ஃபேஸ்புக் மன நோயாளிகளின் கூடாரமாக மாறியுள்ளது. வெறுப்பை உமிழும் பதிவுகள் அதிகரித்துள்ளன. கேள்விகள், பதில்கள், பின்னூட்டங்கள் நாகரிகத்தின் எல்லையைக் கடந்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. என்ன எழுதினாலும் இறுதியில் சாதி / மதம் சார்ந்து வைகிறர்கள்.
ஒரு காலத்தில் மது அருந்துபவர்களுக்கு என்ன மரியாதையோ இன்று ஃபேஸ்புக்கில் எழுதுபவர்களுக்கு.
‘பேராசிரியர்’ என்பவர்கள் கூட அநாகரிகமாக எழுதுகிறார்கள்.
எழுத்தில் வன்முறை என்பது பரவலாக உள்ளது. மனித மனங்களின் கீழ்மையை உணர்த்தும் விதமாகவே அப்பதிவுகள் உள்ளன. வெளிப்பார்வைக்கு நாகரிக மனிதர்கள் போல் தோற்றம்; உள்ளத்தில் வெறுப்பு. இதனால் மன உளைச்சல், ஒவ்வாமை, குருதிக் கொதிப்பு மட்டுமே சம்பளம்.
அன்றாட வாழ்க்கையும் இவற்றால் பாதிப்படைகிறது.
ஒருவருக்கு அளிக்கும் பதிலால் மற்றவர் பாதிப்படைகிறார். கோபத்தில் பதிவிடுகிறார். அதற்கு மற்றொருவர் கோபம் கொப்பளிக்கும் பதில். இது தொடர்கிறது. பலரின் கவனச் சிதறல்களுக்கும் வழி வகுக்கிறது.
இணைப்பில் பல நண்பர்கள், உறவினர்கள், எனது ஆசிரியர்கள், உயரதிகாரிகள் என்று பலரும் உள்ளனர். வெளி ஆள் அளிக்கும் பதிலால் இவர்கள் கலக்கம் அடைகின்றனர்; புதியவரின் மொழி நடையால் பீதி அடைகின்றனர்; சொற்பிரயோகத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பல மாதங்களாக இந்த நிலைமையைக் கண்காணித்து வருகிறேன். ஆண்டாள் விவகாரம், பிரதமர் தொடர்பான வெறுப்புப் பதிவுகள் என்று சிரமப்பட்டு ஜீரணித்துக் கடந்தேன். எதிர்வினை ஆற்றினேன்.
தேசத்தை இழித்து, தலைவர்களைப் பழித்து, புனிதச் சின்னங்களையும் இழிவு படுத்தி வரும் பதிவுகள் என்னைப் பொறுமையின் எல்லைக்குக் கொண்டு சென்றன. இவற்றால் உடல், மனம் கெடுவதை உணர்ந்தேன்.
ஆனால், சங்கராச்சாரியார் மறைவு, கலைஞர் சுகவீனம் தொடர்பாக மிக மிக அருவருக்கத்தக்க வகையில் பலர் எழுதியதைக் காண மனம் பொறுக்கவில்லை. நிதானம் இழக்கும் வகையில் பல பதிவுகள் இருந்தன.
இவை அனைத்தையும் தவிர்க்கவும், எனது மன நிலை, என் தொடர்பில் உள்ள பெரியவர்கள், பண்டிதர்கள், ஆசிரியர்கள் முதலியோரின் மனநிலை, மன அமைதி – இவை வேண்டி ஃபேஸ்புக்கில் எழுதப்போவதில்லை. பின்னூட்டங்களுக்குப் பதில் அளிக்கப் போவதில்லை. எனது வலைப்பதிவில் வரும் கட்டுரைகளை மட்டும் பகிரவுள்ளேன்.
என் பண்பை இழந்து, என் தேசத்தைப் பழித்து, என் புனிதர்களை ஏளனம் செய்ய வழி வகுக்கும் ஃபேஸ்புக்கில் இனி எழுதுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்.
இந்த நேரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் ஃபேஸ்புக்கை இழித்துரைத்தது நினைவிற்கு வருகிறது.
கட்டுரைகள் தொடர்பாகப் பேச, வலைப்பூவிலேயே பதிலுரையுங்கள்.