ஶ்ரீவைஷ்ணவர்கள் ஜாதக அவலம்

பிரதம மந்திரியே கூப்பிட்ட குரலுக்கு செவிசாய்க்கிறார் என்றால் நீங்கள் வார்டு கௌன்ஸிலரிடம் சென்று ‘அபிவாதயே’ சொல்வீர்களா என்ன ?

இதென்னடா புதுசாக என்று தெரிந்துகொள்ள மேலே வாசியுங்கள்.

ஶ்ரீரங்கம் கோவிலில் நவக்கிரங்கள் சன்னிதியில் உள்ளனவா என்று தேடிப் பாருங்கள். அவை எங்கே இருக்கின்றன என்பதைக் கொஞ்சம் சென்று பார்த்துவரலாம்.

இத்தனை பீடிகை எதற்கு என்கிறீர்களா ?

ஶ்ரீவைஷ்ணவர்கள் கல்யாணம் பண்ணுகிறேன் பேர்வழி என்று ஜாதகத்தைக் கட்டிக்கொண்டு அழுவதைப் பார்த்து, மன வேதனைப் பட்டு இதனை எழுத வேண்டியதாக உள்ளது.

பிள்ளைக்கும் பெண்ணுக்கும் வயது + நட்சத்திரம் + கோத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து, சரியாக இருப்பின், பெருமாள் சன்னிதியில் வைத்துவிட்டு மேலேறிச் செல்வதே சரியான முறை. சுமார் 30 ஆண்டுகள் முன்பு வரை கூட இப்படியான திருமணங்கள் நடந்துள்ளன.

காரணம் கேட்கலாம். ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு நாராயணனே பர தெய்வம். பஞ்ச சம்ஸ்காரம் / பரண்யாஸம் ஆகிவிட்டால் மற்ற தேவதைகள், நவக்கிரஹங்கள் வெறும் சக்திகளே. வேறு யாரையும் / எதையும் ப்ரீதி பண்ண வேண்டிய தேவை இல்லை.

ஶ்ரீவைஷ்ணவர்கள் அவசியம் வழிபட்டே ஆகவேண்டிய, பயந்து சேவிக்க வேண்டிய ஒன்றாக நவக்கிரஹங்கள் இருப்பின், அவை ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் சன்னிதியாக அன்றோ இருந்திருக்க வேண்டும் ? மதுரை கூடல் அழகர் கோவிலில் மட்டும் உள்ளதைப் பார்த்துள்ளேன். அதைப் பிற்காலச் சேர்க்கை என்பதாகக் கொள்கிறேன்.

ஏற்கெனவே முதிர்கன்னிகளாக ஶ்ரீவைஷ்ணவப் பெண்கள் உள்ள நிலையில், பல பசங்களுக்குக் கல்யாணமே நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும் அவற்றில் குழப்பங்கள், கூப்பாடுகள் என்று பலதும். இதற்கும் மேல் ஜாதகம் பார்க்கிறேன் என்று இனி ஒரு பொருத்தம் விடாமல் பார்த்துப் பார்த்து, கூட்டிக் கழித்து முடிப்பதற்குள் பல அசௌகர்யமான விஷயங்கள் நடந்துவிடுகின்றன. இதைப் பற்றி மேலே சொல்வதற்கில்லை.

அதிலும் பெண்ணின் தாயார்கள் போடுகிற சட்டங்கள், பெண்கள் போடுகிற கண்டிஷன்கள் – மாமியார் இருக்கக் கூடாது, நாத்தனார் என்று யாருமே கூடாது, பையன் வேஷ்டி உடுத்திக் கொள்ளக் கூடாது, கல்யாணம் ஆனவுடன் மாமியாரும் மாமனாரும் சன்னியாஸம் போக வேண்டும், சந்தியாவந்தனப் பேர்வழிகள் நோ நோ, கிரீன் கார்டு, பஞ்சள் கார்டு – இத்தனையும் தாண்டி, ஜாதகத்தில் காஃபி பொருத்தம், சிக்கரிப் பொருத்தம் என்று தூக்கிக்கொண்டு திரிந்து கல்யாணம் முடிவதற்குள் போதும் என்றாகிறது.

அடியேன் சொல்வது பலருக்கு உவக்காமல் போகலாம்.

‘சொன்னால் விரோதமிது ஆயினும் சொல்லுகேன் கேண்மினோ’. அவ்வளவுதான்.

முதல் வரியை வாசியுங்கள்.

-ஆமருவி

%d bloggers like this: