காரல் மார்க்ஸ் கண்ணனின் அவதாரம் ?

வெண்முரசு
வெண்முரசு

நடந்ததா இல்லையா என்று அறிய முடியாத மஹாபாரதத்தை இப்போது விரித்து, விளக்கி விளம்புவானேன் என்று வருத்தப்படுகிறார் மனுஷ்யபுத்ரன். அவருக்கு ஒத்திசைவு நடனம் ஆடுகிறார் ஞாநி. ஜெயமோகன் தன் படைப்புத் திறனை இப்படி இதிகாசங்களில் வீணடிக்கிறாரே என்று ஞாநி கண்ணீர் வடிக்கிறார்.

நடந்ததா என்று கேட்பதற்கு முன் ஒரு ஒரு நிமிடம் யோசிப்போமா ? ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடி’யாக இருக்கிறோமே, அது எப்படி ? விண்வெளியில் அந்தரத்தில் நின்றோமா என்ன ? பகுத்தறிவின் பரிணாமத் தாவலால் ஏற்பட்ட மாபெரும் நிற்றலா அது ?

தமிழ் மக்களின் ஒட்டுமொத்த மனசாட்சியின் பேரெழுச்சியாக ‘வெண்முரசு’ பரிமளிக்கிறது. ஐம்பது ஆண்டுகள் நாத்திகவாதப் பேரலையின் அர்த்தமற்ற கொக்கரிப்புக்களிலும் திரை ஆட்டங்களின் ஆரவாரப் பேரிரைச்சல்களிலும் சிக்குண்டிருந்த தமிழ் மாந்தர் தமது அடக்கிவைக்கப்பட்ட ஆன்மீக, கலாச்சார எண்ணங்களின் விஸ்வரூபத்தை உணர்த்துவதாக ‘வெண்முரசு’ திகழ்கிறது.

நாளொன்றுக்கு 4000 பேர் படிக்கிறார்கள் என்கிறார் ஜெயமோகன். திரைவெளியில் லயித்து, மாட்டு மக்களாக இருந்த தமிழ் மனிதர்களை நாட்டு மக்களாக ஆக்குகிறார் ஜெமோ. மாநில மக்கள் மாநாடுகளிலும் முப்பெரும் விழாக்களிலும் அமிழ்ந்திருந்த காலத்தில், அழியாத காவியத்தின் அபரிமிதமான காட்சியை அவர்களுக்குக் காண்பித்துத் திசை மாற்றுகிறார் ஜெமோ.

மனித முயற்சியின் மகத்தான பேராற்றலுடன் ஆழ்ந்த அறிவும் தீவிர வாசிப்பும் கலந்தால் கிடைக்கும் மகோன்னதப் படைப்பு வெண்முரசு. அதைப் படைக்கும் ஜெமோ வாழ்த்தப்பட வேண்டியவர்.

மொழிவழிப் பிரிவினை பேசிய முட்டாள் மூடர்களின் காட்டுத்தளையில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்கும் வேலை செய்கிறார் ஜெமோ.

இடதுசாரிப் பேச்சில் இடறி விழுந்த தமிழ் மகன் இப்போது ‘எது சரி’ என்று கேள்வி கேட்கவைக்கிறார் ஜெமோ.

வசைமாரி பொழிவதும், வம்பு பேசுவதும், காறி உமிழ்வதும் இலக்கியம் என்று நம்பவைக்கப்பட்ட சமூகத்தை நேர்ப்படுத்துகிறார் ஜெமோ.

மாநிலவெறி, மொழிவெறி, இனவெறி என்று தலைவர்களால் வெறி ஏற்றப்பட்டு கட்டுக்கடங்காமல் திரிந்த மூளை மழுங்கிய சமுதாயத்தைக் கிள்ளி விட்டு அறிவுச்சுடர் ஏற்றுகிறார் ஜெமோ.

நாற்பது ஆண்டுகளாக இருந்த எதிர்மறை எண்ண ஓட்டம் அழியுமாறும், சோகையிழந்த சோம்பேறி மனிதர் பண்பாட்டுப் புத்துணர்ச்சி பெறுமாறு, தேஜஸ் இழந்த தேவாங்கு மனிதர் துள்ளி கம்பீர நடை போட உணர்ச்சியளிக்கும் ‘வெண்முரசு’ இந்நாளைய கட்டாயத் தேவை.

‘உனக்கு வரலாறு இல்லை’, ‘உனக்கு நாடே இல்லை’, ‘உன் நாடு ஆங்கிலேயரால் ஒன்றுபடுத்தப்பட்ட பல நாடுகளின் கூட்டு’ என்ற கட்டுக் கதைகளை வரலாறு என்று நம்புவது மதச்சார்பின்மையாம். இந்த நாட்டின் பண்பாட்டுக் கூறுகளை முன்னகர்த்தி, கலாச்சாரச் செறிவைப் பறை சாற்றும் ஒரு காவியத்தை, இதிஹாசத்தை மீள் பார்வை செய்து, மீள் கட்டமைப்புச் செய்து விரித்துச் சொல்வது தேவை இல்லாதது என்று சொல்வது முற்போக்காம்.

கேட்பவனுக்குக் காது செவிடென்றால் காரல் மார்க்ஸ் கண்ணனின் அவதாரம் என்பார்கள்.

மகாபாரதம் எழுதியது யார் ?

வெண்முரசு
வெண்முரசு

சினிமாக் கலைஞர்களுக்கு மட்டுமே விழா எடுத்த நிலை போய் தமிழில் எழுத்தாளர் ஒருவருக்கு விழா எடுப்பது ஒரு அதிசயம். அந்த எழுத்தாளர் ஜெயமோகன். அவர் எழுதிய ‘வெண்முரசு’ என்னும் மகாபாரத நாவல். உலகெங்கிலும் உள்ள மகாபாரதத்தைப் படித்து விட்டு தொடர்ந்து தினமும் மகாபாரதம் எழுதி வருகிறார் ஜெயமோகன். அடுத்த பத்து ஆண்டுகள் விடாமல் எழுதப் போகிறார் அவர். தமிழுக்கும், இந்தியப் பாரம்பரியத்திற்கும் இந்த அவரது சேவை அளப்பரியது. ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘இந்தியாவின் வரலாற்றைப் பதிவு செய்கிறேன்’ என்று சொல்கிறார் ஜெயமோகன்.

பழம்பெரும் எழுத்தாளர் அசோகமித்ரன், பி.ஏ.கிருஷ்ணன் முதலியோர் முன்னிலையில் நடிகர் கமலஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா முதலியோர் பங்குபெற்ற நிகழ்வில் நேற்று சென்னை அருங்காட்சியக அரங்கில் நூல் வெளியிடப்பட்டது.

பி.ஏ.கிருஷ்ணன் ஜெயமோகனை ஒரு கழுகு என்றார். வியாசர் என்னும் கழுகு பாரதத்தின் மேல் பறந்து பாரதம் எழுதியது. பின்னர் ஜெயமோகன் என்னும் கழுகு அப்படி எழுதியுள்ளது என்று பாராட்டினார் என்று தெரிகிறது.

கமலஹாசன் ‘நீங்கள் ( வாசகர்கள்) விஷ்ணுபுரம், இளையராஜா சிவபுரம், நான் வேறுபுறம்’ என்று வழக்கம் போல் தன் நாத்திக அபிமானத்தைப் பதிவு செய்துள்ளார். ஆனால் ஜெயமோகன் மேல் அவருக்கு இருந்த மரியாதையும் ( பொறாமையும் ?? ), ஆச்சரியமும் அவரது பேச்சில் வெளிப்பட்டது என்றும் தெரிகிறது.

‘அறம்’, ‘பின் தொடரும் நிழலின் குரல்’, ‘காடு’, ‘விஷ்ணுபுரம்’ எல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த மகா பாரதத் தொடர் அமையப் போகிறது என்று புரிகிறது. ஒவ்வொரு நாளும் அவரது மகாபாரதப் பதிவு படித்த பின் ஒரு நொடியில் சில ஆயிரம் ஆண்டுகள் பின் சென்ற அனுபவம் ஏற்படுவது உண்மை.

விழாவில் 5 மகாபாரத விரிவுரையாளர்களையும் கூத்துக் கலைஞர்களையும் ஜெயமோகன் கௌரவித்தார். இது ஒரு முக்கியமான செயல். தற்காலத்தில் ‘உபன்யாசங்கள்’ அருகியுள்ள நிலையில், மக்களுக்குத் தொலைக்காட்சியின் அழுமூஞ்சி நாடகங்கள் விதித்துள்ள சுய-சிறை-தண்டனைகளையும் மீறி ஒரு சில உபன்யாசங்கள் நடந்துகொண்டுதான் வருகின்றன. ஆனால் அக்கலைஞர்கள் சமூகத்தால் கண்டுகொள்ளப்படுவதில்லை. அப்படிப்பட்ட ஐந்து கலைஞர்களுக்குப் பாராட்டு தெரிவிப்பது பாரதப் பண்பாட்டை மேலும் முன்னகர்த்த உதவும் அறச் செயல்.

ஒரு காலத்தில் நமது பிள்ளைகள் ‘மகா பாரதம் எழுதியது யார்’ என்றால் ‘ஜெயமோகன்’ என்ற பதில் வந்தால் ஆச்சரியம் இல்லை.

%d bloggers like this: