தினமும் யாராவது ஒருவருக்கு ரெம்டிசிவிர் தேவைக்காக ஃபோன் பண்ணுகிறேன், குறைந்தது இருவருக்கு மருத்துவமனையில் இடம் தேடி அலைகிறேன், யாராவது ஒருவருக்காவது ஆக்ஸிஜன் வேண்டிப் பேசுகிறேன்.
இவர்கள் எல்லாம் யாரென்று தெரியாது. நான் ஏன் பேசுகிறேன் என்றும் தெரியாது. நான் பேசுவதால் மறுபுறத்தில் யாரோ ஒருவர் வேறு யாரிடமோ பேசி ஏதோ ஏற்பாடு செய்கிறார்கள். நான் யாரென்று அவருக்கும் தெரியாது. அவர் யாரிடம் பேசுகிறார் என்பது எனக்கும் தெரியாது. மூன்றாம் நபர் யாருக்காக உதவி செய்கிறார் என்பது அவருக்கும் தெரியாது.
யாருக்காவது உதவி தேவை என்று தெரிந்தால் இணைந்துள்ள பள்ளி வாட்ஸப், அலுவல, இலக்கிய வாட்ஸப் குழு என்று கேட்கிறேன். கேள்வியே இல்லாமல் யாரோ எங்கிருந்தோ உதவுகிறார்கள். நான் யாருக்குக் கேட்கிறேன் என்று எனக்கும் தெரியாது. யாருக்குச் செய்கிறோம் என்று அவர்களுக்கும் தெரியாது. ஓரிரு முறை மட்டுமே நண்பர்களின் உறவினர்களுக்கு உதவ முடிந்தது. மற்ற நேரங்களில் எல்லாம் யாருக்கோ, யாருடைய கணவருக்கோ, யாருடைய தாயாருக்கோ, யாருடைய மகளுக்கோ, பேத்திக்கோ..
எவ்வளவு பேர் பிழைத்தார்களோ தெரியவில்லை. பிழைத்தவர்கள் மறுபடியும் அழைத்து நன்றி சொன்னாலும் தெரியாது என்று நினைக்கிறேன். நான் மட்டும் சாஸ்வதமா என்ன?
இனம், மொழி, மதம், சாதி, மண்ணாங்கட்டி என்று எதுவும் தெரியாமல், கேட்காமல் ஒரு தொடர் சங்கிலி வேலை செய்கிறது. வேறொரு நாள் வேறொரு சங்கிலி. ஒரே நாளில் பல சங்கிலிகள். கடும் கோபத்துடன் துரத்திவரும் பேய் ஒன்றிடமிருந்து யாரையாவது எப்படியாவது காப்பாற்ற வேண்டியது மானுட அறம் என்கிற ஒரே உந்துதல் தான்.
எந்த உதவி என்று கேட்டாலும் ‘இந்த வாட்ஸப் குரூப்பில் இதைப் பேச அனுமதி இல்லை’ என்கிற செய்தி வருவதில்லை. அந்த அளவிற்கு எதையாவது செய்து, எப்படியாவது மக்களைக் காக்க வேண்டும் என்கிற பெரிய உத்வேகம் மட்டுமே எல்லாருடைய உள்ளங்களிலும் இருப்பதைக் காண முடிகிறது.
நான் வெளியில் எங்கும் அலைந்து செய்வதில்லை. ஆனால், பலர் அப்படிச் செய்கிறார்கள். அவர்கள் மனித உருவில் நடமாடும் தெய்வங்கள். அவர்கள் அனைவருக்கும் என் பிரணாமங்கள்.
எனக்கு எழுத வருகிறது, எழுதுகிறேன். எழுத முடியாத, எழுத வேண்டும் என்கிற எண்ணம் இல்லாத, அந்த நேரத்திலும் யாருக்காவது உதவலாம் என்று ஓடிக்கொண்டிருக்கும் உத்தமர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், முன் களப் பணியாளர்கள், முக்கியமாகக் காவலர்கள் – அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
பொலிக பொலிக.