகு நாட்கள் பேசாமல் இருந்த சோனியா அம்மையார் பாராளுமன்றத்தில் ஒரு நாள் வாய் திறந்தார். ‘Sonia lamblasts the govt’ என்று ஹிந்து தலைப்புச் செய்தி. அப்படி என்ன ‘லாம்பிளாஸ்ட்’ செய்தார்? வாய் திறந்து பேசினார். அதற்கு அவ்வளவு ஒலிப் பெருக்கம்.

மோதி பல விஷயங்களைப் பேசிவிட்டு ‘தீவிரவாதமும் மதமும் தொடர்பற்றவை’ என்று போகிற போக்கில் சொல்லி வைத்தார். மறுநாள் ஹிந்துவில் “‘De-link religion from terror’ says Modi” தலைப்புச் செய்தி. மோதி விவேகானந்தர் பற்றி, வாஜ்பாய் பற்றி காந்தி பற்றி லிங்கன் பற்றி,  மார்ட்டின் லூதர் கிங் பற்றியெல்லாம் பேசியது விஷயம் இல்லையாம். இது என்ன ஊடக தர்மமோ என்ன கண்றாவியோ.

ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத இலக்கியம், நூல் ஆய்வுகள், பண்டைய நூல்களில் உள்ள விஞ்ஞானச் செய்திகளை வெளிக்கொணர்தல் என்கிற அளவில் ஆராய்ச்சிகள் செய்யலாம் என்று மனிதவள அமைச்சு பேசத்துவங்கியது. உடனே பொங்கல் வைக்கத் துவங்கிவிட்டனர். ஏற்கெனவே சீன மொழி அங்கு பயிற்றுவிக்கபடுகிறது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் வெற்றுச் சூளுரைகள் பறக்கத் துவங்கிவிட்டன. தேர்தலில் மண்ணைக்கவ்விய தன்மானத் தலைவர்கள் பொங்கல் வைக்க அரிசி வாங்கச் சென்றுவிட்டனர்.

ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதம் இருக்கட்டும். தருண் விஜய் என்னும் பா.ஜ.க. எம்.பி. திருக்குறளுக்காக வாதிடுகிறார். கங்கைக்ரையில்  திருவள்ளுவருக்குச் சிலை வைக்கப் போகிறார். திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்கிறார். நாடாளுமன்றத்தில் திருக்குறளை இசைக்கச் செய்கிறார். இத்தனைக்கும் ஹிந்திக்கார எம்.பி. அவர். இத்தனை வருடங்கள் தமிழினத் தலைவர்கள் ஆட்சியில் இருந்தனரே என்ன கிழித்தார்கள்? தமிழ் எம்.பி. என்றாலே ஊழல் பெருச்சாளி என்கிற முத்திரையைப் பெறுவதைத் தவிர கிழித்த கிழி என்ன? தமிழனின் கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கியதைத் தவிர சாதித்தது என்ன? ஹிந்தி பேசும் எம்.பி.க்குத் திருக்குறள் மேல் இருக்கும் அக்கறை இரு கழகக் கண்றாவிகளுக்கும் இல்லாமல் போனது ஏன்?

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.ல் இருப்பதற்குத் தடை இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. எனவே அந்த அரசாணையை நீக்கலாம் என்று அரசு சிந்தனை செய்கிறது என்கிறது ஒரு செய்தி. உடனே முற்போக்குகள் பொங்கத் துவங்கிவிட்டன. போகப்போக அது பொங்கலா அல்லது பழங்கஞ்சியா என்று தெரியவரும்.

‘மன் கி பாத்’ என்று பிரதமர் வானொலி மூலமாக மக்களிடம் பேசுகிறார். நேருவுக்குப் பிறகு வேறு எந்தப் பிரதமர் இப்படிப் பேசியுள்ளார்?  அதிலும் மக்களைப் பாதிக்கும் அன்றாட நிகழ்வுகள் குறித்துப் பேசுகிறார். மாணவர்களுக்கு தேர்வுகள் நேரத்தில் அறிவுரை வழங்குகிறார். மாநில முதல்வர் மகாராணியைப் போல் இருக்க, ஒன்றுக்கும் உதவாத கவுன்சிலர்கள் கூட குறுநில மன்னர்கள் போல் செயல்பட, அப்படியெல்லாம் இல்லாமல், பெற்ற தந்தை போல் செயல்படும் பிரதமரை வாழ்த்த வேண்டாம் ஐயா, குறை கூறாமல் இருக்கலாம் தானே!

மோதியை எதிர்ப்பது ஒரு மனநோய். அந்த நோய் வராமல் பாதுகாக்க அந்தப் பராசக்தி துணைபுரிய வேண்டும்.

(தொடரும்)

என்ன கவருமெண்டோ !

என்ன கவருமெண்டு நடக்குதோ. ஈராக்லேருந்து 40 பெண்களைக் காப்பாத்திக் கொண்டுவந்தாங்களாம். ஒரு பாராட்டுவிழா, முப்பெரும் விழா, கவிமாலை, பட்டிமன்றம், திரை உலகினர் பாராட்டு விழா – ஒண்ணும் இல்லே. ‘பெண்களை மீட்ட பிதாமகனே’ன்னு ஒரு பட்டமாவது உண்டா ? ஒரு காலத்துலே ஒரு நாளைக்கு நாலு விழா எடுத்து எப்பிடி கோலாகலமா இருந்தோம். ஹூம்

#பகுத்தறிவு

%d bloggers like this: