கொரோனா பரிகாரங்கள்

வேண்டுகோள் என்றும் சொல்லலாம். கொரோனா காலம் என்பதால் தேவையான ஒன்று என்று எண்ணுகிறேன். முடிந்தால் செய்யுங்கள்.
நம் வீடுகளுக்கு வழக்கமாக வருகிற உபாத்யாயர்கள், சாஸ்திரிகள், திவசத்திற்கு வரும் பிராம்மணார்த்த ஸ்வாமிகள், பரிசாரகர்கள், கோவில் அர்ச்சகர்கள், குருக்கள், சிவாச்சாரியார்கள், பண்டாரங்கள்  – இவர்களைத் தொலைபேசியில் அழைத்து, அவர்களுக்கு ஏதாவது அவசரப் பணத்தேவை உள்ளதா என்று கேட்டுப்பார்க்கலாம். முக்காலேமூணிவீசம் பேருக்கு ஆயுள் காப்பீடு என்கிற வஸ்து இருக்காது. பலருக்கும் அப்படியென்றால் என்னவென்று தெரிந்திருக்காதும் கூட. முடிந்தால் ஆன்லைனில் எடுத்துக் கொடுக்கலாம். அல்லது ஒரு மாதத் தவணையை அவர்களுக்காகச் செலுத்தலாம் (அல்லது அவர்களுக்குப் பணப் பரிவர்த்தனை மூலம் அனுப்பலாம்). பலரும் பிராம்மணார்த்தம் இருக்க ஒப்புக்கொள்வதே சிறு சம்பாவனைக்காகவும் ஒரு வேளை உணவுக்காகவும் தான். இப்போது 21 நாட்கள் வெளியில் வரவும் முடியாது என்பதால் இந்த உதவி ‘காலத்தினால் செய்த உதவி’ போல் உலகத்தை விடப் பெரியதாகும்.
கோவில் உற்சவங்கள் நிறைந்த பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் தான் வேத பாராயண பண்டிதர்கள், பிரபந்த அத்யாபகர்கள் / திருமுறை ஓதுவா மூர்த்திகள் முதலியோருக்கு வருமானம். இந்த ஆண்டு அதுவும் இல்லை போல் தெரிகிறது. எனவே வரும் காலங்களில் இவர்களிடம் சம்பாவனை குறித்து பேரம் பேசாமல் இருப்பது கொரோனாவிற்கான ஆகச்சிறந்த பரிகாரமாக அமைய வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 14 வரை ஏதாவது திதி, விசேஷம் வருமானால் அவர்களுக்குப் பணத்தை அனுப்பி, ‘அடுத்த திதில வந்து பண்ணிவையுங்கோ. இப்ப சம்பாவனையா நினைச்சு வெச்சுக்கோங்கோ’ என்று அனுப்பினால் அவர்களது மனது குளிரும். தர்ம தேவதை மோனலிஸா அளவிற்காவது புன்னகை பூப்பாள்.
இதைப்போல நம் வீடுகளுக்கு அருகில் உள்ள பூக்காரர்கள், இஸ்திரி வண்டிக்காரர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், நம் வீட்டுப் பணிப்பெண்கள் முதலியோரின் ஒருமாத மின்சாரக் கட்டணம் / அவர்களது ஒரு நாள் வருமானம் என்று எதையாவது கொடுக்கலாம் – ஜன் தன் கணக்கு மூலமாக ஆன்லைனில்.
மாதச் சம்பளக்காரர்களுக்கு இவை ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால், மேற்சொன்னவர்களுக்கு இவை மிகப் பெரிய உதவி.
அரசு செய்யப்போகிறது தான். நமது பங்கையும் ஆற்றலாம். களேபரங்கள் முடிந்தபின் ‘நாமும் மனிதனாக இருந்திருக்கிறோம்’ என்கிற எண்ணம் வர வாய்ப்புள்ளது. கொரோனாவிற்கான பரிகாரம் இவை என்று கொள்வதும் நல்லதே.
#21dayslockdown
%d bloggers like this: