ஆதார் ஆலாபனை

சிங்கப்புரில் இருந்து கிளம்பும் முன் UIDAI வலைத்தளத்தில் சென்னையில் என் வீட்டிற்கு அருகில் இருக்கு ஆதார் மையம் என்ன என்று தெரிந்துகொண்டு, அதன் பொருப்பாளரைத் தொடர்புகொண்டேன். 4-5 நாட்கள் மட்டுமே இந்தியாவில் தங்குவதால் ஆதார் பெறுவது எப்படி என்று கேட்டேன்.

‘நீங்கள் வரிசையில் வாருங்கள். ஆகஸ்ட் 10ற்குப் பின் உங்களுக்கு ஆதார் பதிவுக்கான டோக்கன் கிடைக்கும்’ என்பது போல் ஏதோ சொன்னார். ‘ஆனாலும் உங்களின் ரிடர்ன் டிக்கெட்டையும் எடுத்து வாருங்கள். அதை வைத்து உங்களுக்கு ஆதார் பதிவு செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்’ என்பது போல் ஏதோ சொன்னார். அவர் பேசும் போது ஏகத்துக்கு இரைச்சலும், பேச்சுக்குரல்களுமாக இருந்ததால்  நான் அவர் ‘ஏதோ சொன்னார்’ என்று சொல்கிறேன்.

மறுநாள் சென்னை வந்தவுடன் அவரைத் தொடர்பு கொண்டேன். திங்கள் காலை பாஸ்போர்ட், ரிடர்ன் டிக்கெட் சகிதம் வரிசையில் நிற்கவும் என்றார்.  காலை 9:00 மணிக்குத் தாலுகா அலுவலகத்தில், வெயில் ஏறிக்கொண்டிருக்கும் சுபயோக சுப தருணத்தில் அங்கு சென்றோம் (குடும்பத்துடன், இஷ்ட மித்ரர்கள் இல்லாமல்). எனக்கு முன்னார் 25 பேர் முன்னரே நின்றிருந்தார்கள்.

10:30க்குக் கதவு திறந்தது. உள்ளிருந்து ஒரு அலுவலர் ‘ஆகஸ்டு 10 வரைக்கும் யாருக்கும் டோக்கன் கிடையாது. அதுக்கப்புறம் டோக்கன் இல்லாமல் ஆதார் வாங்கிக்கொள்ளலாம்’ என்று அறிவித்துவிட்டுச் சென்றார். ‘இப்ப டோக்கன் இல்லேன்னா?’ என்ற என் கேள்வி காற்றில் கரைந்து போனது.

பதட்டத்தில் மீண்டும் அம்மையாருக்குப் போன் செய்தேன். அப்போதுதான் அலுவலகம் வந்திருந்த அவர்,’ நீங்க டிக்கெட்டை எடுத்துக்கிட்டு உள்ள என்கொயரிக்கு வாங்க’ என்றார். நான் உள்ளே போக எத்தனிக்க, முன்னர் இருந்தவர்கள் ஆட்சேபிக்க, சிலர் கத்த, நான் அவர்களுக்கு விளக்கம் சொல்வதை யாரும் காதில் போட்டுக்கொள்வதாகத் தெரியவில்லை. நிலமையை உணர்ந்த அந்த அம்மையார் வெளியே வந்து உண்மையை விளக்கி, எனது ரிடர்ன் டிக்கெட்டைச் சரி பார்த்து, ‘சரி, வரிசைல நில்லுங்க’ என்று சாந்தமாகச் சொல்லிச் சென்றார்.

அந்த நேரத்தில், என் முகத்தைப் பார்த்த ஒரு ஆட்சேபவாதி மோதியைத் திட்டத் துவங்கினார். ‘அந்தாள் ஊர் சுத்தறான். வெளிநாட்டுக் காரனுக்கெல்லாம் ஸ்பெஷலா ஆதார் குடுக்கணுமா?’ என்று தொடர்பில்லாமல் பேசினார். பிறகு பேசிக்கொள்ளலாம் என்று மவுனம் காத்தேன்.

அதற்குள் பலர் முண்டியடித்து உள்ளே போக முயல, உள்ளிருக்கும் அந்த இரண்டு அலுவலர்களும் ஒவ்வொருவருக்கும் சமாதானம் சொல்லி, அதே சமயம் பொறுமையுடன ஆதார் பதிவும் செய்துவந்தனர். அவர்களின் பொறுமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சிங்கப்பூராக இருந்தால் போலீசை அழைத்திருப்பார்கள்.

வெளியில் காத்திருந்த சில பெரியவர்கள், ஒரு கரை வேட்டி உட்பட, மோதியைத் தரக் குறைவாகப் பேசத்துவங்கினர். ‘இன்னாத்துக்கு பணத்தப் புடுங்கினான்? எங்கிட்ட பணம் கொட்டியா கெடக்கு? அம்பானி கொழிக்கறான். இவன் ஊர் சுத்தறான். இந்திரா காந்திக்கு 20 குண்டு, மவனே உனக்கு இருக்கு பார் 50’ என்கிற ரீதியில் அளவில்லாமல் போனது பேச்சு.

நான் பொறூமை இழந்தேன்.

‘உங்க பிரச்னை ஆதார்லயா?’ என்றேன். ‘ஆமாம்’ என்றார்.

‘ஆதார் யார் கொண்டு வந்தா தெரியுமா?’

‘ஆரு? மோடி தானே?’

‘இல்லை. உங்க மன்மோஹன் சிங். அவுரு கொண்டு வந்ததை இவரு செயல் படுத்தறாரு’  என்றேன்.

‘ஆமாம். உண்மை தான். ஆனா இத மோடி அப்ப எதிர்த்தாரே?’

‘அது தப்புதான். ஆனா தன்னோட தப்ப உணர்ந்துட்டு இப்ப செயல்படுத்தறார். மக்களோட வரிப்பணம் வீணாகக் கூடாதேன்னு ஆதார் கட்டாயம் ஆக்கினார்,’ என்றேன்.

விவாதம் சூடு பிடிக்க, இன்னும் இருவர் சேர்ந்து கொண்டனர்.  பேச்சு, ஸ்பெக்ட்ரம், நிலக்கரி என்று தாவி, சர்க்காரியாவில் நின்றது. அதற்கு மேல் பேச எனக்குத் தெம்பிருக்கவில்லை.

விவாதத்தில் பங்கெடுத்த இன்னொருவர் மெதுவாக என்னிடம் வந்து, ‘வீடு கட்ட பாங்க்ல கம்மி ரேட்ல கடன் தராங்களாமே, அது பத்தி எதுனா தெரியுமா சார்?’ என்றார். டீமானிடைசேஷனால் விளைந்த அந்த நன்மையை அவருக்குப் புரியும்படி விளக்கினேன். சில வருமான வரம்பிற்குள் இருப்பவர்களுக்கு அரசே வீடு கட்டித் தருகிறது என்பதையும் சொன்னேன்.

எனக்கு முன்னர் நின்றிருந்த நெற்றியில் பொட்டில்லாத இளைஞி கொஞ்சம் ஓவராகவே திட்டினார். ‘எனக்கு யார்கிட்டயும் பயம் இல்லை. ஊர் சுத்தறவன் சொல்றான் ஆதார் வாங்கணுமாம்’ என்று ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

‘எதுக்கெடுத்தாலும் மோதிய திட்டாம, இந்த ஆதார் வினியோகம் பண்றதுக்கு குத்தகை எடுத்திருக்காங்கல்ல ‘அரசு கேபிள் டிவி’ நிறுவனம், அவுங்களக் கேளுங்க ஏன் ரெண்டே ரெண்டு கம்ப்யூட்டர் தான் இருக்குன்னு. கேக்க முடியுமா உங்களால? ஏன்னா யாரைக் கேக்கறதுன்னு தெரியாது,’ என்று நான் பொதுவாக உபன்யாசம் செய்துகொண்டிருந்த வேளையில் என்னை உள்ளே அழைத்தார்கள்.

மணி 1:00. வெப்பம் உச்சத்தில். ஒரே ஒரு மின்விசிறி வெளியில் இருந்த வெப்பத்தை உள்ளே செலுத்திக் கொண்டிருந்தது. அந்த அறையில் என்னால் 10 மணித்துளிகள் கூட நிற்க முடியவில்லை. இயந்திரங்கள் போல் அந்த இரு அலுவலர்களும் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். ஊடே எத்தனையோ கேள்விகள், முரட்டு மனிதர்களின் கர்ஜனைகள்,  ‘நான் யார் தெரியுமா?’ உன் பேரென்ன? ‘டிபார்ட்மெண்ட்ல சொல்லவா?’  போன்ற மிரட்டல்கள். எதற்கும் அசராமல், அக்னி தஹிக்கும் 150 சதுரஅடி பாய்லர் அறையில் ‘தத்தங் கருமமே கண்ணாயினார்’ என்று பணியாற்றும் இந்த சொற்ப சம்பள ஊழியர்களே நமது உண்மையான ஹீரோக்கள்.

பாரத தேசத்தை ‘யோக பூமி’ என்று சொல்வதுண்டு. இன்று அது ‘கர்ம பூமி’ என்பதையும் உணர்ந்தேன்.

பி.கு.:

  1. ஆதார் விஷயம் சுபம்.
  2. அறையினுள் ஒரு போலீஸ்காரரும் அமர்ந்திருந்தார். எதற்கென்று தெரியவில்லை. அவரைப் பார்த்த ஒரு குழந்தை சல்யூட் செய்தது.