கலாப்ரியாவுடன் ஒரு பொழுது

கவிஞர் கலாப்ரியா எளிதில் அணுகப்படக்கூடியவராகவும் மென்மையாகப் பேசுபவராகவும் இருக்கிறார். இன்று நடந்த கவிதைப் பயிலரங்கில் அவருடன் பேசினேன். ‘பழைய கணக்கு’ நூலைப் படித்துக் கருத்து கூறுவதாகச் சொல்லியிருக்கிறார்.

இன்று பல ‘கவிஞர்கள்’ கண்டெடுக்கப்பட்டார்கள். 13 வயது முதல் 70 வயது வரை பலர் தாங்கள் கவிதை எழுதக் கூடியவர்கள் என்பதைக் கண்டுகொண்டார்கள்.

‘நிழல்’ என்னும் தலைப்பில் எழுதச்சொன்னார். நான் எழுதிய சில ‘கவிதைகள்’ ( அப்படி இல்லை என்றாலும் மன்னித்துக்கொள்ளுங்கள் ).

1. நிழல்- நான் இல்லாத நான்

2. நான் பெரியவன்
நான் சிறியவன்
நான் பெரியவன்
நான் இல்லை

3. நிழல் – என்னை நானே பார்த்து பயந்த உருவம்.

4. உன் சமூகம் உனக்கு முன்னால் செல்லும்
சில சமயம் பின்னால்

5. அடுத்த வீட்டுக்காரனின்
அகோரப் பணப்பசியால்
என் வீட்டுப் பிள்ளைகள்
நிழலாய் ஆயினர்
(சிங்கைப புகை மூட்டம் பற்றியது )

6. மனித இனத்தின் சமத்துவத்தை உணர்த்தும் ஒன்றே ஒன்று

கலாப்ரியா 1,4,5 கவிதைகளைப் பாராட்டினார்.

நாங்களும் கவிஞர் ஆயிட்டோம்ல !

வாசகர் வட்டத்தில் ஜெயமோகனுடன் கலந்துரையாடல்

சிங்கப்பூர் வாசகர் வட்ட நிகழ்வுக்காக எழுத்தாளர் ஜெயமோகன் வந்திருந்தார். 02-மார்ச்-2014 அன்று அங் மோ கியோ நூலகத்தில் வாசகர் வட்ட நண்பர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலில் ஜெயமோகனின் வெளிப்படையான, உடனுக்குடனான பதில்கள் இந்தக் காணொளியில். மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது இந்தக் காணொளிப்பதிவு.

மகாபாரதம், தமிழ் எழுத்தாளர்கள், தமிழரின் இன்றைய நிலை, தமிழ்ச் சமயங்கள், தமிழகத்தில் எழுத்துச் சுதந்திரம், சங்க இலக்கியம், கல்வியின் இன்றைய நிலை என்று பல முனைகளில் கேள்விகள் எழுந்தன. அத்தனைக்கும் சளைக்காமல் பதில் சொல்கிறார் ஜெயமோகன்.

தமிழை வாழ வைக்க என்ன செய்ய வேண்டும்?

ஜெயமோகன்
சிங்கப்பூர் வாசகர் வட்ட வெள்ளி விழாவில் எங்களுடன் எழுத்தாளர் ஜெயமோகன்

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராகத் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் கலந்துகொண்டார். விழா இறுதியில் அவரது பேச்சு முத்தாய்ப்பு. அதிலிருந்து சில பகுதிகள் :

தமிழை வாழ வைக்க நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். ‘தமிழ் வாழ்க’ என்று பாதாகை வைப்பதால் தமிழ் வாழாது.

தமிழை வாழ வைக்க ஒரு மித மிஞ்சிய பதற்றம் தென்படுகிறது. அது தேவை இல்லை.

தமிழ் வாழ நாம் தமிழில் பேச வேண்டும். குழந்தைகளுக்குத் தமிழ் நூல்கள் அளித்து வாசிக்க வைக்க வேண்டும். அதற்கு நாம், பெரியவர்கள், முதலில் தமிழ் நூல்கள் படிக்க வேண்டும்.

இந்த உலகம் ஒரு கோழி முட்டை போன்றது – மஞ்சளும், வெள்ளையும் கொண்டது. வெள்ளை புதியதாக உருவாக்குகிறது. மஞ்சள் காப்பி அடிக்கிறது. மஞ்சள் கடின உழைப்பாளிகளாக இருந்தாலும் புதிய உருவாக்கங்கள் செய்வதில்லை. இன்னொரு மஞ்சளான ஜப்பானும் கடந்த வருடங்களில் மிகப்பெரிய பண்பாட்டு வீழ்ச்சி அடைந்து வருகிறது. அது போலவே இந்தியாவும் ஒரு (pseudo) போலி ஜப்பானாக ஆகி வருகிறது. வெறும் உழைப்பு , மேலும் உழைப்பு, பணம் ஈட்டுவது மட்டுமே வெற்றி என்ற கொள்கை – இவையே இன்றைய அளவுகோல்களாகி உள்ளன.

மக்கள் மகிழ்ச்சி வேண்டும் என்று கேட்பதில்லை. வெற்றி வேண்டும் என்று கேட்கிறார்கள். அல்லது வஞ்சம் வேண்டும் என்று கேட்கிறார்கள். இவற்றையே மகிழ்ச்சியாகப் பார்க்கிறார்கள்.

திருக்குறள் ஒரு சூத்திரம். அது மிகப்பெரிய தத்துவங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதற்குத் தற்போது உள்ள விளக்க உரைகள் சரியானவை அல்ல.

உ.தா: ‘எண் என்ப ஏனை எழுத்தென்ப..’ – இந்தக் குறளில் ‘எண்’ என்பது நம்பரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆனால் அதைவிடவும் அதில் ஒரு சூட்சும அறிவு உள்ளது. ‘எண்’ என்பது ‘எண்ணம்’ என்னும் பொருளிலும் கொள்ளலாம். முதலில் தோன்றுவது எண்ணம். பின்னரே அது எழுத்து வடிவம் பெறுகிறது. இப்படிப் பல குறள்கள் உள்ளன.

பல பழைய ஓலைச் சுவடிகளை நாம் இழ்ந்துவிட்டோம். ஒருவரிடம் ஒரு சுவடி இருந்தால் அது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு பதிப்பு செய்யப்பட வேண்டும் என்று ஒரு கணக்கு இருந்துள்ளது. அதன் பின்னர் பழைய சுவடிகளைத் தீயில் இட்டுவிடுவதும், நீரில் சேர்த்துவிடுவதும் வழக்கம். ஆனால் காலப்போக்கில் பதிப்பிப்பது நின்று போய், அழிப்பது மட்டுமே மிஞ்சியுள்ளது. இவற்றினால் நாம் நமது வரலாற்றை அழித்துவிட்டோம்.

தமிழில் பல பழைய, பொருள் பொதிந்த சொற்கள் உள்ளன. அவை காலப்போக்கில் அழிந்துவிட்டன. ‘ஓங்கில்’ என்பது Dolphin  என்னும் உயிரினத்தைக் குறிக்கிறது. ‘நீராளி’ என்பது  ஓக்டோபஸ் (Octopus) என்னும் உயிரினத்தையும் ‘குருகு’ என்னும் சொல் வெட்கங்கள் அதிகம் உள்ள ஒரு வாசனை அற்ற பறவையையும் குறிக்கிறது. ( வைணவர்கள் ‘குருகு’ என்பதை ‘கொக்கு’ என்னும் பொருளில் பயன்படுத்துகிறார்கள். ) ‘தியானம்’ என்பதற்கு ‘ஊழ்கம்’ என்று ஒரு நேரிடைத் தமிழ்ச்சொல் உள்ளது. தனக்குள் ஆழ்தல் என்பது மருவி ‘ஊழ்கம்’ என்று அமைந்துள்ளது.

சொல் இல்லை என்றால், அந்தப் பறவையும் அழிந்துவிடும். ஒரு மரத்தின் பெயர் தெரியவில்லை என்றால் அதனைப் பாதுகாக்க நமக்கு என்ன ஒரு ஊக்கம் இருக்கும் ? பல பறவை இனங்களும், தாவர இனங்களும் அழிய இதுவும் காரணமே.

தமிழ் மன்னர்கள் நமக்கு அளித்துள்ள வரம் நமது கலாச்சாரம். அதுவும் சோழர்கள் கொடுத்துள்ளது கோவில்களும் ஏரிகளும். கோவில்கள் நமது கலாச்சாரத்தின் பிம்பங்கள். ஏரிகள் நமது வாழ்வாதாரமான வேளாண்மையின் தோற்றுவாய். ஆனால் நாம் அவற்றின் அருமை தெரியாமல் கோவில்களையும் ஏரிகளையும் அழிக்கிறோம். வீராணம் ஏரி மனிதனால் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான ஏரி. சிற்பிகளால் செதுக்கப்பட்ட தெய்வச் சிலைகளைக் கொத்தனார் கொண்டு பராமரிக்கிறோம். இதுவே நமது கலாச்சாரம் மீது நாம் காட்டும் ஈடுபாடு.

இந்திய நாட்டில் ‘சரஸ்வதி’ என்னும் நதி இருந்துள்ளது. குஜராத் முதல் ராஜஸ்தான், அலகாபாத்,  பாகிஸ்தானின் சில பகுதிகள் இவற்றை உள்ளடக்கிய ஒரு நாகரீகமே ‘சிந்து சம வெளி ‘ நாகரீகம். ஆனால் நாம் ஹரப்பா, மொஹஞ்சதாரோ முதலிய ஆங்கிலேயர் கை காட்டிய பகுதிகளை மட்டுமே இன்று சிந்து சமவெளி நாகரீகம் என்று அழைக்கிறோம்.

சரஸ்வதி நதி வற்றியதால் எற்பட்ட பாலைவனமே ராஜஸ்தான் என்று அறிஞர்கள் கூறுகிறனர்.

%d bloggers like this: