நான் வேங்கடநாதன்

எது எப்படியோ, நான் என் மனதில் உள்ளதை எழுதுகிறேன். நிகழ்வுகள் காலத்தில் முன்னே பின்னே இருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.  கோர்வையாக இல்லாமலும் இருக்கலாம். நினைவில் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்தவை ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்தவை போல் தோற்றமளிக்கலாம் என்றும் தோன்றுகிறது. 

மனதில் உள்ளதை அப்படியே எழுதினால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் உள்ளது போல் தோன்றும். இதை நீங்கள் வாசிக்கும் காலமோ நான் எழுதும் காலத்தை விட வேறுபட்டது. ஆகவே வாசிக்கும் நீங்கள் குழம்பவும் வாய்ப்புள்ளது. 

வயோதிகம் காரணமாக மனதில் உள்ளதை, நினைவின் மேல் அடுக்கில் உள்ளதை முதலில் எழுதலாம் என்று தோன்றுகிறது. ஆனால், அந்த நிகழ்வு முக்கியமானதா என்பதைப் பற்றி என் அபிபிராயம் எதுவும் இல்லை. ஏனெனில், என் காலத்தைல் என்னை மிகவும் பாதித்த நிகழ்வு ஏதாகிலும் இருந்தால் அதுவே என் மனதில் ஆழப் பதிந்து அடிக்கடி நினைவில் வந்து செல்லும். ஆனால், அம்மாதிரியான நிகழ்வு உங்களுக்குப் பெரிய மன பாதிப்பை ஏற்படுத்த எந்த முகாந்திரமும் இல்லை. ஏனெனில், ஆத்ம அளவில் நமது அனுபவங்கள் வேறுபட்டவை என்பது ஒன்று. மற்றொன்று தற்காலத்தில் ( நான் எழுதும் காலத்தில், எனக்கு நிகழ்ந்த ஒன்று) உங்கள் காலத்தில் அதிக முக்கியத்துவம் இல்லாத ஒன்றாக இருக்கலாம். ஏனெனில் சமூகம் அப்படி தன்னை மாற்றிக்கொண்டிருக்கலாம் என்பது என் ஊகம். 

எது எப்படியோ, நான் என் மனதில் உள்ளதை எழுதுகிறேன். நிகழ்வுகள் காலத்தில் முன்னே பின்னே இருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.  கோர்வையாக இல்லாமலும் இருக்கலாம். நினைவில் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்தவை ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்தவை போல் தோற்றமளிக்கலாம் என்றும் தோன்றுகிறது. 

Desikaஆகவே, இது என் வாழ்க்கைச் சரித்திரம் அன்று. என் மன ஆழத்தில் ஊறி, பலமுறை மேலே எழுந்து வந்து என்னை உலுக்கியிருக்கும் சில நிகழ்வுகள்,  என் நெஞ்சில் நீங்கா வடுவைப் போல், தினமும் வலி ஏற்படுத்தும் சில விஷயங்கள், தீர்ந்துவிடும் என்று நான் நினைத்திருந்த சில பழக்கங்கள், என்னை மாற்றிய, என் திசையை மாற்றிப் போட்ட செய்திகள் என்று பலதையும் சொல்லலாம் என்று எண்ணுகிறேன். 

தினமும் கனவில் வந்து என்னைத் உறக்கத்தில் இருந்து விழிக்கச் செய்யும் ஒன்று உண்டு என்றால் அது ஒரு பங்குனி உத்திர நாள் மட்டுமே. அன்று ஶ்ரீரங்கத்தில் நடந்தவை மட்டுமே. துருஷ்கன் செய்த காருண்யமற்ற செயல்கள், அதனால் என் அப்பன் ரங்கநாதனும் தாயாரும் பட்ட பாடு, அரங்க நகர் வாழ் வைஷ்ணவர்கள் பட்ட அவதி, பன்னீராயிரவர் செய்த பலிதானங்கள் என்று இவையே என்னைத் தினமும் வாட்டுகின்றன. 

பெருமாளின் பரம கிருபையால் தற்போது ஓரளவு முன்னேறியுள்ளது என்றாலும் நிலைமை இன்னமும் என் பால்யப் பருவத்தில் இருந்த போது இருந்த அமைதி நிலைக்குத் திரும்பவில்லை. துருஷ்கன் வழியாகக் கஷ்டங்கள் அங்கங்கே தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. யௌவனர்களால் இன்னும் சில காலங்கள் கஷ்டங்கள் நீடிக்கும் போல் தெரிகிறது. அதற்குப் பின்னர் யௌவனர்களின் உறவுக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு பலர் வரப் போகிறார்கள். அவர்களாலும் நமது சம்பிரதாயத்திற்கு ஏற்படவிருக்கும் ஹானி மனதை ரொம்பவும் ஹிம்ஸிக்கிறது. 

கண் முன்னே ஓடிய ரத்த ஆறு பல நாட்கள் என்னை உறக்கம் கொள்ள விடவில்லை. சந்தியாக்கால அனுஷ்டானங்களைச் செய்யும் போது அன்று பங்குனி உத்திர சந்தியா வேளையில் நடந்த ரத்த அர்க்யம் மனதில் தோன்றுகிறது. ‘கேஸவம் தர்ப்பயாமி’ என்று தீர்த்தத்தைக் கையில் விட்டால் செக்கச்செவேல் என்று ரத்தம் அர்க்ய வடிவில் ஓடுவதைப் பொல் தோன்றுகிறது. குமார வரதன் என் வயோதிகத்தால் அப்படித் தோன்றுகிறது என்று சொல்கிறான். ஆனால், என் மனதில் படிந்துள்ள அந்த ரத்த ஊற்று, அன்று சந்தியா வேளையில் ரங்கநாதன் முன்னர் நடந்த ஊழிப் பெரு வெள்ளம் என்பதாகவே என் கையில் இருந்து கொட்டுகிறது தோன்றுகிறது. 

‘ஸ்ருதப்ரகாசிகா’வை நான் காப்பாற்றினேனா, அல்லது அந்தக் கிரந்தம் என்னைக் காப்பாற்றியதா என்று கேட்டால் அந்த பாஷ்யக் கிரந்தமே என்னைக் காத்தது என்று சொல்வேன். உடையவரின் பேரருள் அந்தக் கிரந்தத்தின் ஸ்தூல ரூபமாக வந்து என்னைக் காத்தது, அதனால் இன்று வரை நான் நடமாடிக்கொண்டிருக்கிறேன் என்றும் சொல்வேன். அந்தப் க்ரந்தத்தை எப்படியாகிலும் காப்பாற்றி ஶ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியே கொண்டுவந்து விட வேண்டும் என்று என்னைச் செலுத்தியது யார் என்று நினைக்கிறீர்கள்? சாக்‌ஷாத் ஶ்ரீமத் ராமானுஜரே என்னைச் செலுத்தி வெளியே கொண்டு சேர்த்தார் என்றே நினைக்கிறேன். அந்த மஹா ஆச்சார்யனை இன்றும் நன்றியோடு வணங்குகிறேன்.

‘ஸ்ருதப்ரகாசிகா’வை நான் அன்று எப்படி பெற்றுக் கொண்டேன், சுதர்ஸன சூரியை காக்கத் திராணியற்றவனாக எப்படி நின்றேன் என்பதை நினைத்தால் மனம் ஹோவென்று அழுகிறது. ஒரு பக்கம் துருஷ்கப் படைகள் ராவணாதிகளைப் போல  விரட்டுகின்றன. பெரும் இரைச்சலுடன் அந்தப் படைகள் கோவிலுக்குள் நுழைந்து கண்ணில் பட்டதை எல்லாம் வெட்டுகிறது. எந்தச் சிலை கண்ணில் பட்டாலும் சிதைக்கிறது.  யார் யாரை வெட்டுகிறார்கள் என்று புரிவதற்குள் கண் முன்னே தலைகள் விழுகின்றன.  ஆடிப்பெருக்கன்று அலை பெருக்கி வரும் காவிரி தீர்த்தம் போல் ரத்தம் கொப்புளிக்கிறது. சற்று நேரத்திற்கு முன் என்னுடன் சேர்ந்துகொண்டு கல் சுவர் எழுப்பியவர்கள் என் காலடியில் தலை இல்லா உடலாகக் கிடக்கின்றனர். ‘இப்போது தானே கைங்கரயம் செய்து கையில் ஈரம் கூட உலரவில்லையே, இவ்வளவு சீக்கிரம் திருநாடு ஏள்ளிவிட்டீரே’ என்று கீழே குனிந்து அவரது ப்ரேதத்தைத் தடவிக் கொடுத்து ஒரு சொட்டு கண்ணீர் பெருக்க முயன்றால் அதற்குள் அருகில் பிறிதொரு கைங்கர்யபரரின்  ப்ரேதம் சாய்கிறது. யாரென்று பார்த்தால் பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் பண்ணின வயோதிக வைஷ்ணவர். ஒன்றைப் பார்த்து முடிக்கும் முன் மற்றொன்று. 

யார் இருக்கிறர்கள், யார் சாய்ந்தார்கள் என்று தெரியாதபடி அன்று மாலை கோரம் சுழன்று சுழன்று ஆடியது. 

புருஷர்கள் மட்டுமே அழிந்தனரா என்றால் அப்படி இல்லை. ஸ்திரீகளும் ஈவு இரக்கம் இல்லாமல் வெட்டப்பட்டனர். பெருமாளுக்குக் கைங்கர்யம் ஒன்றையே நினைவில் கொண்டுள்ள வைஷ்ணவ ஸ்திரீகள் மட்டும் தான் இந்தக் கோரத்திற்கு ஆளாகினரா என்றால் அதுவும் இல்லை. ஸ்திரீ லக்ஷணத்துடன் யார் இருந்தாலும் அவர்களுக்கு ஒரே கதிதான். பெருமாளுக்காகவே தங்கள் வாழ்நாளைக் கொடுத்துள்ள, தாஸ்ய பாவத்தில் லயித்து, பெருமாளுக்கு உகந்த கார்யங்களுக்காகவே தங்களை ஒப்புவித்த தாஸ்ய கன்னிகைகள் பாடு ரொம்பவுமே மோசமாக இருந்தது. லோக மாதாவான தாயருக்கு முன்னால் அந்தத் தாய் ஸ்தானத்தில் இருந்த தாஸ்ய கன்யாக்களும் துருஷ்கனின் அகோர தாண்டவத்திற்குப் பலியாயினர். 

மடப்பள்ளியில் இருந்து வெளியில் வந்த பரிசாரகர்கள் தங்கள் கண்களைத் துடைத்துக் கொண்டு ‘என்ன நடக்கிறது? என்ன கூச்சல்?’ என்று தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே வெட்டிச் சாய்க்கப்பட்டனர்.  தினமும் பூ கைங்கர்யம் பண்ணும் ஸ்வாமி கூடை நிறைய மல்லிகைப் பூ கொண்டு வந்தார். நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து நிதானிப்பதற்குள் வெள்ளைவெளேரென்ற பூக்களால் நிரம்பிய பூக்கூடை செக்கச்செவேலென்று நிறம் மாறிக் கவிழ்ந்து கொட்டியது. ரத்த நிறத்துடன் சிதறிய மல்லிகை மொட்டுகள் ந்ருஸிம்ஹனின் கோபம் காரணமாக ஹிரண்யகசிபுவின் உடலில் இருந்து விழுந்து தெளித்த ரத்தத் துளிகள் போல் தென்பட்டன. 

ரங்கநாதன் மீதான பக்திப் பெருவெள்ளம் ஓடிக்கொண்டிருந்த கொவில் பிராகாரங்களுக்குள், அனைத்துத் தரப்பையும் சார்ந்த அடியார்களின்  ரத்தம் ஒன்றாகக் கலந்து ஆறாக ஓடியது.  உடையவர் கண்ட சமத்துவம் ரத்த சமத்துவமாக ஓடியது.

அந்த நேரத்தில் சுதர்ஸன சூரி கழியை ஊன்றிக்கொண்டு வந்தார்.  

நான் வேங்கடநாதன்.. துவக்கம்

இரண்டு மாதங்களுக்கு முன்னர், விடியற்காலை.

‘இன்னிக்கி கார்த்தால ஒரு கனவு வந்தது சார். அத உங்ககிட்ட உடனே சொல்லணும்னு விடியற்கார்த்தாலயே கூப்டுட்டேன்’ என்றார் நெடுநாளைய நண்பர், சிங்கப்பூரில் இருந்து. அங்கு இருந்த சமயத்தில் இலக்கியப் பட்டறைகளில் இணைந்து செயலாற்றியிருந்தோம்.

‘அவ்ளோ அவசரமானதா?’ என்றேன் தூக்கக் கலக்கத்தில்.

‘ஆமாம். உங்களப் பத்தினது’ என்றார் பீடிகையுடன். தூக்கம் கலைந்தது.

‘கனவுல நான் ஶ்ரீரங்கத்துல கோவில் வாசல்ல ஒரு வீட்டு திண்ணைல உக்காந்திருக்கேன்.  அப்போ ரெண்டு பேர் வறாங்க. ஒருத்தர் வைஷ்ணவ லட்சணங்களோட பஞ்சகச்சம் கட்டிண்டிருக்கார். மத்தவர் சந்நியாசி’ நிறுத்தினார்.

சுவாரஸ்யம் அதிகரித்தது.

‘பஞ்சகச்ச வைஷ்ணவர் எங்கிட்ட கேக்கறார். ஆமாம், நீங்கள்ளாம் தேசிகன் தேசிகன்னு சொல்றீங்களே, அவர் ஆசார்யனா என்ன? ராமானுஜருக்கு அப்புறம் மணவாள மாமுநிகள் தானே உண்டு. இவர் எங்க புதுசா வறார்?’ ப.வைஷ்ணவர்.

‘இல்ல. அவரும் ஆசாரியன் தான். மாமுநிகளுமே கூட ஆசாரியன் தான்’ நண்பர்.

‘அப்ப அவரோட காலம் என்ன? ராமானுஜருக்கும் அவருக்கும் தேசிகனுக்கும் கால வித்யாசம் என்ன? அவரோட சித்தாந்தம் என்ன?’ சரமாரியாகக் கேட்கிறார் ப.வைஷ்ணவர்.

‘எனக்கு கால விஷயமெல்லாம் தெரியல்ல. ரெண்டு பேரும் ஆசாரியன்’ நண்பர்.

அப்போது சந்நியாசி குறுக்கிடுகிறார்.

வேதாந்த தேசிகன்
வேதாந்த தேசிகன்

‘இந்தக் கேள்விய ராமானுஜரப் பத்தி எழுதினானே, இங்க இருந்தானே, அவன் கிட்ட கேக்கச் சொல்லுடா. அவன எழுதச்சொல்லு’ என்கிறார் சந்நியாசி.

‘இது தான் சார் நடந்தது. தூக்கிவாரிப் போட்டு எழுந்துட்டேன். அதான் உடனே ஃபோன் பண்ணினேன்’ நண்பர் உணர்ச்சிப் பிரவாகப் பேசிக்கொண்டிருந்தார். ‘நீங்க அவசியம் தேசிகன் பத்தி எழுதணும்’ ஏதோ ஆணை போலவே பேசினார்.

ஃப்ளாஷ்பாக்.

ஈராண்டுகளுக்கு முன்னர் தேசிகனின் 750வது திருநக்‌ஷத்ரம் நடப்பதற்குச் சில மாதங்கள் முன்னர் இந்தியாவில் இருந்து ஒரு  மாணவ-வாசகி அழைத்து தேசிகனைப் பற்றி எழுதவேண்டும் என்று கேட்டிருந்தார். அதற்கான உழைப்பை அளிக்க அப்போது என்னால் முடியவில்லை என்று தெரிவித்திருந்தேன்.

இப்போது மீண்டும் தேசிகனைப் பற்றி எழுத வேண்டும் என்கிற ஆணை.

நண்பரிடம் கேட்டேன் ‘ அந்த சந்நியாசி முகத்தப் பார்த்தீங்களா? திருமண், த்ரிதண்டம் எதாவது இருந்ததா?’

‘வைஷ்ணவ சன்னியாசி தான். ஆனா திருமுகத்தப் பார்க்கல. கைல தண்டம் இருந்தது’ என்றார்.

‘காஷாயம் முட்டிக்கு மேல இருந்ததா? இல்ல கீழ எறங்கி இருந்ததா?’ என்றேன்.

‘அது தெரியல்ல. மனசுல பதியல்ல. ஆனால் அவர் சந்நியாசி’ என்றார் நண்பர்.

தேசிகன் மீண்டும் ஆணையிடுகிறார் என்று நினைத்துக் கொண்டு, எழுத ஆணையை நிறைவேற்ற முடிவெடுத்தேன்.

ஆனால், அந்த சந்நியாசி யாரென்று மனதைக் குடைந்துகொண்டே இருந்தது.

முன்னர் ஒருமுறை என் கனவில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வந்து அவரது ஏக தண்டம் என்னிடம் வருவது போல் தோன்ற, இதை அவரிடவே காலஞ்சென்ற என் தாயார் கேட்க, ‘சந்நியாசிகள்  ந்ருஸிம்ஹ ஸ்வரூபம். சீக்கிரம் நல்லது நடக்கும்’ என்று அருளினார். சில நாட்களில் திருமணம் நிச்சயமானது.

சரி ஏதோ ந்ருஸிம்ஹ ஆக்ஞை என்று தேசிகன் பற்றி வாசிக்கத் துவங்கினேன்.

சில நாட்கள் கழித்து ஆமருவிப் பக்கங்கள் வாசகர் ஒருவர் தளத்தில் இருந்து தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்டு பேசினார்.

‘ரொம்ப நாளா பேசணும்னு எண்ணம். இபப்தான் முடிஞ்சுது. நீங்க அஹோபில மடம் 44-வது பட்டம் ஜீயரப் பத்தி எழுதணும்.’ என்று சொல்லி, அந்த ஆசாரியனுடனான பல நிகழ்வுகளைச் சொன்னார்.

ஒருவேளை கனவில் வந்தது 44ம் பட்டத்து ஜீயரோ? என்ற நினைவில் ஆழ்ந்தேன்.

அப்போது மனதில் பளீரென்று தோன்றியது:

44ம் பட்டம் ஜீயரின் சந்நியாசத் திருநாமம் ‘வேதாந்த தேசிக யதீந்திர மஹாதேசிகன்’. எனக்கு சமாஸ்ரயணம் அவரிடம். ஆக, இது ஆசாரிய ஆக்ஞை என்பது புரிந்தது.

வரும் வாரங்களில் ‘நான் வேங்கடநாதன்..’ தொடரில் சந்திப்போம் என்கிற சுப செய்தியை ஆண்டாள் அவதரித்த ஆடிப் பூர நன்நாளில் அறிவிக்கிறேன்.

‘வாழி தூப்புல் நிகமாந்த ஆசிரியன்’

 

 

Sri Vaishnava Brahmins of Tamil Nadu – review

Sri Vaishnava Brahmins of Tamil Nadu
Sri Vaishnava Brahmins of Tamil Nadu

வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் இராஜகோபாலன் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை நூலாக வடித்துள்ளார். நூலின் பெயர் ‘Sri Vaishnava Brahmins of Tamil Nadu’ (தமிழக ஶ்ரீவைஷ்ணவ அந்தணர்கள்). முனைவர் பட்டம் 1993லும்  நூல் வடிவம் 2014லிலும்  நிகழ்ந்துள்ளன.

தமிழகத்தில் வைஷ்ணவத்தின் துவக்கம் எப்போது நடந்தது, அதற்கான புறச்சான்றுகள் யாவை, பின்னர் நடந்த பிற மதங்களின் தாக்கங்கள், ஆதி சங்கரரின் அத்வைத சித்தாந்தம், சைவ நெறி, ஆழ்வார்களின் காலங்கள்ள், ஆழ்வார்கள் காட்டிய வைஷ்ணவ நெறி, பின்னர் தோன்றிய ஶ்ரீவைஷ்ணவம், அதற்குக் காரணமான ஶ்ரீமத் இராமானுஜர் என்னும் உடையவர், அவர் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள், பின்னர் தோன்றிய ஆச்சார்யர்களான வேதாந்த தேசிகர் மற்றும் மணவாள மாமுநிகள், இந்த இருவரும் செய்த செயற்கரிய செயல்கள், இவர்களுக்குப்பின்னர் தோன்றிய கலை வேறுபாடுகள், அதனால் தொடுக்கப்பட்ட வழக்குகள், ஶ்ரீவைஷ்ணவ மடங்கள், அவை ஆற்றியுள்ள அரும்பணிகள், ஶ்ரீவைஷ்ணவ சமுதாயத்தில் தோன்றிய அரசியல் வல்லுனர்கள், எழுத்தாளர்கள், நீதிபதிகள், கலைஞர்கள், ஶ்ரீவைஷ்ணவர்களின் தற்போதைய நிலை, இதற்குக் காரணமான திராவிட இயக்கம் மற்றும் அதன் தலைவர்கள், இடஒதுக்கீடும் அதன் தாக்கங்களும், இடஒதுக்கீட்டை ஶ்ரீவைஷ்ணவ அந்தணர்கள் சமாளித்த விதம், தற்காலத்தில் ஶ்ரீவைஷ்ணவர்கள் குடியேறியுள்ள இடங்கள், ஆற்றும் பணிகள் என்று ஒரு களஞ்சியத்தை நூல் வடிவில் அளித்துள்ளார் ஆசிரியர்.

வரலாற்றை மட்டும் காட்டாமல், ஒவ்வொரு நிகழ்விற்குமான காரணிகள், அக்காரணிகளைச் சுட்டும் பிற ஆசிரியர்களின் நூல்கள் என்று பெரும் உழைப்பைத் தந்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு பக்கத்திற்கும் மேற்கோள்கள், அவற்றுக்கான சுட்டிகள், ஆதாரங்கள் என்று சுமார் பத்தாண்டு உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

நூலின் சிறப்பம்சம்: இந்த ஆராய்ச்சிக்குப் பயன்பட்ட பிற நூல்கள், ஆராய்ச்சி அறிக்கைகள் முதலியன. இந்தத் தொகுப்பில் 136 நூல்கள் மற்றும் அறிக்கைகள் சுட்டப்பட்டுள்ளன. இவை தவிரவும் பல பத்திரிக்கைச் செய்திகளும் காட்டப்பட்டுள்ளன.

நூல் வேண்டுவோர் ஆசிரியரைப் பின்வரும் அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்: +91-94440-14584.

பி.கு.: ஆசிரியர் 83 வயது முதியவர். எனவே இந்திய மாலை நேரங்களில் அழைக்கவும்.

சிறையில் இருக்கும் கவிராஜசிம்ஹம்

கவி ராஜா உஞ்சவ்ருத்தி செய்தார், தானே கிணறு வெட்டினார், பரம ஏழையாய் வாழ்ந்தார்.. இன்று
ஸ்வாமி வேதாந்த தேசிகன் திருநக்ஷத்ரம்.

கவிகளில் சிங்கம் போன்றவர், எந்தச் செயலையும் செய்ய வல்லவரான ஒருவர் தினமும் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். விஜய நகரப் பேரரசின் ஆஸ்தான கவியாக வருமாறு அழைக்கப்பட்டார். போக மறுத்துக் காஞ்சியில் ‘வரதன் என் சொத்து, இதைவிடப் பெரிய சொத்து வேண்டுமா?’ என்று கேட்டு, அரச பதவியைத் தள்ளியவர் இன்று சிறையில் இருந்தவாறே இன்று தனது 750வது  பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். (புரட்டாசி திருவோணம்)

ஆம். சிறையில் தான். அவர் ஏன் சிறை சென்றார் என்று பார்க்கும் முன் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

  • அவதாரம்: பொ.யு. 1268
  • திருநாடு: பொ.யு. 1369
  • பிறந்த ஊர்: தூப்புல் ( காஞ்சிபுரம்)
  • சென்ற ஊர்கள்: காஞ்சிபுரம் , ஸ்ரீரங்கம், மேல்கோட்டை, திருவஹீந்திரபுரம்
  • தெரிந்த மொழிகள்: தமிழ், சம்ஸ்க்ருதம், ப்ராக்ருதம், மணிப்பிரவாளம்
  • எழுதிய நூல்கள் : சுமார் 125.
  • பட்டங்கள்: ஸர்வ தந்தர ஸ்வதந்திரர், கவிதார்க்கிக சிம்ஹம், கவிதார்க்கிக கேஸரி
  • சாதனைகள்:
    • மாலிக் கபூரிடமிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரைச் சுவர் எழுப்பிக் காத்தது
    • பன்னீராயிரம் பேர் மடிந்து கிடந்த ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் பிணம்போல் தானும் கிடந்து சுதர்சன சூரியின் ‘ஸ்ருதப் பிரகாசிகா’ நூலை அன்னியப் படைகளிடமிருந்து காத்தது
    • சுதர்சன சூரியின் இரு பிள்ளைகளையும் காத்து ரட்சித்தது
    • 125 நூல்கள் எழுதியது
    • ஸ்ரீரங்கத்தில் ஆழ்வார்களுக்கு ஏற்றம் அளித்தது
    • உஞ்சவ்ருத்தி செய்து வாழ்ந்து வந்தது
    • பரகால மடம் ஸ்தாபித்தது

இன்று பலரும் தங்கள் பெயருக்கு முன் ‘ஸ்ரீ.உ.வே’ என்று போட்டுக்கொள்வதைப் பார்க்கிறோம். ‘உபய வேதாந்த’ என்பது அதன் விரிவாக்கம்.  தமிழ் வேதாந்தம், வடமொழி வேதாந்தம் இரண்டிலும் புலமை பெற்றவர்கள் என்பது பொருள். ஆனால், தேசிகன் நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். நான்கிலும் நூல்கள் இயற்றியுள்ளார். வட மொழியில் கரை கண்டவரான இவர் ‘செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே’ என்று தனக்கு வடமொழியில் இயற்றப்பட்டுள்ள வேத விளக்க நூல்களில் ஐயம் இருப்பின் அவற்றை நீக்க ஆழ்வார்களின் பாசுரங்களில் பொருள் தேடிப் புரிந்துகொள்வேன் என்று கூறுகிறார்.  நான்கு மொழிகளில் கரைகண்டவர் சொல்வது இது. யாரும் கவிப்பேரரசு என்று கோலோச்சும் நாளில் இப்படிப்பட்ட பெரியவர்களையும் எண்ணிப் பார்க்கவேண்டியுள்ளது.

விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆஸ்தான குருவான அத்வைதி, காஞ்சியில் உஞ்சவ்ருத்தி செய்து ஸம்பிரதாயச் சேவை செய்துவந்த தேசிகனை அரசவைக்கு அழைத்துத் துதனை விட்டு ஓலை அனுப்ப, அதற்குத் தேசிகன், ‘என்னிடமா சொத்தில்லை? தூதனே, உள்ளே சென்று பார். வரதராஜன் என்னும் பெரும் சொத்து என்னிடம் உள்ளது,’ என்று கவிதை எழுதிக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

தனது உஞ்சவிருத்தியின் போது அரிசியில் கலந்திருந்த தங்க நாணயங்களை ‘உணவில் புழுக்கள் உள்ளன’ என்று சொல்லி தர்ப்பைப் புல்லால் தள்ளிவிட்டுள்ளார்.

வேதாந்த தேசிகன்
வேதாந்த தேசிகன்

தேசிகனை ஏளனம் செய்ய விரும்பிய திருவரங்கப் பண்டிதர்கள் , திருமணத்திற்கு உதவி கேட்ட ஏழை பிரும்மச்சாரியை அவரிடம் அனுப்பி வைத்தனர். தேசிகன் திருமகளை நினைத்து ‘ஸ்ரீஸ்துதி’ பாட, தங்க மழை பொழிந்துள்ளது.

‘நீர் ஸர்வ தந்திர ஸ்வதந்திரர்’ என்பது உண்மையானால், கிணறு வெட்டுவீர்களா?’ என்று கேட்டவர்களுக்கு எதிரில் தானே கிணறு வெட்டியுள்ளார் ( திருவஹீந்திரபுரத்தில் இன்றும் காணலாம்).

மந்திரசித்தி பெற்றவரான தேசிகன் அற்புதங்கள் புரிந்ததாகவும் கர்ணபரம்பரைச் செய்திகள் உண்டு.

திருவரங்கனின் பாதம் பற்றி மட்டுமே ஆயிரம் பாடல்களை ஓரிரவில் எழுதி சாதனை நிகழ்த்தினார் தேசிகன். ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்ற பெயருடன் இன்றும் வைஷ்ணவர்களின் நித்ய அனுஸந்தானத்தில் ஒன்றாக உள்ளது இந்த நூல்.

மாலிக் கபூர் படையெடுப்பு நடந்ததா என்று பகுத்தறிவாளர்கள் கேட்பார்கள் என்பதாலோ என்னவோ ‘அபீதிஸ்தவம்’ என்னும் பாடலை எழுதியுள்ளார். அதில் ‘Contemporary History’ என்னும் விதமாகத் துருஷ்கர்களால் ஏற்படும் பயம் நீங்க வேண்டும் என்று மக்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக எழுதியுள்ளார்.

துருஷ்கர்கள் பற்றிய செய்தி வரும் ஸ்லோகம் இதோ:

கலிப்ரணிதிலக்ஷணைகலிதஶாக்யலோகாயதை:
துருஷ்கயவநாதிபிஜகதி ஜ்ரும்பமாணம் பயம் |
ப்ரக்ருஷ்டநிஜஶக்திபிப்ரஸபமாயுதைபஞ்சபி:
க்ஷிதித்ரிதஶரக்ஷகை க்ஷபய ரங்கநாத க்ஷணாத் ||

அந்த ஸ்லோகத்தினால் விஜய நகர தளபதியும் செஞ்சிக் கோட்டையின் தலைவனுமாகிய கோப்பணார்யன் என்னும் ஆஸ்திக அரசன் திருவரங்கத்தை மீட்டு நம்பெருமாளை மீண்டும் கொணர்ந்தான். இதற்கு நன்றி சொல்லும் விதமாக விஷ்வக்சேனர் சன்னிதிக்கு முன், அரங்கன் சன்னிதியின் கீழைச்சுவரில் கோப்பணார்யனைப் பற்றி இரண்டு ஸ்லோகங்கள் எழுதியுள்ளார் ஸ்வாமி தேசிகன். அவை :

स्वस्ति श्रीः बन्धुप्रिये शकाव्दे (शकाव्द १२९३)
i. आनीयानीलश्रृङ्गद्युतिरचितजगद्रञ्जनादब्जनाद्ने .
चेञ्चयामाराध्य कञ्चित् समयमथ निहत्योद्धनुप्कान् तुलुष्कान् ।
लक्ष्मीक्ष्माभ्यमुभाभ्यां सह निजनगरे स्थापयन् रङ्गनाथं

सम्यग्वर्या सपर्या पुनरकृत यशोद

र्पणो गोप्पणार्यः ||
विश्वेशं रङ्गराजं वृषभगिरितटात् गोप्पणक्षोणिदेवो
नीत्वा स्वां राजधानी निजबलनिहतोत्सिक्तौलुष्कसैन्यः ।
कृत्वा श्रीरङ्गभूमिं कृतयुगसहितां तं च लक्ष्मीमहीभ्यां
संस्थाप्यास्यां सरोजोद्भव इव कुरुते साधुचर्या सपर्याम् ||

‘அபீதிஸ்தவம்’ நூலின் தமிழாக்கத்திற்குப் புதுக்கோட்டை ஸ்ரீ. ஸ்ரீநிவாசராகவன் அவர்கள் வழங்கிய முன்னுரையில் இந்தச் செய்தி வருகிறது என்று ரகுவீர தயாள் என்னும் ஸ்ரீவைஷ்ணவ அறிஞர் எழுதுகிறார்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழவேண்டிய வழிகள் என்னவென்று விளக்கும் விதமாகவும் பல நூல்கள் இயற்றியுள்ள தேசிகன் இந்த நூல்களையும் எழுதியுள்ளார்.

தான் மிகவும் விரும்பிய திவரங்கனுக்கென்று பல ஆராதனங்களை ஏற்படுத்திய ஸ்வாமி தேசிகன் தற்போது பல திவ்ய தேசங்களிலும் சிலா ரூபமாக எழுந்தருளியிருந்தாலும், தான் மிகவும் உகந்த திருவரங்கத்தில் தனக்கென ஏற்பட்டுள்ள சன்னிதியில் சிறையில் இருக்கிறார். அவரால் தனது சன்னிதியை விட்டு வெளியே வர இயலாது. வரக்கூடாது என்று வைஷ்ணவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் கூட்டத்தின் ஒரு பிரிவு இந்திய நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளது.

காரணம் : தேசிகன் வடகலைத் திருமண் அணிந்துள்ளாராம். திருவரங்கம் தென்கலைக் கோவிலாம். ஆகையால் அவர் தென்கலைத் திருமண் அணியும் வரை தனது சன்னிதிக்குள்ளேயே தான் இருக்க வேண்டும், உற்சவக் காலங்களில் கூட வெளியே வரக் கூடாது என்பது மிக உயர்ந்தவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் ஸ்ரீவைஷ்ணவர்கள் கருத்து.

அற நிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் பெருமாளுக்கும் ஆச்சார்யர்களுக்கும் அமுது கண்டருளப்பண்ணக் கூட வழி இல்லாத நிலை பல இடங்களில் உள்ளது. அதைத் தட்டிக் கேட்கத் திராணியில்லை. ஆனால் வேதாந்த தேசிகர் திருமண் மாற்ற வேண்டும் என்று முன்னேறிய ஒரு கூட்டம் 1911ல் இருந்து ‘போராடி’ வருகிறது. அதற்கு முன்னர் இருந்த தேசிகர் விக்ரஹத்தில் தென்கலைத் திருமண் இருந்தது என்று வாதிடுகிறார்கள். நம் காலத்திற்கு மிகவும் அவசியமான பிரச்னை இல்லையா, அதனால் வாதிடுகிறார்கள்.

தேசிகர் கோவில் பிராகாரங்களில் எழுந்தருளக்கூடாது என்று 1911ல் நடந்த வழக்கு விகாரங்கள் இதோ.

1987ல் திருவரங்கக் கோவிலில் ஆசியாவிலேயே பெரிய கோபுரம் கட்டினார் தேசிகர் வழியைப் பின்பற்றும் அஹோபில மடத்தின் ஜீயர். அவர் கேட்டுக் கொண்டுமே தேசிகருக்கு மரியாதை அளிக்கத் தவறியது துவேஷக் கூட்டம். திருமண்ணை மாற்ற வேண்டும் என்று மீண்டும் வாதிட்டனர்.

இது தொடர்பான வழக்கு விபரங்கள் இங்கே.

அவர்கள் வாதிடட்டும். வாதிட்டு முடியும் வரை, இன்று அவர்கள் வாதிடும் கோவில், திருவரங்கன் முதலானோர் இன்றும் இருக்கக் காரணமான வேதாந்த தேசிகன், தான் காத்த கோவிலில், தன் சன்னிதியிலேயே சிறை இருக்கட்டும். அங்கேயே தனது 750வது பிறந்த நாளைக் கொண்டாடட்டும்.

நானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ – ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்

பி.கு: இந்தப் பதிவு, கலை வேறுபாடுகள் இன்றி ஸ்ரீவைஷ்ணவ தத்துவங்களைப் புரிந்துகொண்டு பிரபத்தி மார்க்கம் மட்டுமே வேண்டும் என்று பிரியப்படும் உண்மையான ஸ்ரீவைஷ்ணவ அன்பர்களுக்கானது. நடு நிலை வகிக்கிறேன் என்று பேசுபவர்கள் விலகி நில்லுங்கள். மணவாள மாமுனிகளை இழிவுபடுத்தும் வடகலையாரும் அவ்வாறே.

இணைப்பில் இருக்க : https://facebook.com/aapages

பாதுகா ஸஹஸ்ரம் – வெண்பா வடிவம்

பாதுகா ஸஹஸ்ரம் – வெண்பா வடிவம். விளம்பி ஆண்டில் நல்லதை விளம்புவோமே..

வெண்பா எழுதுவது எளிதல்ல. வேதாந்த தேசிகனின் ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்னும் 1008 வடமொழிச் சுலோகங்களையும் வெண்பா வடிவில் எழுதியுள்ளார் ஒரு பெரியவர். ஆத்தூர் வீரவல்லி ஸந்தான ராமன் என்பது அந்த அடியாரின் பெயர்.
 
ஸந்தான ராமன் மன்னார்குடி, தேரழுந்தூர், பம்பாய் என்று சென்று படித்துவிட்டு மதுரையிலும், சென்னையிலும் கணக்காளராகப் பணியாற்றியுள்ளார். நெய்வேலியில் இருந்தவாறு 1008 வெண்பாக்களை இயறியுள்ளார். இவ்வளவுக்கும் அவருக்குக் கண்பார்வை -15 என்கிற அளவில் இருந்துள்ளது.
 
சுத்தானந்த பாரதியார் இம்மொழிபெயர்ப்பைச் செய்யப் பணித்துள்ளார் என்று எழுதுகிறார் இவ்வடியார். 1969ல் இந்த நூல் வெளிவந்துள்ளது. ‘எனக்குத் தமிழிலும் புலமை இல்லை, ஸம்ஸ்க்ருதமும் போதிய பாண்டித்யம் இல்லை, இறையருளால் எழுதினேன் என்று  நூலின் முன்னுரையில் தெரிவிக்கும் இவ்வடியார் 1989ல் நெய்வேலியில் இறைவனடி சேர்ந்தார்.
உதாரணத்திற்கு அவர் எழுதிய ஒரு வெண்பா:
வேதமும் வேதத் தமிழ்மறையும் கல்லாதார்
ஏதுமிலா தேத்தி யிணையடியை – போதுய்ய
மாறன் சடாரியாய் மாறிப் பிறந்தானே
கூறவோ சொல்லீர் குணம்
‘ஏ பாதுகையே,  மக்கள் வேதத்தைக் கற்றிருக்க வேண்டும். அதனுடன், வேதத்தின் தமிழாக்கமான திருவாய்மொழியையும் (நம்மாழ்வார் பிரபந்தங்கள்) கற்றிருக்க வேண்டும். அதனால் தான் நீ நம்மாழ்வார் வடிவெடுத்து வந்து திருவாய்மொழி இயற்றினாய். இருப்பினும், இவற்றைக் கல்லாதவரும் உய்ய வேண்டுமே என்பதற்காக, நீ சடாரி வடிவாய் வந்து அனைவருக்கும் அருள்கிறாயே’

ஸ்வாமி தேசிகன் ஓரிரவில் பாடிய ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்னும் நூல் ரங்கநாதரின் பாதுகையைப் பற்றியது அன்று, நம்மாழ்வாரைக் குறித்துச் செய்த போற்றி நூல் என்பதாக இந்த வெண்பா அமைகிறது.

ஒவ்வொரு வெண்பாவும் ஆழ்ந்த பொருளுடையதாக அமைந்துள்ளது. தமிழின் சுவை, பக்தி நெறியின் பெருமை, நம்மாழ்வாரின் பெருமை, திருமாலின் கருணை, சரணாகதித் தத்துவம் என்று பொருள் வெள்ளம் கரை புரண்டோடும் இந்த நூல் கீழ்க்கண்ட விலாஸத்தில் உள்ளது எனத் தெரிகிறது. அன்பர்கள் பயனடையுங்கள்.

ஶ்ரீ பகவன் நாம பப்ளிகேஷன்ஸ்
ராம மந்திரம், 2 வினாயகம் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை.
தொ.பே: 4893736

வடகலைக் குரங்கும் தென்கலைப் பூனையும்

ஜெயமோகனின் “ஓலைசிலுவை”யில் வரும் வரிகள், மத மாற்றம் மற்றும் ஊழியம் தொடர்பான ஒரு பக்கத்தில் வரும்
செய்தி தற்போதைய நிலைக்கும் பொருந்துகிறது. என்ன – ஒரு சிறு வேறுபாட்டுடன்.

“மிகப் பெரும்பாலான சாமானிய மக்கள் எதையும் கவனித்து உள்வாங்கிக்கொள்ளும் பழக்கத்தையே இழந்து
விட்டிருந்தார்கள். … அவர்களின் கண்கள் முற்றிலும் காலியாக இருக்கும். அந்தக் கண்களுக்கு அப்பால் ஒரு ஆன்மா
இருப்பதே தெரியாது. அவர்கள் அறிந்தவை முழுக்க இளமையில் அவர்களுக்குச் சென்றவை மட்டுமே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் பசித்துப் பசித்து உணவு உணவென்று அலைந்து வேறு எண்ணங்களே இல்லாமல் ஆகி விட்ட
மனங்கள். அவற்றுக்கு சொற்களை அர்த்தமாக்கிக்கொள்ளவே பயிற்சி இல்லை”. – “ஓலைச் சிலுவை”, ஜெயமோகன்

மேல் சொன்ன வரிகள் தற்போதும் அப்படியே உள்ளன. சிந்திக்க மறந்த ஒரு சமூகம் தற்போது சோற்றின் பின்
செல்லாமல் சந்தைக் கலாச்சாரம் என்னும் சேற்றில் விழுந்து, தன்னிலை மறந்து, தனது ‘தேவை – தேவை இல்லை’
என்பது அறியாமல் வாங்கிக் குவிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளது. சமுதாய சிந்தனை என்ற ஒன்று இருப்பதே
அறியாமல் நிழல் நாயகரகளை நிஜ நாயகர்களாய் வரித்து “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்ற வகையில்
வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். அல்லது வாழ்க்கையால் நகர்த்தப்படுகிறார்கள்.

பெரும்பான்மை மக்களுக்கு வாசிக்கும் வழக்கம் இல்லாததும், அந்த வழக்கத்தை ஏற்படுத்தத் தற்போதைய கல்வி
முறையும் அரசியல் அமைப்பும் தவறியதாலும் நம் மக்களிடையே ஒரு தீனிப்பண்டார மனோபாவம் ஏற்பட்டுள்ளது என்று
எண்ணத் தோன்றுகிறது. தீனி என்பது உணவை மட்டுமே குறிக்கவில்லை இங்கே.

இந்த குறை கூறலில் தாங்கள் முன்னேறிய வகுப்பினர் என்று மார் தட்டிக்கொள்ளும் வைஷ்ணவ அந்தணர்களையும்
குறிப்பிடுகிறேன். சம்பிரதாயங்கள் பற்றிய ஒரு அடிப்படை புரிதல் இல்லை. அதைக் கற்க வேண்டும் என்னும் ஒரு
உந்துதல் இல்லை. வெறுமனே திருமண் ( நாமம் ) அடிப்படையில் சண்டை இடுவது தான் முன்னேறிய வகுப்பின்
லட்சணமா ? ராமானுசர் என்ன சொன்னார் என்றே முக்கால்வாசிப் பேருக்குத் தெரியாது. தெரிந்தது எல்லாம் “ராமானுச
தயா பாத்தரம்” சொல்லக்கூடாது என்பதும் “ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் ” சொல்ல வேண்டும் என்பதும் தான். “வாழித்
திருநாமம்” உரக்கச் சொல்வதால் மட்டுமே ஒருவன் ராமானுசன் வழியில் வைணவனாகிவிடுவானா ?

இதற்கு 1795-ல் முதல் வழக்கு போடப்பட்டுள்ளது. இன்றுவரை தீரவில்லை இந்த சண்டை. என்ன ஒரு நேர விரையம்?

ஜே.மாக்மில்லன் என்ற ஆங்கில நீதிபதி பல ஆண்டுகள் வைஷ்ணவம் கற்று சம்பிரதாயத்தில் அடிப்படையில் ஒரு
வேற்றுமையும் இல்லை என்று மனம் நொந்து 1946-ல் ஒரு தீர்ப்பு வழங்கினார். இப்படித் தொடங்குகிறது இந்தத் தீர்ப்பு:

Bombay High Court
Thiruvenkata Ramanuja vs Venkatacharlu on 13 May, 1946
Equivalent citations: (1947) 49 BOMLR 405
Author: Macmillan
Bench: Macmillan, D Parcq, Beaumont
JUDGMENT
Macmillan, J.
1. Their Lordships address themselves in this appeal to the consideration of a
controversy which in one form or another has agitated the Hindu religious community
in the Presidency of Madras for upwards of two centuries. The main question between
the parties relates to the right to regulate the conduct of the services in an
important group of temples ..

ரொம்பவும் சிரமப்பட்டு இந்த ஆங்கிலேயர் வழங்கிய தீர்ப்பின் சாரம் இது தான் – தென்கலையார் அதிகம் உள்ள இடத்தில் ( கோவிலில் ) வடகலையார் ராமானுஜ தயாபாத்ரம் சொல்லாக் கூடாது. அவர்கள் வீடுகளில் சொல்லலாம். ஆங்கில நீதி நிர்வாகத்தையே ஸ்தம்பிக்க வைத்த பெருமை ஐயங்கார்களையே சாரும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வைணவம் தோன்றியது. இராமானுசரே 1017-ம் ஆண்டில் சமண, அத்வைத, பௌத்த
வாதங்களை வென்று வைணவத்துக்கு ஒரு வழி காட்டினார். வகைப் படுத்தினார். “கோவில் ஒழுகு” என்று திருமால் கோவில்களில் ண்டடிபெற வேண்டிய உற்சவங்கள் பற்றி எழுதிவைத்துள்ளார்.  வைணவம் அதற்கு முன்பும் இருந்துள்ளது. திருமால் வழிபாடு ஜாவா, சுமத்ரா தீவுகளிலும் பாலி முதலானா இந்தோனேஷிய மாநிலத்திலும்
அப்போதே இருந்துள்ளது.

இப்படி இருக்க ராமானுசருக்குப் பின் இருநூறு மற்றும் முந்நூறு ஆண்டுகள் கழித்து முறையே தோன்றிய
ஆச்சாரியர்களான வேதாந்த தேசிகன் மற்றும் மணவாள மாமுனிகள் பெயரில் இவ்வளவு வேறுபாடுகளா ? இந்தக்
காலகட்டத்தில் இங்கிலாந்தில் ஒரு நாகரீகமான அரசாங்கங்களே இல்லை. அப்படிப்பட்ட ஒரு அரசாட்சியின் நீதிபதி
உங்களுக்குத் தீர்ப்பு வழங்குவது வெட்கக்கேடு இல்லையா? பகுத்தறிவைப் பணயம் வைத்துவிட்டீர்களா?

ராமானுசர் காலம் கி.பி. 1017 – 1037.
வேதாந்த தேசிகர் காலம் கி.பி. 1268 – 1369
மணவாள மாமுனி காலம் கி.பி. 1370 -1443

இவர்களில் தேசிகர் வடகலையாரின் தலைவராகவும் மணவாளர் தென்கலையார் தலைவராகவும் கொள்ளப்படுகின்றனர்.
ஆக தேசிகர் காலத்தில் தென்கலை சம்பிரதாயம் இல்லை. ராமானுசர் காலத்தில் இப்படி வேறுபாடுகளே இல்லை.
இதற்கெல்லாம் ஐநூறு ஆண்டுகட்கு முன்பே ஆழ்வார்களின் காலம். ஆக அவர்கள் காலத்திலும் இந்த வேறுபாடுகள்
இல்லை. ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் நாராயணன் தவிர வேறு ஒன்றும் இல்லை. ( ஆழ்வார்களில் பலர்
அந்தணர் அல்லர். )

ஆழ்வார்களாலும் ராமானுசராலும் அங்கீகரிக்கப்படாத இந்த கலைப் பிரிவுகள் அர்த்தம் உள்ளவைதானா ? இவர்கள்
சொல்லாதவற்றைப் பின்பற்றுவதால் இவர்கள் வழியில் இருந்து நீங்கள் விலக வில்லையா ?

இந்தக் காலகட்டத்தில் அறுநூறு ஆண்டுகள் முன்பு அகோபில மடம் என்னும் வடகலை மடம் உருவானது. இதன் முதல்
ஜீயர் ஆதிவண் சடகோபர், மணவாள மாமுநிகளுக்கு சந்நியாசம் வழங்கியுள்ளார். ஆக மணவாளர் காலத்திலும் இந்த
வேறுபாடுகள், வெறுப்புகள் இல்லை.

தென்கலை வடைகலை இருவரிடமும் பேசிப்பார்த்தேன். “அறிஞர்கள்” என்ற போர்வையில் வலம் வரும் சிலரிடமும்
வாய் விட்டுப் பார்த்தேன். யாரும் சம்பிரதாயங்கள் அடிப்படையில் தர்க்கம் செய்ய முன்வரவில்லை. ஏன் என்றால்
இவற்றை யாரும் படிப்பதில்லை.

மணவாள மாமுநிகளுக்கு மரியாதை செய்ய வேண்டுமா தேசிகர் விக்ரஹத்தை உற்சவத்தின் பொது எழுந்தருளப் பண்ண
வேண்டுமா என்பது தான் இப்போது இவர்களுக்குள் இருக்கும் தலையாயத் தலைவலி. இருவருமே மிகப் பெரிய
ஆச்சாரியர்கள் என்பது இரு கலையாரும் தங்கள் மமதையில் மறந்துவிட்ட ஒன்று.

வடகலையார் கோவில்களை தென்கலைக் கோவில்களாக மாற்றுவது எப்படி என்பதிலும், ராமானுசர் பின் வந்த குரு
பரம்பரையினரை எப்படி அவமதிக்கலாம் என்பதிலுமே இவர்கள் நேரமும் சக்தியும் வீணாகிறது.

சரி. சம்பிரதாயம் என்று வந்தாகி விட்டது. அப்படி என்ன தான் வேறுபாடு இவர்களுக்குள்?

பூனைக்கும் குரங்குக்கும் உள்ள வேறுபாடுதான். பூனை தன் குட்டியைத் தானே சுமக்கிறது. அதாவது பூனைக் குட்டி தான்
பாதுகாப்பாக இருக்க ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தாய்ப்பூனை அதைக் கவ்வி எடுத்து ஓரிடத்திலிருந்து மற்றோர்
இடத்திற்குச் செல்கிறது. ஜீவாத்மாக்கள் தாங்கள் உய்ய ஒன்றும் அனுஷ்டானங்கள் செய்ய வேண்டியதில்லை. நாராயணன் காப்பாற்றுவான். காப்பாற்றவேண்டியது அவன் கடமை என்கிறது தென்கலை சம்பிரதாயம். மார்ஜார நியாயம்
என்று இது அறியப்படுகிறது ( மார்ஜாரம் – பூனை ).

குரங்கு அப்படி அல்ல. அதன் குட்டி தாய்க் குரங்கைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது பாதுகாப்பாக
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் செல்ல முடியும். அதாவது அந்தக் குட்டிக் குரங்கு உய்ய அதனிடம் முயற்சி வேண்டும்.
சரணாகதி வேண்டும். அனுஷ்டானங்கள் வேண்டும். எனவே நாராயணன் மோட்சம் தரவேண்டுமென்றால் மனிதன் முயற்சிக்க வேண்டும் என்கிறது வடகலை சம்பிரதாயம். மர்க்கட நியாயம் என்று இதனை அழைப்பர் (மர்க்கடம்-குரங்கு).

இப்படி குரங்குக்கும் பூனைக்கும் இருக்கும் வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ள வழிபாட்டு முறைகள் மீது
இத்தனை நூறு ஆண்டுகள் சண்டை இடுவது பகுத்தறிவு தானா ?

இந்தக் கேள்விகளுக்கு இந்த மெத்தப்படித்த மேதாவிகளிடம் தர்க்க ரீதியினாளான பதில் இருக்காது.  இவர்கள் பதில் உரத்த குரலில் “வாழித் திருநாமம்” சொல்வதிலும், ஒரு கலையார் தயா பாத்ரம் சொல்லும்போது மற்ற கலையார் வாய் திறவாமல் உள்ளனரா என்று கண்காணிப்பதிலும் மட்டுமே.

மறந்துவிட்டேன். புளியோதரை, அக்கார அடிசில் மற்றும் ததியோன்னம் – இவற்றில் எதில் சுவை அதிகம் என்னும் தத்துவ விவாதத்திலும் இவர்கள் திறமையுடன் பங்கெடுக்கக்கூடும்.

%d bloggers like this: