தென்கலை * வடகலை – ஸ்டார்ட் மீஸிக்

திருமழிசையாழ்வார் தென்கலை சம்பிரதாயத்தை வலியுறுத்துகிறார் என்று சொல்கிறேன்.  கொஞ்சம் கொளுத்திப் போடலாம் என்று எண்ணம். எதிர் வினைகள் எப்படி வருகின்றன என்று பார்க்கலாம் என்று தோன்றியது.

நான்முகன் திருவந்தாதி என்னும் பாடல் தொகுப்பை எழுதினார் திருமழிசையாழ்வார். அதில் ஒரு அந்தாதிப் பாடல் :

“வித்தும் இடவேண்டும் கொல்லோ விடை அடர்த்த
பத்தி உழவன் பழம் புனத்து? மொய்த்து எழுந்த
கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து”

இறைவன் பக்தி உழவன். அவனது நிலத்தில் நாம் ஒரு விதையையும் இட வேண்டாம். அவனே நம்மைப் பார்த்துக் கொள்வான். இவ்வாறு இப்பாசுரத்திற்குப் பொருள் சொல்லப்படுகிறது. வடிவேலு பாஷையில் ஆணியே பிடுங்க வேண்டாம் என்கிறார்கள்.

ஜீவாத்மாக்களான நாம் இறைவனை அடைய எந்த முயற்சியையும் செய்ய வேண்டியதில்லை. அவனே நம்மை அழைத்துக்கொள்வான். அது அவனது கடமை என்பதாகப் பொருள் படுகிறது.

இதனை மார்ஜால நியாயம் என்று சொல்கிறார்கள் – அதாவது பூனை நியாயம். பூனைக்குட்டி எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. அதன் தாயே அதனை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வாயினால் கவ்விச் செல்லும். தென்கலை சம்பிரதாயம் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்டவர்கள். எந்தவிதமான அனுஷ்டானங்களும் தேவை இல்லை. இறைவனிடம் சரணாகதி செய்தால் போதும். அவன் பார்த்துக் கொள்வான் என்பது தென்கலையாரரின் மார்ஜால நியாயம்.

வடகலையார் மர்க்கட நியாயம் என்னும் நியதியின் அடிப்படையில் இருப்பவர்கள் – அதாவது குரங்கின் நியாயம். குரங்குக் குட்டி தன் தாயைப் பற்றிக்கொள்ள வேண்டும். தாய் குட்டியைத் தூக்காது. அதுபோல ஜீவாத்மாக்காளன நாம் இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். இறைவனின் கருணைக்காகப் பல நியம நிஷ்டைகள் செய்ய வேண்டும். அனுஷ்டானங்கள் தேவை என்பதாக வடகலையார் நெறி உள்ளது.

திருமழிசை ஆழ்வார் சொல்வது கொஞ்சம் தென்கலையார் பக்கம் இருப்பது போல் தோன்றவில்லை ? என்ன நினைக்கிறீர்கள் ?

குரங்கோ பூனையோ, இரண்டும் இன்று சாஃப்ட்வேர் எழுதிக் கொண்டிருக்கின்றன என்பதே நிதர்ஸனம்

என் வேலை முடிந்தது. ஸ்டார்ட் மீஸிக்.

பி.கு.: திருமழிசை ஆழ்வார் 5-ம் நூற்றாண்டுக்குள் வாழ்ந்தவர். தென்கலை வடகலை பேதங்கள் இராமானுசருக்குப் பின் 13-ம் நூற்றாண்டில் தோன்றியவை. இந்த இரு பிரிவுகளின் முன்னோடிகளாக முறையே மணவாள மாமுனிகளும் வேதாந்த தேசிகரும் இருந்தனர் என்பது வரலாறு.

ஆண்டாள் – ஒரு பார்வை

வைணவ சிந்தனையில் ஆகச் சிறந்த பங்காற்றியவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் பன்னிருவர். இவர்களில் ஒரு பெண்ணும் உண்டு. இவர்கள் இராமானுசர் காலத்திற்கு முற்பட்டவர்கள். சங்கம் மருவிய காலம் முடிந்து பக்தி இயக்கக் காலமே ஆழ்வார்களின் காலம்.  ஆழ்வார்களின் பங்களிப்பைக் காணும் முன் ஆண்டாளைப் பற்றியும் அக்கால நடைமுறை வழக்கங்கள் பற்றியும் சிறிது ஆராய்வோம்.

மார்கழி மாதம் முழுவதும் வைணவர்களுக்குப் புனிதமானதே. திருமாலும் தான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறுகிறார். பகுத்தறிவாளர் உடனே இறைவன் எல்லா மாதங்களுக்கும் பொதுவானவனாகத்தானே இருக்க வேண்டும் என்று குரல் எழுப்பலாம். மார்கழி மாதம் முழுவதும் இறை தொடர்பான எண்ணங்களுடனே இருந்து சில நோன்புகள் பூண்டு விரதம் முதலியவற்றைப் பேணுவது என்றும் அம்மாதத்தில் திருமணம் முதலிய சமூக நிகழ்வுகள் நடவாமல் மக்கள் மனம் முழுவதும் இறை பற்றியே இருக்க வேண்டும் என்ற நோக்கமே இதன் அடிப்படை என்று கொள்ள முடிகிறது.

இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும் இறைத் தொடர்பான சிந்தனைகளுடனே அம்மாதம் முழுதும் செலவிடுகின்றனர் என்பதும் நோக்கத்தக்கது. கிறித்தவர்களுக்கும் ‘லென்ட்’ (Lent) என்று நோன்பு இருக்கும் மாதம் உள்ளது என்று அறிகிறேன். ஆக மாதம் முழுவதும் நோன்பிருப்பது மனித சமூகம் முழுவதுமே இருக்கும் ஒரு பழக்கம் என்பதும் இறை தொடர்பான எண்ணங்கள் வளர இம்மாதிரி நோன்புகள் பயன்படுகின்றன என்பதும் வெளிப்படை.

நோன்பிற்கும் ஆண்டாளுக்கும் என்ன தொடர்பு ?

ஆண்டாள் இயற்றிய ‘திருப்பாவை’ என்னும் முப்பது பாசுரங்கள் மார்கழி மாதம் முழுவதும் வைணவர்களால் பாடப்படுகின்றன. அப்பாடல் வரிகளின் மூலம் ஆண்டாள் தனது தோழிகளைத் துயில் எழுப்புவது பற்றியும், நோன்பிருந்து இறைவனை அடையவேண்டியது பற்றியும் கூறுவதை அறிகிறோம். இவை மட்டும் அல்லாமல் அக்கால வாழ்க்கை முறை பற்றியும், சில இயற்க்கை நிகழ்வுகள் பற்றியும் நாம் தெரிந்துகொள்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து நாம் ‘அறிவியல்’ பூர்வமாகக் ‘கண்டுபிடித்தவை’ என்று பறை சாற்றிக்கொள்ளும் சில உண்மைகளும் ஒரு சாதாரண நிகழ்வு போல் ஆண்டாளால் பதிவு செய்யப் படுகிறது. ( “ஆழி மழைக் கண்ணா..” என்று தொடங்கும் பாசுரத்தில் மழை பொழியும் காரணம் தெரிவிக்கப்படுகிறது. கடலில் இருந்து நீர் ஆவியாகி, மேகமாகி மலைகளில் முட்டுவதால் மழை பொழிகிறது என்ற பொருளில் அமைந்துள்ளது இப்பாசுரம்)

ஆண்டாள் காலத்திற்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுள் முன்பு ( கி,மு.200 -300) தமிழ் மக்கள் இனக்குழுக்களாக இருந்த நேரத்தில் ( சங்க காலம் துவங்குவதற்கு முன் என்று கொள்ளலாம்) ‘பாவை நோன்பு’  என்ற ஒரு தொன்மையான வணக்க முறை இருந்துள்ளது. அப்போது தாய் வழிச் சமூகமாக இருந்துள்ளதால், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பாவை நோன்பும் பெண்கள் கடை பிடிப்பதாகவே காட்டப்படுகிறது. இது குறித்துச் சங்கப் பாடல்களும் தெரிவிக்கின்றன.

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இந்த வணக்க முறைகள் வேளாண் பயிர் சிறந்த முறையில் விளைய வேண்டும், வெள்ளம் முதலிய இயற்கை நிகழ்வுகள் வந்து பயிர்களை அழிக்காமல் இருக்க வேண்டும் என்று அந்தந்த நிலங்களின் தெய்வங்களிடம் வேண்டுவதாக அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையாக இவை பெண்கள் செய்யும் சடங்காகவே நிகழ்ந்துள்ளது. பெண்களே ‘வளர்ச்சி’, ‘ உற்பத்தி’ முதலியனவற்றிற்குக் குறியீடாக வைக்கப்பட்டிருந்தனர் என்றும் உணர முடிகிறது. . ‘இந்திர விழா’ என்று தொல்காப்பியம் அழைக்கும் மருத நிலம் தொடர்பான விழாவும் இந்த நோன்பு வகைகளில் ஒன்றே.

இந்த விழாக்களில் சிறப்பானது ‘பசுவன்’ என்று மண்ணினால் பசு மற்றும் அதன் கன்று போன்ற பிம்பங்கள் செய்து அதற்குத் தினமும் தானியங்கள், புல் முதலியன படைத்து வழிபடுவது. முப்பது நாட்களுக்குப் பின் அந்தப் பசுவன் வடிவத்தை ஒரு சிறுமியின் மடியில் அமர்த்தி வழிபட்டுப் பின்னர் நீர் நிலைகளில் கரைப்பது என்று இருந்தது. அப்போது பாடி ஆடும் மகளிர் நீர் நிலைகள் நிரம்ப வேண்டும், தானியங்கள் நிறைய விளைய வேண்டும் என்ற பொருள் படும்படிப் பாடுகிறார்கள் என்று இந்திர விழா குறித்த குறிப்புகள் கூறுகின்றன.

பெண்கள் தொடர்பு படுத்தியே இவ்வகை நோன்புகள் இருந்தன என்பது ‘பரிபாடல்’, ‘அக நானூறு’ முதலிய நூல்களில் இருந்து தெரிவதாக ‘ வைணவமும் ஆழ்வார்களும்’ என்னும் நூலில் திரு.தேவராஜன் தெரிவிக்கிறார். தற்காலத்தில் கூட ‘ஔவையார் நோன்பு’, ‘ காரடையான் நோன்பு’, ‘வர லக்ஷ்மி விரதம்’ முதலிய நோன்புகள் பெண்கள் பற்றியதாகவே  உள்ளது நோக்கத்தக்கது. இன்றைய காலத்தில் கூட மதுரை மாவட்டங்களில் அம்மன் கோவில் திரு விழாக்களின் போது ‘முளைப்பாரி’ எடுப்பது என்னும் நோன்பு நடக்கிறது. திருவிழா நடக்கும் பத்து நாட்களும் பெண்கள் தானியச் சட்டிகளுக்கு பூசை செய்து, பயிர் சிறிது முளை விட்டதும் பத்தாம் நாள் அதனை எடுத்துக்கொண்டு ஊர் முழுவதும் வலம் வந்து ஆற்றில் கரைப்பது என்று உள்ளதையும் நோக்க வேண்டும்.

இந்த வகையான நோன்புகளும் அவை தொடர்பான வழிபாட்டு முறைகளும் ‘தாந்திரீகம்’ என்னும் சங்க கால வழிபாட்டு முறைகளாம். இந்தத் தாந்திரீக முறைகள் ‘பாஞ்ச ராத்ரம்’ என்னும் இராமானுசர் வகுத்த ஆகம முறையில் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன என்ற கருத்தும் நிலவுகிறது.

சங்க கால நோன்பு முறை போன்றே ஆண்டாளும் பிற கன்னிப்பெண்கள் புடை சூழப் பாவை நோன்பு இருந்து திருமாலை வழிபடுவது என்று பொருள் படும்படித் திருப்பாவையில் பாடுகிறாள். திருப்பாவை என்பதே ‘பாவை’ என்ற நோன்பின் அடியொற்றியே அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

“… நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ..” என்னுமிடத்தில் தாங்கள் ‘பாவை’ உருவ பிம்பங்களுக்குச்  செய்யும் சடங்குகளைக் கேட்பீர்களோ என்று கூறிவது நோக்கத்தக்கது.

ஆண்டாளின் பாடல்களிலும் வேளாண்மை குறித்த நிகழ்வுகளும் அதற்குத் தேவையான அமைப்புகளும் இடம் பெற்றுள்ளன. நாங்கள் நோன்பு நோற்கிறோம், எங்களுக்கு நல்ல மழை தாருங்கள், பயிர்கள் செழிக்கட்டும், பால் வளம் பெருகட்டும் போன்ற வேண்டுதல்கள் தெரிகின்றன.

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை பெய்து அதனால் நீர் நிலைகள் நிரம்பி இருக்கும் வளம் கொழிக்கும் நேரம் அது.  மழை பற்றியும், நீர் நிலைகள் பற்றியும் பல இடங்களில் தனது நோன்பின் நோக்கம் பற்றியும் ஆண்டாள் கூறுகிறாள். சில பின் வருவன :

“தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ..”
“மாரி மழை முழைஞ்சில்..”
“சர மழை போல் வாழ உலகினில் பெய்திடாய்..”

ஆநிரைகள் வளத்தின் அடையாளம். ஆண்டாள் அவை பற்றியும் பாடுகிறாள். அவை:

“வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் ..”
“கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு ..”
“கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து..”
“கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் ..”

மேலே சொன்ன பயன்கள் கிட்ட பாவை நோன்பு நோற்கிறார்கள். அதன் செயல் வடிவம் என்ன ? பின் வருபவை அவை :

“வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்…”

நெய், பால் முதலியன உண்ணாதிருத்தல், விடியற்காலமே எழுந்து நீராடுதல், மை தீட்டிக்கொள்ளாதிருத்தல், மலர் சூட்டிக்கொள்ளாதிருத்தல், செய்யக் கூடாதனவற்றைச் செய்யாதிருத்தல், தீமை தரும் சொற்களைச் சொல்லாதிருத்தல் ( புறங்கூறாமை என்றும் ஒரு ஆசிரியர் கூறுகிறார் ) முதலியன நோன்பின்  அடையாளங்கள் போலே.

வைணவ பக்தி முறையில் சில ஆழ்வார்களும் தங்களைப் பெண்ணாகப் பாவித்து திருமாலை நோக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளார்கள். பெரியாழ்வார் தன்னை யசோதையாக நினைத்து ஒரு தாய் தனது குழந்தையை நடத்தும் விதமாகக் கண்ணனைப் பாடி இருக்கிறார். திருமங்கை ஆழ்வார் தன்னைப் ‘பரகால நாயகி’ என்ற பெண் நிலையிலும், நம்மாழ்வார் தன்னைப் ‘பராங்குச நாயகி’ என்னும் நிலையிலும் உருவகித்து, திருமாலைக் காதலனாகப் பாவித்துப் பாடல்கள் புனைந்துள்ளனர். இவ்வகை ஆழ்வார் பாடல்கள் ‘நாயக நாயகி பாவம்’ என்னும் வைணவ உறவு நிலையைக் குறிப்பன.

இவை ஆணின் உடலில் உள்ள பெண் தன்மையை எழுப்பும் ‘குண்டலினி’ யோக முறையின் கீழ் நிலையை உணர்த்துகின்றன என்று பேரா.தோத்தாத்திரி தெரிவிக்கிறார்.

பக்தி இயக்க காலத்தில் ஆண்டாளின் நோன்பு நிகழ்வுகள் அவை சங்க காலத் தமிழ் மக்களின் நோன்பு வகைகளை ஒத்து அமைந்துள்ளன என்று காண்பது வியப்பளிக்கிறது. இந்த மாதிரியான நோன்புகளை சங்க காலம் முடிந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்து ஆண்டாள் மேற்கொண்டாள் என்று நினைக்கும்போது கால அளவுகளைத் தாண்டிய ஒரு உன்னதமான கலாச்சாரத் தொடர்பு  பிரமிக்க வைக்கிறது.

பெண் விடுதலை, பெண் அடிமைத்தனம் என்று நமது பண்டைய வணக்க முறைகளைப் பழிக்கும் ‘முற்போக்காளர்கள்’, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடல் இயற்றிய ஒரு பெண்ணைத் தெய்வமாகவே நினைத்து வழிபட்டுள்ள உயர்ந்த பண்பாட்டைப் பற்றிப் பேசாமல் இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே.

வைணவம் காட்டும் உறவு நிலைகள்

இராமானுசரது வைணவ சித்தாந்தம் வழி இறைவனுக்கும் ( பரமாத்மாவுக்கும் ) உயிரினங்களுக்கும் (ஜீவான்மாக்களுக்கும்) இடையே உள்ள உறவு நிலை சிறப்பானது. பல மதங்களில் உள்ளது போல் இறைவனைக் காப்பவனாக மட்டுமே விசிட்டாத்வைதம் பார்ப்பதில்லை . இறைவனுக்கும் உயிரினங்களுக்கும் உள்ள உறவு ஒன்பது வகைப்படும் என்று கூறுகிறது. இதனை ‘நவ வித சம்பந்தம்’ என்று சம்ஸ்க்ருதம் கூறுகிறது.

  1. காப்பவன் – காக்கப்படுபவன் ( ரக்ஷ்ய – ரஷ்யக சம்பந்தம் )
  2. தந்தை/தாய் – மகன் (பிதா – புத்திர சம்பந்தம் )
  3. ஆண்டான் – அடிமை (சேஷ – சேஷி சம்பந்தம் )
  4. கணவன் – மனைவி (பர்த்ரு – பார்யா சம்பந்தம் )
  5. அறிபவன் – அறியப்படுபவன் ( ஞாத்ரு – ஞேய சம்பந்தம் )
  6. உடையவன் – உடைமை (ஸ்வ – ஸ்வாமி சம்பந்தம் )
  7. உயிர் – உடல் (சரீர – சரீரி சம்பந்தம் )
  8. தாங்குபவன் – தாங்கப்படுபவன் (ஆதார ஆதேய சம்பந்தம் )
  9. அனுபவிப்பவன் – அனுபவிக்கப்படுபவன் (போக்த்ரு – போக்ய சம்பந்தம்)

இந்த உறவு நிலைகளை ஆழ்வார்களின் பாசுரங்களில் காணலாம்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் ஆழ்வார்கள் இராமானுசருக்கு முந்நூறு ஆண்டுகள் முற்பட்டவர்கள். இராமானுசர் விசிஷ்டாத்வைதம் என்று ஒரு முறையை நெறிப்படுத்தும் முன்பே அத்தத்துவத்தின் கூறுகளை ஆழ்வார் பாசுரங்களில் காண்கிறோம். இது ஒரு வியப்பே.

காப்பவன் – காக்கப்படுபவன் ( ரக்ஷ்ய – ரஷ்யக சம்பந்தம் )

“வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளா காதலநோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட் டம்மாநீ ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே”

மருத்துவன் வாளால் அறுத்துச் சுடுவது நோயாளனுக்கு நன்மை செய்யத்தான். அதுபோல் இறைவன் நமக்குச் சில சமயங்களில் சோதனைகள் தருவதும் நம்மைத் திருத்திப் பணி கொள்வதற்காக மேற்கொள்ளும் ரட்சகக் காரியமே என்று குலசேகர  ஆழ்வார் கூறுகிறார்.

தந்தை/தாய் – மகன் (பிதா – புத்திர சம்பந்தம் )

நம்மாழ்வார் பாசுரம் பின்வருமாறு :

“என்னப்பன் எனக்காய் இகுளாய்  என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்…”

இந்தப் பாசுரத்தில் இறைவனை தாய் என்றும் தந்தை என்றும் அழைக்கிறார்.

ஆண்டான் – அடிமை (சேஷ – சேஷி சம்பந்தம் )

இந்த ஆண்டான் அடிமை உறவு நிலை குறித்துப் பல ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள் என்றாலும் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் பாசுரத்தில் நம்மாழ்வார் பாடுவது அருமையானது. இறைவனை ‘ஆரா அமுதே’ என்று அழைப்பது தமிழின் அழகையும் உணர்த்துகிறது. ( வைணவர்களில் ‘ஆராவமுதன்’ என்று குழந்தைகளுக்குப் பெயரிடுவது சில காலம் முன்பு வரை பிரபலம். அப்பெயர் மருவிப் பல சமயம், ‘ஆராமுது’ என்றும் ‘ஆமுடு’ என்றும்  அழைக்கப்படுவது வேடிக்கை.)

பாசுரம் இங்கே:

“வாரா வருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய்
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊரா உனக்காட் படும் அடியேன் இன்னம் உழல்வேனோ”

இப்பாசுரத்தில் ‘ஆண்டாய்’ என்பதால் ஆண்டான் தன்மையும் ‘உனக்காட்படும்’ ( உன்னுடைய ஆளுமைக்கு உட்படும் ) என்பதால் அடிமைத்தனத்தையும் ஆழ்வார் காட்டுகிறார்.

கணவன் – மனைவி (பர்த்ரு – பார்யா சம்பந்தம் )

கணவன் மனைவி நிலையில் திருமாலுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைக் குறிக்கும் விதமாக குலசேகராழ்வார் பாசுரம் :

“கண்டா ரிகழனவே காதலன்றான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள்போல்
விண்டோய் மதில்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மா நீ
கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே”

குலமகள் கணவனைக் கை விடாமல் எந்நிலையிலும் அவனுடன் இருப்பாள் என்னும்போது ஆழ்வார் தன்னை மனைவியாகவும் திருமாலைக் கணவனாகவும் கொண்டு பாடுகிறார்.

அறிபவன் – அறியப்படுபவன் ( ஞாத்ரு – ஞேய சம்பந்தம் )

“பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும் – உயிரும்
தருமனையே நோக்கும்மொண் தாமரையால் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு”

பொய்கையாழ்வார் பாசுரம் கூறுவது : ஆறுகள் கடலை நோக்கி ஓடுவதும், தாமரைப்பூ பகலவனை நோக்கி மலர்வதும், உயிர்கள் எமனையே நோக்கிக் கிட்டுவதும் ( கிடைக்கப்பெறுவதும்) எப்படி இயல்பாக நிகழ்கின்றனவோ அப்படியே ஞானம் என்பதும் திருமாலைப் பற்றி அல்லாது வேறு எதைப் பற்றி உண்டாவதும் அல்ல. எனவே அறியப்படும் பொருள் திருமாலே. அறிபவர்கள் நாம்.

உடையவன் – உடைமை (ஸ்வ – ஸ்வாமி சம்பந்தம் )

“தொக்கிலங்கி ஆறெல்லாம் பரந்தொடித் தொடுகடலே
புக்கன்றிப் புறம் நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மா! உன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன் காண் புண்ணியனே”

கடல் உடையது. ஆறுகள் கடலின் உடைமை. கடலைச் சேர்ந்து தான் ஆறுகள் சிறப்புப் பெறுகின்றன. அதுபோல் தலைவனாகிய திருமாலைச் சேர்ந்தே நாம் சிறப்படையே இயலும் என்று இறைவனை உடையவன் என்றும் நம்மை அவனது உடைமை என்றும் கூறுகிறார் குலசேகர ஆழ்வார்.

உயிர் – உடல் (சரீர – சரீரி சம்பந்தம் )

“திடவிசும் பெரிவெளி நீர்நில மிவைமிசைபடர்பொருள் முழுவது மாயவை யவைதொரும் உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்”

என்னும் நம்மாழ்வார் பாசுரத்தில் “உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் உடலில் உயிர் உறைவது போல் இறைவன் மறைந்திருந்து எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவன்”  என்று உயிர் – உடல் உறவை விளக்குகிறார்.

தாங்குபவன் – தாங்கப்படுபவன் (ஆதார ஆதேய சம்பந்தம் )

குலசேகர ஆழ்வார் பாசுரம் ஒன்று இந்த உறவை விளக்குகிறது.

“எங்கும் போய் உய்கேன் உன் இணையடியே யல்லால்
எங்கும்போய்க் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்புஏறும் மாப்பறவை போன்றேனே”

எங்கும் கடலாக உள்ளது. ஆகவே பறவை நான்கு திசைகளிலும் பறக்க முடியவில்லை. திரும்பவும் எப்படி கடலில் உள்ள மரக்கலத்தில் வந்து அப்பறவை சேருமோ அப்படி உன் பாதங்களில் என்னைத் தாங்குபவனாகிய உன்னிடம் நான் சரண் அடைந்து கிடக்கிறேன் என்று ஆழ்வார் இறைவனைத் தாங்குபவனாகவும் தன்னைத் தாங்கப்படுபவராகவும் கூறுகிறார்.

அனுபவிப்பவன் – அனுபவிக்கப்படுபவன் (போக்த்ரு – போக்ய சம்பந்தம்)

உயிர்களை உண்ணப்படும் பொருளாகவும் இறைவனை உண்பவனாகவும் கொள்வது இந்த உறவு நிலையின் விளக்கம். இந்த உறவு நிலையை  விளக்கும் விதமாக நம்மாழ்வாரும் குலசேகரரும் பலவாறு பாடியுள்ளார்கள்.

நம்மாழ்வாரின் “வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில்..” என்று தொடங்கும் பாசுரமும் குலசேகரரின் “நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் …” என்று தொடங்கும் பாசுரமும் விளக்குகின்றன.

உறவு நிலை சரி. ‘நாராயணா’ என்பதன் பொருள் என்ன ? வைணவர்கள் யார் ? அவர்களுக்கு மிக முக்கியமான ‘மூன்று’ என்ன ? அடுத்த பதிவில் பார்ப்போம்.

வைணவ லட்சணம்

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற வழக்கு நாம் அறிந்ததே. அதுபோல் ஒரு வைணவனின் அக லட்சணங்கள் அவனது நடத்தையில், புறத்தில் தெரியும் என்று கொண்டால் அவை என்ன என்ன என்று நாம் அறிந்துகொள்ள இராமானுசர் வழி வந்த சில ஆச்சாரியார்களின் வியாக்கியானங்கள் நமக்கு வழி செய்யும். அவர்களின் உரைகளில் பல புதிய அருமையான உவமைகள் அடங்கி இருக்கும். படிக்கவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இவ்விடத்தில் லட்சணங்கள் என்பது புற அடையாளங்கள் என்பது மட்டும் அல்ல; ஒரு வைணவன் நடந்துகொள்ள வேண்டிய முறை என்றும் அறிந்துகொள்ளவேண்டும்.

இராமானுசர்  வழி வந்த ஆச்சாரியார்கள் பலர் இராமானுசர் மற்றும் அவருக்கு முன்பிருந்த ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு விளக்கங்கள் அளித்துள்ளனர். அவை ‘வியாக்கியானம்’ என்ற பிரிவில் அடங்கும். அவை தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் கலந்த ‘மணிப்பிரவாள’ நடையில் அமைந்திருக்கும். இந்த மொழி நடை தற்போது வழக்கொழிந்து விட்டது. இதனை அறிந்தவர்கள் இன்று வெகு சிலரே. வைணவ குரு பரம்பரை விளக்கமும் இந்த நடையிலேயே அமைந்துள்ளது.

சிலவற்றைப் பார்ப்போம்.

வைணவப் பண்பாடு என்பது என்ன? ஒருவரிடம் வைணவத்துவம் அமைந்துள்ளது என்று எப்படிக் கண்டுகொள்வது என்று நஞ்சீயர் என்ற ஒரு ஆச்சாரியாரிடம் கேட்கப்பட்டது. அவரது பதிலை மணிப்பிரவாள நடையில் அவரது வாக்கிலேயே தருகிறேன்:

“பிறர் அனர்த்தம் கண்டால் ஐயோ என்று இரங்குவான் ஆகில், அவன் நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு என்று இருக்க அடுக்கும், இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு என்று இருந்தான் ஆகில், அவன் நமக்குப் பகவத் சம்பந்தம் இல்லை என்று இருக்க அடுக்கும்”

தமிழில் : “மற்றவனது துன்பம் கண்டவுடன் மனம் இரங்குபவன் இறைத் தொடர்புள்ள வைணவன்.அவர் நிலை கண்டு இரங்காதவன் வைணவன் அல்லன்”.

இதற்கு ஒரு சமீப கால உதாரணம் ஒன்றும் உண்டு. மகாத்மா காந்திக்குப் பிடித்தமான “வைஷ்ணவ ஜனதோ ..” என்ற பாடல் நாம் அனைவரும் அறிந்ததே. அதன் ஆரம்ப வரிகளின் பொருளைக் அமரர் கல்கி அவர்கள் தனது ‘தியாக பூமி’ நூலில் இப்படிக் கூறுகிறார்:

“எவன் பிறருடைய துக்கத்தைத் தன்னுடைய துக்கமாகக் கருதுவானோ, கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி புரிந்து விட்டு அதைப் பற்றி மனத்தில் கர்வம் கொள்ளாமலும் இருப்பானோ, அவனே உண்மையான வைஷ்ணவன்.”

சற்று பின்னே சென்று வைஷ்ணவ குருபரம்பரை நிகழ்வு ஒன்றைக் காண்போம். இராமானுசரது சீடர் குழாமில் ‘பராசர பட்டர்’ என்றொரு அறிஞர் இருந்தார். அவரது சீடர் ஒருவர்,  அனந்தாழ்வான் என்னும் இன்னொரு ஆச்சாரியாரை அணுகி “வைஷ்ணவன் என்பவன் எப்படி இருப்பான்?” என்று கேட்கிறார். அதற்கு அவர் பதில் மிகவும் விளக்கமானது; அதே சமயம் எளிதானது.

அனந்தாழ்வான் கூறுகிறார்: “வைஷ்ணவன் கொக்கைப் போல் இருப்பான்; கோழிபோல் இருப்பான்; உப்பைப்போல் இருப்பான்; உம்மைப்போல் இருப்பான்” என்று ஒரு சூத்திரம் போல் வரையறுக்கிறார்.

ஒரு கொக்கு தனக்குத் தேவையான நீருள்ள இடங்களின் அருகில் வசிக்கும்.அதுபோல் வைணவன் தனக்குத் தோதான பகவத் பாகவத சந்நிதிகளின் அருகில் வசிப்பான். கோவில்கள், மடங்கள் இவற்றின் அருகில் வாசிப்பான். ( ஸ்ரீரங்கம் நினைவில் கொள்ளத் தக்கது).

மேலும் கொக்கு தனக்கு விருப்பமான ஆறுகளைத் தேடிப்போக அதற்குத் தேவையாக இரண்டு சிறகுகள் பெற்றிருக்கும். அதுபோல் வைணவன் தனக்குத் தேவையான வீடுபேறு அடைய ஞானம், அனுஷ்டானம் என்ற இரண்டு சிறகுகளைப் பெற்றிருப்பான். ஞானம் மட்டும் இருந்து அது  காட்டும் வழியில் செல்லும் அனுஷ்டானம் இல்லாவிட்டால் பயன் இல்லை என்பதை இது உணர்த்துகிறது. வள்ளுவரும் ‘நிற்க அதற்குத் தக’ என்று கூறுவது இவ்விடம் நோக்கத்தக்கது.

கொக்கு வெண்மை ந
றம் உடையது. அதுபோல் வைணவன் உள்ளும் புறமும் சுத்த சுவாபவம் கொண்டவனாக இருக்க வேண்டும். “உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்ற வள்ளலாரின் வாக்கு நோக்கத் தக்கது.

கொக்கு தன் வாய்க்கு அடங்காததை விடுத்து , கொள்ளும் அளவே உண்ணும். அதுபோல் வைணவன் பல விஷயங்கள் கற்றாலும், அறிந்துகொண்டாலும் தனக்குத் தேவையானதை மட்டுமே கொள்வான். தனக்குத் தேவையான மீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கின் தன்மை கொண்டவன் வைணவன் என்றும் கொள்ளலாம். 

அதுபோல் வைணவன் கோழி போல் இருப்பான் என்பதும் நோக்கத்தக்கது. கோழியானது குப்பையைச் சீய்த்துச் சீயத்துத் தனக்கு இரை இல்லாததைத் தள்ளிவிட்டு தனக்குச் சாரமான தானியங்களை மட்டுமே கொள்ளும். அது போல் வைணவன் பிறரிடம் உள்ள குற்றங்களைத் தள்ளிவிட்டு நல்லதையே கொள்வான்.

இதுவரை சரி. வைணவன் உப்பைப்போல் இருப்பான் என்பது எவ்வகையில் பொருந்தும்? அனந்தாழ்வான் கூறுகிறார்: உப்பு தான் உருமாறி அழிந்து உணவுகளுக்கு சுவை அளிக்கும்.வைணவன் தன்னை மறைத்துப் பிறருக்குப் பயன்படுபவனாக இருப்பான். அகம் அழிந்திருத்தல் என்று இதனைக் கொள்ளலாம்.

இவ்வாறு விளக்கம் பெற்ற அந்த வைணவரை அனந்தாழ்வான் உணவு உண்ணும் சாலைக்கு அழைத்துச் சென்றார். அவரை அங்குள்ள பந்தியில் முன்னே அமரச் செய்தார். வைணவர் தயங்கினார். பின்னர் பந்தியின் நடுவில் வேறொருவரை எழுப்பி அமரச்செய்தார். மறுபடியும் அந்த வைணவ சீடர் தயங்கினார். பின்னர் அவரைப் பந்தியின் இறுதியில் அமரச் சொன்னார். வைணவரும் மனமுவந்து அமர்ந்தார்.

அப்போது அனந்தாழ்வான் ” ‘வைணவன் உம்மைப் போல் இருப்பான்’ என்று நாம் சொன்னது இதுதான். அடியார்க்கு அடியாராகவும், அகங்காரம் அற்ற நிலையிலும் நீர் உள்ளீர். எனவே நீரே ஒரு வைணவருக்கு உதாரணம். எனவே வைணவன் உம்மைப்போல் இருப்பான் என்பது சரியே” என்று உவப்புடன் அருளியுள்ளார்.

இந்த ‘அடியார்க்கும் அடியார்’, ‘தொண்டர் அடிப்பொடி’, ‘ அடியேன்’ , ‘ தாசன்’ முதலான வார்த்தைகள் வைஷ்ணவ பரிபாஷையில் அதிக அளவில் அமைந்துள்ளன. தற்கால திருமண ஆழைப்பிதழ்களில் கூட ‘அடியேன் தாசன்’, ‘ அனந்தமான தெண்டன் சமர்ப்பித்த விக்யாபனம்’ போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் இருப்பதைக் காணலாம்.

%d bloggers like this: