‘சீக்கரம் போங்கோ. க்யூ பெருசா இருக்கு’ வெள்ளை கோபுர வாசலில் நின்றிருந்த ஸ்வாமி அவரசரப்படுத்தினார்.
பிப் 23, 2020. காலை 6:30 மணி. அமாவாசை.
பஞ்சகச்சம் மற்றும் ஶ்ரீவைஷ்ணவ அடையாளங்களுடன் கோபுர தரிசனத்துடன் நுழைகிறேன்.
ஆச்சார்யனிடம் அனுமதி பெற்றுப் பெருமாளைச் சேவிக்க எண்ணி உடையவர் சன்னிதிக்குச் சென்றோம். பரம காருண்ய சீலராக எம்பெருமானார் எழுந்தருளியிருந்தார். ‘ஏதோ எழுதுகிறான்’ என்று சிலர் சொல்லக் கூடிய அளவில் என்னை நிற்கவைத்த பெருமகனார் புன்முறுவல் பூத்தபடி எழுந்தருளியிருந்தார். ஒருகணம் மெய் சிலிர்த்தது. பகுத்தறிவு, புண்ணாக்கு என்று கேலி எழுத்துக்களையே செய்துகொண்டிருந்த அடியேனைத் தமிழில் தன்னைப் பற்றி எழுதவைத்து (‘நான் இராமானுசன்’) வாழ்க்கையையே மாற்றியருளிய பெரும்பூதூர் மாமுனி மோனத்தவத்தில் அமர்ந்திருந்தார்.
வெளியேறி, இலவச தரிசன வரிசையில் நப்பாசையில் நிற்கிறேன் (எதுக்கு HR & CEக்கு நம்ம காசு போகணும்? என்னும் என் தர்க்கம் + அதற்கான நறுக் பதில் மனைவியிடமிருந்து).
இலவச வரிசை என்னும் சொல் காயப்படுத்துகிறது. பெருமாள் எல்லாருக்கும் இலவசம் இல்லையா? அதென்ன பணம் கொடுத்து சேவிப்பது? அவன் என்ன இறைக்காட்சிச் சாலையில் உள்ள நோக்கத்தக்க பொருளா? அரை மணி கழிந்த பின் அதே இடத்தில் நிற்பதை உணரும் தருணம். ‘கவர்மெண்டோ யாரோ, பெருமாளுக்கு கொஞ்சமாவது செய்வாளோனோ? 50 ரூபா வரிசைல போகலாம் என்னும் மனையாள் வாக்குப் பரிபாலகனாய் வெளியேறினால், 50 ரூபாய் வரிசை இன்னமும் நீளமானதாகத் தோன்ற, ‘இப்பிடியே நின்னுண்டிருந்தா யாரையும் சேவிக்க முடியாது’ என்னும் ஆசீர்வாதவாணிக்கு ஆட்பட்டு 250ரூபாய் வரிசையில் நின்று, சில கட்டுகளைத் தாண்டி அரங்கனின் காயத்ரி மண்டபத்தின் முன் இலவச மற்றும் ஐம்பதுகளுடன் ஐக்கியமானோம். இறைவன் முன்னிலையில் அனைத்தும் ஒன்றல்லவா?
ஒருவழியாகக் காயத்ரி மண்டபத்தினுள் நுழைந்தோம். பிரபஞ்ச அளவுக்கான நிசப்தத்தில் துயில் கொண்டிருக்கும் அரங்கனைச் சேவிக்க எண்ணி நிமிர்ந்தால் அரங்கனின் அருந்துயில் கெடும் அளவிற்குக் கூச்சல். ‘நிற்காதீர்கள், நகருங்கள்’ என்பதைப் பலர் பல மொழிகளில் கத்திக்கொண்டிருந்தனர். ஊழியர்கள், சீருடை அணிந்த ஊழியர்கள், பட்டர்கள், பட்டர்கள் சொரூபத்தில் இருந்த இன்னும் சிலர், இஸ்கான் நிறுவனத்தைச் சார்ந்தவர் போன்று தோற்றம் அளித்த இன்னொருவர் என்று பலரும் தங்களுக்குள் பேசிக்கொண்டும், உரத்து சிரித்துக்கொண்டும், பக்தர்களை நகர்த்த உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தனர். இவை எதையும் கண்டுகொள்ளாமல் ஆழ்துயிலில் இருந்தான் அரங்கன். உறங்காவில்லியைத் தன் கண் அழகால் ஆட்கொண்டவனும், தன்னைக் கண்டால் பிறிதொன்றைக் காணத் தோன்றாத கண் அழகை உடையவனுமான அரங்க நகர் மேயவப்பன் புன்சிரிப்புடன் பள்ளிகொண்டிருந்தான். ‘இந்த சத்தத்தில் எப்படியப்பா படுத்திருக்கிறாய்?’ என்று மானசீகமாகக் கேட்டேன். பஞ்சகச்சம், திருமண் காரணத்தால் ‘ஸ்வாமி, சற்று தள்ளி நின்று சேவிக்கலாமே’ என்று மரியாதையாகச் சொன்னார்கள்.
காயத்ரி மண்டபம் துவங்கி அரங்கனின் கருவறைக்குள் செல்லும் வரை ‘அமலனாதிபிரான்’ சொல்லவேண்டும், திருப்பாணாழ்வார் கொண்டிருந்த மன நிலையை அடைய, மீட்டுருவாக்க முயற்சிக்க வேண்டும் என்று பல முறைகள் முயன்றேன். கூச்சல், அதட்டல் அதிகம் இருந்ததாலும், மக்கள் கூட்டமும் சற்று கட்டுப்பாட்டுடன் இல்லாதிருந்ததாலும் என்னால் முடியவில்லை. இறையுரு முன் அகமிழந்த நிலையில் ஓரிரு மணித்துளிகள் நின்றவாறு உறங்காவில்லி பெற்ற அனுபவத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்னும் என் எண்ணம் ஈடேறவில்லை. பெரும் வருத்தம்.
கூட்டத்தில் நசுங்கி, பணமும் கொடுத்து, பெருமாளைக் கண்டு மனக்குறைகளை இறக்கி வைக்க வரும் பல மொழி பேசும் பக்தர்கள் எதிர்பார்ப்பது, தாங்கள் அரங்கனுடன் தனிமையில், ஒலிகள் அற்ற பெரு மவுனத்தில், எகாந்தத்தில் திளைத்துத் தங்களைப் புதுப்பித்துக் கொண்டு செல்லவே. அதற்கான வசதியை, சூழலை ஏற்படுத்தித் தருவது கோவிலார் கடன். ஏதோ வேண்டா வெறுப்பாகச் செய்யாமல் மனம் ஒன்றி மவுனம் கடை பிடித்தல் மிக மிக அவசியம். உள்ளே சயனத்தில் இருப்பவனுக்கே கூட தங்களது இரைச்சல் பொறுக்காது என்பதை அவர்கள் உணர வேண்டும். உணர மறுப்பவர்கள் காயத்ரி மண்டபத்தை விட்டு வெளியேற வேண்டும். இதை நிர்வாகம் உடன் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோவிலாரும், பட்டர்களும் இன்ன பிறரும் வேறொன்றும் செய்ய வேண்டாம். பேசாமல் இருந்தாலே போதும். செல்பேசி கூடாது என்று அறிவிப்பு உள்ளது போன்று வாய்பேசியும் கூடாது என்று எழுதி வைக்க வேண்டும். அருமையான இறை அனுபவத்தைப் பக்தர்களுக்கு வழங்குவது கோவிலார் கடன்.
பின்னர் தாயார் சன்னிதியிலும் இவ்வாறே. பிரபஞ்சம் முழுமைக்குமாக வீற்றிருக்கும் தாயின் கருவறை முன், முகமது துக்ளக் படையெடுப்பால் பூமிக்குள் சென்று மீண்டு திரும்பிய தாய், அவள் வருவதற்கும் தோன்றிய புதிய தாய் என்று இருவரையும் அமைதியாக ஒருசேரக் கண்டு , ஓரிரு மணித்துளிகள் அமைதியான நின்று அந்தக் கொடிய வரலாற்றுத் தருணங்களை அசைபோட்டு, ‘இவ்வளவு தியாகங்கள் புரிந்து, மீண்டு வந்து எங்களுக்காகக் காட்சியளிக்கும் தாயே, உன் கருணைக்கு என்னிடம் கைம்மாறு இல்லையே’ என்று கசிந்துருகி வெறும் இரு மணித்துளிகள் கூட நிற்க வழி இல்லை என்பது மன்னிக்க முடியாத துன்பியல் நிகழ் யதார்த்தம். அதைவிடக் கொடுமை வெளியில் இருந்து பார்த்தால் தாயார் தெரிந்துவிடுவார் என்பதாலோ என்னவோ தாயார் சன்னிதியின் வாயிலில் வெள்ளை நிறத்தில் படுதா கட்டியிருந்தார்கள். அப்போது தளிகை கண்டருளப்பண்ணும் சமயமும் இல்லை. (இப்படிப் படுதா கட்டுவதை எதிர்த்து காஞ்சி பரமாச்சாரியார் ஒருமுறை அரசாங்கத்திற்கு எழுதியிருந்தார் என்று எங்கோ வாசித்த நினைவு).
தூண்கள் தோறும் மன்னர்களும், அரசிகளும், ஆச்சார்ய புருஷர்களுமாக நின்றிருந்தனர். ஒவ்வொருவருக்கு அருகிலும் நின்று சற்று நேரம் நன்றி தெரிவித்தேன். ஓரிருவரது பெயர்கள் தெரியும். மற்றையோரையும் தெரிந்துகொண்டு மீண்டும் ஒருமுறை நன்றி செலுத்த வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.
திடீரென்று உறைத்தது : துலுக்க நாச்சியார் என்னும் பீபி நாச்சியார் எங்கே? தரிசிக்காமல் வந்துவிட்டோமே என்னும் கழிவிரக்கம். ‘ஆமாம், பெருமாளையும் ஆச்சார்யாளையும் சேவிச்சாச்சோனோ, துலுக்க நாச்சியார் இன்னொரு தடவை பார்த்துக்கலாம்’ என்ற அறிவுரையைப் புறந்தள்ளி விசாரித்தேன். சிலர் குழப்பினர். நுழைவாயிலில் அமர்ந்திருந்த அனுபவஸ்தரான தமிழகக் காவல் துறை அதிகாரி விபரமாக வழி காட்டினார். மீண்டும் வந்த வழியே சென்றேன். அரங்கனின் விமானத்திற்கு அருகில் அமைந்துள்ள அர்ச்சுன மண்டபத்தில் நான் எதிர்பாராத மவுனத்தில் ஏகாந்தமாக அமர்ந்திருந்தாள் பீபி நாச்சியார், சுவரில் சித்திர வடிவில். அறை பூட்டப்பட்டிருந்தாலும் மெல்லிய எண்ணெய் விளக்கொளியில் சித்திர வடிவில் நின்ற பீபி நாச்சியார் பேசினாள். கூச்சல், குழப்பம், அதிகாரத் தோரணைகள், ‘நகருங்கோ நகருங்கோ’ நாமஸ்மரணைகள் எதுவும் இல்லாமல் சுமார் 10 மணித்துளிகள் பீபி நாச்சியாரைத் தியானித்து மனதிற்குள் கைகூப்பினேன். எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவள் அருள் வழங்கினாள் என்பதை உணரக் கூடிய அமைதி அந்த சன்னிதானத்தில் இருந்தது.
வெள்ளை கோபுரம் வழியாக மீண்டும் வெளியே வரும் வழியில் லக்சும்பெர்க் நாட்டில் இருந்து இரு சுற்றுலாப்பயணியர் கோபுரத்தை நோக்கி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ‘இந்தக் கோபுரம் மட்டும் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது என்று பேசிக்கொள்கிறீர்களா?’ என்று கேட்டேன். புன்முறுவலுடன் ஒப்புக்கொண்டனர். வெள்ளாயி என்னும் தேவரடியாரின் வரலாற்றைச் சொன்னேன். முகமது பின் துக்ளக்கின் ஶ்ரீரங்கப் படையெடுப்பின் போது வெள்ளாயி செய்திருந்த பெரும் தியாகத்தையும், அதற்கு அரங்கன் அவருக்குச் செய்திருந்த சன்மானத்தையும் கூறினேன். வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்த அந்த இருவரில் ஒரு பெண்மணியின் கண்களில் நீர். ‘இத்தனைத் தியாகங்களைக் கடந்து இந்த சம்பிரதாயம் தழைத்து வந்துள்ளது’ என்று சொல்லி முடிக்கும் போது என் நா தழுதழுத்தது என்று சொல்லவேண்டியதில்லை. ‘Enjoy your stay in the splendid spiritual grandeur of Srirangam’ என்று சொல்லி விடைபெற்றேன்.
மாலை வேளை காட்டழகியசிங்கர் கோவில், பின்னர் ஶ்ரீமான் வீரராகவன் சம்பத் நடத்திவரும் கோசாலை, மணவாள மாமுநிகள் பிருந்தாவனம் என்று கழிந்தது. பன்னீராயிரவர் தாங்கள் மடிந்து காத்தருளிய ஶ்ரீரங்கம், என்னால் விட்டுக் கிளம்ப முடியாத ஒரே இடம்.
பி.கு.: காலையில் உடையவர் சன்னிதியில் எழுந்த பக்திக் கிளர்ச்சியில் உடையவரைப் பற்றிக் கூரத்தாழ்வான் அருளிச்செய்த ‘யோ நித்யமச்சுதபதாம்’ தனியனை வாய்விட்டுச் சொல்லப்போக, அர்ச்சகர் ‘மனசுக்குள்ள சொல்லிக்கோங்கோ’ என்றது, ‘நான் இராமானுசன்’ எழுதக் காரணமான கலை விவகாரத்தை நினைவுபடுத்தியது. எத்தனை நூல்கள் வந்தாலும்….ஹும்.