ஓலாவில் ஒரு உபன்யாசம்

பரிபூரணமான பிரேமையுடன், அசைக்கமுடியாத பக்தியுடன் நரஸிம்மரின் சேவையே தனது வாழ்வின் பயன் என்று வாழ்ந்துவரும் கார்த்திக்கை விட சிறந்த ஸ்ரீவைஷ்ணவன் உண்டோ?

‘என்ன தம்பி நீங்க எங்க சாமிய வெச்சிருக்கீங்க?’ ஓலா காரில் ஏறி, டேஷ்போர்டில் இருந்த அலங்கார லக்ஷ்மிந்ருஸிம்ஹ விக்ரஹத்தைக் கண்டவுடன் கேட்டேன்.

‘அட, இவன் உங்களுக்கும் சாமியா, சரிதான். அவன் தனக்கு வேணுங்கறவங்களைத்தான் வண்டில ஏத்துவான்..’ என்ற கார்த்திக் சிரித்தார்.

‘அது சரி. நரஸிம்மர் விக்ரஹம் எப்படி இங்க..?’ கேட்டேன்.

‘நரஸிம்மனப் பத்தி சொன்னா நாள் முழுக்க பேசிக்கிட்டே இருப்பேன்,’ முக மலர்ச்சியுடன் சொன்ன ஓட்டுனர் மேலும் தொடர்ந்தார்.

‘இவரு எங்கிட்ட வந்தது எப்பிடின்னு தானே கேக்கறீங்க? இவரு என்னோட கத்தாருக்கே வந்தாரு. இவரு இல்லாம நான் இல்லை’ என்றவரின் முகமலர்ச்சி உண்மையாகவே தோன்றியது.

‘ஆமாங்க, கத்தார்ல நம்ம சாமில்லாம் இருக்கக் கூடாது. ஆனா, இவரு இருந்தாரு. அங்ஙன கம்பி கட்ற வேலைக்கிப் போனேன். தினமும் காலைல இவருக்கு ஒரு பத்தி ஏத்தி வெச்சுட்டுப் போயிடுவேன். ராத்திரி எந்த நேரமா இருந்தாலும் வந்து, குளிச்சுட்டு, இவரு மேல தண்ணி ஊத்தி ஒரு அபிசேகம் பண்ணிட்டு, பொறவு தான் நான் சாப்புடுவேன். சனிக்கிழமைகள்ல ஒட்டகப் பால் வாங்கி அபிசேகம் செய்வேன்,’ என்றவர் என்னைத் தனது உலகத்துக்குள் ஈர்த்தார். பின் இருக்கையில் இருந்த என் மனைவி, மகன் முகங்களில் ஆச்சரியக் குறிகள். நீண்ட உபன்யாசத்திற்குத் தயாரானேன்.

‘ஆனா ஒண்ணுங்க. வெறும் கம்பி கட்டற வேலைக்குப் போன என்னை அந்த காண்டராக்ட்ல பல பேர வெச்சு வேலை வாங்கற நிலைக்கு ஒசத்தினார் சார் நரஸிம்மர். பொறவு நான் கம்பியே கட்டல..’

‘அப்புறம் எப்பிடி இங்க, இந்தியால?’ என்றேன்.

‘வந்தப்புறம் ஒரு லாரி வாங்கி விட்டேன். எட்டரை லட்சம் கடன். முழுகிடுவேன் போல இருந்துச்சு. போன மாசம் வரைக்கும் தலை வரைக்கும் கடன். ஆனா, இப்ப வெறும் அம்பதாயிரம் தான் கடன் இருக்கு. அவன் கொடுக்கணும்னு நினைச்சான்னா யாரால தடுக்க முடியும்?’ என்றவரை நம்புவதா இல்லையா என்று மனதில் ஓட, வியப்பில் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

‘ஒண்ணு மட்டும் உண்மைங்க. இவன் பேசற தெய்வம். நான் இவனைப் பார்த்து அழுதுகிட்டே இருக்கேன். முன்னாடி இவன் எங்கிட்ட இல்லீங்க. இவன் எங்கிட்ட வந்தது பெரிய கதை..’ என்று தொடர்ந்தவரைக் குறுக்கிடாமல் வாயை மூடிக்கொண்டேன்.

‘மொதல்லயும் வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன். அப்ப, இவரு எங்கிட்ட இல்லை. டேஷ்போர்டுல பிள்ளையார் பார்க்கறீங்கல்ல அவரு மட்டும் தான் இருந்தாரு. அவரும் நான் செஞ்ச பிள்ளையாரு. நான் எதப் பார்த்தாலும் செஞ்சுடுவேன். பிள்ளையாரு, முருகன், அம்மன் இப்பிடி பல தெய்வங்களைக் கும்பிட்டுக்கிட்டு இருந்தேன். கந்தர் சஷ்டி கவசம் தினமும் சொல்லிக்கிட்டு இருந்தேன். ஒரு மாதிரி முருகன் பைத்தியமாவே இருந்தேன். ஆனா பிள்ளையார், முருகன்னு மாறி மாறி வந்து இப்ப கடைசில நரஸிம்மரப் புடிச்சிருக்கேன்,’ என்றவர் ஒரு நிமிடம் அமைதி காத்தார்.

‘இவுரு எப்பிடி வந்தார்னு சொல்லல இல்ல? டேஷ்போர்டு வெறும இருந்துச்சு. வெச்சா இவரதான் வெக்கணும்னு இருந்தேன். உங்கள மாதிரி ஒரு அய்யிரு ஏறினாரு. நரஸிம்மர் சிலை எங்க கிடைக்கும்நு கேட்டேன். அவுரு ‘கிரி டிரேடர்ஸ்’லன்னாரு. ஒடனே போயி வாங்கிடணும்னு பார்த்தேன்.  கைவரல. ஒவ்வொரு முறை மயிலாப்பூர் போனாலும் உடனே சவாரி வந்து வேற எங்கியாவுது போயிடுவேன்.

நார்மலா சனிக்கிழமைல வண்டிய எடுக்க மாட்டேன். அன்னிக்கி பெருமாளுக்கான நாள். அவருக்கான பூஜை, கோவில் அப்டின்னு இருந்துடுவேன். ஆனா ஒரு சனிக்கிழமை வண்டிய எடுத்தேன். நரஸிம்மா உன்னை வாங்காம ஓய மாட்டேன், இரு வறேன். இன்னிக்கி எவ்வளாவு வசூல் ஆகுதோ அதை வெச்சு வாங்கறதுன்னு முடிவு செஞ்சு காலைல வண்டிய எடுத்தேன். நாள் முழுக்க சவாரி. அதுவரைல அவ்வளவு சவாரி எடுத்த்தே இல்லை. சரி நரஸிம்மன் ஆழம் பார்க்கறான்னு எல்லா சவாரியையும் எடுத்தேன். பாருங்க, அன்னிக்கி மட்டும் மூணு முறை மயிலாப்பூர் சவாரி வந்துச்சு. ஒவ்வொரு முறை கிரி டிரேடர்ஸ் போகணும்னு இறங்கினாலும் உடனே வேற ஒரு சவாரி வந்துடும். கடைசியா கடை சாத்தற நேரத்துல கபாலி கோவில் சவாரி ஒண்ணு வந்துது. ஆள இறக்கி விட்டுட்டு கடைக்குள்ள ஓடறேன். கடை சாத்தற நேரங்கறாங்க. லைட்டு கூட அணைச்சுட்டாங்க. எப்பிடியாவுது எங்கிட்ட வந்துடு நரஸிம்மானு அழுதுகிட்டே அங்க கேக்கறேன். மேல போங்கறாங்க. நரஸிம்மர் சிலை விக்ரஹம் வேணும்னு அழுதுகிட்டே கேக்கறேன். இருட்டுல ஒருத்தர் எடுத்துக் கொடுக்கறாரு. பார்க்கக் கூட இல்ல. அப்பிடியே வாங்கினு வந்துட்டேன். அன்னிலேர்ந்து இவுரு எங்கூட இருக்காரு.

தினமும் பூ அலங்காரம். வாரம் ஒரு முறை வஸ்திரம் மாத்துவேன். உள்ள பாருங்க,’ என்றார். டேஷ்போர்டில் இருந்த பெட்டியில் பல வண்ணங்களில் வஸ்திரங்கள்.

‘இந்த மண்டபம்?’ என்று கோவிலாழ்வாரைப் பற்றிக் கேட்டேன்.

‘அது இன்னொரு கதைங்க,’ என்று துவங்கியவரைச் சிறிது பொறாமையுடனும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘நரஸிம்மர் வந்துட்டாரு. அவர வண்டில அமர்த்தியாச்சு, பூவெல்லாம் போட்டாச்சு, ஆனா நாள் பூரா வெய்யில்ல உக்காந்திருக்காரு. நாம ஏஸில இருக்கமே, இவரு இப்பிடி வெய்யில்ல வாடறாரேன்னு மனசு கேக்கல. ஒரு சின்ன குடை வாங்கி வெச்சேன். போதல, ஒரு கண்ணாடிக் கூண்டு செஞ்சு அதுக்குள்ள கார் ஏஸிய விடலாம்னு முயற்சி பண்ணினேன். ஒரு அய்யிரு சவாரில வந்தாரு. அது வேண்டாம். கண்ணாடில்லாம் வாணாம். சின்ன மண்டபம் மாதிரி இருக்கட்டும். காத்தோட்டமா இருக்கட்டும்நு சொன்னாரு. மண்டபம் பலதும் வெச்சு பார்த்தேன். ஒண்ணும் சரியில்லை.

‘அப்பதான் ஒரு சவாரி வந்ததுங்க. ஏறினவரு  நரஸிம்மரையே பார்த்துக்கிட்டிருந்தாரு. என்னங்கன்னு கேட்டேன். இல்ல, சோளிங்கர் போகணும். வேளையே அமையலன்னு வருத்தப்பட்டாரு. இங்கன இவரப் பார்த்தீங்கல்ல, இவரு உங்கள கூட்டிக்கிட்டுப் போயிடுவாரு. ஒரு வாரம் கழிச்சுப் பாருங்கன்னேன். சிரிச்சுக்கிட்டே ‘ ஏம்பா ஒரு மண்டபம் வைப்பா’ ன்னாரு. ‘தேடிக்கிட்டிருக்கேன்’ன்னேன்.

ஒரு வாரம் கழிச்சு  போன் பண்றாரு. இங்க வாப்பான்னு ஒரு அட்ரஸ் சொல்றாரு. போயி பார்த்தா பெரிய மரப் பட்டறை ஓனரு. அறுபது பேர் வேலை செய்யறாங்க அவர்ட்ட. என்னப் பார்த்துட்டு ஓடி வராரு. நாலு பேரக் கூப்பிட்டு தம்பிக்கு என்ன மாடல் புடிக்குதோ அதுல ஒரு சின்ன மண்டபம் செஞ்சு குடுங்கறாரு. எனக்குப் புல்லரிக்குது. அவரு எங்க, நான் எங்க. நாலு டிசைன் கொடுத்தாங்க. கடைசில இந்த டிசைன் தான் புடிச்சுது. செஞ்சும் குடுத்தாரு. அதே வாரம் சோளிங்கர் போயிட்டு போன் பண்றாரு.

நான் ஏதோ செய்யறென்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். எல்லாம் அவன் செஞ்சுக்கறான். நாமெல்லாம் பொம்மைங்க சார். அவன் ஆட்டறான், நாம் ஆடறோம்,’ என்றவர் அவ்விடத்தில் ஒரு சின்ன சேங்காலிபுரம் அனந்த ராம தீக்ஷிதர் போல தெரிந்தார்.

‘அன்னிலேர்ந்து பெருமாள் மண்டபத்துல ஒக்காந்துட்டு இருக்கார்,’ என்று தொடர்ந்தவர், ‘ஆங், நான் எப்படி நரஸிம்மர் பித்து ஆனேன்னு கேட்டீங்கல்ல?’ என்று கேட்டவர் தொடர்ந்தார். கேட்டதையே மறந்து நான் அமர்ந்திருந்தேன்.

நெய்வேலி பக்கத்துல முத்தாண்டிக் குப்பம்னு ஒரு ஊர் இருக்கு ( நானும் நெய்வேலி என்பதால் தெரிந்திருந்தது). அங்க கருப்புசாமி கோவில்ல பூசாரியா இருந்தேன்,’ என்றார்.

‘கருப்பு கோவில்ல பூசாரியா?  நீங்க வேலூர்ன்னு தானே சொன்னீங்க?’ என்றேன் சந்தேகத்துடன்.

‘சொல்றேன், சொல்றேன். வேலூர் தான். திருச்சில ஐ.டி.ஐ. படிக்கப் போனேன். அங்க முத்தாண்டிக் குப்பத்துல இருந்து இன்னொரு பையன் படிச்சான். அவன் கைல ‘கருப்பு சாமி’ பச்சை குத்தியிருந்திச்சு. என்னன்னு கேட்டேன். சாமின்னான். போயி பார்க்கலாம்னு போனா, கருப்பு என்னைப் புடிச்சு இழுத்துக்கிட்டான். ஐ.டி.ஐ., அப்புறம் கருப்பு கோவில் பூசாரியாயிட்டேன். அப்ப, பெரிய பூசாரி மகாபலிபுரம் பக்கத்துல இருந்து ஒரு சாமி விக்ரஹம் கொண்டு வந்தார். ‘டேய், இது சின்ன சைஸ்னு பார்க்காத. ரொம்ப பவரு. சுத்த பத்தமா இருக்கணும். பேரு நரஸிம்மர்’ன்னாரு. அப்பலேர்ந்து நரஸிம்மர் மேல பக்தி வந்துடுச்சு. ரெண்டர மணி நேரம் ஒத்தக் கால்ல நின்னு, நரஸிம்மா, நரஸிம்மான்னு அவரோட பேரையே சொல்லிட்டு அழுதேன். பொறவு என் வாழ்க்கையே மாறிடுச்சு. அவரோட சிலைய வாங்கணும்னு அப்பவே தீர்மானிச்சேன். ஆனா, அவன் தீர்மானிக்கணுமே. அவன் எப்ப நினைக்கறானோ அப்பதான் நம்மகிட்ட வருவான்,’ என்ற கார்த்திக் வேறு தளத்தில் இருந்து பேசிக்கொண்டிருந்தார்.

narasimhar.JPG‘நரஸிம்மர் விக்ரஹம் வந்ததும் வண்டில இன்னும் யந்திரம் தான் வெக்கலை. மத்தபடி எல்லாம் பண்ணிட்டேன். பலரும் வருவாங்க, யந்திரம் இருந்தா தோஷம் வரும். அதால வெக்கலை. பாருங்க  பெருமாளுக்கு வஸ்திரத்துக்குள்ள பூணூல் போட்டிருக்கேன், தாயாருக்கு கருகுமணி போடணும்னு ஒரு மாமி சொன்னாங்க, போட்டிருக்கேன். சின்னச்சின்னதா கிரீடம், மாலைன்னு செஞ்சு போட்டுக்கிட்டே இருக்கேன். இவருக்கு எவ்வளவு செஞ்சாலும் இன்னும் செய்யணும்னு தோணிக்கிட்டே இருக்கு. நான் எங்க செய்யறேன். அவன் செஞ்சுக்கறான்.

‘சில மாசம் முன்னால ஒரு வயசானவரு ஏறினாரு. நரஸிம்மன் வந்தா சிவனும் வரணுமேன்னாரு. புரியல விட்டுட்டேன். ஒரு பத்து நாள் கழிச்சி மச்சான் சின்ன பஞ்ச லோக சிவ லிங்கம் வாங்கியாந்தான். ஒரு மாசம் வெச்சு பூஜை பண்ணினான். முடியல்லடா, நீ வாங்கிக்கோன்னு எங்கிட்ட குடுத்துட்டான். இப்ப அவரு ஊர்ல ஒரு சின்ன ஊஞ்சல்ல உக்காந்திருக்காரு. சின்ன கலசம் செஞ்சு அதிலேர்ந்து தண்ணி விழறாப்ல செஞ்சிருக்கேன். சிவன் அபிஷேப் பிரியன், ஆனா நரஸிம்மர் அலங்காரப் பிரியர். அதால தினமும் இவருக்கு இங்க பூ அலங்காரம்,’ என்றார்.

narasimhar-carநீண்ட நெடிய கலாச்சார விழுமியத்தின் தாக்கம் ஏழை எளிய மக்களின் உள்ளும் இறங்கி, வடிந்து, கலந்து, உதிரத்தில் ஓடிக்கொண்டிருப்பதையும், பெருமாள் தனது பக்தர்களைக் கொண்டு என்னவெல்லாம் செய்கிறான் என்றும் மனதில் ஓட, நானும் ஜானகியும் மகன் பரத்ராமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

‘எனக்கு ஒரு ஆசையும் இல்லை சார். நம்ம பெருமாளுக்கு ஊர்ல ஒரு சின்ன கோவில் கட்டணும். விதம் விதமா அலங்காரம் செய்யணும். அவன் எப்பவும் குளிர்ச்சியாவே இருக்கணும், அவ்ளோதான் சார்’

‘கல்யாணம் ஆயிடுச்சா?’ என்றேன், அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள.

‘இல்லை. பார்த்துக்கிட்டிருக்காங்க. ஒரு பாலிஸி உண்டு சார். பொண்ணு ஏழையா இருந்தாலும் எப்பிடி இருந்தாலும் என்னை நம்பி வாழ வந்தா, சுகமா இருக்கணும். அதால ஊர்ல பதினஞ்சு லட்சத்துல கீழயும் மேலயுமா வீடு கட்டியிருக்கேன். அம்மா அப்பா அங்க இருக்காங்க. லாரி ஓடுது. கார் இருக்கு. வர்ற பொண்ணு கஷ்டப்படாம இருக்கும்,’ என்றவரை வாழ்த்துவதா, வணங்குவதா என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தேன்.

‘ஓரமா நிறுத்துங்க. ஏ.டி.எம்.ல பணம் எடுக்கணும்’ என்றவனிடம், ‘நீங்க பணம் கொடுக்கல்லேன்னாலும் பரவாயில்லீங்க. பெருமாளுக்குப் பிரியமானவர் நீங்க,’ என்றவருக்கு என்னிடம் பதில் இல்லை.

ஒரு ஏ.டி.எம். கையிருப்பை மட்டும் காட்டி, பணம் தர முடியாது என்றது ( ஐ.சி.ஐ.சி.ஐ.). வண்டிக்கு வந்தவுடன்,’ சார், எனக்கு வர வேண்டியது எப்படியும் வந்துடும் சார். ஒரு சவாரி நூறு ரூபா கொடுக்கணும், பணம் இல்லை, கையிருப்பு எண்பது ரூபா தான். இருக்கறதக் கொடுத்துட்டு பின்னாடி சில நாள் கழிச்சு மனசு கேக்கல தம்பி ஒன்னோட பாங்க அக்கவுண்ட் நம்பர் சொல்லுன்னு கேட்டு கூட நூறு ரூபா அனுப்பி வெச்சார். எனக்கு என்ன தரணும்னு நரஸிம்மருக்குத் தெரியும் சார்,’ என்ற அந்த வேதாந்தி பாரதத்தின் ஆன்மா என்றால் தவறில்லை என்று நினைத்தேன்.

அருகில் எச்.டி.எப்.சி. ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து வந்த் போது,  ‘அது போகட்டும் சார். உங்க நம்பரக் கொடுங்க. என்னோட ‘நரஸிம்மர் வாட்ஸப்’ குரூப்ல சேர்த்துக்கறேன். வாரா வாரம் என்ன அலங்காரம்னு என்னோட பேசஞ்சர்ஸ் எல்லாருக்கும் அனுப்பிக்கிட்டிருக்கேன்,’ என்று கூக்ளி போட்டு வீழ்த்தினார்.

சரி தம்பி. நரஸிம்மருக்கு சாப்பிடறதுக்கு என்ன கொடுப்பீங்க?’ என்றேன்.

karthik_ola‘நைவேத்யமா ஸார்? பானகம் தான். தினமும் பானகம் உண்டு,’ என்றவரிடம் மேலும் கேட்க ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பரிபூரணமான பிரேமையுடன், அசைக்கமுடியாத பக்தியுடன் நரஸிம்மரின் சேவையே தனது வாழ்வின் பயன் என்று வாழ்ந்துவரும் கார்த்திக்கை விட சிறந்த ஸ்ரீவைஷ்ணவன் உண்டோ என்று எண்ணிக் கொண்டிருந்தபோது,

‘ இன்னொரு விஷயம் சார். இன்னிக்கிக் காலைல ஒரே சவாரில என்னோட டெய்லி டார்கெட் முடிஞ்சுது. வீட்டுக்குப் போகலாம்னு ‘Go Home’ அழுத்திக்கிட்டே இருக்கேன். பதில் வரலை. மீண்டும் அழுத்தினேன். வரலை. சரி, நரஸிம்மன் நமக்கு வேற வேலை வெச்சிருக்கான் போல’ ந்னு பத்து நிமிஷம் செல்போன நோண்டிக்கிட்டிருந்தேன். அப்ப உங்க கால் புக் ஆச்சு. பெருமாள் தன் அடியார்களைத்தான் தன் கிட்ட அனுமதிப்பார் சார்,’ என்ற கார்த்திக்கின் உருவில் பார்த்தசாரதி அமர்ந்திருந்தார்.

‘அஹோபிலம் போயிருக்கீங்களா?’ என்றேன்.

‘அவசியம் போகணும் சார். ஆனா, நாம முயற்சி பண்ணா நடக்காது. அவனுக்குத் தெரியும். எப்ப வரச் சொல்றானோ போகணும். கூடிய சீக்கிரம் வரச் சொல்வான்னு நினைக்கறேன்,’ என்றார்.

இறங்குமிடம் வர, மனமில்லாமல் இறங்கி விடைபெற்ற பின் கார் நகர்ந்தது. நரஸிம்மரும் அவரது ஆத்மார்த்தமான பக்தரும் சிறிய ஆட்டத்துடன் நகர்ந்தனர்.

‘ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி

நாடி நாடி நரசிங்கா வென்று வாடிடும் இவ்வாணுதளே’

கார்த்திக். அலை-பேசி எண்: +91-7418853033

பி.கு.: கத்தாருக்குச் சென்று வந்தவர் கல்லாலான நரஸிம்மர். தற்போது முத்தாண்டிக்குப்பம் கருப்புசாமிக் கோவிலில் இருக்கிறார்.

 

 

 

 

பாதுகா ஸஹஸ்ரம் – வெண்பா வடிவம்

பாதுகா ஸஹஸ்ரம் – வெண்பா வடிவம். விளம்பி ஆண்டில் நல்லதை விளம்புவோமே..

வெண்பா எழுதுவது எளிதல்ல. வேதாந்த தேசிகனின் ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்னும் 1008 வடமொழிச் சுலோகங்களையும் வெண்பா வடிவில் எழுதியுள்ளார் ஒரு பெரியவர். ஆத்தூர் வீரவல்லி ஸந்தான ராமன் என்பது அந்த அடியாரின் பெயர்.
 
ஸந்தான ராமன் மன்னார்குடி, தேரழுந்தூர், பம்பாய் என்று சென்று படித்துவிட்டு மதுரையிலும், சென்னையிலும் கணக்காளராகப் பணியாற்றியுள்ளார். நெய்வேலியில் இருந்தவாறு 1008 வெண்பாக்களை இயறியுள்ளார். இவ்வளவுக்கும் அவருக்குக் கண்பார்வை -15 என்கிற அளவில் இருந்துள்ளது.
 
சுத்தானந்த பாரதியார் இம்மொழிபெயர்ப்பைச் செய்யப் பணித்துள்ளார் என்று எழுதுகிறார் இவ்வடியார். 1969ல் இந்த நூல் வெளிவந்துள்ளது. ‘எனக்குத் தமிழிலும் புலமை இல்லை, ஸம்ஸ்க்ருதமும் போதிய பாண்டித்யம் இல்லை, இறையருளால் எழுதினேன் என்று  நூலின் முன்னுரையில் தெரிவிக்கும் இவ்வடியார் 1989ல் நெய்வேலியில் இறைவனடி சேர்ந்தார்.
உதாரணத்திற்கு அவர் எழுதிய ஒரு வெண்பா:
வேதமும் வேதத் தமிழ்மறையும் கல்லாதார்
ஏதுமிலா தேத்தி யிணையடியை – போதுய்ய
மாறன் சடாரியாய் மாறிப் பிறந்தானே
கூறவோ சொல்லீர் குணம்
‘ஏ பாதுகையே,  மக்கள் வேதத்தைக் கற்றிருக்க வேண்டும். அதனுடன், வேதத்தின் தமிழாக்கமான திருவாய்மொழியையும் (நம்மாழ்வார் பிரபந்தங்கள்) கற்றிருக்க வேண்டும். அதனால் தான் நீ நம்மாழ்வார் வடிவெடுத்து வந்து திருவாய்மொழி இயற்றினாய். இருப்பினும், இவற்றைக் கல்லாதவரும் உய்ய வேண்டுமே என்பதற்காக, நீ சடாரி வடிவாய் வந்து அனைவருக்கும் அருள்கிறாயே’

ஸ்வாமி தேசிகன் ஓரிரவில் பாடிய ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்னும் நூல் ரங்கநாதரின் பாதுகையைப் பற்றியது அன்று, நம்மாழ்வாரைக் குறித்துச் செய்த போற்றி நூல் என்பதாக இந்த வெண்பா அமைகிறது.

ஒவ்வொரு வெண்பாவும் ஆழ்ந்த பொருளுடையதாக அமைந்துள்ளது. தமிழின் சுவை, பக்தி நெறியின் பெருமை, நம்மாழ்வாரின் பெருமை, திருமாலின் கருணை, சரணாகதித் தத்துவம் என்று பொருள் வெள்ளம் கரை புரண்டோடும் இந்த நூல் கீழ்க்கண்ட விலாஸத்தில் உள்ளது எனத் தெரிகிறது. அன்பர்கள் பயனடையுங்கள்.

ஶ்ரீ பகவன் நாம பப்ளிகேஷன்ஸ்
ராம மந்திரம், 2 வினாயகம் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை.
தொ.பே: 4893736

என் வழி, தனி வழி-கோதை காட்டும் பாதை

andal
ஆண்டாள்

‘நெய்யிடை நல்லதோர் சோறும்..’ என்கிறார் பெரியாழ்வார்.

இரண்டு வியாக்கியானங்கள் சொல்கிறார்கள். ‘நெய் அளவு சோறு’ என்று கொண்டால் சோற்றின் அளவு குறைவாக இருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளலாம். கார்போஹைரேட் அளவு குறைவாக உண்ண வேண்டும் என்பதாக வைக்கலாம். ஆனால் அவ்வளவு குறைவாகவா உண்பார்கள்? என்கிற கேள்வி எழுகிறது.

‘சோற்றின் அளவு நெய்’ என்று கொண்டால் பயமாக இருக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சம அளவில் அதுவும் அதிகமாக உண்டால் என்னாவது?

‘நெய் நிறையவும், நெய்யின் இடையே சோறு’ என்று கொண்டாலும் இக்கால அளவில் ஆபத்து தான். தற்காலத்தில் செலவு அதிகம் ஆகும் என்பதை விட, மருத்துவ பயம் கூடுதலாக இருக்கிறது.

ஆனால் பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள் அப்படிச் செய்யவில்லை. விரதம் இருக்கிறாள். ‘நெய்யுண்ணோம் பாலுண்ணோம்..’ என்கிறாள். அப்படி விரதம் இருந்து, முடிவில் ‘பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார..’ என்று முழங்கையில் நெய் வடியும் வகையில் உண்போம் என்கிறாள். தானாக உண்ண மாட்டாளாம், கூடியிருந்து அனைவருமாய் உண்போம் என்கிறாள்.

அது சரி. இவ்வளவு பாலும் நெய்யும் சாத்தியமா? அவளே விடையும் அளிக்கிறாள்:

‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’ இருக்கும் வரை நெய்யும் பாலும் கிடைக்காதா என்ன? அத்துடன் அவளிடம் ‘நீங்காத செல்வம் நிறைந்து’ கிடக்கிறது.  இத்தனை பாலும் நெய்யும் சாத்தியமே.

அப்படி என்ன செல்வம் அவளிடம் இருந்தது? பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்யும் பெரியாழ்வாரின் மகளிடம் அப்படி என்ன செல்வம் இருந்துவிட முடியும்?

கோதை காட்டும் பாதையில் சென்று நாமும் பார்ப்போம்.

நான் இராமானுசன் – பகுதி 13

காலை அனுஷ்டானங்கள் முடித்து சற்று சாவகாசமாக சில சுவடிகளைப் புரட்டிக்கொண்டிருந்தேன். பாதி கரையான் அரித்த சுவடிகள் அவை. பாதி சுலோகங்கள் மட்டுமே தெரிகின்றன. மீதத்தை நானே எழுதிக்கொள்ள வேண்டும். சீக்கிரம் எழுதிவிடவேண்டும் என்று தோன்றுகிறது.

நாதமுனிகள் காலத்திய சுவடிகள் அவை. அவரிடமிருந்து 200 ஆண்டு காலம் கழித்து எனக்குக் கிடைத்துள்ளது.

கரையான் பாதி தின்ற சுலோகம் ஒன்றை எடுத்து பூர்த்தி செய்யத் துவங்கினேன். கூரன் வேகமாக உள்ளே வந்தார். ஏதோ அவசரம் போல் பட்டது.

‘ஸ்வாமி, தேவரீரைத் தரிசிக்க துருஷ்க மதஸ்தர் ஒருவர் வந்துள்ளார். வட நாட்டிலிருந்து வருகிறார் என்பதால் அவரைக் காவிரிக்கரைக்கு அனுப்பி, நீராடி வரும்படிச் சொல்லியுள்ளேன்,’ என்றார்.

‘அவசரம் இல்லை. அவருக்கு அமுது படைத்துப் பின்னர் அழைத்து வரவும்,’ என்றேன் நான்.

இப்போதெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக துருஷ்கர்கள் தென்படுகிறார்கள். வட நாட்டில் இருந்து வரும் ஒற்றர்கள், யாத்ரீகர்கள் என்று அவ்வப்போது தெரிகிறார்கள். அவர்களது பேச்சு பெரும்பாலும் புரிவதில்லை. எனவே சைகையில் தான் பேசிக்கொள்ள வேண்டியிருக்கிறது. பொதுவாக இவர்கள் கோவிலுக்குள், மடங்களுக்குள் எல்லாம் வருவதில்லை. ஆகையால் இந்த வட நாட்டுத் துருஷ்கர் என்னைப் பார்க்க வந்தது சற்று வியப்பாக இருந்தது.

கூரன் முகத்தைப் பார்த்தால் ஏதோ சாந்தமில்லாமல் தெரிந்தது. தற்போது வட நாட்டிலிருந்து வரும் சில செய்திகள் நல்லவையாக இல்லை. நமது பிரதேசத்தில் உள்ள ராஜாங்கங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தது போய், நமது கலாச்சாரத்திற்கு, வாழ்க்கை வழிமுறைக்குச் சற்றும் ஒவ்வாத வழி முறைகள் கொண்ட மிலேச்ச மதஸ்தர்கள் சிலர் நம்ப முடியாத செயல்களில் ஈடுபடுகின்றனர். கோவில்கள் உடைபடுகின்றன; விக்கிரகங்கள் கூட உடைக்கப் படுகின்றன; வைதீகர்கள் கழுவிலேற்றப்படுகிறார்கள் என்றும் செய்திகள் சொல்கின்றன. இவை செய்திகளாக இல்லாமல் வதந்திகளாக இருக்க வேண்டுமே என்று மனம் ஏங்கியது.

சில நாட்களாகக் கரிய நிறத்தில் ஒரு பெரிய உருவம் ஒன்று நிற்பது போல் கனவு ஒன்று வருகிறது. என்ன காரணம் என்று தெரியாவிட்டாலும் சகுனங்கள் ஏதோ அச்சான்யமாகவே படுகின்றன. அதற்கும் இந்த துருஷ்கர் வருகைக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ?

‘கூரரே, துருஷ்கர் என்ன சொல்கிறார்?’ என்று கேட்டேன்.

‘ஸ்வாமி, அவரது பாஷை முழுதும் புரியவில்லை. ஆனால் ஏதோ கலவரங்கள் பற்றிச் சொல்கிறார். தேவரீரை அவசியம் பார்த்து அதிகமாகப் பேச வேண்டும் என்றும் சொல்கிறார்,’ என்றார்.

சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டுக் கூரன் சொன்னது ஏற்கெனவே என் காதுகளை எட்டிய ஒன்றுதான்.

‘ஸ்வாமி, நாம் இங்கே பிரம்மம், ஆத்மா என்று வாதம் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் சொல்வதெல்லாம் பார்த்தால் இதற்கெல்லாம் ஒன்றுமே தேவை இருக்காது போலத் தெரிகிறதே,’ என்றார்.

‘அப்படி இல்லை. அவர் வரட்டும். அது வரைக்கும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்,’ என்று கூறினேன். ஆனாலும் கூரன் சொல்வதில் உண்மை உள்ளது என்பதை நான் உணர்ந்தே இருந்தேன்.

மத்தியானமாக அந்த துருஷ்கர் வந்தார். நம்மவர்கள் போல் இல்லாமல் வேறு உடை உடுத்திக்கொண்டிருந்தார். க்ஷேம சமாச்சாரங்கள் விசாரித்தபின் தடுமாறிய சமஸ்கிருதத்தில் பேசத்துவங்கினார்.

‘நான் பாரசீக நாட்டில் இருந்து வருகிறேன். நான் ஒரு யாத்ரீகன். பாரசீகம், உருது, அராபியம் என்று மூன்று மொழிகளைக் கற்றுள்ளேன். ஓரளவு சமஸ்கிருதம் தெரியும். அஸ்தினாபுரம் என்னும் நகரைப் பற்றிக் கேள்வியுற்று அதனைப் பார்க்க ஆவல் கொண்டு பயணித்தேன். மூன்று ஆண்டுகள் முன்னர் அஸ்தினாபுரம் சென்றேன். அங்குள்ள பண்டிதர்களிடம் சமஸ்கிருதம் கற்று பாரத தேசத்தைப் பார்த்து வர எண்ணினேன். மஹிஷூர் என்னும் அழகிய நகரம் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு சென்ற போது உங்களைப் பற்றி அறிந்தேன். தாங்கள் திருவரங்கத்தில் இருப்பதாகச் சொன்னதால் உங்களைப் பார்க்க இங்கு வந்தேன்,’ என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட அவர் தனது பெயர் அப்தாலி என்றும் கூறினார்.

பின்னர் அவர் சொன்ன செய்திகள் அதிர்ச்சி ஏற்படுத்துவனவாக இருந்தன.

‘சனாதன தர்மத்தின் வழியில் நடைபெறும் வழிபாடுகள் விரைவில் முடிவுக்கு வரப்போகின்றன. பாரசீக, காந்தார அரசுகள் ஆங்காங்கே நிலைபெறத் துவங்கி விட்டன. தில்லி என்னும் ராஜதானியிலும் மிகப்பெரிய மிலேச்ச அரசு உருவாகியுள்ளது. அவற்றின் முக்கிய வேலையே சனாதன தர்மத்தைக் குலைப்பது தான். அதற்காக அந்த தர்மத்தின் வெளிப்பாடுகளை அழிக்க முனைந்துள்ளன. தக்ஷிண பாரதப் பிரதேசத்தில் அவ்வளவாக இவை இல்லை. ஆனாலும் இங்கும் வரத் துவங்கிவிடும். சைவம், வைஷ்ணவம் என்றெல்லாம் பேசப்படும் தக்ஷிண பாரதப் பிரதேசத்தில் இந்த மண்ணிற்கு எந்தத் தொடர்பும் இல்லாத அன்னிய கலாச்சாரம் உருவெடுக்கப் போகிறது. அது இந்த மண்ணின் அடி வேரையே பிய்த்தெறியப்போகிறது. சைவ, வைணவச் சின்னங்கள் உடைத்தெறியப்படும். மக்கள் தங்கள் தர்மத்தை விட்டு அன்னிய தர்மத்தைத் தழுவ வேண்டும் இல்லையேல் மரணிக்க வேண்டும்.’ இது தான் அப்தாலி சொன்ன செய்தி.

அப்தாலி சொன்ன செய்திகள் எனக்கு முன்னரே தோன்றியவைதான். ஆனால் என் கணக்குப்படி இன்னும் 100 ஆண்டுகள் கழித்தே இவை நடைபெற உள்ளன. அரங்கன் கோவில் பலியாகப் போகிறது; புதிய ஆச்சாரியர்கள் தோன்றுவர்; பெரியாழ்வார் பாடிய மதுரைக்கும் அழிவுதான் என்பதெல்லாம் எனக்குத் தெரிகின்றன. ஆனால் அப்தாலி இன்னும் சீக்கிரமாகவே நடக்கும் என்கிறாரே என்று எண்ணினேன்.

‘இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

‘மஹிஷூரில் உள்ள வைஷ்ணவர்கள் உங்கள் பெயரைச் சொன்னார்கள். நீங்கள் 12 வருடங்கள் திருநாராயணபுரத்தில் தங்கியிருந்து உங்கள் தர்மத்தை வளர்த்தீர்கள் என்பதால் அவர்கள் உங்களிடம் இந்த செய்தியைச் சொன்னால் நல்லது என்று தெரிவித்தனர்,’ என்றார் அப்தாலி.

சாதாரண மக்கள் அவர்கள். ஒரு 12 வருஷங்கள் நான் திருநாராயணபுரத்தில் இருந்த போது அந்த மக்கள் காட்டிய அன்பும், கைங்கர்ய மனோபாவமும் என் கண் முன்னே நின்றன. கண்களில் நீர் வழிந்தது. வெகுளியான மக்கள். மண்டியம் பிரதேசம் என்னும் இடத்தில் ‘நல் வழிப்படுத்த யாரும் இல்லையே’ என்னும் ஆதங்கத்துடன் வாழ்ந்துவந்தார்கள். பல பலி வழிபாடுகளும், பயன் தராத, மனித தர்மத்திற்கு விரோதமான பழக்கங்களும் கொண்டிருந்த சாதாரண மலை மக்கள். ஆனால் கல்வியின் மீது மிகுந்த மோகம் கொண்டவர்கள். மிகுந்த ஆர்வத்துடன் நான் எடுத்துரைத்த விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பிடித்துக்கொண்டார்கள். அந்த நாட்கள் இனிமையானவை.

நேற்று மாலை வரை ஸதஸில் நடந்த விவாதங்கள் எத்தகையவை? ஜீவாத்மா, பரமாத்மா, முக்தி, மீமாம்சை என்று அதன் தரமே வேறு. இன்றோ அடிப்படையே ஆட்டம் காணும் வகையிலான ஒரு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இந்த உலகத்தின் போக்கைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. காலம் எவ்வளவு வேகமாக மாறுகிறது?

‘விக்கிரகங்களை உடைப்பதாவது? கோவில்களையும் சின்னங்களையும் சிதைப்பதாவது? என்ன வழக்கம் இது?’ என்று கூரன் கேட்டார். அடிக்கடி வரும் இந்தக் கரிய உருவக் கனவுக்கும் தற்போது கேள்விப்படும் விஷயங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று திட்டவட்டமாகத் தெரிந்தது.

கூரனின் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டுமா அல்லது அடுத்த ஸதஸில் சொல்லிக் கொள்ளலாமா என்று எண்ணத்துவங்கினேன்.

‘விக்கிரகங்கள் நம்மைக் கடந்து நம்மால் அறியப்பட முடியாத பிரபஞ்சப் பெருவெளியான பிரும்மத்தின் ஒரு உருவகம். அந்த உருவத்தின் வழியாக எல்லையில்லாப் பரப்புள்ள பிரபஞ்ச ஞானத்தின், பிரும்ம சொரூபத்தின் ஆற்றலை உணர்வதே நமது ஞான மரபு. விக்கிரகத்தை உடைப்பதால் பிரம்மத்தை அழிப்பதாகிவிடுமா? என்ன ஒரு அடித்தள எண்ணம்?

மஞ்சளாளான ஒரு சிறு உருவத்திற்குள் அந்தப் பிரபஞ்ச சக்தியை, பிரும்ம சொரூபத்தை ஆவாஹனம் செய்து அதன் வழியே அப்பிரபஞ்சப் பெருவெளியின் முழு வீச்சினை உணர்வதே நமது ஆன்ம தரிசனம். ஒரு விக்கிரகமே பிரும்மமாகிவிடுமா? இது புரியாத இந்த எத்தர்கள் ஆடும் ஆட்டம் வெறும் வெற்றுக் களிப்பு என்று உணரவில்லையே’ என்று எண்ணியவாறு அமர்ந்திருந்தேன்.

இன்னொன்றும் என் மனதில் பட்டது. விக்கிரகங்கள் சக்தியூட்டப்பட்டவை. சக்கரங்களை அடியில் வைத்துப் பிரதிஷ்டை செய்து உரு ஏற்றப்பட்டவை. அவற்றிற்கான தேவையான மந்திரப் பிரயோகங்கள் நடந்தாக வேண்டும். விக்கிரகங்கள் பின்னம் அடைந்தால் அவற்றைச் சாந்தப்படுத்தப் பரிகாரங்கள் செய்தாக வேண்டும். பல உக்கிர தேவதைகளும் இவற்றில் அடக்கம். அப்படிச் செய்யாவிட்டால் ஏற்படும் பாதகங்கள் ரொம்ப அதிகம். சில தேவதைகளின் உக்கிர தாண்டவம் சொல்லி மாளாது. இதனால் அவற்றைச் சிதைப்பவர்களுக்கும் சேர்த்தே அழிவு. மக்களும் பாதிக்கப்படுவர். இதையெல்லாம் இந்த அன்னிய மனிதர்கள் உணர்வதெப்படி?

அடுத்த பௌர்ணமிக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கிறது. அன்று ஸதஸ் நடக்க வேண்டும். ஆனால் அதற்குள் இன்னும் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறதோ என்னும் கேள்வியும் என்னுள் எழுந்தது.

ஸதஸில் மொத்தமாகப் பதிலளிக்கலாம் என்று தீர்மானித்து ஆழ்ந்த பெருமூச்சு விட்டேன். சொல்லி வைத்தது போல் பெருத்த இடியுடன் மழை பெய்யத் துவங்கியது.

மனதில் திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.

‘கூரரே, ஸதஸ் அடுத்த பௌர்ணமி அன்று வேண்டாம். இன்னும் இரண்டு நாட்களில் ஏற்பாடு செய்யுங்கள். அதிக நேரம் இல்லை,’ என்று சொல்லி ஆச்சரியத்துடன் பார்த்த கூரரை உற்று நோக்கினேன்.

கூரத்தாழ்வானின் கண்களில் நீர்.

(தொடரும்)

வாசகர் கடிதம் – 'நான் இராமானுசன்'

வைணவத்தில் முனைவர் பட்டம் பெற்ற, பழுத்த அனுபவம் உடைய திரு.பார்த்தசாரதி என்னும் வாசகர் ‘நான் இராமானுசன்’ தொடர் பற்றி எழுதியுள்ள கடிதம் இது. சாகித்ய அகாதெமி விருதை விட மேலானது என்று எண்ணுகிறேன். இப்படிப்பட்ட சிறப்பான வாசகர்கள் எதிர்பார்ப்பைக் கெடுக்காத வண்ணம் நான் எழுத, அருமாகடலமுதன் அருள் புரிவானாக.

————————————————————————

அன்புடை நண்பர் ஆமருவி தேவநாதன் அவர்கட்கு ,

நலம்,தங்களின் நலத்தில் நாட்டம் .

தங்களின் “ஆ பக்கங்கள் நான் ராமானுசன்” பகுதிகளைப் படித்து வருகிறேன்.கூகூள் மாமி போன்ற நகைச்சுவை கட்டுரைகளும் சுவையாக உள்ளன.

நான் ராமானுசன் ( ‘அடியேன் ராமானுசன்’ இன்னமும்  பொருத்தமோ! – வைணவத்திற்கே உரித்தான அடியேன் என்ற பதம் கலைஞர் தொலைக்காட்சி மூலம் பலரிடம்  சேர்ந்துள்ளது என்பது ஓரளவு  உண்மை )

நன்றாக அமைந்துள்ளது உங்கள் கைவண்ணம் .வைணவம் சென்னைப் பல்கலை கழகத்தில் படித்து (இளநிலை ,முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்று -அத்துணையும் பணி ஒய்வு பெற்றபின் -சென்னைப் பல்கலை கழகத்தின் “முன்னாள் வைணவ மாணாக்கர்கள் குழுமத்தின்”- Alumni Association of Vaishnavism – செயலாளர் என்கின்ற தகுதியிலும் நான் எனது குழுமத்திடம் பகிர்ந்து கொண்ட சில கருத்துக்களை உங்களிடம் சேர்ப்பிக்க விரும்புகிறேன்.

தங்களின் இப்பணி தொடர எனது அன்புகலந்த வாழ்த்துக்கள் !

இராமானுஜர் தொடர் 50 வது காட்சியைக் கடந்து விட்டது .ஸ்ரீமத் இராமானுஜர் ஓர் அவதார புருஷர் என்பதைப்பற்றி வலியுறுத்தத் தேவை இல்லை.

தன்  வாழ்நாள் முழுவதும் நாத்திகம் பேசுவதுமட்டுமல்லாது ,ஆத்திகர்களின் மனதை

புண்படுத்தியே காலம் கழித்த இதன்  வசனகர்த்தாவின் மனப்போக்கை நாம் அறிவோம்.

.ஆனால் அவரது வாழ்நாட்களின் இறுதி கட்டத்தில் தனது கடந்த கால வாழ்க்கைக்கு ஒரு பிராயச்சித்தமாகவே இத் தொடரில் தன்னை இணைத்துள்ளார் என்றே நான் கருதுகிறேன்.

ஓர் ஆத்ம பரிசோதனைக்கு நாம் நம்மையே ஈடுபடுத்திக்கொள்ளுவோம்.

ஸ்ரீ ராமானுஜரின் வைணவத் தொண்டு ,சமூக தொலை நோக்குப்பார்வை, விசிஷ்டாத்வைத தத்துவத்தின் மேன்மை இவைகளை நாம் எந்த அளவிற்கு உணர்ந்துள்ளோம்? இவைகளை எந்த அளவிற்கு இதரர்களிடம் எடுத்துக் கூறியுள்ளோம்? நாம் தனி மனிதர்கள் -இது நம்மால் இயலுமா என்ற தயக்கம் நம்மிடம் இருக்கலாம்.இன்று நல்ல வசதியோடு இருக்கும் நம் மடங்களின்  பங்கு என்ன?

இந்த தொடர் தொடங்கியதிலிருந்து இத்தொடரைப்பற்றிய விளக்கங்களை என் நண்பர்கள் பலர் (வைணவம் அல்லாத) முக நூல் மூலம் பெற்று ஸ்ரீ ராமானுஜரைப் பற்றி அறிவது மட்டுமல்லாது அவரது செயல்களை வியந்து போற்றுகின்றனர்.வைணவம் என்றாலே தமிழ் என்பர். தமிழை வேதத்திற்கு நிகராக்கிய  ஸ்ரீ ராமானுஜரைப் பற்றி நம் சிலருக்கே தெரிந்த பல பெருமைகள் பலரிடம் போய்ச் சேர்ந்துள்ளது.

ஸ்ரீ எம்பார் எனப்படும் கோவிந்தரின் திருத்தகப்பனாரை ஒரு நகைச்சுவைப்  பாத்திரமாக   காட்டியிருப்பது ஒரு நெருடல். ஆயினும் ஸ்ரீ  சோமையாஜி, ஸ்ரீ   ,திருமலை நம்பி இவர்களை மிக உயரத்தி சித்தரித்து அந்த நெருடலை சரிசெய்து விட்டனர் எனலாம்.

பாதை

‘ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். ஒரு பெரிய மாமரம் இருக்கு. சில பூச்சிகள் அதோட இலைய சாப்பிடறது. சிலது மாம்பூவுல இருக்கற தேனை சாப்பிடறது. சிலது பழத்த சாப்பிடறது. சில பறவைகள் மரத்த ஓட்டை போட்டு அதுக்குள்ள இருக்கற புழுக்கள சாப்பிடறது. ஆனா மரம் ஒண்ணுதான்.

வாடகைக் காரின் முன் பெரும் மக்கள் திரள். கூட்டம் நகராமல் நின்றிருந்த்து. விமான நிலையம் விட்டு வெளியே வந்தவுடனே இந்தியாவை உணரத் துவங்கினேன். ‘கட்சிக் கூட்டம் ஸார். சாவடிக்கறானுக’, என்று அங்கலாய்த்தார் ஓட்டுனர்.

எங்கு பார்த்தாலும் சிவப்புக் கொடிகள் அருவாள் சுத்தியல் சின்னத்துடன். ‘மதவாத எதிர்ப்பு’, ‘நில உரிமைச் சட்டம்’ என்று எழுதப்பட்ட பதாகைகள் எங்கும் தென்பட்டன. கொடி ஏந்தியவர்களில் பெரும்பாலும் வயதானவர்களும் சில முதிய பெண்களும்.

தூரத்து மேடை மேல் என் வயதொத்த ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் சாயலில் எங்கள் ஊர் வாடை அடித்த்து. உற்றுப் பார்த்தேன். முகம் பரிச்சயமாக இருந்தது. காரை விட்டுக் கீழே இறங்கினேன். சந்தேகத்துடன் மேலும் கண்களை இடுக்கிப் பார்த்தேன். கொடி பிடித்திருந்த ஒரு இளைஞி சொன்னார்,’தோழர் ஆராவமுதன் பேசறார், தோழர். அனல் தெறிக்குது பாருங்க’.

ஒரு நிமிடம் என் கால்கள் பஞ்சு போல ஆவதை உணர்ந்தேன். ஆராவமுதன். எப்படிப்பட்டவன் அவன் ? சிவப்புச் சட்டை அணிந்து சிம்மம் போல் ‘முதலாளித்துவத்தை’ கிழித்துக்கொண்டிருந்த அமுதனை நம்ப முடியாத கண்களுடன் உற்றுப் பாத்தேன்.

ஆம். அவனே தான். நெற்றியில் அதே காயத் தழும்பு. பள்ளியில் காற்பந்து விளையாடிய போது கீழே விழுந்து ஏற்பட்ட விழுப்புண். நான் தான் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். இருபத்தைந்து வருடங்கள் கழிந்தாலும் பழைய நினைவுகள் அப்படியே மீண்டு வந்தன.

வகுப்பில் என் பென்ச்சிற்கு அடுத்த பலகை அமுதனுடையது. அவனை அப்படித்தான் நான் அழைப்பேன்.

அவன் பட்டாச்சாரியாரின் மகன். நல்ல வரும்படி. நில புலன்களும் நிறைய. அடுத்த வேளை உணவு பற்றியோ எதிர்காலம் பற்றியோ கவலை கொள்ளத் தேவை இல்லை என்றால் கலை, இலக்கியம், இசை எல்லாம் கைவரும் போல. அவனுக்கு அப்படித்தான் நடந்தது.

பள்ளியின் அனைத்துப் பேச்சுப் போட்டிகள், காற்பந்துப் போட்டி, நாடகம் என்று வெளுத்து வாங்கினான் அமுது. படிப்பிலும் சூரன் தான். பாரம்பரியம் காரணமாகப் பாசுரங்கள் அத்துப்படி. சில வேளைகளில் தனியாக சைக்கிளில் சென்று வரும்போது பாசுரங்களை நல்ல ராகத்தில் பாடிக்கொண்டே வருவான்.

எனக்கு அமுதனைக் கண்டு சற்று பொறாமையும் உண்டு. எதையும் ஒரு முறை படித்தாலே நினைவில் நிறுத்தும் ஆற்றல் பெற்றிருந்தான். எத்தனை நாள் கழித்துக் கேட்டாலும் அப்படியே சொல்வான். நிறைய வாசிப்பான். தடை செய்யப்பட்ட நூல்கள் என்று சொல்லி சில சிவப்பு அட்டை போட்ட நூல்களை அடிக்கடி படிக்கத் துவங்கினான்.

சிவப்பு நூல்களில் பல, உயர்தர ஆங்கிலத்தில், நல்ல வழுவழுப்பான அட்டை போட்டு ரஷ்ய வெளியீடுகளாக இருந்தன. பலமுறை நான் அந்நூல்களின் தாள்களைத் தடவிப் பார்த்ததுண்டு. நம் நாட்டுத் தாள்கள் ஏன் இவ்வாறு இருப்பதில்லை என்று எண்ணியதுண்டு. அவற்றைப் பார்க்கும் போது என் பள்ளி நூல்கள் செவலைப் பிள்ளைகள் போல் தோன்றும்.

இப்போது பார்த்தால் முழுநேர இடதுசாரி அரசியல்வாதி போல் பேசிக்கொண்டிருந்தான் அமுது. நேராக மேடையின் கீழே சென்று நின்றுகொண்டேன். அவன் என்னைப் பார்க்கவில்லை. வீராவேசமாக மத்திய அரசைச் சாடிக்கொண்டிருந்தான். அங்கு காரியஸ்தர் போல் தோற்றமளித்த ஒருவரிடம் என் அறிமுக அட்டையைக் கொடுத்து அமுதனிடம் கொடுக்க்ச் சொன்னேன். அதில் ‘மாயவரம்’ என்று எழுதியிருந்தேன்.

அன்று இரவே வந்து சந்திக்கும்படி அழைப்பு வந்தது. உணவருந்தத் தயாரக வருமாறு அவனது உதவியாளர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர் தொலைபேசியில் தெரிவித்தார்.

அமுதனைச் சந்திக்கச் சென்ற இடம் குரோம்பேட்டையில் ஒரு பழைய தொழிற்சங்கக் கட்டடம். அதற்கு எப்படியும் எண்பது வயதாவது இருக்கும். உள் அறையில் முப்பது வயதான மின்விசிறி சப்தத்துடன் வயதான கிழவர் நடப்பது போல் சுற்றிக்கொண்டிருந்தது. எந்நேரமும் விழுந்துவிடும் என்று தோன்றியது. அதன் கீழ் குறைந்தது அறுபதாண்டுகள் பழமையான மர மேஜையின் பின் வெள்ளை சட்டை போட்டு சிரித்தபடியே அமர்ந்திருந்தான் அமுதன்.  நெற்றியில் திருமண் இருந்ததற்கான தடயமே இல்லை. முழுவதுமாக மாறியிருந்தான் அவன்.

இருபதாண்டுப் பயணங்கள் குறித்துப் பேசினோம். உணவு முடிந்து சற்று சாவதானமாகத் தொடர்ந்தோம்.

‘ஏண்டா இப்படி ஆயிட்டே ? அப்பா ஒண்ணும் சொல்லலையா ?’, என்றேன்.

மிகப் பெரிய ஆற்றைத்தடுத்து நிறுத்தியுள்ள மாபெரும் அணையின் மதகைத் திறந்தது போல் அடுத்த ஒரு மணி நேரம் பேசினான்.

‘நீ கேக்கறது புரியறது. ஏண்டா நாஸ்திகவாதம் பேசற, பட்டாச்சாரியார் பரம்பரை ஆச்சேன்னு கேக்கறே’.

‘உனக்கு ஞாபகம் இருக்கா நம்ம ஸார் கிளாசுல எனக்கும் அவருக்கும் நடந்த வாக்குவாதங்கள் ? அதுதான் ஆரம்பம்’, என்று துவங்கினான்.

ஸார் எங்கள் தமிழாசிரியர். இலக்கியங்களில் கரைகண்டவர். அவருடன் அமுதன் பலமுறை வகுப்பில் தர்க்கவாதம் புரிந்திருக்கிறான். ‘தாஸ் கேப்பிடல்’ மற்றும் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் நூல்கள், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா முதலிய மார்க்சீய சிந்தனையாளர்களின் கருத்துக்களை அவன் வகுப்புக்குக் கொண்டு வருவான். அதற்கு ஸார் பதிலளிப்பார். சில புரிந்தும், பல புரியாமலும் நாங்கள் கேட்டபடி அமர்ந்திருப்போம்.

ஒன்று மட்டும் புரிந்தது. அமுதன் போன்ற ஆழ்ந்த ஞானமும் வாசிப்பும் தர்க்க அறிவும் உள்ள மாணவன் இடது சாரிகள் பக்கம் விழுந்துவிடாமல் இருக்க வேண்டும் என்று பிரம்மப்பிரயத்தனம் மேற்கொண்டார் ஸார்.

‘ஞாபகம் இருக்கு. ஸார் அவ்வளவு பேசியுமா நீ இப்படி ஆயிட்டே ?’, என்றேன் நான்.

‘ஸார் என்னடா சொன்னார் கீதையப் பத்தி நான் கேள்வி கேட்டப்ப ?’, ஆவேசமாக்க் கேட்டான் அமுதன்.

நன்றாக நினைவில் இருந்தது. அன்று வகுப்புக்கு சற்று முன்னதாகவே வந்துவிட்டார் ஸார். அவரிடம் கீதையின் சாரம் சொல்லும் ஒற்றைச் செய்தி என்ன?’ என்று கேட்டான் அமுதன்.

‘ஏன், சந்தேகமே இல்லாம சரணாகதி தத்துவம் தான்,’ என்றார் ஸார்.

இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தும் அந்த உரையாடால் என் நினைவில் இருந்தது. ஒரு சாதாரண வகுப்பறை மாபெரும் தத்துவ விவாதத் தளமாக ஆன அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அமுதனும் ஸாரும் நிகழ்த்திய அந்தத் தர்க்க வாதம் வெகு நேரம் நீண்டது. ஆங்கில ஆசிரியரும் அதில் கலந்துகொண்டார் என்றால் அதன் ஈர்ப்பு எவ்வளவு என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

‘சரணாகதிங்கறது நம்ம வைஷ்ணவாள்ளாம் சேர்ந்து கீதைக்குப் போட்டிருக்கிற தத்துவ விலங்கு ஸார். கீதை அதுக்கு மேலேயும் போறது’, என்றான் அமுதன்.

‘உண்மை தான். சரணாகதி இரண்டாவது அத்யாயமான சாங்கிய யோகத்துலேயே இருக்கு. ஆனால் அதற்கு அப்புறம் மேலும் பல அத்யாயங்கள்ள கர்ம யோகம், ஞான யோகம் எல்லாம் சொல்றார். இருந்தாலும் வெகு ஜனங்களால ஞான யோகமெல்லாம் சாதகம் பண்றது கஷ்டம் இல்லையா?’ அதனால சரணாகதித் தத்துவமான ‘சர்வ தர்மான் பரியஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ ங்கற சுலோகம் ஒண்ணு மட்டும் போதும்னு சொல்றேன். லௌகீகமான பொருளாதாரம் சார்ந்து வாழற மக்களுக்கு ஏத்தது ஞான யோகம் இல்லை. பக்தி தான், சரணாகதி தான். ஏதோ வயத்தக் கழுவிக்கணும், குடும்பத்தைக் காப்பாத்தணும் அதோட பெருமாள் விக்ரஹம் முன்னே ஒரு புஷ்பம் போட்டு ‘நாராயணா நீயே சரணம்’னு ஒரு வரி சொல்லிட்டு அவன் மத்த லௌகீக வாழ்க்கைக்குப் போகணும். அதனால பக்தி யோகம் மட்டுமே கலியுகத்துக்குப் போறும். அதனால சரணாகதி ஒண்ணே கீதையோட சாரம்னு சொல்றேன். மக்களால அனுஷ்டிக்க முடியாத ஞான யோகத்துனால அவாளுக்கு என்ன பலன்?’, என்றார் ஸார்.

ஸாரின் வாதம் சரியாகவே பட்டது எனக்கு.

ஆனால் அமுதன் மேலும் தொடர்ந்தான்.

‘ஆனா ஸார், அப்போ பக்தி யோகத்தையும் சரணாகதி தத்துவத்தையும் கடைசிலே வைக்காமல் ஏன் முன்னாடியே சாங்கிய யோகத்துல வெச்சிருக்கார்? பக்தி, சரணாகதி இதெல்லாம் கடந்து அப்புறம் அடையவேண்டிய உயர் நிலையே கர்ம யோகமும் ஞான யோகமும்ங்கறதால தானே ? அதோட, சாதாரண மக்களால சரணாகதி தத்துவம் தாண்டி யோசிக்கத் தெரியாதுங்கறீங்களா?’, என்று கேள்வி எழுப்பினான் அமுதன்.

ஸாரைத் தாக்குவது போல் தோன்றியது எனக்கு. இதற்கு அவர் பதில் அளிக்காமல் அவனை அமரச் செய்யவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் ஸார் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பது போல் புன்முறுவல் பூத்தபடியே அதற்கும் பதிலளித்தார்.

‘அமுதா, நீ சொல்றது நல்ல பார்வை. ஒரு ஆராய்ச்சியை இப்படித்தான் பண்ணணும். நான் சொல்ல வந்தது இது தான். கி.பி. ஆறு, ஏழு நூற்றாண்டுகள்ல மக்கள் கிட்டே சிந்தனாசக்தி அதிகம் இருந்தது. ஆதி சங்கரர் அத்வைத ஞானத்தைப் பரப்பின நேரம். அப்பவே உடம்பு வேற, ஆன்மா வேறன்னு சாதாரண மக்களுக்குப் புரிஞ்சு அதுனால சமணம், பௌத்தம்னு பல சம்பிரதாயங்களோட வாதம் எல்லாம் பண்ணியிருக்கா. அந்த மக்கள் கிட்ட போய் ஞான யோகம், மோட்ச சந்நியாச யோகம் எல்லாம் பேசலாம்.அவாளால அதை மேல எடுத்துண்டு போக முடியும்.

ஆனால் அதுக்கப்பறம் பக்தி இலக்கிய காலம் வந்தது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் என்ன சொல்லியிருக்கா ?

‘அந்தி மூன்றும் அனல் ஓம்புதலை விட உன் திருவடி போதும்’னு பேசறா. அதுக்கும் மேல மோட்சமே வேண்டாம். உன் நாமத்தையே சொல்லிண்டு பூலோகத்துலயே இருந்துடறேன். உதாரணத்துக்கு இந்த பாசுரம் தெரியாதா உனக்கு ?

“பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே”

நாம சங்கீர்த்தனம் மட்டுமே போரும்னு அவாளே சொல்றா. சாதாரண மக்கள் உய்யறதுக்கு பகவானோட நாமத்தைச் சொன்னாலே போறும்னு அப்பவே ஆயிடுத்து. ஆக, சாதாரண லௌகீக மக்கள் ஞானம், மோட்சம் எல்லாம் முடியாதுன்னு ஆழ்வார்களூக்கே தோணியிருக்கு.

அது மட்டும் இல்லை. பக்தி இலக்கியக் காலத்துக்கு அப்புறம் வந்த இராமானுஜர், எல்லாரும் மோட்சம் போக ஒரே வழின்னு நாராயண நாமத்தை மக்களுக்கு உபதேசிக்கிறார். ஆனா அவரேதான் கீதைக்கு பாஷ்யமும் எழுதறார். அவர் என்னோட பாஷ்யத்தின் படி படிச்சு மோட்சத்துக்குப் போங்கோன்னு ஏன் சொல்லவில்லை ? அவரே ஏன் சாணாகதியை வலியுறுத்தறார்?’, என்றார் ஸார்.

‘இராமானுஜர் சாமானிய மக்களின் அறிவைக் கம்மியா எடை போட்டார் என்கிறீர்களா ஸார்?’, என்று கேள்வி எழுப்பினான் அமுதன்.

ரொம்பவும் அதிகபிரசங்கியாக இருக்கிறானே என்று பட்டது எனக்கு. ஆனால் ஸார் அப்படி நினைக்கவில்லை.

‘அப்படி இல்லை. இராமானுசர் சாதாரண மக்களும் மோட்சம் நோக்கிப் போறதுக்கு என்ன வழின்னு யோசிச்சார். ஞானம், யோகம் என்று பாதை கடினமாக இருந்தால் மக்கள் திசை மாறி விடுவர். மேலும் ஜாதி அமைப்பும் அவர்கள் உய்வதற்கு வழி செய்யவில்லை. ஆகவே எல்லாருக்கும் புரியட்டும்னு ‘நாராயண’ நாமத்தை எல்லாருக்கும் உபதேசித்தார். இங்கே ரொம்பவும் சாதாரணமா சமூகத்துல கீழ் நிலைல இருக்கறவாளும் கரை ஏறணும்கற சம தர்ம இரக்க மனசு காரணம். அவாளுக்கு அறிவில்லேன்னு அர்த்தம் இல்லை.

ஞான மார்க்கம் வழியா மேலேற கல்வி வேணும். கல்வி கத்துண்டு எல்லாரும் படிச்சு ஞானம் அடைய ரொம்ப தலைமுறை ஆகும். உடனடியா ஒரு சமத்துவமும் உயர்வும் வேணும்னா எல்லாருக்கும் ‘அஷ்டாட்சரம்’ ( ஓம் நமோ நாராயணாய ) உபதேசம் பண்ணனும்னு செஞ்சார்’, என்றார் ஸார்.

சிறிது நீர் அருந்திவிட்டு மேலும் தொடர்ந்தார்.

‘அவர் காலத்துக்கப்புறம் வைஷ்ணவம் ரெண்டாச்சு. ஆப்கானிஸ்தான் அங்கிருந்தெல்லாம் படை எடுப்பு. அப்புறம் வெள்ளைக்காரா வர வரைக்கும் ஒரே களேபரம், பஞ்சம், பட்டினி. அதுக்கப்புறமும் பஞ்சம். இதிலெல்லாம் மக்களோட தேடல்கள் எல்லாம் பாழாப்போய் வெறும் சோற்றுப் பிண்டங்களாக மனிதர்கள் வாழ ஆரம்பிச்சா.

தேச விடுதலைக்குப் பிறகும் மக்கள் சாப்பாட்டுக்கு வழி செய்யற வேலைக்குத் தான் போனா. ஆத்ம விசாரம், ஞான மார்க்க முயற்சிகள் என்று எதுவும் இல்லை. ஏன்னா வெள்ளைக்காரா கொண்டுவந்த அடிமை அறிவுக் கல்வி மக்களை மர மண்டைகளா ஆக்கிடுத்து. இன்னும் அப்படித்தான் இருக்கு.

ஆகையால ‘கீதை மோட்ச சந்நியாச யோகம் போதிக்கற ஞானத் தேடலை முன் வைக்கறது, அதனால் எல்லாரும் அந்த வழியே போங்கோ’ன்னா அதைப் படிக்கறவனும் படிக்க மாட்டான். அதுனாலதான் இராமானுஜர் சொன்ன மாதிரி நானும் ‘சரணாகதி தத்துவமே கீதையின் சாரம்’னு சொல்றேன்’, என்று நிறுத்தினார்.

அமுதன் எழுந்து நின்று கை கூப்பினான். நாங்கள் அனைவரும் எழுந்து நின்று செய்வதறியாது விழித்தோம். சிலரது கண்களில் கண்ணீர், ‘எப்பேர்ப்பட்ட வியாக்கியானம்!’ என்று.

சன்னதம் கொண்டவர் போல் மேலும் தொடர்ந்தார். அவர் கண்களில் ஒரு தீவிர ஒளி தென்பட்டது.

‘ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். ஒரு பெரிய மாமரம் இருக்கு. சில பூச்சிகள் அதோட இலைய சாப்பிடறது. சிலது மாம்பூவுல இருக்கற தேனை சாப்பிடறது. சிலது பழத்த சாப்பிடறது. சில பறவைகள் மரத்த ஓட்டை போட்டு அதுக்குள்ள இருக்கற புழுக்கள சாப்பிடறது. ஆனா மரம் ஒண்ணுதான். கீதை அந்த மாமரம் போன்றது. யாருக்கு எப்படி சாப்பிடப் பிடிக்கிறதோ அப்பிடி சாப்பிடலாம். ஆனா எல்லாராலும் சுலபமா சாப்பிடறதுக்காக ‘சரணாகதி’ங்கற பழத்தை சாப்பிடுங்கோன்னு நான் சொல்றேன்’, என்று கூறி நாற்காலியில் அமர்ந்தார். ஆங்கில ஆசிரியர் கண்களில் நீருடன் எழுந்து நின்று கை தட்டினார்.

‘கடைசியா ஒரு கேள்வி ஸார்’, என்றான் அமுதன்.

‘நன்னா கேளு. ‘கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப்படாத செவி’ன்னு வள்ளுவர் சொல்றார். நீ கேட்கற கேள்விகளைப் பார்த்தா விவேகானந்தர் உன் ரூபத்தில் மீண்டும் வந்திருக்கிறாரோன்னு தோண்றது,’ என்றார்.

அமுதன் நெகிழ்ச்சியுடன் கேட்டான். ‘இந்த சாப்பாட்டுக் கல்வி பத்திக் கவலைப் படாமல் மேற்கொண்டு ஞான யோகம் தேடி நான் போகக் கூடாதா? இந்த லௌகீகக் கல்வியால எனக்கு ஒரு பயனும் இல்லையோன்னு தோண்றது,’ என்றான்.

ஸார் மௌனமானார்.

‘லௌகீகக் கல்வி எல்லாருக்கும் ஆனது. அதைக் கத்துக் கொடுக்கத் தான் நான் சம்பளம் வாங்கறேன். அதனால இதிலிருந்து வெளியே போய் ஞானத்தைத் தேடுன்னு என்னால சொல்ல முடியாது. முதல்ல நான் ஞானம் நோக்கிப் போறேன். அப்புறம் உனக்கு வழி காட்டறேன். அது வரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையா மேல படிச்சுண்டு இரு’, என்று ஒரு கையைத் தூக்கி ஆசி வழங்குவது போல் சொல்லிவிட்டுச் சென்றார்.

ஆனால் அதற்கும் அமுதனின் இன்றைய நிலைக்கும் என்ன தொடர்பென்று புரியவில்லை. கேட்டேன்.

‘சரிதான். தொடர்பில்லை தான். ஆனால் பதினாறு வருஷம் நான் கல்கத்தாவுல பல்கலைக் கழகத்துல தத்துவப் பேராசிரியரா இருந்தேன். போன வருஷம் மாயவரம் வந்தேன்.

எத்தனையோ மாணவர்களுக்கு அறிவுக்கண் திறந்து வெச்ச அவர், கை கால் இழுத்து, பாரிச வாயு வந்து நிலை குலைஞ்சு கிடந்தார்.

காரல் மார்க்ஸ் சொன்ன முதலாளித்துவ அரசுகள் அவரைக் கண்டுக்கலை. வணிக நோக்குல மட்டுமே செயல் படற பெரிய மருத்துவமனைகளால அந்த அறிவுச் சுடருக்கு சேவை செய்ய முடியல்ல. பணம், பணம்னு பிடுங்கித் தின்னானுங்க மருந்துக் கம்பெனிகள் எல்லாம். பதினாறு வயசுல எனக்கு ஆத்மா, உடல், பிரபஞ்சம்னு அறிவுக்கண்ணைத் திறந்த அவருக்கு, என்னால பணத்தால ரொம்ப ஒண்ணும் பண்ண முடியல.

அப்போ முடிவெடுத்தேன். இந்த தத்துவம்,விசாரம் எல்லாம் நம்ம நாட்டுக்கு இப்ப மட்டும் இல்லை, எப்பவுமே தேவை இல்லை. ஸார் சொன்ன மாதிரி சோத்துக் கல்வி, சோத்துக்கான வாழ்க்கைன்னு இருக்கற நாட்டு மக்கள் மத்தியில  அந்த மாதிரி விசாரமெல்லாம் வர்ரதுக்கு இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும். சாமானிய மக்கள் செத்த அப்புறம் மோட்சம் அடையறாளா இல்லையாங்கறது இப்ப அவசியம் இல்லை. வாழறச்சே தினம் தினம் செத்து செத்து வாழாம இருக்காளாங்கறது தான் முக்கியம். இது தான் இப்போ இருக்கற ஒரே தேவை. அதுக்கு சுரண்டல், மேலதிகாரம் எல்லாம் போகணும். இந்த முதலாளித்துவ அமைப்புகளால இயக்கப்படற அரசுகளும் வணிக நிறுவனங்களும் அழியணும். அதுக்கான முயற்சியே தேவைன்னு இதிலே முழுசா இறங்கிட்டேன்’, என்றான்.

ஸார் இருந்தால் ஒப்புக்கொள்வார் என்று தோன்றியது.

குளியல்

குளிக்கறதா வாணாமா ?

ஒவ்வொரு தபா சவாரி போக சொல்ல இதே ரோதனை தான். போன வருஷம் வரிக்கும் அம்மா இருக்க சொல்ல, ‘ சவாரி போற, நல்லா குளிச்சிட்டு ரீஜன்டா போ’ ன்னு சொல்லும்.

அது சரி இப்போ குளிக்கறதா வாணாமா ? குளிக்காம போனா கால் டாக்ஸி கெளம்பாதா என்னா ? இல்ல சவாரி தான் ஏற மாட்டானா ?

காலைல அஞ்சு மணிக்கி அடையாறு போய் கஷ்டமர பிக்கப் பண்ணினு, அப்டியே மாம்பலத்துல கஷ்டமரோட அண்ணனையும் இட்டுகினு சுண்ணாம்பு கொளத்தூர் போய்வரணும். நல்ல சவாரி தான். ஆனா குளிக்கணுமா ?

குளிக்காட்டா இன்னா ஆவும் ? ஒடம்பு சுத்தம் இருக்காது. அது சரி. மெட்றாஸ் வெய்யில்லே குளிச்சா என்ன குளிக்காட்டா என்ன ? ஒரு வழியா சவாரி போய் வந்து பொறவு குளிக்கலாம்.

அட இன்னாபா காலங்காலைல அடையாறுல இம்மாங்கூட்டம் ? மூணாவது தெருதானே சொன்னாங்க ? ஆங்.. அதோ அந்த தனி ஊடு தான். பார்ட்டி பெரிய பார்ட்டியா இருக்கும் போல. அடையாறுல தனி ஊடு வெச்சிருக்காங்கன்னா பெரிய கைதானே.

அட அய்யிரா ? ஏதோ விசேஷம் போல. தார்பாச்சி வேட்டி கட்டியிருக்காங்களே. அம்மிணியும் மடிசார் கட்டி வராங்க. நல்ல சகுனம் தான்.

ஆறு மணிக்கு மாம்பலத்துல என்ன கூட்டம் ? இந்த ஊர்ல எல்லாருமே மாம்பலத்துலதான் இருக்காங்களோ ?

‘இன்னா சார், குளிக்கலையான்னு கேக்கறீங்களா ? ஆமாம் சார். விடிகாலைல தண்ணி வர்ல. அதான் குளிக்கல. வேணும்னா சென்ட் அடிக்கட்டுமா சார் ?’

அட ராமா. இவுங்களுக்கும் தெரிஞ்சு போச்சே.

‘இன்னும் அரை மணி தான் சார். தாம்பரம் வந்துடும். பொறவு கால் மணில சுண்ணாம்பு கொளத்தூர் போயிடலாம் சார்’.

இன்னா கண்றாவிடா இது ? அண்ணனும் தம்பியும் என்ன பேசிக்கறானுங்க ? நல்ல விஷயத்துக்குப் போறானுங்க. ஏதோ கெரப்பிரவேசம் போல. ஆனா புது ஊடு கட்டினவங்களப்பத்தி இப்பிடி பேசுறாங்களே.

‘இதான் சார் அந்த தெரு. அதோ தெரிது பாருங்க அது தான் சார் அந்த ப்ளாட்டு. வாழை மரமெல்லாம் கட்டியிருக்காங்களே ’

அண்ணனும் தம்பியும் வீட்டுக்குள்ள போயிட்டாங்க. கொஞ்சம் காத்தாட வெளில நிக்கலாம்.

இந்த அய்யமார் வீட்டுக்கெல்லாம் போகக்கூடாது. வெளிலயே நின்னுக்கணும். எதுனா சொல்லுவானுவ. நமக்கு புரியாது. சாடையா சொல்லுவானுவ. வெளங்காத பயலுவ. அதான் எல்லா பேரும் அமெரிக்கா போயிட்டனுவ. ஒருவேள வெள்ளக்காரங்கிட்ட தீட்டு பாப்பானுங்களோ ?

ரெண்டு பேரும் என்ன பேச்சு பேசினாங்க காருக்குள்ள? ஏதோ இந்த வீட்டுக்காரங்க கடன் வாங்கினாங்களாம். ஆனா இப்ப வீடு வாங்கறாங்களாம். ஏக பொகச்சல் போல.

அட என்னப்பா ? போன வேகத்துல திரும்பி வராங்க. பின்னால ஓடி வார அம்மிணி இவுங்க போலவே இருக்கே. ஒரு வேள அக்கா, தம்பியா இருக்கலாம். ஆனா அழுவுது ?

‘வந்தவாள வாங்கோன்னு சொல்ல வக்கில்ல. அப்புறம் எதுக்குக் கூப்ட?’

‘இல்லடா கண்ணு தெரியல்லே. யார் வந்திருக்கான்னு புரியல்ல. வரச்சொல்லிட்டு வாங்கோன்னு சொல்ல மாட்டேனா?’

‘ஆமா ஆமா. கண்ணு தெரியாது, காது கேக்காது. பணம் வந்திருக்கோனோ, அதான் கண்ண மறைக்கறது’.

‘அட நாராயணா ! நான் தான் பாக்கல்லே, பின்னாடி நின்னுண்டிருந்தேன்னு சொல்றேனோனோ ? இவ்வளவு தூரம் வந்துட்டு இப்பிடிப் பேசாதேடா’.

‘இப்போ நாங்கள்லாம் உங்களுக்கு வேண்டாம். பணம் வந்துடுத்து. அடையார்லேர்ந்து வரோம். வந்தவாள வாங்கோன்னு சொன்னா பெருமை கொறஞ்சுடுமா ? இருக்கட்டும்.’

‘தோ பார்ரா, நான் முடியாம இருக்கேன். ஏதோ பிள்ளை வாங்கியிருக்கான் வீடு. வந்து ஆசீர்வாதம் பண்ணுவியா இப்பிடி  விடுவிடுன்னு போனா நன்னா இல்லே.’

‘எது நன்னா இருக்கு, எது நன்னா இல்லன்னு அவா அவாளுக்குத் தெரியும். நாங்க வறோம்’.

‘டே வேண்டாம்டா. எங்க சம்மந்தில்லாம் வந்திருக்காடா. எல்லாரும் பாக்கறாடா. அக்காவாத்துக்கு வரதுக்கு எதுக்குடா வரவேற்பெல்லாம்? நான் தான் பாக்கல்லேன்னு சொல்றேனே’.

‘உங்க சம்மபந்திக்கு முன்னாடி எங்கள அவமானப் படுத்தணும்னே தானே இப்பிடிப் பண்ணினே நீயும் அத்திம்பேரும். நன்னா இருங்கோளேன், யாருக்கு வேணும் உங்க மரியாத எல்லாம்.’

உள்ள போனவங்கள வான்னு கூப்பிடல போல. அந்தம்மா கண்ணு தெரியலேங்குது. இவுனுங்க கத்திட்டு வந்துட்டாங்க. கொஞ்ச நேரம் நல்ல காத்துல நிக்க முடியுதா ? என்ன பொழப்பு இது ?

‘என்னா சார் ? ரேடியோவா சார். யாரோ அய்யிரு சாமி பேசறாருங்க. வெக்கவா சார்?’

‘வேளுக்குடி கிருஷ்ணன் என்னமா சொல்றார் ? விசிஷ்டாத்வைத தத்வ ரத்னாகரம்னு பட்டம் குடுக்கலாம். உடம்பு வேற, ஆத்மா வேற. சுகம், துக்கம், சோகம், சம்ஸ்காரம், மரியாதை, அவமரியாதை எல்லாம் உடம்புக்குதான், ஆத்மாவுக்கு இல்லை. உடம்பு சாஸ்வதம் இல்லை. ஆத்மா தான் சாஸ்வதம். ஆகையால இந்த உலகத்துல நடக்கற காரியங்களால பாதிப்படையாம ‘ஸ்திதப் ப்ரக்ஞன்’ அப்பிடிங்கற ஸ்தானத்த நாம எல்லாரும் அடையணும்’ அடாடா என்ன வியாக்யானம். என்ன ஸ்பஷ்டம்?’

ஒண்ணும் பலன் இல்ல. குளிக்க வாணாம்னு முடிவு பண்ணிட்டேன்.

துறவி

கூட்டம் கை கூப்பி நின்றது. ‘சாமீ, சாமீ’ என்று அரற்றியது. பெருமாள் முதலியும் சண்முக சுந்தரமும் விழுந்து வணங்கினர். சாரியார் கூட்டத்தைப் பார்த்துக் கையை உயர்த்தி ஆசி வழங்கினார். பின்னார் எழுந்து நடக்கத் துவங்கினார்.

‘வெள்ளைக்கார துரைகள்ளாம் ஸ்வாமியப் பார்க்க வந்திருக்கா’, வீட்டு வெளியில் பவ்யமாக நின்றபடியே கூறினான் வத்சன். சாரியாரின் பல சீடர்களில் இளையவன் அவன். ‘ஸ்வாமி’ என்று அவன் அழைத்தது சாரியாரைத்தான்.

அவர் கொல்லைப்புறத்தில் சந்தியாவந்தனத்தில் இருந்தார். குந்தியிருந்தபடியே கைகளைத் தூக்கி ஆசி வழங்குவது போல் சைகை செய்தார் சாரியார். நான்கு கட்டு வீடாக இருந்தாலும் கொல்லையில் சந்தியாவந்தனம் செய்யும் போது வாசல் பக்கம் தெரியும் விதமாக அமைந்திருந்தது அந்த ஓட்டு வீடு.

தில்லை விளாகத்தில் சாரியார் பெரிய பண்டிதர். பலர் அவரிடம் பாடம் கேட்டனர். காலையில் வேதக்கல்வி, மாலையில் பிரபந்தம் மற்றும் தத்துவ விசாரங்கள் என்று சாரியாரின் காலம் கடந்துகொண்டிருந்தது. மூன்று போகம் விளையும் சில நூறு ஏக்கர் நிலங்களும் சில தென்னந்தோப்புகளும் இருந்தன. தில்லை விளாகம் அவருடையது.

சந்தியாவந்தனம் முக்கால் மணி நேரம் செய்வது சாரியார் வழக்கம். யாருக்காகவும், எதற்காகவும் அக்காலவெளி குறையாது. ‘இராம இராவண யுத்தத்துல இராமன் சைன்யம் எல்லாம் இழந்து நிற்கிறான். நாம விடற அர்க்யம்  தான் இராமனுக்கு பலம். ஆகையால அவசரமோ வேகமோ கூடாது’, என்று பல முறை சொல்லியிருகிறார் சாரியார். வத்சன் அதனால் வாய் மூடி மௌனியாக நின்றுகொண்டிருந்தான்.

துரைமார்களுக்கும் சாரியாரின் வழக்கங்கள் தெரியும். அவரது அனுஷ்டானங்கள் முடியும் வரை காத்து நின்றார்கள். மெதுவாக அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். பெரிய துரை போலத் தோற்றம் அளித்தவர் தன் கையில் இருந்த அரசுக் காகிதங்களைப் புரட்டிக்கொண்டு சில பகுதிகளை அடிக்கோ டிட்டுக்கொண்டிருந்தார்.

அரை மணி நேரம் கழித்துச் சாரியார் வந்தார். நல்ல வெளுத்த சரீரம். நெற்றியில் கம்பீரமான வடைகலை திருமண் ( நாமம் ). பஞ்ச கச்சம் அணிந்து மார்பின் குறுக்காக அங்க வஸ்திரம் அணிந்திருந்தார். அது அவர் தடிமனான பூணூல் போட்டிருப்பது போலத் தோற்றம் அளித்தது.

மிகப் பெரிய அலங்காரத்துடன் இறைவனைச் சுமந்து கொண்டு வரும் தேர் வீதியில் வந்தால் மக்கள் தங்களை அறியாமல் எழுந்து நின்று அஞ்சலி செய்வது போல் துரைமார்கள் அனைவரும் எழுந்து நின்றனர். இத்தனைக்கும் சாரியார் துரைமார்களை விட உயரத்தில் சிறியவராகவே இருந்தார்.

திண்ணையில் கால் மேல் கால் போட்டு சப்பணமிட்டு அமர்ந்த பின்னர், ‘என்ன வெள்ளைக்காராள்ளாம் வந்திருக்கேளே, தேசத்துக்கு ஸ்வதந்த்ரம் வரப் போறதால சொல்லிட்டுப் போகலாம்னு வந்திருக்கேளா?’, என்று புன்னகை செய்தார். அவர் சொன்னதில் உண்மை இருந்தது. வெள்ளையர் வெளியேறப் போவது ஒருவாறு உறுதியான நேரம் அது. இருப்பதா செல்வதா என்று பல வெள்ளையர் திண்டாடிய நேரம் அது.

‘வெள்ளைக்காராளுக்கு ஸம்பந்தமுள்ள ஒரு பள்ளிக்கூடம் கட்டணுமாம். அதுக்கு ஸ்வாமியோட குடும்பத்துலேர்ந்து தென்னந்தோப்பு பக்கமா நாலு ஏக்கரா நிலம் வேணுமாம்’, வத்சன் மெதுவாகக் கூறினான்.

‘நல்ல விஷயம் தான். தரலாம். ஆனா ரெண்டு விஷயம். ஒண்ணு, பள்ளிக்கூடம் யாருக்கு ? வெள்ளைக்காராளுக்கு மட்டுமா ?  இல்லை எல்லாரும் படிக்கலாமா ? ரெண்டாவது, தோப்பு பக்கமா இருக்கற எடம் நஞ்சை. அதை அழிக்கப்படாது. அதோட மாடு மேய்க்கறவாள்ளாம் அங்க வந்து தான் செத்த படுத்துக்கறா. மேலத் தெரு பக்கமா தரிசா ரெண்டு ஏக்கரா இருக்கு. அத வேணா தரேன்’’.

வெள்ளையர் முகத்தில் ஏமாற்றம். அவர்கள் நிலம் கேட்டது மாதா கோவிலுடன் சேர்ந்த ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதற்கு. வெளியில் பள்ளி என்று சொல்லிக்கொண்டார்கள். இதை வத்சன் சாரியார் காதில் சொன்னான்.

‘க்ஷமிக்கணும், அன்ய மதஸ்தாளா இருந்தாலும் கொழந்தைகள் படிக்கறதுக்குன்னு கேட்டதால குடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா உங்களவாளோட மத்த ஸ்தாபன்ங்கள்ள மதம் மாத்தறான்னு காதுல படறது. அதுனால அந்த எடத்துல ஏதானும் கோசாலை கட்டலாம்னா சொல்லுங்கோ; இன்னும் ரெண்டு காணி நிலம் சேர்த்துத் தரேன். ஆனா சனாதன தர்மத்தை அழிக்கக் காரணமான எதையும் நான் செய்ய மாட்டேன். நீங்க நீர் மோர் சாப்டுடுட்டுக் கிளம்புங்கோ’ என்றபடி வீட்டின் உள்ளே சென்றார்.

‘என்ன ராஜாங்கம் ? என்ன ராஜ்யம் ? ராஜாஜியே சொன்னாலும் தர்மப் பிரஷ்டமான காரியம் பண்ணலாமோ?’ என்று உள்ளேயிருந்து சாரியாரின் குரல் கேட்ட்து. மத மாற்ற நிகழ்வுகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்த நாட்கள் அவை. எவ்வளவு பெரிய உத்யோகஸ்தர்களானாலும், பதவியானாலும் சாரியாருக்குக் கவலை இல்லை. இது வத்சனுக்கும் தெரியும். எனவே அவன் மௌனமாகவே இருந்தான்.

மறு நாள் அமாவாசை. தர்ப்பணம் செய்துவிட்டு சாரியார் வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தார். வத்சன் ஓடி வந்தான். ‘ஸ்வாமி, ஜீயருக்கு தேக ஸௌக்கியம் இல்லையாம். திருமேனி அசக்தமாக இருக்கிறதாம்’, என்றான். அடுத்த ஒரு மணி நேரத்தில் சாரியார் ரயிலில் பயணப்பட்டுக்கொண்டிருந்தார்.

மிகச் சிறந்த ஆசார சீலரான அவர் மைசூர் வரை பிரயாணம் செய்த போதும் தண்ணீர் கூட அருந்தாமல் கண்ணீர் விட்டபடியே அமர்ந்திருந்தார். தன் ஆச்சாரியருக்கு உடல் நிலை சரி இல்லை என்பதால் மிகுந்த மன வருத்தத்துடன் பயணப்பட்டார்.

ஆச்சாரியர் என்றாலும் சம வயதுடையவர்களே இருவரும். ஒரே பாட சாலையில் பதின்மூன்று வருடங்கள் ஒன்றாக அத்யயனம் ( பயிற்சி ) செய்தவர்கள். யஜுர் வேத அப்யாசம் ( பயிற்சி ) செய்து,  பூர்ண அத்யாயி ( முழுமையாக்க் கற்றவர்கள் ) என்று பெயர் எடுத்தவர்கள்.

சாரியார் பல ஏக்கர்கள் நிலத்திற்குச் சொந்தக்காரர். தொடர்ச்சியாக இருபது வருடங்கள் மழை பொய்த்தாலும் உட்கார்ந்து உணவருந்த முடியும். நண்பரோ ஒரு வேளை உணவிற்கே சிரமப்படும் குடும்பம். ஆனாலும் இருவரும் ஆத்ம நண்பர்கள்.

முன்னர் பதவியில் இருந்த பெரிய ஜீயர் காலமாகும் தருவாயில் நண்பரை மடத்தின் பீடம் ஏற்க அழைத்தார். நண்பரும் பீடாதிபதியானார். சாரியாருக்குப் பரம சந்தோஷம். நண்பர் பீடம் ஏற்றவுடன் அவரை நெடுஞ்சாண்கட்டையாகக் கீழே விழுந்து வணங்கினார். வைணவத்தில் இது தான் விசேஷம். ஆச்சாரிய ஸ்தானம் ஏற்றால் வயது வித்யாசம் எல்லாம் பார்ப்பதில்லை.

அந்த நண்பருக்குத்தான் உடல் நிலை சரியில்லை என்று சாரியார் கிளம்பியிருந்தார். மைசூர் வந்தடைந்தவுடன் சாரியார் ஜீயரை ஓடிச்சென்று பார்த்தார். ஜீயர் படுத்திருந்தார். கடுமையான ஜூரம். டாக்டர்கள் யாரையும் அண்ட விடவில்லை. விஷக்கடி என்று சொன்னார்கள். சாரியார் ஜீயரை விழுந்து சேவித்தார். எழுந்து அமர்ந்து ‘கருட தண்டகம்’ பாராயணம் துவங்கினார். ‘கருட தண்டகம்’ 700 ஆண்டுகளுக்கு முன் கடலூரை அடுத்த திருவஹீந்திரபுரத்தில் வேந்த தேசிகன் என்னும் பெரியவரால் அருளப்பட்ட சுலோகக் கொத்து. அதைப் பாடியவுடன் கருடன் தோன்றினான் என்பதாக ஐதீகம்.

சாரியார் இரண்டு நாட்கள் விடாமல் பாராயணம் செய்தார். ஜீயரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒருவாரத்தில் எழுந்து அமர்ந்துவிட்டார். சாரியாருக்கு ‘மந்திர சித்தி’ உள்ளது என்று பேசிக்கொண்டனர்.

ஒருவாரம் உடனிருந்து பணிவிடை செய்துவிட்டு சாரியார் தில்லை விளாகம் திரும்பினார். கும்பகோணம் இரயில் நிலையத்தில் இறங்கி விளாகம் நோக்கி நடந்து வந்தார். நல்ல வெயில். நா வறண்டது. இன்னும் அரை மைல் தான். சற்று அமர்ந்து இளைப்பாற ஒரு கல் மீது அமர்ந்தார்.

வத்சன் ஓடி வந்தான். ‘ஸ்வாமி, ஜீயருக்குப் பழையபடி தேக அசக்தம். தந்தி வந்திருக்கு. தேவரீர் எழுந்தருளவேணுமாய் உத்தரவு’ என்றான். சாரியாருக்கு அதன் பொருள் புரிந்தது. வத்சனை தீட்சண்யமாய் ஒரு பார்வை பார்த்தார்.

‘வத்சா, ஒண்ணு பண்ணு. நான் ஊருக்கு வரல்லே. இங்கேயே இருக்கேன். உடனே ஓடிப்போய் கார்யஸ்தர் சர்மாவை அழைச்சுண்டு வா. கையோட எனக்குப் பாத்யதையுள்ள பத்திரங்களை எல்லாம் கொண்டு வரச்சொல்லு’, என்றார்.

ஒரு மணி நேரத்தில் தில்லை விளாகமே ஊர் வெளியே சாரியாரைச் சுற்றி அமர்ந்திருந்தது. சர்மா கையில் இருந்த பத்திரத்தை வாசித்தார்.

‘தில்லை விளாகம் கனபாடிகள் நாராயாணாச்சாரியாரின் மகன் நரசிம்மாச்சாரியாகிய நான், தெளிந்த மனதுடன் நல்ல ஸ்வாதீனத்துடன் எழுதிக்கொடுப்பது : மேற்படி கிராமத்தின் மேற்கு திசையில் தென்னந்தோப்பின் அருகில் உள்ள எனக்குப் பாத்யதைப்பட்ட நான்கு ஏக்கர் நஞ்சை நிலம், குடியானத் தெரு சண்முக சுந்தர நாயக்கருக்கும், வடக்கே காவிரிக்கரைக்கு அருகில் உள்ள எட்டு ஏக்கர் நஞ்சை நிலம் அதன் குத்தகைக்காரர் குடியானத் தெரு பெருமாள் முதலிக்கும், நன்னிலத்தில் உள்ள எனக்குப் பாத்யதையான பதின்மூன்று ஏக்கர் பாரத ஸ்வதந்திர அரசாங்கத்தாருக்குப் பிள்ளைகளுக்குப் பாடசாலை கட்டுவதற்காகவும் அளிக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் மற்றும் வீடு என் தாயார் மற்றும் மனைவி இருவரின் இறுதிக்காலம் வரை அவர்கள் அனுபவிக்கவும் பின்னர் அரசாங்கம் எடுத்துக்கொள்ளவும் கடவது.

இந்தப் பங்கீடுகளில் என் குடும்பத்தாருக்கும் என் வாரிசுகளுக்கும் பங்கில்லை’.

கூட்டம் கை கூப்பி நின்றது. ‘சாமீ, சாமீ’ என்று அரற்றியது. பெருமாள் முதலியும் சண்முக சுந்தரமும் விழுந்து வணங்கினர். சாரியார் கூட்டத்தைப் பார்த்துக் கையை உயர்த்தி ஆசி வழங்கினார். பின்னார் எழுந்து நடக்கத் துவங்கினார்.

வத்சன் மட்டும் அருகில் வந்து, ‘ஸ்வாமி, ஒரு தரம் ஆத்துக்கு வந்துட்டுப் போகணும்’, என்றான்.

ஊருக்கு எதிர் திசையில் நடந்துகொண்டிருந்த சாரியார் சொன்னார், ‘அதில்லை, ஆத்துக்கு வந்தா அம்மா இருக்கா. ஒரு வேளை மனசு மாறினாலும் மாறும். உடனே புறப்பட்டு வாங்கறது ஆச்சாரிய நியமனம். எங்க அம்மாவைக் கடைசிவரை நன்னா பார்த்துக்கோ’.

நான்கு நாட்களில் புதிய ஜீயராகப் பொறுப்பேற்றார் சாரியார். ஜரிகை வேஷ்டியைப் பஞ்சகச்சமாக உடுத்திய சாரியார் துவராடை உடுத்துத் துறவியானார். தில்லை விளாகத்தினுள் நுழையாமல் போனது ஏன் என்ற கேள்வி கேட்கப்படவில்லை. கேட்பதற்கு யாருக்கும் துணிவில்லை. பல நூறு ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரரான சாரியார் ஒரு நொடி நேரத்தில் அனைத்தையும் உதறிவிட்டு வந்தார் என்பது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.

அன்று ஆவணித் திருவோணம். தில்லை விளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பல ஆண்டுகள் கழித்து ஜீயர் ஊருக்கு வருகிறார். வயதான பிராமணர்கள் பஞ்சகச்சம் உடுத்திப் பன்னிரண்டு திருமண் தரித்து ஊர் வாயிலில் நின்றிருந்தனர். தங்கள் ஊரைச் சேர்ந்த பூர்வாசிரமத்தில் சாரியார் எனறு அறியப்பட்டவர் அன்று அந்த ஊருக்கே வருகிறார். வீட்டு வாயில்களில் பெரிய கோலங்கள் போட்டிருந்தனர்.

வத்சன் பெரிய மனிதனைப் போல் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தான். ‘மாமி, மாமி’, என்று அறியப்பட்ட, ‘தேவிகள்’ என்று அழைக்கப்பட்ட கனகவல்லி அம்மாள் முன்னாள் சாரியாரின் மனைவி மட்டும் உள் அறையில் அமர்ந்து கண் கலங்கிக் கொண்டிருந்தார். என்ன இருந்தாலும் தன் கணவர் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஊர் வாயிலில் இருந்தபடியே சந்நியாசியானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இத்தனை வருடங்களும் அடக்கி வைத்த துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது.

ஆனால் இந்தத் துக்கம் மேலும் அதிகமான நாள் ஒன்று உண்டு. அது சாரியார் சந்நியாசம் பூண்ட நாள். கணவனும் மனைவியும் சேர்ந்து பல ஹோமங்கள் செய்ய வேண்டி இருந்தது. கணவர் மந்திரங்கள் ஜபித்து ஹோமம் செய்ய, கனகவல்லியம்மாள் அழுதுகொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் தன் கணவர் தன்னைப் பிரியப்போகிறார் என்னும் துக்கம் மேலோங்கி இருந்தது. ஒவ்வொரு ஜபமாகச் செய்யச் செய்ய, துக்கத்தின் அளவு அதிகமாகிக்கொண்டே இருந்தது. பின்னர் நடந்தது தான் ஆகக் கொடுமையானது.

அது சாரியாரின் ஆத்ம தர்ப்பணம். சாரியார் முழுமையான சந்நியாசியாக ஆவதற்குச் சற்று முன் நிகழும் நிகழ்வு அது. சாரியார் தனக்கே இறுதிக்காரியம் செய்து கொள்வது அது. ஒருவர் தனக்கே திவசம் செய்ய வேண்டும். அதை அவரது மனைவி ஒரு ஓரத்தில் நின்று பார்க்க வேண்டும். அதன் பின் இருவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஆக வேண்டும். மிகக் கடுமையான சந்நியாச விதிகளில் இது முதன்மையானது.

சாரியார் தன் வலது கையை உயர்த்தி ஒரு மந்திரத்தை உரக்கச் சொன்னார். ‘ஓ மக்களே, மேலே இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் தேவதைகளே, ஓ சூரியனே, உங்களிடம் நான் சூளுரைப்பது இது. நான் இனி நான் இல்லை. எனக்கும் இந்த உடலிற்கும் ஒரு தொடர்பும் இல்லை. நான் என் உடலில் இருந்தும், இந்த உடலின் தொடர்பில் உள்ளவர்களிடமிருந்தும், என்னிடமிருந்தும் விடுதலை பெறுகிறேன். எனக்கும் என் உடலிற்குமோ, எனக்கும் என் உடல் தொடர்புள்ள மற்றவர்களுக்குமோ இன்றிலிருந்து தொடர்பு அறுபடுகிறது. நான் நானாக இல்லாத இந்த உடலிற்குத் தர்ப்பணம் செய்கிறேன். இந்த உடலாகிய நான் இறந்து விட்டேன். இந்த ஆத்மா நல்ல கதி அடைவதாக’.

இந்தச் சூளுரைகள் தேவிகளைக் காயப்படுத்தின. ஆனாலும் சந்நியாச தர்மம் என்பது இதுவே என்று சாந்தமானார். அன்றிலிருந்து சாரியாருக்கும் அவரது இரத்த சம்பந்தமுள்ள யாருக்கும் தொடர்பில்லை என்று ஆனது. அதன் பிறகு இன்று தான் ஜீயராகச் சாரியார் விளாகம் வருகிறார்.

நான்கு நாட்கள் விமரிசையான விழாக்கள், உபன்யாசங்கள் என்று ஊர் திமிலோகப்பட்டது.

ஊருக்குள் இருந்த பெரிய மடத்தில் ஜீயரும் அவரது பரிவாரங்களும் முகாமிட்டிருந்தனர். கிளம்ப வேண்டிய நிலையில் ஜீயர் ஏற்பாடுகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தார். இரவு ஒன்பது மணி அளவில் கிளம்பினால்தான் மறு நாள் காலைக்குள் திருவள்ளூர் சென்று சேர முடியும். மறு நாளைய தினப்படி பூஜைகளுக்கு எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது என்பதில் ஜீயர் கவனமாக இருந்தார்.

எட்டரை மணி அளவில் வத்சன் மூச்சிரைக்க ஓடி வந்தான். ‘ஸ்வாமிகளைப் பார்க்க வேண்டும். ரொம்பவும் அவசரம்’, என்று சொன்னான்.

மடத்தின் வெளியில் சலசலப்பு கேட்டு ஜீயர் மெதுவாக எழுந்து வந்து பார்த்தார். வத்சன் சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தான்.

எழுந்து, வளைந்து நின்று, வாய்பொத்தி ,’அம்மா…’ என்றான்.

ஜீயரின் பூர்வாசிரம தாயார் சிறிது நாட்களாகவே படுக்கையில் இருந்தார். அவரைக் கனகவல்லி அம்மாள் தான் கவனித்து வந்தார். தான் செய்யவேண்டியது என்ன என்று ஜீயருக்குப் புரிந்த்து.

‘ஏற்பாடெல்லாம் ஆயிடுத்தா?’ என்றார்.

‘ஏற்பாடு’ என்றால் என்ன என்று வத்சனுக்குப் புரிந்தது.

‘ஆயிடுத்து அடியேன், யாரும் கண்ணுல பட மாட்டா’, என்றான்.

‘யாரும்’ என்பது ஜீயரான சாரியாரின் மனைவி கனகவல்லி என்பது வத்சனுக்குத் தெரியும். சந்நியாச ஸ்வீகரத்திற்குப் பிறகு மனைவி முன்னாள் கணவரின் பார்வை படும் இடத்தில் தென்படக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம். வைணவ மடங்களில் கடுமையாக்ப் பின்பற்றப்படும் ஒரு நியமம்.

வேறு ஓன்றும் பேசாமல் ஜீயர் திரிதண்டத்துடன் நடந்து வந்தார்.

சாரியார் தாயின் முகத்தைப் பார்த்தார். திரிதண்டத்தைக் கீழே வைத்து அக்னியை எடுத்துத் தாய் மேல் சேர்த்துப் பின் கை கூப்பினார்.

ஒரு முறை குளத்தில் நீராடி திரிதண்டம் எடுத்து ஜீயர் மடம் நோக்கித் திரும்பினார்.

பழைய கணக்கு – நூல் விமர்சனம் – ரெங்கபிரசாத்

உலகில் என்றும் பழைய கணக்காகப் பார்க்கப்படும் மானுடம் என்ற பண்பிற்குப் பின்னால் பயணிக்கிற புத்தகம்தான் “பழைய கணக்கு“.

மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு, நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது படைப்பாளியின்  கடமை. அதை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார். படிபவர்களை சம்பவங்களோடு ஒன்றிவிடச் செய்துவிடுகிறார்.

இவை வெறும் கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு வேயப்பட்ட கதையோ அல்லது நினைவுகூறலோ அல்ல. தான் கண்டு , கேட்டு , உணர்ந்த ஆளுமைகளின் வாழ்வியல் அனுபவங்களை, சாதனைகளை,  சிந்தனைகளை எழுத்துமுலமாக ஆவணங்களாகத் தந்துள்ளார் ஆசிரியர். நிஜத்திலும் , நினைவிலும் வாழும் எதார்த்த மனிதர்கள் ஒவ்வொருவரும் நம் கண்முன்னே வந்து போகிறார்கள்; ஆவணப்படம் காண்பது போல அவர்களின் வாழ்வும் செயல்பாடுகளும் காட்சிகளாக விரிகின்றன. வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் நூலாசிரியர் தன் கருத்துகளை ஆங்காங்கே விதைக்கவும் தவறவில்லை.

அறம் , சமுதாயக் கோபம் , வாழ்க்கையின்  ஓட்டத்தில் நாம் அவதானிக்க மறந்த , மறுத்த விடயங்கள் மூலம்   நம்மை நகர்த்திச் செல்லும் இந்நூல் படிக்கக் களைப்பு தராமல் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் நடைதான். சமூக சிந்தனையோடு தனக்கே உரிய எள்ளல் பாணியில் அவர் காட்டும் இடங்கள் நகைச்சுவையே என்று தோன்றினாலும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.

உபகாரம் என்ற கதையில் நூலாசிரியரின் சமுகப் பார்வை மூலம் சமூக முரண்களை அழகாகப் படம்பிடித்துக் கட்டியுள்ளர். //வாப்பா இருந்திருந்தால் இதே வயது தான் இருக்கும் அவருக்கும் // என்று தன் தந்தையை ஒப்பிட்டு பார்க்கும் போது , அங்கே மேலோங்கி நிற்ப்பது மனித நேயம் மட்டுமே . இராமனைப் பார்க்கக் கானகத்திற்கு பரதன் வந்தான், முனிவர்கள் வந்தார்கள் ஆனால் யாரும் இராமன் காட்டில் உணவிற்கு என்ன செய்வான் என்று நினைத்து அவனுக்கு உணவு கொண்டு வரவில்லை. குகன் ஒருவன் தான், இராமனுக்குத் தேவைப்படுமே என்று உணவு கொண்டு வந்தான். ஆகையால்தான் கம்பர் – ” உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்” என்று குறிப்பிடுகிறார். உபகாரம் கதையில் இதைப் போன்ற நிகழ்வைப் பார்க்கலாம் .

பெரிய தாக்கத்தை உண்டுபண்ணிய கதைகள் ‘மாயவரம்’ , ‘சார் விட்டுக்குப் போகணும்’. இந்த கதையின் பாதிப்பு , அடுத்த முறை என் வயது ஒத்த மாயவரம் ஊர் மனிதரைப் பார்த்தால் என்னுடைய அடுத்தகேள்வி, ‘உங்களுக்கு சாரைத் தெரியுமா?’ என்பதே. குருபக்திக்கு ஒருநல்ல உதாரணம் . நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக இதுபோன்ற ஆசிரியரைக் கடந்து சென்றுதான் இருப்போம் , மனிதனின் கையாலாகாத தன்மை கன்னத்தில் அறைவது போல் இருந்தது என்று குறிப்பிடும்போது,  இயற்கைக்கு முன் மனிதனின்  ஆளுமை எவ்வளவு குறைவு என்பதை  உறுதிப்படுத்துகிறது. இதயம் கனத்தது.

ஒரு தேரின் கதை – காரணப்பெயரான தேர்-அழுந்தூர் (செலுத்திய தேர் செல்லாமல் அழுந்திய காரணத்தினால் தேர்-அழுந்தூர் ) அதன் காரணத்தை இழந்து, பின்பு மீண்ட கதை. ஒற்றுமை மற்றும் விடமுயற்ச்சியின் பலன் பற்றி விளக்குகிறது. புறத்தில்  சில நேரங்கள்மட்டும் எரிந்த தீ , அகத்தில் அணைவதற்க்கு  ஐம்பது ஆண்டுகாலம் தேவைப்பட்டு இருக்கிறது.

‘கொஞ்சம் வரலாறு , கொஞ்சம் சுவாசம்’ கதை – நூலாசிரியரின் தார்மீக கோபத்தின் வெளிப்பாடாகத் தெரிகிறது . வரலாறு படைத்த தமிழினம்  அதை ஆவணப் படுத்தியது குறைவு அல்லது ஆவணப் படுத்தி இழந்தது  அதிகம். //இந்த தளத்தின் மேல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சுந்தர சோழனோ, பராந்தகனோ நின்றிருக்கலாம்//. அந்த தார்மீக கோபத்தின் நியாயங்களைப் பங்குபோட்டு கொஞ்சம் மன உறுத்தலோடு தான் இந்தக் கதையைக் கடக்க முடிந்தது. அமரர் சுஜாதா சொன்ன செய்திதான் நினைவில் நின்றது . கோயில் தூண்கள் சிலவற்றைத் தொட்டுக்கொண்டு, நம் முன்னோர்கள் கால்வைத்து ஏறியபடிகள் மீது நடந்துகொண்டு நாங்கள் இருவரும் இந்தக் கருத்தைப் பரிமாறிக்கொண்டோம். அப்போது எங்கள் முன்னோர்கள் தங்களின் குழந்தைகளைப் பார்ப்பது மாதிரி உணர்ந்தோம். அது ஒரு உன்னத அனுபவம்.

ஒளிரும் மகத்தான ஆளுமைகளைத் தனது எழுத்தில் ஆவணப்படுத்திய ஆமருவி தேவநாதன் பாராட்டிற்குரியவர். அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

மனித நேயம் தேவைப்படும் வரை இதுபோன்ற கணக்குகளும் தேவைப்பட்டுக்கொண்டுதான்  இருக்கும் .

வாழ்த்துக்கள் , தொடரட்டும் உங்கள் கணக்குப் பயணம்.

இராமானுசர் வந்திருந்த போது

கோபுர வாசல் சுவர்
கோபுர வாசல் சுவர்

என்ன அப்படியே நின்றுவிட்டீர்கள் ? மதிலைப் பார்த்து மலைத்துவிட்டீர்களா ? உள்ளே போங்கள். இன்னும் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன.

பிராகாரம்
பிராகாரம்

இது 1000 ஆண்டுகள் முன்பு இராமானுசர் நடந்து சென்ற பிராகாரம். வேதாந்த தேசிகரும் பிள்ளை லோகாச்சாரியாரும் நின்று கண்ணீர் மல்க வழிபட்ட சன்னிதிகள். இந்தத் தூண்களில் இராமானுசரின் கை பட்டிருக்கும். இதோ இந்தத் தூணில் சாய்ந்தபடியே கூரத்தாழ்வானின் ‘கண் போன கதையை’ இராமானுசர் கேட்டிருப்பார். அவர் உகுத்த கண்ணீரின் உப்பு இந்தத் தாழ்வாரங்களில் இன்னும் ஒரு சிறு படிமமாவது இருக்கும்.

குதிரை மண்டபம்
குதிரை மண்டபம்

இதோ இந்தக் குதிரைகளை, மண்டபத்தின் கற் சங்கிலிகளை இராமானுசர் பார்த்து வியந்திருப்பார். இந்த இடத்தில் நின்று நெடுஞ்சாண் கட்டையாகக் கீழே விழுந்து சேவித்துத் தனது அஞ்சலிகளை இராமானுசர் வரதனுக்குச் செய்திருப்பார். நீங்களும் அந்த இடத்தில் விழுந்து வணங்குங்கள். அவர் உடல் ஸ்பரிசம் பட்ட ஏதோ ஒரு மணல் துகள் உங்கள் உடலில் ஒட்டட்டும். அது போதும் கடைத்தேறுவதற்கு.

அதோ திருக்கச்சி நம்பிகள் என்ற வேளாள மரபில் உதித்த வைணவரிடம் இராமானுசர் அடிபணிந்து தெண்டன் சமர்ப்பிக்கிறார். கோவில் பிராகாரத்தில் இருவரும் ஒன்றாக விழுந்து சேவிக்கிறார்கள் பாருங்கள்.

புரந்தர தாசர்
புரந்தர தாசர்

இவர் யார் என்று பார்க்கிறீர்களா ? புரந்தர தாஸராக இருக்கலாம். அல்லது வேறு யாரோ அடியாராக இருக்கலாம். இக்கோவிலுக்குக் கைங்கர்யம் செய்த பல நூற்றுக் கணக்கான கைங்கர்ய பரர்களில் ஒருவராக இருக்கலாம். அவரையும் வணங்கிக் கொள்ளுங்கள்.

அட, அதோ கவிதார்க்கிக சிம்மம் என்று அழைக்கப்பட்ட வேதாந்த தேசிகர் வருகிறாரே ! அவரைப் பின் தொடர்ந்து ஒரு சீடர் குழாம் வருகிறதே ! ஏதோ வார்த்தை சொல்லியபடி வருகிறார் பாருங்கள். கருட தண்டகம் அல்லது வரதராஜ பஞ்சாசத்தாக இருக்கலாம். அவரே அருளிச்செய்த சுலோகங்களை அவரே சொல்லி வரும் அழகு என்ன அழகு !

அங்கே புஷ்கரணியின் அருகில் அரச உடையில் தோன்றுபவர்கள் யார் ? குலோத்துங்க சோழனும், விக்ரம சோழனும் ஒன்றாக வருகிறார்கள் பாருங்கள். அவர்கள் கட்டிய கோவில் அல்லவா இது ? இதோ இந்த மாபெரும் மதிள் சுவர் விக்ரம சோழன் கட்டியது அல்லவா ! அதைப் பார்க்கத்தான் வருகிறானோ அரசன் !

இல்லை இல்லை, அத்திகிரி வரதரை சேவிக்க வந்திருப்பார்கள்.

நீரின் அடியில் உறங்கும் அத்திகிரி வரதர் வெளியே வர இன்னும் பல ஆண்டுகள் உள்ளனவே ! 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தானே வருவார் அவர் ? அதுவரை இங்கேயே இருப்பார்களோ மன்னர்கள் ? இருக்கலாம். அவர்கள் கட்டிய கோவில். வேண்டியமட்டும் இருக்கலாம்.

சுவர்களிலும் தரையிலும் எழுதிக்கொண்டிருக்கிறார்களே இந்தக் கல் தச்சர்களும் கல்வெட்டெழுத்தாளர்களும் கோவிலின் வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் பாருங்கள். சோழர்கள் பற்றியும், பின்னர் வந்த பல்லவர்கள் பற்றியும் எழுதிக்
கொண்டிருக்கிறார்கள்.

நன்றாக உற்றுப் பாருங்கள் கருங்கல் சுவர்களை. தமிழில் வட்டெழுத்து, தெலுங்கு எழுத்து என்று பல வகையான எழுத்துக்கள் தெரியும். தெலுங்கு எழுத்துக்கள் கிருஷ்ணதேவராயர் செய்த உபயங்கள் பற்றியவை .

அன்னியருக்கு அஞ்சி நீள் உயர் சுவர்
அன்னியருக்கு அஞ்சி நீள் உயர் சுவர்

‘நீள் மதிள் அரங்கம்’ என்று கேட்டிருப்பீர்கள். இங்கு பாருங்கள். எவ்வளவு பெரிய மதிள் சுவர் ! அன்னியப் படை எடுப்புக்கு அஞ்சி எழுப்பப்பட்டவை இவை.

மேளச்சத்தம் கேட்கிறதே. அத்துடன் தியப்பிரபந்த பாரயண கோஷ்டியும் வருகிறது பாருங்கள். என்ன வேகமாகப் வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார் ! சற்று விலகி நின்று சேவியுங்கள். இராமானுசரும் தேசிகரும்
ஒன்றாக நின்றவண்ணம் சேவிக்கிறார்கள் பாருங்கள். அவர்கள் அருகில் பவ்யமாக நின்று கொண்டிருக்கும் மணவாள மாமுனிகளைப் பாருங்கள். இரு நூறு ஆண்டு கால இடைவெளி இவர்களுக்குள் இருந்தாலும் வரதன் இவர்களுக்கு ஒருவனே.

ஆச்சாரியார்கள் ‘திரி தண்டம்’ ( மூன்று கழிகள் ) ஏந்தியுள்ளனர் பாருங்கள். ஜீவாத்மா, பரமாத்மா, ஜடப்பொருள் மூன்றும் உண்மை என்று எடுத்துரைக்கும் விசிஷ்டாத்வைத சித்தாந்தம் இந்த மூவரின் கைகளிலும் ஒளிரும் திரி தண்டத்தால் உணர்த்தப் படுகிறது. இப்படி இருக்க இவர்களுக்குள் வேற்றுமை என்ன ?

மூவரும் ஒன்றாக சூக்ஷ்ம சொருபமாக நின்று பெருமாளைச் சேவிக்கிறார்கள் பாருங்கள்.

சூக்ஷ்ம சொரூபமா ? என்ன பேச்சு இது ?

இராமானுசர் யார் தோளின் மீதோ கை வைத்தபடி செல்கிறாரே, அவர் யார் தெரிகிறதா ? நல்ல கட்டுமஸ்தான உடல் வாகு, கரிய நிறம் ஆனால் உடல் மொழியில் பவ்யம், மரியாதை. அவர் தான் மல்லர் குலத்தவரான உறங்காவில்லி தாஸர். ஸ்ரீவைஷ்ணவனுக்கு ஜாதி வித்யாஸம் இல்லை என்று பறை சாற்றிய இராமானுசர் அவ்வாறே ஒரு மல்லனைத் தனது பிரதான சீடனாகக் கொண்டிருந்தார் என்று கேட்டிருப்பீர்கள். இதோ நேரே பார்க்கிறீர்கள்.

வயதான திருக்கச்சி நம்பிகள் என்ற வைணவரை இராமானுசர் வணங்கினாரே, அதைப் பார்த்தீர்கள் தானே ? நம்பிகள் வரதராஜன் என்ற பேரருளாளனின் சன்னிதிக்குள் சென்று அவருக்கு ஆலவட்டம் வீசுகிறார் பாருங்கள். இதில் என்ன வியப்பு என்கிறீர்களா ? அவர் எண்ணெய் வியாபாரம் செய்யும் வணிகர் குலத்தில் பிறந்தவர். இதைக் கருவறைக்கு வெளியில் இருந்து சேவித்தவர் ஒரு அந்தணர். அவர் இராமானுசர். முன்னவருக்குப் பின்னவர் சீடர். இது  வைணவம்.

தங்க விமானம்
தங்க விமானம்

என்ன தங்கம் போல் மிளிர்கிறதே என்று பார்க்கிறீர்களா ? ஆம், தங்க முலாம் பூசப்பட்ட விமானம் தான் அது. விமானத்துக்குத் தங்கம் பூசியாகி விட்டது. ஆனால் உள்ளங்களில் தான் இன்னும் அழுக்கு உள்ளது. இல்லாவிட்டால் வைணவர்களுக்குள்ளேயே இவ்வளவு பேதம் பார்ப்பார்களா ?  சரி, எழுந்திருங்கள்.

என்ன நினைவு இது ? என்ன அருகில் யாரையும் காணோம் ? இவ்வளவு நேரம் கூட நின்று யார் பேசியது ? நான் கண்ணில் கண்ட காட்சிகள் எங்கே ? இராமானுசர் எங்கே? தேசிகர் எங்கே ? திருக்கச்சி நம்பிகள் எங்கே ? மணவாள மாமுனிகளும் தேசிகரும் ஒன்றாக நின்று பெருமாளைச் சேவிக்கிறார்களா ? அதுவும் கலை பேதம் மிகுந்த காஞ்சீபுரத்தில் இரு கலைகளையும் ஒன்று சேர விட்டுவிடுவார்களா ? எந்த நூற்றாண்டு இது ?

திடுக்கிட்டு எழுந்தேன். வரதனை சேவிக்கக் கைகளை ஊன்றிக் கீழே குனிந்திருந்தேன். அப்படியே எவ்வளவு நேரம் இருந்தேனோ தெரியவில்லை.

மெள்ள எழுந்து முன்னம் இருந்த சன்னிதியை நோக்கினேன்.

கூப்பிய கையுடன் நின்றுகொண்டிருந்தார் கருடாழ்வார், சிலை வடிவில்.

ஒருவேளை கூட இருந்து பேசியது அவரோ ?

கோவிலுக்குக் கிளம்பும்போதே மனைவி சொன்னாள்,” கொஞ்சம் பொங்கல் சாப்பிட்டுவிட்டுப் போங்கள்”, என்று. நான் தான் அவசரமாகக் கிளம்பி வந்து, பசி மயக்கத்தில் இப்போது தென்கலையாரும் வடகலையாரும் ஒன்றாகப் பிரபந்தம்
சேவிப்பது போல் அதுவும் கஞ்சீபுரத்தில் சேவிப்பது போல், ஐயங்கார்களுக்கு ஜாதி வித்யாசம் இல்லை என்றெல்லாம்…

சே, என்ன ஒரு ஹலூசினேஷன்.

%d bloggers like this: