நாய் உணர்த்திய உண்மை

துவக்கமும் முடிவுமில்லாப் பேரமைதி என்னை வரவேற்றது. கோவிலும் சிவனும் தனியாக இருந்தனர். நான், சி வன், ஒரு நாய் – இவர்களால் மட்டுமே நிரம்பியிருந்தது கோவில்.

ஒரு வகையில் பிரும்ம தத்துவத்தை உணர்த்துவது போல் கூட இருந்தது. சிவன் பிரம்மம். நானும் நாயும் ஒன்று, ஆனால் இவை மூன்றும் முடிவில்லாப் பிரபஞ்சமாகிய கோவிலில் அடக்கம்.

சிவனைப் பார்த்தேன்.காலங்களுக்கு அப்பால் நின்று சிவன் என்னைப் பார்த்தான்.எனக்கும் அவனுக்கும் இடையே முடிவில்லாப் பேரமைதி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பார்த்துக்கொண்டிருப்பவன் அவன்.
அவனது கண் முன்னால் எத்தனையோ பிரளயங்கள் கடந்து சென்றிருக்கும்.நான் வெறும் துளியாய் வெற்று நீர்க் குமிழியாய், ஒரு சிறு துளியாய் அவன் முன் நின்றேன்.
அர்ச்சகர் இல்லை.எனவே பேரமைதி நீடித்தது.சிவன் பார்த்துள்ள மானுடத் துளிகள் பல கோடிகளில் ஒன்றாய், வெறும் காற்றால் அடித்த பந்தாய் அவன் முன் நின்றிருந்தேன்.என் கர்வங்கள், வேற்று எக்காளப் பேரிரைச்சல்கள் அனைத்தும் அடங்கி, எல்லாம் அறிந்த அவன் முன் எதுவும் அறியாப் பாலகனாய் நான் என் அகம் அழிந்து நின்றேன்.

நான் இதுவரை அறிந்தது ஒன்றும் இல்லை. ஏனெனில் நான் காற்றில் வீசப்பட்ட ஒரு பருக்கை. இவனோ .முக்காலமும் உணர்ந்தவன். குலோத்துங்கன் முதல் குந்தவை வரை, அச்சுதப்ப நாயக்கன் முதல் ராபர்ட் கிளைவ் வரை, ஏன் தற்போதைய பெருமக்கள் வரை அனைவரையும் ஆட்ட்ப்படைத்த தலைவன் வீற்றிருக்கிறான் ஆழ்ந்த மோனத்தில்.

தயங்கித் தயங்கிப் பின்வாங்க முயற்சிக்கிறேன். சிவனின் ஆகர்ஷம் முடிந்தபாடில்லை. ஒரு வழியாக வெளிப்பட்டு வெளிப் பிராகாரம் வருகிறேன்.கற்றளிச் சுவர்கள். குந்தவையின் பரிசில்கள்.

மெதுவாக இயங்கி, அடிமேல் அடி வைத்துச் சுந்தரரும், சம்பந்தரும் நடந்த அதே பிராகாரத்தில் நடந்து மெதுவாக சௌந்தர நாயகி சந்நிதிக்கு வருகிறேன். குலோத்துங்கனின் நிவந்தனம் பற்றிய கல்வெட்டில் ராதிகாவை ரமேஷ் காதலிப்பது தெரிந்தது. வரலாறை உணராத மண்டு மக்கள் இருக்கும் வரை குலோத்துங்கன்கள் தத்தமது சமாதிகளில் இருப்பதே நலம்.

வரலாற்றின் உள் சென்று, மீண்டு, நிகழ் காலம் வர வெகு நேரம் ஆனது. கோவிலை விட்டு வெளியேறி ஒரு முறை திரும்பிப் பார்த்தேன்.அந்த நாய் என்னைப் பார்த்து வாலாட்டியது. ஆம். பிரம்மம் ஒன்று தான். மற்ற அனைத்தும் (உயிர்கள் உட்பட) சமமே என்று அது சொல்வது போல் இருந்தது.

இடம்: வேத புரீஸ்வரர் ஆலயம்., தேரழுந்தூர்.