அச்சே தின்

தற்காலத்தில் பையனுக்கு 7 வயதிலேயே உபநயன ஸம்ஸ்காரம் செய்ய பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக இவர்கள் என்.ஆர்.ஐ.களாக இருக்கின்றனர். தாங்கள் பின்பற்றாத, பின்பற்றாமல் விட்ட தர்மங்களை மீட்டெடுக்கும் உளவியலாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

நண்பர்கள் குழுவிலும் பிரபந்தம், பக்தி இலக்கியம் என்று பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். சிலம்பு, கம்பன் என்று பலதையும் படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களில் பலருக்கும் தமிழில் உயர் கல்வி இல்லையாகையால் ஊரில் உள்ள யாராவது தமிழாசிரியரைக் கொண்டு பயில்கின்றனர். சிலர் பி.ஏ. வைஷ்ணவம், முதலான படிப்புகளில் இறங்குகின்றனர். பெரும்பாலும் வங்கி, ஐ.டி. துறையில் நல்ல பதவிகளில் உள்ளனர் அல்லது அந்தப் பயணத்தில் உள்ளனர்.

இன்னும் சிலர் ( பெரும்பாலும் அத்வைதிகள், பாலக்காடு பகுதியினர்) ஸம்ஸ்க்ருதம் பயில ஆர்வம் காட்டுகின்றனர். ஆன்லைனில் ஸம்ஸ்க்ருதம் பயில்வதில் ஊக்கத்துடன் ஈடுபடுகின்றனர்.

இவர்களில் பெரும்பாலோர் 35 – 45 வயதினராகவும் இருக்கின்றனர்.

ஒருவேளை பொருளாதாரக் கவலைகள் குறைந்ததால் இருக்கலாம் என்றும் எண்ணுகிறேன். சோற்றுக்காக நாஸ்திக / இடதுசாரி வேஷம் போட வேண்டிய அவசியம் இல்லாததால் இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. இதற்கு நரசிம்ம ராவ் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் தோன்றுகிறது.

அதே சமயம் இடதுசாரி / நாஸ்திக வேஷம் போட்டு சமூகத்தில் ஒரு அந்தஸ்தைப் பெற்றவர்கள் தங்களது பிரதிபிம்பத்தில் கட்டுண்டு, கைதாகி, இன்னமும் அதே நாஸ்திக / மார்க்ஸிய / இடதுசாரி வேஷத்தைக் கலைக்கவும் முடியாமல், தங்களின் உண்மையான ஸ்வரூபத்தைக் காட்ட முடியாமல், பிம்பத்தின் கைதியாய் நிற்கிறோமே என்கிற அவஸ்தையில் இருப்பதையும் பார்க்க முடிகிறது. இது அவர்களைப் பற்றிய பச்சாதாபத்தையே உண்டாக்குகிறது.

நல்லது நடந்து கொண்டிருக்கிறது. மனதிற்கு நிறைவாகவும் இருக்கிறது.

ஒருவேளை இது தான் ‘அச்சே தின்’ என்பதோ?

#achchedin