'அப்பாவின் ரேடியோ' – வாசிப்பு அனுபவம்

‘அப்பாவின் ரேடியோ’ என்னும் ஒரு நூல் எங்கோ கிடைத்தது.

முன், பின் அட்டைகள் இல்லை. எழுத்து நடை சுவரஸ்யமாக இருந்த்தால் படிக்கத் துவங்கினேன். சுஜாதாவின் ஏதோ தெரியாத நூல் என்று நினைத்திருந்த எனக்கு அதிர்ச்சி அளித்தது நூலின் நடுவில் இருந்த பின் அட்டை. அதில் எழுத்தாளர் சுஜாதா இந்த நூலின் ஆசிரியரைப் பற்றிச் சொல்கிறார். ஆசிரியர் சுஜாதா தேசிகன்.

நிஜ வாழ்வில் தேசிகனின் மனைவி பெயரும் சுஜாதாவாம். ஆனால் தேசிகன் எழுத்தாளர் சுஜாதாவின் தீவிர ரசிகர். சுஜாதாவே தான் எழுதிய நூல்கள் பற்றிய சந்தேகங்களை இவரிடம் கேட்பாராம்.

ஆக புஸ்தகம் சுஜாதாவினுடையது அல்ல என்பது புலனாகியது. ஆனால் நடை அப்படியே சுஜாதா. கதை முடிவில் உள்ள திருப்பம், அதிகம் செலவாகாமல் சொற்களை அளவாகக் கையாளும் பாங்கு, புதிய பார்வை – அசத்துகிறார் ஆசிரியர். வாழ்க தேசிகன்.

‘அப்பாவின் ரேடியோ’ ஒரு சிறுகதைத் தொகுப்பு. பல கதைகள் என்னை பாதித்தன. அவற்றுள் ஒன்று ‘ராமானுஜலு’. Short and Sweet என்று நச் என்று இருக்கிறது கதை. தற்கால வைஷ்ணவர்கள் சிந்திக்க வேண்டும்.

‘லக்ஷ்மி கல்யாண வைபோகமே ராதா கல்யாண வைபோகமே’ ஐயங்கார்களின் கல்யாண ஏற்பாடுகள் பற்றிய நெத்தியடி. அதுவும் ‘ நரசிம்மப்பிரியாவில் தென்கலைன்னா எளக்காரமா பாப்பா’ என்பது உண்மை போல் தான் தெரிகிறது. கடைசியில் பாட்டி ‘இதுவரைக்கும் ஐயங்கார்ப் பையனா பார்த்துப் பண்ணிண்டானே ..’- செம நக்கல்.சுஜாதா படித்திருந்தால் சிரித்திருப்பார்.

‘பாட்டனாரெல்லாம் மூணு வேளை அக்னி வளர்த்தா. இப்ப நாங்க இரண்டு வேளை விளக்கேத்தறோம்’ – இது ஐயங்கார்களின் நிதர்ஸன உண்மை.

‘..திருநட்சத்திரத்துக்குப் போயிருந்தோம். மூணு வேளையும் நல்ல சாப்பாடு. வயசான காலத்துல ஏதோ கைங்கைர்யம்’ – நல்ல ஹாஸ்யம்.

‘பெருங்காயம்’ என்னும் தேரழுந்தூர் பற்றிய கதை. கதையல்ல. அதுவே உண்மை. 40 ஆண்டுகளுக்கு முன் முஸ்லீம்களிடம் வீடுகளை விற்று வெளி ஊர்களுக்கு வேலைக்குச் சென்று ஓய்வு பெற்று தேரழுந்தூர் திரும்ப விரும்பும் பெரியவர்கள் பலரை எனக்குத் தெரியும். எழுத்தாளர் தேசிகனுக்கு எனது விசேஷ வந்தனங்கள். கதையின் துவக்கத்தில் உள்ள திருமங்கையாழ்வார் பாசுரம் கதைக்கு மிகப் பொருத்தம்.

‘பிச்சை’ கதை கண்களில் நீர் வரவழைத்தது. பல குடும்பங்களில் இப்படி நிகழ்ந்துள்ளது உண்மை.

நூலுக்குக் காரணமான ‘அப்பாவின் ரேடியோ’ கதை பல பழைய நினைவுகளை வரவழைத்தது. எங்கள் வீட்டிலும் அப்படி ஒரு ரேடியோ வாங்கப்பட்டது. ஆனால் அது பிலிப்ஸ் ரேடியோ. ரொம்ப நாட்கள் வரை வேலையும் செய்து வந்தது.

மொத்தம் 23 கதைகள். என்னைக் கவர்ந்தவை இவை. இக்கதைகளைப் பற்றி, இவற்றை எழுதக் காரணமான நிகழ்ச்சிகள் பற்றி திரு.தேசிகன் எழுதினால் இன்னமும் சுவைக்கும்.

சுஜாதா இன்னமும் நம்முடனேயே இருக்கிறார்.

சிங்கப்பூரில் நூலகத்தில் கிடைக்கிறது. சென்னையில் இங்கே வாங்கலாம்.

தென்கலை * வடகலை – ஸ்டார்ட் மீஸிக்

திருமழிசையாழ்வார் தென்கலை சம்பிரதாயத்தை வலியுறுத்துகிறார் என்று சொல்கிறேன்.  கொஞ்சம் கொளுத்திப் போடலாம் என்று எண்ணம். எதிர் வினைகள் எப்படி வருகின்றன என்று பார்க்கலாம் என்று தோன்றியது.

நான்முகன் திருவந்தாதி என்னும் பாடல் தொகுப்பை எழுதினார் திருமழிசையாழ்வார். அதில் ஒரு அந்தாதிப் பாடல் :

“வித்தும் இடவேண்டும் கொல்லோ விடை அடர்த்த
பத்தி உழவன் பழம் புனத்து? மொய்த்து எழுந்த
கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து”

இறைவன் பக்தி உழவன். அவனது நிலத்தில் நாம் ஒரு விதையையும் இட வேண்டாம். அவனே நம்மைப் பார்த்துக் கொள்வான். இவ்வாறு இப்பாசுரத்திற்குப் பொருள் சொல்லப்படுகிறது. வடிவேலு பாஷையில் ஆணியே பிடுங்க வேண்டாம் என்கிறார்கள்.

ஜீவாத்மாக்களான நாம் இறைவனை அடைய எந்த முயற்சியையும் செய்ய வேண்டியதில்லை. அவனே நம்மை அழைத்துக்கொள்வான். அது அவனது கடமை என்பதாகப் பொருள் படுகிறது.

இதனை மார்ஜால நியாயம் என்று சொல்கிறார்கள் – அதாவது பூனை நியாயம். பூனைக்குட்டி எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. அதன் தாயே அதனை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வாயினால் கவ்விச் செல்லும். தென்கலை சம்பிரதாயம் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்டவர்கள். எந்தவிதமான அனுஷ்டானங்களும் தேவை இல்லை. இறைவனிடம் சரணாகதி செய்தால் போதும். அவன் பார்த்துக் கொள்வான் என்பது தென்கலையாரரின் மார்ஜால நியாயம்.

வடகலையார் மர்க்கட நியாயம் என்னும் நியதியின் அடிப்படையில் இருப்பவர்கள் – அதாவது குரங்கின் நியாயம். குரங்குக் குட்டி தன் தாயைப் பற்றிக்கொள்ள வேண்டும். தாய் குட்டியைத் தூக்காது. அதுபோல ஜீவாத்மாக்காளன நாம் இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். இறைவனின் கருணைக்காகப் பல நியம நிஷ்டைகள் செய்ய வேண்டும். அனுஷ்டானங்கள் தேவை என்பதாக வடகலையார் நெறி உள்ளது.

திருமழிசை ஆழ்வார் சொல்வது கொஞ்சம் தென்கலையார் பக்கம் இருப்பது போல் தோன்றவில்லை ? என்ன நினைக்கிறீர்கள் ?

குரங்கோ பூனையோ, இரண்டும் இன்று சாஃப்ட்வேர் எழுதிக் கொண்டிருக்கின்றன என்பதே நிதர்ஸனம்

என் வேலை முடிந்தது. ஸ்டார்ட் மீஸிக்.

பி.கு.: திருமழிசை ஆழ்வார் 5-ம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவர். தென்கலை வடகலை பேதங்கள் இராமானுசருக்குப் பின் 13-ம் நூற்றாண்டில் தோன்றியவை. இந்த இரு பிரிவுகளின் முன்னோடிகளாக முறையே மணவாள மாமுனிகளும் வேதாந்த தேசிகரும் இருந்தனர் என்பது வரலாறு.

கம்பன் சுவை – நாடும் அரசும்

கம்பன் தன் காவியத்தில் பல அறங்களையும் ஒழுக்கங்களையும் கூறியிருந்தாலும், ஒரு நாடும் அதன் அரசுகளும் இருக்க வேண்டிய முறை பற்றியும், மன்னன் ஆட்சி செய்ய வேண்டிய முறை, அமைச்சர்கள் தகுதி, அவர்கள் பணிகள் என்று பலவற்றையும் பற்றிக் கூறுவது நம்மை வியக்க வைக்கிறது.

இராமராஜ்யம் என்பது ஒன்று இருக்குமேயானால் நாடும் அரசும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துச் சென்றுள்ளான் கம்பன். 1200 ஆண்டுகளுக்கு முன் அவன் இயற்றிய இராமகாதையில் கூறப்படும் அரசு முறைமை, நாட்டின் பண்பு, மக்களின் பண்புகள் முதலியன,  “அட, ஒரு நாடு இப்படியல்லவோ இருக்க வேண்டும்!” என்று நினைக்கத் தூண்டுகிறது.  இவை பற்றி இம்முறை பார்ப்போம்.

கம்பன் காட்டும் நாடு பற்றிப் பார்த்துவிட்டு அதனை ஆள்பவர்களையும் அவனது அமைச்சர்களைப்பற்றியும் பார்ப்போம்.

கோசல நாட்டு மக்கள் எப்படி இருந்தார்கள் ?  கம்பன் கூறுவது :

’வண்மையில்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மையில்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மையில்லை பொய்உரை இலாமையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்’

(மக்களிடத்தில் பொறாமை இல்லை. ஏனெனில் அவர்களிடம் வறுமை இல்லை.அனைவரிடமும் பொருட்செல்வம் இருந்தது. அறியாமை இல்லை; ஏனெனில் அவர்களிடம் கல்வி இருந்தது. அந்நாட்டில் உண்மை இல்லை; ஏனெனில் அவர்களிடம் பொய் இல்லை)

கவனிக்கவேண்டியது இது. அந்நாட்டில் உண்மை இல்லை என்கிறார். ஆக அனைவரும் பொய்யர்களா? இல்லை. உண்மை என்ற ஒன்று தனியாக இருக்கவில்லை. பொய் இருந்தால் தானே அதற்கு மாற்றாக உண்மை என்ற ஒன்று தேவை ? பொய்யே இல்லை என்றால் உண்மை என்பதும் இல்லை. அனைத்தும் ஒரே நிலை தானே !

சரி. மக்கள் இப்படி உத்தமர்களாக இருப்பதால்  அந்த நாட்டில் வேறு என்னவெல்லாம் இல்லை ?

“கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால்;
சீற்றம் இல்லைதம் சிந்தையின் செய்கையால்;
ஆற்றல் நல்லறம் அல்லது இல்லாமையால்
ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே”

(கோசல நாட்டு மக்களிடம் கூற்றுவன் செய்யும் கொடுமைகள் இல்லை; ஏனெனில் மக்களிடத்தில் குற்றங்கள் இல்லை. அவர்கள் தூய்மையான உள்ளம் கொண்டர்கள்; ஆதலால் அவர்களிடம் சினம் இல்லை. சினம் இல்லாததால் குற்றங்கள் இல்லை. அவர்கள் நல்ல அறங்களையே செய்ததால் தவறுகள் இல்லை; எனவே அவர்களுக்குப் புகழ் மட்டுமே உண்டு ).

முதல் பாடலில் கல்வி பெருகியுள்ளது தெரிகிறது. கல்வியினால் நல்ல பண்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாசொல் என்ற தீய பண்புகள் மக்களிடம் இல்லை. அதனால் சண்டை, சச்சரவுகள் இல்லை. அதனால் அவர்களுக்குப் புகழே தவிர வேறெதுவும் இல்லை.

ஒரு முன்மாதிரியான நாட்டையும் மக்களையும் காண்கிறோம்.

சரி. இம்மக்கள் யார் ? இவர்கள் இருப்பிடம் எப்படிப்பட்டது ?

“தங்குபேர் அருளும் தருமமும் துணையாத்
தம்பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மாதவமும் ஞானமும் புணர்ந்தோர்
யாவர்க்கும் புகல் இடம் ”

( என்றும் குன்றாமல் நிறைந்திருக்கும் கருணையுள்ளவர்கள்; அறத்தை மறவாதவர்கள்; இவைகளைத் துணையாகக் கொண்டு ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவர்கள்; உயர்ந்த தவத்தையும் அறிவையும் உடையவர்கள்; உலகப்பற்றை விட்டவர்களான முனிவர்கள் யாவர்க்கும் புகலிடமாக விளங்குவது அயோத்தி மாநகரம் )

இப்படிப்பட்ட அயோத்தியில் வாழும் மக்கள் வாழ்க்கை முறை என்ன ? எத்தகைய தொழில்கள் நடைபெற்றன ?

கம்பன் கூறுவதைப் பாருங்கள் :

“அகில் இடும்புகை, அட்டில் இடும்புகை,
நகரின் ஆலை நறும்புகை நான்மறை
புகலும் வேள்வியின் பூம்புகையோடு அளாய்
முகிலின் விம்மி முயங்கின எங்கணும்”

(அகில்கட்டைகளிலிருந்து வரும் புகை, வீடுகளிலிருந்து உணவு  தயாரிப்பால் எழும் சமையல் புகை, கரும்பாலைகளிலிருந்து வரும் புகை, நான்கு வேதங்களின் முறைப்படி செய்யப்படும் வேள்விகளிலிருந்து வரும் வேள்விப்புகை இவை அனைத்தும் சேர்ந்து மேகத்தைப்போன்று எங்கும் பரவியுள்ளன )

இதன்மூலம், கரும்பு முதலிய ஆலைகள் இருந்தன என்பதும், அந்தணர்கள் வேள்விகள் இடைவிடாது செய்துவந்தனர் , அவர்களுக்கு உதவும் கொடையாளர்கள்  நிறைந்திருந்தனர் என்பதும் தெரிகிறது.

கம்பர் மட்டுமே இவ்வாறு கூறுகிறாரா என்றால் இல்லை. அவருக்குப் பல நூற்றாண்டுகள் முன் தோன்றிய வள்ளுவர் கூறுவது இது :

“தள்ளாவினையுளும் தக்காரும் தாழ் விலாச்
செல்வரும் சேர்வது நாடு ”

( நீங்காத விளைவும், அறவோர் திறவோர் ஆகிய சிறந்தவர்களும், குறைவற்ற செல்வம் உடையவர்களும் சேர்ந்திருப்பதே நாடு)

அந்தணர்கள் வேதத் தொழில் செய்யாவிட்டால் நாடு நன்றாக இல்லை என்று ஆகுமா ? அந்தணர் நான்மறை வழி வேள்விக்கும் நாட்டு நலத்திற்கும் என்ன தொடர்பு ? அதற்கு வள்ளுவனைத் தொடுவோம் :

“ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் ”

( ஒரு அரசன் நல்லாட்சி செய்யவில்லை என்று அறிய ஒரு வழி உள்ளது. அந்நாட்டில் பசுமாடுகள் பா ல் வளம் குன்றும். ஆறு தொழில் செய்யவேண்டிய அந்தணர்கள் தங்கள் நூலை ( வேதம் ) மறந்திருப்பர் )

சரி.மக்களும் நாடும் இப்படி இருக்க வேண்டுமென்றால், அரசன் எப்படி இருக்க வேண்டும் ?

புறநானூற்றுக் காலங்களில் மன்னனை வைத்தே நாடு இயங்கியது.  “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று புறநானூற்றின் ஒரு பாடல் கூறுகிறது.  குடிமக்களுக்கு அவ்வளவு பெருமை இல்லை. ஆனால் கம்பன்  காலமான 12-ம் நூற்றாண்டில் மன்னராட்சியே இருந்துவந்தாலும் குடிமக்களுக்கே பெருமை என்பதுபோல் தெரிகிறது. மக்களின் ஆதரவு இல்லாமல் மன்னனால் சரியான அரசாட்சி செய்ய இயலாது என்பதாகக் காட்டுகிறார் கம்பர்.

“வய்யம் மன்னுயிராக, அம்மன்னுயிர்
உய்யத் தாங்கும் உடலன்ன மன்னனுக்கு
அய்யம் இன்றி அறம்கடவாது அருள்
மெயின் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ ”

(மன்னன் உலகத்தின் அனைத்து உயிர்களைய்ம் உயிராகக்கொண்டு தான் ஒரு உடலாக மட்டுமே செயலாற்ற வேண்டும். அவ்வாறு இயங்கும் மன்னனை விட்டு விலகாது அறம் உடன் இருக்கும். இவ்வாறு இரக்கத்துடனும், உண்மையுடனும் இருக்கும் அரசன் வேள்வி செய்யவும் வேண்டுமோ ?)

அரசனை வெறும் உடல் போல இருக்க வேண்டும் என்றும், அனைத்து உயிர்களும் அவனது உயிர் என்றும் கூறுகிறார் கம்பர். இப்படி ஒரு அரசன் இருந்தால் அவன் இறை வழிபாடு கூட செய்ய வேண்டியதில்லை என்றும் அறத்தின் தேவதை அவனுடன் இருப்பாள் என்றும் கூறுகிறார். மக்களே உயர்ந்தவர், அரசன் வெறும் கருவிதான் என்று அன்றே காட்டிவிட்டார் கம்பர்.

அரசனின் ஆட்சி எப்படியிருக்க வேண்டும் ? கம்பர் கூற்று :

“மண்ணிடை உயிர்தோறும் வளர்ந்து தேய்வின்றி
தண்ணிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,
அண்ணல்தம் குடைமதி அமையும், ஆதலால்
விண்ணிடை மதியினை மிகை இது என்னவே”

(உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் இனிய நிழலைத் தருவது தசரதனின் வெண்குடை நிழல். அறியாமை இருளை அகற்றவல்லது அதுவே. உலக உயிர்களுக்குப் போதுமானது அவன் ஆட்சியின் நிழல்.இது தவிர வானத்தில் சந்திரனின் நிழல் தேவை இல்லை)

அவன் ஆட்சி சரி. அவன் எப்படி நாட்டைக் காக்கிறான் ?

“வய்யகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய்எனக் காத்து இனிது அரசு செய்கிறான்”

( ஒரு சிறிய அளவிலான நிலத்தை உடைய உழவன் தன் நிலத்தை எப்படிப் பாதுகாப்பானோ அப்படி தசரதன் தன் நாட்டைப் பாதுகாத்தான் )

மன்னனின் எப்படிப்பட்ட குணங்கள் கொண்டவனாக இருக்க வேண்டும்?

“இனிய சொல்லினான், ஈகையன், எண்ணினன்
வினையன்,தூயன்,விழுமியன்,வென்றியன்
நினையும் நீதி நெறிகடவான் எனின்
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம் கொலோ”

(இனிய மொழி, ஈகைக்குணம், ஆழ்ந்த சிந்தனை, வினை செய்யும் வல்லமை, குற்றமற்ற பண்பு, சிறந்த குணம், செயலிலே வெற்றி அடையும் திறன், நீதிநெறி வழுவாமை  – இந்தக் குணங்களை அரசன் கொண்டிருந்தால் அவனுக்கு எக்காலத்திலும் யாராலும் அழிவில்லை )

அரசன் மட்டுமே எவ்வாறு நன்றாகச் செயல்பட முடியும்? எவ்வளவு வலிமை உடையவனாக இருப்பினும் மேலே சொன்ன குணங்கள் இருந்தாலும் தனித்துச் செயல்பட முடியாதே ?

இராமன் சுக்ரீவனுக்கு அறிவுரை கூறும் விதமாக அமைந்துள்ள பாடல் இப்படி வருகிறது :

“வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்த ரோடும்,
தீமைதீர் ஒழுக்கின் வந்ததிறத்தொழில் மறவரோடும் ..”

( உண்மையை ஆராய்ந்து உணரும் அறிவுள்ள அமைச்சர்களோடும், குற்றமற்ற ஒழுக்கத்துடன் திறமையாக நிர்வாகத்தை நடத்தும் வீரர்களோடும் ஆலோசித்துப் பின்னர் செயல் ஆற்ற வேண்டும் ..)

ஆக அரசனுக்கு உரிய குணங்கள், அவன் நல்ல அறிவுள்ள அமைச்சர்களோடு சேர்ந்து செயலாற்ற வேண்டியது முதலியன கம்பனால் சுட்டிக் காட்டப்பட்டது.

அமைச்சன் அறிவுள்ளவனாக மட்டும் இருந்தால் போதுமா? அவனது குணங்கள் என்ன?

“உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார்,
மற்றது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் பெற்றியர்;
பிறப்பின் மேன்மைப் பெரியவர் ; அரிய நூலும் கற்றவர் ;
மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார் ”

(நடந்த நிகழ்ச்சியைக்கொண்டு இனி வருவது உரைக்கும் ஆற்றல் பெற்றவர்; முன் வினையால் நேர்ந்த தீமையாக இருந்தாலும் அதை மாற்றும் வல்லமை கொண்டவர்; ஒழுக்கமுள்ள குடியில் பிறந்தவர்கள்; சிறந்த நூல்களை எல்லாம் நன்கு கற்றறிந்தவர்கள்; தன் உடலின் ஒரு மயிர் இழப்பினும் உயிர் துறக்கும் கவரிமான்போல்  மானத்தில் சிறந்தவர் – இவர்களே நாட்டின் அமைச்சர்கள் )

மேலே கண்டது அமைச்சர்களின் தேர்வுக்கான குணங்களாகக் கொண்டால், அவர்கள் எப்படிச் செயலாற்றவேண்டும் என்று கம்பன் கூறுகிறான் என்று பார்த்தால் மெய் சிலிர்க்கிறது :

“தம் உயிர்க்கு உறுதி எண்ணார் தலைமகன் வெகுண்டபோதும்
வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின்று உரைக்கும் வீரர்
செம்மையின் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் தெரியும் காலம்
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார்”

(தனக்கு மட்டுமே நன்மை  வேண்டும் என்று கருத மாட்டார்கள்; அரசன் சினம் கொண்டாலும் தாங்குவார்கள்; நீதியை விடாது பின்பற்றுவார்கள்; அரசனையும் நீதியை விட்டு விலகாதபடி அறிவுறுத்துவார்கள்; மூன்று காலங்களைப்பற்றியும் அறிந்துகொண்டு உண்மையே, தாம் நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று கருதுவதையே உரைக்கும் தன்மை உள்ளவர்கள்)

கம்பன் மட்டுமே இவ்வாறு அமைச்சர் பற்றிக் கூறினானா ? அதற்கு உரைகல் எது ? வழக்கம் போல் வள்ளுவன் தான் :

“தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையார்
சொல்லலும் வல்லது அமைச்சு”

(செய்தே ஆக வேண்டிய செயல்களை ஆய்ந்து அறிதல், செயல் செய்யவேண்டிய வழிகளை நன்கு ஆய்ந்து உறுதியாகத் தம் கருத்தை முன்வைத்தல் – இவற்றில் வல்லவனே  நல்ல அமைச்சன் ).

ஆக, நாட்டு மக்கள் நன்றாக இருக்க அவர்களுக்குக் கல்வி வேண்டும், குற்றம் இல்லாமல் இருக்க நாட்டில் செல்வம் வேண்டும், அச்செல்வம் மக்களிடம் சரியான அளவில் இருக்க வேண்டும், பல வகையான மக்கள் வேறுபாடின்றி ஒருங்கே இருக்க வேண்டும், இவை அனைத்தையும் நடத்த நல்ல மன்னன் வேண்டும், அவன் ஆட்சி குளுமையாக இருக்க வேண்டும், அவன் மக்களைத் தன் உயிர் போல் கருத வேண்டும், அப்படி ஆட்சி செய்ய நல்ல அமைச்சர்கள் வேண்டும் மற்றும் அந்த அமைச்சரகள் இவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்று நாடு இருக்க வேண்டிய நிலையையும், அதற்கு மன்னன் தரம், அவனது அமைச்சின் தரம் என்ற பல நோக்கில் கம்பன் காட்டும் நாடாளும் வழிமுறை நம்மை அவ்வாறான ஒரு நாட்டு நிலைமை ஏற்படாதா என்று ஏக்கம் கொள்ள வைக்கிறது.

வாசகர் கடிதம் – ஒரு விளக்கம்

பொதுவாக வாசகர் கடிதங்களை நான் வெளியிடுவது இல்லை. ஆனால் இம்முறை கிருஷ்ணகுமார் என்ற கற்றறிந்த ஒரு வாசகரின் கடிதம் அந்த விலக்கு பெறுகிறது. “குரங்குகள் சண்டையிடுவதில்லை” என்னும் எனது முந்தைய ( தென்கலை வடகலை பற்றிய) பதிவைப்பற்றியது. அக்கடிதமும் அதற்கு என் பதிலும் :

திரு.கிருஷ்ணகுமாரின் கடிதம்:

அன்பார்ந்த ஸ்ரீமான். உ.வே……அவர்களுக்கு.

நான் சிறு வயதில் முதலில் கேட்ட காலக்ஷேபம் உ.வே.ஸ்ரீ.முக்கூர் லக்ஷ்மி ந்ருஸ்ம்ஹாசார்ய ஸ்வாமி அவர்களுடையது. நான் ஸ்ரீ வைஷ்ணவன் அல்லன். ஆனால் ஸ்ரீ வைஷ்ணவத்திலும் ஸ்ரீவைஷ்ணவர்கள் பாலும் மிகவும் மதிப்புடையவன்.

வைஷ்ணவம் என்றாலே என் நினைவுக்கு வரும் விஷயம்.

கொக்கைப் போல் இருப்பான் கோழியைப் போல் இருப்பான் உப்பைப் போல் இருப்பான் உம்மைப் போல் இருப்பான் என்று முக்கூர் ஸ்வாமி சொல்லியது. வ்ருத்தாந்தம் நினைவில் உள்ளது. ஆனால் யாரைப் பற்றி என்று நினைவில் இல்லை.

வடகலை தென் கலையார் தங்கள் தங்கள் சித்தாந்த வித்யாசங்களைப் பேணுவதில் ஹாஸ்யமான விஷயம் ஏதுமில்லை என்பது சிறியேனின் அபிப்ராயம். சித்தாந்த வித்யாசங்கள் இருக்கின்றன தானே.

ஆம். நீங்கள் சொல்லும் விஷயங்களை வாசிக்கையில்…. யானைக்கு எந்த நாமம் போடுவது…..ப்ரபந்தங்களை அடுத்தவர் காதில் தெளிவாக விழாத படிக்கு ஒருவரை ஒருவர் முந்தி உரக்கச் சொல்ல முயற்சித்தல்…..இத்யாதிகள் நான் வைஷ்ணவம் என்று மிக உயர்வாக மதிக்கும் விஷயத்திலிருந்து வித்யாசமாகவே தெரிகிறது. பின்னும் ஹரிபக்தர்கள் பால் தோஷாரோபணம் செய்ய மனம் மறுக்கிறது.

ஒருக்கால் எங்கள் வள்ளல் அருணகிரிப் பெருமானின் திருப்புகழில் (ஓதுவித்தவர் கூலிகொடாதவர்)

ஈசர் விஷ்ணுவை சேவைசெய்வோர் தமை இகழ்வோர்கள்

நரகுழல்வாரே

என்று இடித்துறைத்தமை ஹேதுவாக இருக்கலாம்.

தோஷங்கள் மட்டிலும் தென்பட்டால் குணங்கள் தென்படாதே.

குணங்களைப் போஷித்து தோஷங்களைச் சான்றோர்கள் வெளிப்படையாக உணர்த்தாது குறிப்பாலுணர்த்திப் பாமரர்களை உத்தாரணம் செய்வர் என்று கேட்டிருக்கிறேன். தேவரீர் வடகலை தென் கலையார் தோஷங்களைப் பெரிசாகச் சொல்லி குணங்களை சொல்லாது விட்டீர்கள் என்று சிறியேனுக்குத் தோன்றுகிறது.

இருவரிடமும் உள்ள போற்றத் தகுந்த குணங்களைத் தேவரீர் தனியொரு வ்யாசமாக சமர்ப்பித்தால் வைஷ்ணவத்தின் மீது மதிப்புடைய சிறியேன் போன்றோர் உகப்புடன் வாசித்து எங்கள் வைஷ்ணவ அபிமானத்தை அபிவ்ருத்தி செய்து கொள்ளலாமே.

ஆழ்வார் திருவடிகளே சரணம். அடியேன் சரணம்.

————————————————-

திரு.கிருஷ்ணகுமார், உங்கள் கடிதத்திற்கு நன்றி.

தென்கலை வடகலை சம்பிரதாய வித்யாசங்கள் பற்றி ஒரு அறிமுகமாக அடியேன் இன்னொரு பதிவு செய்திருந்தேன். அதையும் பார்க்கவும். “வடகலைக் குரங்கும் தென்கலைப் பூனையும்” என்பது தலைப்பு.

http://ammanji.wordpress.com/2013/06/15/catandmonkey/

மிக உயர்ந்த வேதாந்த விசாரங்களில் தேர்ந்தவர்களான வைணவப் பெரியவர்கள் தங்கள் நிலை தாழ்ந்து வெறும் புறவயமான வேறுபாடுகளை மேலோங்கச்செய்வதிலும் அது தொடர்பான வீண் வாதங்களிலும் ஈடுபடுவதை நேரில் பல முறை கண்டு மனம் நொந்து, அப்படி என்னதான் இருக்கிறது இந்த வித்தியாசங்களில் என்று ஆராயத் தொடங்கினேன். காலஞ்சென்ற முனைவர்.ராமபத்ராச்சாரியார் அவர்களின் உபன்யாசங்களில் இவை பற்றி அவர் பல முறை குறிப்பிட்டுள்ளார். வேறுபாடுகள் இல்லை. உயர்வு தாழ்வு இல்லை. Philosophical Differences – சம்பிரதாய வேற்றுமைகள் அந்தந்த ஆச்சாரியார்களின் விசிட்டாத்வைத அணுகுமுறைகளில் இருந்தது. ஆனால் அடிப்படை ஒன்றே. பரத்துவம் ஒன்றே. சேஷன் ஒருவனேசேஷிகள் அனேகம்பேர் இருந்தாலும் உள்ளே உள்ள ஆத்மாவில் வேறுபாடு இல்லை. எனவே இந்த சம்பிரதாய அலங்கார வேற்றுமைகளினால் ஒரு பயனும் இல்லை. ஆண்டாள்  “கூடி இருந்துக் குளிர்ந்து” என்று கூறுவதுபோல் ஒன்றாக ஆத்ம விசாரம் செய்வோம் என்ற நோக்கில் அவரது உபன்யாசங்கள் இருந்தன. அவை என்னை ஆற்றுப்படுத்தின.

இன்னும் பிற பெரியவர்களின் நூல்களில் சில காலம் நுழைந்ததன் விளைவாக, “அடடா, நாம் எவ்வளவு ஒரு மகோன்னதமான சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ?” என்ற வியப்பு ஏற்பட்டது.

ஐரோப்பிய நாடுகள் நாகரீகம் இன்றி ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டிருந்த எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் நமது முன்னோர் ஆத்மாவின் ஒருமைப்பாடு பற்றியும், அன்னமய கோசம், பிராணமாயகோசம் என்று அறிவுரீதியான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனர். வேதம் சொல்வதைப் போலே,

“ஜன்மனா ஜாயதே சூத்திர: சம்ச்காரேர் த்விஜ உச்சதே”

( பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே. சம்ஸ்காரங்களைச் செய்வதினால் அவன் பிராம்மண நிலை அடைகிறான்) போன்ற உயர்ந்த அறிவு நிலையில் இருந்துகொண்டு, அது தொடர்பான விசாரணையில் ஆழ்ந்து உலகம் உய்ய வேண்டிப் பல நல்ல செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு சமூகம்,

“நாலு கால் பிராணிகள் நலமாக இருக்கட்டும்; இரண்டு கால் பிராணிகள் நன்றாக இருக்கட்டும்; செடி கொடிகள் நன்றாக வளரட்டும்..” என்கிற ரீதியில் தன் மந்திரங்களினால் தினமும் வேண்டிக்கொள்ளும் ஒரு சமூகம்,

இராமானுசர் என்ற ஒரு சமய / சமூகப் புரட்சியாளர் வழி நடப்பதாகக் கூறிக்கொள்ளும் ஒரு சமூகம்,

அவரது வழியையே இரு பிரிவாகப் பிரித்து, அதை மேலும் பல உட்பிரிவுகளாக ஆக்கி, மேலும் மேலும் தங்கள் பார்வையைச் சுருக்கிக் கொண்டு கடைசியில் இரு பிரிவினருக்குமுள்ள வித்தியாசங்களைத் தீர்க்க 1795ல், இந்த மாதிரியான ஆத்தும விசாரங்களில் கொஞ்சம் கூட ஊற்றம் இல்லாத வெள்ளைக்கார அரசாங்கத்திடம் முறையிட்டு நின்ற நிலை என்னை மிகவும் பாதித்தது.  அன்றிலிருந்து அடிப்படையில் ஒன்றேயான ஒரு சிந்தனையும் முற்போக்கான கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு சமூகம், கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் தாங்களே உருவாக்கிக்கொண்ட வேறுபாடுகளை மேலும் விஸ்தரித்து அது விஷயமாக வழக்கு மன்றங்களில் நேரத்தைச் செலவழிப்பதைப் பார்க்கும்போது என் மனம் கூசியது.

அனைவரும் சமம், எல்லாரும் ஒன்றாக நாராயணன்பால் பக்தி செய்வோம் என்று திருக்கோஷ்டியூரில் சமூக, பக்திப் புரட்சி செய்து, நமது கலாச்சாரத்தைக் காத்த மகானின் வழி நடப்பதாகக் கூறிக்கொள்பவர்கள் தங்களுக்குள்ளேயே வேற்றுமை பாராட்டிப் பொன்னான நேரத்தையும், மனித வளத்தையும் வீணடித்ததைக் கண்டு பேசாமல் இருக்க முடியவில்லை.

முந்நூறு ஆண்டுகள் ! இத்தனை ஆண்டுகள் சம்பிரதாய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தால் இன்னொரு இராமானுசரோ, வேதாந்த தேசிகரோ, மணவாள மாமுநிகளோ கூட வெளிப்பட்டிருப்பார்கள்.

நினைவில் கொள்ள வேண்டும்: கடந்த முந்நூறு ஆண்டுகளில்  உலகையே மாற்றிப்போட்ட நிகழ்வுகள் பல நடந்துவிட்டன. சமூகப் பொருளாதார மாற்றங்கள் நினைக்கவேமுடியாதபடி நடந்துவிட்டன.

ஆனால் வைணவ அன்பர்கள் செய்தது என்ன?  வீண் சண்டைகள், வெற்று அலங்காரங்கள், அர்த்தமில்லாத கோஷங்கள், பல நேரங்களில் கை கலப்புக்கள் கூட.  மனதளவில் முன்னேறிய ஒரு சமூகம் செய்யும் செயலா இவை ?

தேசிகனும், மாமுனியும் என்ன கூறினார்கள்  என்பது முக்கியமாகப்படவில்லை. அவர்களது நெற்றியே முக்கியமாகப்பட்டது. “பாதுகா சஹாஸ்ரம்” விடுத்து அதை எழுதிய தேசிகனுக்கு அவரது பிறந்த நாளில் திருவரங்கத்தில் மரியாதை கூடாது என்றோம். எனெனில் திருவரங்கம் தென்கலையார் கோவில்.

திருவஹீந்திரபுரத்தில் மாமுனிகளின் சந்நிதிக்குமுன் திரை போட்டபடி சென்றோம். காரணம் திருவஹீந்திரபுரம் தேவநாதப் பெருமாள் வடகலையாம்.

காஞ்சிபுரத்தில் தென்கலை சம்பிரதாயம் ஆடும் ஆட்டம் ஊர் அறிந்தது.

இதில் எங்காவது பக்தி உள்ளதா? அல்லது இப்படிச்செய்யும் அன்பர்கள் தேசிகனும் மாமுனியும் இறைவனை அடையும் வழியில் எந்த வழியில் வேறுபடுகிறார்கள் என்று அறிந்துள்ளார்களா? அதைப்பற்றிய எந்த ஒரு சிந்தனையாவது உள்ளதா? படிப்பு உள்ளதா ?

ஆழ்வார்களில் யார் எந்தக் கலை என்று யாருக்காவது தெரியுமா? அவர்கள் காலத்தில் இந்த வேறுபாடே இல்லை. ஏன், ஆழ்வார்கள் காலத்தில் இராமானுசரே இல்லை. ஆக, இராமானுசருக்குப் பல நூற்றாடுகள் கழித்துத்தோன்றிய இந்த வித்யாசங்களினால் என்ன பயன்? வழிபடும் முறை வேறா என்றால் அதுவும் இல்லை. பாடும் பாசுரங்களில் வேறுபாடு இல்லை. ஆனால் ராகத்தில் வேறுபாடு.

நாராயணன் ஒருவனே பரதெய்வம் என்பதில் ஒருமைப்பாடு. ஆனால் அவனைத் துதிப்பதில் வேறுபாடு. அதில் என்ன துவேஷம்? ( “நாராயணனே நமக்கே பறை தருவான் ” என்று ஆண்டாள் கூறியுள்ளது நோக்கத்தகாது  ).

மகாலக்ஷ்மியை வடகலையார் ஒரு ஆச்சாரியனாகக் கருதுகிறார்கள்.  “இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே..” என்பது பாடல். தென்கலையார் திருமகளை ஆச்சாரியனாக ஒப்புக்கொள்வதில்லை. எழுந்தருளியிருந்த பல ஆச்சாரியார்களில் திருமகள் ஒருவர் என்று கொள்வது என்ன அவ்வளவு பெரிய தவறா? அத்துடன்,  சண்டையிடும் அளவுக்கு இந்த விஷயம் ஒரு பொருட்டா?

இது எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால், கோவில்களில் வடகலை திருமண் இருந்தால் அதனைச் சிதைத்துத் தென்கலைத் திருமண் ஆக்குவது என்னும் அளவிற்கு உள்ளது. வடகலை ஆச்சாரியார்கள் ஒரு தென்கலையார் கோவிலுக்கு மங்களாசாசனம் செய்யச் சென்றால் அவமரியாதைக்கு ஆளாகும்படி நேரிடுகிறது.

இப்படி ஒன்றுமில்லாத ஒரு வேறுபாட்டை இவ்வளவு தூரம் எடுத்துச் சென்று மேலும் மேலும் துவேஷம் வளர்ப்பது, முந்நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த நூற்றாண்டிலும் நடப்பது  வேதனையானது. இவற்றைக் களைய வைணவப் பெரியோர்கள் முன்வரவேண்டும் என்ற ஆதங்கமே மேலோங்கியுள்ளது அடியேனுக்கு.

ஒரு சிறிய செப்புக்காசு அளவு கூட மதிப்பில்லாத இந்த வித்தியாசங்களைப் பெரிதுபடுத்துவது, மிருகங்கள் மீது திருமண் வேறுபாடுகளைத் திணிப்பது, முன்னோடிகளான ஆச்சாரியார்களைப் பழிக்கும் அளவுக்குச் செல்வதையும் பொறுக்க முடியாததே என்னை இவற்றை சற்றே நையாண்டி செய்யச் செய்தது.

தற்போது கம்பன் பற்றிய தொடர் எழுதிக்கொண்டிருப்பதால் சம்பிரதாயம் பற்றி இன்னும் விரிவாக சிறிது காலம் கழித்து எழுதுகிறேன்.

தொடர்ந்து படித்து ஆற்றுப்படுத்துங்கள்.

"டேய் ஐயரு ராமம் போட்ருக்கார் டா. "

Image“டேய் பார்ரா நாமம், இங்கே வந்தும் போட்டுக்கிட்டுத் திரியறானுங்க” – என் அப்பாவை அழைத்துக்கொண்டு சிங்கபூர் ரயிலில் ஏறிய போது இரு இள வட்டங்கள் கேலி பேசியது காதில் விழுந்தது. ஓர் சீனப் பெண் எழுந்துகொண்டு கொடுத்த இடத்தில் அப்பாவை அமரச் செய்துவிட்டு குரல் வந்த பக்கம் திரும்பினேன்.

இந்திய இளைஞர்கள். சிங்கப்பூரர்கள் இல்லை. அவர்கள் உடையும் பேச்சின் சாயலும் அவர்கள் சென்னையிலிருந்து வந்துள்ள மாணவர்கள் என்று அறிவித்தன. சிங்கை தேசியப் பல்கலையில் பயில்பவர்கள் என்று ஊகித்தேன்.

சிங்கபூர்த் தமிழர்கள் கேலி பேசுவதில்லை, தமிழையும் கலாச்சாரத்தையும் மதிக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து வந்துள்ள உடல் உழைப்புத் தொழிலாளர்களும் அமைதியாகவே உள்ளனர். தமிழக அதுவும் சென்னை மாணவர்கள் சிலர் தறி கேட்டு அலைவது சிலமுறை கண்டது தான். இருந்தாலும் இந்தமுறை சிங்கையில் நடந்தது அதிர்ச்சியாகவே இருந்தது.

நெற்றிக்கு இட்டுக்கொள்வதை “திருமண் காப்பு” என்று அழைப்பர். திருமண் நம்மைப் பல இன்னல்களிலிருந்தும் காக்கும் என்பது ஒரு எண்ணம். அதனுடன் அதை அணியும் போது அதற்கு ஏற்றவாறு நடக்கவேண்டும் என்ற ஒரு கட்டாயம் ஏற்படும். அதுவே நம்மை கெட்ட வழிகளில் போகாமல் தடுக்கும் என்றும் கொள்ளலாம்.

நாமம் தரிப்பதை ( திருமண் இட்டுக்கொள்வதை )க்  கேலி பேசுவதும், நக்கல் செய்வதும் சாதி சொல்லி “டேய் அய்யர் போறான் பாருடா ” என்று வீதிகளில் அமர்ந்து காலிகள் கொக்கரிப்பதும் எனக்குப் பழக்கம் தான். நெய்வேலியில் இப்படி அடிக்கை நிகழும். வளரும் வயதில் இந்த அனுபவங்கள் ஏராளம்.

பள்ளி செல்லும் போது தினமும் திருமண் இட்டுக்கொண்டு செல்வது வழக்கம். வழியில் பல தரிதலைகள் விசில் அடிக்கும். பழகி விட்டதால் பல சமயம் கோபம் வருவதில்லை. வந்தாலும் ஒரு புண்ணாக்கு பயன் இல்லை என்பது வேறு விஷயம்.

ஒரு  முறை அப்பாவுடன் ஆவணி அவிட்டம் முடித்து சைக்கிளில் செல்லும்போது  ” டேய் பூணூல் பாருடா”, என்ற கத்தல் கேட்டு அப்பா சைக்கிளை நிறுத்தினார். ஒரு பார்வை தான். கேலி பேசிய இருவரையும் காணவில்லை.

இந்த நிகழ்வால் எனக்கு தைரியம் வந்தது. ஒரு முறை நெய்வேலி ஸ்டோர் ரோடு பிள்ளையார் கோவில் விழாவில் கலந்து கொள்ள சைக்கிளில் சென்றேன். நெய்வேலியின் அப்போதைய பிரதான வாஹனம் சைக்கிள் தான். எதிரில் வந்த ஒருவன் “டேய் ஐரே “, என்று கத்தினான். வயது பதினைந்து இருக்கும் எனக்கு., “டேய் ம..ரே “, என்று பதிலுக்குக் கத்திவிட்டு வேகமாக சைக்கிளை மிதித்தேன். உடம்பு ஒரு முறை அதிர்ந்தது. பக்கத்தில் அப்பா. அவர் அருகில் இருப்பதை உணராமல் கெட்ட வார்த்தை சொல்லிக் கத்திவிட்டேன். அப்பா இருவாரம் என்னுடன் பேசவில்லை.

ஆனால் என் தார்மீகக் கோபம் தணியவில்லை. அன்று முதல் வீட்டை விட்டுக் கிளம்பும் போது நன்றாகத் தெரியும்படி திருமண் இட்டுக்கொள்ளும் பழக்கம் கொண்டேன். வேண்டும் என்றே முகத்தை நெற்றி தெரியும்படி காட்டியபடி செல்வதை விரும்பி செய்தேன். பல முறைகள் “ஐரே .. ம..ரே” சவடால்கள் நடந்தன.அதில் ஒரு வெற்றிப் பெருமிதம் தான்.

ஆனால் ஒரு முறை சைக்கிளில் செல்லும்போது என்னை விட வயதான ஒரு பையன் “எப்படி டா நாமம் போடறே ?” என்று கேட்டபடி உரசிச் சென்றான். விடவில்லை நான். துரத்தினேன். ஒருவழியாக அருகில் சென்று, ” இப்பிடித் தாண்டா “, என்று சைக்கிளால் அவன் சைக்கிளை மோதினேன். அவன் விழுந்தான். “ஏண்டா இடிச்சே?” என்று அழுதவாறு கேட்டான். எனக்குப் பாவமாகப் போய்விட்டது.அது முதல் கேலி பேசினால் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொள்ளத் துவங்கினேன்.

கல்லூரியில் “ராகிங்” என்ற பெயரில் நடந்த அழுச்சாட்டியங்களில் ஒன்று ஒரு சீனியர்,” நீ இனிமேல் நாமம் போடக்கூடாது”, என்றது தான். மனதுக்குள் ஒரு அரசியலமைப்புச்சட்ட மேதை என்ற நினைப்பில், “Do you know the right to freedom of religion? It is one of the fundamental rights enshrined in the constitution“, என்று ஒரு முழு மூச்சில் முடித்தேன். ஓங்கி ஒரு அரை விழுந்தவுடன் சுய நினைவுக்கு வந்தேன். ஆனால் ஒரு எதிர்ப்பு காட்டவே தினமும் ஒற்றை நாமாம் ( ஸ்ரீ சூர்ணம் ) இட்டுக்கொள்ள மறந்ததில்லை.

இதில் விசேஷம் என் அப்பாவிற்கு “ஐயர் போறார் டா “, என்றால் கோபம் வரும். கேலி பேசுவதால் அல்ல. “என்னை ஒரு அய்யர்னு சொல்லிட்டானே”; என்று வருத்தப்படுவார். காரணம் தான் ஒரு தீவிர ஸ்ரீ வைஷ்ணவ ஐயங்கார். தன்னை ஒருவன் ஐயர் என்று சொல்லிவிட்டானே என்று ஒரு தார்மீகக் கோபம்.

இப்போதெல்லாம் இந்தியாவில் யாரும் இதற்குக் கேலி பேசுவதில்லை. யாருக்கும் இதற்கெல்லாம் நேரம் இல்லை. வேலை, பிழைப்பு என்று வந்த பிறகு இதிலெல்லாம் ஒரு நாட்டம் இல்லை யாருக்கும். அல்லது பா.ஜ.க.அரசு அமைந்த பின்னர் ஏற்பட்ட மாறுதலாகவும் இருக்கலாம் என்று எங்கோ படித்திருக்கிறேன். ராமர் கோவில் இயக்கம் நடந்தபோது அதுவரை நெற்றிக்கு இட்டுக்கொள்ளாத பலரும் ஏதாவது இட்டுக்கொள்ளத் துவங்கியதைப்  பார்த்திருக்கிறேன். இதைப்பற்றியெல்லாம் கேலி பேசுவது பெரும்பாலும் வேலை இல்லாத திராவிடர் கழக ஆட்களாகவே இருக்கும்.

இதில் சில வேடிக்கைகள் உண்டு. சில அசடுகள் “, ஐரே ராமம் போற்றுக்கியா?” என்று கேட்டதுண்டு. பாவம். நான் ஐயரும் இல்லை. போட்டுக்கொள்வது ராமம் இல்லை நாமம் என்ற பகுத்தறிவுகூட இல்லாத நிலையில் இருப்பது ஒரு பரிதாபம்.

சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார் நாமம் ஏன் போட்டுக்கொள்கிறேன் என்று.

“என் சார், நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ANTI VIRUS வைத்துக்கொள்வதில்லையா? அது போல் தான். யாரும் போடுவதற்கு முன்னால் நாமே போட்டுக்கொள்வது ஒரு பாதுகாப்பு தானே?” என்று சொன்னாலும் நாமம் போடுவதற்கும் ஏமாற்றுவதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

இப்போதேல்லாம் நம் இளைஞர்கள் நெற்றிக்கு இட்டுக் கொள்வதில்லை. “நீரில்லா நெற்றி பாழ்” என்று என் ஆசிரியர் கூறுவார். ஆனால் இன்று தமிழ்நாட்டில் “நீர்” என்பதற்கு “வேறு” பல அர்த்தங்கள் உள்ளன. அரசாங்கமே சில “நீர்” விற்பனைக் கடைகள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமண் பற்றிப் பேச வந்தவுடன் தென்கலை வடைகலை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. ஆனால் அதைப்பற்றி ஏற்கெனவே வேறொரு பதிவில் சொல்லிவிட்டதால் இப்போது மறுபடியும் வேண்டாம். ஆனால் வடகலையை விட தென்கலைக் காரர்கள் கொஞ்சம் தடிமனாகவே திருமண் இட்டுக்கொள்கிறார்கள் என்பது என எண்ணம். தென்கலை சம்பிரதாயத்தின் மீதான பற்றாகவும் இருக்கலாம். வடகலையை வெறுப்பேற்றவும் இருக்கலாம். தெரியவில்லை.

ஒருமுறை ஜப்பானில் தோக்கியோ நகரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்த போது என் நிறுவனத் தலைவர் ( ஜப்பானியர் ) என்னைப் பார்த்து மிகவும் வியப்படைந்தார். “கோரே வா நான் தேசு கா?” ( இது என்ன? ) என்று நெற்றியைத் தொட்டுக்காட்டி க் கேட்டார். “அனோ இந்தோனோ கமிசமா னோ SYMBOL தேசு” ( இது இந்தியக் கடவுளின் சின்னம்” ) என்று எனக்குத் தெரிந்த ஜப்பானிய மொழியில் தடுமாறிச் சொன்னேன்.அது முதல் என் பெயர் “இந்தோனோ காமி சமா” ( இந்தியாவின் கடவுள் )  என்று வைத்துவிட்டார்.

மறுபடியும் சிங்கபூருக்கு வருவோம். ரயிலில் இருந்த தமிழ் இளைஞர்களை முறைத்துப் பார்த்தேனா? அவர்கள் இருவரும் அடுத்த பெட்டிக்குச் சென்று விட்டார்கள். இரு நிறுத்தங்கள் கழித்து இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் வேகமாக அடுத்த பெட்டியின் வாசலுக்குச் சென்று பார்த்தேன். அவர்களைக் கீழே இறக்கி டோஸ் விட எண்ணம். என்னைப் பார்த்தவுடன் அவர்கள் கூட்டத்தின் உள்ளே பதுங்கினார்கள். அவர்கள் பயந்து கொண்டது  தெரிந்தது.

அவர்களைக் கீழே இறக்கிப் போலீசில் சொன்னால் அவர்கள் கல்லூரி வாழ்க்கை முடிந்து விடும். இது தமிழ் நாடு அல்ல எது நடந்தாலும் என்ன நடந்தாலும் போலீஸ் எல்லாம் முடிந்தபின் வருவதற்கும் மாமூல் வாங்கிச் செல்வதற்கும். பழைய பள்ளிப்பருவக் கோபங்கள் எல்லாம் சேர்ந்து அவர்களை நாலு கேள்வியாவது கேட்கவேண்டும் என்று தோன்றியது.

“பாவம் விட்டுடு டா. நம்மூர்ப்பசங்க மாதிரி தெரியறது. போனாப் போறது. தெரியாம சொல்லிருப்பாண்டா”, என்றார் அப்பா.

வடகலைக் குரங்கும் தென்கலைப் பூனையும்

ஜெயமோகனின் “ஓலைசிலுவை”யில் வரும் வரிகள், மத மாற்றம் மற்றும் ஊழியம் தொடர்பான ஒரு பக்கத்தில் வரும்
செய்தி தற்போதைய நிலைக்கும் பொருந்துகிறது. என்ன – ஒரு சிறு வேறுபாட்டுடன்.

“மிகப் பெரும்பாலான சாமானிய மக்கள் எதையும் கவனித்து உள்வாங்கிக்கொள்ளும் பழக்கத்தையே இழந்து
விட்டிருந்தார்கள். … அவர்களின் கண்கள் முற்றிலும் காலியாக இருக்கும். அந்தக் கண்களுக்கு அப்பால் ஒரு ஆன்மா
இருப்பதே தெரியாது. அவர்கள் அறிந்தவை முழுக்க இளமையில் அவர்களுக்குச் சென்றவை மட்டுமே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் பசித்துப் பசித்து உணவு உணவென்று அலைந்து வேறு எண்ணங்களே இல்லாமல் ஆகி விட்ட
மனங்கள். அவற்றுக்கு சொற்களை அர்த்தமாக்கிக்கொள்ளவே பயிற்சி இல்லை”. – “ஓலைச் சிலுவை”, ஜெயமோகன்

மேல் சொன்ன வரிகள் தற்போதும் அப்படியே உள்ளன. சிந்திக்க மறந்த ஒரு சமூகம் தற்போது சோற்றின் பின்
செல்லாமல் சந்தைக் கலாச்சாரம் என்னும் சேற்றில் விழுந்து, தன்னிலை மறந்து, தனது ‘தேவை – தேவை இல்லை’
என்பது அறியாமல் வாங்கிக் குவிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளது. சமுதாய சிந்தனை என்ற ஒன்று இருப்பதே
அறியாமல் நிழல் நாயகரகளை நிஜ நாயகர்களாய் வரித்து “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்ற வகையில்
வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். அல்லது வாழ்க்கையால் நகர்த்தப்படுகிறார்கள்.

பெரும்பான்மை மக்களுக்கு வாசிக்கும் வழக்கம் இல்லாததும், அந்த வழக்கத்தை ஏற்படுத்தத் தற்போதைய கல்வி
முறையும் அரசியல் அமைப்பும் தவறியதாலும் நம் மக்களிடையே ஒரு தீனிப்பண்டார மனோபாவம் ஏற்பட்டுள்ளது என்று
எண்ணத் தோன்றுகிறது. தீனி என்பது உணவை மட்டுமே குறிக்கவில்லை இங்கே.

இந்த குறை கூறலில் தாங்கள் முன்னேறிய வகுப்பினர் என்று மார் தட்டிக்கொள்ளும் வைஷ்ணவ அந்தணர்களையும்
குறிப்பிடுகிறேன். சம்பிரதாயங்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதல் இல்லை. அதைக் கற்க வேண்டும் என்னும் ஒரு
உந்துதல் இல்லை. வெறுமனே திருமண் ( நாமம் ) அடிப்படையில் சண்டை இடுவது தான் முன்னேறிய வகுப்பின்
லட்சணமா ? ராமானுசர் என்ன சொன்னார் என்றே முக்கால்வாசிப் பேருக்குத் தெரியாது. தெரிந்தது எல்லாம் “ராமானுச
தயா பாத்தரம்” சொல்லக்கூடாது என்பதும் “ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் ” சொல்ல வேண்டும் என்பதும் தான். “வாழித்
திருநாமம்” உரக்கச் சொல்வதால் மட்டுமே ஒருவன் ராமானுசன் வழியில் வைணவனாகிவிடுவானா ?

இதற்கு 1795-ல் முதல் வழக்கு போடப்பட்டுள்ளது. இன்றுவரை தீரவில்லை இந்த சண்டை. என்ன ஒரு நேர விரையம்?

ஜே.மாக்மில்லன் என்ற ஆங்கில நீதிபதி பல ஆண்டுகள் வைஷ்ணவம் கற்று சம்பிரதாயத்தில் அடிப்படையில் ஒரு
வேற்றுமையும் இல்லை என்று மனம் நொந்து 1946-ல் ஒரு தீர்ப்பு வழங்கினார். இப்படித் தொடங்குகிறது இந்தத் தீர்ப்பு:

Bombay High Court
Thiruvenkata Ramanuja vs Venkatacharlu on 13 May, 1946
Equivalent citations: (1947) 49 BOMLR 405
Author: Macmillan
Bench: Macmillan, D Parcq, Beaumont
JUDGMENT
Macmillan, J.
1. Their Lordships address themselves in this appeal to the consideration of a
controversy which in one form or another has agitated the Hindu religious community
in the Presidency of Madras for upwards of two centuries. The main question between
the parties relates to the right to regulate the conduct of the services in an
important group of temples ..

ரொம்பவும் சிரமப்பட்டு இந்த ஆங்கிலேயர் வழங்கிய தீர்ப்பின் சாரம் இது தான் – தென்கலையார் அதிகம் உள்ள இடத்தில் ( கோவிலில் ) வடகலையார் ராமானுஜ தயாபாத்ரம் சொல்லாக் கூடாது. அவர்கள் வீடுகளில் சொல்லலாம். ஆங்கில நீதி நிர்வாகத்தையே ஸ்தம்பிக்க வைத்த பெருமை ஐயங்கார்களையே சாரும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வைணவம் தோன்றியது. இராமானுசரே 1017-ம் ஆண்டில் சமண, அத்வைத, பௌத்த
வாதங்களை வென்று வைணவத்துக்கு ஒரு வழி காட்டினார். வகைப் படுத்தினார். “கோவில் ஒழுகு” என்று திருமால் கோவில்களில் ண்டடிபெற வேண்டிய உற்சவங்கள் பற்றி எழுதிவைத்துள்ளார்.  வைணவம் அதற்கு முன்பும் இருந்துள்ளது. திருமால் வழிபாடு ஜாவா, சுமத்ரா தீவுகளிலும் பாலி முதலானா இந்தோனேஷிய மாநிலத்திலும்
அப்போதே இருந்துள்ளது.

இப்படி இருக்க ராமானுசருக்குப் பின் இருநூறு மற்றும் முந்நூறு ஆண்டுகள் கழித்து முறையே தோன்றிய
ஆச்சாரியர்களான வேதாந்த தேசிகன் மற்றும் மணவாள மாமுனிகள் பெயரில் இவ்வளவு வேறுபாடுகளா ? இந்தக்
காலகட்டத்தில் இங்கிலாந்தில் ஒரு நாகரீகமான அரசாங்கங்களே இல்லை. அப்படிப்பட்ட ஒரு அரசாட்சியின் நீதிபதி
உங்களுக்குத் தீர்ப்பு வழங்குவது வெட்கக்கேடு இல்லையா? பகுத்தறிவைப் பணயம் வைத்துவிட்டீர்களா?

ராமானுசர் காலம் கி.பி. 1017 – 1037.
வேதாந்த தேசிகர் காலம் கி.பி. 1268 – 1369
மணவாள மாமுனி காலம் கி.பி. 1370 -1443

இவர்களில் தேசிகர் வடகலையாரின் தலைவராகவும் மணவாளர் தென்கலையார் தலைவராகவும் கொள்ளப்படுகின்றனர்.
ஆக தேசிகர் காலத்தில் தென்கலை சம்பிரதாயம் இல்லை. ராமானுசர் காலத்தில் இப்படி வேறுபாடுகளே இல்லை.
இதற்கெல்லாம் ஐநூறு ஆண்டுகட்கு முன்பே ஆழ்வார்களின் காலம். ஆக அவர்கள் காலத்திலும் இந்த வேறுபாடுகள்
இல்லை. ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் நாராயணன் தவிர வேறு ஒன்றும் இல்லை. ( ஆழ்வார்களில் பலர்
அந்தணர் அல்லர். )

ஆழ்வார்களாலும் ராமானுசராலும் அங்கீகரிக்கப்படாத இந்த கலைப் பிரிவுகள் அர்த்தம் உள்ளவைதானா ? இவர்கள்
சொல்லாதவற்றைப் பின்பற்றுவதால் இவர்கள் வழியில் இருந்து நீங்கள் விலக வில்லையா ?

இந்தக் காலகட்டத்தில் அறுநூறு ஆண்டுகள் முன்பு அகோபில மடம் என்னும் வடகலை மடம் உருவானது. இதன் முதல்
ஜீயர் ஆதிவண் சடகோபர், மணவாள மாமுநிகளுக்கு சந்நியாசம் வழங்கியுள்ளார். ஆக மணவாளர் காலத்திலும் இந்த
வேறுபாடுகள், வெறுப்புகள் இல்லை.

தென்கலை வடைகலை இருவரிடமும் பேசிப்பார்த்தேன். “அறிஞர்கள்” என்ற போர்வையில் வலம் வரும் சிலரிடமும்
வாய் விட்டுப் பார்த்தேன். யாரும் சம்பிரதாயங்கள் அடிப்படையில் தர்க்கம் செய்ய முன்வரவில்லை. ஏன் என்றால்
இவற்றை யாரும் படிப்பதில்லை.

மணவாள மாமுநிகளுக்கு மரியாதை செய்ய வேண்டுமா தேசிகர் விக்ரஹத்தை உற்சவத்தின் பொது எழுந்தருளப் பண்ண
வேண்டுமா என்பது தான் இப்போது இவர்களுக்குள் இருக்கும் தலையாயத் தலைவலி. இருவருமே மிகப் பெரிய
ஆச்சாரியர்கள் என்பது இரு கலையாரும் தங்கள் மமதையில் மறந்துவிட்ட ஒன்று.

வடகலையார் கோவில்களை தென்கலைக் கோவில்களாக மாற்றுவது எப்படி என்பதிலும், ராமானுசர் பின் வந்த குரு
பரம்பரையினரை எப்படி அவமதிக்கலாம் என்பதிலுமே இவர்கள் நேரமும் சக்தியும் வீணாகிறது.

சரி. சம்பிரதாயம் என்று வந்தாகி விட்டது. அப்படி என்ன தான் வேறுபாடு இவர்களுக்குள்?

பூனைக்கும் குரங்குக்கும் உள்ள வேறுபாடுதான். பூனை தன் குட்டியைத் தானே சுமக்கிறது. அதாவது பூனைக் குட்டி தான்
பாதுகாப்பாக இருக்க ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தாய்ப்பூனை அதைக் கவ்வி எடுத்து ஓரிடத்திலிருந்து மற்றோர்
இடத்திற்குச் செல்கிறது. ஜீவாத்மாக்கள் தாங்கள் உய்ய ஒன்றும் அனுஷ்டானங்கள் செய்ய வேண்டியதில்லை. நாராயணன் காப்பாற்றுவான். காப்பாற்றவேண்டியது அவன் கடமை என்கிறது தென்கலை சம்பிரதாயம். மார்ஜார நியாயம்
என்று இது அறியப்படுகிறது ( மார்ஜாரம் – பூனை ).

குரங்கு அப்படி அல்ல. அதன் குட்டி தாய்க் குரங்கைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது பாதுகாப்பாக
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் செல்ல முடியும். அதாவது அந்தக் குட்டிக் குரங்கு உய்ய அதனிடம் முயற்சி வேண்டும்.
சரணாகதி வேண்டும். அனுஷ்டானங்கள் வேண்டும். எனவே நாராயணன் மோட்சம் தரவேண்டுமென்றால் மனிதன் முயற்சிக்க வேண்டும் என்கிறது வடகலை சம்பிரதாயம். மர்க்கட நியாயம் என்று இதனை அழைப்பர் (மர்க்கடம்-குரங்கு).

இப்படி குரங்குக்கும் பூனைக்கும் இருக்கும் வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ள வழிபாட்டு முறைகள் மீது
இத்தனை நூறு ஆண்டுகள் சண்டை இடுவது பகுத்தறிவு தானா ?

இந்தக் கேள்விகளுக்கு இந்த மெத்தப்படித்த மேதாவிகளிடம் தர்க்க ரீதியினாளான பதில் இருக்காது.  இவர்கள் பதில் உரத்த குரலில் “வாழித் திருநாமம்” சொல்வதிலும், ஒரு கலையார் தயா பாத்ரம் சொல்லும்போது மற்ற கலையார் வாய் திறவாமல் உள்ளனரா என்று கண்காணிப்பதிலும் மட்டுமே.

மறந்துவிட்டேன். புளியோதரை, அக்கார அடிசில் மற்றும் ததியோன்னம் – இவற்றில் எதில் சுவை அதிகம் என்னும் தத்துவ விவாதத்திலும் இவர்கள் திறமையுடன் பங்கெடுக்கக்கூடும்.

குரங்குகள் சண்டையிடுவதில்லை

மனித இனத்திற்கு முந்தைய பருவம் குரங்கு என்று நாம் அறிவோம். பகுத்தறிவு மிகுதியால் பரிணாம வளர்ச்சி காரணமாக மனிதனானான் என்று அறிகிறோம்.

குரங்குகள் தங்களுக்குள் பேசுவதற்கு ஒரு மொழி வைத்துள்ளன. அதே போல் ஓராங் உட்டான், சிம்பன்சி, கொரில்லா போன்ற குரங்குகளும் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஒரு மொழி வைத்துள்ளன.

ஆனால் குரங்குகள் தங்களுக்குள் மொழி வேற்றுமையால் சண்டையிடுவதில்லை.அன்பு பரிமாற, உணவு வேண்ட, தத்தம் தொகுதி வரையறுக்க – இதற்கு மட்டுமே அவற்றிற்கு மொழி தேவைப் படுகிறது.

ஒரு குரங்கு இனம் ஒரு நாளும் பிறிதொரு குரங்கு இன மொழியைத் தாழ்த்திப் பேசியதில்ல்லை. மொழி காரணமாக வெறி  அடைவதில்லை.

குரங்கோ அல்லது மற்ற மிருகமோ தனது மொழி தான் உயர்ந்தது என்று மார் தட்டியதில்லை.

ஏன் என்றால் அவற்றிற்குப் பகுத்தறிவு இல்லை.

பகுத்தறிவு படைத்த மனிதன் அப்படி அல்ல.

முன்னேறிய வகுப்பினரன்  முதல் பின்னேறவே விரும்பும் வகுப்பினரன்  வரை மொழி, சம்பிரதாயம் முதலான தனது படைப்புகளைக் கொண்டே வேற்றுமைகளை உண்டாக்கி சண்டை போடுகிறான். தார் பூசிவிடுவதால் ஒரு மொழியை அழித்துவிட முடியும் என்று நம்புகிறான்.  மொழியின் தொன்மை குறித்து பெருமை அடைகிறான். அதனால் வெறி பிடித்து அலைகிறான்.

மொழி தவிர  மதம், இனம் , தோல் நிறம் என்று புதிது புதிதான காரணங்கள் கற்பித்து சண்டை போடுகிறான்.

ஏன் என்றால் மனிதன் பகுத்தறிவு படைத்தவன்.

மேலே சொன்ன கருத்துகள் மிகவும் முன்னேறிய வகுப்பினரான அந்தண  வைஷ்ணவர்கள் தங்களுக்குள் தென்கலை- வடகலை வேறுபாடு, ராமானுஜ தயாபாத்ரம் – ஸ்ரீ சைலேச தயா பாத்ரம், வடகலை க்குள் உள்ள வீராப்பு வேறுபாடு முதலான புண்ணாக்கு வேறுபாடுகள் பற்றின அல்ல.

திவ்யப் பிரபந்தத்தில் எந்தப் பாசுரம் தொடங்குவது, எந்த தொனியில், ராகத்தில் தொடங்குவது, எந்த ஆச்சாரியனை- குரு  பரம்பரையை முன்னிலைப்படுத்துவது , திருமண்ணை எந்த அகலத்தில் இட்டுக்கொள்வது, முதல் தீர்த்தம் யாருக்கு அளிப்பது என்று தற்கால மனித வாழ்வுக்கு ஆதாரமான பிரச்சினைகளை அலசும் ஐயங்கார் அறிவு ஜீவிகளைப் பற்றி நான் பேசவில்லை.

தயிர்வடை உசத்தியா, புளியோதரை உசத்தியா, அக்கார அடிசில் உசத்தியா என்ற ரீதியில் மட்டுமே வாதிடும் அளவுக்கு தத்துவ அறிவு படைத்து ஆனாலும்  எதுடா காரணம் சண்டை போட என்று  அலையும்  தற்கால ஐயங்கார்களைப் பற்றி இங்கு பேசி  குரங்குளை அவமானப் படுத்த விரும்பவில்லை.

நிஜமான குரங்குகளைப் பற்றி மட்டும் பேசுகிறேன். அவைகள் தங்களுக்குள் மேல் சொன்ன அற்ப காரணங்களுக்காக ஒரு போதும் சண்டை போடுவதில்லை.

கண்ண பட்டாச்சாரியாரால் ஆபத்து

Image

மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.  இந்தக் கல்வெட்டு தேரழுந்துர் ஆமருவியப்பன் கோவிலில் உள்ளது. திருமங்கை மன்னன் திரு மண்டபம் என்பது பெருமாள் உற்சவக் காலங்களில் வீதி புறப்பாடு முன்னரும் பின்னரும் எழுந்தருளும் மண்டபம்.

இதை 1972ல் தருமபுர ஆதீனகர்த்தர் திறந்து வைத்துள்ளர். தருமையாதீனம் சைவ ஆதீனங்களில் தலையாயது.  இதன் குரு மஹா சன்னிதானம் பரம வைஷ்ணவக் கோவிலில் ஒரு மண்டபத்தைத் திறந்து வைத்தார் என்பது சற்று ஆச்சரியம் அளித்தது.

இதன் தொடர்பான தகவல்கள் குறித்து ஆராய்ந்தேன். சுவையான ஒரு தகவல் கிடைத்தது.

இந்தப் பதாகையைத் திறக்கும் முன்னர் சன்னிதானம் அவர்கள் ஆமருவியப்பனைச் சேவிக்கச் சென்றுள்ளார். சன்னிதியில் அன்று தற்போது 92 வயதாகும் கண்ணன் பட்டாச்சாரியார் இருந்துள்ளார். ஆமருவியப்பனிடம் 72 வருடமாகக் கைங்கர்யம் செய்து வருகிறார் அவர்.

அவர் பெருமாளைச் சேவை செய்து வைக்கும் அழகே தனி. 13-வது ஆழ்வார் போல் அத்துணைப் பாசுரங்களையும் சேவித்து ( வாயினால் சொல்லி ), தல வரலாற்றைச் சொல்லி சேவை செய்து வைக்கும் போது ஆமருவியப்பனே நேரில் வந்து கேட்பது போல் இருக்கும். ( தற்போது இவரது மகன் வாசன் பட்டாச்சாரியார் அந்தப் பணியைச் செய்கிறார்).

குரு மஹா சன்னிதானம் ஒரு அரை மணி நேரம் பெருமாளின் முன்னால் நின்றிருக்கிறார். கண்ண பட்டச்சாரியார் பாசுரம் பாடி சேவை செய்து வைத்துள்ளார்.

வெளியில் வந்து இந்தப் பதாகையைத் திறந்து வைத்த சன்னிதானம், ” இந்த கண்ண பட்டச்சாரியாரால் ஒரு ஆபத்து நேர இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் நான் உள்ளே இருந்தால், இவர் என்னையும் வைணவராக மாற்றி இருப்பார். இப்படி உருகிஆழ்வார் பாசுரங்கள் பாடினால் யாருமே வைஷ்ணவராக வேண்டியது தான்  “, என்று மனம் கனிந்து கூறியுள்ளார்கள்.

சைவ வைஷ்ணவ வேறுபாடின்மை இந்த நிகழ்ச்சியினால் புலப்படுகிறது.  துவெஷம் இல்லாமல் பெரியவர்கள் இயங்கியுள்ளது வியப்பளிக்கிறது.

தற்போதைய “வைஷ்ணவர்கள்”  சிந்திக்க வேண்டும்.

ஒரு ஊரின் கதை

ஊர் கூடித் தேர் இழுப்பது என்று கூறுவர். தேரழுந்தூரில் 1950ல் ஊர்ப் பெயருக்குக் காரணமான தேர் எரிக்கப்பட்டது. புதிதாகத் துவக்கப்பட்ட ஒரு அரசியல் இயக்க சார்புடையவர்கள் இந்த மாபாதகச் செயலைச் செய்தார்கள் என்று பரவலாகப் பேசப்பட்டது.

எரித்தவர்கள் யார் என்று தெளிவாகத் தெரிந்தாலும் பெயருக்கு சிலர் கைது செய்யப்பட்டனர் என்று அறிகிறேன். அக்கால விபரம் அறிந்தவர்கள் தற்போது இல்லை.

ஆக தேர் எரிந்து போனது. மிஞ்சியது சில உருக்குலைந்த மரக் கட்டைகள் மற்றும் இரும்பு. பல நூறு ஆண்டு காலத் தேர் உருத்தெரியாமல் அழிந்து போனது.

வழக்கமாகத் தேர் நிற்கும் தேரடி ஆகிரமிப்புக்குள்ளானது. கோழி இறைச்சிக் கடை முதலியன தோன்றின. சில ஆண்டுகளில் அவை மின் இணைப்புப் பெற்ற கடைகளாக மாறின. இதனிடையில் மதமாற்றம் மற்றும் வீட்டு விற்பனைகள் மூலம் அக்ரஹாரம் இஸ்லாமியர் வசம் போனது. பார்ப்பனரின் பிழைப்பு கருதிய வெளி ஊர்க் குடி நுழைவு ஒரு முக்கிய காரணம்.

சன்னிதித் தெருவில் ஆமருவிப்பெருமாள் உற்சவ சமயங்களில் எழுந்தருளும்போது வரவேற்க இரண்டு மூன்று குடும்பங்களே இருந்தன.

அரசின் ஹிந்து சமய அறநிலையத் துறை கை விரித்ததால் உற்சவங்களும்   நின்று போயின.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கை ஆழ்வார் தேரழுந்துர் வந்த போது பெருமாள் கோவில் செல்ல முடியவில்லையாம். எங்கும் புகை மூட்டம். காரணம் “அந்தணர் தம் ஆகுதியின் புகை..” என்று அவரே சொல்கிறார்.

அந்தத் தேரழுந்தூரில் பெருமாளுக்கு உற்சவம் நின்று போனது 1980-களில். 40 வேலி நஞ்சை வயல் சொந்தக்காரரான ஆமருவிப்பெருமாள் அன்றாட உணவின்றித் தவித்தார். கோவில் ஊழியர்களுக்கு மாத வருமானம் அரசு வழங்கவில்லை. நிதிப் பற்றாக்குறை என்று கூறினர். அதே சமயம் ஆடம்பர விழாக்களுக்குப் பஞ்சமில்லை அரசாங்கத்தில்.

பெருமாளின் நிலை கண்டு அப்போது உருவானது தான் “கோசக பக்த சபா” – மூன்று பக்தர்களால் துவங்கப்பெற்றது. ஒரு ரூபாய், ஐம்பது பைசா என்று வசூல் செய்து தற்போது 30 ஆண்டுகளாய் வருடாந்திர உற்சவங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களின் சராசரி வயது 78. ( கோசகன் – ஆமருவி-யின் வடமொழி மூலம்)

இந்து சமய அற நிலையத் துறை தனது பொறுப்பைக் கை கழுவிவிட்டபின் கோவிலின் உற்சவங்கள் கோசக சபாவினால் தொடரப்பட்டன. பல நேரங்களில் கோவிலின் அன்றாட வேலைகள் கூட சபா செய்தது.

அப்படியாக ஆமருவியப்பனின் தேரையும் புதியதாகச் செய்ய ஒரு திட்டம் தீட்டியது சபா. ( அரசின் பங்களிப்பு ரூ.5 லட்சம். தேரின் 2004-ம் ஆண்டு செலவு ரூ.25 லட்சம் )

கொடையாளர் பணியாக (Donor Work) தேர் வேலைகள் தொடங்கின. கொடையாளர் சேர்க்கும் பணி தொடங்கியது. ஊரிலிருந்து வெளியெறி நல்ல நிலையில் இருக்கும் மக்களிடம் கொடை கோரப்பட்டது. பலர் ஆங்கிலம் பேசினர். நிர்வாகம் தொடர்பான வார்த்தைப் ப்ரயோகங்கள் , அறிவுரைகள் அள்ளி வீசப்பட்டன. ஒன்றும் கவைக்கு உதவவில்லை.

சபா களத்தில் இறங்கியது. அரசுடன் பல முறை பேச்சு வார்த்தை, கொடையாளருடன் ஒருங்கிணைப்பு என்று ஒரு புறம், மர வேலை செய்பவர், தேர் கட்டும் தொழிலில் இருப்பவர் என்று இவர்களுடன் ஒரு புறம், இலுப்பை மரம் விளையும் காடுகளைத் தேடி ஒரு புறம் என்று பல முனைகளில் வேலை.  சபாவின் உழைப்பின் பலனாகப் பல நல்ல உள்ளங்கள் கொடையாளர்களாக உறுவெடுத்தன ( ஒரு சில நெகிழ வைக்கும் சம்பவங்கள் பின்னர் ).

மரம் கோரி ஒப்பந்தப்புள்ளி (Tender ) வெளியீடு. அதை யாருமே எடுக்கவில்லை. எனவே ஒரு மரம் அறுப்பவர் காலில் விழுந்து அவரை எடுக்க வைத்தது, அவர் மரம் தராததல் தாமே மரம் வெட்டி அதை அவர் மரம் அறுக்கும் ஆலையில் தாமே அறுத்து தேர்த் தச்சனிடம் கொண்டு சேர்த்தது என்று சபாவிற்குப் பல வேலைகள் ( மரம் அளிக்காவிட்டலும் அவர் அளித்ததாக கணக்கு காட்ட வேண்டி இருந்தது வேறு கதை).

இரண்டு ஆண்டுகள் போராட்டம். பின்னர் தேரோட்டம். இடையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது பற்றி எழுதினால் அது ஒரு “சிங்கம்” திரைப்படம் போல் 3 மணி ஓடும்.

அதன்பின்னர் 2006-ம் ஆண்டு கோவில் செப்பனிடும் பணி துவங்கியது சபா. அதுவும் கொடையாளர் பணி என்று அரசு தெரிவித்தது. எனவே சபா கொடையாளரைத் தேடி மீண்டும் பயணம்.

ஐந்து ஆண்டுகள் தீவிர வேலை. அற நிலையத் துறை, தீயணைப்புத் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, வனத் துறை என்று அரசின் பல துறைகளுடனும் சேர்ந்து உழைத்ததன் பலன் – குடமுழுக்கு 2010ல் நடைபெற்றது.

சில பாடங்ள் :

கோவிலின் கொடி மரத்திற்குத் தேக்கு மரம் தேவைப்படும். கோவில் நந்தவனத்தில் இருக்கும் மரத்தைத் தர அற நிலையத்துறை தயங்கும். வெளியில் இருந்து கொண்டு வர வேண்டி காவல், வனத்துறை, அறம் என்று பலரது தயவு தேவை. வனத்துறை அனுமதி அவ்வளவு எளிது அல்ல.

அறநிலையத் துறை ஒப்புதல்கள் ஊர்ப்புறங்களில் இருந்து அவர்களது சென்னை அலுவலகலம் செல்ல பல நாட்கள் ஆகும். எனவே நாம் கூரியர் வேலையும் செய்ய வேண்டி இருக்கும, பலமுறை.

அறநிலையத் துறையில் ஒரு கோப்பு ( File) மேசை விட்டு மேசை நகர “சம்பாவனை” தேவை. அல்லது ஒருமையில் பேச்சு கேட்க வேண்டி வரும். அவ்விடத்தில் “நான் யார் தெரியுமா ? என்ன வேலை செய்தேன் தெரியுமா?” போன்ற வெட்டி வீரம் பயன் அளிக்காது. மேலும் தாமதம் உண்டாக்கும்.

அறநிலையத் துறையில் சில மிக நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் தங்கள் வாகனத்திற்குத் தாங்களே பெட்ரோல் போட்டுக் கொள்கிறார்கள்.

பஞ்சாயத்து, ஊராட்சி, “அண்ணன்-தம்பி”  என்று பல பரிவார / எல்லைக் காவல் தேவதைகளுக்கும் அவ்வப்போது பரிகாரம் செய்ய வேண்டியது அவசியம்.

இவை எல்லாவற்றையும் விட சமாளிக்க முடியாதது வைஷ்ணவத்தில் உள்ள “உள் குத்துக்கள்”. ராமானுசரே இன்னொறு முறை அவதரித்தாலும் கோபுரம் மேலேறித் தற்கொலை செய்துகொள்வார். சம்பிரதாயம் பற்றிய சிறு புரிதல் கூட இல்லாமல் திருமண்ணின் ( நாமம் ) அமைப்பையும் அதன் வடிவத்தையும் மட்டுமே அறிந்து, சிறிதளவேனும் கூட தத்துவ அறிவு இல்லாத வறட்டு ஜாம்பவான்களின் பிடியில் சிக்கியுள்ளது வைஷ்ணவ சம்பிரதாயம் என்பதால் இந்த “உள் குத்தினால்” விளையும் கேடு ரொம்பவும் பெரியது. இந்தப் போலி வித்யாசங்களினால் பாதிக்கப்படுவது பெருமாள் கைங்கர்யம் என்று கூட எண்ணாமல் இருப்பவர் ஆன்மிகவாதி என்று ஒத்துக்கொள்ள முடியவில்லை.

உதாரணம் : திவ்யப்ப்ரபந்தத்தில் எந்தப் பாசுரம் பாடுவது, நான்கு வீதிகளில் எந்த இடத்தில் எந்தப் பாசுரம் பாடுவது, யார் முதலில் தொடங்குவது, முதல் தீர்த்தம் யாருக்கு எந்த வரிசையில் அளிக்கப்பட வேண்டும், பாசுரத்தை எந்தத் தொனியில் , அளவில் பாடுவது  – இப்படி நாட்டுக்குத் தேவையான பல சண்டைகள் மனதை ரொம்பவும் பாதிக்கும். அதனால் கையில் ரத்த அழுத்த மாத்திரை வைத்துக்கொள்வது ரொம்பவும் அவசியம்.

தமிழரின் ஆதி சமயங்களில் ஒன்றான வைணவத்தையும் வைணவக் கோவில்களையும் அழிக்க திராவிடக் கட்சிகள் தேவை இல்லை. இந்தப் போலிப் “பெரியவர்”களே போதும். ( இந்த வைஷ்ணவ மோதல்கள் எல்லா ஊர்களிலும் உள்ளது ).

இந்த அனைத்து ரக இன்னல்களையும் கடந்து ஆமருவிப்பெருமாள் அருளால் தேரழுந்துர் நிமிர்ந்து நிற்கத் தொடங்கியுள்ளது.

இந்தத் தேர்த்திருப்பணியிலும், கோவில் திருப்பணியிலும் ஊர் மக்கள் காட்டியுள்ள ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு சாதி மதங்களைக் கடந்தது. தேர் வெள்ளோட்டத்தில் இஸ்லாமியர் தண்ணீர்ப் பந்தல் அமைத்தார்கள்.

பாராட்டப்பட வேண்டியவர்கள் :

அற நிலையத் துறை- இத் துறையில் ஆள் பற்றாக்குறை உள்ளது. ஒரு அலுவலர் / அதிகாரி பல கோவில்களுக்கும் பொறுப்பு. கோவில்கள் பல மைல்கள் தொலைவில் அமைந்துள்ளன.

காவல் :  தேரின் போது இவர்கள் சேவை தேவை.

மின்சாரம் : இது இல்லை என்றாலும், தேர் ஓடும்போது மின் கம்பிகளைக் கழற்றி மாட்ட வேண்டும்.

தீயணைப்பு : தேரின் போது இவர்கள் அவசியம்.

ஊர் மக்கள் : சாதி மத பேதம் இன்றி தேர் இழுக்கும் சாதாரண மக்கள்.

மேலும் தேரழுந்துர் பற்றி அவ்வப்போது பேசுவோம்.

பி.கு: இந்தக் கருத்துக்கள் எனது சொந்தக் கருத்துக்கள். இவற்றுக்கும் கோவிலார்கும், கோசக சபாவிற்கும் தொடர்பில்லை. ஒரு வெளியிருப்புக் கண்காணிப்பாளன் / பார்வையாளன் ( onlooker ) என்ற முறையில் பதிவு செய்திருக்கிறேன்.

அழகிய சிங்கர்

வைணவ மடங்களில் பிரதானமாகத் திகழும் அகோபில மடம் 610 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது. செந்தமிழும் வட மொழியும் கலந்து திருமாலைப் பணியும் தொன்மையான மரபு சார்ந்த வைணவ மடங்களில் முதன்மையானது அகோபில மடம்.

அகோபிலம் ஆந்திராவில் ஒரு மலைப் பிரதேசம். அங்கு எழுந்தருளியுள்ள நரசிம்மர் 600 ஆடுகளுக்கு முன்பு (கி.பி. 1398 )காஞ்சியில் இருந்த கிடம்பி ஸ்ரீநிவாசாச்சாரியார் கனவில் வந்து அவரை அகோபிலம் வருமாறு அழைத்தார். அகோபில மலையில் அவரது கையில் மாலோல நரசிம்ஹர்  விக்ரஹமாக வந்து சேர்ந்தார். அத்துடன் ஒரு வயோதிகர்  உருவில் வந்து அவரை கிராமம் கிராமமாகச் சென்று மக்களை ஆற்றுப்படுத்த ஆணையிட்டார்.

அதன்படியே அகோபில மடம் உருவானது. அவர் ஆதிவண் சடகோபன் என்ற ஒரு திருநாமத்தை ஏற்று வைணவ சம்பிரதாயம் தழைக்க ராமானுசர் வழியில் விசிட்டாத்வைத மரபைப் பரப்பினார். இந்த மடம் வடகலை சம்பிரதாயத்தைச் சார்ந்தது. ஆதிவண்  சடகோப ஜீயர்  தென்கலை சம்பிரதாயத்தின் ஆதி குருவான மணவாள மாமுனிகளுக்கு சந்நியாசம் அளித்தார் என்றும் வரலாறு கூறுகிறது. அவரது நாட்களில் வடகலை-தென்கலை வேறுபாடுகள் இல்லை என்று அறியலாம்.

ஆந்திராவைச் சேர்ந்த அன்னமாச்சாரியார் திருவேங்கடவன் மேல் பல பாடல்கள் எழுதியுள்ளார். இவர் ஆதிவண் சடகோப ஜீயரின் சீடர் ஆவார்.

ஆதிவண் சடகோப ஜீயர் வழியில் வந்தவர்கள் அழகிய சிங்கர்கள் என்றும் சடகோப ஜீயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ( அழகிய சிங்கம் என்பது நரசிம்மப் பெருமானைக் குறிக்கும் என்று அறியலாம் ).

இம்மடத்தின் ஆளுமையில் சில திருமால் கோவில்கள் உள்ளன. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில், ஆதனூர் புள்ளபூதங்குடி கோவில்கள், அஹோபில நரசிம்ஹர் கோவில் முதலியன சில. அவை தவிர மடத்தின் மூலம் பல வேத – ஆகம – பிரபந்த பாட சாலைகளும்  நடத்தப்படுகின்றன. இதில் சேர்ந்து படிக்கக் கட்டணம் தேவை இல்லை.

கடந்த அறுநூறு ஆண்டுகளாக தொடர்ந்த குரு பரம்பரை வழியில் பல ஆயிரக்கணக்கான சீடர்கள் கொண்ட ஒரு வைணவ மடமாக அகோபில மடம் செயல்பட்டு வருகிறது. இதன் 44-வது  ஜீயர் திருவரங்கம் ராஜகோபுரம் ஆசியாவிலேயே உயர்ந்ததாகக் கட்டினார். அவரால் பல வருடம் தேர்வு செய்யப்பட்ட வில்லிவலம் கிருஷணமாச்சாரியார் 45- வது ஜீயராக 1991  ம் ஆண்டு பொறுப்பேற்று நாராயண யதீந்திர மஹா தேசிகன் என்ற சந்நியாசப் பெயர் பெற்றார்.  அதற்கு முன் இவர் தமிழ்ப் பண்டிதராகவும் பாடசாலை ஆசிரியராகவும் பணியாற்றி வைணவம் சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.

மடத்தின் பொறுப்பேற்றபின் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அஹோபிலம், புள்ளபூதங்குடி, திருவள்ளூர் கோவில்களைச் செப்பனிட்டார். தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தினார்.

“தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள் குன்றம்” என்றும் , “சென்று காண்டற்கு அரிய கோவில்” என்று ஆழ்வார்கள் அகோபில மலையில் காட்டின் நடுவே உள்ள மாலோல நரசிம்மர் கோவிலைப் பற்றிப் பாடி இருந்தனர்.

எல்லாரும் சென்று பெருமாளைச் சேவிக்க வேண்டும், இறைஅருள் பெறவேண்டும் என்று கருதி அகோபிலத்தில் பக்தர்கள் எளிதில் சென்று சேவிக்கவும் தங்கி அருள் பெறவும் பெரும் பொருட்செலவில் பல வசதிகளைச் செய்தார் 45 ம்  பட்டம் அழகியசிங்கர்.

எளிதில் அணுகக்கூடியவராகவும், வெளிப்படையாகப்பேசக்கூடியவராகவும்,  கடினமான வடமொழி காவியங்களையும் பக்தி இலக்கியங்களையும் பாமரர் அறியும் வண்ணம் எளிய தமிழில் உபன்யாசம் செய்யும் ஆற்றல் கொண்டதால் பக்தர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இந்த அழகியசிங்கர் தனது 87 வது வயதில்  இன்று அதிகாலை பரமபதம் அடைந்தார். ஸ்ரீரங்கத்தில் தனது ஆச்சாரியாரின் பிருந்தாவனத்தருகில் தானும் பிருந்தாவனம் கொள்கிறார்.

%d bloggers like this: