காரல் மார்க்ஸ் கண்ணனின் அவதாரம் ?

வெண்முரசு
வெண்முரசு

நடந்ததா இல்லையா என்று அறிய முடியாத மஹாபாரதத்தை இப்போது விரித்து, விளக்கி விளம்புவானேன் என்று வருத்தப்படுகிறார் மனுஷ்யபுத்ரன். அவருக்கு ஒத்திசைவு நடனம் ஆடுகிறார் ஞாநி. ஜெயமோகன் தன் படைப்புத் திறனை இப்படி இதிகாசங்களில் வீணடிக்கிறாரே என்று ஞாநி கண்ணீர் வடிக்கிறார்.

நடந்ததா என்று கேட்பதற்கு முன் ஒரு ஒரு நிமிடம் யோசிப்போமா ? ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடி’யாக இருக்கிறோமே, அது எப்படி ? விண்வெளியில் அந்தரத்தில் நின்றோமா என்ன ? பகுத்தறிவின் பரிணாமத் தாவலால் ஏற்பட்ட மாபெரும் நிற்றலா அது ?

தமிழ் மக்களின் ஒட்டுமொத்த மனசாட்சியின் பேரெழுச்சியாக ‘வெண்முரசு’ பரிமளிக்கிறது. ஐம்பது ஆண்டுகள் நாத்திகவாதப் பேரலையின் அர்த்தமற்ற கொக்கரிப்புக்களிலும் திரை ஆட்டங்களின் ஆரவாரப் பேரிரைச்சல்களிலும் சிக்குண்டிருந்த தமிழ் மாந்தர் தமது அடக்கிவைக்கப்பட்ட ஆன்மீக, கலாச்சார எண்ணங்களின் விஸ்வரூபத்தை உணர்த்துவதாக ‘வெண்முரசு’ திகழ்கிறது.

நாளொன்றுக்கு 4000 பேர் படிக்கிறார்கள் என்கிறார் ஜெயமோகன். திரைவெளியில் லயித்து, மாட்டு மக்களாக இருந்த தமிழ் மனிதர்களை நாட்டு மக்களாக ஆக்குகிறார் ஜெமோ. மாநில மக்கள் மாநாடுகளிலும் முப்பெரும் விழாக்களிலும் அமிழ்ந்திருந்த காலத்தில், அழியாத காவியத்தின் அபரிமிதமான காட்சியை அவர்களுக்குக் காண்பித்துத் திசை மாற்றுகிறார் ஜெமோ.

மனித முயற்சியின் மகத்தான பேராற்றலுடன் ஆழ்ந்த அறிவும் தீவிர வாசிப்பும் கலந்தால் கிடைக்கும் மகோன்னதப் படைப்பு வெண்முரசு. அதைப் படைக்கும் ஜெமோ வாழ்த்தப்பட வேண்டியவர்.

மொழிவழிப் பிரிவினை பேசிய முட்டாள் மூடர்களின் காட்டுத்தளையில் இருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்கும் வேலை செய்கிறார் ஜெமோ.

இடதுசாரிப் பேச்சில் இடறி விழுந்த தமிழ் மகன் இப்போது ‘எது சரி’ என்று கேள்வி கேட்கவைக்கிறார் ஜெமோ.

வசைமாரி பொழிவதும், வம்பு பேசுவதும், காறி உமிழ்வதும் இலக்கியம் என்று நம்பவைக்கப்பட்ட சமூகத்தை நேர்ப்படுத்துகிறார் ஜெமோ.

மாநிலவெறி, மொழிவெறி, இனவெறி என்று தலைவர்களால் வெறி ஏற்றப்பட்டு கட்டுக்கடங்காமல் திரிந்த மூளை மழுங்கிய சமுதாயத்தைக் கிள்ளி விட்டு அறிவுச்சுடர் ஏற்றுகிறார் ஜெமோ.

நாற்பது ஆண்டுகளாக இருந்த எதிர்மறை எண்ண ஓட்டம் அழியுமாறும், சோகையிழந்த சோம்பேறி மனிதர் பண்பாட்டுப் புத்துணர்ச்சி பெறுமாறு, தேஜஸ் இழந்த தேவாங்கு மனிதர் துள்ளி கம்பீர நடை போட உணர்ச்சியளிக்கும் ‘வெண்முரசு’ இந்நாளைய கட்டாயத் தேவை.

‘உனக்கு வரலாறு இல்லை’, ‘உனக்கு நாடே இல்லை’, ‘உன் நாடு ஆங்கிலேயரால் ஒன்றுபடுத்தப்பட்ட பல நாடுகளின் கூட்டு’ என்ற கட்டுக் கதைகளை வரலாறு என்று நம்புவது மதச்சார்பின்மையாம். இந்த நாட்டின் பண்பாட்டுக் கூறுகளை முன்னகர்த்தி, கலாச்சாரச் செறிவைப் பறை சாற்றும் ஒரு காவியத்தை, இதிஹாசத்தை மீள் பார்வை செய்து, மீள் கட்டமைப்புச் செய்து விரித்துச் சொல்வது தேவை இல்லாதது என்று சொல்வது முற்போக்காம்.

கேட்பவனுக்குக் காது செவிடென்றால் காரல் மார்க்ஸ் கண்ணனின் அவதாரம் என்பார்கள்.

ஞாநியின் வீழ்ச்சி

எழுத்தாளர் ஞாநியின் தர வீழ்ச்சி வியப்பளிக்கவில்லை.

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுபவர் இந்தியத் தேர்தலில் போட்டியிடுவது நல்லது என்று நான் நினைத்தது உண்மை தான். ஆனால் இந்து மத துவேஷ வேஷம் போட வேண்டியிருப்பதால் அவர் எடுக்கும் நிலைக்கும் சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகள் எடுக்கும் நிலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

தேர்தலில் நிற்கும் வரை அவர் என்னவேண்டுமானால் பேசியிருக்கலாம். அவை திராவிட தேச முற்போக்கு அரசியல் அவலங்களில் ஒன்றாக மன்னிக்கப்படும். ஆனால் வேட்பாளர் என்று ஆனவுடன் எல்லாருக்குமான, எல்லா சமூகத்தினருக்குமான ஒரு பொது மனிதராக அவர் பேச வேண்டும்.

இந்தக் காணொளியில் அவரது பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. அயோத்தி சென்றுவிட்டு வந்த 58 மனிதர்கள் ஹிட்லர்கள் என்று பேசுகிறார். அதை அப்படியே சற்று இழுத்து ‘மாதா கோவில் சென்று வருபவர்கள் முசொலினிகள்’ என்றோ, ‘புனிதப் பயணம் சென்று வருபவர்கள் தீவிரவாதிகள்’ என்றோ அவர் சொல்வாரா ? அப்படிச் சொன்னால் அது அபத்தம் இல்லையா ?

இந்துக்களை இழிவுபடுத்திப் பேசினால் சிறுபான்மையினர் மகிழ்வார்கள் என்று நினைப்பது சிறுபான்மையினரை அவமானப்படுத்துவது போன்றது. அவர்களது கூட்டு அறிவுத் திறத்துக்கும் விடுக்கும் மிகப்பெரிய சவால் என்றே நான் நினைக்கிறேன்.

தீவிர போலி செக்யூலர் என்று காட்ட எவ்வளவு கீழ்த்தரமாகவும் பேசலாம் என்றால், மரியாதையை இழக்கலாம் என்றால் – இப்படி தேர்தலில் நிற்பது அவசியம் தானா ?

போலி மதச் சார்பின்மையின் அவலங்களின் மொத்த உருவாகக் காட்சியளிக்கிறார் திரு.ஞாநி.

என்ன ஒரு வீழ்ச்சி !

 

ஞாநியின் தேர்தல்

எழுத்தாளர் ஞாநி தேர்தலில் நிற்கிறார் என்பது ஒரு நல்ல செய்தி. தொகுதி என்னவென்பதெல்லாம் தெரியவில்லை. எனக்குத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை. ஏனெனில் ஞாநி போன்ற சமூக ஆர்வலர்கள் தேர்தல் களத்தில் இறங்குகிறார்கள் என்பதே என்னைப் பொருத்தவரை நல்ல செய்தி தான்.

தேர்தல் என்றவுடனே ‘ஆமாம் அவன் மட்டும் என்னவாம், கொள்ளை அடிக்கவில்லையா?’ என்று கேட்டே பழகிப்போன நமக்கு ‘அட, நல்ல மனுஷன் ஒருத்தர் நிற்கிறாரே !’, என்று ஒரு Positive  எண்ணம் ஏற்படுவது ஒரு புதிய அனுபவம்.

அவர் வெற்றி பெறுவாரா, அவர் சார்ந்த கட்சி  நல்லதா என்றெல்லாம் பற்றிப் பேசிப் பயனில்லை என்று நினைக்கிறேன். ஆம் ஆத்மி கட்சி வெறும் காட்சியே தவிர அது ஒரு கட்சி அல்ல. தில்லியில் அவர்கள் பதவியில் இருந்த 49 நாட்களில் அதன் தலைவர் வீதியில் இருந்ததே அதிகம். நாடகத்துக்குக் பெயர் போன கட்சி அது. நேர்மை என்று சொல்லிக்கொண்டு காங்கிரஸ் ஆதரவு  பெற்றார்கள். தலைமைச் செயலகத்தில் அரசு நடத்தாமல் தொலைக்காட்சி நிலையங்களில் பழி கிடந்தார்கள். 49 நாட்களில் அவர்கள் செய்துகொண்ட சமரசங்கள் கூசச் செய்தன.

ஆனால் ஞாநி என்ற தனி மனிதரை ஆம் ஆத்மி கட்சி என்ற கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டியதில்லை. இவரால் கட்சிக்கு நல்ல பெயர் கிடைத்தால் உண்டு.

ஞாநி அடிப்படையில் ஒரு போராளி. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் இருந்து தனது கொள்கைப் பிடிப்பினால் வெளியேறினார். அக்காலத்தில் இப்போது இருப்பது போல் நிமிடத்திற்கு ஒரு பத்திரிக்கையில் வேலை கிடைக்காது. இருந்தாலும் வெளியேறினார். குடும்பம் சிரமப்பட்டது.

1988-ல் இருந்து கூடங்குளம் அணு உலையை எதிர்த்து வருகிறார். இன்றும் எதிர்க்கிறார். தினமும் இப்போது அதில் மின் உற்பத்தி நடக்கிறதா என்று கண்காணித்துக்கொண்டிருக்கிறார்.

2ஜீ வழக்கில் துக்ளக் சோ.ராமாஸ்வாமியைத் தவிர ஆணித்தரமாக எதிர்த்துப் பேசிய ஒரே தமிழ் எழுத்தாளர் இவர் தான்.அப்போது இவர் சாதிப் பெயர் சொல்லி வசை பாடப்பட்டார்.

அடிப்படையில் நல்ல மனிதர். அவர் சிங்கப்பூர் வந்திருந்த போது அவருடன் சுமார் 2 மணி நேரம் கலந்துரையாட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சரளமாக எல்லா விஷயங்கள் பற்றியும் உரையாடினார். நம் உறவினர் ஒருவர் பல நாட்கள் கழித்து வந்து பேசுவது போல் இருந்தது அந்த சந்திப்பு. என் பெயர் பற்றிய பேச்சு வந்தவுடன் ,’தி.ஜானகிராமன் நாவலில் ஆமருவி என்றொரு பாத்திரம் வரும்’ என்று சொல்லி அசத்தினார்.

அவர் கருத்துக்கள் அனைத்திலும் எனக்கு உடன்பாடில்லை. மோடி எதிர்ப்பு என்ற தளத்தில் கொஞ்சம் தரம் குறைந்தார் என்று நினைக்கிறேன். ஜெயமோகன் பற்றிய தனது கருத்துக்களில்- குறிப்பாக எழுத்துரு பற்றி – கொஞ்சம் தி.மு.க. தரத்தில் எழுதினார்.அணு உலை விஷயத்திலும் அவர் கருத்துக்கு எனக்கு எதிர் கருத்து உண்டு. அமெரிக்க இஸ்லாமியப் பெண் எழுத்தாளர் சென்னையில் பேச அனுமதி மறுக்கப்பட்ட விஷயத்தில் மௌனியாகவே இருந்தார். எல்லாவற்றிலும் இடது சாரிகளுக்கு வக்காலத்து வாங்கும் அவர், அவர்கள் அ.தி.மு.க.வுடன் செய்து கொண்ட உடன்பாடு பற்றி வாய் திறக்கவில்லை.

தான் ப்ராம்மணன் இல்லை , இடது சாரி தான் என்று எல்லா நேரங்களிலும் காட்டிக்கொண்டே இருக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருப்பதாக அவர் உணர்ந்திருப்பதாகவே அவரது பேச்சு பல சமயங்களில் இருந்துள்ளது என்பது என் கருத்து. இது தமிழ் நாட்டின் நிதர்ஸன அவலங்களில் ஒன்று.

இருந்தாலும் நான் ஞாநி அவர்களை ஆதரிக்கிறேன். அவர் வெற்றி பெற மாட்டார் என்பது உறுதி ஆகா விட்டாலும், அவரைப் போல் ஒருவர் பாராளுமன்றத்தில் பேசினால் ஒரு சில அறிவு பூர்வமான விவாதங்கள் நடக்க வழி ஏற்படும் என்று நினைக்கிறேன்.

நல்ல மனிதர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். ஞாநி நல்லவர்.

ஞாநி பற்றிய என் முந்தைய பதிவுகள் 1 :

ஞாநி பற்றிய என் முந்தைய பதிவுகள் 2 :

%d bloggers like this: