சென்னை புத்தகக் கண்காட்சி – என் அனுபவம்

அடுத்த புத்தகக் கண்காட்சிக்குள் ‘மோடி அரசின் கார்ப்பரேட் சனாதனத் திணிப்புகள் – கழுகுப் பார்வை’ என்னும் தலைப்பில் நூல் எழுதினால் அடையாறில் வீடு வாங்கலாம். அத்தனை பதிப்பகங்கள் வெளியிடும் என்று நேரில் தெரிந்து கொண்டேன்.#chennaibookfair

சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘தண்ணீர்’ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். தொகுப்பில் எனது கட்டுரை ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

வேறு இரண்டு நூல்களும் வெளியீடு கண்டன.

அமைப்பாளர்கள் ஒரே ‘தோழர்’ மயம். புலிப் பணத்தில் இயங்கும் தேசவிரோதக் கட்சியொன்றின் ஏதோ அணியின் பொறுப்பாளரும் வந்திருந்தார் என்பது அவர்கள் பேசிக்கொண்டதில் தெரிந்தது.

பெண் தோழர் ஆண் தோழரைத் தோழர் என விளிக்க, ஆண் தோழர் பெண் தோழரைத் தோழர் என விளிக்க, எங்கெங்கு காணினும் தோழரடா என்னும் அந்தச் சம தர்ம சமுதாயக் கனவு கண்ணெதிரில் நனவானதை உணர்ந்தேன்.

சூழல் ஒவ்வாமை. அரங்கில் இருந்து வெளியேறி, கண்காட்சி அரங்கில் நுழைந்தேன்.

அடடா.. என்னே காட்சி ! தோழர் தவிர, புலித் தம்பி, நீலத் தம்பி, கறுப்புத் தம்பிகள், சிவப்புத் தம்பி தங்கைகள், கண் பட்ட இடமெல்லாம் சு.வெ.யின் ‘வேள்பாரி’ நூல் என பொதுவுடமைப் பின்புலத்தில் தமிழ்த் தேசிய நிறம் மிளிர்ந்த பதாகையில் அம்பேத்கரியத்தில் ஊறி உப்பிய ராமசாமி நாயக்கரீயப் பாவனைகள் பரந்து தெரிந்தன.

இரண்டில் மூன்று கடைகள் இவ்வகையிலானவை.

உ.வே.சா. நூல் நிலையப் பதிப்பகக் கடை ஒரு ஓரத்தில் யாருமற்ற தனிமையில் நின்றிருந்தது. ‘என் ஆசிரியப்பிரான்’ வாங்கினேன்.

விஜயபாரதம் தற்போது ‘பிரசுரம்’ என்கிற பெயரில் துயில்கொண்டிருந்தது. ஆங்காங்கே வெற்றிடம். ஆயினும் பல நூல்கள் இல்லை. மா.வெ.எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் பற்றிப் பசும்பொன் தேவர்’ எனும் நூல் வாங்கினேன்.

சுவாசம் பதிப்பகத்தில் ஹரன் பிரசன்னா வழக்கம் போல் படு பிசியாக யாருக்கோ நேர்காணல் கொடுத்துக் கொண்டிருந்தார். ஓரிரு மணித்துளிகள் பேசிவிட்டு, சுதாகர் கஸ்தூரி, ஜெயமோகன், எழுதிய சில நூல்களை வாங்கினேன். பிரசன்னா மிகச்சிறப்பாகச் செயல்படுகிறார் என்று என் எழுத்தாள நண்பர்கள் கூறியிருந்தனர். அதை அவரிடம் தெரிவித்தேன்.

பாலம் கல்யாணசுந்தரம் அவர்கள் தேமே என்று கால் நீட்டி அமர்ந்திருந்தார். அவரை விழுந்து வணங்கி, அவர் கையால் அவரைப் பற்றி எஸ்.ஜி.சூர்யா எழுதிய நூலை வாங்கினேன்.

சின்மயா மிஷன் அலுவலர் ‘உப-நிஷத்’ புஸ்தகம் எல்லாம் இருக்கு. பாருங்கோ என்றார். கடையில் அவரும், சின்மயானந்தரும் மட்டும் இருந்தனர். ‘ஹிந்து’ ஸ்டாலில் நாலைந்து பேர் திருப்பதி காஃபி டேபிள் புஸ்தகம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கண்காட்சிக்கு மாணவர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். அவர்களுடன் பெற்றோரும். அரங்க ஏற்பாடுகள், வசதிகள் நன்றாக இருந்தன.

நான்கு முறை அனைத்து அரங்குகளையும் சுற்றி வந்தேன். பெயர் குறிப்பிட விரும்பாத அரங்கு ஒன்றில் தொகுப்பாசிரியர் ஒருவர் ‘இவர் தான் ஆமருவி. நான் சொன்னேனே, அந்த கட்டுரை எழுதினது இவர் தான்’ என்று என்னை ஒரு பதிப்பாளரிடம் அறிமுகம் செய்தார். வேஷ்டி, ஜிப்பாவில் பக்கவாட்டில் மட்டுமே தெரிந்த என்னை நேரில் காண எழுந்து வந்த அவர், கைகொடுத்துப் பின் நெற்றியைப் பார்த்ததும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

அடுத்த புத்தகக் கண்காட்சிக்குள் ‘மோடி அரசின் கார்ப்பரேட் சனாதனத் திணிப்புகள் – கழுகுப் பார்வை’ என்னும் தலைப்பில் நூல் எழுதினால் அடையாறில் வீடு வாங்கலாம். அத்தனை பதிப்பகங்கள் வெளியிடும் என்று நேரில் தெரிந்து கொண்டேன்.

#சென்னைபுத்தகக்கண்காட்சி#Chennaibookfair

%d bloggers like this: