தமிழக அரசியல் பற்றி ஏன் கட்டுரைகள் எழுதுவதில்லை ?

தமிழக அரசியல் பற்றி ஏன் கட்டுரைகள் எழுதுவதில்லை என்று வெங்கடேஷ் சாரி என்னும் வாசகர் கேட்டுள்ளார்.

அன்புள்ள திரு.வெங்கடேஷ் சாரி, வணக்கம்.

எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வெறும் புகழுரைகளையும், சாதிப் பெருமிதங்களையுமே தமிழக அரசியல் முன் வைக்கிறது. பல நேரங்களில் மத அடிப்படையில், வேறு பிரிவுகள் அடிப்படையில் அணிகள் பிரிகின்றன. உண்மையான அறிவுப்பூர்வமான வாதங்களும், கொள்கை அடிப்படையிலான விவாதங்களும் எழுவதில்லை. செய்திக் கட்டுரை எழுத்தாளர்களும் அரசியல் சரி நிலை சார்ந்தே எழுதுகிறார்கள்; உண்மை நிலையை எழுதுவதில்லை.

உதாரணமாக: இலங்கைப் பிரச்சினை பற்றி எந்த ஒரு அரசியல் தலைவரும் உருப்படியாகப்பேசுவதில்லை. ஏனெனில் யாருக்கும் முழுமையான வரலாற்று அறிதல் இல்லை. நான் இலங்கைப் பிரச்சினை குறித்து 8 நூல்களை வாங்கி, படித்து. மதிப்புரை எழுதி, அதன் பின்னர் அந்தப் பிரச்சினை குறித்துக் கருத்துக் கூறினேன். மேற்சொன்ன எந்த நூலையும் படிக்காமல், பொதுப்படையான, மொண்ணையான கருத்துக்களையே பேசிவரும் தமிழக வாசிப்பாளர்கள் வசைமொழி துவங்குகிறார்கள். இதில் அறிவுபூர்வமான விவாதம் நிகழ வாய்ப்பில்லை.

சாதி ஒழிப்பு பற்றி வாய் கிழிபவர்கள் தங்கள் குடும்பங்களில் திருமணங்களின் போது சாதி பார்க்கிறார்கள். அல்லது தங்களை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிற சாதியில் பெண் / ஆண் தேடுகிறார்கள்.

ஏதாவது ஒரு விஷயத்தில் அறிவுப்பூர்வமாக எழுதினால் சாதி அடிப்படையில் வசை பாடுகிறார்கள்; மாற்று விவாதக் களம் தமிழக வாசிப்பாளர்களிடையே இல்லை என்பதே வருந்தத்தக்க உண்மை.

இந்த நிலையில், தமிழக அரசியலாளர்களின் தரம் உலகம் அறிந்த ஒன்று. சாதி இல்லை என்று சொல்லி ஆனாலும் சாதி அடிப்படையிலேயே செயல்படும் வீரர்கள் அவர்கள் ( இடதுசாரிகள், பா.ஜ.க. ஓரளவிற்கு விதிவிலக்கு). வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே தமிழக மக்களை வைத்திருந்து அவர்களிடமிருந்து உணர்வுபூர்வமான எதிர்வினைகளையே தூண்டி , தூபம் போட்டு, அந்தத் தீயில் குளிர் காய்பவர்கள் அவர்கள். அவர்களுடன் எனக்கு ஒட்டோ உறவோ இல்லை; எனவே அவர்கள் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை, எனவே சொல்வதில்லை.

இவை எப்போது மாறும்? தற்போதைக்கு இல்லை. 40 ஆண்டுகால அரசியலின் பிடியில் சிக்கிய தமிழகக் கல்வித்துறை வழி பயின்ற சமூகம் நடை தளர்ந்து விழும். அப்போது தேச நலனில் அக்கறை கொண்ட தலைமை உருவாகிக் கல்வித்துறையைத் திசை திருப்பும்;. அப்போது புதிய சிந்தனை கொண்ட, தானாகச் சிந்திக்கக் கூடிய சமூகம் உயிர்ப்பெறும்.

இது நடக்குமா? நடக்கும். அதற்கு திராவிடம், மொழி வெறி, சாதி பேசும் அரசியல் அழிய, மங்க வேண்டும். தேசீயம் வளர வேண்டும்; எல்லாத் தரப்பு மக்களையும் அரவணைக்கும் தலைவர்கள் உருப்பெற வேண்டும். இதற்கான நல்ல தொடக்கம் வானதி ஸ்ரீநிவாசன் போன்ற, வாக்கில் நேர்மையும், பண்பில் சிறப்பும் கொண்ட தலைவர்கள் தமிழக அரசியல் களத்தில் இறங்குவது. இல. கணேசன் போன்ற பண்பாளர்கள் தேர்தலில் நிற்பது நல்லது. அரசவையில் பண்பான பேச்சு கேட்பதற்குக் கிடைக்கும்.

முன் ஒரு காலத்தில் இராஜாஜி முதல்வராக இருந்த போது, கம்யூனிஸ்ட் கட்சியில் கோபாலன் எதிர் அணியில் இருந்தார். அரசவையில் கண்ணியம் குறையாத ஆனால் மக்கள் நலம் குறித்த ஆழமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது சபை பெஞ்சு தட்டும் மாடுகள் கூட்டத்தின் தொழுவமாக இருக்கின்றது.

ஆனால் தற்போது நல்ல அறிகுறிகள் தெரிகின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் தற்போதைய அரசியலின் முகம் தெரியத் துவங்குகிறது. சமீபத்தில் சீமான், வைகோ, ஒரு இடதுசாரி பேச்சாளர் முதலியோர் என்ன தரத்தில் பேசினார்கள் என்பதை நாடு கண்டது. திராவிடக் கட்சிகளின் பேச்சு நாகரீகத்தின் லட்சணம் நாடு அறிந்ததே. கலைஞர், இந்திரா காந்தியைப் பற்றிப் பேசியதும் பின்னர் ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று கெஞ்சியதும், காமராசரை அவரது நிறம் பற்றிப் பேசியதும், சமீபத்தில் பெரியார் வழியில் வந்த ஈ.வெ.கெ.எஸ்.இளங்கோவன் மிக மிகத் தாழ்ந்து பேசியதும் மக்கள் மனதில் நிற்கிறது. இதற்கு சமூக ஊடகங்கள் அளப்பரிய சேவை செய்கின்றன.

இவை அனைத்தும் மக்களைச் சென்று சேர்கின்றன. சுமார் 10 ஆண்டுகளில் இந்த மாற்றங்கள் தேர்தலில் எதிரொலிக்கலாம்.ஆனால் அதற்கு மேற்சொன்ன வானதி, கணேசன், நல்லகண்ணு முதலான பெரியவர்களின் பேச்சுக்களையும், கருத்துக்களையும் பற்றி வேண்டுமானல் எழுதலாமே தவிர, மற்ற யாரைப் பற்றியும் பேசிப் பயனில்லை.

எனவே நடிகர்-அரசியல்வாதிகள் பற்றியும், மக்களை உணர்ச்சிக்கொந்தளிப்பில் ஆழ்த்தும் ‘பெரியவர்கள்’ பற்றியும் அவர்களது அரசியல் பற்றியும் பேசுவதாக இல்லை.

Aside

தாயே, ஒரு வேண்டுகோள்.

Image

81 வயதாகும் வைகோவின் தாயார் இலங்கை தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தனி ஈழம் வேண்டும் என்று கோரிக்கை.

தாயே, தள்ளாத வயதில் இப்படி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். உங்கள் வயது வரை நாங்கள் இருப்போமா என்றே தெரியவில்லை.

தங்களின் உணர்வு புரிந்துகொள்ளக் கூடியது தான், ஆனால், தமிழ்த் தலைவர்கள் என்று கூப்பாடு போடுபவர்களும், பகுத்தறிவு பேசி வார்த்தை ஜாலத்தால் மக்களை மயக்கி கணக்கில் அடங்கா மாணவர்களையும் அறியாதவர்களையும் தூண்டி விட்டு, தீக்குளிக்கும் பதின்ம மற்றும் இளைஞர்களின் உடல் தீயில் குளிர் காயும் தமிழ் ஆர்வலர்களும் , ‘தலைவர்’களும் இருக்கட்டும் உண்ணா விரதம்.

காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே மெரீனா கடற்கரையில் காற்று வாங்கும் விதமாக பள்ளி கொண்ட கோலத்தில் உண்ணா விரதம் இருந்த தலைவர்கள், இலங்கைத்  தமிழர் பெயரைச் சொல்லி வங்கி கணக்கு வளர்த்த ‘அறிவாளிகள்’  இருக்கட்டும் உண்ணா விரதம்.

ஏற்கனவே பல தமிழ்ப் பெண்களின் உயிர் சிங்கள வெறியர்களாலும் விடுதலைப் புலிகளாலும் வாங்கப்பட்டுவிட்டது.சிங்கள வெறியர்கள் பெண்களின் உயிரை மட்டும் அல்ல கற்பையும் அழித்தனர். புலிகளோ பதின்ம வயது தமிழ்ப் பெண்களை மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தி தமிழ்ச் சமுதாயம் எதிர்காலம் இல்லாமால் போக வழி செய்தனர்.

அம்மையே, தனி ஈழம் சாத்தியம் இல்லாதது. ஒரு தனி நாடாக செயல் பட முடியாமல் பெரியவர் அமிர்தலிங்கம், சிறி.சபாரத்தினம், பத்மநாபா, லக்ஷ்மன் கதிர்காமர், ஜோசப் பரராஜ, சாம் துரைப்பா முதலான தலைவர்களை புலிகள் அழித்தனர். தற்போது அவர்களும் அழிந்துவிட்டனர். தற்போது இலங்கைத் தமிழ் மக்களுக்கு வேண்டியது நீதி, மரியாதையுடன் கூடிய ஒரு வழி நடத்துதல், இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு அரசியல் கட்டமைப்பு. அதற்கு இலங்கை அரசாங்கத்தை மேலும் எதிர்க்காமல் தமிழ் மக்ககளுக்கு என்ன வகையில் நன்மை செய்ய முடியுமோ ( பள்ளிகள் அமைத்தல், சாலை வசதிகள், மின்சாரம் ) இந்த துறைகளில் இந்திய அரசாங்கத்தின் / இந்திய ஆற்றல்களின் உறுதுணையுடன் செயல் பட வேண்டும். அது தான் ஆக்க பூர்வமான நடவடிக்கை.

சிங்கப்பூர் தந்தை லீ குவான் யூ தனது சுய சரிதையில்  குறிப்பிட்டுள்ளபடி, இலங்கை அரசாங்கம் செய்த தவறு அறிவில் முன்னேறிய தமிழர்கள் ஆங்கிலம் நன்றாகக் கையாண்டதால், அரசாங்கப் பதவிகளில் பெருமளவில் இருந்தனர் ஆங்கிலேயர் இலங்கையை விட்டுப் போகும் போது. அது பொறுக்காமல் சிங்கள பெரும்பான்மையினர் தமிழர்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும்விதமாக சிங்களத்தை ஆட்சி மொழியாக ஆக்கினர். ( இந்தியாவில் ஹிந்தி விஷயம் நினைவுக்கு வரலாம் ). அதனால் வந்தது கேடு. அன்றிலிருந்து தமிழர்க்குப் பாடு.

ஆகவே  ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும், தமிழையும் சிங்களத்தையும் சமமான அந்தஸ்த்தில் வைக்கக் கூடிய ஒரு சட்ட அமைப்பு, அதன் அடிப்படையில் செயல்படக் கூடிய ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு மாநில அரசு தமிழருக்கு என்பது தான் ஒரு நல்ல ஏற்பாடாக இருக்க முடியும்.

நீங்களும் வைகோவும் எங்களுக்குத் தேவை. வைகோ எம் இந்திய நாட்டிற்குத் தேவை.

லஞ்சமும் பகட்டு ஆடம்பரங்களும் இல்லாத,பண்பாட்டுடன் பேசவும் செயல் படவும் கூடிய வைகோ போன்ற ஒரு சில அரசியல் தலைவர்களே நம் இந்தியாவில் உள்ளனர். அவரை இலங்கையிலிருந்து மீட்டெடுத்து இந்தியா அனைத்திற்கும் உரியவராக ஆக்குங்கள். அவர்தம் சேவை நம் நாட்டிற்குத் தேவை.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இனியும் இந்த உண்ணா விரதம் முதலான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

– அன்புடன்,

அசட்டு அம்மாஞ்சி