வைணவம் குறித்த முந்தைய பதிவில் ஆதிசங்கரர் போதித்த அத்வைதம் மக்களைக் குழப்பியது என்று தெரிவித்திருந்தேன். இந்த இக்கருத்து எனது ஒரு அனுமானம் மற்றும் சில ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு முதலியனவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
இந்தக் கருத்தினை சிலர் நான் ஆதி சங்கரரை அவதூறாகக் கூறியிருப்பதாகக் கருதியுள்ளனர். அவர்களின் இந்த அனுமானம் தவறு. எனது விளக்கம் பின்வருமாறு :
ஆதி சங்கரரின் காலம் ஆழ்வார்களின் காலத்தின் இறுதிக்கட்டம். அதாவது கி.பி.7 – கி.பி. 9 என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கி.பி. 1– கி.பி. 6 காலகட்டத்தில் ஜைனமும் பௌத்தமும் தமிழகத்தில் வேரூன்றி அதன் பின்னர் சமுதாயக் காரணங்களுக்காகவும் சித்தாந்தக் காரணங்களுக்காகவும் அழியத் துவங்கிய நேரம். அவற்றின் அழிவை வேகப்படுத்திய பெருமை ஆதி சங்கரருடையதே. அவரது அத்வைத சித்தாந்தம் கருத்தியல் ரீதியாக ஜைனத்தையும் பௌத்தத்தையும் களைய வழிவகை செய்தது. சங்கரரின் வாதத்தின் முன் பௌத்தர்களின் ‘சூன்ய’ சித்தாந்தம் எடுபடவில்லை. அத்துடன் சேர்ந்து அக்கால சமுதாயக் காரணங்களும் இந்த அழிவிற்கு வழி கோலின.
ஆனால் பௌத்தமும் ஜைனமும் கோலோச்சிய காலத்தில் பாரத தேசம் முழுவதும் அதன் வீச்சு தென்பட்டது. தமிழகத்தில் மட்டும் அந்த அளவு இல்லை. இருப்பினும் அவர்களது ஆளுமை வணிகர்களிடம் இருந்ததை நாம் பார்த்தோம். களப்பிரர் காலம் முடியும் வரை அவர்களது ஆளுமை தென்பட்டது.
ஆனால் தமிழகம் தவிர்த்த வட மாநிலங்களில் சனாதன தர்மம் ( அப்போது இந்து மதத்திற்கு அது தான் பெயர் ) மிகப்பெரும் அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தியதில் ஆகச் சிறந்த பணி ஆதி சங்கரருடையது என்பதில் ஐயமில்லை.
ஆதி சங்கரர் பாரதம் முழுவதும் நடந்து சென்று பல ஜைன பௌத்த குருமார்களை வாதத்தில் வென்று அத்வைத மதத்தை நிலைநாட்டினார். இந்த முயற்சியில் பல சீடர்களையும் பெற்றார். பாரதம் முழுவதும் பயணித்து ஐந்து சக்தி பீடங்களை நிர்மாணித்தார். அவற்றின் மூலம் அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டினார். இதன் மூலம் ஜைன பௌத்த மதங்களை சித்தாந்த ரீதியாக வென்றார்.
மாபெரும் அழிவில் இருந்து இந்து மதத்தைக் காத்தார் சங்கரர். அறுவகையான சமயங்களை செழுமைப்படுத்தினார். முன்னமே பல வகைகளில் இருந்த காளி, விஷ்ணு, கணபதி, சூரியன், சிவன் முதலிய தெய்வங்களின் வழிபாட்டை ஆற்றுப்படுத்தினார். எனவே அவர் “ஷண்மத ஸ்தாபனாச்சார்யா” ( ஆறு மதங்களை ஸ்தாபனம் செய்தவர் ) என்று போற்றப்பட்டார். பல நூல்களுக்கு உரைகள் எழுதினார்.
சனாதன தர்மம் இன்றளவும் வாழ்வதற்கு ஆதி சங்காரின் பணி மிகவும் இன்றியமையாதது. இந்தியத் தத்துவம் என்றாலே அத்வைதம் தான் என்று கூறும் அளவிற்கு அவரது தாக்கம் இருந்தது. சுவாமி விவேகானந்தரும் வேதாந்தம் என்பதை அத்வைத வேதாந்தம் என்று கூறும் அளவிற்கு ஆதி சங்கரரின் வீச்சு இருந்தது.
ஆயினும் அத்வைத சித்தாந்தம் அறிவாளிகளின், புலவர்களின் வாதத்தில் மட்டுமே திகழ்ந்தது என்பதே உண்மை.
சித்தாந்த ரீதியாக சில குழப்பங்கள் இருந்தன என்பதும் உண்மை. பிரும்மம் ஒன்றே என்று கூறினார். உலகமும் மற்ற உயிர்களும் இந்த ஒரு பிரும்மத்தின் பிம்பம் என்றார். ஆனால் உயிர்களிடத்தில் வேறுபாடு இருந்தது நிதர்சனம். ஆண்டான் அடிமை முறை நடைமுறையில் இருந்தது. ஆங்கிலத்தில் சொல்வதானால் ‘Lack of Inclusiveness’ என்று கூறலாம்.
ஆதிசங்கரரின் வாழ்விலேயே இதனைக் காணலாம். ஒருமுறை அவர் நீராடி வரும்போது ஒரு புலையர் குலத்தவன் எதிரில் வந்துள்ளான். அவனை ‘ஒத்து, ஒத்து’ என்று கூறியுள்ளார் சங்கரர். அப்போது அந்தப் புலையன் ‘உங்கள் சித்தாந்தப்படி நானும் நீங்களும் ஒரே பிரும்மத்தின் வேறு வடிவங்கள் என்றால், நான் எதனிடமிருந்து விலகுவது? ‘அன்ன மய கோசமான’ எனது உடம்பிலிருந்து விலகிச் செல்லச் சொல்கிறீர்களா ? அல்லது ‘பிராணமய கோசமான’ ஆத்மாவிலிருந்து விலகச் சொல்கிறீர்களா?” என்று கேட்டுள்ளான் என்று சங்கரரின் வரலாறு கூறுகிறது.
ஆதிசங்கரர் தத்துவம் ஞான மார்க்கம் என்று வகைப்படுத்தப்படுகிறது. அவர் அறிவுக்கு முதலிடம் கொடுத்தார். லௌகீக விஷயங்களுக்கு இரண்டாம் இடமே கொடுத்தார். இது பற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவரது ‘இந்தியத் தத்துவம்’ என்னும் நூலில் ஆதி சங்கரரது கொள்கை “ஆன்மாவற்ற தர்க்கம்” ( Soulless Logic ) என்று குறிப்பிடுகிறார்.
அத்வைதத்தைக் கேலி செய்யும் விதமாக ஒரு புனைவு சொல்வதுண்டு. ஒரு அத்வைதி தெருவில் நடந்து சென்றாராம். அப்போது ஒரு காளை மாடு நிதானமிழந்து தெருவில் ஓடி வந்ததாம். அத்வைதியின் நண்பர் ,”ஓய் அத்வைதியே, உமது சித்தாந்தந்தின் படி நீங்களும் மாயை, அந்தக் காளை மாடும் மாயை. எனவே ஒரு மாயை இன்னொரு மாயையை முட்டுவதால் ஒன்றும் ஆகாது. பயப்படாமல் செல்லும்” என்று கூறினாராம். இது வேடிக்கைப் புனைவுதான் என்றாலும் அத்வைத சித்தாந்தம் சிறிது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று காட்டவே இது புனையப்பட்டிருக்க வேண்டும்.
சங்கரரின் ஆயுட்காலம் மிகச் சிறியது. அதனுள் அவர் ஆற்றிய பணி மிகப் பெரியது. சனாதன தர்மத்தின் ஆணி வேரையே அசைத்த ஜைனத்தையும் பௌத்ததையும் சித்தாந்த ரீதியாக வலுவிழக்கச் செய்த பாரதப் பெருமகன் ஆதி சங்கரர். இவர் ஆற்றிய பெரும் பணியினைத் தொடர்ந்தார் இராமானுசர் என்று கூறலாம்.
ஆதிசங்கரரின் பணி உடனடித் தீமையை அகற்றி சனாதன தர்மத்தைக் காத்தது. இராமானுசர் பணி அவர் வாழ்ந்த காலத்தின் நடைமுறைகளை அனுசரித்து அதனை மேலே கொண்டு சென்று அனைவருக்கும் பொதுவான ஒரு ஆன்மிக சக்தியாக உருவாக்கியது என்று கொள்ளலாம்.