‘திருக்கார்த்தியல்’ – வாசிப்பனுபவம்

இக்கதைகள் பெரும்பாலும் நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றூகிறது. ஏனெனில் சில கதைகளில் தன்மை ஒருமை வழியாகக் கதை செல்கிறது.

பதின்ம வயதை எட்டாத, விளிம்பு நிலையில் உள்ள பள்ளி மாணவர்களின் பார்வையில் சொல்லப்படும் கதைகளின் தொகுப்பே ராம் தங்கம் என்னும் எழுத்தாளரின் முதல் சிறுகதை நூல். பெயர்: திருக்கார்த்தியல்.
 
அலட்டல், அதிக வர்ணனைகள், பொய்மொழி இல்லாமல் சாதாரண நாஞ்சில் நாட்டு வழக்குச் சொற்களைக் கொண்டே மனதைப் பிழியும் கதைகள் பதினொன்றைக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.
 
அரசியல் சரி நிலை, மதச்சார்பற்றதாக காட்டிக் கொள்ளும் வெற்று வியாக்கியான வரிகள், அம்பேத்கார் மண் / பெரியார் மண், பொதுவுடமை ஒப்பாரிகள் என்று முற்போக்கு எழுத்தாளர்களால் கொண்டாடப் பட வேண்டியதற்குத் தேவையான எந்த லாகிரி வஸ்துக்களும் அற்ற, நேர்மையான, மனதில் ஆணியடிக்கும் கதைகள் உள்ளன.
 
இக்கதைகள் பெரும்பாலும் நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றூகிறது. ஏனெனில் சில கதைகளில் தன்மை ஒருமை வழியாகக் கதை செல்கிறது.
 
‘ஊழிற் பெருவலி’ என்னும் சிறுகதையைப் படித்த பிறது மனம் ஒரு நிலையில் இல்லை. ஓரிரு கதைகள் மனதில் நிற்கவில்லை.( பெரிய நாடார் வீடு).
 
நாஞ்சில் நாடனின் முன்னுரை சிறப்பு.
 
ஒரே மூச்சில் படித்தால் மனம் கனப்பது நிச்சயம். எழுத்தாளர் ராம் தங்கத்துக்கு வாழ்த்துகள். திருக்கார்த்தியல்

‘சார்த்தா’ வாசிப்பு அனுபவம்

nool2cமாஹிஷ்மதி நாட்டின் வேத பிராம்மணன் நாகபட்டனின் அக, புறப் பயணங்களை விவரிக்கிறது ‘சார்த்தா’ என்னும் பைரப்பா எழுதிய இந்த நாவல் (மூலம் : கன்னடம்).

பல நாடுகளில் வாணிபம் செய்யும் வணிகர்கள் சில நூறு பேர் ஒன்றாகப் பயணம் செய்யும் ஊர்வலம் போன்ற அமைப்பு கொண்ட வணிகக்குழுவின் ரகசியங்களை அறிந்து வா என்று அமருகன் என்னும் அரசன் நாகபட்டனை வணிகர்களுடன் அனுப்புகிறான். அப்பயண அனுபவங்களே இந்த நாவல்.

இது வெறும் பயணக்குறிப்பல்ல. வணிகர்களுடனான பயணத்தில் துவங்கும் பட்டனின் பயணம் அவனை 8ம் நூற்றாண்டுப் பாரதகண்டத்தின் பல தேசங்களுக்கும் அழைத்துச் செல்கிறது. ஆனால், வெறும் புறவயமான அனுபவங்களாக இல்லாமல் அப்பயணங்களால் ஏற்படும் அகவெளிப் பார்வைகளும், அக்காலத்தின் தத்துவப் பரிவர்த்தனைகளும் கொஞ்சம் வரலாறு போன்ற பார்வைகளுமாக விரிகிறது நாவல்.

சனாதன தர்மத்தின் பிரிவுகளான அத்வைதம், சாக்தம், தாந்திரிகம் என்று உலா வரும் கதையில் பவுத்த தத்துவ மரபுகள், பவுத்த தாந்திரீகத்தின் சில கூறுகள் என்று பலவும் உலாவருகின்றன.

ஆதி சங்கர் மண்டல மிஸ்ரரின் விவாதங்களும் வந்து சேர்ந்து நாவலுக்கு ஒரு முழுமை கிடைக்கிறது.

தத்துவ விவாதங்களைக் கதைகளில் புகுத்துவது கடினம். முதலில் அதற்கு தத்துவப் புரிதல் இருக்க வேண்டும். தத்துவம், கதையின் ஓட்டத்தைத் தடை செய்யக் கூடாது; கதைக்கு வலு சேர்க்க வேண்டும். பைரப்பா இவை அத்தனையும் செய்திருக்கிறார்.

நெடிய, பல படிமங்கள் கொண்ட மிக முக்கியமான நாவல் ‘சார்த்தா’. விஜயபாரதம் பதிப்பகம்.

தமிழர் முகங்கள் – வாசிப்பு அனுபவம்

0mwvsqp7qktqta4o4
தமிழர் முகங்கள்

நமக்குத் தெரியாத, நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட முகங்கள் இவை. தமிழ் மொழியால் வாழாமல், தமிழ் மொழியைக் கொண்டு வயிறு வளர்க்காமல், தமிழை வளர்த்த முகங்கள் இவை. நாடும் மொழியும் இரு கண்கள் எனக் கொண்ட முகங்கள் இவை. எனவே நமது கண்களில் படாத முகங்கள் இவை.

அதிகம் வெளிப்படாத முகங்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றனர் திராவிட மாயை சுப்புவும், வ.வே.சு.வும். இந்த முயற்சி இல்லையென்றால் இந்த முகங்கள் நம்மில் பலருக்குத் தெரியாமலே போயிருக்கும். வயிற்றுக்குக் கஞ்சி இல்லாத வேளையிலும் தமிழ்த் தொண்டாற்றிய தூயவர்களின் வரலாற்றில் இருந்து சில மணிகளை இந்த ‘தமிழர் முகங்கள்’ காட்டுகிறது.

இவர்களது தொண்டிற்கு முன் வேறு யாருடைய வாய்ச் சவடால் மிக்க பேச்சுக்கள் எடுபடாது. இந்த முகங்கள் நான்கு திசைகளிலும் தெரிய வேண்டும். நாம் யார் என்பதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் நூல் ‘தமிழர் முகங்கள்’.

யார் அந்த முகம் தெரியாத தமிழர்கள்?

உ.வே.சா, திரு.வி.க., ம.பொ.சி., அவ்வை.தி.க.ஷண்முகம், பாபாநாசம் சிவன், பைந்தமிழறிஞ்ர் பி.ஸ்ரீ. — இச்சான்றோரின் முகங்களை ஏந்தி வரும் இந்தநூல் தமிழ் பேசும் நம்மிடம் இருந்தே ஆக வேண்டிய ஒன்று.

உ.வே.சா.வின் வாழ்க்கையைப் படிக்கும் போது கண்ணீர் வரவில்லையெனில் உங்கள் கண்களை மருத்துவரிடம் காட்டிட வேண்டியிருக்கிறது என்று பொருள். அத்வைத மதஸ்தரான உ.வே.சாவிற்கு சமண மதத்தில் இருந்த ஊற்றம் ‘கற்றோரிடம் காழ்ப்பில்லை’ என்னும் எண்ணத்தை வலுப்படுத்துகிறது. பாபநாசம் சிவன் வாழ்க்கை பற்றிய பல அரிய தகவல்களை இந்நூல் அளிக்கிறது.

தமிழ் வளர்த்த சான்றோரின் வாழ்க்கையைப் பற்றிப் படிக்கும் போது நமது வாழ்வில் நாம் அப்படி என்னதான் செய்துவிட்டோம் என்கிற ஒரு கேள்வியை இந்நூல் நமக்குள் ஏற்படுத்துகிறது. மறுமுறை இந்தியா செல்கையில் தீர்த்தயாத்திரை எல்லாம் தேவையில்லை, இவ்வறிஞ்ர்கள் வாழ்ந்த, இவர்களது காலடி பட்ட ஊர்களுக்குச் சென்று அந்த வீதிகளில் ஒருமுறை விழுந்து வணங்கி வர வேண்டும் என்று தோன்றுகிறது.

வாழ்க செந்தமிழ். வாழ்க நற்றமிழர். வழிய பாரத மணித்திருநாடு.

'A ROAD LESS TRAVELLED' – Book Review

சூடு தணிந்த தமிழனின் சுரணையில் இது உறைக்குமா என்ற கேள்வியே இல்லை; எருமைகளுக்கு மழை பெரும் திடுக்கிடலை நிகழ்த்தாது.

Road less travelled3000 பேர் கலந்துகொண்ட நடிகர்கள் தேர்தலில் தன் இரண்டு மாத நேரத்தைத் தொலைத்த சென்மங்களுக்கு, ஆயிரம் ஆண்டுகாலக் கல்வெட்டு எக்கேடு கெட்டால் என்ன என்கிற எண்ணம் தானே இருக்க முடியும் ? ஆனால் நூலாசிரியர் பிரதீப் சக்கரவர்த்தி மாறிப் பிறந்துவிட்டார். அவர் அமெரிக்கராயிருந்தால் இந்நேரம் ஒபாமா அவரை ‘கலைகளுக்கான அமைச்ச’ராக்கியிருப்பார். பிரதீப்பின் கெட்ட காலம் அவர் தமிழ் நாட்டில் பிறந்து விட்டது; தமிழகத்தில் பேணப்படாத கோவில்கள் மீது அக்கறை கொள்ள வைத்து விட்டது. அதனால் தான் அவர் நமது கலை அழிவைப் பற்றிய நூலை ஆங்கிலத்தில் எழுதி, அதைக் ‘கிண்டில்’ பதிப்பாக, மின்-நூலாக வெளியிட்டுள்ளார் என்று நினைக்கிறேன். இதன் தமிழ்ப் பதிப்பு இங்குள்ளது.

பிரதீப் செய்வது என்ன ? விடுமுறை நாட்களில், பெரிதாக அறியப்படாத, பழமை வாய்ந்த கோவில்களுக்குச் செல்கிறார்; அக்கோவில்கள் பற்றியும், அவற்றின் தற்போதைய நிலை, ஊரின் நிலை, ஊரும் கோவிலும் முந்தைய காலத்தில் எப்படி இருந்தன என்பது பற்றிய நாயன்மார்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள், கல்வெட்டுச் சான்றுகள், என்று கண்களில் நீர் வரவழைக்கும்படியாக ஒரு ‘ஒப்பு நோக்கல்’ செய்கிறார். கோவிலில் உள்ள சிலைகளின் நிலை, கல்வெட்டுக்களின் காலங்கள், அவற்றை நிறுவிய மன்னர்கள் பற்றிய செய்திகள், கோவில், குளம் முதலியவற்றின் பராமரிப்பிற்கான அக்கால நிவந்தனங்கள் – இவை அனைத்தையும் பெரு முயற்சி செய்து, வரிசைப்படுத்தி எழுதுகிறார்.

பண்டைத் தமிழகக் கோவில்கள் மீதுள்ள தணியாத காதல், நம் பண்பாட்டின் அடி நாதங்களான இறை உறைச் சின்னங்கள் மீது கொண்ட தணியாத மோகம், புனரமைப்பு என்னும் பெயரில் பழைய சுவரோவியங்கள் மீது செய்யப்படும் அறிவற்ற தாக்குதல் மீது கொண்ட கோபம் – அனைத்தையும் வெளிப்படுத்தும் எழுத்து அவருடையது.

பாசுரங்களின் நேரடி ஆங்கிலப் படுத்தல்களாகட்டும், செய்யுள் பொழிப்புரைகளாகட்டும் நமக்கு வேண்டிய அளவு கொடுத்து, அந்த இறை வாழ் சாலைகளின் அன்றைய நிலையைக் குறிப்பிடுகிறார். பாசுரங்களிலும், கல்வெட்டுக்களிலும் அவரது ஈடுபாடு பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது. தனக்குத் தெரியாததைத் தெரிந்துகொள்வதற்காகத் தொல்லியல் துறை, கல்வெட்டாளர்கள் என்று பலரது துணை கொண்டு காடு, மேடு, மலைகள் பல கடந்து சென்று, பார்த்து, வியந்து, அழுது, பொருமி எழுதும் அவரது உழைப்பு – அதிரவைக்கும் கடமையுணர்ச்சியை வெளிக்காட்டுகிறது.

கோவில்களின் இன்றைய ஏழ்மை நிலை, ஊழியர்களின் ( அர்ச்சகர்களின் ) இன்றைய துயரமான நிலை என்று பலதையும் சுட்டிக்கட்ட அவர் தவறவில்லை.

சில கோவில்களின் இன்றைய நிலையை அவர் வர்ணிக்கும் போது ‘நாம் உயிர் வாழ்வதால் என்ன பயன்?’ என்று தோன்றுகிறது.

சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபமும், குஷ்புவிற்குக் கோவிலும் கட்ட முனையும் ஒரு சமூகம் என்கிற இழிவிலிருந்தும், நமீதாவின் நாபிக்கமல தரிசனத்திற்கு ஏங்கும் ஒரு கூட்டம் என்னும் கேட்டிலிருந்து நாம் பிழைக்க வேண்டுமானால், இந்நூலைப் பெருமளவில் வாங்கி, நமது இல்ல விழாக்களில் பரிசாக அளிப்போம்.

தேரழுந்தூர் ஆமருவியப்பன் அவருக்கு நீண்ட ஆயுளையும் தளராத மனத்தையும் அளிப்பானாக.

நூல் இங்கு கிடைக்கிறது.

ஆறஞ்சு – A book review

There are four kinds of Indians in Singapore.

1. Singaporean Indians
2. India Indians who are PRs.
3. India Indians who are not yet PRs but on the way to PR-dom.
4. India Indians who are from the back breaking construction industry.

First time author Azhagunila has covered most of these types in her book ‘Aaranju’.

Each group has its own preconceived notion about life and each looks at the other from its own perspective. These two aspects are well covered in her stories.

While Singaporean Indian has his own worldly view and issues to grapple with, the category 2 Indian is obsessed with schooling for his child and the all encompassing PSLE exam. Category 3 Indian still has doubts as to where he belongs – India or Singapore – while category 4, devoid of his family in Singapore, often longs for his family in India and gets on with life, enduring the physical hardship in Singapore while hoping for a better future in India.

The star story of the collection is, of course, ‘Aaranju’ that details the point of view of a PSLE student. Every stake holder in the education arena has had an opinion on the PSLE and the effects of streaming of children. But no one has spoken of the PSLE nightmare from a student’s perspective. It is he who has to undergo the trauma without having the ability to understand the exam itself. Unknown to him, the child undergoes the strain while not being able to comprehend what is happening and what the implications of the exam are. Azhagunila is brilliant here as she shows the PSLE from a child victim’s perspective. This one story is a great candidate to be translated into Mandrin and English so that it reaches the other affected parties in Singapore. Kudos to the author for the intelligent choice of name and the narration.

As the story is from a child’s perspective, the author is not judgmental or condescending. She describes the situation as a child sees it and leaves it at that, thus creatively including the reader as a co-author to script the un-written story of what to do with the PSLE. The satire that runs along the story captivates the reader’s attention. (Suggested Further Reading : The Good, Bad and the PSLE by Monica Lim )

The story of a hot tempered male protagonist who turns a new leaf is extremely well written with a fantastically unexpected twist in the end. The author glitters in this story.

There is an interesting story on inter-racial marriage between an Indian woman and a Chinese gentleman and how the lady finds acceptance in the family once her grandchild is born. This is a story that has great depth than meets the eye. The author’s ingenuity shows itself in her deft handling of the story line.

Social media adoption by a senior citizen and its power to alienate loved ones is a more contemporary topic. The author touches upon this as well,in her unique way, in yet another heart warming story.

The story on the special child on a train, narrated from an Indian construction worker’s perspective, has a novel approach that makes the story interesting. Juxtaposing the worker’s thoughts about an earlier experience with a special child with the then current situation in the train, is a brilliant idea.

Vivid imagery, quick dives into the stories, surprising turns and a wholly Singapore content covering the Indian community in Singapore are some of the salient points in Azhagunila’s ‘Aaranju’.

My recommendation for the book: Read it. You have an interesting writer on hand.

கிளையிலிருந்து வேர் வரை – அந்த நாளும் வந்திடாதோ !

ஈரோடு கதிரின் ‘கிளையிலிருந்து வேர் வரை’ கட்டுரைத் தொகுப்பு கிராமத்து வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து அதனை நகர (நரக ?) நாகரீகங்களில் தேடும் ஒரு கூர் பார்வையுள்ள தமிழனின் அவதானிப்பு. கொங்க தேசத்து மணம் கமழ, ஊரின் வாசனையில் நான் ஆழ்ந்து போனேன்.

பல நினைவுகள். சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவனாய் கொங்க தேச மக்களின் வாழ்வை ஓரளவு நேரில் பார்த்த காரணத்தால் ஊரின் அமைப்பு, வயலின் அருகாமை, கிணற்று நீரின் சுவை, மக்களின் பேச்சுத் தமிழ் எனக்குப் பரிச்சயமானதே. மீண்டும் சேலம், ஓமலூர், கோவைக்கு என்னை அழைத்துச் சென்றார் கதிர்.

இந்த நூல் வாழ்வை ரசித்து வாழ்ந்த ஒருவன் திடீரென்று அந்த வாழ்வு காணாமல் போய் நகரத்தின் மனிதாபிமானமற்ற, செயற்கையான சூழலில் இருக்க நேர்ந்தால் என்ன மாதிரியான எண்ணங்களில் ஆழ்வான் என்பதை நீண்ட விஸ்தீரணங்களுடன் தெரிவிக்கிறது.

45 கட்டுரைகளில் சட்டென்று மனதில் புகுந்த சிலவற்றைப் பற்றிய என் கருத்துக்கள் இங்கே :

ஆயா – பாட்டி பற்றிய கனமான பதிவு. எல்லோருக்கும் இப்படி ஒரு பாட்டி இருந்திருப்பார் தானே ? பல பழைய நினைவுகளைத் தூண்டிவிட்ட கட்டுரை.

வாழ்தல் அறம் – உயிர் வாழ்தலின் மகத்துவத்தை விளக்கும் கட்டுரை. பள்ளியிறுதி மாணவர்களுக்குத் துணைப்பாடமாக வைக்கலாம். தேர்வு முடிவு நேரங்களில் அவர்களைக் காக்கும்.

இந்தப் ‘பாவம்’ செய்யாதவர்கள்… – நிதர்ஸனச் சுட்டி. சம்மட்டி அடி.

அதிகார இறகுகள் உதிரும் தருணம் – அரசு வேலையில் இருக்கும் பணம் பிடுங்கிகளுக்கு ஒரு காப்பி கொடுத்து வைக்கலாம். பயன்படும்.

அது லீ குவான் யூகின் தேசம் – தெரிந்தது தான் என்றாலும் படிக்க சுவை.

தங்கக் கூண்டு – ‘அட ஆமாம்ல..!’ என்று சிந்திக்க வைத்த கட்டுரை.

ஓரம்போ ஓரம்போ – எங்களூரில் பாட்டில் மூடி கொண்டு வண்டி செய்து ஓட்டிய நினைவலைகளை மீண்டும் ஏற்படுத்திய நுங்கு விளையாட்டு நினைவுகள்.

கிளையிலிருந்து வேர் வரை – பொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய்ப் போன விவசாயம் பற்றிய ஒரு உண்மை விவசாயியின் ஆதங்கம்.

அடைகாத்த கூடு – மகிழ்ச்சியின் ஆரவாரம். கொய்யாமரம் அடை காத்தது என்று கதிர் சொல்வது என்ன ஒரு நயம் ? பொறாமைப்பட வைக்கும் வார்த்தை ஜாலம்.

நீர்த்துப்போகும் சுயம் – ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’ன் சிறிய ஆனால் கடுமையான சித்தரிப்பு. கோபம் தெரிகிறது.

தூக்கி எறியப்பட்ட திறவுகோல் – நகர கிராம வாழ்வுகளின் ஒப்பீடு. அக்ஷரலக்ஷம் பெறும்.

காக்கைச் சகுனம் – காக்கை கொண்டே உறவின் வருகை அறியும்  ( விஞ்ஞானத்தின் துணை அற்ற ) உலகின் மீள் பார்வை.

இந்த நூலை மூடும் போது ‘அந்த நாளும் வந்திடாதோ’ என்று எம்.எஸ். பாடுவது காதில் கேட்கிறது.

இந்த நூல் இங்கு  கிடைக்கிறது.

'அப்பாவின் ரேடியோ' – வாசிப்பு அனுபவம்

‘அப்பாவின் ரேடியோ’ என்னும் ஒரு நூல் எங்கோ கிடைத்தது.

முன், பின் அட்டைகள் இல்லை. எழுத்து நடை சுவரஸ்யமாக இருந்த்தால் படிக்கத் துவங்கினேன். சுஜாதாவின் ஏதோ தெரியாத நூல் என்று நினைத்திருந்த எனக்கு அதிர்ச்சி அளித்தது நூலின் நடுவில் இருந்த பின் அட்டை. அதில் எழுத்தாளர் சுஜாதா இந்த நூலின் ஆசிரியரைப் பற்றிச் சொல்கிறார். ஆசிரியர் சுஜாதா தேசிகன்.

நிஜ வாழ்வில் தேசிகனின் மனைவி பெயரும் சுஜாதாவாம். ஆனால் தேசிகன் எழுத்தாளர் சுஜாதாவின் தீவிர ரசிகர். சுஜாதாவே தான் எழுதிய நூல்கள் பற்றிய சந்தேகங்களை இவரிடம் கேட்பாராம்.

ஆக புஸ்தகம் சுஜாதாவினுடையது அல்ல என்பது புலனாகியது. ஆனால் நடை அப்படியே சுஜாதா. கதை முடிவில் உள்ள திருப்பம், அதிகம் செலவாகாமல் சொற்களை அளவாகக் கையாளும் பாங்கு, புதிய பார்வை – அசத்துகிறார் ஆசிரியர். வாழ்க தேசிகன்.

‘அப்பாவின் ரேடியோ’ ஒரு சிறுகதைத் தொகுப்பு. பல கதைகள் என்னை பாதித்தன. அவற்றுள் ஒன்று ‘ராமானுஜலு’. Short and Sweet என்று நச் என்று இருக்கிறது கதை. தற்கால வைஷ்ணவர்கள் சிந்திக்க வேண்டும்.

‘லக்ஷ்மி கல்யாண வைபோகமே ராதா கல்யாண வைபோகமே’ ஐயங்கார்களின் கல்யாண ஏற்பாடுகள் பற்றிய நெத்தியடி. அதுவும் ‘ நரசிம்மப்பிரியாவில் தென்கலைன்னா எளக்காரமா பாப்பா’ என்பது உண்மை போல் தான் தெரிகிறது. கடைசியில் பாட்டி ‘இதுவரைக்கும் ஐயங்கார்ப் பையனா பார்த்துப் பண்ணிண்டானே ..’- செம நக்கல்.சுஜாதா படித்திருந்தால் சிரித்திருப்பார்.

‘பாட்டனாரெல்லாம் மூணு வேளை அக்னி வளர்த்தா. இப்ப நாங்க இரண்டு வேளை விளக்கேத்தறோம்’ – இது ஐயங்கார்களின் நிதர்ஸன உண்மை.

‘..திருநட்சத்திரத்துக்குப் போயிருந்தோம். மூணு வேளையும் நல்ல சாப்பாடு. வயசான காலத்துல ஏதோ கைங்கைர்யம்’ – நல்ல ஹாஸ்யம்.

‘பெருங்காயம்’ என்னும் தேரழுந்தூர் பற்றிய கதை. கதையல்ல. அதுவே உண்மை. 40 ஆண்டுகளுக்கு முன் முஸ்லீம்களிடம் வீடுகளை விற்று வெளி ஊர்களுக்கு வேலைக்குச் சென்று ஓய்வு பெற்று தேரழுந்தூர் திரும்ப விரும்பும் பெரியவர்கள் பலரை எனக்குத் தெரியும். எழுத்தாளர் தேசிகனுக்கு எனது விசேஷ வந்தனங்கள். கதையின் துவக்கத்தில் உள்ள திருமங்கையாழ்வார் பாசுரம் கதைக்கு மிகப் பொருத்தம்.

‘பிச்சை’ கதை கண்களில் நீர் வரவழைத்தது. பல குடும்பங்களில் இப்படி நிகழ்ந்துள்ளது உண்மை.

நூலுக்குக் காரணமான ‘அப்பாவின் ரேடியோ’ கதை பல பழைய நினைவுகளை வரவழைத்தது. எங்கள் வீட்டிலும் அப்படி ஒரு ரேடியோ வாங்கப்பட்டது. ஆனால் அது பிலிப்ஸ் ரேடியோ. ரொம்ப நாட்கள் வரை வேலையும் செய்து வந்தது.

மொத்தம் 23 கதைகள். என்னைக் கவர்ந்தவை இவை. இக்கதைகளைப் பற்றி, இவற்றை எழுதக் காரணமான நிகழ்ச்சிகள் பற்றி திரு.தேசிகன் எழுதினால் இன்னமும் சுவைக்கும்.

சுஜாதா இன்னமும் நம்முடனேயே இருக்கிறார்.

சிங்கப்பூரில் நூலகத்தில் கிடைக்கிறது. சென்னையில் இங்கே வாங்கலாம்.

பழைய கணக்கு – நூல் விமர்சனம் – ரெங்கபிரசாத்

உலகில் என்றும் பழைய கணக்காகப் பார்க்கப்படும் மானுடம் என்ற பண்பிற்குப் பின்னால் பயணிக்கிற புத்தகம்தான் “பழைய கணக்கு“.

மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு, நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது படைப்பாளியின்  கடமை. அதை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார். படிபவர்களை சம்பவங்களோடு ஒன்றிவிடச் செய்துவிடுகிறார்.

இவை வெறும் கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு வேயப்பட்ட கதையோ அல்லது நினைவுகூறலோ அல்ல. தான் கண்டு , கேட்டு , உணர்ந்த ஆளுமைகளின் வாழ்வியல் அனுபவங்களை, சாதனைகளை,  சிந்தனைகளை எழுத்துமுலமாக ஆவணங்களாகத் தந்துள்ளார் ஆசிரியர். நிஜத்திலும் , நினைவிலும் வாழும் எதார்த்த மனிதர்கள் ஒவ்வொருவரும் நம் கண்முன்னே வந்து போகிறார்கள்; ஆவணப்படம் காண்பது போல அவர்களின் வாழ்வும் செயல்பாடுகளும் காட்சிகளாக விரிகின்றன. வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் நூலாசிரியர் தன் கருத்துகளை ஆங்காங்கே விதைக்கவும் தவறவில்லை.

அறம் , சமுதாயக் கோபம் , வாழ்க்கையின்  ஓட்டத்தில் நாம் அவதானிக்க மறந்த , மறுத்த விடயங்கள் மூலம்   நம்மை நகர்த்திச் செல்லும் இந்நூல் படிக்கக் களைப்பு தராமல் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் நடைதான். சமூக சிந்தனையோடு தனக்கே உரிய எள்ளல் பாணியில் அவர் காட்டும் இடங்கள் நகைச்சுவையே என்று தோன்றினாலும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.

உபகாரம் என்ற கதையில் நூலாசிரியரின் சமுகப் பார்வை மூலம் சமூக முரண்களை அழகாகப் படம்பிடித்துக் கட்டியுள்ளர். //வாப்பா இருந்திருந்தால் இதே வயது தான் இருக்கும் அவருக்கும் // என்று தன் தந்தையை ஒப்பிட்டு பார்க்கும் போது , அங்கே மேலோங்கி நிற்ப்பது மனித நேயம் மட்டுமே . இராமனைப் பார்க்கக் கானகத்திற்கு பரதன் வந்தான், முனிவர்கள் வந்தார்கள் ஆனால் யாரும் இராமன் காட்டில் உணவிற்கு என்ன செய்வான் என்று நினைத்து அவனுக்கு உணவு கொண்டு வரவில்லை. குகன் ஒருவன் தான், இராமனுக்குத் தேவைப்படுமே என்று உணவு கொண்டு வந்தான். ஆகையால்தான் கம்பர் – ” உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்” என்று குறிப்பிடுகிறார். உபகாரம் கதையில் இதைப் போன்ற நிகழ்வைப் பார்க்கலாம் .

பெரிய தாக்கத்தை உண்டுபண்ணிய கதைகள் ‘மாயவரம்’ , ‘சார் விட்டுக்குப் போகணும்’. இந்த கதையின் பாதிப்பு , அடுத்த முறை என் வயது ஒத்த மாயவரம் ஊர் மனிதரைப் பார்த்தால் என்னுடைய அடுத்தகேள்வி, ‘உங்களுக்கு சாரைத் தெரியுமா?’ என்பதே. குருபக்திக்கு ஒருநல்ல உதாரணம் . நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக இதுபோன்ற ஆசிரியரைக் கடந்து சென்றுதான் இருப்போம் , மனிதனின் கையாலாகாத தன்மை கன்னத்தில் அறைவது போல் இருந்தது என்று குறிப்பிடும்போது,  இயற்கைக்கு முன் மனிதனின்  ஆளுமை எவ்வளவு குறைவு என்பதை  உறுதிப்படுத்துகிறது. இதயம் கனத்தது.

ஒரு தேரின் கதை – காரணப்பெயரான தேர்-அழுந்தூர் (செலுத்திய தேர் செல்லாமல் அழுந்திய காரணத்தினால் தேர்-அழுந்தூர் ) அதன் காரணத்தை இழந்து, பின்பு மீண்ட கதை. ஒற்றுமை மற்றும் விடமுயற்ச்சியின் பலன் பற்றி விளக்குகிறது. புறத்தில்  சில நேரங்கள்மட்டும் எரிந்த தீ , அகத்தில் அணைவதற்க்கு  ஐம்பது ஆண்டுகாலம் தேவைப்பட்டு இருக்கிறது.

‘கொஞ்சம் வரலாறு , கொஞ்சம் சுவாசம்’ கதை – நூலாசிரியரின் தார்மீக கோபத்தின் வெளிப்பாடாகத் தெரிகிறது . வரலாறு படைத்த தமிழினம்  அதை ஆவணப் படுத்தியது குறைவு அல்லது ஆவணப் படுத்தி இழந்தது  அதிகம். //இந்த தளத்தின் மேல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சுந்தர சோழனோ, பராந்தகனோ நின்றிருக்கலாம்//. அந்த தார்மீக கோபத்தின் நியாயங்களைப் பங்குபோட்டு கொஞ்சம் மன உறுத்தலோடு தான் இந்தக் கதையைக் கடக்க முடிந்தது. அமரர் சுஜாதா சொன்ன செய்திதான் நினைவில் நின்றது . கோயில் தூண்கள் சிலவற்றைத் தொட்டுக்கொண்டு, நம் முன்னோர்கள் கால்வைத்து ஏறியபடிகள் மீது நடந்துகொண்டு நாங்கள் இருவரும் இந்தக் கருத்தைப் பரிமாறிக்கொண்டோம். அப்போது எங்கள் முன்னோர்கள் தங்களின் குழந்தைகளைப் பார்ப்பது மாதிரி உணர்ந்தோம். அது ஒரு உன்னத அனுபவம்.

ஒளிரும் மகத்தான ஆளுமைகளைத் தனது எழுத்தில் ஆவணப்படுத்திய ஆமருவி தேவநாதன் பாராட்டிற்குரியவர். அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

மனித நேயம் தேவைப்படும் வரை இதுபோன்ற கணக்குகளும் தேவைப்பட்டுக்கொண்டுதான்  இருக்கும் .

வாழ்த்துக்கள் , தொடரட்டும் உங்கள் கணக்குப் பயணம்.

'மூன்றாவது கை' – ஒரு சௌம்ய அனுபவம்

moondaavathu kai

ஒரு படைப்பாளியின் எழுத்து அவனைப் பறை சாற்ற வேண்டுமே ஒழிய அந்த எழுத்தாளன் பேசக்கூடாது என்பார் தமிழ் எழுத்தாளர் இமயம்.  அதுபோலவே தன் எழுத்துக்கள் மூலம் பேசும் எழுத்தாளர் நண்பர் ஷாநவாஸ் நேரில் பேசும்போது அமைதியாகவும் சௌம்யமாகவும் பேசக்கூடியவர். அலட்டிக்கொள்ளாத பேச்சு அவருடையது. அதுபோலவே உள்ளது அவரது எழுத்தும். சமீபத்தில் அவரது ‘மூன்றாவது கை’ என்ற நூலை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தது. நூலை வாசிப்பது அவரிடம் நேரில் பேசுவது போல் இருந்தது. அதே சௌம்யம்.

12  கதைகள் கொண்ட இந்தக் கதைத் தொகுதியில்  பல கதைகள் மனதைத் தொட்டாலும், என்னை மிகவும் கவர்ந்த கதை ஒன்று உண்டென்றால் அது ‘வேர்ச்சொல்’ என்னும் தலைப்பில் உள்ள ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியரின் நாட்குறிப்பு பற்றிய கதையே. ஒரு ஆசிரியர் ஓய்வு பெறுகிறார். அவரது அந்த நாளின் குறிப்பாக உள்ளது கதை. கதையின் முடிவில் உள்ள திருப்பம் ஒரு சுகமான வியப்பு.

ஆசிரியப்பணி பல பிள்ளைகளின் வாழ்க்கை முன்னேற்றத்தை நேரில் காணவும், அந்த முன்னேற்றத்திற்கு வழி செய்யவும், அந்த முயற்சியின் பயனாய்  அம்மாணவர்கள் வெற்றி பெறுகிறார்களா என்று பின்னாலிருந்து பார்க்கவும் வசதியுள்ள பணி. தொண்டு என்றும் சொல்லலாம். ஆசிரியரது வழி காட்டுதலில் மாணவனின் எதிர்காலம் எப்படி அமைகிறது என்பதை  அவர் வாழும் காலத்திலேயே காணும் வாய்ப்பு உள்ள ஒரு பணி ஆசிரியப்பணி. ஆசிரியர் சொல்லும் சொல் மாணவர்களின் எண்ண ஓட்டங்களையும் செயல்பாடுகளையும் ஒரு நொடியில் மாற்றி அமைத்துவிடும் என்று தெளிவாக்குகிறது இந்தக்கதை.

சில காலம் முன்பு என் பெரியப்பா திரு.இராமபத்திராச்சாரியார் பள்ளியிலிருந்து ஓய்வு பெற்று இன்னொரு ஊரில் இராமாயண உபன்யாசம் செய்துகொண்டிருந்தார். நிகழ்ச்சி முடிவில் ஒரு வயோதிகர் வந்து பெரியப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதார். “என் பெண்ணின் உயிர் உங்களால் காப்பாற்றப்பட்டது” என்றார். மேலும் பேசியதில் புரிந்தது – பல ஆண்டுகள் முன்னர் ஒரு நாள் தமிழ் வகுப்பில் பெரியப்பா இராமாயணத்தில் சீதை அசோகவனத்தில் பட்ட துன்பங்களைப் பற்றி நீண்ட சொற்பொழிவு ஆற்றி இருந்தார். அம்மாணவர்களிடையே இந்தப் பெரியவரின் பெண்ணும் இருந்துள்ளாள். பின் நாளில் அவளது மண வாழ்க்கையில் பல முறை பல சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருந்த அவள் பல முறை தற்கொலை முயற்சிக்கு  உந்தப்பட்டுள்ளாள். ஒவ்வொரு முறையும் பெரியப்பாவின் சீதை பட்ட துன்பம் பற்றிய பேச்சு நினைவுக்கு வந்து அவளைத் தடுத்துள்ளது.

ஒரு ஆசிரியரின் பேச்சுக்கு இருந்த சக்தியை அப்போது புரிந்துகொண்டேன்.

அது போலவே ஷானவாஸின் ‘வேர்ச்சொல்’ கதையில் அந்த ஆசிரியரின் ஒரு சொல் ஏற்படுத்திய விளைவை அறிகிறோம். என்னை அறியாமல் நினைவுகளில் பல ஆண்டுகள் முன்னே செல்ல வைத்த கதை இது.

‘அனுமானம்’ கதை வயது முதிர்ந்தோரின் நிகழ்கால நிதர்சன எண்ண  ஓட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

‘கறிவேப்பிலை’ என்பது உணவில் சுவைக்காகச் சேர்த்துக்கொள்ளப்படும் ஒரு பொருள். அதை வைத்து மனித உறவுகள் பற்றி ஒரு கதை அதுவும் ஆழமான கதை சொல்ல ஷானவாஸால் மட்டுமே முடியும்.

‘மூன்றாவது கை’ என்றே ஒரு கதை உள்ளது. நூலின் அட்டைப்படமும் அதையே சித்தரிக்கிறது. ஒரு பெண்ணின் கை மூன்றாவதாக அமைந்துள்ளது. அக்கதையில் உள்ள நுட்பம், அதிர்ந்து பேசாத வார்த்தைகள்,சிங்கப்பூரைச் சொல்லும் பல இனக் கலப்பு — அருமை.

‘தோடம் பழம்’ – தமிழ்ப் பண்பாட்டை நினைவூட்டும் விதமாக உள்ளது. ‘காமக் கிழத்தி’ என்று நமது தொல் நூல்கள் சொல்லும் ‘சின்ன வீட்டை’  அரநெல்லி மரத்துடன் ஒப்பிட்டுக் கதை பின்னி இருப்பது தனிச் சுவை.

‘நிஜங்கள்’ ,  ‘அனுமானம்’, ‘காகித சிற்பம்’  மூன்று கதைகளுக்கும் ஊடே ஒரு நூல் தொடர்பு உள்ளது. அது ‘அனுமானம்’ என்னும் மனிதப் பண்பு. மூன்று கதைகளிலுமே எவ்வாறு அனுமானம் தவறாக அமைகிறது என்று அறிகிறோம்.

கதையின் கரு ஒன்று இருந்தாலும் கதை சொல்லும் நேர்த்தி என்று ஒன்று உள்ளது. அது நண்பர் ஷானவாஸுக்கு இயல்பாகவே வருகிறது. கதை மாந்தர்கள் அந்நியராகத் தெரியவில்லை. கதையும் அன்னியம் இல்லை. உதாரணமாக ‘நீ சிரித்தால்’ கதையில் ‘ஸ்கைப்’ (Skype )பயன்பாட்டின் போது இந்தியாவில் ஏற்படும் மின் வெட்டும், இணையத் தொடர்பு துண்டிப்பும் நாம் அனைவரும் சந்திக்கும் தற்கால நிகழ்வுகள். அதைக் கதையின் ஊடே சொல்லி இருக்கும் பாங்கு வெகு அருமை.

கதை இருக்கட்டும். ஆசிரியரின் சில கூர் கவனிப்புகள் என்னை ஆச்சரியப்படுத்தின.

‘தேபான் கார்டனிலிருந்து டாக்சி கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று’ என்று ‘அனுமானம்’ கதையில் கூறுகிறார். இன்றும் அதுவே உண்மை. அதே கதையில் இரவில் பாத்திரங்கள் இடை விடாது கழுவப்படும் ஓசை கேட்பது பதிவு செய்யப்படுகிறது. ஆக அருமை இது.

‘அழைப்பு’  சிறுகதையில் அவசரமாக ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய டாக்சி ஓட்டுனர் அத்துணை அமளியிலும் மேலே விமானம் மேலெழும்பிச் செல்வதைக் கவனிக்கத் தவறவில்லை. அதன் மூலமாக ஒரு சித்தாந்தத்தையும் கூறுகிறார். “எதுவுமே மேலே செல்லச்செல்ல சிறியதாகி எளிமையாகக் கையாளக் கூடியதாகி விடுகிறது” என்று கூறும் இடத்தில் ‘Helicopter View‘  என்னும் மேலாண்மைத் தத்துவம் பற்றிக்கூறுவது போல் எனக்குத் தோன்றுகிறது.

‘மூன்றாவது கை’ –  எழுத்தாளரைப் போலவே அமைதியாகவும், அழகாகவும் ஆனால் ஆழமாகவும் பேசுகிறது.

இன்று வெளியிடப்படும் இந்நூல் வெற்றியடைய இறையை இறைஞ்சுகிறேன்.

மார்க்சீய நோக்கில் வைணவம் – அறிமுகம்

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு என்று கேட்பது உண்டு. உண்மையில் தொடர்பு உண்டு. இஸ்லாமியர்கள் பிறைச் சந்திரனை வைத்தே ரம்ஜான் நோன்பு இருக்கிறார்கள். ஆக தொடர்பு இருக்கிறது.

அது போல் கார்ல் மார்க்சிற்கும் வைணவத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

சமீபத்தில் நான் வேறு ஏதோ தேடப்போக, “வைணவம்- மார்க்சீயப் பார்வை” என்ற நூல் கிடைத்தது. வேறு எங்கே? நமது சிங்கை தேசீய நூலகத்தில் தான். தோத்தாத்திரி என்னும் கம்யூனிச சார்புள்ள பேராசிரியர் ஒருவரது ஆய்வு நூல் அது.

சங்க காலம் தொடங்கி சமீப காலம் வரை வைணவம் என்னும் வாழ்க்கை வழிமுறை அல்லது மதம் தமிழ் நாட்டில் என்னென்ன செய்தது? எப்படி வளர்ந்தது ? அதன் வளர்ச்சிக்கும் தமிழகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு என்ன? நில உடைமைக் கொள்கை ( feudalism ) வளந்ததற்கும், விவசாயம் பெருகியதற்கும் வைணவத்தின் வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு என்ன ?  என்கிற நோக்கில் ஆராய்கிறது இந்நூல்.

பல மார்க்சீய எழுத்தாளர்களை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். கூடவே நாதமுனிகள், இராமானுசர், பிள்ளை லோகாச்சாரியார், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன், பல ஆழ்வார்கள், வைஷ்ணவ குருபரம்பரை நூல்கள், பல மணிப்பிரவாள  கிரந்தங்கள் என்று இந்த நூலாசிரியர் பரவலாகப் படித்து எழுதியிருக்கிறார்.

ரொமீலா தாப்பர், சட்டோபாத்யாயா, பேரா.நா.வானமாமலை  போன்ற கட்டாய கம்யூனிஸ ஆஸ்தான வித்வான்களின் மேற்கோள்களும் உள்ளன.

இடதுசாரிகளுக்கே உண்டான அணுகுமுறைகள் இருந்தாலும், வைஷ்ணவத்தில் இவ்வளவு ஆழ்ந்து படித்து எழுதியுள்ளது பேராசிரியரின் ஆராய்ச்சியைக் காட்டுகிறது.

சில அனுமானங்கள் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அந்த இடங்களில் சிறு அவசரம் தெரிந்தது. அது இடதுசாரிகளுக்கே உள்ள ஒரு போக்கு. அதனால் பாதகமில்லை.

பல நாட்கள் கழித்து ஒரு அறிவார்ந்த தற்கால ஆராய்ச்சியைப் படித்த திருப்தி ஏற்பட்டது.  அதுவும் தமிழில் இது போன்ற நூல்கள் வருவது குறிஞ்சிப்பூ மலர்வது போன்றது.

உங்களை விடுவதாக இல்லை. விரைவில் இது குறித்து சில பதிவுகள் எழுதவுள்ளேன்.

%d bloggers like this: