பெருமாளுக்கு உகந்த ராகம் – வாசகர் கடிதம்

‘பெருமாளுக்கு என்ன ராகம் உகந்தது’ என்ற எனது பதிவிற்கு நந்திதா என்னும் வாசகர் விளக்கமான பதில் அனுப்பியிருந்தார். ‘பனுவல்’ என்னும் தமிழ்ச் சொல்லிற்கு விளக்கமும் அளித்துள்ளார். தமிழ்ப் பாடல்களுக்கு ராகம் கூடாது என்றும் ‘பண்’ என்பதே உகந்தது என்றும் சொல்கிறார் அவர். அவருக்கு என் நன்றியறிதல்கள். அந்தக் கடிதம் பின்வருமாறு கொடுத்துள்ளேன். இதன் அடிப்படையில் உங்களுக்கு ஏதாவது பண் ( ராகம் ) தெரிந்தால் தெரியப்படுத்தவும். ( இசைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு, ராகுல் காந்திக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு போன்றது. )

வாசகர் கடிதம் :

வணக்கம்

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

பாசுரங்களை ராகத்தில் பாடுவதினும் பண்ணில் பாடுதலே நன்று. ராகத்தில் பதச் சேதம் வரும், பண்ணில் அது கூடாது. பண்ணுக்கு தேவ பாணி என்ற ஒரு பெயர் உண்டு. தத் விப்ராஸொ விபன்யவோ என்ற வேத பதத்தில் உள்ள விபன்யவ: என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் பன். அதற்குப் பொருள் இறைவனைத் துதித்தல் என்பதாகும். இதனைத் தமிழில் பண் என்பர்.

பண்ணை உடையது பனுவல் (பண்ணும் பனுவலும் பரதமும் விரதமும்) என்று கண்ணெடுத்தாகிலும் காணீரோ என்ற பாடலே எடுத்துக் காட்டு. பண்ணில் சிட்டைஸ்வரம் சேர்ப்பதில்லை. கைசிகப் பண்ணில் தான் நம்பாடுவான் பாடி வேதப் பயனைப் பெற்றார் என்பது வரலாறு.

ஆடி ஆடி அகம் கரைந்து என்ற பாசுரத்தில் நாடி நாடி நரசிங்கா என்ற பதம் உதாத்தத்தில் வரவேண்டும், அமரர் திரு எம் எம் தண்டபாணி தேசிகர் பாடியுள்ள “காதலாகி கசிந்து என்ற பனுவலில் வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது என்பது உதாத்தத்தில் வரும், காரணம் அந்தப் பனுவலின் சிகரமான பதம் வேத மெய்ப்பொருள் என்பதாகும் அது போன்று ஆடி ஆடி என்ற பனுவலில் நாடி நாடி நரசிங்கா என்பதும் உதாத்தத்தில் வரவேண்டும், தேவையானால் திரு தேசிகர் பாடிய காதலாகி என்ற பனுவலை அனுப்புகிறேன்

என்றும் மாறா அன்புடன்
நந்திதா

வைணவம் – ஆதி சங்கரரின் பங்கு

வைணவம் குறித்த முந்தைய பதிவில் ஆதிசங்கரர் போதித்த அத்வைதம் மக்களைக் குழப்பியது என்று தெரிவித்திருந்தேன். இந்த இக்கருத்து எனது ஒரு அனுமானம் மற்றும் சில ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு முதலியனவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

இந்தக் கருத்தினை சிலர் நான் ஆதி சங்கரரை அவதூறாகக் கூறியிருப்பதாகக் கருதியுள்ளனர். அவர்களின் இந்த அனுமானம் தவறு. எனது விளக்கம் பின்வருமாறு :

ஆதி சங்கரரின் காலம் ஆழ்வார்களின் காலத்தின் இறுதிக்கட்டம். அதாவது கி.பி.7 – கி.பி. 9 என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கி.பி. 1– கி.பி. 6 காலகட்டத்தில் ஜைனமும் பௌத்தமும் தமிழகத்தில் வேரூன்றி அதன் பின்னர் சமுதாயக் காரணங்களுக்காகவும் சித்தாந்தக் காரணங்களுக்காகவும் அழியத் துவங்கிய நேரம். அவற்றின் அழிவை வேகப்படுத்திய பெருமை ஆதி சங்கரருடையதே. அவரது அத்வைத சித்தாந்தம் கருத்தியல் ரீதியாக ஜைனத்தையும் பௌத்தத்தையும் களைய வழிவகை செய்தது. சங்கரரின் வாதத்தின் முன் பௌத்தர்களின் ‘சூன்ய’ சித்தாந்தம் எடுபடவில்லை. அத்துடன் சேர்ந்து அக்கால சமுதாயக் காரணங்களும் இந்த அழிவிற்கு வழி கோலின.

ஆனால் பௌத்தமும் ஜைனமும் கோலோச்சிய காலத்தில் பாரத தேசம் முழுவதும் அதன் வீச்சு தென்பட்டது. தமிழகத்தில் மட்டும் அந்த அளவு இல்லை. இருப்பினும் அவர்களது ஆளுமை வணிகர்களிடம் இருந்ததை நாம் பார்த்தோம். களப்பிரர் காலம் முடியும் வரை அவர்களது ஆளுமை தென்பட்டது.

ஆனால் தமிழகம் தவிர்த்த வட மாநிலங்களில் சனாதன தர்மம் ( அப்போது இந்து மதத்திற்கு அது தான் பெயர் ) மிகப்பெரும் அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வீழ்ச்சியைத் தடுத்து  நிறுத்தியதில் ஆகச் சிறந்த பணி ஆதி சங்கரருடையது என்பதில் ஐயமில்லை.

ஆதி சங்கரர் பாரதம் முழுவதும் நடந்து சென்று பல ஜைன பௌத்த குருமார்களை வாதத்தில் வென்று அத்வைத மதத்தை நிலைநாட்டினார். இந்த முயற்சியில் பல  சீடர்களையும் பெற்றார். பாரதம் முழுவதும் பயணித்து ஐந்து சக்தி பீடங்களை நிர்மாணித்தார். அவற்றின் மூலம் அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டினார். இதன் மூலம் ஜைன பௌத்த மதங்களை சித்தாந்த ரீதியாக வென்றார்.

மாபெரும் அழிவில் இருந்து இந்து மதத்தைக் காத்தார் சங்கரர். அறுவகையான சமயங்களை செழுமைப்படுத்தினார். முன்னமே பல வகைகளில் இருந்த காளி, விஷ்ணு, கணபதி, சூரியன், சிவன் முதலிய தெய்வங்களின் வழிபாட்டை ஆற்றுப்படுத்தினார். எனவே அவர் “ஷண்மத ஸ்தாபனாச்சார்யா”  ( ஆறு மதங்களை ஸ்தாபனம் செய்தவர் ) என்று போற்றப்பட்டார். பல நூல்களுக்கு உரைகள்  எழுதினார்.

சனாதன தர்மம் இன்றளவும் வாழ்வதற்கு ஆதி சங்காரின் பணி மிகவும் இன்றியமையாதது.  இந்தியத் தத்துவம் என்றாலே அத்வைதம் தான் என்று கூறும் அளவிற்கு அவரது தாக்கம் இருந்தது. சுவாமி விவேகானந்தரும் வேதாந்தம் என்பதை அத்வைத வேதாந்தம் என்று கூறும் அளவிற்கு ஆதி சங்கரரின் வீச்சு இருந்தது.

ஆயினும் அத்வைத சித்தாந்தம் அறிவாளிகளின், புலவர்களின் வாதத்தில் மட்டுமே திகழ்ந்தது என்பதே உண்மை.

சித்தாந்த ரீதியாக சில குழப்பங்கள் இருந்தன என்பதும் உண்மை.  பிரும்மம் ஒன்றே என்று கூறினார். உலகமும் மற்ற உயிர்களும் இந்த ஒரு பிரும்மத்தின் பிம்பம் என்றார். ஆனால் உயிர்களிடத்தில் வேறுபாடு இருந்தது நிதர்சனம். ஆண்டான் அடிமை முறை நடைமுறையில் இருந்தது. ஆங்கிலத்தில் சொல்வதானால் ‘Lack of Inclusiveness’  என்று கூறலாம்.

ஆதிசங்கரரின் வாழ்விலேயே இதனைக் காணலாம். ஒருமுறை அவர் நீராடி வரும்போது ஒரு புலையர் குலத்தவன் எதிரில் வந்துள்ளான். அவனை ‘ஒத்து, ஒத்து’ என்று கூறியுள்ளார் சங்கரர். அப்போது அந்தப் புலையன் ‘உங்கள் சித்தாந்தப்படி நானும் நீங்களும் ஒரே பிரும்மத்தின் வேறு வடிவங்கள் என்றால், நான் எதனிடமிருந்து விலகுவது?  ‘அன்ன மய கோசமான’ எனது உடம்பிலிருந்து விலகிச் செல்லச் சொல்கிறீர்களா ? அல்லது ‘பிராணமய கோசமான’ ஆத்மாவிலிருந்து விலகச் சொல்கிறீர்களா?” என்று கேட்டுள்ளான்  என்று சங்கரரின் வரலாறு கூறுகிறது.

ஆதிசங்கரர் தத்துவம் ஞான மார்க்கம் என்று வகைப்படுத்தப்படுகிறது. அவர் அறிவுக்கு முதலிடம் கொடுத்தார். லௌகீக விஷயங்களுக்கு இரண்டாம் இடமே கொடுத்தார். இது பற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவரது ‘இந்தியத் தத்துவம்’ என்னும் நூலில் ஆதி சங்கரரது கொள்கை “ஆன்மாவற்ற தர்க்கம்” ( Soulless Logic ) என்று குறிப்பிடுகிறார்.

அத்வைதத்தைக் கேலி செய்யும் விதமாக ஒரு புனைவு சொல்வதுண்டு. ஒரு அத்வைதி தெருவில் நடந்து சென்றாராம். அப்போது ஒரு காளை மாடு நிதானமிழந்து தெருவில் ஓடி வந்ததாம். அத்வைதியின் நண்பர் ,”ஓய் அத்வைதியே, உமது சித்தாந்தந்தின் படி நீங்களும் மாயை, அந்தக் காளை மாடும் மாயை. எனவே ஒரு மாயை இன்னொரு மாயையை முட்டுவதால் ஒன்றும் ஆகாது. பயப்படாமல் செல்லும்” என்று கூறினாராம். இது வேடிக்கைப் புனைவுதான் என்றாலும் அத்வைத சித்தாந்தம் சிறிது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று காட்டவே இது புனையப்பட்டிருக்க வேண்டும்.

சங்கரரின் ஆயுட்காலம் மிகச் சிறியது. அதனுள் அவர் ஆற்றிய பணி மிகப் பெரியது. சனாதன தர்மத்தின் ஆணி வேரையே அசைத்த ஜைனத்தையும் பௌத்ததையும் சித்தாந்த ரீதியாக வலுவிழக்கச் செய்த பாரதப் பெருமகன் ஆதி சங்கரர். இவர் ஆற்றிய பெரும் பணியினைத் தொடர்ந்தார் இராமானுசர் என்று கூறலாம்.

ஆதிசங்கரரின் பணி உடனடித் தீமையை அகற்றி சனாதன தர்மத்தைக் காத்தது. இராமானுசர் பணி அவர் வாழ்ந்த காலத்தின் நடைமுறைகளை அனுசரித்து அதனை மேலே கொண்டு சென்று அனைவருக்கும் பொதுவான ஒரு ஆன்மிக சக்தியாக உருவாக்கியது என்று கொள்ளலாம்.

வைணவம் – தத்துவ தரிசனம்

விசிட்டாத்வைத தத்துவத்திற்குள் புகும் முன் அதன் சமகால அல்லது சற்று முற்கால தத்துவங்கள் நிலை பற்றி சிறிது பார்ப்போம்.

மேலே செல்லும் முன்பு பின்வருவதை நினைவில் கொள்ள வேண்டும்.

பக்தி மார்க்க சமயங்களான சைவமும் வைணவமும் வேதத்தை முதலாக வைத்தன. ஜைனமும், பௌத்தமும் வேதத்தை மறுத்தன. கடவுள் மறுப்பை ஆதரித்தன.  இவை இவற்றுக்கிடையே உள்ள முக்கிய சித்தாந்த ரீதியான வேறுபாடு.

உலகம் இரண்டு வகையாகப் பார்க்கப்பட்டது. ஒன்று – இவ்வுலகம் ஜடப் பொருட்களால் ஆனது. ஆகவே இவ்வுலகத்தைப் பொருள் ரீதியாகவே பார்க்க வேண்டும். இது பொருள் முதல் வாதம். இரண்டாவது – இவ்வுலகம் கருத்து ரீதியானது. ஒரு கருத்தை ( Philosophy, சித்தாந்தம்) முன் வைத்து இவ்வுலகத்தை அணுக வேண்டும். இது கருத்து முதல்வாதம். இவை இரண்டின் மூலமாகவும் நாம் நமது வைணவப் புரிதலை அணுகுவோம்.

சமணம் கூறுவது :

உலகம் இரண்டு தெளிவான பிரிவுகளை உடையது. உடல், உயிர். அவர்கள் உயிரை சீவன் என்றும் உடலை அசீவன் என்றும் அழைத்தனர். இவை இரண்டுமே அழிவில்லாதவை என்று வாதிட்டனர். சீவன் ஆத்மா என்று அழைக்கப்பட்டது. அது ஒன்றல்ல, பல என்றனர். ஒவ்வொறு ஆன்மாவும் ஏற்கும் பொருளின் அமைப்பையும் அளவையும் கொண்டுள்ளது என்றனர். எறும்பின் ஆன்மா யானையின் ஆன்மாவை விட சிறியது என்பது அவர்கள் தத்துவம். இவ்வான்மாக்கள் உலகத்துடன் தொடர்பு கொள்ளும்போது அல்லல் படுகின்றன என்றனர். இதைப் புரிந்துகொள்வது ஞானம் என்றனர். சீவன் என்பது அறிவுள்ளது. அது அசீவனுடன் தொடர்பு கொள்ளும்போது கெட்டழிகிறது ; இதனைத் தவிர்த்துப் பரிபூரண அறிவைப் பெற வேண்டும். அதுவே முக்தி. இது தவிர கடவுள் என்பது இல்லை என்றனர்.

பௌத்தம் மூன்று உண்மைகள் பற்றிப் பேசுகிறது. முதல் உண்மை – புலன்களால் உண்டாகும் பற்றுகள் துன்பம் தருவன. இரண்டாவது உண்மை – துன்பம் விளைவதற்குக் காரணமானவற்றை உணர்வது. மூன்றாவது உண்மை – துன்பத்திலிருந்தும் அதன் காரணத்திலிருந்தும் விடுதலை அடைவதை அறிவது. இந்த மூன்றும் அறிந்து கடை பிடித்தால் துன்பமற்ற நிர்வாண நிலை அடையலாம். இதற்கு வேதம், கடவுள் முதலியன தேவை இல்லை.

பௌத்தம் கூறுவது :

இவ்வுலக நிகழ்ச்சிகள் எல்லாம் மூன்று தன்மைகளை உடையன. ஒன்று- நித்யம் – எல்லாம் மாறும் தன்மை கொண்டவை; எனவே நிலை அற்றவை. இரண்டு – துக்கம் – உலகம் துன்ப மயமானது. மூன்று – அநாத்மம் – இவ்வுலகில் ‘யான்’ என்று அழைக்க ஒன்றும் இல்லை. எனவே ஆன்மா என்பதே இல்லை.இது  புத்தர் கூறியது.

ஆனால் பின்னர் வந்த மகாயானம், ஹீனயானம், தேரவாதம் முதலிய பௌத்த சமயங்கள் மக்களைக் குழப்பின. “தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை, நிலைத்தலும் இல்லை, நிலையாமையும் இல்லை, ஒருமையும் இல்லை, பன்மையும் இல்லை, உருவாவதும் இல்லை, அழிவதும் இல்லை. எல்லாமும் சூன்யமே. சூன்யம் எல்லை அற்றது. சூன்யம் மட்டுமே உள்ளது என்று போதித்தன.

இவை போதாதென்று உலகாயதம் என்னும் கருத்தும் நிலவியது. உலகாயதர்கள் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உலகில் நிகழ்வுகள் உள்ளன. கண்ணால் காணப்படும் பொருட்கள் மட்டுமே உண்மை. மற்றதெல்லாம் பொய் என்றனர். எனவே கடவுள், ஆத்மா, வேதம் முதலியன பொய் என்றனர். இதற்கு சார்வாகம் என்று ஒரு பெயரும் உண்டு.

‘சுவை ஒளி ஓசை உரு நாற்றம் இவ்வைநதின்
வகை தெரிவான் கட்டே உலகு” என்ற திருக்குறளும் இதன்படியே உள்ளதாக சில அறிஞர்கள் கூறுவர்.

இந்நிலையில் ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்தம் வேறு பரிணாமம் அளித்தது.

சங்கரர் வேதாந்த வாதி. ( வேதாந்தம் = வேதத்தின் அந்தம், இறுதி ). வைதீக மரபைச் சார்ந்தவர். இவரது தத்துவம் அத்வைதம் ( அ + த்வைதம் ) – இரண்டில்லாதது என்பது பொருள். பிரம்மம் ஒன்றே. அது குற்றமில்லாதது. அது மட்டுமே உள்ளது. உலகம், உயிர்கள், ஜடப்பொருட்கள் எல்லாம் அந்த பிரும்மத்தின் பிம்பம், வெறும் தோற்றம். ஆகவே இவ்வுலகம், மனிதன், ஜடப்பொருட்கள் முதலியன வெறும் மாயை. இதுவே அவரது அத்வைத சித்தாந்தம்.

இது ஏற்றம் பெறக் காரணம் மன்னனும் அவனுடன் இருந்த உயர்குடி மக்களும். ஒரே ஒரு தலைவன் என்பதும், அவன் குற்றமிலாதவன் என்பதும் பிரும்மத்தை மட்டுமின்றி மன்னனையும் குறிப்பதாக இருந்தது. மன்னன் சிறப்பானவன். அவன் தவிர அனைவரும், அனைத்தும் சிறப்பிலாதவர்கள், முக்கியத்துவம் அற்றவர்கள் என்னும் விதமாக சமூகப் பார்வை கொண்டு பார்க்கப்பட்டது அத்வைதம். ஆனால் இது கை வினைஞர்கள், சிறு நில விவசாயிகள் முதலியோரிடம் எடுபடவில்லை.

அத்துடன் இவ்வுலகமும் இதன் பொருள்களும் உயிரினங்களும் மாயை என்பது மக்களுக்கு வியப்பளித்தது எனலாம். உலகமும், உயிர்களும், செல்வம் முதலியனவும் தோற்றம் என்றால் அதற்காக உழைக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தனை பாடுபட்டாலும் பண்ணையில் உழைத்தாலும் வரும் பொருளோ குறைவு. அதுவும் மாயை, உண்மை இல்லை என்று கொள்ள வேண்டும். ஆனால் பெருநிலக் கிழார்கள் நம் உழைப்பினால் நல்ல நிலையில் உள்ளனர்; அருசுவை உணவு கொள்கின்றனர்; சம்போகங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ்கின்றனர்; அவை உண்மை இல்லையா? அதுவும் மாயையா? என்பது போன்ற குழப்பங்களில் சாதாரண மக்கள் ஆழ்ந்தனர் என்று நினைக்க இடமுள்ளது.

இதற்கு மாற்றாக வந்தது இராமானுசரின் விசிட்டாத்வைதம் ( விசிட்டம் + த்வைதம் ).இது பிரும்மத்தை ஒப்புக்கொள்கிறது. ஆனால் அது ஒன்று மட்டுமே மற்றதெல்லாம் மாயை என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. இதன் சித்தாந்தம் பிரும்மம் ஒன்று. அது பரமாத்மா என்றும் அறியப்படுகிறது. மற்றவை அனைத்தும் ஜீவன்கள். அவை ஜீவாத்மா. மரம், விலங்கு, மனிதன் அனைத்தும் ஒன்றே. ஏனெனில் அவற்றுள்  உள்ள ஜீவாத்மா ஒரே குணமும் அளவும் கொண்டது. ஒரு விலங்கின் உள்ளே உள்ள ஆத்மாவும் மனிதனின் உள்ளே இருக்கும் ஆத்மாவும் ஒன்றே. அதனதன் பூர்வ ஜென்ம பலன்களால் அவை ஒரு தோற்றம் கொண்டு ஏதோ ஒரு உடலில் உள்ளன. எனவே ஆத்மா அளவில் ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் வேறுபாடில்லை.

உதாரணமாக “எனது புத்தகம்” என்கிறோம். இங்கு “எனது” என்பது நமது உடலைக் குறிக்கிறது. “எனது கை” என்னும் போதும் “எனது” என்பது நமது உடலைக் குறிக்கிறது. அதுபோல, “எனது உடல்” என்னும்போது “எனது” என்பது எதைக் குறிக்கிறது ? அதுதான் “ஜீவாத்மா” என்னும் நமது ஆத்மாவைக் குறிக்கிறது. ஆக நான் என்பது உடல் அல்ல. ‘நான்’ வேறு ; உடல் வேறு என்று அறிவுறுத்தியது.அதுபோல் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு ஆன்மா உள்ளது. அவை அனைத்து ஒரே அளவிலானது.  ஆன்மா அளவில் வேறுபாடுகள் இல்லை; அந்தணன் ஆன்மாவும், பண்ணை அடிமை ஆன்மாவும், ஒரு மண் பாண்டத்தின் ஆன்மாவும் ஒன்றே என்பதே இராமானுச சித்தாந்தம்.

இதற்கு ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு உதாரணம் உண்டு. ‘ததிபாண்டன்’ என்னும் பானை செய்யும் தொழிலாளி கண்ணனிடத்தில் மிக்க பக்தி உடையவன். இறை நினைவாகவே பானைகள் செய்து வாழ்ந்து வந்தான். இறக்கும் சமயம் இறைவனிடம் அவன் தனக்கு மட்டும் மோட்சம் தேவை இல்லை என்றும் தனது பானைக்கும் மோட்சம் வேண்டும் என்றும் கேட்டான் என்று ஒரு கதை உண்டு. ஆக உயிரில்லாத ஒரு மண் பானைக்கும் ஒரு ஆத்மா இருப்பதாகக் கூறுவது வைணவத்தின் ஊடாக உள்ள விசிட்டாத்வைதம்.

இராமானுசர் ஆன்மா, பிரும்மம் முதலிய நிலைப்பாடுகளை ஒப்புக்கொள்வதால் கருத்து முதல் வாதியாகவும், உலகமும் உண்மை என்று ஒப்புக்கொள்வதால் பொருள்முதல்வாதியாகவும் ஒருசேரத் திகழ்ந்தார் என்றும் கருதலாம். எனவே கருத்துமுதல்வாதம் சார்ந்தவர்களையும் (அத்வைத மதத்தினர் , சைவர் ), பொருள்முதல்வாதம் சார்ந்தவர்களையும் (பௌத்தர், ஜைனர் ) முதலியோரை வைணவத்தின் பால் ஈர்த்தார் என்றும் கருத இடம் உள்ளது.

இராமானுசர் மேலும் கூறுவது – நமது உடல் நமது உயிரின்( ஆன்மாவின்) வீடு. அதுபோல் நமது ஆன்மா பிரும்மமான பரமாத்மாவின் வீடு. எனவே பிரும்மமும் உண்மை; உலகமும் உண்மை; ஜீவாத்மாவும் உண்மை. இதனை ‘த்ரயம்’ என்று வைணவம் கூறுகிறது. இதில் மாயை என்பதற்கு இடமே இல்லை. இவை சாதாரண மனிதனுக்குப் புரிவதாக இருந்தது.

இராமானுசரது இந்தக் கொள்கையைச் சற்று ஆராய்வோம். சாதி வேறுபாடுகளால், அடக்கு முறைகளால் பிளவு பட்டிருந்த ஒரு சமுதாயம். அந்த முறைகளை ஊக்குவிக்கும் அளவில் இருந்த சோழ, பாண்டிய அரசுகள். சமூகத்தின் அதிகாரத் தளங்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த பெருவாரியான மக்கள். இந்தச் சூழ்நிலையில் இவை அனைத்தையும் உடைத்தெறியும் நோக்கில் ஒரு புதிய சித்தாந்தம். அத்துடன் அது வைதீக மதத்தைச் சார்ந்தும் இருந்தது. இந்த சித்தாந்தத்தில் சேர எந்த ஒரு அங்கீகாரமும் தேவை இல்லை. அந்தணனாக இருக்க வேண்டாம், நாளும் மூன்று முறை அனல் ஓம்பும் சடங்கு செய்ய வேண்டாம், ஏழை-செல்வந்தன் வேறுபாடு இல்லை, பழைய குல அடையாளங்கள் மறைந்துவிடும், புதிய அடையாளமான ‘வைஷ்ணவன்’ என்ற ஒரே அடையாளம் கிட்டும் என்பது போன்ற திடீர் சமத்துவ நிலை மக்களை ஒரு பெரும் புயல் போலத் தாக்கியது. மக்கள் பெருமளவில் வைணவராயினர்.

இந்தப்பெரும் அதிர்ச்சி மன்னனையும் ஆட்கொண்டது. அவன் இராமானுசரைக் கொல்ல முனைந்தான். அவர் தப்பினார். இதுவும் ஒரு அடக்குமுறையை எதிர்க்கும் மனோபாவமாகக் கருத்தப்பட்டு வைணவத்தின் புகழ், ஈர்ப்பு அதிகரித்தது என்று கருத இடமுள்ளது.

பானை செய்பவரும், வேதம் ஓதுபவரும், சிறு வினைஞர்களும்  ஒன்றே என்ற சமத்துவம் பெரும் புரட்சி சித்தாந்தமாகக் கிளம்பியது. அதற்கு ஏற்ப இராமானுசரும் பிள்ளை உறங்காவில்லி தாசர் போன்ற மல்லர் குலத்தைச் சார்ந்த ஒருவரைத் தன் பிரதான சீடராக வைத்துக்கொண்டது, பானை செய்யும் குலத்தைச் சார்ந்த திருப்பாணாழ்வார், வேளாளர் குலத்தின் நம்மாழ்வார், கள்ளர் மரபின் திருமங்கை ஆழ்வார் முதலியோரை மதுரகவி, பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் முதலான அந்தணர் குல ஆழ்வார்களையும் ஒன்றாக கோவிலுக்குள் அமர்த்த ‘பாஞ்சராத்ரம்’ என்ற வழிமுறையைக் கொண்டுவந்தது  போன்றவை  பலரை ஈர்த்திருக்கக் கூடும் என்று நம்ப இடம் உள்ளது.

ஜீவாத்மா தன் பக்தியினால், நற்செய்கைகளால் பரமாத்மாவை அடைய முடியும், அதற்கு பக்தி ஒன்றைத் தவிர வேறு ஒரு தகுதியும் தேவை இல்லை, எனவே மன்னனாயினும், பண்ணைத் தொழிலாளியாயினும்  பக்தியின் மூலம் இறைவனை அடைந்தது சமத்துவம் காணலாம் என்னும் தத்துவம் அதுவரை இருந்த அனுமானங்களை எல்லாம் அசைத்துப் பார்த்தது என்று நம்ப முடிகிறது.

இதனாலெல்லாம் நாம் அறிவது இதுதான் : விசிட்டாத்வைதம் என்னும் இராமானுச சித்தாந்தம் வைதீக சித்தாந்தமாக இருந்துகொண்டே தத்துவ அளவிலும் சமூக அளவிலும் மக்களிடம் ஒரு குழப்பமில்லாத மன நிலையையும் அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரு வழியாகவும் அனைவரும் ஒன்றே என்ற உயரிய கருத்தையும் பறை சாற்றுவதாக இருந்ததால் அக்காலத்தில் சாதாரண மக்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது என்று கருதலாம்.

வைணவம் தொடர் – சில எண்ணங்கள்

ஏதோ கம்பன் பற்றி ஆராய்ச்சி செய்யப்போய்,  சிங்கப்பூர் அங்க மோ கியோ நூலகத்தில் பேரா.தோதாத்ரி எழுதிய ‘மார்க்சீயப் பார்வையில் வைணவம்’ கண்ணில் பட்டது. சரி என்னதான் சொல்கிறார் என்று பார்க்கப்போய் அவரிடமிருந்து பேரா.வானமாமலை என்னும் மார்க்சீய ஆராய்ச்சியாளர் கண்ணில் பட்டார். அவரை ஆராயப்போய் பேரா.சட்டோபாத்யாயா என்னும் வங்காள இடதுசாரி சிந்தனையாளர் அறிமுகமானார்.

இவர்களின் ஆழ்ந்த எழுத்துக்களால் முன்னமே சிறிது அறிந்த ஆழ்வார்களும் சில ஆச்சாரியார்களின் நூல்களும் படிக்க வேண்டியதாக ஆனது. அதன் மூலம் தற்காலத்தில் அறியவேபடாத தமிழ் ஆராய்ச்சியாளர்கள், இலங்கையைச் சேர்ந்த சில நூல்கள் என்று கண்ணில் படத் துவங்கின. இவர்கள் மூலம் அறிமுகமானவர் பேரா.மு.ராகவையங்கார், நீலகண்ட சாஸ்திரி முதலானோர்.

வைணவத்தில் இன்னும் சற்று ஆழ்ந்து பார்த்ததில் பிள்ளை லோகாச் சாரியார், தேசிகர், இராமானுசர், கருட வாகன பண்டிதர் முதலான பலரின் அறியப்படாத நூல்கள் கண்ணில் பட்டன.

இவற்றின் மூலம் வைணவத் தத்துவ ஆராய்ச்சி தமிழ் நாட்டில் எவ்வளவு தூரம் ஆழப் பதிந்துள்ளது என்று அறிய முடிந்தது.

ஆனால் அவற்றை எல்லாம் விட ஒரு எண்ணம் மேலோங்குகிறது.

ஐரோப்பிய சமூகம் காட்டு மிராண்டிகளாய் சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் ஜீவாத்மா, உடல், பரமாத்மா, உலோகாயதம், சாருவாகம், வைசேஷிகம், ஜைனம், பௌத்தம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் என்று புறவயமான தேடல்கள் இல்லாமல் அக வயமான தேடல்களில் ஈடுபட்டிருந்த மிகவும் முன்னேறிய ஒரு சமுதாயம், இன்று இருக்கும் சோற்றுப் பிழைப்பு நிலையை எண்ணி ‘ஓ’ வென்று அழ வேண்டும் போல் உள்ளது.

வைணவம் – இராமானுசன் எனும் சம தர்மன்

வைணவம் மீது சாமானிய மக்கள் கவனம் திரும்பியதைச் சென்ற அத்யாயங்களில் கண்டோம். அந்தக் கவனத்தை ஒரு தேர்ந்த நவீன நிர்வாகத் திறன் உள்ள நிறுவனத்தின் தலைவர் போல் ஆற்றுப்படுத்தி வைணவம் ஒரு மாபெரும் எழுச்சியுடன் மேலோங்க வழி வகுத்தவர் இராமானுசர். இவரது காலம் கி.பி.1017-1137.  நீண்ட ஆயுள் வாய்க்கப்பெற்ற அவர் முதலாம் இராசேந்திரன் துவங்கி இரண்டாம் குலோத்துங்கன் காலம் வரை வாழ்ந்துள்ளார். இந்நீண்ட ஆயுளில் செயற்கரிய செயல்கள் செய்து வைணவம் தழைக்கச் செய்தார் இராமானுசர்.

இராமானுசரின் தத்துவம் விசித்டாத்வைதம். இது சங்கரரின் அத்வைதத்தில் இருந்து வேறுபட்டது. இந்தத் தத்துவத்துக்கும்  ஜைன, பௌத்தத் தத்துவங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மிகவும் சுவாரசியமானவை. ஆனால் கொஞ்சம் ஆழமானவை. இவை பற்றித் தனியான ஒரு பதிவில் காண்போம். தற்போது இராமானுசர் மற்றும் அவரது வழிமுறைகள் பற்றி மட்டும் பார்ப்போம்.

இராமானுசரின் சம காலத்தவரான கருட வாகன பண்டிதர் என்பவர் எழுதியுள்ள ‘திவ்ய சூரி சரிதம்’ என்னும் நூல் அக்கால நிகழ்வுகளைப் பட்டியலிடுகிறது. அவற்றிலிருந்தும் இராமானுசரின் பிற்காலத்தில் தோன்றிய மற்ற வைணவ ஆச்சாரியர்களான பிள்ளை லோகாச் சாரியார், வேதாந்த தேசிகர் முதலியோர் உரைகளின் வாயிலாகப் பல விவரங்கள் அறிகிறோம்.

வேளாண்மை சாராத மற்ற தொழிலாளர்களைத் தன் வயம் ஈர்த்தது வைணவம் என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம். இவை ஆழ்வார்கள் காலமான கி.பி. ஆறு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுகள் வரை மட்டும் நிகழவில்லை. அதற்குப் பின் வந்த இராமானுசர் இந்த மாற்றங்களை முன் நகர்த்திச் சென்றார்.

வைதீக அத்வைத மரபில் தோன்றிய அவர் பிறப்பால் அத்வைதி. கல்வி கற்கும் போது அத்வைதத்தின் தத்துவம் சரியல்ல என்று உணர்ந்தார். அவரது ஞானத்தின் அடிப்படையில் அவரது அத்வைத குருவிடம் வாதிட்டார். அவரிடமிருந்து வெளியேறி ஞானத் தேடலில் ஈடுபட்டார். சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் உண்மை இல்லை என்று உணர்ந்தார்.

ஆழ்வார் பாசுரங்களின் அர்த்தங்களை உணர்ந்த அவர் சாதி வேறுபாடுகள் களைய வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். பொருளியல் நோக்கில் ஆராயும் மார்க்சீய எழுத்தாளர்கள், இந்த ஒருங்கிணைப்பு முயற்சி உற்பத்திப் பெருக்கத்திற்கான ஒரு ஆட்கொணர்வு என்று கூறுகிறார்கள். அவர்களைச் சொல்லிப் பயனில்லை. எதையுமே எதிர்மறையாகப் பார்த்தே பழகி விட்டவர்கள் அவர்கள்.

இராமானுசர் திருக்கச்சி நம்பி என்னும் வைசிய ( வாணிக ) குலத்தவரைக் குருவாகக் கொண்டார். அவரிடமிருந்து வைணவத் தத்துவங்களைக் கற்க விழைந்தார். திருக்கச்சி நம்பி முதலில் தயங்கினார். இராமானுசர் அவருக்குத் தைரியம் ஊட்டி, வேதத்தின் உட்பொருளை அறியாது வெற்று ஆசாரங்களைப் பறை சாற்றும் மக்கள் குங்குமம் சுமக்கும் கழுதைகள் போன்றவர்கள் என்று எடுத்துரைத்து அவரிடம் வேதாந்தப் பாடங்கள் பயின்றார்.

பிறிதொரு முறை பெரிய நம்பி என்னும் மற்றோர் ஆச்சாரியாரிடம் மேலும் பாடம் கற்க விழைந்தார். ஆனால் பெரிய நம்பியை ஜாதிப் பிரஷ்டம் செய்து வைத்திருந்தார்கள். ஏனெனில் அவர் மாரநேரி நம்பி என்னும் நான்காம் வர்ணத்தவருக்கு ஈமக் கிரியைகள் செய்திருந்தார். இதுபற்றிய விவாதத்தில் சாதியைப் பற்றிய சுவையான விளக்கம் வருகிறது. பெரிய நம்பி கூறுவது போல் அமைந்துள்ள பகுதி இது :

“இராமாயணத்தில் ஜடாயு என்னும் கழுகிற்கு ஈமக் கிரியைகள் செய்த இராமனை வணங்கலாம் என்றால், பணிப்பெண்ணின் மகனான விதுரனுக்கு தனது சிறிய தந்தை என்ற அந்தஸ்து கொடுத்து தருமன் அந்திமச் சடங்குகள் செய்வது சரி என்றால் நான் செய்தது ஒன்றும் தவறு இல்லை”.

திருக்கோஷ்டியூர் என்னும் ஊரில் இருந்த திருக்கோஷ்டியூர் நம்பி என்ற பெரியவரிடமிருந்து வைணவ தத்துவ ரகசியங்களைக் கற்று அவற்றை யாரிடமும் கூறக் கூடாது என்ற சத்தியத்தை மீறி அனைவருக்கும் உபதேசித்தார். அதிர்ந்து போன திருக்கோஷ்டியூர் நம்பி ,”ஆச்சாரிய அவமரியாதை உனக்கு நரகம் அளிக்கும்”, என்று கூறியபோது,” நான் ஒருவன் நரகம் அனுபவித்துவிட்டுப் போகிறேன். இதனால் பல ஆயிரம் பேர் இறைவனை அடைவர்”, என்று கூறி அக்காலத்தில் மாபெரும் புரட்சி செய்தார்.

இராமானுசர் தனது வாதத் திறமையால் பலரையும் வைணவத்தின் பால் ஈர்த்துக்கொண்டிருந்தார். சைவ அரசன் குலோத்துங்கன் அவரைக் கொல்ல சதி செய்து தனது அரசவைக்கு வரவழைத்தான். ஆனால் அவரது சீடரான கூரத்தாழ்வார் இராமானுசரின் காவி உடை தரித்துச் சென்று தனது கண்களை இழந்தார்.  இராமானுசர் திருவரங்கத்திலிருந்து கிளம்பி கர்நாடக மாநிலம் சென்றார். செல்லும் வழியில் தொண்டனூர் என்னும் ஊரில் ஒரு ஏரி அமைத்தார் ( இன்றும் உள்ளது ). மேலே சென்று மேல்கோட்டை என்னும் இடத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கினார். அவ்விடத்தில் இருந்த அத்வைத சமயம் சார்ந்தவர்களை வாதத்தில் வென்று வைணவராக்கினார். இவ்வூரில் இருந்த தாழ்ந்த குல மக்களை ‘திருக்குலத்தார்’ என்று அழைத்து அவர்களுக்கு உபநயனம் என்னும் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி செய்து அவர்களை வைணவராக்கினார். இவ்வாறு வைணவ சமயம் வளரக் காரணமானார். தனது அடியார் குழாத்தில் சாதி வேறுபாடு இல்லாமல் அனைவரையும் சேர்த்துக்கொண்டார். வில்லி தாசன் என்ற மல் யுத்த செய்பவரே அவரது பிரதான சீடரானார். உறங்காவில்லி தாசர் என்று அவருக்குப் பெயரிட்டார்.

இஸ்லாமியப் படை எடுப்பு  துவங்கிய காலம் அது. தில்லி இஸ்லாமிய மன்னனின் மகள் பிபிலகிமார் என்பவள் மேல்கோட்டை பெருமாளைத் தன் பிரியமான பொருளாகக் கருதி எடுத்துச் சென்றுவிட்டாள். அதனால் இராமானுசர் தில்லி சென்று மன்னனிடம் பேசி ‘செல்லப் பிள்ளை’ என்னும் பெயருடைய பெருமாள் விக்ரஹத்தைத் திருப்பிக் கொணர்ந்தார். மனம் உடைந்த முகமதிய இளவரசி தானும் கிளம்பி மேல் கோட்டை வந்து விட்டாள். பல வருடங்கள் வாழ்ந்து மேல்கோட்டையிலேயே இறந்தாள். அவள் பக்தியை மெச்சி இராமானுசர் ‘துலுக்க நாச்சியார்’ என்று ஏற்படுத்தி பெருமாள் கோவிலில் அவளுக்கு ஒரு சன்னிதியையும் அமைத்தார்.

பன்னிரண்டு வருடங்கள் கழித்துத் திருவரங்கம் திரும்பிய இராமானுசர் திருவரங்கக் கோவிலில் அன்றாட ஒழுக்கங்கள், உற்சவங்களை நெறிப்படுத்தி ‘கோவில் ஒழுகு’ என்று ஒரு கோட்பாட்டைக் கொண்டுவந்தார். திருவரங்கத்திலேயே துலுக்க நாச்சியாருக்கு ஒரு சந்நிதியும் அமைத்தார் ( இன்றும் உள்ளது ). வருடத்தில் ஒரு நாள் ரங்கநாதர் லுங்கி அணிந்து நாச்சியாருக்கு சேவை சாதிக்கிறார். அன்று அவருக்கு ரொட்டியும் வெண்ணெய்யும் தளிகை சமர்ப்பிக்கப்படுகிறது. இது முகமதிய மன்னர்களிடமிருந்து ஒரு பாதுகாப்பிற்காக என்று சில நோக்கர்கள் கூறுகிறார்கள். இப்படியும் அவர் வைணவத்தை வளர்த்தார் என்று கருத இடமுள்ளது.

இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது. இஸ்லாமிய அரசைத் திருப்திப்படுத்த அவ்வாறு செய்தார் என்று கொண்டால் கூட, அதற்காக மாற்று மத இளவரசியைத் திருமாலின் மனைவியாக ஒப்புக்கொள்ள மிகப்பெரிய மனது இருந்திருக்க வேண்டும். இதற்கு அக்காலத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய எதிர்ப்புகளை நினைத்துப்பார்க்கவே வியப்பாக உள்ளது. சாதி சமரசம் தாண்டி, மிலேச்ச மதம் என்று கருத்தப்பட்ட ஒரு வெளி நாட்டு  மதம் சார்ந்த பெண்ணைத் தெய்வமாகக் கருதுவது என்பது முன்னெப்போதும் நிகழாத ஒன்றே.

இராமானுசர் செய்துள்ள மிகப் பெரிய சாதனை வைணவக் கோவில்களை ‘வைகானஸம்’ என்னும், ஆகம முறையிலிருந்து ‘பாஞ்சராத்ரம்’ என்னும் முறைக்கு மாற்றியது எனலாம். ஆகமம் என்பது கோவில் கட்டும் முறை, பூஜை விதிகள், வேத பாராயண விதிமுறைகள் முதலியன அடங்கும். வைகானசம் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்டது. ஆனால் பாஞ்சராத்ரம் என்னும் புதிய முறையில் கோவிலுக்குள் சாதீய முறைகள் தளர்த்தப்பட்டன. ஆழ்வார்கள், சமயப் பெரியவர்கள் முதலியோருக்குக் கோவிலுள் சந்நிதிகள் வைக்கலாம் என்பது போன்ற சமத்துவக் குறிப்புக்கள் பாஞ்சராத்ரத்தில் இடம் பெற்றன. இதன் மூலம் பல சாதிகளையும் சார்ந்த ஆழ்வார்கள் பின்னர் வந்த இராமானுசர், மணவாள மாமுனி, வேதாந்த தேசிகர் முதலியோருக்குக் கோவில்களுள் சந்நிதிகள் ஏற்பட வாய்ப்புக் கிடைத்தது. ( பாஞ்சராத்ரம் என்பது மகா விஷ்ணு ஐந்து இரவுகளில் உபதேசித்த வழிமுறை என்றும் கூறுவர் ).

தனது காலம் முடிவதற்குள் விசிஷ்டாத்வைதம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று 74 மடங்களை அமைத்தார். அவர்களுக்கு சிம்ஹாசநாதிபதிகள் என்று பெயர். அவர்களில் அந்தணரும் பிறரும் இருந்தனர். இவர்களை ‘சாத்திய முதலிகள்”, “சாத்தாத முதலிகள்” என்று மக்கள் அறிந்தனர். ( சாத்துதல் – பூணூல் அணிந்திருப்பது ). இவர்களுக்குள் வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் தாஸ்ய நாமம் அளித்தார்.

சாத்திய முதலிகள் சிலர்: கூரத்தாழ்வார், மாடபூசி ஆழ்வார், சேட்லூர் சிறியாழ்வார், நெய்யுண்டாழ்வார். சாத்தாத முதலிகள் சிலர் : பட்டர்பிரான்தாசர், பிள்ளை உறங்காவில்லி தாசர், வானமாமலை தாசர்.

ஸ்ரீ ரங்கத்தில் பெருமாள் கோவிலுக்குக் கணக்கெழுத ஒரு வேளாளரை அமர்த்தி அவருக்கு சடகோப தாசன் என்று பெயரிட்டு கோவிலுக்குள் சமதர்மம் நிலை நாட்டினார்.

இராமானுசரின் வாழ்க்கையில் வியக்கத்தக்க பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அவை அனைத்தும் சாதி வேறுபாட்டின் அடிப்படையை அசைப்பதாகவே உள்ளன.

இராமானுசர் காலத்தில் தென்கலை, வடகலை என்ற பிரிவு இல்லை.

இராமானுசர் வரலாறே ‘தர்க்க வாதம்’ என்னும் பகுத்தறிவு வாதங்களின் கலவை என்றே கூறலாம். இருபதாம் நூற்றாண்டில் தாங்கள் நிகழ்த்தியதாகக் கூறும் பல சம தர்ம சமூக மாற்ற நிகழ்வுகளை ஆயிரம் ஆண்டுகள் முன்பே தனது கோட்பாடுகளாக நிறுவியவர் இராமானுசர். அவரைப்பற்றியும் அவரது செயல்கள் பற்றியும் வெளியே தெரிந்தால் தங்களது ‘பகுத்தறிவுப் பறை சாற்றல்கள்” சந்தி சிரிக்கும் என்பதால் இவை நமது கண்ணில் படாமலே மறைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்ள பெரிய பகுத்தறிவெல்லாம் தேவை இல்லை.

விசிட்டாத்வைத தத்துவம் பற்றியும் அது மற்ற தத்துவங்களிலிருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பது பற்றியும் அடுத்த பதிவில் காணலாம்.

வைணவம் – சமயம் வளர்ந்த விதம்

களப்பிரர் என்னும் அரசர்கள் வேளாண்மை சாராத மன்னர்களாக இருந்தனர். அவர்களை வணிகர்களும் நகர மக்களும் தாங்கிப்பிடித்தனர். வேளாண்மை சாராத அம்மன்னர்கள் கிராம மக்களால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. சோழ மன்னர்கள் வேளாண்மை சார்நதவர்களாக இருந்ததால் வேளாண் பெருங்குடி மக்கள் அவர்கள் பக்கம் சார்ந்த்திருநதனர். சோழனும் சைவனாக இருந்ததால் அவனது வேளாண் மக்களும் சைவர்களாக இருந்தனர் என்னும் கருத்து ஒப்புக்கொள்ளும்படி உள்ளது. சங்கம் மருவிய கால இலக்கியங்களான மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலியன ஜைனம் பௌத்தம் சார்ந்தவை. பௌத்தமும் ஜைனமும் சங்கம் மருவிய கால மதங்களே.  இவ்விரு நூல்களும் நகரம் சார்ந்தவையே ; வாணிபம் தொடர்பானவையே என்பதும் கவனிக்கத்தக்கது.

அதேசமயம் களப்பிரர் வணிகர் சார்ந்தே இருந்ததால் அவர்களது ஆதரவு பெற்ற மதங்களான ஜைனம், பௌத்தம் முதலியன களப்பிரர் காலத்தில் தழைத்தன. ஆயினும் வேளாண் மக்கள் ஆதரவு இல்லாமையால் களப்பிரர் சில காலங்களிலேயே அழிந்தனர். அவர்களுடன் ஜைனமும் பௌத்தமும் தமிழகத்தில் மறைந்தன.

இதனை வேறு ஒரு கோணத்திலும் காணலாம். கிராம மக்கள் வேறு தொழில், நகர மக்கள் வேறு தொழில். அத்துடன் கிராம மக்கள் வேறு மதம், நகர மக்கள் வேறு மதம். அத்துடன் இவ்விருவரின் பொருளியல் வேறுபாடுகளும் சேர்ந்துகொண்டு வேற்றுமைகளை அதிகரித்தன என்று எண்ண வாய்ப்புள்ளது. ஜைனமும் பௌத்தமும் சாமானிய மக்களுக்குப் புரியாத ‘சூன்ய வாதம்’, கடவுள் மறுப்புக் கொள்கை முதலிய போக்கைக் கடைபிடித்தான. அவற்றுடன் ஜைனம் “பள்ளிகள்” என்னும் முறையில் மிகக் கடுமையான துறவு வாழ்க்கையை வலியுறுத்தியது. தங்களையே மிகவும் துன்புறுத்திக்கொண்டு இவ்வுலக வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் அமைந்தது ஜைனர்களின் துறவு நெறி. இவை பற்றி பேரா.தொ.பரமசிவன் ‘அறியப்படாத தமிழகம்” நூலில் ஆராய்ந்து கூறியுள்ளார்.

அனைவரும் துறவியானால் உற்பத்தி பெருகுவது எப்படி? ஆக, பொருளியல் காரணங்களும் ஜைன பௌத்த மாதங்கள் தமிழகத்தில் மறைய வழி கோலின என்றும்  நம்ப இடமுள்ளது.

இவ்விடத்தை சைவமும் வைணவமும் நிரப்பின. ஆனால் அவற்றிடையே சில சமூக வேறுபாடுகள் இருந்தன.

சைவமானது   மன்னன், வேளாண் பெருங்குடி மக்கள் மற்றும் அரசிடம் நெருக்கமான அந்தணர், இவர்களின் சமயமாக இருந்தது. விவசாயப் பெருக்கத்தினால் சமூக ஒழுங்கிற்காக உறுதியான சாதீய அமைப்புகள் தோன்றிய காலம் அது. உற்பத்திப் பெருக்கம் ஏற்பட சமூகக் கட்டுக்கோப்பு தேவை என்ற உணர்வு தோன்றியிருக்கலாம். சங்க காலத்தில் தேவைப்படாத சாதீய அமைப்புகள் நில உடைமை துவங்கிய காலம் அதன் பின்னர் தோன்றிய பக்தி இயக்கக் காலம் முதலிய காலங்களில் தோன்றி வலுப்பெற்றன என்று நம்ப இடம் இருக்கிறது என்று பேரா.வானமாமலை (Feudalism under later Cholas) கூறுகிறார்.

சைவம் வலுவடைந்தது தெரிகிறது. ஆனால் வைணவம் எப்படி வலுவடைந்தது?

நிலம், உற்பத்தி முதலியன தனக்கு சாதகமாகவும் அதனால் வரி வசூலும் நிரம்ப அடைய வேண்டி மன்னன் சாதிக் கட்டுக்கோப்புகளை ஆதரித்தான். இதைச் சோழன் தான் செய்தான் என்றில்லை. பாண்டியனும் அவ்வாறே. சேரனும் அப்படியே. இதனால் சைவ நெறி கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளை விதித்தது.

ஆனால் உற்பத்தி பெருக வேண்டும் என்றால் மக்களிடம் ஒரு ஒருமைப்பாடு வேண்டும்; ஒரே குல எண்ணம் வேண்டும் என்று ஒரு எண்ண ஓட்டம் இருந்துள்ளது. அதனை வைணவம் பயன்படுத்திக்கொண்டது. சங்கரரின் அத்வைத பிரசாரம் நடந்த நேரம் அது. அதன் பலத்தால் ஜைனமும் பௌத்தமும் தேயத் துவங்கிய நேரம். சங்கரின் அத்வைத வேதாந்தப் பிரச்சாரம் நாடு முழுவதும் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய நேரம். ஆனால் சாதீயக் கட்டுக்க
் அவிழவில்லை.

இந்நேரத்தில் வைணவத்தின் நிலை ஒரு புதிய பார்வையாக வந்தது. பக்தி இயக்கக் காலத்தில் ஆழ்வார்கள் பாடல்கள் ஒரு சம தர்ம சமுதாயத்தை நோக்கியதாக இருந்தன.  அவர்கள் பாசுரங்களின் வழியே ராமானுசரின் வழிகாட்டுதலும் இருந்தது. இதனால் ஈர்க்கப்பட்ட கை வினைஞர்கள், பாணர்,வேளாளர், சில வாணிபர்கள், சமூகத்தின் கடை சாதியான புலையர்கள்  முதலியோர் வைணவத்தில் இணைந்தனர். அதன் மூலம் அவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்று நினைக்க வாய்ப்புள்ளது.

வைணவத்தில் இணைந்தபின் அவரவரது பழைய குலங்களை மறந்து விட்டு அனைவரும் வைணவரே என்ற ஒரே குடையின் கீழ் அமைய வேண்டும் என்னும் பொருள் படும் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் பாசுரம் ஒன்று பின்வருமாறு :

“அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டக் குளத்தை எடுத்துக்களைந்த இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர் ! அடிதொழுது ஆயிரம் நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்த்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே”

அவரது இன்னொரு பாசுரம் :

“..இழிகுலத்தவர்களேனும் எம்மடியாராகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் …”

“என்னுடைய அடியார்கள் என்றால் இழிந்த குலத்தவர்களானாலும் அவர்களை வணங்குங்கள், அவர்களிடம் கொடுத்து வாங்குங்கள் என்று ஆணை இட்டாய் போலே அரங்க மாநகரில் உறையும் இறைவனே ..”

வைணவத்தில் உள்ள ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர்களில் மூவர் அந்தணர். ஆழ்வார்களில் மிக உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள நம்மாழ்வார் வேளாளார். அதிகமான பாசுரங்கள் பாடி அனேகமாக எல்லா திவ்ய தேசங்களுக்கும் சென்று பாடியுள்ள திருமங்கையாழ்வார் கள்ளர் என்ற பிரிவினர். திருப்பாண் ஆழ்வார் மண் பாண்டம் செய்பவர். ஆண்டாளுக்கு சாதி தெரியவில்லை. துளசிச் செடியின்கீழ் கண்டெடுக்கப்பட்டாள்.

பாணர் குளத்தில் தோன்றிய திருப்பாணாழ்வாரை அரங்கன் கட்டளையின் பேரில் லோக சாரங்கர் என்னும் அந்தணர் தோளில் சுமந்து திருவரங்கனிடம் சேர்ப்பித்தது வைணவத்தினை அனைவருக்கும் ஏற்புடையதாக ஆக்கியது என்றும் கொள்ளலாம்.

திருமழிசை ஆழ்வார் என்னும் தாழ்ந்த குலத்தில் பிறந்த ஆழ்வாரும்,

“குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நாற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்..”

என்று பாடுவது நோக்கத்தக்கது.  மேலான சாதிகள் நான்கிலும் பிறக்கவில்லை, கலைகளும் கல்வியும் இல்லை, இருந்தாலும் உன் பாதங்கள் தவிர வேறு ஒன்றும் அறியேன் என்ற பொருளில் வரும் பாசுரத்தில் திருமாலை அடைய குலமோ, கல்வியோ தேவை இல்லை என்று ஆழ்வார் கூறியுள்ளது மக்களைச் சென்றடைந்திருக்க வேண்டும்.

நம்மாழ்வார் பாசுரம் ஒன்று பின்வருமாறு :

“குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை
நலந்தா னிலாதசண் டாளசண் டாளர்க ளாகிலும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார் அடியார் தம்மடி யாரெம் அடிகளே”

“சாதிகள் அனைத்திலும் கீழானதிலும் எந்த நன்மையையும் இல்லாத சண்டாளர் சாதியில் பிறந்து அவர்களில் இழிந்த சண்டாளராக இருந்தாலும், வலக்கையில் சக்கரம் ஏந்தியுள்ள திருமாலின் அடியவர் என்று அறிந்தால் அவரின் அடியாரின் அடியார் யாரோ அவருக்கு நான் அடிமை”, என்று கூறுகிறார்.

வைணவப் பெரியவர்கள் வரிசையில் திருமாலுக்கு அடுத்த நிலையில் இலக்குமியும் அவருக்கு அடுத்த நிலையில் வேளாளர் குலத்தில் தோன்றிய நம்மாழ்வார் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது. இவரை ‘சடகோபர்’ என்று திருமால் கோவில்களில் பக்தர்களின் தலையில் வைக்கும் பெருமாள் பாதங்கள் ( ஸ்ரீ சடாரி )ன் அவதாரம் என்றும் கருதுவர்.

பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் என்றொருவர். ஆனால் இவர் திருமாலைப் பற்றிப்
ாடவேயில்லை.  ஆனாலும் ஆழ்வார்களுள் ஒருவராக வைக்கப்பட்டுள்ளார். அப்படி என்ன செய்தார் ? “கண்ணிநுண் சிறுத்தாம்பு..” என்று தொடங்கும் தமிழ் கொஞ்சும்  பாசுரங்கள் பாடினார். ஆனால் பெருமாளைப் பற்றி அல்ல. நம்மாழ்வாரைப்பற்றி, அவரே என் கடவுள் என்று பொருள் படும்படிப் பாடினார். இதில் நோக்கத்தக்கது என்னவென்றால் நம்மாழ்வார் ஒரு வேளாளர்; மதுரகவி அந்தணர். இந்தப் பரந்த நோக்கே, இறைவனின் முன் அனைவரும் ஒன்று என்ற தத்துவமே வைணவம் வளரக் காரணமாக இருந்தது என்று கருதுகிறேன்.

ஆழ்வார்களின் காலத்திற்குப் பிறகு மூன்று நூற்றாண்டுகள் கழித்துத் தோன்றிய இராமானுசர் தான் வகுத்த விஸிஷ்டாத்வைதம் என்னும் வைணவத் தத்துவத்தில், வைணவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொள்ளும்போது “இராமானுஜ தாசன்” என்றே அறிவித்துக்கொள்ள வேண்டும்; இதற்கு ‘தாஸ்ய நாமம்’ என்று பெயர்; இரு வைணவர்கள் சந்தித்துக்கொள்ள நேரும் போது இருவரும் ஒருவரை ஒருவர் வணங்க வேண்டும் என்றும் அதனை ‘தெண்டன் சமர்ப்பித்தல்’ என்று வகுத்தார். ‘தெண்டம்’ என்பது கழி அல்லது மரத்தாலான குச்சி. அதனின்று கையை எடுத்தால் அது எப்படி தரையில் விழுமோ அது போல் விழுந்து வணங்குதல் என்பதை ‘தெண்டன் சமர்ப்பித்தல்’ என்று நமது உடலும் ஒரு கழி போன்று விழவேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.  இன்றும் மிகவும் கற்றறிந்த வைணவர்கள், ஒருவரை ஒருவர் விழுந்து வணங்குவதை சில மடங்களில் காணலாம்.

இந்தத் ‘தெண்டன் சமர்ப்பித்தல்’ என்னும் தொடரில் இராமானுசரின் சித்தாந்தம் எவ்வாறு அடங்கியுள்ளது  என்றும் இராமானுசர் செய்த மாற்றங்கள் என்ன என்றும் தொடரும் பதிவுகளில் காண்போம்.

வைணவம் – சில சமூக அமைப்புகள்

சென்ற இரு வாரங்களில் அந்தணர் என்ற பிரிவு மக்களது வாழ்வு பற்றிப் பார்த்தோம். இம்முறை, அவர்களையும் உள்ளடக்கிய பெரிய சமூக அமைப்பு எப்படி இருந்தது என்று சங்க காலம் தொட்டு பார்த்துவருவோம்.

சங்க காலம் குறித்துப் பல ஆராய்ச்சியாளர்கள் பலவாறு கூறியுள்ளனர். பேரா.ராகவையங்கார், பேரா.வையாபுரிப்பிள்ளை, பேரா.வானமாமலை முதலான ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு கருத்து சங்க காலம் என்பது கி.மு.வில் உள்ளது என்பதே. அவர்கள் வேறுபடுவது சங்க காலத்தின் கால அளவில் மட்டுமே. கி.மு.3000 தொடங்கி கி.பி.200 வரை என்பதில் அவர்களது கால அளவில் வேறுபாடுகள் உள்ளன.

ஆனால் சங்க காலம் என்பது இராமாயண, மகாபாரத புராண காலங்களில் இல்லை என்பது மட்டும் தெரிகிறது. இராமாயணக் காலங்களில் குரங்குகள் பேசுவது போன்ற அமைப்புக்கள் உள்ளன ( அனுமன், வாலி, சுக்ரீவன் ). ஆனால் மகாபாரதத்தில் அந்த அளவு மனிதனல்லாத உயிர்கள் பேசுவது போல் இல்லை. எனவே சார்லஸ் டார்வினின் கொள்கைப்படி மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்பதை ஒப்புக்கொள்ளும் வேளையில் , ராமாயணம் மனிதன் குரங்கிலிருந்து தோன்றிய காலத்துக்கு சற்று பிற்பட்டு நடந்திருக்கலாம் என்று எண்ண முடிகிறது. (ராமாயணம் , மகாபாரதம் முதலியவை நடந்ததா என்று தமிழக “அறிவாளிகள்” பேசிக்கொண்டிருக்கட்டும். நாம் மேலே தொடர்வோம்).

சங்க கால இலக்கியங்களில் திருமால் பற்றிய குறிப்புகள் தென்படுகின்றன. “மாயோன்” என்ற ஒரு தொடர் தென்படுகிறது.

சங்க நூலான தொல்காப்பியம் கூறுவது:

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே”

“மாயோன் என்னும் காடு சார்ந்த நிலத்தின் கடவுளும், குழந்தை வடிவில் உள்ள முருகன் உறையும் மேகக்கூட்டம் அடர்ந்த மலைப்பகுதிகளும் … ” என்று கூறும் இடத்தில் மாயோனைக் காட்டின் கடவுளாகக் கருதியுள்ளனர். மழைக் கடவுளாக முருகனைக் கருதியுள்ளது “குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் ” என்ற தற்கால வழக்கிற்கு ஒத்து வந்துள்ளது நோக்கத்தக்கது. மேலும், முல்லை, குறிஞ்சி, முல்லை, முதலிய நிலப்பகுதிகளும் சங்க கால நிலப்ப்பாகுபாடுகளில் உள்ளதைக் காண முடிகிறது. அத்துடன், நிலம் சார்ந்த ஒரு கடவுளர்களை வழிபட்டுள்ளனர் என்றும் கருத இடம் உள்ளது.

திருமாலுக்கு “மாயன்”, “மாயோன்” என்ற பெயர் உள்ளதைப் பிற்கால பக்தி இயக்கக் காலமான கி.பி.7 – கி.பி. 9 ம் நூற்றாண்டுகளில் தோன்றிய ஆழ்வார் பாசுரங்களில் காணலாம்.

ஆண்டாள் “மாயனை மன்னு வட மதுரை மைந்தனை ..” என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

சங்கள் இலக்கியங்களில் இராமாயணக் குறிப்புக்கள் உள்ளன என்பதை நமது கம்ப ராமாயணத் தொடர்களில் கண்டோம்.

அகநானூறு ,

“வென்வேல் கவுரியர் தொன்முதுகோடி
முழங்கு இரும்பௌவம் இரங்கும் முன்துறை..” என்னும் பாடலில் ராமாயணக் கதை பற்றிக் குறிப்பிடுகிறது. ஆக சங்க காலத்தில் இராமன் கதை இருந்துள்ளது.

ஆனால் சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் “மாயோனும்” பிற்காலப் பாசுரங்களில் வரும் “மாயனும்” வேறு; இருவரும் ஒரே விஷ்ணுவைக் குறிப்பிட வில்லை என்று மார்க்சீய ஆய்வாளர்களான பேரா.வானமாமலை மற்றும் பேரா.தோதாத்ரி குறிப்பிடுகின்றனர்.ஆனால் இந்த இரு திருமால்களும் ஒருவர் இல்லை என்பதற்கு இந்த ஆராய்ச்சியாளர்கள் சான்றுகள் காட்டவில்லை. அவர்களது இந்த முடிவில் ஒரு அவசரம் தெரிகிறது.

சங்க காலத்தில் தமிழக மக்கள் பல்வேறு இனக் குழுக்களாகவே ( Tribals ) இருந்துள்ளனர். இந்தக் குழுக்களுக்கு என்ற தனியாக சில குறிகள் இருந்துள்ளன. சில குழுக்களுக்கு மரம், சிலவற்றிற்குப் பறவைகள், சில குழுக்களுக்கு மலை முதலிய குறிகளாக, தெய்வங்களாக இருந்துள்ளன. அதியமான், பாரி, காரி, ஆய், பேகன் முதலிய சங்ககால மன்னர்களும் இனக்குழுத் தலைவர்களே; பாரியின் இனக்குறியீடு முல்லை எனவே அவன் அதற்குத் தேர் கொடுத்தான்; பேகனின் குலக்குறியீடு மயில் எனவே அதற்குக் கம்பளி அளித்தான் என்று நம்ப இடம் இருக்கிறது என்றும் மார்க்சீய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இது கொஞ்சம் பகுத்தறிவுக்கு ஒத்துவருவதாக உள்ளது.

சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு முதலியன முறையே அக்கால மக்களின் அக வாழ்வு பற்றியும் வீரம், போர் பற்றியும்  பேசுகின்றன. அகநானூறு போரினாலும் வாணிபத்தாலும் ஏற்படும் பிரிவு பற்றிப் பேசுகிறது. ஒவ்வொரு இனக்குழுவும் ஒவ்வொரு பொருளை உற்பத்தி செய்து அதை இன்னொரு இனக்குழுவிற்கு விற்றது. இதனால் இருவகையான சமூக அமைப்பு ஏற்பட்டது. ஒன்று விவசாயம் சார்ந்தது. இன்னொன்று வாணிபம் சார்ந்தது.

இரு பெரும் சமூக அமைப்புகள் உருவான போது அவற்றை ஒழுங்கு படுத்தி பல இனக்குழுக்களையும் இணைக்கும் வேலையும் நடந்தது. இணைப்பை உறுதி செய்தது போரினால். இணையும் இனக்குழுக்களின் தலைமை சிற்றரசுகளாகவும் பின்னர் பல சிற்றரசுகள் ஒருங்கிணைந்து பேரரசுகளாகவும் உருமாற்றம் பெற்றன. அரசுகள் தோன்றியபோது விவசாயம் மற்றும் வாணிபத்தை ஒழுங்குபடுத்த முற்பட்டன. அதற்கான சட்டங்களையும் வரி வசூல் முறைகளையும் ஏற்படுத்தின.

இக்கால கட்டத்தில் விவசாயம் பெருகத் துவங்கியது. புதிய வாய்க்கால்களும் அணைகளும் கட்டப்பட்டன. கல்லணை, வீர நாராயணன் எரி முதலியன சில. இவை சங்கம் மருவியகாலம் மற்றும் பின்னர் துவங்கிய பக்தி இயக்கக் காலம்.

விவசாயம், வேளாண்மை பெருகியதால்  பல புதிய தொழில்கள் உருவாயின. தச்சர், கல் தொழில் செய்பவர், மண் பாண்டம் செய்பவர், இரும்புக் கொல்லர் முதலிய பல தொழில் செய்யும் பிரிவினர் தோன்றினர். ஒரு மாதிரி குலம் சார்ந்த தொழில் முறைகள் துவங்கிய காலம் அது. இந்த அமைப்புகள் மற்றும் தொழில்கள் வேளாண்மை சார்ந்த அமைப்புக்களே. எனவே அவர்களுக்கும் வேளாண் தொழில் செய்பவர்களுக்கும் ஒரு தொடர்பும் ஒற்றுமையும் இருந்தது. இவர்கள் கிராமப்புறம் சார்ந்தே இருந்தார்கள்.

ஆனால் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் பொருட்களை வாணிபம் செய்யும் பிரிவினர் நகரங்களில் இருந்தனர். இவர்கள் சற்று செல்வச்செழிப்புடன் திகழ்ந்தனர்.

அரசன் தனக்கு வேண்டிய தனக்கு அடங்கிய சிறு குழு மக்களுக்கு என்று நிலங்களைத் தானமாக அளித்தான். இந்தக் காலகட்டத்தில் நில உடைமைச் சமுதாயம் உருவானது. பெருநிலக் கிழார்களும் சிறு நிலக் கிழார்களும் உருவாயினர். இந்நிலங்களுக்கு  வரி வசூல் செய்து அரசு வருவாய் ஈட்டியது. சில நிலங்களை வரி இல்லா நிலங்களாக அந்தணர்களுக்கும் கோவில்களுக்கும் கொடுத்தான்.

விவசாயம் சார்ந்த மக்கள் குழு ஒரு அமைப்பாகவும் வணிகர் குழுக்கள் ஒரு அமைப்பாகவும் இருந்தனர். இவர்கள் இடங்கை, வலங்கைப் பிரிவினர் என்று அழைக்கப்பட்டனர்.

இந்த இரு வகைப் பிரிவினரில் வேளாண்மை சார்ந்த இடங்கைப் பிரிவினர் சைவ சமயம் சார்ந்திருந்தனர். சைவத்தில் இருந்த இறுக்கமான சாதிப் பிரிவுகள் மன்னர் தனது வேளாண் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த உதவியது என்று கூறுகிறார்கள் மார்க்சீய எழுத்தாளர்கள். ஆனால் சான்றுகள் தரவில்லை. ( வாசகர்களிடம் சான்றுகள் இருந்தால் எழுதவும் ).

ஆனால் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த வணிகர்கள் சைவர்களாக இருக்கவில்லை. அவர்களிடம் சமணம், பௌத்தம் முதலிய ஆதிக்கம் செலுத்தி இருந்தன. மன்னரும் வேளாண் பெருமக்களும் சைவர்களாகவும் வணிகர்கள் சமண பௌத்த சமயத்தவர்களாகவும் இருந்தனர். பின்னர் சமணமும் பௌத்தமும் கி.பி. 3 ம் நூற்றாண்டில் தேயத்தொடங்கியபோது அவ்விடத்தை நிரப்பியது வைணவம்.

எப்படி நடந்தது இது ? அப்படி வைணவத்தில் என்ன இருந்தது ? வரும் தொடர்களில் காணலாம்.

வைணவம் – அந்தணர் – மேலும் சில பார்வைகள்

இப்பதிவில் வழக்கிற்கு மாறாக சில சம்ஸ்க்ருத வாக்கியங்களும், பதங்களும் தென்படும். சம்ஸ்க்ருதம் என்பதற்குப் பொருள் -‘ நன்றாகச் செய்யப்பட்டது’ என்பதே.

ஆறு – இந்த இலக்கம் பல இடங்களில் தென்படுகிறது.

சென்ற பதிவில் “அறுதொழிலோர்” என்று வள்ளுவரும் திருமூலரும் அந்தணர் பற்றிக் குறிப்பிட்டனர். வட மொழி நூல்கள் அந்தணர் பற்றிக் கூறும்போது “ஷட் கர்ம நிரதர்” என்று அழைக்கின்றன.

வடமொழி நூல்களில் வருவனவாக அந்தணர்கள் செய்யும் தொழில்கள் என்ன ? தமிழ் நூல்களில் உள்ளது போன்று உள்ளதா ?

அந்தணர்களின் தொழில்கள் வட மொழிநூல்களில் பின்வருமாறு :

அத்யயனம் : வேதம் பயில்வது
அத்யாபனம் : வேதம் பயிற்றுவிப்பது
யஜனம் : சுயமாக வேள்வி செய்வது
யாஜனம் : மற்றவருக்கு வேள்வி செய்விப்பது
தானம் : தானம் கொடுப்பது
பிரதிக்ரஹம்: தான் தானம் பெறுவது.

இந்த ஆறு தவிர வேறு என்ன ஆறு ?

வேதத்திற்கு ஆறு அங்கங்கள் உள்ளன. அந்த ஆறு அங்கங்களுமே “சடங்கம்” என்று வடமொழி கூறுகிறது. தற்போது நாம் சடங்கு என்று தமிழில் வழங்கிவரும் சொல்லின் வேர் சடங்கம் என்ற ஆறு பாகங்கள் என்னும் பொருளில் வழங்கும் சொல்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார்,

“அமரவோர் அங்கம் ஆறும் வேதமோர் நான்கு ஓதி..” என்று கூறுகிறார்.

புறநானூறு ,

“நன்றாய்ந்த நீள் நிமிர்சடை முது புதல்வன்வாய் போகாது
ஒன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முதுநூல் ”

சிவன் ஆறு அங்கங்கள் கொண்ட வேதத்தை எப்போதும் ஓதிக்கொண்டுள்ளான் என்னும் பொருளில் வருகிறது.

இறைவனே ஓதும் வேதத்தை யார் பயிலலாம் என்ற கேள்வி வருவது இயற்கையே. வேதம் முதலான நூல்கள் ஒரு குலத்தார் மட்டுமே பயிலலாம் என்று ஆதியில் இருந்தது என்று பகுத்தறிவாளர் கூறுவாரே ? அப்படி உள்ளதா என்றால் இல்லை. வேதத்தை மாணவன் பயிலலாம் என்று இருக்கிறது.மாணவன் யார் ? உபநயனம் ஆனவன் மாணவன். ஆக, பூணூல் தரிப்பு விழா முடித்த ஒரு குலத்துச் சிறுவன் மட்டுமே மாணவனாகலாமா?

அதுவும் இல்லை.  அனைவரும் ஆகலாம். ஆதாரம் ?

மறுபடியும் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் :

“ஜன்மநா ஜாயதே சூத்ர: சம்ச்காரேர் தவிஜ உச்யதே
வித்யயா யாதி விப்ரத்வம் த்ரிபி: ச்ரோத்ரிய உய்ச்யதே”

அதாவது, பிறப்பினால் அனனவரும் சூத்திரன் என்ற பிரிவைச் சேர்ந்தவனே. அனனவரும் நாலாம் வர்ணத்தவர்களே. உபநயனம் என்ற சடங்கினால் ஒருவன் இருபிறப்பாளன் ஆகிறான். (த்விஜ என்பது இரு பிறப்பு என்று பொருள் படும் ). பின்னர் கல்வியினால் விப்ரன் என்ற நிலை அடைகிறான். அதன் பின்னர் இந்த மூன்றும் சேர்ந்து அவனை “ச்ரோத்ரியன்” என்று உயர்ந்த நிலை அடைய உதவுகிறது என்பது இதன் பொருள். மகாபாரதத்தில் யாதவனான கண்ணன் அந்தணனான குசேலனுடன் சேர்ந்து ஒரே குருகுலத்தில் பயின்றதை நினைவில் கொள்ளவும்.

வேறு சான்றுகள் ? காயத்ரி மந்திரத்தின் மூல ரிஷியான விஸ்வாமித்திரர் அந்தணர் அல்லர். மகாபாரதத்தை எழுதியவரும் வேத வியாசர்  என்று அந்தணர்களின் தலைவராகப் போற்றப்படும் முனிவரின் தாய் ஒரு மீனவப் பெண். ஆக பிறப்புக்கும் பார்ப்பனனாவதற்கும் தொடர்பில்லை.

தவிஜ என்பது இருபிறப்பாளன் என்று பார்த்தோம். இருமுறை பிறப்பது என்பது என்ன?

உபநயனம் என்ற சடங்கு ( பூணூல் அணிவித்தல்) நடக்கும் முன்னர் ஒரு சிறுவன் வாழும் நிலை ஒரு பிறவி. உபநயனம் முடிந்து அவன் கல்வி கற்கத் துவங்கும் நிலை இன்னொரு பிறவி. உபநயனம் முடிந்தவன் இருபிறப்பாளன்.

இதற்குச் சரியான தமிழ் வார்த்தை உள்ளதா ?

பார்ப்பனன் என்பதே அந்தத் தொடர். ‘பார்ப்பு’ என்பது பறவை என்று பொருள் படும், ‘அனன்’ என்பது அதைப் போன்றவன் என்று ஆகும். பறவையைப் போன்றவன் பார்ப்பனன். ஏனென்றால் பறவைக்கு அது முட்டைக்குள் இருக்கும் போது ஒரு உயிர். முட்டையின் ஓட்டை உடைத்து வெளி வந்தபோது இன்னொரு உயிர். அதுபோல் அஞ்ஞானம் என்ற இருள் அடர்ந்த நிலையில் முட்டைக்குள் உள்ள பறவை போல் இருக்கிறான். உபநயனம் என்று சடங்கு முடிந்து அவன் குருவினிடம் சேர்ப்பிக்கப்படும்போது இன்னொரு உயிர் பெற்று ஞானப் பாதை நோக்கிச் செல்கிறான் என்ற ஒரு ஆழ்ந்த பொருள் பொதிந்த சொல் ‘பார்ப்பனன்’ என்பது.

பூணூல் அணிவித்தவுடன் ஒருவன் த்விஜனாகிவிடுகிறானா ?

இல்லை. பூணூல் அணிவித்த பின் குருவினிடம் ஒப்படைக்கப்படுகிறான். தனக்கு உரிய கடமைகளைச் செய்வதாலும் விரதங்களைக் கடைப்பிடிப்பதாலும் அவன் ஞானத் தேடலில் முன்னேறுகிறான். அதன்பின்னர் குரு அவனுக்குக் கல்வி புகட்டுகிறார்.

பூணூல் அணிவிப்பதை ‘உப-நயனம்’ என்று வட மொழி கூறுகிறது. அதன் பொருள் ‘அருகில் அழைத்துச் செல்லுதல்’ என்பது. குருவின் அருகில் அழைத்துச் செல்லுதல். பின்னர் கல்வி. அதன்பின்னர் அவனது கடமைகளை நிறைவேற்றுதல். பின்னர் உலக வாழ்விலிருந்து வெளியேற வேண்டி மறுபடியும் குருவினிடம் அடைக்கலம். அப்போது குரு இறைவனின் அருகில் அழைத்துச் செல்வார். அது சன்யாசம் – துறவு பூணுதல். அப்போது முதல் உப நயனத்தின்போது அணிவித்த பூணூலும் விலகும்.

உபநயனம் ஆன த்விஜனின் கடமைகளும் விரதங்களும் என்ன ?

கடுமையான பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்ளல், காலையிலும் மாலையிலும் காயத்ரி என்னும் மகா மந்திரத்தை மௌனமாக ஓதுதல், தீ வழிபாடு செய்தல், மலர், சந்தானம் முதலிய வாசனைகளை நுகராமல் இருத்தல், தினமும் காலையில் பிச்சை எடுத்து அதனை உணவாகக் கொளல், வயிறு நிரம்ப உண்ணாதிருத்தல், எப்பொழுதும் உண்மையே பேசுதல், ஒருபோதும் உண்மை தவிர வேறு எதுவும் பேசாதிருத்தல், வயலில் உழவர்கள் ‘தேவை இல்லை’ என்று கீழே கொட்டிய நெல்லைக் கொணர்ந்து உணவு உட்கொளல் முதலிய கடுமையான விரதங்கள் மேற்கொளல் வேண்டும். இவற்றால் அவனது குரு மனத்திருப்தி அடைந்தால் அவர் பாடம் நடத்துவார்.

வயிறு நிறைய உண்ணாதிருப்பது பற்றி வள்ளலார் ,”பசித்திரு, தனித்திரு, விழித்திரு..” என்று கூறியதை ஒப்பிட்டுப்பார்க்க முடியும்.

இப்படிப்பட்ட நியமங்களுடன் வாழ்பவன் த்விஜன் அல்லது பார்ப்பனன்.

ஆக, பார்ப்பனன் என்பது பிறவியாலோ பூணூல் தரிப்பதாலோ வருவதன்று. அது ஒரு பதவி. அதை அடைய மேற்சொன்ன விரதங்கள் தேவை என்று ஸ்ரீமத் பாகவதத்தில் நாரதர் தருமருக்கு உபதேசம் செய்கிறார்.

இவ்வாறு கடின விரதங்களை மேற்கொண்ட ஒருவன் வேதம் பயிலத் தகுதியானவனாகிறான் ; வேதம் படிக்கவேண்டிய தகுதிகளை வளர்த்துக்கொள்கிறான் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

இதில் நாம் கவனிக்க வேண்டியது : அந்தணனாக ஒருவன் ஆவதற்குப் பல படிகளை அவன் கடந்தாக வேண்டியுள்ளது. ஒரு நுழைவுத்தேர்வு போல் அப்பதவிக்கு உரிய தகுதிகள் மேலும் மேலும் கடினமானவையாகவே உள்ளன. இவ்வளவு தூரம் கடின உழைப்புக்குப்பின் தான் ஒருவன் வேதம் பயில முடியும் என்று வைத்துள்ளதால் வேதத்தின் உயர்ந்த நிலை தெரிகிறது.

மஹா பாரதம் –உத்தியோக பர்வம் – விதுர நீதி வேத அறிவை விற்கும் அந்தணனையும் பிரம்மச்சரியத்தை மீறும் மாணவனையும் ரொம்பவும் கண்டிக்கிறது. “திருடன், கொடுமையானவன், குடிகாரன்,கருக்கலைப்பு ஏற்படுத்துபவன்,பிரம்மச்சரியத்தை மீறும் மாணவன்,தன்னுடைய வேத அறிவை விற்பவன் – இவர்கள் மிகவும் நெருங்கியவர்களாக இருந்தாலும் தண்ணீர் பெறவும் அருகதை அற்றவர்கள்”,  என்கிறது விதுரநீதி.

சங்க இலக்கியம் முதல் வள்ளுவர் காலம் கடந்து தற்காலம் வரை வழங்கி வந்துள்ள சொல் பார்ப்பனன் என்பது..

குறுந்தொகையில் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் என்பவரது பாடல் :

“பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பு முறுக்கி னன்னார் களைந்து
படிவ உண்டிப் பார்ப்பன மகனே எழுதாக் கற்பின் இன்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ மயலோ இதுவே”

சிவந்த பூக்களை உடைய புரச மரத்தின் பட்டையை உரித்துத் தண்டோடும் கமண்டலத்தொடும் விரத உணவு உண்ணும் பார்ப்பன மகனே, உன்னுடைய வேதத்தில் பிரிந்தவர்களைச் சேர்த்துவைக்கும் மருந்தும் உள்ளதா என்ன? என்னும் பொருளில் அமைந்துள்ளது.

இதில் நாம் கவனிக்க வேண்டியது இரண்டு.

ஒன்று “பார்ப்பன மகனே” என்று ஒரு படித்தவனை அழைப்பது.
இரண்டு “எழுதாக் கற்பு ” என்னும் தொடர். அக்காலத்தில் வேதங்கள் எழுதி வைத்துப்படிப்பதில்லை. வாய் வழியாகவே ஒரு குரு தன் மாணவனுக்கு உபதேசிப்பது என்பது வழக்கம். அதனாலேயே அதனை வடமொழியில் “ஸ்ருதி” என்று அழைப்பர். அது தமிழில் எழுதாக் கிளவி என்று அழைக்கப்படுகிறது. மேலும் வேதம் சம்ஸ்க்ருத மொழியில் உருவாக வில்லை. வேதத்தின் மொழி ‘ஸநதஸ்’ எனப்படும் ஒரு ஒலி அமைப்பு. பிற்காலத்தில் அது சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டது.

அந்தணர்கள் தீ வேள்வி செய்தனர் என்பதை, “தீயினைக் கும்பிடும் பார்ப்பார்..” என்று பாரதியாரும்  கூறுகிறார்.

தமிழ் நாட்டில் வேதம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா ? வேதம் ஓதுவது பற்றி சாதாரண மக்கள் என்ன நினைத்தார்கள் ? பழைய கால நிலை என்ன?

பரிபாடல் இவ்வாறு கூறுகிறது :

“நான் மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப ஏம வின்றுயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் பல்லக் கோழியின் எழாதெம் பேரூர் துயிலே”

“சேர நாட்டுமக்கள் வஞ்சி மாநகரில் கண்விழிக்கும்போதும் சோழர் தலைநகர் மக்கள் கோழி என்னும் ஊரில் கண் விழிக்கும்போதும் அவர்கள் கோழி கூவுவதைக் கேட்டே கண் விழிக்கிறார்கள். ஆனால் பாண்டியன் தலைநகர் மதுரையில் நாங்கள் அதிகாலியில் வேதம் ஓதும் ஒலியைக் கேட்டே கண்விழிக்கிறோம்”, என்று மதுரையின் பெருமை பேசுவதுபோல் அமைந்துள்ளது.

“வேதம் நிறைந்த தமிழ்நாடு” என்று பாரதியாரும் கூறுகிறார்.

இன்னும் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவன.

இன்றைய நிலையில் பள்ளிகளை நாம் பாட சாலை என்று அழைக்கிறோம். ‘ பாடம் படிப்பதால் அது பாடசாலையானது. பண்டைய நாட்களில் வேதம் ஓதுவதை ‘பாட” என்று அழைத்தனர். எனவே வேதத்தை வார்த்தைகள் கோர்த்து “கனம்” என்கிற முறையில் பாடுபவர்களை ‘கனபாடிகள்’ என்று அழைக்கிறோம். தற்போது இந்தப் ‘பாடம்’ வேதம் அல்லாத மற்ற விஷயங்களுக்கும் வந்துவிட்டது.

வேதம் படிப்பது வரை சரி. யார் கற்றுத் தருவார்கள் ?

இன்று நாம் ஆசிரியர் என்று அழைக்கிறோம். முன்னாளில் “ஆச்சாரியர்” என்பது தற்போது ஆசிரியர் என்று வழங்குகிறது. இன்னொரு சொல் “வாத்தியார்” என்பது.

இது எப்படி வந்தது?

ஒரு தொடர் கதையையோ ஒரு நெடுந்தொடரின் ஒரு பாகத்தையோ நாம் “அத்யாயம்” என்று அழைக்கிறோம். அதுபோல் பல அத்யாயங்களைக் கற்பவரை “அத்யயனம் செய்கிறார்” என்று அழைப்பது மரபு. ( வேத அத்யயனம் செய்தவர் என்று அழைப்பது நாம் அறிந்ததே). அந்த அத்யாயத்தைப் போதிப்பவர் “அத்யாபகர்” அல்லது ‘அத்யாயர்’. அதுவே நாளடைவில் மருவி இன்று “வாத்யார்” என்று நாம் கூறுகிறோம்.

‘அத்யாபகர்’ என்பவர் உயர்ந்த ஆசிரியர். கல்விக்குக் காசு வாங்காதவர். ஆனால் காசு வாங்கிய ஆசிரியர்கள் இருந்தனர். அவர்கள் ‘உப-அத்யாபகர்’ என்று அழைக்கப்பட்டார்கள். நாளடைவில் ‘உபாத்யாயம்’ செய்வது என்பது பணம் வாங்கிக்கொண்டு வைதீக காரியங்கள் செய்வதைக் குறிப்பதாகியது. இன்றும் இந்தியாவின் வட மாநிலங்களில் ‘உபாத்யாயா’ என்ற பெயருடையவர்கள் திகழ்கிறார்கள். வெள்ளையர் ஆட்சியில் நல்ல பெரிய ஆசிரியர்கள் “மஹாமஹோபாத்யாய” என்று பட்டம் வழங்கிக் கௌரவித்தது நினைவில் கொள்ளலாம். ( மஹாமஹோபாத்யாய பண்டிதமணி கதிரேசன் செட்டியார் என்னும் தமிழறிஞர் நம் நினைவில் நிற்கிறார்).

அது தவிர இரண்டு வேதங்கள் கற்றறிந்தவர் ‘திவிவேதி’ என்றும் மூன்று வேதங்கள் கற்றவர் ‘த்ரிவேதி’ என்றும் நான்கு வேதம் கற்றவர் ‘சதுர்வேதி’ என்றும் அழைக்கப்பட்டனர். வடமாநிலங்களில் இன்றளவும் இவை புழங்கிவருகின்றன. வங்காளத்தில் சட்டர்ஜி, முகர்ஜி, சட்டோபாத்யாயா முதலிய பெயர்களும் இவை சார்ந்தவையே.

வேதக் கல்விமுறை குறித்துத் தனியான ஒரு பதிவில் பார்க்கலாம்.

‘உபாத்யாயர்’ பற்றிப் பார்த்தோம். அவர் பொருள் பெற்றுக்கொண்டு பாடம் நடத்தினார் என்பது கண்டோம். எனவே அவர் முன்னோர் நினைவு ( திவசம் ) முதலான நாட்களில் அமரச்செய்து உணவு பறிமாறப்படும் பெருமை இழக்கிறார் என்கிறது மனுஸ்மிருதி. பணம் வாங்காமல் கல்வி வழங்குவதே சிறப்பு என்று அறிவுறுத்துகிறது.

உபாத்யாயர். அவருக்கு மேல் அத்யாபகர். அவருக்கும் மேல் ஆச்சார்யர்.

ஆச்சாரியாரின் குணம் என்ன? எப்படி இருக்க வேண்டும் ?

மூன்று குணங்களைக் கொண்டவராக இருக்க வேண்டும். பண்டைய சாஸ்திரங்களையும் நூல்களையும் நன்றாகக் கற்றுத் தேர்ந்திருக்கவேண்டும் (‘ஆசிநோனி ஹி சாஸ்த்ரார்த்தம்”). கற்றதை அப்படியே வெளியில் நடத்தும் அறிவாளியாக இருக்கவேண்டும் (“ஸ்வயம் ஆசரதே”). இவ்வாறு தான் கற்றவழி தானும் நடந்து மற்றவருக்கும் போதித்து அவர்களையும் அவ்வழியில் நடக்கச்செய்யவேண்டும் (“ஆசாரே ஸ்தாபயத்யபி”).

கல்வி அறிவு நிறைய இருந்தும் அனுஷ்டானம் இல்லாத பிராமணனை விட கல்வி அறிவு இல்லாத ஒரு பாமரனே சிறந்தவன் என்று விதுரநீதி கூறுகிறது.

இதையே வள்ளுவரும் “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்கிறார்.

இன்னொரு இடத்தில் வள்ளுவர், அந்தணன் வேதத்தை மறந்தாலும் பரவாயில்லை ஆனால் ஒழுக்கத்தை விட்டானெனில் முதலுக்கே மோசம் ஏற்படும் என்னும் பொருளில்,

“மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் ” என்கிறார்.

இதற்கும் மேல் மனு தர்ம சாஸ்திரம் கூறுவது நம் கவனத்தை ஈர்க்கிறது :

திருட்டின் தன்மை அறிந்து திருடுகிற நான்காம் வர்ணத்தவனுக்குஅந்த திருட்டுக்கு உண்டான தண்டனையைப் போல் 8 மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்.அதே குற்றத்தைச் செய்யும் பிராமணனுக்கு 64 மடங்கு அல்லது 100 மடங்கு அல்லது 128 மடங்கு வரையிலும் தண்டனை விதிக்கலாம்.ஏனென்றால் திருட்டினால் வரும் தோஷத்தை பிராமணன் அறிந்திருக்க வேண்டும் என்கிறது அது.

இவ்வளவு தூரம் தமிழிலும் வட மொழியிலும் அந்தணர் பற்றியும் பார்ப்பனர் பற்றியும் செய்திகள் உள்ளன. பிறப்பினால் ஒருவன் அந்தண நிலை அடைவதில்லை என்பதையும், பார்ப்பனன் என்பது இழிச்சொல் அல்ல என்பதையும்  கண்டோம். ஆயினும், இவை வெளியில் வருவதில்லையே ? அது ஏன் ?

பாரதியாரிடம் கேட்போம்.அவர் கூறுகிறார் :

“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்து அளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்…
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து
ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்…
முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டிற்கும் இந்நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்
பேடிக்கல்வி பயின்று உழல்பித்தர்கள்.”

நமது மெக்காலேயின் ஆங்கில வழிக்கல்வியையும் அதனால் நமது பெருமையை அறியாமலே போனதையும் அவ்வாறு படித்து வந்தவர்கள் “பேடிக்கல்வி” பயின்ற பித்தர்கள் என்றும் வசைபாடுகிறார் பாரதியார்.

இந்த நமது வரலாற்று வீழ்ச்சியில் அவர் காலத்திற்குப்பின் தோன்றிய “பகுத்தறிவு” அரசாங்கங்களின் பங்கினை அறியாதவர் பாரதியார். எனவே அவரை மன்னித்து வைணவம் பற்றிய நமது ஆராய்ச்சியைத் தொடர்வோம்.

இவ்வளவு தூரம் அந்தணர்கள் பற்றி நாம் ஆராய வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழலாம். இவ்வளவு கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு கல்வி முறை மற்றும் வாழ்க்கை வழி முறை நாளடைவில் சிதைந்து போய் அதனால் சமூகத்தில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளை வைணவம் எப்படிக் கையாண்டது என்று அறிந்துகொள்ள இந்த நம் ஆராய்ச்சி பயன்படும் என்று கருதுகிறேன்.

அடுத்தபதிவில் சங்க காலத்தில் வைணவம், சமூக அமைப்பு, பின்னர் சங்கம் மருவிய காலங்களில் வைணவம் மற்றும் சமூக அமைப்பு என்று பயணத்தைத் தொடர்வோம்.

வைணவம் – பண்டைய அந்தணர்

வைணவம் தொடரில் முக்கிய பாத்திரமான  அந்தணர்கள்  பற்றிப் பார்ப்போம். ஏனெனில் இன்றைய நிலையில் வைணவர்கள் என்றாலே ஐயங்கார் என்கிற பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரு தோற்றம் உள்ளது. மற்ற அனைவரும் சைவர்கள் போலவும், ஐயங்கார் பிரிவினர் மட்டுமே திருமால் தொண்டர்கள் போலவும் பார்க்கிறோம். ஐயங்கார்கள் அந்தணர்கள் என்பதால் முதலில் பொதுவாக அந்தணர்கள் பற்றிப் பார்த்துவிட்டு பிறகு வைணவம் குறித்து நுழைவோம்.

நேரே விஷயத்திற்கு வருகிறேன்.  அந்தணன்  பார்ப்பனனா?   கம்பன் பற்றிப் படித்துக்கொண்டிருந்தபோதும் அது விஷயமாக வேறு நூல்களைப் பார்த்தபோதும் இந்த அந்தணன் என்ற சொல் பலமுறை தென்பட்டது.

சங்க இலக்கியங்கள் என்று பார்த்தேன். அவற்றில் அந்தணன், பார்ப்பனன் என்று இரண்டும் தென்பட்டன. சிலப்பதிகாரமும் அப்படியே. பக்தி இலக்கிய காலகட்டமான ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்திலும் அவர்கள் பாட்டில் அந்தணர் என்பதே அதிகம் தென்படுகிறது. வேதியர் என்பதும் இருக்கிறது.

சரி. இப்போது இதற்கு அவசியம் என்ன? மோடி, பொருளியல், பணவீக்கம், ரஜினியின் அடுத்த படம், நடிகை திரிஷாவின் சிரிப்பு என்று உலகம் நகர்ந்துகொண்டிருக்கும்போது அந்தணன் எக்கேடு கெட்டால் என்ன? தமிழ் இலக்கியங்களில் என்ன இருந்து தொலைத்தால் என்ன என்று சிலர் கேட்கலாம்.

வரவிருக்கும் வாரங்களில் வைணவம் குறித்தும், ஆழ்வார்கள் குறித்தும் காணவேண்டிய நிலையில், வைணவத் தத்துவங்களுக்குள் புகும் முன்னர், அந்தணர்கள் எவ்வாறு சங்க காலம் தொட்டு பாரதி காலம் வரை சமய மற்றும் மொழி, கலாச்சாரம் சார்ந்த கருத்தியல்களில் இரண்டறக் கலந்துள்ளனர் என்று அறிந்துகொள்ளவேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு அவர்கள் தொழில்கள்  என்ன, அவர்களின் சமுதாயம், கல்வி, கலாச்சாரம், அரசு  சார்ந்த பங்களிப்பு என்ன என்று தெரிந்து கொண்டு மேலே செல்வது பயனளிக்கும்.

அந்தணன் என்பதன் பொருள் என்ன ? இவையே பொருள்களாக ஒரு தமிழ் அகராதி கூறுகிறது : செந்தண்மை உடையவன், வேதத்தின் அந்தம் அறிந்தவன், முனிவன், கடவுள், வியாழன், சனி.

‘அந்தம்’ என்பது முடிவு என்று அறிவோம். வேதத்தின் அந்தம் வேதாந்தம். அதனை அறிந்தவன் வேதாந்தி.

அதுபோல் ‘அந்தம்’+’அனன்’ = அந்தணன் என்று தெரிகிறது. முடிவை அறிந்தவன். முடிவான பிரம்மத்தை அறிந்தவன். பிரம்மத்தை அறிந்தவன் பிராம்மணன் என்று கூறுவதிலிருந்து அந்தத்தை அறிந்தவன் அந்தணன் என்று வந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

இன்னொரு பொருளும் தெரிந்தது. சற்று இலாகியம் சார்புள்ளது.

அந்தணன் = ”அம்’ + ‘தண்’ + ‘அனன்’ என்று பிரிக்க முடிகிறது.

அம் = அழகு;  தண் = குளிர்ச்சி ; அனன் = கொண்டவன்.

ஆக, அழகும் குளிர்ச்சியையும் கொண்டவன், வெம்மை இல்லாதவன் என்ற பொருளிலும் வருகிறது.

சரி. ஆதாரம்?

எப்பொழுதும் போல் வள்ளுவர். அவர்  கூறுகிறார்:

“அந்தணன் என்போன் அறவோன் மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்”

எல்லா உயிர்களிடத்திலும் உள்ளத்தால் செம்மைத்தன்மை ( கோபம் முதலிய கடுங்குணங்கள் ) இல்லாதிருந்து அற வழியில் நடப்பவன் அந்தணன். செம்மைத் தன்மை மட்டும் இல்லாதிருந்தால் போதாது ; அறவழியில் நடப்பவனாகவும் இருக்கவேண்டும். அவனே அந்தணன் என்கிறார்.

தமிழக “பண்டிதர்கள்” எப்போதும் போல் இந்த இடத்தில் ‘அந்தணன்’ என்பது கடவுள்அல்லது  நன்னெறியில் நடப்பவரே அன்றி பார்ப்பனரைக் குறிப்பது அல்ல என்று தங்கள் வரலாற்றுக்கடமையை ஆற்றியுள்ளார்கள். ஆனால் கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு அந்தணன் என்றால் கடவுள் என்று கூறுவது அவர்களுக்கே ஒரு மாதிரி பட்டிருக்கும்போலே. எனவே தற்கால “பண்டிதர்கள்”,  “அறவழியில் நடப்பவர்கள்” என்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.  (சிவபெருமானுக்கு “ஈர்ஞ்சடை அந்தணன் ” என்று கலித்தொகை பெயரிடுகிறது.  )

எப்போதும்போல் அவர்களை நிராகரித்துவிட்டு மேலே தொடர்வோம்.

அந்தணர்களின் தர்மம் என்ன ? அவர்கள் எவ்வாறு அறியப்படுகிறார்கள் ?

சங்க இலக்கியங்கள் தொடங்கி, ஆழ்வார் பாசுரங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, நாரத புராணம், திருக்குறள், சைவத்திருமுறைகள் எல்லாவற்றிலும் அந்தணனுக்கு விதிக்கப்பட்ட கடமைகள் பலவற்றில் மிகவும் அழுத்திச்சொல்வது இந்த மூன்றும்  :

வேள்வி செய்தல், வேதம் ஓதுதல், உலக நன்மை வேண்டி இறையிடம் வேண்டுதல். இந்த மூன்றும் வலியுறுத்தப்பட்டாலும் அவர்கள் ஆறு தொழில்கள் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

திருமூலர் கூறுவது இது :

“அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர், செந்தழல் ஓம்பி
முப்போதும் நியமம் செய்து, அந்தவ நற்கருமத்து நின்று
ஆங்கிட்டுச், சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே”

அந்தணர் என்பவர் ஆறு தொழில் செய்யும் வகையினர். தினம் மூன்று முறை அக்னிஹோத்ரம் என்னும் தீ வணக்கம் செய்திருக்கவேண்டியவர்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட நியமங்களை விடாது பின்பற்றுபவர்கள். பிறவிக்குக் காரணமான கருமங்கள் அழிய வேண்டி நற்கருமம் செய்து வாழவேண்டியவர்கள் என்கிறார்.

சரி? அது என்ன ஆறு தொழில்கள் ?

வேதம் ஓதுதல், ஓதுவித்தல், தானம் வாங்குதல், வழங்குதல், வேள்வி செய்தல், செய்வித்தல். இவை ஆறே அந்தணர் தொழில்கள். கோவில்களில் பூசை செய்வது பற்றி ஒரு பேச்சும் இல்லை.

ஆறு தொழில்கள் என்று திருமூலர் சொன்னால் போதுமா ?

நமது திருவள்ளுவர் சொல்வது :

“ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்”

மன்னன் ஆட்சியின் தன்மை பால் வளம் மற்றும் அந்தணர் நூலை ( வேதம் ) ஓதுதலை குறியீடாகக்கொண்டு கணிக்கப்படுகிறது தெரிகிறது. இங்கே அறுதொழிலோர் என்பது அந்தணரைக் குறிக்கிறது.

திருமூலர் மேலும்,  “செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே,” என்றும் கூறுவது நோக்கத்தக்கது. இரண்டு பாடல்களிலும் “செந்தழல் ஓம்புதல்” என்று குறிப்பிடுகிறார்.

திருமூலர் போல் செந்தழல் ஓம்புதல் பற்றிப் பலர் கூறியுள்ளனர்.

தொண்டரடிப்பொடியாழ்வார் :

“குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிக்கொள் அந்தண்மை…” என்று  அந்தண்மையையும் நீராடி மும்முறை அனல் ஓம்பும் கடமை பற்றியும் கூறுகிறார்.

திருமங்கையாழ்வார் தேரழுந்தூர் பாசுரத்தில்,

“அந்தணர் தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர்”

என்று தேரழுந்தூர் வாழ் அந்தணர்கள் எழுப்பிய வேள்விப்புகை ஊர் முழுவதும் பரவி இருந்ததைக் குறிப்பிடுகிறார்.

அந்தணர் பற்றி சைவத்திருமுறைகள் பல விஷயங்கள் கூறுகின்றன.

அந்நாளில் அந்தணர் வேள்வி செய்வது இன்றியமையாததாகவும் அதனால் நாட்டிற்கு மிக்க நன்மை ஏற்படும் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. சில உதாரணங்களைப் பார்ப்போம்.

தேவாரம் இவ்வாறு கூறுகிறது :

“வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே”

சோர்வை அறியாத அந்தணர்கள் ஹவிஸ் என்னும் அவியைச் சொரிந்து வேள்வி செய்தலால் மழையும் நிலமும் நன்மை அடையும், தேவர்கள் நன்மை அடைவர், இதற்கெல்லாம் முதல் நூலாய்த் திகழும் வேதமும் நிலைபெறும். அவ்வாறு செய்யாவிட்டால், இந்த நன்மைகள் கிட்டா.

மேலும் கூறும்போது :

“ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர்”, என்று ,

முத்தீ வேள்வி செய்கின்ற, அரிய வேதத்தை ஓதுகின்ற அந்தணர் மறுமை நலம் வேண்டி பிறர்க்கும் இட்டு உண்பர் என்று குறிப்பிடுகிறார்.

இன்னொரு பாடலில் ,

“அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான” என்று

அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயின் உள்ளே நமக்குத் துணையான இறைவன் உறைந்துள்ளான் என்று கூறுகிறார் ஞானசம்பந்தர்.

இத்தகைய அந்தணர் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று சம்பந்தர் தேவாரம் கூறுகிறது :

“வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே”

அந்தணர் வாழ்க, தேவர் வாழ்க, பசுக்கூட்டங்கள் வாழ்க, மழை பொழிக, அதனால் வேந்தன் வாழ்க, தீயவை எல்லாம் அழிக …இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக என்று வாழ்த்துகிறார்.

இதில் காணவேண்டியது, அந்தணர்களைப் பற்றிக்கூறும் போது பசுக்களைப் பற்றியும் கூறுகிறார். அந்தணர் வேள்வி செய்வதால், ஆநிரைகள் வளரும், மழை பெய்யும், மக்களும் மன்னனும் வாழ்வார்கள் என்று அந்நாளில் நம்பினர்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரிக்கும்போது அக்கினி தேவனிடம் ,

“ஆவும் ஆனிரைப் பார்ப்பன மக்களும் பெண்டிரும் பிணியுடையீரும்”

ஆகிய இவர்களை விடுத்து மற்றதை எரிப்பாயாக என்று ஆணை இடுகிறாள். இங்கும் அந்தணரும் பசுக்களும் ஒருங்கே கூறப்பட்டுள்ளனர்.

“கோ-ப்ராம்மண்ஸ்ய..” என்ற சமஸ்கிருத பதமும் பசுவையும் அந்தணர்களையும் ஒருசேரக் கூறுகிறது. ஒரு வேளை பசு மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் நெய்யைக் கொண்டு வேள்வி செய்வதால் பசுமாடுகளையும் அந்தணர்களையும் ஒருங்கே கருதியிருக்கலாம் என்று நினைக்கிறேன்..

ஒரு மாதத்தில் மூன்று மழை பெய்யும் என்பது பண்டைய விதி.

ஏன் மூன்று மழை என்று விவேக சிந்தாமணி கூறுகிறது:

“வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை
மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!”

வேதம் ஓதும் வேதியர்களுக்காக ஒரு மழையும், நீதி நெறி தவறாத மன்னனுக்கோர் மழையும், கற்புடைய மாதருக்காக ஒரு மழையும் என்று ஒரு மாதத்தில் மூன்று மழை பெய்துள்ள காலம் இருந்துள்ளது.

அடுத்த பதிவில் அந்தணர் அல்லது பார்ப்பனர் பற்றி மேலும் சில பழைய நூல்கள் கூறுவதையும், அவர்களுக்கான கடுமையான விதிகள் பற்றியும் வட மொழி நூல்கள் கூறுவதையும்  பார்த்துவிட்டு வைணவத்திற்குள் செல்வோம்.

வைணவம் – சில பார்வைகள்

வைணவம் குறித்து எழுத வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நான் தென்கலை வடகலை வேறுபாடுகள் பற்றியும் அவை ஒன்றுமே இல்லாதவை என்பது பற்றியும் பதிவிட்டவுடன் ஒரு வாசகர் நிறைகளைப் பற்றியும் எழுதலாமே என்று கடிதம் இட்டிருந்தார்.

அதற்காகத் தென்கலை வடகலை என்ற பிரிவுகள் பற்றி மேலும் தோண்டிக்கொண்டிருந்த போது “வைணவம் – ஒரு மார்க்சீயப் பார்வை” என்ற நூல் கண்ணில் பட்டது. அதில் வைணவத்தைப்பற்றி ஒரு இடதுசாரி நோக்கில் தோத்தாத்திரி என்னும் பேராசிரியர் எழுதியிருந்தார். அவரது பார்வை தத்துவங்களின் அடிப்படையில் ஓரளவே இருந்தது ஆனால் வைணவத்தை அவர் ஒரு சமுதாய நோக்கில் அணுகியது சிலிர்ப்பூட்டியது.

உண்மையில்  இடதுசாரி மனிதர் ஒருவர் செய்துள்ள ஆராய்ச்சி மற்றும் முயற்சி என்னை வெட்கப்படச் செய்தது. இத்தகைய ஒரு முயற்சி நம்மிடம் இல்லாமல் போனதே என்று வருத்தப்பட்டது உண்மை. அந்த நூல் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது . அதன் பின்னர் வைணவம் குறித்து மேலும் தோண்டிப் பார்க்கலாமே என்று ஒரு  எண்ணம்.

மேலும் தோண்டியபோது பல அறிமுகங்களும் கருவூலங்களும் கிடைத்தன. இதுநாள் வரை சேகரித்த செவி வழிச் செய்திகள்,  பெரிய ஆராய்ச்சிகளின் பலனாகச்  சில பெரியவர்கள் எழுதிய நூல்கள்,  சில அனுபவங்கள், சில தத்துவத் தேடல்கள், சில கருத்துப்பறிமாற்றங்களில்  பார்வையாளனாக இருந்த நேரடி அனுபவம் — இவை என்னை “மார்க்சீய நோக்கில் மட்டும் பார்ப்பானேன்? மற்ற பல திசைகளிலிருந்தும் நோக்கலாமே”, என்று திசை திருப்பின.

இதனால் வைணவத்தை நான் கரைத்துக் குடித்துவிட்டேன் என்று யாரும் எண்ண வேண்டாம் என்று நான் கூறவேண்டிய அவசியமில்லை.  இவை எல்லாமே நான் ஒரளவு அனுபவித்தது, சில கண்டது, சில கேட்டது, ஆனால் பெரும்பாலும் படித்தது. இப்படியாக அறிந்துகொண்டது தான்.

அவற்றின் பலன் : இனி வரவிருக்கும் வைணவம் பற்றிய ஒரு தொடர்.

வைணவம் ஒரு சமயம் என்பதால் இந்தத் தொடரில்  வெறும் சமயம் பற்றிய பக்திப் பாடல்கள் மட்டுமே இருக்கும் என்று நினைக்க வேண்டாம். வைணவம் பற்றி ஒரு சில திசைகளிலிருந்து பார்த்து, அதில் எனக்குப் புரிந்தவற்றை எழுதலாம் என்று எண்ணம்.

ஒரு சமயத்தைப் பரப்புவதற்காகவோ, உயர்த்திப் பேசுவதற்காகவோ எழுதப் படுபவை அல்ல இவை. வைணவமும் தமிழும், தமிழ் நாடும், மக்கள் வாழ்வும், வாழும் முறைகளும், அவை தொடர்பான பல தத்துவங்களும் அவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள நிலை குறித்தும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஆனால் ஒரு தத்துவத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அது மற்றதிலிருந்து எப்படி வேறு பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே வைணவத்தின் சமகாலத்திலும் , அதற்கு முன்னரும் இருந்த தத்துவங்கள் பற்றியும் எழுதவேண்டியுள்ளது அவசியம்.

எனவே, சில பகுதிகள் சுலபமாக இருக்கும். சில சற்று தூக்கம் வரவழைக்கும். தத்துவங்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ள கொஞ்சம் முயற்சி தேவை.  இருந்தாலும், கடினம் போல் தோன்றுவதை எவ்வளவு எளிதாக்கமுடியுமோ செய்கிறேன்.( எனக்கே புரிகிறது என்றால் யாருக்கும் புரியும் ).

அக்கால சமுதாய நிலை,  சமயங்களின்  நிலைகள் , சில ஆச்சாரியர்கள் பற்றிய குறிப்புக்கள், ஆழ்வார்கள் மற்றும் அவர்களது  தத்துவங்களைக் கடந்து சென்ற பின், ஆண்டாளின் பாசுரங்களின் விளக்கங்களுடன் முடிக்கலாம் என்று தோன்றுகிறது. அப்போது மார்கழி மாதம் ( 15 – December – 14-January ) துவங்கியிருக்கும். இறையருளும் குருவருளும் வாசகர் ஊக்கமும் வேண்டித் துவங்குகிறேன்.

முதலில் ‘அந்தணர்’ என்னும் தலைப்பில் சில பதிவுகள் காண்போம். ஏனெனில் அவர்களின் நிலையையும், அவர்களைப்பற்றிய சில செய்திகளும் வைணவத்தை ஒரு குறிப்பிடும் அளவில் அறிந்துகொள்ள உதவும் என்று நினைக்கிறேன்.

எப்போதும்போல் தொடரினூடே வாசகர் கடிதங்கள் வரவேற்கப்படுகின்றன. அவையே அடியேனை ஆற்றுப்படுத்தும் வழி காட்டிகள்.

(கம்பன் பற்றிய தொடரும் அவ்வப்போது இடம்பெறும். தப்பித்துவிட்டதாக நினைக்கவேண்டாம். பொழுதுபோகாமலும் தூக்கம் வராமலும் தவிப்பவர்கள் எனது ஆங்கல தளத்தைப் பார்வையிடலாம்.அது –  https://amaruvi.wordpress.com)

%d bloggers like this: