உலக நாயகன், பகுத்தறிவுப் பகலவன், காதல் இளவரசன் – இப்படிப் பல முகங்களைக் கொண்ட தமிழ்த் தாயின் தவப்புதல்வன் கமலஹாசன் ( மன்னிக்கவும் கமல் சார் என்று தமிழில் அறியப்படுபவர் ), நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது மேதாவிலாசத்தையும், “முற்போக்கு”க் கருத்துக்களையும் ( இந்து மத எதிர்ப்பு என்று புரிந்துகொள்ளவும் ) தெரிவித்து வருபவர் என்பது நாம் அறிந்ததே.
நாம் அறியாத கமல் ஒருவர் உள்ளார். அவர் தான் தானே திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம், திரை இசை, பாடல் என்று அனைத்திலும் புகுந்து விளையாடுவதாக நம்மை நம்ப வைத்துள்ள கமல். அல்லது அவ்வாறு மற்றவர் அனைவரும் சொல்லுமாறு செய்யக்கூடிய திறமை உடைய மகான் என்று கூறலாமா? மகான் வேண்டாம். அது இந்து மதத் தொடர்புடைய தொடர். அறிஞர் என்று கூறலாம். தமிழுக்குத் தமிழும் ஆயிற்று, பகுத்தறிவுக்குப் பகுத்தறிவும் ஆயிற்று.
ஆதோவ் கீர்த்தனாரம்பத்திலே … இப்படிப்பட்ட கமல், பல மிருகங்களை ( மன்னிக்கவும் திறமைகளை ) தன்னுள் வைத்துள்ளவராக நாம் நம்பும் கமல், தமிழ் சினிமாவையே ஒரு உயரத்துக்குக் கொண்டு போகத்துடிக்கும் ஒருவர், உலக வரலாற்றிலேயே எடுக்கமுடியாத கதைகளையும் சாத்தியமிலாத உத்திகளையும் புகுத்தித் தமிழ் நாட்டு சினிமாவை உலகம் என்ன சூரியக் குடும்பத்தைவிட அதிக உயரத்தில் கொண்டு செல்லத் துடிக்கும் ஒரு கலைப் பொக்கிஷம், தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட கதைகளையும் வழிமுறைகளையும் கையாண்ட அவர் எடுத்த படங்கள் அனைத்தும் காப்பி என்று அறிந்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? வேண்டாம் என்னை அடிக்க வராதீர்கள்.
நான் என்ன செய்வேன். பி.ஆர்.மகாதேவன் என்பவர் எழுதிய “கமலின் கலைப்படங்கள்” என்ற நூலைப் படித்தேன். அதன் விளைவு தான் இது.
‘அன்பே சிவம்’ படம் பார்த்தீர்கள் தானே? வியந்தீர்கள் தானே? இப்படி கூட ஒரு கதை செய்ய முடியுமா என்று சொக்கிபோனீர்கள் தானே ! வேண்டும் வேண்டும் உங்களுக்கு வேண்டும். அது “ Planes, Trains and Automobiles” என்ற படத்தின் காப்பியம். எனக்கு என்ன தெரியும் நான் என்ன உலக நாயகனா என்ன பல உலகப் படங்களைப் பார்ப்பதற்கு?
“விருமாண்டி” பார்த்து அழுதீர்கள் தானே ? இருவழிகளில் ஒரே கதையைச் சொல்வது புதிய பாணி என்று தானே நினைத்தீர்கள்? கமலைக் கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது தானே ? வேண்டுமையா உங்களுக்கு. “Rushmon” என்னும் படத்தின் காப்பியாம் அது.
அது போகட்டும் தேவர் சாதிக்கும் பறையர் எனப்படும் தலித் சாதிக்கும் தான் தென் மாவட்டங்களில் தகராறு. ஆனால் தேவருக்கும் நாயக்கருக்கும் தகராறு மாதிரி கொண்டு சென்று பல பிரச்சினைகளில் இருந்து பகுத்தறிவுடன் தப்பியுள்ளார். நாயக்கர் சாதி தென் மாவட்டங்களில் மிகவும் சிறுபான்மை இனம். அவர்கள் தேவருடன் மோத மாட்டார்கள். இது பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்.
காப்பி அடிப்பது இருக்கட்டும். அதில் என்ன கொடுமை என்றால் இந்தப் படங்களில் இருக்கும் ஓட்டைகள் பல. இவற்றை மிகத் தெளிவான முறையில் காட்சிக்குக்காட்சி புட்டுப் புட்டு வைத்துள்ளார் மகாதேவன். எந்த இடங்களில் எல்லாம் முனைந்து இந்து மத தூஷனை நடந்துள்ளது என்றும், “முற்போக்கு” சொல்ல வந்து வழுக்கி விழுந்த இடங்கள் என்ன, அதி புத்திசாலி என்று நிரூபிக்கத் துவங்கி அடி சறுக்கி விழுந்த நிகழ்வுகள் எங்கே ? என்று பக்கம் பக்கமாய் எழுதியுள்ளார் ஆசிரியர்.
‘பஞ்சதந்திரம்’, ‘ஔவை ஷண்முகி ‘ முதலானவை ஆங்கிலப் படங்களின் காப்பி என்று நாம் அறிந்துள்ளோம். இவை பற்றி You Tube மூலமே அறிந்துகொள்ளலாம் தான். ஆனால் இவைகள் வடிகட்டின மசாலா என்பதால்தானோ என்னவோ ஆசிரியர் இவற்றைப்பற்றிஎல்லாம் எழுதவில்லை.
ஆனால் “குணா”, “குருதிப்புனல்” முதலானவைகளில் லாஜிக்கில் பல ஓட்டைகள் உள்ளன என்பது வெளிப்படை. இவ்வளவு ஆராய்ச்சி செய்யும் ஒரு நடிகர் இதில் போய் கோட்டை விடலாமா என்று நம் மனம் சொன்னாலும் கழலின் ஜால்ரா சத்தத்தின் மிகுதியால் நம் மனமே இவற்றை ஏற்க மறுக்கிறது.
‘நம்மவர் ‘-The Principal, ‘மகளிர் மட்டும்’ – Nine To Five, ‘குணா’ – Tie me up, tie me down, ‘வேட்டையாடு விளையாடு’ – Murder of Memories, ”நள தமயந்தி’ – Green Card, ‘சதி லீலாவதி’ – She Devil என்று பட்டியல் நீள்கிறது. நமது மன உளைச்சல் கூடுகிறது.
குற்றம் சொல்லலாம் சார், நீங்கள் கதை எழுதிப் பாருங்கள் என்று கேட்கிறீர்களா? அதற்கும் ஆசிரியர் ஒவ்வொரு படத்துக்கும் புதிய கதையும் எழுதியுள்ளார். தான் எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று. பல கதைகள் நன்றாகவே உள்ளளன. “குருதிப்புனல்”, “ஹே ராம்” முதலான கதைகளுக்கு மாற்றாக அவர் எழுதியுள்ள கதைகள் நன்றாகவே உள்ளன. கமல் சார் கவனிப்பாராக. உங்களுக்கு ஒரு நல்ல கதாசிரியர் கிடைத்துள்ளார்.
கம்பர் காப்பி அடிக்கவில்லையா ? என்று கேட்கலாம். அவர் மூலக்கதையை மாறவில்லை. தான் புதியதாக ஒரு கதையை உருவாக்கவில்லை. வடமொழி மூலத்தைத் தமிழில் தந்தார் அதுவும் தமிழுக்கே உண்டான பண்புகளுடன் – “பிறன் இல் விழையாமை’ என்ற வள்ளுவர் கூற்று வலியுறுத்தப்படுகிறது.
மணி ரத்தினமும் தான் பல மகாபாரதக் கதைகளைக் காப்பி அடித்தும் உல்டா செய்தும் படம் எடுக்கிறார். ஆனால் அவரிடம் ஒரு நேர்மை இருக்கிறது. கதை தனது என்று அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் கமல் சார் கதை தொடங்கி அனைத்தும் தனதே என்னும்போது “அட அவனா நீயி” என்று எண்ணத் தோன்றுகிறது தானே !
ஆனால் ஒன்று இத்தனை செய்தாலும் அவர் தமிழ் நாட்டின் ஒரு கலைஞன். அந்த அளவில் அவரை வாழ்த்துவோம்.
ஒரே ஒரு வேண்டுகோள் : இனிமே இந்த மாதிரி “சுட்ட” கதை வேண்டாம் சார். நமக்கு மத்தது வரல்லே. நடிக்க மட்டும் வருது. அதோடு விட்டுடுங்களேன், ப்ளீஸ் !