இந்திய சீன எல்லைப் பிரச்னையில் மூன்றே மூன்று கட்சிகளைத் தவிர அனைத்துக் கட்சிகளும் பாரத அரசுடன் நின்றன. பாரதத்திற்கு எதிரான நிலையை எடுத்த மூன்று கட்சிகள்:
- மார்க்ஸிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- காங்கிரஸ் கட்சி
கம்யூனிஸ்டுக் கட்சிகளின் நிலை அவர்களது அப்பட்டமான இந்திய எதிர்ப்பு, நாகரீகமற்ற, வெட்கம் துறந்த சீன ஆதரவு என்பதாக அமைந்தது.
ஒரு சோறு பதம்.
‘என்னதான் தவறான முறைகளில் சீனா நடந்துகொண்டாலும், சீனாவின் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் அணுகுமுறையும் ஒரு காரணமே.. சீனா தனது எல்லைகள் பற்றி அச்சம் கொண்டுள்ளது. ஏனெனில், மோதி அரசு ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் மாநிலத்தைப் பிரித்து, லடாக்கைத் தனி யூனியன் பிரதேசமாக ஆக்கியதால் சீனா தனது எல்லைகளுக்குப் பாதிப்பு வந்துவுடிமோ என்று சந்தேகம் கொள்கிறது’
கால்வான் எல்லைப் பிரச்சினை குறித்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் ஆண்மையற்ற சொல்லாடலை மேலே கண்டீர்கள்.
மேலும் ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள கம்யூனிஸ்ட கட்சியின் அறிக்கை கூறுவதாவது:
‘கொரானா விஷயமாக அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு இந்தியாவும் சீனாவை நெருக்குகிறது. விஷக்கிருமி சீனாவின் பரிசோதனைச் சாலையில் உருவானது என்று மத்திய அமைச்சர் கூறுகிறார். எனவே சீனா தன்னைக் காத்துக்கொள்ள இவ்வாறு செய்கிறது’
இன்னும் கொஞ்சம் கம்யூனிஸ்ட் இழியுரை வேண்டுமா? மேலே வாசியுங்கள்.
‘நேபாளின் எல்லைப் பிரச்னைக்கும் இந்தியாவே காரணம். நேபால் விஷயத்தில் இந்தியா தன்னைச் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.’
தாங்கமுடியவில்லையா ? மேலும் வாசித்துப் கம்யூனிஸ்ட் கனவுலகில் சஞ்சாரம் செய்யுங்கள்:
‘இந்தியாவின் செய்கைகளால் பங்களாதேஷும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சி.ஏ.ஏ-என்.ஆர்.ஸி. சட்டங்கள் வந்ததால் இந்தியாவுக்குள் இருக்கும் சட்ட விரோத பங்களாதேசியர்கள் மீண்டும் பங்களாதேஷுக்கு வந்துவிடுவார்கள் என்று பங்களாதேஷ் கவலை கொள்கிறது’
ஒரு நாட்டின் பிரஜைகள் அந்த நாட்டிற்குள் வருவதைக் கண்டு அந்த நாடு கவலை கொள்கிறதாம். கம்யூனிஸ்ட் அறிவுலகில் மட்டுமே சாத்தியமாகும் எண்ணவோட்டம்.
‘370வது ஷரத்தை நீக்கியதாலும், பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரையும் அக்சாய் சின்னையும் மீட்போம் என்று அமித் ஷா பாராளுமன்றத்தில் கூறியதாலும் சீனா தனது எல்லைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது’
எல்லை தாண்டிய தேச பக்தி என்பது இது தான் போல.
‘இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் முதலிய நாடுகள் நால்வர் அணி (Quadrilateral Alliance) அமைத்துச் சீனாவுக்கு நெருக்குதல் கொடுப்பதை நிறுத்த வேண்டும். இந்தியா தனது அணி சாரா நிலையில் இருந்து பின்வாங்கக் கூடாது’ என்று அறிவுறுத்துகிறது மார்க்ஸிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை.
ஆனால், இவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. இவர்களது ஜாதகம் அப்படிப்பட்டது.
வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.
1962 இந்திய சீன யுத்தத்தின் போது, இந்திய ராணுவ வீரர்களுக்கு ரத்த தானம் வழங்குவது என்று முடிவாகி, நாடெங்கும் மக்கள் பெரும் நாட்டுப்பற்றுடன் ரத்த தானம் செய்தனர். அப்போதைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ராணுவத்திற்கு ரத்த தானம் செய்வது கம்யூனிஸ்ட் கொள்கைக்கு விரோதமானது என்று அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து அன்றைய பொலிட்பியூரோ உறுப்பினர் வி.எஸ்.அச்சுதானந்தன், ‘தேசத்தில் அடிக்கும் அலைக்கு எதிராகப் போவது கம்யூனிஸ்டுகளுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்தார். இதனால் கட்சி அவரை பொலிட்பியூரோவில் இருந்து வெளியேற்றியது.
அச்சுதானந்தன் சிறையில் இருந்தார். சிறையில் இருந்தவாறே இந்திய ராணுவத்திற்கு ரத்த தானமும் பண உதவியும் செய்ய வேண்டும் என்று பேசினார். சிறைக்குள் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.
1965ல் நடைபெற்ற ஜோதி பாசு உத்தரவிட்ட விசாரணையில் அச்சுதானந்தன் தனிப்பட்ட முறையில் ரத்த தானம் அளிப்பது பற்றிப் பேசியது இந்திய ஆதரவு செயலாகும். ஆகவே அது கட்சி விரோதம் என்று சொல்லி அவரைப் பொலிட்பியூரோவில் இருந்து நீக்கி, ஒரு சாதாரண கிளையின் தலைவர் என்கிற அளவிற்குக் கீழிறக்கியது.
தேசத்தை விட சீன ஆதரவு, கம்யூனிசக் கொள்கை பெரிதாகிப்போனது கம்யூனிஸ்டுகளுக்கு.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், 1962ல் அக்கட்சியின் நிலைப்பாட்டால் கோபமுற்றுக் கட்சியில் இருந்து வெளியேறியவருமான மொஹித் சென் என்பார் ‘ஒரு இந்தியக் கம்யூனிஸ்டின் பயணம்’ என்னும் நூலில் சுந்தரையா என்னும் அன்னாளைய கம்யூனிஸ்ட் தலைவர் 1962 இந்திய-சீன எல்லைப் போருக்குக் காரணம் இந்தியா தான் என்றும் அதற்காகச் சீனா அளித்த வரைபடங்களையும், இதர சீன தரவுகளையும் கொண்டு விளக்க முற்பட்டார் என்கிறார். சீன கம்யூனிஸ்ட் அரசு தவறு செய்ய வாய்ப்பே இல்லை என்றும், பாட்டாளிகளுக்கு எதிரான நேருவின் இந்திய அரசே, தனது அமெரிக்க முதலாளிகளின் ஏவலுக்கிணங்க, சீனாவைத் தாக்கியது என்று சொல்லி வந்ததாக எழுதுகிறார்.
கம்யூனிஸ்டுகளின் பிதாமகரான நம்பூதிரிபாட் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார். ‘சீனா இந்தியாவை ஆக்கிரமித்ததா?’ என்ற கேள்விக்கு, ‘ஆக்கிரமிப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. சீனா தன்னுடைய பகுதிகள் என்று நம்பிய பகுதிகளுக்குள் நுழைந்தது. இதில் ஆக்கிரமிப்பு எங்கே வந்தது?’ என்று பத்திரிக்கையாளர்களிடம் வினா எழுப்புகிறார் என்றும் சென் எழுதுகிறார். இதில் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே குழப்பம் இருந்தது. பிரதமர் நேருவின் குரலுக்கு ஆதரவளித்து இந்திய நிலையை எடுத்த டாங்கே பிரிவு கம்யூனிஸ்ட்கள், சீன ஆதரவு நம்பூதிரிபாட் பிரிவு கம்யூனிஸ்டுகள் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுண்டே இருந்தது என்பதும் தெரிகிறது.
மேலும் எழுதும் சென், சீனா தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவே போரில் ஈடுபட்டது என்றும், நேருவுக்கும் இந்தியாவுக்கும் தக்க பதிலடி கொடுத்து அவமானப்படுத்தியவுடன் இந்தியாவைப் பலஹீனமடையச் செய்துள்ளது என்றும், இது இந்தியாவில் கம்யூனிஸ்ட் புரட்சி விரைவில் ஏற்பட வழி செய்யும் என்றும் கம்யூனிஸ்டுகள் நம்பினார்கள் என்றும் எழுதுகிறார்.
1962ல் நேருவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராகவும் சீனாவிற்கு ஆதரவாகவும் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டது. அக்கட்சியின் நிலையில் இன்றும் மாற்றம் இல்லை. அதே சீன ஆதரவு நிலையே தொடர்கிறது. தற்போது கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக, அவர்களால் முன்னர் எதிர்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி நிற்கிறது, சீனாவிற்கான ஆதரவு நிலையுடன். ஆக, தற்போது சீனாவுடன் சேர்ந்துகொண்டு பாரதத்திற்கு எதிராகக் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸும் நிற்கின்றனர்.
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நிலை, கருணாநிதியின் இலங்கைக் கொள்கையை விட விசித்திரமானது. 1939ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியா பிரிட்டனுக்கு ஆதரவாகப் பங்கெடுப்பதை இக்கட்சி எதிர்த்தது. ஏனெனில் பிரிட்டன் ஹிட்லருக்கு எதிராகப் போரிட்டது. அதனால் என்ன என்று கேட்கலாம். அப்போது ஹிட்லர், சோவியத் தலைவர் ஸ்டாலினுடன் நட்புறவு ஒப்பந்தம் செய்திருந்தார். எனவே ஹிட்லரை எதிர்ப்பது சோவியத் யூனியனை எதிர்ப்பதற்கு ஒப்பானது என்று கம்யூனிஸ்ட் கட்சி சொன்னது.
ஆனால் 1941ல் கட்சி தன் நிலையைத் தலைகீழாக மாற்றிக்கொண்டது. பிரிட்டனுக்கு ஆதரவாக இந்தியா போரில் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஏனெனில், ஹிட்லர், ஸ்டாலினுடனான தன் ஒப்பந்தத்தை மீறி சோவியத் யூனியன் மீது படை எடுத்திருந்தார். எனவே ஹிட்லரை எதிர்க்கும் பிரிட்டனுக்கு ஆதரவளிக்கலாம். அந்தர் பல்டி என்பதற்கு உதாரணம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.
பச்சோந்தி பற்றித் அறியாதவர்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
1962 இந்திய சீனப் போரில், கட்சி உடைந்தது. சோவியத் உத்தரவுகளைச் செயல்படுத்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்றும், சீன உத்தரவுகளைச் செயல்படுத்தும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்று உடைந்தது. ஆக, இரு பிரிவுகளுமே வெளி நாட்டு அடிமைகள். அன்றும். இன்றும்.
இன்று கருத்து சுதந்திரம் பற்றிப் பேசும் கம்யூனிஸ்டுகள் சற்று வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். உடைந்த கட்சிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக்கு ஆதரவாகவும், மார்க்ஸிஸ்ட் கட்சி அதனை எதிர்த்தும் நின்றன. நெருக்கடி நிலை காலத்தில் கருத்து சுதந்திரம் கொடி கட்டிப் பறந்ததை நாடே அறியும். ‘குனியச் சொனனால், தவழ்ந்தார்கள்’ என்று அத்வானி அன்றைய பத்திரிக்கைகளைப் பற்றிப் பேசினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இது பொருந்தும்.
1998ல் வாஜ்பாய் அரசு பொக்ரான் 2 அணு ஆயுதச் சோதனை நிகழ்த்தியது. அதனை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்தன. மார்க்ஸிஸ்ட் கட்சியின் வினோத் ராய் அதனை ஒரு ‘ஹிந்து குண்டு’ என்றார். நாடுகளுக்கிடையேயான சம நிலையைக் குலைக்கும் என்றார். சி.பி.ஐ.(எம்.எல்) பிரிவு இன்னும் ஒரு படி மேலே சென்று ‘சங்கப் பரிவார் டிசம்பர் 6, 1992 அன்று முதல் குண்டை வெடித்தது. இரண்டாவது குண்டை இப்போது வெடித்துள்ளது’ என்றது.
மார்க்ஸிஸ்ட் கட்சி சொன்னது: ‘இந்தியாவின் அணுகுண்டு சோதனை சீனாவின் பாதுகாப்பிற்கு எதிரானது’. ஆனால் இந்தமுறை அக்கட்சி உண்மை பேசியது. ஏனெனில் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில் வாஜ்பேயி சீன அச்சுறுத்தல் காரணமாகவே அணுகுண்டு சோதனை செய்தோம் என்றார். இது தங்கள் தாய் நாட்டுக்கு எதிரான நிலை என்பதால் மார்க்ஸிஸ்ட் கட்சியினர் எதிர்த்தனர்.
ஆனால், 2006ல் வடகொரியா அணுகுண்டு சோதனை செய்தபோது மார்க்ஸிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி அதனை வரவேற்று ‘அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் வீழ்ச்சி. வட கொரியாவிற்கு வேறு வழி இல்லை. ஆகவே வெடித்தது’ என்றது. ரத்தம் – தக்காளி சட்னி நினைவிற்கு வரலாம். 2015ல் ‘அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வலுவான தடையாக நிற்கிறது வட கொரியா’ என்றார் மார்க்ஸிஸ்ட கட்சியின் பினரயி விஜயன்.
இந்திய தேசத்தின் மீதும், நாட்டின் தலைவர்கள், அவர்களது பெருமைகள் மிதும் கிஞ்சித்தும் அக்கறை அற்ற கட்சியாகவே இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நடந்துகொண்டுள்ளன. 2008ல் கேரள சட்ட சபையில் பேசும் போது அப்போதைய மார்க்ஸிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன் முன்னாள் ஜனாதிபதி கலாமும் கஸ்தூரி ரங்கனும் வாண வேடிக்கை ராக்கெட்டுகளையே ஏவி வந்தனர் என்று பேசினார். ( இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை எதிர்த்துப் பேசும் போது).
பாரத தேசத்தின் மீது அவதூறு, அதன் உதாரண புருஷர்கள் மீது அவநம்பிக்கை மற்றும் அவமரியாதை, சீன அடிமைத்தனம், எப்போதுமே அணிந்துள்ள அமெரிக்க எதிர்ப்புக் கண்ணாடிப் பார்வை. இப்படியான கம்யூனிஸ்டு சித்தாந்தம், வேரும் வேரடி மண்ணும் இன்றி பாரதத்தில் இருந்து அழித்தொழிக்கப் பட வேண்டும். கால் காசுக்கு உதவாத அந்தச் சித்தாந்தம் அனைத்து ஊடகவெளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் இருந்தும் களையப்படவேண்டும்.
தேசியச் சிந்தனையுள்ள பாரதீயர்கள் ஒன்று கூடி இதனைச் செய்ய வேண்டும்.
சுட்டிகள்:
https://cpim.org/content/scrap-pro-imperialist-policies-or-quit-sept-2001
https://www.sify.com/news/how-the-communists-betrayed-india-to-china-news-columns-okkq3Ucfbcefb.html
http://www.businessworld.in/article/The-Hate-Story-Of-India-And-Marxists/30-11-2015-88800/
https://www.cia.gov/library/readingroom/docs/esau-15.pdf
https://swarajyamag.com/politics/cpim-editorial-blames-india-for-ongoing-border-dispute-with-china
https://www.telegraphindia.com/india/kalam-rocket-lands-on-cm/cid/560596