கல்யாண வீடியோக் கதைகள்

ஒரு மைசூர்ப்பாக எடுத்து ஒரு விள்ளல் வாய்ல போட்டுண்டப்பறம் இன்னொரு விள்ளல் கைல இருக்குமே, அதையே கேமராவுல ரெக்கார்ட் பண்ணிண்டிருந்தா என்ன கொடுமை ?

இதெல்லாம் ரொம்ப ஓவர். கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா ?

கல்யாண வீடுகள்ல வீடியோ எடுங்கோ, வேணாங்கல. பொண்ணு மாப்பிளைய எடுங்கோ.

ஆனா, சப்பிடற பந்தில வந்து, கைக்கும் வாய்க்கும் குறுக்க கேமராவை நீட்டினா எப்பிடி ? காராசேவ கவனிக்கறதா, கேமராவப் பார்க்கறதா ? 

அதுவும், ஏதோ எடுத்தமா போனமான்னு இல்லாம, ஒரு பதார்த்தத்த முழுக்க சாப்பிடற வரைக்கும் ரெக்கார்ட் பண்ணனும்னு என்ன வேண்டுதலோ தெரியல. எல்லா கல்யாண வீடுகள்லயும் இதே வழிமுறை.

பந்தி நடக்கறத ஒரு ஓரமா இருந்து படம் எடுத்துட்டுப் போனா போறாதா ? 

வீட்டுலதான் அத சப்பிடாத, இத சாப்பிடாதன்னு கொடைச்சல். கொஞ்சம் நிம்மதியா ஆற அமர குஞ்சாலாடு ரெண்டு, பாதுஷா ரெண்டு, அக்கார அடிசில் ரெண்டு தரம்னு சாப்பிடலாம்னா பொண்டாட்டி கண் கொத்திப் பாம்பா பார்க்கற மாதிரி, கேமராவ நீட்டினா என்ன சார் நியாயம் ? 

அதுலயும், ஒரு மைசூர்ப்பாக எடுத்து ஒரு விள்ளல் வாய்ல போட்டுண்டப்பறம் இன்னொரு விள்ளல் கைல இருக்குமே, அதையே கேமராவுல ரெக்கார்ட் பண்ணிண்டிருந்தா என்ன கொடுமை ? எவ்வளவு நேரம் தான் வாய்ல மைசூர்ப்பாகும், பல் தெரியற மாதிரி சிரிப்புமாவே கைல இன்னொரு விள்ளல வெச்சுண்டு அசடு வழிஞ்சுண்டு உக்காண்டிருக்கறது ? 

சரி, வீடியோ எடுத்துட்டேளா, அன்னண்ட போங்கோ, மிச்ச விள்ளலையும் வாயில போட்டுக்கணும்னு சொல்லலாம்னா, வாய்க்குள்ள ஏற்கெனவே ஒரு விள்ளல் இருக்கு. இப்பிடியே ஸ்லோ மோஷன்ல எத்தனை நாழிதான் உக்காந்துண்டே இருகக்றது ? 

இதுல வீடியோ எடுக்கறவருக்குக் கொடுக்காம சாப்பிடறதுனால வயத்த வலி எதாவது வந்துடுமோன்னு வேற பயமா இருக்கு. பயத்தோட சிரிக்கற மாதிரி போஸ் குடுக்கறதுக்கு ஆமருவி என்ன ‘விஸ்வரூபம்’ கமலஹாஸனா ? ஊமைக்குத்து வாங்கிண்டே சிரிச்சு மழுப்ப அவரால மட்டும்தான் முடியும்.

சாப்பிடறத வீடியோ எடுக்கறதுக்குப் பின்னாடி ஏதோ கான்ஸ்பிரஸி இருக்கும் போல இருக்கு. ஆமருவிங்கறவன் என்ன சாப்பிட்டான் ? எத்தனை லட்டு உருண்டைகளை உள்ள தள்ளினான் ? ஒரு ஆள் ஒரு லட்டு சாப்பிடறதுக்கு ஆவரேஜா எத்தனை நாழியாறது ? இவன் பேரலல் பிராஸசிங் கணக்கா, ஒரே சமயத்துல எத்தனை லட்டுகளை தள்ளறான்னு இப்பிடி எதாவது டேட்டா சயின்ஸ் பிரச்னை எதாவது இருக்குமோன்னு தோண்றது.

என்ன டேட்டா சயின்ஸ் பிரச்னையானாலும் இருக்கட்டும். எடுக்கற படத்த எடுத்துக்கோங்கோ. ஆனா அத பார்யாள் கிட்ட மட்டும் காட்டாதீங்கோ, நாளைக்குக் காஃபில தீர்த்தம் விளையாடிடும்னு சொல்லலாம்னு பார்த்தா அதுக்குள்ள அடுத்த இலைக்குப் போயிட்டார் வீடியோகிராஃபர். 

இனிமேலாவது கல்யாண வீடுகள்ல சாப்பிடறத வீடியோ எடுக்காதீங்கோ ப்ளீஸ். எடுத்தாலும், அந்த வீடியோவ லட்டுகள் சாப்பிட்டவனோட மனைவி கண்ல படாம பார்த்துக்கோங்கோ. 

லட்டு தின்னவன் (காஃபித்) தண்ணி குடிப்பான்னு தெரியாமலா சொன்னா நம்ம பெரியவாள்ளாம் ? 

–ஆமருவி
24-02-2023

%d bloggers like this: