திருமங்கை ஆழ்வார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு தேரழுந்தூர் வந்தார். ஆமருவியாப்பனை சேவிக்க எண்ணி ஊரினுள் புகுந்தார்.
ஆனால் பெருமாள் கோவில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஊரில் வழியும் தெரியவில்லை. எங்கும் ஒரே புகை மயம். ஏன் என்று வினவினார்.
சந்நிதித் தெருவில் வாழ்ந்த அந்தணர்கள் அனனவரும் தத்தம் வீடுகளில் திருமாலை நோக்கி வேள்வி செய்தவண்ணம் இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் வேள்வி. ஊர் முழுவதும் வேத கோஷம்.
இந்த வேள்வியினால் எழுந்த புகை ஊர் முழுவதும் பரவி ஒரே இருள். அதனால் ஆழ்வாருக்கு வழி தெரியவில்லை. இதனால் கவரப்பட்ட ஆழ்வார் அதனை திவப்பிர்பந்தத்தில் இப்படிப் பாடினார் :
“அந்தணர் தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர்”.
அப்படிப்பட்ட ஊரில் தற்போது சந்நிதித் தெரு எப்படி உள்ளது என்று ஆராய்வதில் பயனில்லை. மனம் வருத்தப்படும்.
அது இருக்கட்டும்.
தற்போது சில நாட்களாய் சிங்கப்பூரிலும் ஒரே புகை மூட்டம். வழி தெரியவில்லை. மூச்சு முட்டுகிறது. இந்தோனேசிய என்னும் அண்டை நாட்டில் வேள்வி செய்கிறார்கள் போல். ஆனால் காடுகளில் மரங்களை, உலர்ந்த பனை ஓடுகளைய் ஆகுதியாய் அளிக்கிறார்கள். அதனால் சிங்கப்பூர் என்னும் சிம்ஹபுரியில் ( 110-வது திவ்யதேசம் ) புகை மூட்டம். வழி தெரியாமல் திண்டாடுகிறோம்.
இரு வேள்விகளுக்கும் ஒரே வேறுபாடு தான்.
தேரழுந்தூர் வேள்வி உலகம் செழிக்க இறை அருள் வேண்டி இறைவனை நோக்கி ஆகுதியாக நெய் அளித்து நடத்தப்பட்டது.
இந்தோனேசிய வேள்வி உலகம் அழிய பணப் பேய் நோக்கி ஆகுதியாய் மனித வாழ்வை அளித்து நடத்தப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடத்தப்படும் வேள்வி. இந்த வேள்வி நடக்காமலிருப்பது உலகத்திற்கு நன்மை.
அதெல்லாம் சரி.
வேள்வி நடக்கிறது. ஆகுதி அளிக்கப்படுகிறது. புகை தெரிகிறது.
ஆனால் ஆழ்வாரையும் அந்தணர்களையும் தான் காணவில்லை.