பத்மநாபாவையும் சேர்த்துப் பதினான்கு பேரைப் புலிகள் படுகொலை செய்தனர். செய்யப்பட்ட இடத்தில் இருந்து ஆறு தெரு தள்ளி நான் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தேன்.
பத்மநாபா என்றொருவர் இருந்தார், ஈழப் போரில் பெரும் பங்கு ஆற்றினார், விடுதலைப் புலிகளுடன் சமரசம் செய்துகொள்ள மறுத்தார், இந்திய இலங்கை ஒப்பந்தத்தை வரவேற்றார், ஆகவே சென்னை கோடம்பாக்கத்தில் வைத்துப் புலிகள் அவரையும் வேறு 14 பேரையும் படுகொலை செய்தனர்.
மேற்சொன்ன தகவல்கள் அனேகமாக இப்போது யாருக்கும் நினைவில் இருக்க வாய்ப்பில்லை. அப்படி ஒருவர் இருந்தார் என்பதே கூட பலருக்கும் தெரியாமல் இருக்கவே வாய்ப்புள்ளது. ஈழ விடுதலைப் போர் என்றால் ஏதோ விடுதலைப் புலிகள் மட்டுமே என்றொரு பிம்பமே தற்போது அனேகமாகப் பலருக்கும் உள்ளது.
ஈழத்திற்கான போர் என்பதில் பிரபாகரன் தலைமையிலான புலிகள் தவிர பல போராளிக்குழுக்கள் இருந்தன என்பதையே நம் தமிழ் மக்களுக்கு நினைவு படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறான சூழலில், ‘பத்மநாபா படுகொலை’ என்னும் நூல் சரியான நேரத்தில் வெளிவந்துள்ளது. எழுதிய ஜெ.ராம்கி, வெளியிட்ட சுவாசம் பதிப்பகம் நீடூழி வாழ்க.
இனி கொஞ்சம் வரலாறு. நிறைய படுகொலைகள் என்று பயணிப்போம்.
பத்மநாபா படுகொலை என் மனதில் ஆழப் பதிந்த ஒன்று. அவர் கோடம்பாக்கத்தில் கொலையான அன்று, மாம்பலத்தில் என் மாமா வீட்டில் நான் தங்கியிருந்தேன். பொறியியல் நுழைவுத் தேர்வு எழுத சென்னை வந்திருந்தேன். அத்துடன், 1983 முதல் ஈழத்திற்கான போர் பற்றிய செய்திகள், போராளிக்குழுக்கள் பற்றிய தகவல்கள், இந்திய இலங்கை ஒப்பந்தம் என்று மிகவும் ஊன்றிப் படித்துக்கொண்டிருந்தேன். இந்திய அமைதிப் படை இலங்கை சென்ற போது மாலை 5:30 மணி அளவில் ஆல் இந்தியா ரேடியோவின் பிரத்யேக ஒலிபரப்பையும் விடாமல் கேட்டிருந்ததுண்டு. ஆகவே, இலங்கை நடவடிக்கைகள் அனேகமாக அத்துப்படி. ( ‘நெய்வேலிக் கதைகள்’ நூலில் இதைப் பற்றி நிறைய எழுதியுள்ளேன்).
விடுதலைப் புலிகள் தவிர, ஈரோஸ், பிளாட், டெலோ, ஈபிஆரெல்எஃப் என்று பல போராளிக் குழுக்கள் அன்று செயல்பட்டு வந்தன. அனைத்துப் போராளிக்குழுக்களையும் அழித்தொழித்து, புலிகள் பயங்கரவாதக் குழுவாகப் பரிணாம உருமாற்றம் அடையத் துவங்கிய காலம் அது. ராஜீவ் காந்தி அப்போது உயிருடன் இருந்தார்.
பத்மநாபா இடதுசாரிச் சிந்தனை கொண்டவராக ஈபிஆர்எல்எப் இயக்கத்தை நடத்தி வந்தார். யுத்தம் என்பது எப்போதாவது நிறுத்தப் பட வேண்டிய ஒன்று என்பதை உணர்ந்தவராக, ஒரு புள்ளியில் யுத்தம் நின்று சமாதானம் துளிர்த்தாலே மக்கள் அதிகாரம் பெற்று வாழ முடியும் என்பதை உணர்ந்தவராக, தன் போராளிக்குழு இளைஞர்களுக்கு ஒரு மார்க்கதரிசியாகத் திகழ்ந்தார் பத்மநாபா. யுத்தம் தீர்வல்ல என்பதை உணர்ந்தவராக இருந்த அவர், சமாதானம் துவங்க வேண்டிய கட்டம் எது என்பதையும் அறிந்திருந்தார். இதற்கு அவரது வாசிப்பு ஒரு காரணம்.
நிதர்ஸனத்தை உணர்ந்தவராக இருந்த பத்மநாபா தனது குழுவில் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்து, போராளிகளுக்கு அரசியல் பயணத்திற்கான வழி காட்டும் சிந்தனையாளராகச் செயல்பட்டு வந்தார். அதனாலேயே, ஆயுதப் போராட்டம் முடிவடைய வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்தார்.
ஆனால், அரசியல் பயணத்திற்குப் புலிகள் தயாராக இருக்கவில்லை. ஆயுதப் போராட்டம் மூலம் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று அவர்கள் நம்ப வைக்கப் பட்டார்கள். இதற்கு, இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து பண உதவி செய்துவந்த குழுக்கள் முக்கிய காரணம். யுத்தம் நின்றால் பணப்புழக்கம் நின்றுவிடும் என்று நம்பிய பல குழுக்கள் ஈழத்தில் யுத்தம் நிற்காமல் பார்த்துக் கொண்டன. அந்தச் சதியில் பத்மநாபா, உமா மகேஸ்வரன், பாலகுமார் முதலான தங்கள் சகோதரப் போராளிகளை ஹவிசுகளாக கொடுத்த புலிகள், இறுதியில் ஆத்ம சமர்ப்பணம் செய்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
பத்மநாபா கொல்லப்பட்ட நேரத்தில் புலிகள் இலங்கை அரசுடன் சமாதானத்தில் இருந்தனர். பிரேமதாசா அரசுடன் கூட்டுச் சேர்ந்து, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்தல் முறையால் ஆட்சிக்கு வந்த ஈபிஆர்எல்எஃப் அமைப்பின் அரசைக் கவிழக்க அனைத்து வன்முறைச் செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். ‘சிங்களவர்களும் நாங்களும் சகோதரர்கள். இந்திய ராணுவத்துக்கு இங்கே என்ன வேலை’ என்று கேட்டு, கருணாநிதி அரசின் ஆசியுடன், முதுகெலும்பற்ற வி.பி.சிங் அரசின் நபும்ஸகத் தன்மையைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய ராணுவத்தைத் திருப்பி அனுப்பினர்.
இதன் பலன் : ஈபிஆர்எல்எஃப் அரசு முறிந்தது. தமிழர்களுக்குக் கிடைத்த ஒரே வெற்றியும் பறிபோனது. சகோதரர்கள் என்றும் பாராமல் சக போராளிகளைப் புலிகள் கொன்றனர். அதன் தொடர்ச்சியாக பத்மநாபா சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்.
பத்மநாபா சென்னையில் கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னர், தமிழக முதல்வர் கருணாநிதி ‘புலிகள் தங்கள் நாட்டில் சுதந்திரமாக உலவி வருகின்றனர். அவர்கள் தமிழகத்தில் இருக்க வேண்டிய தேவை என்ன? தமிழ் நாட்டில் புலி என்று யாரும் இல்லை’ என்று பேட்டியளித்திருந்தார்.
பத்மநாபாவையும் அவரது கூட்டாளிகளையும் கோழைத்தனமாகக் கொன்ற கூட்டத்தின் சூத்திரதாரியான ஒற்றைக் கண் சிவராசன் பின்னர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கும் காரணமானான்.
தேர்தல் மூலம் இலங்கையில் தமிழ் மாகாணங்களுக்குத் தமிழர் ஒருவர் ( வரதராஜ பெருமாள் ) முதல்வரானார். இதற்குக் காரணம் ராஜீவ் காந்தி மற்றும் எம்.ஜி.ஆர். இவர்களுக்குப் பிறகு, பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எஃப். குழு. ஆனால், அத்தனை முன்னேற்றங்களையும் தவிடு பொடியாக்கித் தங்களையும் தம் மக்களையும் அழித்தொழித்த பெருமை விடுதலைப் புலிகளுக்கு உண்டு.
இந்தப் பின்புலத்தில் இருந்து ‘பத்மநாபா படுகொலை’ நூலை வாசித்துப் பார்த்தால் தற்கால இளைஞர்களுக்கு அன்னாளைய நிதர்ஸனச் சித்திரங்கள் புரிய வாய்ப்புண்டு. பத்மநாபா கொலைக்குப் பின் ஒற்றைக் கண் சிவராசன் முதலான புலிகள் எவ்வாறு தப்பினர், காவல் துறையின் அக்கறையின்மை மற்றும் செயல் அற்ற தன்மை, ஆயுதங்கள் போதாமை, முதல்வரின் அலட்சியம், அதனால் பின்னாளில் விளைந்த ராஜீவ் கொலை என்று வரலாற்றுப் பின்னணியை மனதில் நிறுத்தும் நூல் ‘பத்மநாபா படுகொலை’.
பத்மநாபா படுகொலைக்குப் பின்னர் இரங்கல் கூட்டத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசியது :
‘பத்மநாபாவைக் கொன்றவர்களைப் போராளிகள் என்றோ, புரட்சிக்காரர்கள் என்றோ உலகம் ஒப்புக் கொள்ளாது. அவர்கள் வெறும் வன்முறையை வழிபடுகிற ஃபாசிஸ்டுகள். அவர்களுக்குத் தேசம் இல்லை, இனம் இல்லை, மொழி இல்லை, தாய் இல்லை, தந்தையும் இல்லை.. கொள்கையும் கோட்பாடும் இல்லாத ஒரு கூட்டத்திடம் நம் இளைய சமுதாயம் பலியாவதும், அதை எதிர்த்தும் பலியாவதும் பரிதாபத்திற்குரியது.
.. விடுதலைப் புலிகளை இந்தியாவில் ஆதரிப்பவர்கள் ஒன்று கோழைகளாக இருக்க வேண்டும் அல்லது அவர்களிடம் கைக்கூலி வாங்கிக்கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும்’

நூல்: ‘பத்மநாபா படுகொலை’. ஆசிரியர் : ஜெ.ராம்கி. சுவாஸம் பதிப்பகம். விலை: ரூ: 160. +91-81480-66645 www.swasambookart.com
இலங்கைத் தமிழர் விஷயமாக வந்துள்ள எனது பிற நூலாய்வுகள்.
https://amaruvi.in/2015/12/20/இந்தச்-சாவுகளுக்கு-மன்னிhttps://amaruvi.in/2015/12/20/இந்தச்-சாவுகளுக்கு-மன்னி//