விடுதலை – பாகம் – 1 – சினிமா விமர்சனம்

விடுதலை – பாகம் 1 – திரை விமர்சனம். ( வசவுகள் துவங்கலாம் ). குறிப்பாகப் பெண்கள் மீது பாலியல் வன்முறை. பெண்களை, அதிலும் தலித் பெண்களை மட்டும் இப்படி எப்போதுமே அவமானப்படுதுதும் விதமாகவே சித்தரிப்பதை எந்த முற்போக்கு பெண்கள் சங்கமும் கண்டிப்பதில்லை.

இதை வாசித்துவிட்டு என்னை வசவுகளால் குளிப்பாட்டலாம். ஆனால், யாராவது சொல்லியாக வேண்டும். நான் சொல்கிறேன்.

விடுதலை என்னும் சினிமாவைப் பற்றி இனிமேல் யாரும் எதுவும் சொல்வதற்கில்லை என்று ஆகிவிட்டது. தமிழில் வந்துள்ள சமூகப் படங்களில் இதைப் போல் ஒன்று இல்லை, சமூக நீதியைப் பறை சாற்றுகிறது, தமிழ் மக்களின் போராட்ட உணர்வைக் காட்டுகிறது, உண்மைக் கதை, தமிழ்த் தேசியத்தின் மறைக்கப்பட்ட பார்வை — இப்படியே பல விமர்சனங்களைக் கண்டேன்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையின் மேல் பல வகைகளில் கட்டப்பட்ட கதையே விடுதலை என்றும் வாசித்தேன். ஜெயமோகனே இதனைத் தெளிவுபடுத்தினார். ‘கதை மட்டுமே என்னுடையது. மற்றபடி படம் வெற்றிமாறனுடையது மட்டுமே.’ ஜெயமோகனை சங்கி என்றும், பாட்டாளி மக்களின் பகைவன் என்றும் வசைபாடும் கூட்டமும் ‘இது ஜெயமோகனின் படம் இல்லை. அவரது அரசியல் எதுவும் இல்லை. இது தமிழ்ப் பழங்குடிகளின் அழித்தொழிப்பு பற்றிய கதை தான். நல்லவேளை ஜெயமோகன் இதில் இல்லை’ என்று சாட்சியம் அளித்தார்கள்.

கொஞ்சம் குழப்பத்தில் இத்திரைப்படத்தைப் பார்த்தேன்.

கொஞ்சம் தமிழர் விடுதலைப் படை, கொஞ்சம் தமிழரசன், கொஞ்சம் வீரப்பன், கொஞ்சம் தமிழ்த் தேசியம், கொஞ்சம் போராட்ட சூழியல், கொஞ்சம் கார்ப்பரேட் எதிர்ப்பு என்று கலப்படமாக இருந்தது விடுதலை – பாகம் 1.

எல்லாம் கொஞ்சம் தானா ? இல்லை. அரசாங்க, போலீஸ் எதிர்ப்பு ரொம்ப அதிகம். அளவுக்கு அதிகம். அதுவும் போலீஸ் எதிர்ப்பு, போலீஸ் அராஜகம் என்று வயிற்றைப் பிரட்டும் வரை கொடுத்துள்ளார்கள்.

இவை மட்டும் தானா ? இல்லை. மலைவாழ் பெண்களின் சித்தரிப்பு. எப்போதும் அவர்களிடம் அத்துமீறும் காவல் துறையினர். எப்போதும் அவர்களைக் கற்பழித்துக் கொண்டே இருக்கும் காவல் அதிகாரிகள். எப்போதும் அவர்களை நிர்வாணமாகவே நிற்கவைத்து அடிக்கும் காவல் அதிகாரிகள்.

பெண்களைக் கொடுமைப்படுத்தினார்கள் என்பதை எத்தனையோ குறியீடுகள் மூலம் சொல்லலாம். சினிமா எடுப்பவர்களுக்குக் குறீயீடா தெரியாது ? ஜெய்பீம் படத்தில் பாமகவைச் சுட்டும் விதமாக குரு என்றொரு பாத்திரம், பின்னர் அக்னிக் கலசம். அவ்வளவுதான். அக்கட்சியைச் சொல்லியாகிவிட்டது. பாமக கூட்டம் நடப்பதைப் போல் ஏன் ஒரு காட்சி வைக்கவில்லை ? அதே போல் அசட்டு வக்கீல் ஒருவரைக் காட்ட, பிராமணர் போல் தோற்றம் அளிக்கும் ( உருவம் + மொழி + சிவ நாம உச்சாடனம் ). அப்பாத்திரம் தேவை இல்லாத ஒன்று என்றாலும், பிராமணர்களை எப்படியாவது இழிவு படுத்த வேண்டாமா ? சொருகு ஒரு கேரக்டரை. யார் கேட்கப் போகிறார்கள். அந்தப் பாத்திரக் குறியீடு என்ன ? உயர்குடி வக்கீல்கள் அந்தப் போராட்டத்திற்கு ஊக்கம் அளிக்கவில்லை என்று எப்படிச் சொல்வது ? ஒரு அசட்டு வக்கீல் வைத்தால் போயிற்று.

ஆனால், தலித் மீதான வன்முறை என்றால் கண்டிப்பாக கற்பழிப்பு, வன்கொடுமை காட்டப்பட வேண்டும். அதுவும் அதீத வன்முறையுடன். இவை நடக்கவில்லை என்பதால் அல்ல. இவற்றை இப்படிக் காட்டினால் மட்டுமே தமிழ்ச் சமூகம் நம்பும் என்கிற ஒரு டெம்ப்ளேட் போல்.

பல டெம்பிளேட்கள் உள்ளன. பிராமணன் என்றால் ஸ்திரீ-லோலனாக இருக்க வேண்டும், குயுக்தியுடன் செயல்பட வேண்டும், சிண்டு முடிந்துவிட வேண்டும், பண பலத்திற்கு முன் அடிபணிந்து நிற்க வேண்டும், கெட்ட எண்ணம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும். சாதி பார்ப்பவனாக இருந்தே ஆக வேண்டும். இந்த டெம்ப்ளேட் மாறினால் அவன் பிராமணன் ஆகமாட்டான். உதா: தளபதி படத்தில் சாருஹாசன். திரௌபதி படத்தில் பத்திரப் பதிவு அலுவலர். தேவர் மகன் படத்தில் மதன் பாப்.

அதே போல், அதீத வன்முறை காட்டாமல் தலித் விஷயங்கள் பேச முடியாது என்பது சட்டம். ஒன்று கதாபாத்திரம் அதீத கோபத்துடன் இருக்கும். பார்க்கும் எவருடனும் சண்டையிடும். சட்டத்தை மீறும். ஏனெனில், சமூகக் காரணங்கள். கமலஹாசன் சொல்வது போல ‘சமூகக் கோபம்’. Therefore justified. இந்த வன்முறையைக் கையாள, அரசு, காவல்துறை மூலம் அதீத வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும். அதில் குறிப்பாகப் பெண்கள் மீது பாலியல் வன்முறை. பெண்களை, அதிலும் தலித் பெண்களை மட்டும் இப்படி எப்போதுமே அவமானப்படுதுதும் விதமாகவே சித்தரிப்பதை எந்த முற்போக்கு பெண்கள் சங்கமும் கண்டிப்பதில்லை. 70 வயதான கவர்னர், தன் பேத்தி வயதுள்ள ஒரு பெண் பத்திரிக்கையாளரைக் கன்னத்தில் தட்டினார் என்பதால் வெகுண்டெழும் மாதர் சங்கங்கள், பெண்ணீய இயக்கங்கள் தலித் பெண்கள் இப்படி காட்டப்படுவதைக் கண்டுகொள்வதில்லை என்பதைக் காட்டிலும் இம்மாதிரியான காட்சிப்படுத்தல்களைச் சிலாகித்துக் கொண்டாடுவது என்ன முற்போக்கோ தெரியவில்லை.

வெற்றிமாறன் கையாளும் உத்தி அருமையானது. கதையை ஒரு நாவலில் / சிறுகதையில் இருந்து எடுப்பார். பின்னர் அனேகமாக அனைத்து விதமான தேச எதிர்ப்புக் குழுக்களின் சொல்லாடல்களையும் சேர்த்துக் கதம்பமாக ஆக்கி, பிழியப் பிழிய அழுது அரற்றி, கோபம் கொப்புளிக்க அரசை எதிர்க்கத் தூண்டும் விதமாக மக்களை உசுப்பேற்ற ஒரு திரைக்கதையை எழுதுவார். இயக்கம் வெகு சிரத்தையாக இருக்கும். காட்சிகள் தத்ரூபமாகவும், குரூர ரசம் சொட்டும் விதமாகவும் இருக்கும். படம் பிய்த்துக் கொண்டு ஓடும்.

ஏய்ப்புகள், சுரண்டல்கள் நடக்கவில்லையா என்று கேட்கலாம் ? அவற்றைக் காட்டக் கூடாதா என்றும் கேட்கலாம். நடந்தன. நடக்கின்றன. காட்ட வேண்டும். ஆனால், எதைக் காட்டுவது ? எப்படிக் காட்டுவது ?

விருமாண்டி திரைப்படத்தில் நாயக்கர் சமூகத்திற்கும் தேவர் சமூகத்திற்கும் பிரச்னை என்பது போல கமலஹாசன் எடுத்திருப்பார். ஆனால், ஒரு முறையாவ்து நாயக்கர் சமூகப் பெண்ணை இம்மாதிரி காண்பித்திருக்க முடியுமா ? இல்லை, தேவர் பெண்ணை ? கதை ஓட்டம் அப்படி இல்லையே எனலாம். ஆனால், இடை நிலை சாதிப் பெண்கள் யாரையாவது இம்மாதிரி நிர்வாணமாக அடி வாங்கி, பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து, கொல்லப்பட்டு என்று காட்டியிருக்கிறார்களா ? அவர்களுக்கு நடக்கவில்லை என்று கருதினால் கூட, அவர்களை அவமானப்படுத்துவது போல் எதையும் செய்ய மாட்டார்கள். ( உண்மையில் தென் மாவட்டங்களில் பிரச்னை தலித்துகளுக்கும் தேவர்களுக்கும் தான். ஆனால், அவ்விடத்தில் தலித்துகளைக் காட்ட முடியாது என்பதால் நாயக்கர்களை காட்டினார் கமலஹாசன். ‘கமலின் கலப்படங்கள்’ என்றொரு நூல் உள்ளது. வாசித்துப் பாருங்கள்.)

ஆனால், பட்டியல் இனப் பெண்கள் என்றால், ஆதிவாசிப் பெண்கள் என்றால் பாலியல் வன்கொடுமை, நிர்வாணம், அடிதடி இத்யாதி. உண்மையில் தலித் இயக்கங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது இதை எதிர்த்துத்தான் என்பேன். இப்படிக் காட்டுவதால் அரசியல் உரிமைகள், ஆதாயங்கள் உண்டு என்பதால் வாய்மூடி மௌனியாக தலித் இயக்கங்கள் இருந்தால், இதே டெம்பிளேட் கசக்கத் துவங்கும். அளவுக்கு மிஞ்சினால்..diminishng value.

விடுதலை சினிமாவிற்கு வருவோம்.

வெற்றிமாறன் நல்ல கதை சொல்லி. சந்தேகமே இல்லை. இந்தப் படத்தில் இயற்கைக் காட்சிகள் அபாரம். நகைச்சுவை நடிகராகவே அறியப்பட்ட சூரியின் குணச்சித்திர நடிப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஒரு நகைச்சுவை நடிகர் இம்மாதிரி நடிக்க முடியும் என்பதை அனுமானித்து, அவரை அந்த வேடத்தை ஏற்கச் சொல்லி நடிக்கவும் வைத்து, பெரும் வெற்றி கண்டுள்ள வெற்றி மாறன் பாராட்டுக்கு உரியவர்.

தமிழர் விடுதலைப் படையின் தமிழரசனின் கதை, கலியபெருமாளின் கதை என்றால் பொன்பரப்பி கிராமத்தில் தமிழரசன் என்ன செய்தார், அவருக்கு என்ன நடந்தது என்பதையும் காட்ட வேண்டும். அத்துடன் மார்க்ஸீய லெனினீய இடது சாரி இயக்கங்களிடையே நடந்த பிரச்னைகள், ஒரு குழுவிற்கு எதிராக மற்றொன்று செயல்பட்டது ஏன், ஈழப் போரை மனதில் கொண்டு இந்த இயக்கங்கள் இடதுசாரிச் சிந்தனைகளில் இருந்து விலகி, தமிழ்த் தேசிய நோக்கில் சென்று சீரழிந்த கதை என்று முழுவதையும் சொல்ல வேண்டும்.

விடுதலை பாகம் 2 வருகிறது என்கிறார்கள். அதில் எப்படிச் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

படத்தின் மற்றுமொரு மைல்கல் – இளையராஜாவின் பாடல் மற்றும் இசை. இசை தேவன் இளையராஜா. வேறென்ன சொல்ல ?

%d bloggers like this: